http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[181 Issues]
[1796 Articles]
Home About US Temples Facebook
Issue No. 145

இதழ் 145
[ மார்ச் 2019 ]


இந்த இதழில்..
In this Issue..

மஜீத் எனும் மாமனிதர்
புள்ளமங்கை இராமாயணக் குறுஞ்சிற்பத் தொடர் - 1
பாச்சில் திருமேற்றளி
புள்ளமங்கையின் சமகால வரலாறு
பெருஞ்சேரி - வாகீசர் ஆலயம்
இதழ் எண். 145 > பயணப்பட்டோம்
புள்ளமங்கையின் சமகால வரலாறு
ரிஷியா
கோயில்கள் வரலாற்றுக் களங்கள். ஒவ்வொரு கோயிலிலும் வரலாறு இருப்பதுபோல் ஒவ்வொரு கோயிலுக்கும் வரலாறு உண்டு. மன்னர் காலத்திய திருப்பணிகளால் மட்டுமின்றி ஒவ்வொரு காலகட்டத்தின் சமூக மாற்றத்துக்கேற்பவும் புரவலர்களின் கருணைப் பார்வையில் ஏற்படும் மாற்றங்களுக்கேற்பவும் கோயில்கள் மாற்றத்துக்கும் சிதைவுக்கும் உள்ளாவதென்பது தமிழக வரலாறு நெடுகக் காணக்கிடைக்கும் காட்சியாகும். புள்ளமங்கை திருவாலந்துறையார் கோயிலும் இதற்கு விதிவிலக்கல்ல. கோயிலின் அண்மைக்கால வரலாறு இக்கோயிலைப் பாதுகாத்து வரும் குருக்கள் திரு. பா. குமார் அவர்களின் வாயிலாக இங்கே பதிவு செய்யப்படுகிறது.

1. இது பண்டு தொடங்கி நீண்ட பாரம்பரியம் கொண்ட கோயில். இக்கோயிலுக்குத் தங்கள் குடும்பத்தினரின் பங்களிப்பைப் பற்றிக் கூறுங்கள்.

என் பாட்டனார் வைத்தியநாத குருக்கள், தந்தையார் பாலசுப்ரமணியன். வம்சாவழியாக எங்கள் முன்னோர்கள் இக்கோயிலுக்கு உரியவர்கள். சிறப்பான முறையில் தொடர்ந்து பூஜை செய்து வருகிறார்கள். 10 வயது முதல் தொடர்ந்து வந்து போகிறேன். தினமும் 1 மணி நேரம் அமர்ந்து தியானிப்பேன். இக்கோயிலின் அமைதி மிகவும் இரம்மியமானது. மன அமைதி கொடுக்கக்கூடியது. எனக்குப் பின் என் மகன் மிகுந்த ஈடுபாடு காட்டி வருகிறார். எங்கள் பணி தொடரும்.

2. அவர்கள் கோயிலைப் பற்றிச் சொன்ன கர்ணபரம்பரைக் கதைகள், செவிவழிச் செய்திகள் ஏதேனும் உண்டா?

இது பட்சி வழிபட்ட தலமாதலால் புள்ளமங்கை என்று அழைக்கப்படுகிறது. இத்தல இறைவனைக் கழுகு வழிபட்டுள்ளது. சப்தமங்கையர்கள் வழிபட்ட புண்ணியத்தலம் ஆகும். இத்தலத்திற்கு உரியவர் சாமுண்டியாகும். என் பாட்டனார் காலத்தில் மார்கழித் திருவாதிரையில் நடராஜர் உற்சவம் வெகுசிறப்பாகக் கொண்டாடப்பட்டது. திருமுறைகளில் இக்கோயிலைப் பற்றிப் பாடியவர் திருஞானசம்பந்தர். முதலாம் திருமுறையில் அவர் பாடிய 11 தேவாரப் பதிகங்களில்

"மன்னானவன் உலகிற்கொரு மழையானவன் பிழையில்
பொன்னானவன் முதலானவன் பொழில்சூழ்புள மங்கை
என்னானவன் இசையானவன் இளஞாயிறின் சோதி
அன்னானவன் உறையும்மிடம் ஆலந்துறை யதுவே"


என்ற பாடல் வரிகள் என்னை மிகவும் உள்ளம் உருகச் செய்யும்.

3. இக்கோயிலில் காணப்படும் தொல்பொருட்கள் என்னென்ன? எப்படிப் பாதுகாத்து வைத்துள்ளீர்கள்?

இங்கே காணப்படும் முரசு ஒன்று இக்கோயிலின் தொல்பொருள். அதைச் சரிசெய்து பயன்பாட்டிற்குக் கொண்டுவர முயற்சி எடுத்தேன். ஆட்கள் யாரும் முரசு பற்றித் தெரிந்தவர்கள் கிடைக்கவில்லை. அது அப்படியே ஓர் ஓரத்தில் வைக்கப்பட்டுள்ளது. வேறு தொல்பொருட்கள் எதுவும் இங்கு இல்லை.

4. உழவாரப்பணி செய்து இக்கோயில் கட்டுமானத்தில் அங்கங்கே வளரும் செடி, கொடிகளைத் தொடர் முயற்சியாக அகற்ற யாரும் முன்வருவதில்லையா? இவ்வூர் மக்களிடம் இக்கோயிலைப் பற்றி எத்தகைய ஆர்வம் உள்ளது? தங்களுக்கு உதவுகிறார்களா?

சில வருடங்களுக்கு முன் இளைஞர்கள் சிலர் ஒரு குழுவாக‌ ஒன்றிணைந்து உழவாரப் பணிகளை ஆர்வமுடன் செய்தது. பின்னர் பிழைப்பு, திருமணம் போன்ற சொந்த வேலைகள் காரணமாக எல்லோரும் பிரிந்து போய்விட்டனர். இப்போது செடி, கொடிகளை அகற்ற யாரும் முன்வருவதில்லை. மக்களிடம் கோயில் சார்ந்த ஆர்வங்கள் குறைந்துகொண்டே வருகிறது. ஊர்மக்கள் திருவிழாக் காலங்களில் வந்துபோவார்கள். வேறு மாதிரியான வரலாற்று ஆர்வம் இல்லை. மாதாந்திரத் திருவிழாக்கள் எதுவும் இல்லை. பங்குனி மாதம் சப்தஸ்தானம் நடைபெறும். அதை விசேஷமாகக் கொண்டாடுவர்.

5. நம் கோயிலில் இருக்கும் சிற்பங்கள், கல்வெட்டுகள், கட்டுமானங்கள் பற்றி த‌ங்கள் பார்வை என்ன? இவற்றின் தனித்துவம் என்னவென்று நினைக்கிறீர்கள்?

நம் கோயிலில் இராமாயணக் கதைசொல்லிக் குறுஞ்சிற்பங்கள் நிறைய உள்ளன. வாலிவதம் மிகவும் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது. அதுவே எனக்கு மிகவும் பிடித்தது. கண்ணீர் சிந்தும் குரங்குகள் கூட்டம் மிக அருமையாகச் செதுக்கப்பட்டுள்ளது. எனக்கு பிரம்மாவின் அகண்டு விரிந்த மார்பு மிக அழகாக வடிக்கப்பட்டுள்ளதாகத் தோன்றுகிறது. ஒரு இளவரசர் போன்ற தோற்றப் பொலிவு புள்ளமங்கை பிரம்மாவிடம் உள்ளது போல வேறு எங்கும் காணவியலாது. வேறு பல சிற்பங்களில் மிகவும் பிடித்த சிற்பம், துர்கைச் சிற்பம்தான். திரிபங்கியாய்ப் புன்னகை தவழ அவள் நிற்கும் எழிற்கோலம் மிகவும் அற்புதம். ஒரு மடிப்பு, ஒரு நொடிப்பு, ஒரு ஒடிப்பு என்று மிக அருமையான ஸ்டைலில் அவளின் தோற்றம் அமையப்பெற்றுள்ளது. இரண்டு அம்பறாத்துணியுடன் வீரமங்கையின் அழகிய தோற்றமுடையவள் இத்துர்கை. முகத்தில் ஒரு சாந்தப் புன்னகை இருந்தாலும், பல ஆயுதங்களுடன் அவளின் போர்க்கோல எழில் மிக அருமை. துர்கையின் கோட்டத்திற்குமேல் உள்ள சிவனின் சிற்பம் மிக அருமையானது. ரிஷபம் ஒன்று சிவனின் கால்தொடையை நாக்கால் தொடும் காட்சி அற்புதம். அந்த நாக்கு மெலிதாய் மடிந்து காணப்படுவது மிகமிக அழகு. அவரின் காதுகுண்டலங்களில் ஒரு விரலை நுழைக்கலாம். அவ்வளவு நுட்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது. தூண்களில் காணப்படும் நடனப்பெண்கள் ஒடிந்த, குறுகிய மெல்லிடையுடன் மிக ஒயிலாக நிற்கும் பேரழகு வேறெங்கும் காணக்கிடைக்காது. துடியிடை என்று சொல்லலாம். நேராக நிற்பது ஒன்றுகூட இல்லை.

முதலாம் பராந்தகனது கல்வெட்டு மிகவும் குறிப்பிடத்தக்கது. கிராமசபைகளில் இடம்பெறுபவர்கள் 45 வயது நிரம்பியவர்களாய் இருக்கவேண்டும் என்ற தகுதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ள செய்தி. இதுபற்றி ஆசிரியர் செல்வராஜ் என்னோடு பகிர்ந்தார்.

எனக்குப் பிடித்த கட்டுமானப் பகுதி உள்மண்டபம்தான். அங்கே 8 தூண்கள் உள்ளன. அவற்றில் அற்புதமான நடன மங்கையர்களின் குறுஞ்சிற்பங்களும் கொடிக்கருக்குகளும் அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன.

6. தங்களிடம் வரலாற்று ஆர்வம் மிக அதிகமாக உள்ளது. இது எப்படி, எப்பொழுது ஏற்பட்டது? இக்கோயிலை ஒரு வரலாற்றுச் சின்னமாகப் பார்க்கிறீர்களே, எப்படி, ஏன்?

எங்கள் தந்தையார் காலத்தில் தொடங்கி நிறையக் கல்வெட்டு ஆய்வாளர்கள், வரலாற்று அறிஞர்கள் வந்துபோகக் கண்டேன். நிறைய விஷயங்கள் என்னோடு அவர்கள் கலந்துரையாடுவார்கள். இக்கோயிலின் குறுஞ்சிற்பங்கள் முதல் கல்வெட்டுச் செய்திகள் வரை என்னை மிகவும் கவர்ந்தது. என் கோயிலின் வரலாற்றுச் செய்திகள், சிற்ப அழகியல் எல்லாமே என்னை இக்கோயிலைக் கலைப்பொக்கிஷமாக, வரலாற்றுச் சின்னமாக அணுக என்னைப் பழக்கியது.

7. தாங்கள் இக்கோயிலைக் காக்க‌ ஊர்மக்களையெல்லாம் இணைத்துப் போராட்டம் செய்துள்ளீர்கள். எதற்காக?

கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, 1999 ல் திருப்பணிகள் தொடங்கப்பட்டன. அப்போது திருப்பணி செய்துவந்த ஸ்தபதிகள் கோயில் விமானச் சிற்பங்களிலுள்ள சுதைகளையெல்லாம் அகற்றியபோது தொன்மையான கற்சிற்பங்கள் வெளிப்பட்டன. மிகப்பெரிய பொக்கிஷம் அது. ஆனால் திருப்பணிக் குழுவினர் சிமெண்ட்டால் அதேபோல் சிற்ப‌ங்கள் செய்து மீண்டும் நிறுவ முற்பட்டனர். ஊர் மக்கள் பாதிப்பேர் ஆதரவுடன் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தேன். டாக்டர் கலைக்கோவன் அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் சென்னையில் இருந்தார். அவருக்குத் தொலைபேசி செய்து விவரங்கள் கூறினேன். குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களிடமும் முறையிட்டேன். அவர் பெருமுயற்சி எடுத்து சிமெண்ட்டால் சிற்பங்கள் நிறுவும் பணியைஅத் தடுத்தார்கள். கோயில் குடமுழுக்குத் திருப்பணி தடைப்பட்டது. பின்னர் இந்து அறநிலையத்துறை கமிட்டி அமைத்து, திருப்பணிகள் எவ்வகையில் நடக்கவேண்டும், எப்படி விமானக் கற்சிற்பங்களைப் பாதுகாக்க வேண்டும் என்றெல்லாம் விதிமுறைகள் அமைத்துக் கொடுத்துக் கோயிலின் கலைச்சின்னங்களைக் காப்பாற்ற வழிவகுத்தனர். அதன்படியே எல்லாம் நடைபெற்றது. டாக்டர் கலைக்கோவன் அவர்கள் உடல்நிலை சரியில்லாத நேரத்திலும் பலவகை நிர்வாக முயற்சிகளை எடுத்து இக்கோயிலின் கலைவடிவங்களைப் பாதுகாத்துக் கொடுத்தார்.

8. டாக்டர் கலைக்கோவன் அவர்களும் முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களும் இக்கோயிலை எவ்வாறு வெளியுலகப் பார்வைக்கு அவர் கொண்டுபோனார்கள்? இக்கோயிலுக்கு அவர்கள் ஆற்றிய தொண்டுகள் பற்றிக் கூறவும்.

டாக்டர் கலைக்கோவன் அவர்கள் வானொலி மூலமாக இக்கோயிலைப் பற்றி உரையாற்றினார். 1980 என்று நினைக்கிறேன். என் தந்தையார் திருச்சிராப்பள்ளி வானொலியில் பேட்டி கொடுத்தார். நானும் ஒருமுறை திருச்சிராப்பள்ளி வானொலியில் நம் கோயிலைப் பற்றிப் பேசியுள்ளேன். முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களும் பலமுறை இக்கோயிலுக்கு வந்துள்ளார். இக்கோயிலைப் பற்றிய விஷயங்கள் பல பிரபல தமிழ்ப் பத்திரிகைகைகளில் வர அவர் ஒரு முக்கிய நபர். அவர் உறவினர் திரு. செல்வராஜ் எழுதிய கட்டுரை அங்கே கோயில் சுவற்றில் சட்டம் செய்து மாட்டப்பட்டுள்ளது. வெளியுலகுக்கு இக்கோயிலை அறிமுகப்படுத்திய பிரபல கட்டுரை அதுவாகும்.

9. வரலாற்று ஆய்வாளர்கள், ஆர்வலர்களிடம் தாங்கள் எதிர்பார்ப்பது என்ன? அவர்களுடனான தொடர்பு எத்தகையது?

எனக்கு அவர்களிடம் பெரிதாக எந்த எதிர்பார்ப்பும் இல்லை. நான் அவர்களுக்கு உதவியாக இருக்க வேண்டும். அவ்வளவே. நான் ஒரு ஏணிபோல் அவர்களுக்கு உதவவேண்டும். டாக்டர் கலைக்கோவன் அவர்களுடன் மிக உள்ளன்புடன் பழகியுள்ளேன். இறைவனுடனான தொடர்பைப் போலவே இதுவும் ஆத்மார்த்தமான ஒன்று. சிறுவயது முதலே என்னை மிகவும் ஈர்த்தவர். அவரது ஆய்வுப்பணிகளின்போது அவருடனே இருந்து விடுவேன். இப்போது முடிவதில்லை என்று வருத்தமாக உள்ளது. காபி வாங்கிக் கொடுக்கிறேன் என்றால் வேண்டாமென்று மறுத்துவிடுவார். முன்னெல்லாம் அதாவது சுமார் 30 வருடங்கள் முன்பு டாக்டர் வரும்போது பேண்ட் சர்ட் அணிந்து வருவார். பின்னர் கள ஆய்வின்போது வேட்டி, பனியன், முண்டாசு சகிதமாகக் காட்சியளிப்பார். முதல்முறை அப்படியொரு கோலத்தில் நான் அவரைப் பார்த்தது மிக சுவாரசியம். சார் சார் என்று தேடினேன். அவர் இங்கே உள்ளேன் என்று குரல் கொடுத்தார். பின்னர் முண்டாசை அவிழ்த்து நான் தான் குமார் என்றபோது எனக்கு மகிழ்ச்சியும் சிரிப்பும் தாங்கமுடியவில்லை. அப்போதெல்லாம் ஈரமண்ணில், வெயிலில் என்று எதையும் பொருட்படுத்தாமல் அவர் முண்டாசுத் தோற்றத்தில் மண்ணில் அமர்ந்து ஆய்வு செய்யும் நிகழ்வு என்னை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது என்றே சொல்லலாம்.

10. கோயிலும் கோயில் சார்ந்த வாழ்க்கையும் தங்களுக்குப் பிடித்துள்ளதா?

எளிமையான வாழ்க்கை. ஆனால் மிகவும் செழுமையான கோயில். அமைதி. பகவான் என்னை விடமாட்டேன் என்கிறார். என் பிள்ளையும் இப்போது மிகவும் ஆர்வம் காட்டுகிறார். பின்னாளில் எப்படியோ? இறைவன் சித்தம்.

11. வணிகம் சார்ந்த நோக்கங்கள் ஏன் தங்களிடம் இல்லை? ஜோதிடர்கள் யாரும் வருவதில்லையா?

ஆன்மிகம் கெட்டுவிடும். பணம் ஒரு போதை. அது எனக்கு வேண்டாம். ஒருவர் உள்ளன்புடன் பூஜை செய்தாலே போதும் என்று நினைக்கிறேன். என் தந்தையார் காலத்திலிருந்தே பணத்தை அவர் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. இக்கோயிலை ஒரு வரலாற்றுப் பொக்கிஷமாக, கலைச்சின்னமாகவே பார்க்கப் பழகிவிட்டேன். வரலாற்று ஆய்வாளர்களுடன் எனக்கு ஏற்பட்ட தொடர்பே இதற்குக் காரணம் என்றுகூடச் சொல்லலாம். வாழ்க்கை நடத்தத் தேவையான பணம் கிடைக்கிறது. அந்த வருவாய் போதும் என்று நினைக்கிறேன். வணிக நோக்கத்துடன் செயல்பட்டால் என் குலக்கோயிலை இழக்க நேரிடும். அதன் அரிய சிற்ப, வரலாற்றுத் தரவுகளைப் பாதுகாக்க இயலாமல் போய்விடும். வரிசை வைத்து, கயிறு கட்டி, தரிசன டிக்கெட் கொடுத்து வரும் மக்களுக்குப் பூஜை செய்ய இஷ்டமில்லை. கோயிலின் புனிதம், அமைதி, ஆன்மிக உணர்வுகள் வணிகமயமாக்கலால் கெட்டுவிடும்.

12. இக்கோயில் சார்ந்த தங்கள் எதிர்காலக் கனவுகள், திட்டங்கள் என்ன?

இக்கோயிலில் ஒரு புகைப்படக் கலைக்கூடம் அமையவேண்டும். அதற்கென்று ஒரு தனியறையில் இடம்பெறும் புகைப்படங்கள் கோயிலின் நான்கு திசைகளில் இடம்பெற்றிருக்கும் கல்வெட்டுகள், குறுஞ்சிற்பங்கள் பற்றிய அரிய தகவல்களைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் இடம்பெறச் செய்யவேண்டும். புள்ளமங்கையில் காணப்படும் எல்லா விஷயங்களையும் பாமர மக்களைச் சென்றடையும் வகையில் புகைப்படங்களைச் சிறந்த கதைசொல்லியாய் அமைக்கவேண்டும். இதுவே என் கனவாகும்.

13. தங்கள் பிரியமான கோயில், அது சார்ந்த விஷயங்கள் புத்தக வடிவம் பெறப்போகின்றது. அதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

மிக நல்ல விஷயம். சமுதாய நோக்கோடு இருக்க வேண்டும். சாதாரண மக்களுக்கும் புரியும் வகையில் எளிய நடையில் இருக்க வேண்டும். தமிழில் இருக்க வேண்டும் என்பது என் கருத்தாகும். அதைப் படித்துப் பாமரனுக்கும் இக்கோயிலைப் பாதுகாக்கும் எண்ணம் வரவேண்டும். எளிய மக்களின் வரலாற்று ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அமையவேண்டும். வரலாறு.காம் நண்பர்கள் நிறைய சமுதாயச் சிந்தனை உடையவர்கள். இருளடைந்து இருக்கும் கோயிலின் சிறப்புகளை வெளியுலகிற்குக் கொண்டு வருவதில் மிகுந்த ஆர்வம் காட்டுபவர்கள்.

14. இங்கே வரும் பொதுமக்களுக்கு தாங்கள் கூறவிரும்பும் விஷயங்கள் என்ன?

கோயிலைப் புனிதத்தலமாக மட்டும் கருதாமல் அதன் தொன்மையைப் புரிந்துகொண்டு போற்றவேண்டும். புள்ளமங்கை கிராமத்தில் சோழர் காலத்தில் நிறைய சாக்கைக் கூத்துக் கலைஞர்கள் சிறப்பாக வாழ்ந்துள்ளனர். சாக்கைக்கூத்து என்பது ஒரு கிராமிய நடனவகை. சோழர் காலத்தின் கலை/கைவண்ண எழிலின் அழகிய திருக்கோயில் இதுவே. சோழர்களின் கலைநேர்த்தியை உணர்வுப் பூர்வமாக அறியவேண்டும். வரலாற்று நோக்கோடு கலை நுட்பத்தையும் மக்கள் அறியவேண்டும். நம் முன்னோர்களின் அறிவுத்திறன், கலைத்திறனைப் பாராட்டிப் பெருமைப்பட வேண்டும்.
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.