http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[180 Issues]
[1786 Articles]
Home About US Temples Facebook
Issue No. 11

இதழ் 11
[ மே 15 - ஜூன் 14, 2005 ]


இந்த இதழில்..
In this Issue..

புதியன விரும்பு
பகவதஜ்ஜுகம் - 2
பேய்த்தொழிலாட்டி
யாவரே எழுதுவாரே?
பழுவூர்-4
கட்டடக்கலைத் தொடர் - 9
வெளிச்சத்திற்கு வராத உறவுகள்
கல்வெட்டாய்வு - 9
மைக்கேல் லாக்வுட்டுடன் ஒரு சந்திப்பு
Gopalakrishna Bharathi - 2
சங்கச்சாரல் - 10
இதழ் எண். 11 > கலையும் ஆய்வும்
வெளிச்சத்திற்கு வராத உறவுகள்
மு. நளினி
வலஞ்சுழி சேத்ரபாலர் கோயில் வழங்கியுள்ள புதிய கல்வெட்டுகளில், வரலாற்று முதன்மை வாய்ந்த தரவுகள் பலவாய் உள்ளன. இந்தக் கோயில் முழுவதும், விமானத்திலும் முகமண்டபத்திலுமாய் அழகுற எழுதப்பட்ட தமிழ்க் கல்வெட்டுகளின் அணிவகுப்புதான். தஞ்சாவூர் இராஜராஜீசுவரக் கல்வெட்டுகளுக்கு இணையான எழுத்தமைப்பில் வெட்டப்பட்டிருக்கும் இக்கல்வெட்டுகள் அனைத்தும் இராஜராஜர், இராஜேந்திரர் காலத்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இக்கல்வெட்டுகளின் கண்டுபிடிப்பால், இதுநாள் வரையிலும் உல்லாசமாய் உலவிவந்த திலபர்வதக் கதைகள் ஓடி ஒளிந்தமை ஒருபுறமிருக்க, தமிழ்நாட்டின் வரலாற்றிற்குப் பல புதிய செய்திகள் வரவாகியிருப்பதைச் சுட்ட வேண்டும். அத்தகு வரவுகளில் குறிப்பிடத்தக்கவை வெளிச்சத்திற்கு வராத இரண்டு உறவுகள்.

சேத்ரபாலர் கோயில் விமானத்தின் தென்பகுதி வேதிக்கண்டத்திலிருந்து படித்தறியப்பட்ட இராஜேந்திரசோழரின் மூன்றாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, பேரரசர் முதலாம் இராஜராஜரின் பட்டத்தரசி தந்திசத்திவிடங்கியான உலகமாதேவியின் அன்னையாரை வரலாற்று வெளிச்சத்திற்குக் கொணர்கிறது. அன்னையை, 'ஆச்சி' என்ற சொல்லால் குறிப்பிடும் இக்கல்வெட்டு, உலகமாதேவியின் அன்னை குந்தணன் அமுதவல்லியார், வலஞ்சுழிக் கோயில் வளாகத்தின் தென்பகுதியிலிருந்த ஏகவீரிப் பிடாரிக்கு அளித்த கொடையைப் பதிவு செய்துள்ளது. இக்கல்வெட்டால் உலகமாதேவியின் அன்னையார் பெயர் தெரியவந்திருப்பதுடன், முதல் இராஜேந்திரர் ஆட்சிக் காலத்தில் வலஞ்சுழிக் கோயில் வளாகத் தென்பகுதியில் பிடாரிக்கு ஒரு கோயில் இருந்தமையும், அப்பிடாரி 'ஏகவீரி' என்று அழைக்கப்பட்டமையும் தெரியவருகின்றன.

வலஞ்சுழி சிவ அந்தணர்களான மாடிலன் தலைசேனன் வலஞ்சுழியான், மாடிலன் எழுவந்தலைசேனன், மாடிலன் சாத்தன் பட்ட சோமாசி, மாடிலன் பட்ட சோமாசி, மாடிலன் பட்ட சோமாசி செல்வன், பாதரதாயன் ஆராமிது திருவிக்கிரமன், பாரதாயன் பண்டிதன் ஆகிய எழுவரும் குந்தணன் அமுதவல்லியாரிடமிருந்து நாற்பது குற்றமற்ற காசு பெற்றனர். ஏகவீரிப் பிடாரிக்கு, 'அவபல அஞ்சனை' செய்வதற்காக அமுதவல்லியார் இக்கொடையை அளித்தார். இந்த நாற்பது காசுக்கு வட்டியாக அந்தணர்கள் ஆண்டுதோறும் நாற்பது கலம் நெல்லளிக்க முடிவானது. திருஅமுது, நான்கு வெற்றிலை, இரண்டு பாக்கு ஆகியன நாள்தோறும் அவபல அஞ்சனைப் படையலாகப் பிடாரிக்கு அளிக்கப்பெற்றன. அவ்வமுது படைக்கப்படும் சந்தியில் ஒரு விளக்கும் எரிக்கப்பட்டது. இக்கோயிலில் நாயகம் செய்தாரே இந்நெல் கொண்டு நாள்தோறும் படையலளித்தனர்.

ஒப்பந்த ஆவணமாக அமைந்துள்ள இப்பதிவைக் கல்வெட்டு, 'எழுத்தோலை' என்கிறது. இதை எழுதியவராக அறிமுகமாகும் வேளாளர் பல்லாரி ஸ்ரீகிருஷ்ணன், குடமூக்கு மூலபருடையாருக்காக வலஞ்சுழிக் கோயிலுக்குக் கணக்கு எழுதியவராவார். இவரைக் கரணத்தான் என்றும் கல்வெட்டுச் சுட்டுவதால், கணக்கு எழுதும் தொழிலர், 'கரணத்தார்' என்றும் அழைக்கப்பட்டமை தெளிவாகிறது.

வட்டியாக வந்த நெல்லை அளக்க வலஞ்சுழிக் கோயிலில் அளவு நிர்ணயம் செய்யப்பட்ட 'வலஞ்சுழியன்' என்ற மரக்கால் இருந்தது. இப்புதிய கல்வெட்டு இப்பகுதியிலிருந்து சுவடழிந்துபோன மதுராந்தக ஈசுவரத்தையும் வரலாற்று வெளிச்சத்திற்குக் கொணர்வது குறிப்பிடத்தக்கது.

சேத்ரபாலர் கோயில் முகமண்டபத் தெற்கு ஜகதியிலிருந்து படித்தறியப்பட்ட முதலாம் இராஜராஜரின் பதினேழாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, இதுநாள்வரையிலும் வரலாற்றுலகால் அறியப்படாதிருந்த மற்றொரு பெருமாட்டியை அடையாளப்படுத்துகிறது. இவர் சுந்தரசோழரின் தேவியருள் ஒருவர். நக்கன் சிங்கமான வளவன் மாதேவியார் என்னும் பெயர் கொண்டிருந்த இவ்வம்மை, உலகமாதேவி எடுப்பித்தருளிய சேத்ரபாலர் கோயில் இறைவனுக்குக் கார்த்திகை விளக்கொன்று ஏற்ற வாய்ப்பாக ஏழு பசுக்களைக் கொடையளித்தார். இப்பசுக்களைப் பெற்றுக்கொண்ட இடையரான அத்திப்பாண்டி எனும் உலகமாதேவிக்கோன், இவ்விளக்கேற்றச் செலவாகும் நெய் பதினான்கு நாழியை, நிலவும் கதிரும் உள்ளவரை தாமே கோயிலுக்குக் கொணர்ந்து, 'சேத்ரபாலன்' என்னும் கோயில் நாழியால் அளந்து தருவதாக வாக்களித்தார். இவர் மும்முடிச் சோழ வளநாட்டு நல்லூர் நாட்டு முள்ளூர்த் தளியில் வாழ்ந்தவர்.

சேத்ரபாலருக்குக் கார்த்திகை விளக்கேற்றப் பசுவளித்த இவ்வம்மை, அவ்விறைவன் தயிர்ப் போனகம் அருந்தவும் கொடையளித்துள்ளார். இக்கல்வெட்டில் சுந்தர சோழர், 'அரிஞ்சயன் பராந்தக பன்மரான ஸ்ரீ சுந்தரசோழ தேவர்' என்றழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இதுநாள்வரையிலும் அறியப்பட்டிருக்கும் இப்பெருவேந்தரின் கல்வெட்டுகள் எவையும் இத்தகு அழைப்பினைக் கொண்டிருக்கவில்லை என்பதும் இங்கு கருதத்தக்கது.

முதலாம் இராஜராஜரின் மாமியாரையும் (பட்டத்தரசியின் அன்னை) சிற்றன்னையையும் (தந்தையாரின் மனைவியருள் ஒருவர்) இப்புதிய கல்வெட்டுகள் அறிமுகப்படுத்துகின்றன. 'குந்தணன்' எனும் பெயரும், 'நக்கன்' என்னும் முன்னொட்டும் ஆராயத்தக்கன. நக்கன் என்ற முன்னொட்டு இடம்பெறும் காலத்தால் முற்பட்ட கல்வெட்டுப் பாண்டி மண்டலத்திற்குரியது. அரசு அலுவலர் ஒருவரின் மனைவி தம்பெயரின் முன்னொட்டாக இதைக் கொண்டுள்ளார். இந்நக்கன் எனுஞ் சொல் ஒரு பெயராக இடம்பெறும் காலத்தால் முற்பட்ட கல்வெட்டுச் சித்தன்னவாசலில் வட்டெழுத்தில் வெட்டப்பட்டுள்ளது. 'நக்கன்' எனும் முன்னொட்டுடன் அமைந்த பெயர் கொண்ட பெருமாட்டி ஒருவர், பேரரசர் ஒருவரின் தேவியாக அறிமுகமாகும் முதற் கல்வெட்டாக சேத்ரபாலர் கோயில் கல்வெட்டைக் கொள்ளலாம் எனத் தோன்றுகிறது. இருப்பினும் தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதிகளை ஒரு மறுபடிப்புச் செய்த பிறகே இக்கருத்து உறுதிப்படும்.this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.