http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 145
இதழ் 145 [ மார்ச் 2019 ] இந்த இதழில்.. In this Issue.. |
சிராப்பள்ளி மாவட்டத்தில் மன்றச்சநல்லூருக்கு அருகில் கோபுரப்பட்டிக்கும் அழகியமணவாளத்துக்கும் இடைப்பட்ட பகுதியிலுள்ள கிழக்கு நோக்கிய பல்லவர் காலக் கோயில் கல்வெட்டுகளில் பாச்சில் திருமேற்றளி என்றழைக்கப்படுகிறது. இருதள நாகர விமானம், முகமண்டபம், இடைமண்டபம், பெருமண்டபம் என அமைந்துள்ள இக்கோயிலின் வடமேற்குப் பகுதியில் கருவறையும் முகமண்டபமுமாய் மற்றொரு கற்றளி மேலுறுப்புகள் அற்ற நிலையில் காணப்படுகிறது.1 கோயில் வளாகத்திற்கு வெளியே கிழக்கில் புதிய நந்தி மண்டபமும் அதனருகே உள்ள சிமெண்ட் மேடையில் முத்தலைஈட்டி பொறிக்கப்பட்ட கல்வெட்டுப் பலகையும் உள்ளன. தென்புறம் பாதி புதைந்த நிலையில் பழைமையான சாமுண்டிச் சிற்பம்.
விமானம் உபானம், பாதபந்தத் தாங்குதளம் கொண்டு சாலைப்பத்தி முன்னிழுப்புடன் எழும் விமானத்தின் சுவர், புனரமைப்பினால் தூண்களின் அணைப்போ, கோட்டங்களோ இன்றி வெறுஞ்சுவராக அமைந்துள்ளது. கூரையுறுப்புகளாக உத்திரமும் கபோதமும் மட்டுமே உள்ளன. கூரைவரை கருங்கல் பணியாக அமைந்துள்ள விமானத்தின் ஆரஉறுப்புகளும் இரண்டாம் தளமும் நாகர கிரீவமும் சிகரமும் செங்கல் பணியாக உள்ளன. மண்டபங்கள் பல்லவக் கலைமரபில் அமர்நிலைச் சிம்மங்களும் நிற்கும் யானைகளும் செதுக்கப்பெற்ற கண்டமும் கருக்கணிகள் பெற்ற பாதமும் பொருந்திய துணைத்தளமும் பாதபந்தத் தாங்குதளமும் கொண்டெழும் முகமண்டபச் சுவரும் புனரமைப்பினால் தூண்களின் அணைப்போ, கோட்டங்களோ இன்றிக் கபோதம் பெற்றமைய, அதற்கும் விமானத்திற்கும் இடையில் தெற்கிலும் வடக்கிலும் திறப்புப் பெற்ற, படிகளுடனான இடைநாழிகை உள்ளது. இம்மண்டபக் கூரையை நான்கு நான்முகத் தூண்களும் இரண்டு முச்சதுர, இருகட்டுத் தூண்களும் வெட்டுத் தரங்கப் போதிகைகளால் தாங்க, பின்சுவரில் சாய்த்து வைத்த நிலையில் சண்டேசுவரர் சிற்பம் காணப்படுகிறது. சுகாசனத்தில் வலக்கையில் மழுவேந்தி, இடக்கையைத் தொடையிலிருத்திச் சிற்றாடையும் சடைப்பாரமுமாய்க் காட்சியளிக்கும் இச்சண்டேசுவரர் பிற்சோழர் காலத்தவராகலாம். தென்புறம் திறப்புடன் காணப்படும் இடைமண்டபம், முகமண்டபம் ஒத்த கட்டமைப்பில் இருந்தபோதும் துணைத்தளம் விலங்குருவங்கள் பெறவில்லை. இதன் கிழக்குப்பகுதியில் சதுரம், நீள்கட்டு, சதுரம் அமைப்பிலான இரண்டு தூண்கள் உள்ளன. இத்தூண்கள் வெட்டுத் தரங்கப் போதிகைகள் கொண்டு கூரை தாங்குகின்றன. இடைமண்டபம் ஒத்த துணைத்தளமும் தாங்குதளமும் பெற்ற பெருமண்டபம், சுவர் முதலிய மேல் உறுப்புகளை இழந்துள்ளது. அதன் தாங்குதளத்தில் பல முற்சோழர் காலக் கல்வெட்டுகளைக் காணமுடிகிறது. இறைவனை நோக்கிய நிலையில் இம்மண்டபத்தின் மேல் பிற்கால நந்தி ஒன்று இருத்தப்பட்டுள்ளது. கருவறை வாயிலையும் அதன் முன்சுவரையும் நான்முக அரைத்தூண்கள் அணைக்க, கருவறையுள் பேரளவிலான ஆவுடையாரும் இலிங்கபாணமும் இடம்பெற்றுள்ளன. வாயிலின் தென்புறம் பிற்காலப் பிள்ளையார் இலலிதாசனத்தில் உள்ளார். வடமேற்குத் தளி பிற்பாண்டியர் கலைப்பாணியிலுள்ள வடமேற்குத் தளி மேலுறுப்புகள் இழந்த கருவறை, முகமண்டபம் கொண்டுள்ளது. சாலை முன்னிழுப்புடன் பாதபந்தத் தாங்குதளம் பெற்றெழும் கருவறைச் சுவரை நான்முக அரைத்தூண்கள் தழுவியுள்ளன. அவற்றின் மீதுள்ள வெட்டுத் தரங்கப் போதிகைகள் கூரையுறுப்புகள் ஏந்த, மேலே பிடிச்சுவர். சுவரின் முப்புறத்தும் உள்ள மகரதோரணம் பெற்ற வெறுமையான கோட்டங்களைச் சட்டத்தலை பெற்ற நான்முக அரைத்தூண்கள் அணைத்துள்ளன. கருவறை வெறுமையாக உள்ளது. கருவறையின் கட்டமைப்பைப் பின்பற்றியுள்ளபோதும் முகமண்டபத்தில் பத்திப் பிரிப்பில்லை. அதன் வட, தென்புறக் கோட்டங்கள் மகரதோரணங்களுடன் வெறுமையாக உள்ளன. கட்டுமானம் பல இடங்களில் சிதைந்துள்ளது. மேற்றளிக் கல்வெட்டுகள் மேற்றளிக் கோயிலில் இருந்து நடுவணரசின் கல்வெட்டுத் துறை 4 கல்வெட்டுகளைப் படியெடுத்து அவற்றின் சுருக்கங்களை வெளியிட்டுள்ளது.2 களஆய்வின்போது இந்நூலாசிரியர்களால் 11 புதிய கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன.3 இந்த 15 கல்வெட்டுகளுள், நந்தி மண்டபத்தருகே உள்ள கற்பலகையின் இருபுறத்தும் காணப்படும் பொதுக்காலம் 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவையான இரண்டாம் நந்திவர்மப் பல்லவரின் 15ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுகள் இரண்டே மிகப் பழைமையானவை. அவை பொறிக்கப்பட்டுள்ள பலகையின் ஒருபுறம் பெரிய அளவிலான முத்தலைஈட்டியும்4 மறுபுறம் அரிவாள், சுருள்கத்தி, துரட்டி5 ஆகியனவும் செதுக்கப்பட்டுள்ளன. முதற் பராந்தகரின் 35, 36ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுகள் மூன்றும் ஆட்சியாண்டற்ற கல்வெட்டு ஒன்றும் முதலாம் இராஜராஜர் காலக் கல்வெட்டுகள் இரண்டும் உத்தமசோழராகக் கொள்ளத்தக்க பரகேசரிவர்மரின் கல்வெட்டொன்றும் சுந்தரசோழர் அல்லது முதலாம் இராஜராஜர் காலத்ததாகக் கொள்ளத்தக்க இராஜகேசரிக் கல்வெட்டொன்றும் இங்குள்ளன. ஐந்து கல்வெட்டுகளில் அரசர் பெயரோ, ஆட்சியாண்டோ இல்லை. என்றாலும், எழுத்தமைதி கொண்டு அவற்றைப் பொ. கா. 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தனவாகக் கொள்ளலாம். நாடு, கூற்றம் தொடக்கக் கால மேற்றளிக் கல்வெட்டுகளில் மழநாட்டுப் பாச்சிலாக அறியப்படும் இவ்வூர், முதலாம் இராஜராஜர் காலத்தில் இராஜாச்ரய வளநாட்டின் கீழிருந்த பாச்சில் கூற்றத்துப் பாச்சிலாக அறிமுகமாகிறது. மற்றொரு வருவாய்ப் பிரிவாகத் தஞ்சாவூர்க் கூற்றமும் முள்ளூர், கறைப்புத்தூர், கீழூர், ஆவணம், நெற்குப்பை, குருகாடி, மணக்கால், வள்ளுவப்பாடி ஆகிய 8 ஊர்களின் பெயர்களும் இக்கல்வெட்டுகளில் கிடைக்கின்றன. ஆவணமுடையான் மார்த்தாண்டன் உத்தமன் முதலாம் இராஜராஜர் காலத்தில் இராஜாச்ரய வளநாட்டின் நாடு வகை செய்யும் அலுவலராக விளங்கினார். கோயில் அனைத்துக் கல்வெட்டுகளிலும் திருமேற்றளி என்றே அழைக்கப்படும் இக்கோயிலின் இறைவன் உடையார், மகாதேவர், பரமேச்சுவரர், ஆழ்வார் எனப் பல பெயர்களால் அழைக்கப்பட்டுள்ளார். கோயிலை நிருவாகம் செய்தவர்கள் பதிபாதமூலப் பட்டுடைத் தேவகன்மிகளாக அறியப்பட்டனர். முதலாம் இராஜராஜர் காலத்தில் இக்கோயிலில் வண்ணக்கராக அரங்கத் திருமேற்றளிப் பெருங்காவிதியும் உவச்சராக முள்ளூரன் தெற்றியான ஆசாற்றியரும் நட்டுவராகப் பொன்னையன் தில்லை நக்கனும் கந்தர்வர்களாக இலாடராயன் பட்டாலகன், இராசவிச்சாதிர நிருத்தப் பேரையன், கணவதி கங்காதிரன், இராசாதித்தன் கணபதியான நிருத்தப்பேரையன், இராசாதித்தன் சூற்றி ஆகியோரும் வங்கியம் வாசித்தவராகப் பட்டாலகன் கூத்தனும் அமைய, தேவகன்மிகளாக நெதிரன் பொன்னனான மும்முடிசோழ பட்டனும் பட்டன் சிங்கனும் பணியில் இருந்தனர். விளக்குக் கொடைகள் நந்திவர்மரின் கல்வெட்டுகள் இரண்டும் மனத்துள் அரைசன், குடிதாழிக் கோவணத்தான் எனும் இரண்டு இடையர் பெருமக்கள் மேற்றளிக் கோயிலில் விளக்கேற்றிய தகவலைத் தருவதோடு, அந்த அறத்தைக் காப்பாற்றுபவர்கள் பெறக்கூடிய நன்மையையும் அழிப்பவர்களுக்கு நேரக்கூடிய தீமையையும் முன்வைக்கின்றன. நாளும் ஆழாக்கு நெய் கொண்டு ஐப்பசி விஷு முதல் இத்தளியில் ஒரு பகல் விளக்கு ஏற்றுவதற்காக நக்கன் பெற்றாள் 45 ஆடுகள் தந்தார். அவற்றுள் 5 செம்மறி வகையின. வெள்ளாடுகள் 40. இவ்விளக்கைத் தம் மகன் படையள் சங்கன் பட்டிலிக்காக ஏற்றுவதாக அவ்வம்மை தெரிவித்துள்ளார். இது போலவே காணப்புலி என்பாரைச் சாத்தி ஞாயிறு எழுவதற்கு ஒரு நாழிகை முதல் தொடங்கி இக்கோயிலில் விளக்கேற்றுவதற்காகக் கோயிலாரிடம் கொடையளிக்கப்பட்டது. இத்தளியில் விளக்கேற்றுவதற்கான மூன்று கொடைகள் கோயில் அலுவலர்களால் அளிக்கப்பட்டுள்ளன. இரண்டு பகல் விளக்குகள் ஏற்றத் தளிக் கந்தர்வர் சமரகேசரி நிருத்தப் பேரையன் பொன் கொடையளிக்க, உவச்சரான பாதசிவன், தளித் தேவதானமான நெற்குப்பைக் கீழூர் முதுநிலத் துண்டொன்றைப் பண்படுத்தி விளக்கேற்ற அளித்தார். தளித் தேவனார் மகள் நக்கன் பாவையான வல்லானை பாகத் தலைக்கோலி பகல் விளக்கேற்ற ஏழு கழஞ்சுப் பொன் வழங்க, அது கொண்டு தேவகன்மி சிங்கன் ஆச்சன் நிலத்துண்டொன்றைப் பண்படுத்தி அதன் விளைவு கொண்டு விளக்கேற்றினார். நிலக்கொடைகள் இத்தளித் தேவனார் மகளார் கறைப்புத்தூர்த் தலைக்கோலி6 ஒரு வேலி நிலத்தைக் கோயிலுக்களித்தார். பாச்சில் மணிக்கிராமத்து7 சிராகன் நிலத்துண்டொன்றை விலைக்குப் பெற்றுக் கொடையாகத் தந்தார். இத்தகவல்களைத் தரும் இரண்டு கல்வெட்டுகளும் துண்டுக் கல்வெட்டுகளாக இருப்பதால் நிலக்கொடை எதற்களிக்கப்பட்டது என்பதை அறியக்கூடவில்லை. வல்லானை பாகத் தலைக்கோலியின் கல்வெட்டால், அவர் அளித்த பொன் கொண்டு வாங்கப்பட்ட நிலத்தின் எல்லைகளாக மகிமாலைய மூவேந்த வேளார் பண்படுத்திய நிலத்துண்டும் இத்தளி நந்தவனத்தின் மதிலும் வெளிப்படுகின்றன. கோபுரப்பட்டி ஆதிநாயகப் பெருமாள் கோயிலில் காணப்படும் மூன்று கல்வெட்டுத் துண்டுகள் மேற்றளிக் கோயில் வழிபாடு, படையல் ஆகியவற்றிற்காகப் பொ. கா. 14 ஆம் நூற்றாண்டளவில் நிலக்கொடை அளிக்கப்பட்டமை தெரிவிப்பதுடன் அக்காலத்தே இக்கோயில் நிருவாகத்தார், 'தானத்தார்' என்று அழைக்கப்பட்டமையையும் பகிர்ந்துகொள்கின்றன.8 சிறப்புச் செய்திகள் பாச்சில் பகுதியில் பொன்னை நிறுக்கக் குடிஞைக் கல் போலவே பாச்சில் கல்லும் பயன்பாட்டில் இருந்தது. குருகாடி கிழான் பரமன் குஞ்சிரமல்லனான இராஜசிகாமணிப் பல்லவரையன் இருபது கழஞ்சுக் கொங்கப்பொன்9 கொண்டு மேற்றளி இறைவனுக்கு நெற்றிப்பட்டம் செய்தளித்தார். முதலாம் இராஜராஜர் காலத்தில் பாச்சிலில் இராஜராஜரின் விருதுப்பெயர்களுள் ஒன்றான ஜனநாதன்10 என்னும் பெயரிலமைந்த சாலையில் 30 பிராமணர்களை உண்பிப்பதற்கும் அதற்கான பணியில் இருந்தவர்களுக்கான ஊதியத்திற்கும் தேவைப்பட்ட நெல் பெற, இராஜாச்ரய வளநாட்டை வகை செய்த மார்த்தாண்டன் உத்தமன் மேற்றளிப் பணியாளர்களின் நிவந்தங்களில் சில மாற்றங்களைச் செய்தார். கோயில் உவச்சப்பங்கில் இரண்டும் மெய்மட்டு, பட்டுடைப் பங்குகளில் தலைக்கு ஒன்றரையும் குயவர், காளப் பங்குகளில் தலைக்கு ஒன்றும் திருவோலக்க விளக்குகள், காவிதி, சேகண்டிகைப் பங்குகளில் தலைக்கு அரையும் கரடிகை, திருக்களுக்கான பங்குகளில் தலைக்குக் காலும் எனப் பதினாறு பங்குகள் விடுவிக்கப்பட்டு அவை வழிக் கிடைத்த நெற்குப்பை ஊர் நிலம் 8 வேலியின் விளைச்சலில் ஊரார் 909 கலம் 2 தூணிப்பதக்கு ஒரு நாழி நெல்லைக் கோயிலில் அளக்க முடிவாயிற்று.11 இந்த நெல்லும் கோயில் தேவதானங்கள் வழிப் பண்டாரத்திற்குக் கிடைத்த பொன்னும் சாலை உணவுக்கும் சாலைப் பணியாளர்கள் ஊதியத்திற்கும் உடைகளுக்கும் உதவின. ஜனநாதன் எனும் இச்சாலையில் ஒவ்வொரு பிராமணருக்கும் நாளும் நாழி உரி ஆழாக்கு அரிசி, கறி, நெய், மோர், வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு அளிக்கப்பட்டன. 30 பிராமணர்களுக்கான இது போன்ற உணவுக்கும் அவ்வுணவைச் சமைத்த பிராமணர், அடுநீரும்12 தண்ணீரும் கொணர்ந்த மாணி, கலங்கள் அளித்த வேட்கோவர், பணிசெய்த வெள்ளாட்டி, உணவருந்த இலை இட்டவர்13 ஆகியோரின் ஊதியத்துக்குமாக ஓராண்டின் விளைவான நெல் ஒதுக்கப்பட்டது. தேவதான நிலங்கள் வழிக் கோயில் பண்டாரத்தில் பெறப்பட்ட பொன்னுக்குக் கழஞ்சொன்றுக்கு 6 மா வட்டியாகக் கிடைத்தது. இந்த வட்டியை முதலாகக் கொண்டு உணவு சமைத்த பிராமணருக்கு முக்காலே அரைக்கால் பொன்னும் இலை இட்டவர், நீர் அளித்த மாணி, பணி செய்த வெள்ளாட்டி ஆகியோருக்குத் தலைக்குக் கால் பொன்னும் உடைகளுக்காக அளிக்கப்பட்டது. ஜனநாதன் சாலையில் உணவிடும் இச்செயல் தளிப் பதிபாதமூலப் பட்டுடையார் பொறுப்பில் அமைந்தது. இராஜராஜர் காலத்தில் ஓராண்டிற்கு 360 நாள்களே கொள்ளப்பட்டமையும் இக்கல்வெட்டால் தெரியவருகிறது. மூன்றாம் இராஜராஜரின் 25ஆம் ஆட்சியாண்டின்போது (பொ. கா. 1241) சிதைந்திருந்த மேற்றளிக் கோயிலின் முக, பெருமண்டபங்களைத் தட்டோடு இட்டுச் சீரமைக்கவும் 'திருமலை திருமஞ்சனம்' (குடமுழுக்கு) செய்யவும் கருதிய மேற்றளிக் கோயில் நிருவாகம், மேற்றளி இறைவன் பெயரில் விளங்கிய வெங்காநத்தம் நன்செய், புன்செய் நிலங்களைப் பைஞ்ஞீலிக் கோயில் நிருவாகத்துக்குப் பதினாயிரம் அன்றாடு நற்காசுகளுக்கு விற்றதாகப் பைஞ்ஞீலி நீலிவனநாதர் கோயில் கல்வெட்டால் அறியமுடிகிறது. இதன் வழி, மூன்றாம் இராஜராஜர் காலத்தில் இக்கோயில் நிருவாகம் செயற்பாட்டில் இருந்ததையும் கோயிலில் திருப்பணி மேற்கொள்ள அவர்கள் திட்டமிட்டதையும் அறியலாம்.14 காலம் இங்குக் கிடைத்துள்ள கல்வெட்டுகளில் இரண்டாம் நந்திவர்மரின் கல்வெட்டே காலத்தால் முற்பட்டதாக இருப்பதால் இக்கோயிலைப் பொ. கா. 8ஆம் நூற்றாண்டினதாகக் கொள்ளலாம். கோயில் முகமண்டபத் துணைத்தளக் கட்டுமானமும் இக்கருத்திற்கொப்பவே அமைந்துள்ளமை எண்ணத்தக்கது. குறிப்புகள் 1. ஆய்வு நாள்கள்: 18. 2. 2017, 18, 29. 3. 2017. 2. ARE 1992 - 93: 417, 422, 425, 427. 3. The New Indian Express, Deccan Chronicle, The Times of India, தி இந்து 3. 4. 2017. 4. இதே அமைப்பிலான முத்தலைஈட்டி பெற்ற பலகைக் கல்வெட்டு, சிராப்பள்ளித் தஞ்சாவூர் நெடுஞ்சாலையிலுள்ள திருநெடுங்களம் நெடுங்களநாதர் கோயில் ஆய்வின்போது இந்நூலாசிரியர்களால் கண்டறியப்பட்டுப் பதிவுசெய்யப்பட்டது. M. Nalini, Recent Discoveries at Thirunedungalam, Abhyudhya - Recent Reserarch in Epigraphy and Numismatics, Bharathiya Kala Prakashan, Delhi. 2016, pp. 24-26. 5. அரிவாள், சுருள்கத்தி, துரட்டி முதலிய கருவிகள் பொதுவாக வணிகக் குழுக் கல்வெட்டுகளிலேயே இடம்பெறுவதைக் காணமுடிகிறது. கி. ஸ்ரீதரன், நாக. கணேசன், நாகைநல்லூர் வணிகக் கல்வெட்டு, ஆவணம் 12, தமிழகத் தொல்லியல் கழக வெளியீடு, தஞ்சாவூர், 2001, ப. 14. 6. இரண்டு தலைக்கோலிகள் தளித்தேவனார் மகள்களாக அமைந்து கொடையளித்துள்ள இக்கோயிலிலிருந்து நக்கன் பெற்றதிரு, நக்கன் செங்குளம், நக்கன் பராந்தெருமான் எனும் மூன்று தளிச்சேரிப் பெண்டுகள் தஞ்சாவூர் இராஜராஜீசுவரத்துத் தெற்குத் தளிச்சேரிக்கு வரவழைக்கப்பட்டுக் குடியமர்த்தப்பட்ட செய்தியை அக்கோயிலிலுள்ள முதலாம் இராஜராஜர் காலத் தளிச்சேரிக் கல்வெட்டு தெரிவிக்கிறது. ளுஐஐ 2: 66; மு. நளினி, இரா. கலைக்கோவன், தளிச்சேரிக் கல்வெட்டு, பக். 13-79. 7. சிராப்பள்ளி மாவட்டத்தின் பல ஊர்களில் மணிக்கிராம வணிகர்கள் தங்கியிருந்தமை கல்வெட்டுகளால் அறியப்படும் உண்மையாகும். M. Nalini, Reconstructing History of Thiruchirappalli from CE 500-1300 Through Inscriptions, Major Project submitted to UGC, 2015. 8. இக்கல்வெட்டின் படி மேற்றளிக் கோயிலில் வெட்டப்பட்டிருப்பதாக ஆதிநாயகப் பெருமாள் கோயில் கல்வெட்டு தெரிவிப்பதற்கேற்ப, துண்டுக் கல்வெட்டொன்றை இவ்வளாகத்தே கண்டறியமுடிந்தது. 9. ஈழக்காசு போலக் கொங்கப்பொன் கொங்கு வெற்றியின் காரணமாய்ப் பெயரிடப்பட்டதாகலாம். சிராப்பள்ளி மாவட்டக் கல்வெட்டுகளில் கொங்கப் பொன் குறிக்கப்படுவது இதுவே முதல் முறை. 10. ஜனநாதன் என்ற பெயரில் சிராப்பள்ளி மாவட்டத்தில் அமைந்த ஒரே சாலையாக இதைக் கருதலாம். மேற்றளியில் இயங்கிய இச்சாலை போலவே சிராப்பள்ளி மாவட்டம் உய்யக்கொண்டான் திருமலையில் இராஜேந்திரசோழன் அக்கிரசாலை இருந்தது. முதலாம் இராஜாதிராஜர் காலத்தில் தவத்துறைக் கோயிலில் இரண்டு சாலைகள் இயங்கின. மு. நளினி, இரா. கலைக்கோவன், தவத்துறையும் கற்குடியும், டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய வெளியீடு, 2016. 11. இத்தகு நிவந்த அளவுக் குறைப்பு இவ்வூரிலுள்ள அவனீசுவரத்திலும் இதே காலக்கட்டத்தில் இதே அலுவலரால் மேற்கொள்ளப்பட்டமை அறியத்தக்கது. 12. கோயிலின் பல்வேறு வகைச் செயற்பாடுகளுக்கு நீர் கொணர்ந்தமை குறித்துப் பேசும் சிராப்பள்ளி மாவட்டக் கல்வெட்டுகளில், அடுநீர் இடம்பெறுவது இதுவே முதல் முறை. சமைப்பதற்கெனத் தனியே நீர் கொணரப்பட்டமையும் அந்நீர் அடுநீர் என அழைக் கப்பட்டமையும் சுவையான தகவல்கள். 13. இலை இடுவார் என்ற சொல்லாட்சியும் சிராப்பள்ளி மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் முதல் முறையாக இக்கல்வெட்டிலேயே இடம்பெற்றுள்ளது. தமிழ்நாட்டளவிலும் இது ஓர் அரிய சொல்லாட்சியே. 14. SII 4: 540. (பாச்சிலின் பிறகோயில்கள் பற்றி அறியவும் பாச்சில் மேற்றளிக் கல்வெட்டுகளின் பாடங்களைப் பெறவும் காண்க: அர. அகிலா, மு. நளினி, இரா. கலைக்கோவன் - பாச்சில் கோயில்கள், டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம், திருச்சிராப்பள்ளி - தொடர்புக்கு 0431-2766581, 2740302, 93451 11790) |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |