http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 11
இதழ் 11 [ மே 15 - ஜூன் 14, 2005 ] இந்த இதழில்.. In this Issue.. |
தொடர்:
கட்டிடக்கலை ஆய்வு
ஆர உறுப்புகள்
இந்த அத்தியாயத்தில் விமானத்திலுள்ள ஆர உறுப்புகளைப் பற்றி விளக்கும் முன் ஆர உறுப்புகள் என்னென்ன என்று பார்த்து விடுவோம். டாக்டர். மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம் வடமொழியிலுள்ள உறுப்புகளின் பெயர்களைத் தமிழ்ப்படுத்தியுள்ளது. ஹாரம் - மாலை ஹாராந்தரம் - மாலை இடைவெளி (ஆரச்சுவர்) அர்பிதம் - ஒட்டிய மாலை அனர்பிதம் - விலகிய மாலை மஹா நாஸிகை - பெருஞ்சாளரம் அல்ப நாஸிகை - சிறு சாளரம் சூத்ர நாஸிகை - குறுஞ் சாளரம் அரமியம் - தளச்சுவர் இவை போக, இன்னும் கர்ணகூடு, சாலை, பஞ்சரம் ஆகியவை உள்ளன. இவையும் ஒரு தளத்துடன் சேர்ந்தவையா? கூரை மீதமரும் பூமிதேசத்துடன் ஒரு தளம் முடிவடைந்து அதன் மீதிருந்துதான் இரண்டாவது தளம் ஆரம்பமாகும். கூரையை அழகூட்டுவதற்காக அமைக்கப்பட்டதுதான் இந்த ஆரம். இப்படி யோசித்துப் பாருங்கள். ஒரே ஒரு தளம் மட்டுமே கொண்ட கான்கிரீட் வீடு ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள். தரையிலிருந்து சுவர் எழும்பும். சுவரின் மீது கூரை (Ceiling) இருக்கும். கூரையின் மீது இரண்டு அல்லது மூன்றடிச்சுவர் (மொட்டை மாடியைச் சுற்றி இருக்கும் கைப்பிடிச்சுவர்) இருக்கும். இரண்டாவது தளம் கட்டும்போது நாம் என்ன செய்வோம்? அந்த இரண்டு அல்லது மூன்றடிச் சுவரை அப்படியே நீட்டி (உயர்த்தி) விட்டு, இரண்டாவது தளத்தின் மீது இருக்கும் மொட்டை மாடியைச்சுற்றி இன்னொரு இரண்டு அல்லது மூன்றடிச் சுவரைக் கட்டி விடுவோம். இந்தச் சுவரைத்தான் ஆரச்சுவர் என்று சொல்வோம். சிலசமயம் ஆரத்துக்கும் தளச்சுவருக்கும் இடையில் இடைவெளியில்லாமல் ஒட்டியும் இருக்கும். சுற்றி நடக்கக்கூடிய அளவுக்கு விலகியும் இருக்கும். பெரும்பாலும் ஒட்டிய மாலைதான் அதிக அளவில் காணப்படும். இரண்டே இரண்டு காரணங்களால் மட்டுமே விலகிய மாலை வர வாய்ப்புண்டு. மேற்றளங்களில் கருவறை இருந்தால் அவற்றை அடைய மற்றும் சுற்றிவர இவ்வாறு விலகிய மாலையாக இருக்கும். மாமல்லபுரத்திலுள்ள அத்யந்தகாமத்தில் இப்படித்தான் இருக்கிறது. கிழக்குத்திசை ஆரச்சுவருக்கும் தளச்சுவருக்கும் இடையில் படிக்கட்டு உள்ளது. ஆனால் சில இடங்களில் மேற்றளங்களில் கருவறை இல்லாவிட்டாலும் விலகிய மாலையாக இருக்கின்றன. அதன் காரணம் தெரியவில்லை. உதாரணம் திருப்பட்டூர் கைலாயநாதர் ஆலயம் மற்றும் நார்த்தாமலை விஜயாலய சோழீசுவரம். இரண்டாவது மூன்றாவது தளங்களில் சுற்றளவு சிறிது குறைவது மட்டுமில்லாமல் முதல் தளத்தின் உயரத்தில் 1/3 அல்லது 1/4 பங்கு அளவுதான் மற்ற தளங்களின் உயரங்கள் இருக்கும். ஆனால் தமிழ்நாட்டில் இரண்டே இரண்டு இடங்களில் மட்டுமே ஆதி தளத்தின் தொடர்ச்சியாக முதல் தளமும் அதே அளவு உயரத்தில் இருக்கிறது. ஒன்று திருக்குரக்குத்துறை எனப்படும் சீனிவாச நல்லூரிலுள்ள குரங்கநாதர் ஆலயம். இன்னொன்று இராஜராஜீசுவரம். ஆனால் இரண்டிலுமே தரைத்தளம் முடிவுற்றதைக் காட்டக் கபோதமும் பூமிதேசமும் அமைக்கப்பட்டுள்ளன. தஞ்சை இராஜராஜீசுவரத்தின் இரண்டாவது தளத்தின் ஆரச்சுவர் கீழ்க்கண்டவாறுதான் தோற்றமளிக்கும். இவற்றில் சாலை, பஞ்சரம், கர்ணகூடு என்றெல்லாம் இருக்கிறதே! அவை என்ன? ஆரச்சுவரை அழகுபடுத்த ஏற்படுத்தப்பட்ட உறுப்புகள். அதுமட்டுமல்ல. கோட்டங்களுக்குள் அமைக்கப்பட்டிருக்கும் இறைத்திருமேனிகளைக் கருவறைக்குள் வைத்து, அதன்மேல் விமானம் எழுப்பப்பட்டிருப்பது போன்ற உணர்வையும் தரக்கூடியன. இந்த மூன்று உறுப்புகளுமே மூன்று வகையான விமானங்கள் போல இருப்பதால் இந்த முடிவுக்கு வரவேண்டியதாகிறது. கர்ணகூடு நாகர அல்லது வேசர விமானம் போலவும் சாலை சாலை விமானம் போலவும் பஞ்சரம் தூங்கானை (கஜபிருஷ்டம்) விமானம் போலவும் காட்சியளிக்கும். தாராசுரத்தில் உள்ள கர்ணகூடு திராவிட விமானம் போல இருக்கும். ஒவ்வொரு கோட்டத்தையும் ஒவ்வொரு பத்தியாகப் பிரித்துக் கொண்டால், இந்த ஆர உறுப்புகளின் பெயர்களைக் கொண்டே சாலைப்பத்தி, பஞ்சரப்பத்தி மற்றும் கர்ணபத்தி எனச் சுவர்ப்பிரிவுகளை அழைக்கலாம். இவற்றில் எத்தனை சாலைகள், எத்தனை பஞ்சரங்கள் அமைப்பது என்பது சிற்பிகளின் கற்பனையைப் பொறுத்தது. நார்த்தாமலையில் தரைத்தளத்தின் ஆரச்சுவரில் நடுவில் சாலை, சாலைக்கு இரண்டு புறமும் இரு பஞ்சரங்கள், இரண்டு எல்லைகளிலும் கர்ணகூடுகள் என அமைத்திருந்த முத்தரையச் சிற்பி, இரண்டாவது தளத்தில் பஞ்சரங்களை எடுத்துவிட்டு இரண்டு சாலைகளை வைத்து, மூலைகளில் இரண்டு கர்ணகூடுகளை அமைத்திருப்பார். அத்யந்தகாமத்தை வடிவமைத்த பல்லவச் சிற்பி என்ன செய்திருக்கிறார் தெரியுமா? கிழக்கு, வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் தரைத்தளத்தில் நடுவில் மூன்று சாலைகள், இரண்டு கர்ணகூடுகள், இரண்டாவது தளத்தில் நடுவில் இரண்டு சாலைகள், இரண்டு கர்ணகூடுகள், உச்சித்தளத்தில் ஒரேயொரு சாலை மற்றும் இரண்டு கர்ணகூடுகள் என அமைத்துள்ளார். மேற்குப்புறத்தில் முன்றிலின் மேலுள்ள ஆரச்சுவரில் நடுவில் சாலை, அதற்கு இருபுறமும் பஞ்சரங்கள், முனைகளில் கர்ணகூடுகளுக்குப் பதிலாகக் கர்ணசாலைகள் என அமைத்துள்ளார். இங்கே ஒவ்வொரு திசையிலும் இரண்டு கர்ணகூடுகள் என்று சொல்லும்போது, கார் சக்கரங்களை ஒவ்வொரு திசையிலிருந்தும் இரண்டிரண்டாக எண்ணுவது போல் மொத்தம் எட்டு கர்ணகூடுகள் எனப் புரிந்து கொள்ளக்கூடாது. ஒவ்வொரு மூலையிலும் ஒன்று என மொத்தம் நான்குதான். கர்ணகூடு, சாலை தெரியும். அது என்ன கர்ணசாலை? Two-in-One. கல்லைக் கண்டால் நாயைக் காணோம், நாயைக் கண்டால் கல்லைக் காணோம் கதைதான். முனையில் அமைந்திருக்கும் உறுப்பை நேராகப் பார்த்தால் சாலையின் வண்டிக்கூடு போலக் காட்சியளிக்கும். பக்க வாட்டில் பார்த்தால், கர்ணகூட்டைப் போல நாகரமாக அமைந்து நாசிகையைப் பெற்றிருக்கும். இருதள தூய நாகர விமானமான கொடும்பாளூர் மூவர் கோயிலை வடித்த சோழச் சிற்பி செய்தது கொஞ்சம் வித்தியாசமானது. தரைத்தளத்தின் மேலே மட்டும் ஆரச்சுவரை நடுவில் சாலை, இரண்டு புறமும் கர்ணகூடுகள் என அமைத்து விட்டு, உச்சித்தளத்தில் ஆரச்சுவரே இல்லாமல் நான்கு முனைகளிலும் நந்திகளை வைத்துள்ளார். தஞ்சை இராஜராஜீசுவரத்திலும் உச்சித்தளத்தின் கிரீவத்தைச் சுற்றி எட்டு நந்திகள் உள்ளன. சரி. சில இதழ்களுக்கு முன்பு நாசிகையும் பஞ்சரமும் ஒரே மாதிரிதான் இருக்கும் என்று சொன்னீர்களே! இந்த அத்தியாயத்தில் நாசிகையையே காணோமே! என்கிறீர்களா? சாளரங்கள் இல்லாமல் ஆர உறுப்புகள் முழுமையடையுமா? சாலை மற்றும் கர்ணகூட்டின் அளவிலேயே ஆரச்சுவரில் அமைந்திருந்தால் அது பஞ்சரம். சிறிய அளவில் கபோதத்தில் அல்லது ஆரச்சுவரில் இரட்டையாக வந்தால் அது நேத்ரநாசிகையாகும். இதைத் தமிழ்ப்படுத்தி விழிச்சாளரம் எனலாம். விழிச்சாளரத்தின் அளவிலேயே தனியாகக் கபோதத்தில் இருக்கும் நாசிகையைச் சிறு சாளரம் எனவும் அதைவிடச் சிறிய அளவில் இருப்பதைக் குறுஞ்சாளரம் எனவும் அழைக்கலாம். சிகரத்திலுள்ள நாசிகையும் கர்ணகூடு மற்றும் சாலை அளவில்தானே உள்ளது. அதைப் பஞ்சரம் என அழைப்பதா? மிகப்பெரிய அளவில் இருப்பதால் பெருஞ்சாளரம் என அழைப்பதா? அடுத்த இதழில்... this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |