http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[180 Issues]
[1786 Articles]
Home About US Temples Facebook
Issue No. 11

இதழ் 11
[ மே 15 - ஜூன் 14, 2005 ]


இந்த இதழில்..
In this Issue..

புதியன விரும்பு
பகவதஜ்ஜுகம் - 2
பேய்த்தொழிலாட்டி
யாவரே எழுதுவாரே?
பழுவூர்-4
கட்டடக்கலைத் தொடர் - 9
வெளிச்சத்திற்கு வராத உறவுகள்
கல்வெட்டாய்வு - 9
மைக்கேல் லாக்வுட்டுடன் ஒரு சந்திப்பு
Gopalakrishna Bharathi - 2
சங்கச்சாரல் - 10
இதழ் எண். 11 > கலைக்கோவன் பக்கம்
அன்புள்ள வாருணி, அப்பர் திருமுறைகளில் எனக்கிருக்கும் தோய்வு நீ அறியாததல்ல. மீண்டும் மீண்டும் படித்து, அப்பெருந்தகையின் சொல்லமைப்புகளில் ஆழ நனையும்போது ஏற்படும் துள்ளலும் நிறைவும் உற்சாகமும் சொல்லிமுடியாதவை. இன்று காலை நான்காம் திருமுறையில் 77ம் பதிகம் படித்தேன்.

கோவணம் உடுத்தவாறும் கோளரவு அசைத்தவாறும்
தீவணச் சாம்பர்பூசித் திருவுரு இருந்தவாறும்
பூவணக் கிழவனாரைப் புலியுரி அரையனாரை
ஏவணச் சிலையினாரை யாவரே எழுதுவாரே?

எனக்குத் திருவலஞ்சுழிதான் நினைவிற்கு வந்தது.

சுவாமிமலைக்கு அருகிலுள்ள இத்திருவூர் மிகப்பெரும் கோயில் வளாகத்தைக் கொண்டுள்ளது. இறைவன் பெயர் சடைமுடிநாதர். இந்த வளாகத்தின் முதற் கோபுரத்திற்கும் இரண்டாம் கோபுரத்திற்கும் இடைப்பட்ட பரந்தவெளியில், வடக்கில் ஒரு பெருங்குளமும் தெற்கில் தென்னை மரங்கள் சூழ்ந்த சிறியதொரு திருக்கோயிலும் உண்டு. தாங்குதளப் பட்டிகையிலிருந்து மட்டுமே வெளித்தெரியுமாறு மண்மூடிப் போயிருந்த அந்த ஒருதளக் கற்றளி, நான் முதன்முதலில் பார்த்த காலத்திலேயே மிகச் சிதைந்த நிலையில் தான் இருந்தது. சுற்றிலும் புதர் மண்டி மரம், செடி, கொடிகளின் அன்பான தழுவலில் அமிழ்ந்து போயிருந்த அந்த தளியின் கருவறைத் தெய்வமான சேத்ரபாலர், தஞ்சாவூர் அருங்காட்சியகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு நெடுங்காலம் ஆகிறது.

இக்கோயிலைத் திருப்பணி செய்யவிருப்பதாக இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் இணை ஆணையர் திருமிகு ராஜநாயகம் எனக்குத் தொலைபேசியில் அறிவித்ததுடன், கோயிலைப் பார்த்து உரியன சொல்லி உதவுமாறும் அன்புடன் அழைத்தார். இந்தக் கோயிலின்பால் ஈடுபாடு மிகக் கொண்டிருந்த சென்னைவாழ் கட்டடக் கலைஞர் திரு. சுந்தர் பரத்வாஜ், கோயிலைத் திருப்பணி செய்யத் தொடங்கிவிட்டதாகவும், கோயிலைச் சுற்றி அகழ்ந்திருப்பதாகவும் தெரிவித்தார். என்னுடைய, 'மகேந்திரர் குடைவரைகள்' நூல் முடியும் நிலையில் இருந்தமையால் நான் உடன் செல்லக்கூடவில்லை.

வரலாறு.காம் மின்னிதழ் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த மா.இலாவண்யாவும், ம.இராமச்சந்திரனும் வலஞ்சுழி சென்று, சேத்ரபாலர் கோயில் விமானத்தின் கிழக்குப் பகுதியிலும் வடக்குப் பகுதியிலுமாய் வெட்டப்பட்டிருந்த கல்வெட்டொன்றைப் படிக்கமுடிந்தவரையில் படித்துப் படியெடுத்து வந்தார்கள். வலஞ்சுழியில் அதுநாள் வரையிலும் படிக்கப் பெற்றிருந்த கல்வெட்டுகளின் பட்டியலோடு அதை ஒப்பிட்டுப் பார்த்தபோதுதான், சேத்ரபாலர் கோயில் கல்வெட்டுகள் படியெடுக்கப்படாதிருந்த நிலை புலனாயிற்று.

பிற பணிகளையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு வலஞ்சுழி செல்வதென நானும் நளினியும் முடிவுசெய்தோம். இலாவண்யாவும், இராமச்சந்திரனும் உடன் வருவதாய் உறுதியளித்தனர். அகிலாவும் வருவதாகச் சொன்னார். திரு. சுந்தர் பரத்வாஜ் இக்கோயில் கல்வெட்டுகளை வெளிக்கொணர ஆகும் அனைத்துச் செலவுகளுக்கும் தாம் பொறுப்பேற்பதாகக் கூறினார். பயணம் எப்படி அமைந்தது, பலன்கள் எத்தகையன என்பது பற்றியெல்லாம் சொல்வதற்கு முன், வாருணி, இந்த மனிதரை உனக்கு நான் உரியவாறு அறிமுகப்படுத்தவேண்டும். என்னைச் சில ஆண்டுகள் பின்னோக்கிப் போக அநுமதிப்பாயா?

ஆண்டு நினைவில்லை என்றாலும் நிகழ்ச்சி நன்றாகவே பதிவாகியுள்ளது. என் மருத்துவமனையில்தான் முதல் சந்திப்பு. வந்தவர் தம்மை, வரலாற்று ஆர்வலராக அறிமுகப்படுத்திக்கொண்டார். திரு. பாலகுமாரனை நண்பர் என்றும் கூறினார். சோழ மண்ணின் மீதுள்ள பற்று, பாலகுமாரனுடனும் பிற நண்பர்களுடனும் சேர்ந்து நிகழ்த்திய வரலாற்றுப் பயணங்கள் எனச் சில நிமிட உரை. சில கேள்விகளை முன்வைத்தார். நானும் பதிலளித்தேன். என் நூலகத்தையும் பார்த்தார். வரலாறு ஆய்விதழ் தந்தேன். உரிய விலை தந்து பெற்றுக்கொண்டவர், வரலாறு இதழின் தகைமை தெரிந்து உதவ விழைந்தார். அவர் வந்தபோதெல்லாம் வரலாறு இதழிற்கு உதவுவது பற்றியே பேசுவார். பல முயற்சிகள் மேற்கொண்டார். பயனில்லை. அதனால் தாமே உதவ முன் வந்தார். விளம்பரங்கள் பெற்றுத் தந்தார். வரும்போதெல்லாம் வரலாறு இதழ்கள் பெற்றுச் செல்வார், உரிய விலை கொடுத்துத்தான்.

பலமுறை சந்தித்திருந்தபோதும் அவரிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்பு அமையவில்லை. ஆர்வலர், ஆய்வாளன் என்ற முறையிலேயே எங்கள் நட்பு வளர்ந்தது. பொன்னியின்செல்வன் குழு முதற்பயணத்திற்குத் தயாரானபோது, கமலக்கண்ணன் பயண வழித் திட்டமிட என்னுடன் பேசினார். பாலகுமாரனைச் சந்திக்க விருப்பமா என்று கேட்டேன். விருப்பமென்று கூறிச் சந்தித்தனர். பாலகுமாரன் பரத்வாஜிடம் ஆற்றுப்படுத்தினார். பிறகென்ன, பொன்னியின்செல்வன் குழுவிற்குச் சுந்தர் பரத்வாஜ் பெரியண்ணன் ஆனார். அவரது அன்பான பேச்சு, உதவும் உள்ளம், வரலாற்றுத் துடிப்பு என அனைத்திலும் வயப்பட்ட குழு உறுப்பினர்கள் சிலர் உட்குழுவாயினர். இந்த உட்குழு என்னுடன் தொடர்ந்து தொடர்பு வளர்த்து ஆய்வுக்குழுவான நிலையில் சுந்தரும் ஐக்கியமானார்.

எங்கள் பயணங்கள் சிலவற்றில் அவரும் கலந்துகொண்டார். முதற்பயணம் தஞ்சாவூர் இராஜராஜீசுவரத்துக்குத்தான். அள்ளிக்கொடுக்கும் அந்தக் கையழகை அங்குதான் கண்டேன். 'கொஞ்சம் அதிகமோ?' என்று கூட நினைத்தேன். என்றாலும், கொடுப்பதைத் தடுக்க மனம் வரவில்லை. பெற்றவர்கள் என்னைப் பார்த்த பார்வை, பூ வைக்க வேண்டிய இடத்தில் அவர் பொன் வைத்திருப்பதை உணர்த்தியது.

இராஜராஜீசுவரப் பயணத்தில் அவர் கூறிய பல கருத்துக்களை நான் மறுத்தேன். 'கதை' என்ற பெயரில் வரும் கதைகளைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. ஆனால், 'வரலாறு' எனப் பொய் முகம் காட்டி வரும் கதைகளை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது. உனக்குத் தெரியுமே வாருணி, இந்தப் பண்பால் எத்தனை எதிர்ப்புகளை, புறம்பேசல்களை, முகத்திருப்பங்களை நான் ஊதியமாய்ப் பெற்றிருக்கிறேன் என்று. சுந்தர் சற்று வித்தியாசமானவர். என் மறுப்புகளால் அவர் உளம் வருந்தவில்லை. சோர்ந்தாரும் இல்லை. ஓவியக் கூடத்தில் அவரும் நானும் அமர்ந்து உரையாடிய அந்தச் சில நிமிடங்கள் உள்ளத்தில் என்றும் நிற்கும்.

இரண்டாவது பயணம் விஜயாலய சோழீசுவரம். வெண்பா கிருபாவும் உடன் வந்த பயணம் அது. கை, கால்களை இப்படிக்கூடப் பயன்படுத்த முடியுமா என்று நான் வியந்துபோகும் அளவிற்கு, அந்த நான்கின் உதவியோடு மட்டும் சோழீசுவரத்தின் உச்சியில் கிருபா ஏறி வீற்றிருந்த காட்சியை மறக்கமுடியுமா? இராவணன் அவையும் அங்குத் தமக்கென அரியணை தாமே தயார் செய்துகொண்டமர்ந்த சொல்லின் செல்வருந்தான் இப்போதும் நினைவுக்கு வருகின்றனர். அது ஓர் அநும சாதனை!

விஜயாலய பயணத்தில் உட்குழுவைச் சுந்தர் கவனித்துக் கொண்ட விதம் அவருக்குள் ஒளிந்திருக்கும் தாய்மையை வெளிப்படுத்தியது. பயணப் பாதையில் ஒரு கடையில் நிறுத்திக் கிடைத்ததையெல்லாம் வாங்கி வண்டிக்குள் போட்டுக்கொண்டார். பதினொரு மணிப் பசிக்கு அவர் கண்ட தீர்வு. இலால்குடிப் பயணத்தின் போது சிற்பங்களை அவர் இரசித்தவிதம், பிற ஆய்வாளர்களிடம் அவருக்கிருந்த தொடர்பு அறியமுடிந்தது. அறிஞர் ஐராவதம் மகாதேவன் நூல் வெளியீட்டு விழாவின் முடிவில், ஆர்வமான இளைஞர்களை வரலாற்றாய்வில் ஈடுபடுத்த அவர் மேற்கொண்ட முயற்சியை உணர்ந்தேன்.

மாமல்லபுரப் பயணம் மறக்கமுடியாதது. அதில் கலந்துகொண்ட பிறர் எப்படி நினைக்கிறார்களோ எனக்குத் தெரியாது வாருணி. ஆனால் நான் அந்த மாலையும் இரவும் அடுத்த நாள் காலையும் கனவுலகில்தான் இருந்தேன். முழு நிலவு இரவில் மாமல்லைக் கடற்கரைக் கோயில் வளாகத்தில் கூடி வரலாற்றுக் களிப்புக் கொள்ள உட்குழு விரும்பியது. சுந்தரும் வந்திருந்தார். அற்புதமான இரவு அது. நான் அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தபோதும் உள்ளம் கடலலைகள் நினைவூட்டிய கடந்த காலங்களில் கரை தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தது. அன்றிரவு தங்கச் சென்றபோது அக்கறையோடு தங்குமிடத்தைப் பார்வையிட்டு உரியன செய்ய உளம் கொண்ட சுந்தரின் பொறுப்புணர்ச்சி என்னைக் கவர்ந்தது.

'வரலாறு' ஆய்விதழின் உருவாக்கப் பாதையில் பொருளாதாரச் சிக்கல்கள் பலமுறை என்னைத் தடுத்து நிறுத்தியதுண்டு. முதல் மூன்று இதழ்களை எளிதாகக் கொணர்ந்தேன். அடுத்த இரண்டு இதழ்கள் சற்றே தொல்லைக்காளாகி வெளிவந்தன. ஆறு, ஏழு, எட்டாம் இதழ்கள் நம் அன்பிற்குரிய பேராசிரியர் முனைவர் கோ.வேணிதேவி, வாணி செங்குட்டுவன் துணையால் உருவாயின. இந்த எட்டு இதழ்களை வெளிக்கொணர்வதற்கு நான் பட்டபாடு நீ அறியாததல்ல. எத்தனை படிகள் ஏறி இறங்கி இருப்பேன். நம்பிக்கையூட்டிய வாய்மொழிகள் நேரில் சென்றபோது கதவடைத்துக் காது திருப்பின. அநுபவங்கள்! எல்லாமே அநுபவங்கள்! வாழ்க்கையின் ஆயிரம் முகங்களைப் பார்க்க 'வரலாறு' உதவியது. கைப்பிடிக்குள் இருப்பன கூட கரைசேர்க்க உதவா, வாருணி.

இத்தனை நிருக்கடிகளிலும், 'வரலாறு' இதழின் தகுதி உணர்ந்த சிலர் உற்ற துணையாக உடன் வருகின்றனர் என்பதையும் இங்குப் பதிவு செய்யக் கடமைப்பட்டுள்ளேன். உணர்வாலும் உழைப்பாலும் உடன் வரும் அந்த உறவுகளைப்போல் பொருளால் அரவணைப்பவர்களையும் குறிப்பிடவேண்டுமெனில், சுந்தர் பரத்வாஜ் பெயரைக் கட்டாயம் சொல்ல வேண்டும். தொடக்கத்தில் விளம்பரம் வழி உதவியவர், தொடர்ந்து வந்த போதெல்லாம் நூல் வாங்கி உதவினார். பத்துப் படிகளுக்குக் குறையாமல் வாங்கி, நூல் விலைக்கும் மேல் தொகைதந்து செல்வார். 'வரலாறு' வளர அவர் முயற்சி அது. 'இதோ நான் தருகிறேன், பெற்றுக்கொள்' என்பது போல் தருவாரை நான் பார்த்திருக்கிறேன். பெற்றுக்கொண்டும் இருக்கிறேன். உனக்காகத் தருகிறேன் என்பது போல் கடப்பாடாய் உணர்ந்து தந்தாரிடமும் வாங்கியிருக்கிறேன். ஆனால், வரலாறு வளம்பெற வேண்டும் என்ற உணர்வோடு, 'இவன் அது செய்வான்' என்ற நம்பிக்கையோடு தொடர்ந்து எனக்குத் துணை நிற்பவர்கள் மூவர்தான். ஒருவர் பேராசிரியர் முனைவர் கோ.வேணிதேவி. மற்றொருவர் செல்வி இரா. இலலிதாம்பாள். மூன்றாமவர் திரு. சுந்தர் பரத்வாஜ்.

வாருணி, சுந்தரை நீ பார்த்ததில்லை என்றாலும், இதுவரை எழுதியவை கொண்டு ஓரளவு அவரைப் புரிந்து கொண்டிருப்பாய். முகம் நிறைய சிரிப்பு. கண்களில், வரலாற்றுச் சிக்கல்களில் மூழ்கிய வனப்பான எதிர்பார்ப்புகள். முடிவுகள் அவருக்கு உவப்பூட்டுவனவாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை. வியப்பால் விரிந்து, ஆர்வத்தால் நெகிழ்ந்து, அதிசயித்துக் கேட்டு, மெய்மறந்து போக வேண்டும் என்றுதான் அவர் பலவும் சொல்கிறார். அப்படிச் சொல்வனவற்றில் அவருக்கே ஓர் ஈர்ப்பும் இருக்கிறது. என்றாலும், உண்மைகள் வெளிப்படும்போது அவர் சோர்ந்துவிடுவதில்லை. தளர்ச்சி கொள்வதுமில்லை. மாறாக மகிழ்வார்.

வாருணி, சுந்தரை அறிமுகப்படுத்துகிறேன் என்று தொடங்கி மூன்று பக்கங்கள் ஓடிவிட்டன; பொறுத்துக்கொள். சிலரைப்பற்றி எழுத வரிகளைத் தேடவேண்டியிருக்கும். சிலரைப் பற்றி எழுதத் தொடர்கள் தவித்துத் துணையிருக்கும். 'சுந்தர்' இரண்டாம் வகை. இனி, வலஞ்சுழிப் பயணம் பேசுவோம். முதற்பயணத்திலேயே, கிடைத்திருப்பது பெரும் புதையல் என்பதை அறியமுடிந்தது. பட்டிகைக்குக் கீழ் உபஉபானம் வரை புதையுண்டிருந்த விமானத்தைச் சுற்றி வெட்டப்பட்டிருந்த நான்கடிப் பள்ளத்தில், ஓரடிக்கும் அகலக் குறைவான சுற்று வழியில், நிழலற்ற கடும் வெய்யிலில் கல்வெட்டுகளைப் படிக்கும் நெருக்கடியில் நாங்கள் இருந்தோம். அகிலாவின் வழிகாட்டலில் இராமச்சந்திரனும் இலாவண்யாவும் வடக்கில் படிக்க, நானும் நளினியும் தெற்கில் பணி தொடங்கினோம். இந்தப் பணி இன்றுவரை தொடர்கிறது. ஏழு முறை வலஞ்சுழி சென்று வந்துள்ளோம். இந்த ஏழு பயணங்களுக்கும் பொருள் துணையாய் நிற்பவர் சுந்தர் பரத்வாஜ்தான்.

சேத்ரபால தேவர் கோயிலுடன் நிறுத்திக்கொள்ளலாமா அல்லது வலஞ்சுழித் திருக்கோயில் முழுமையும் ஆய்வு வட்டத்திற்குள் வருமாறு தொடரலாமா என்ற என் கேள்விக்கு, 'தொடருங்கள்' என்பதே சுந்தரின் மறுமொழியாய் அமைந்தது. இந்த ஏழு பயணங்களிலும் எனக்கேற்பட்ட அநுபவங்களை உன்னுடன் பகிர்ந்து கொள்ள ஆவலாக இருந்தாலும், அப்பர் இடைமறிக்கிறார். அவர் பதிக அடிகளில் தொடங்கிய மடலல்லவா இது!

நளினியின் உழைப்பு நீ அறியாததல்ல. ஆய்வு என்று வந்துவிட்டால் அவர் எதையும் பொருட்படுத்துவதில்லை. எத்தனை நெருக்கடியான சூழலிலும் தயங்காது பணி செய்யும் ஆற்றல் அவருக்குண்டு. அவரது துணிவும் திறமையும் இணையற்ற உழைப்பும் பணியில் தம்மை முழுமையும் அர்ப்பணித்துக் கொள்ளும் பாங்கும் பலமுறை என் கண்களைப் பனிக்கச் செய்துள்ளன. வலஞ்சுழியில் எளிதாகத் திரும்பக்கூட வாய்ப்பற்ற அந்தக் குறுகலான இடைவெளியில், கட்டடக் கல்லுக்கும் கரைபோல நிற்கும் மண்சுவருக்கும் இடையில் நின்று கொண்டும் நகர்ந்துகொண்டும் பதினைந்து புதிய கல்வெட்டுகளையும் அவர் படித்து முடித்த பாங்கு எழுத்துக்களை மீறிய தொண்டு. பகலுணவிற்கும் பணி முடித்த பிறகும் களம் நீங்கி அவர் மேலே வரும்போதெல்லாம் தலையில் மண் துகள்கள். சட்டையெல்லாம் மண் பூச்சு. கைகளில், முதுகில் மண்ணும் தூசும் கலந்த அடர்த்தியான கலவையின் பரவல். 'தீவணச்சாம்பர்பூசித் திருவுரு இருந்தவாறும்' என்ற அப்பரின் பாடலடி எனக்கு வலஞ்சுழி நளினியைத்தான் நினைவூட்டியது.

இறைவன் விருப்பப்பட்டுப் பூசிக்கொண்டது சாம்பல். அந்த இறைவனின் திருக்கோயில் வளாக வரலாறு அறிய விழைந்த நளினிக்குச் சுற்றுப்புறம் தடவிவிட்ட சந்தனப் பூச்சு மண்ணும் தூசும். பூச்சுக்களும் பூண்டவைகளுமாய் இருந்த இறைவனின் உல்லாசக் கோலத்தை, யாவரே எழுதுவாரே என்று அதிசயிக்கிறார் அப்பர். வியர்வைக் குளியலும் மண்பூச்சுமாய்த் தூசுப்பிழம்பாய் வெளிவரும் நளினியின் உழைப்புக் கோலத்தை யாவரே எழுதுவாரே என்றுதான் நான் அதிசயிக்கிறேன்.

இந்த மண்ணின் மைந்தர்களுக்கு வரலாறு வேண்டும் என்று மட்டுமே ஆசைப்பட்டு, அவர்களை அடையாளப்படுத்த உழைத்து இரசிப்பவர் நளினி என்றால், அந்தப் பணிக்கு வேண்டும் பொருள் கொடுத்து உடன் வந்தும் துணையிருந்து மகிழ்ந்து இரசிப்பவர் சுந்தர் பரத்வாஜ். இப்போது சொல் வாருணி, இவர்தம் பங்களிப்பை, அதன் பின் நிற்கும் பரிவை, பண்பை, அர்ப்பணிப்பை யாவரே எழுதுவாரே!this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.