http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 156

இதழ் 156
[ ஜூலை 2021 ]


இந்த இதழில்..
In this Issue..

மாமல்லபுரம் குடைவரைகள் - ஒப்பாய்வு - 1
இது செய்யேனாயின் இப்படி ஆவதாக
மதங்கேசுவரம் - 2
திருவாசி மாற்றுரை வரதீசுவரர் - 2
பதாமி சாளுக்கியரின் குடைவரைக் கோயில்களும் கட்டுமானக் கோயில்களும் (ஐஹொளே தொடர்ச்சி)
அடியார் குலத்துக் கடைசி விளக்கு
பத்துப்பாட்டு ஆராய்ச்சி - அரசியல் - 3
இதழ் எண். 156 > கலையும் ஆய்வும்
மதங்கேசுவரம் - 2
இரா.கலைக்கோவன், மு.நளினி

முகமண்டபம் உட்புறம்

முகமண்டப வாயில் ஒட்டிய மேற்குச் சுவர்த்துண்டுகளை திருப்பத்தூண்களும் சட்டத்தலை நான்முக அரைத்தூண்களும் அணைத்துள்ளன. வெறுமையான இச்சுவர்த்துண்டுகளில் தென், வடமுகங்களில் அமர் சிம்ம நான்முக அரைத்தூண்கள் அமைய, வாயிலின் இடைப்பகுதியில் மேற்குப் பார்வையில் இரு அமர் சிம்ம இந்திரகாந்தத் தூண்கள். (ஐராவதேசுவரத்தில் இவ்விரு பகுதிகளிலும் காவலர் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளமை இங்கு எண்ணத்தக்கது.) குடைவரை முகப்புப் போலச் சுவர் ஒட்டி இரு அரைத்தூண்களும் நடுவில் இரு முழுத்தூண்களும் பெற்று மூன்று அங்கணங்களுடன் விளங்கும் வாயில் பெற்ற இம்மண்டபம் அது போல் அமைந்த மற்றொரு வரிசைத் தூண்களால் இருபிரிவுகளாக்கப்பட்டுள்ளது. முதல் பிரிவை முகமண்டபம் என்றும் இரண்டாம் பிரிவை உள்மண்டபம் என்றும் அழைக்கலாம். பின்வரிசைத் தூண்களின் கலசத்தில் ஸ்ரீபிரபுபதி, ஸ்ரீஅரத்தியமகன் எனும் இராஜசிம்மரின் விருதுப்பெயர்கள் பல்லவ கிரந்தத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.

தூண்களின் மேலுள்ள பட்டை பெற்ற வளைமுகத் தரங்கப் போதிகைகள் உத்திரம் தாங்க, மேலே வாஜனம், வலபி. கூரை பலகைக் கற்களால் மூடப்பட்டுள்ளது. முகமண்டப வட, தென், கிழக்குச் சுவர்கள் உத்திரமும் வாஜனமும் கொண்டுள்ளன.

மண்டபச் சிற்பங்கள்

முகமண்டபத் தென்சுவரில் இராவண அருள்மூர்த்தியும் வடசுவரில் ஊர்த்வதாண்டவரும் உள்மண்டபத் தென்சுவரில் யானையை அழித்தவரும் வடசுவரில் கங்காதரரும் சுவரளாவிய சிற்பங்களாக அமைய, மண்டபப் பின்சுவரிலுள்ள கருவறை வாயிலின் இருபுறத்துள்ள கோட்டங்களில் காவலர்கள்.

இராவண அருள்மூர்த்தி

கிரீடமகுடத்துடனான ஐந்து தலைகளுடன் கருடாசனக் கோலத்தில் 14 கைகளால் கயிலைமலையைப் பெயர்க்கும் முயற்சியில் முனைந்துள்ள இராவணனின் செவிகளில் மகரகுண்டலங்கள். தோள், கை வளைகள், சவடி, முப்புரிநூல், உதரபந்தம், இடைக்கட்டுடனான இடையாடை பெற்றுள்ள அவரது வலப்புறத்தே கிடத்திய நிலையில் உருள்பெந்தடி. மலையின் மேற்பகுதியில் சிவபெருமான் சுகாசனத்திலும் உமையன்னை உத்குடியிலும் அமைய, அவர்களைப் போற்றுமாறு போல இருபுறத்தும் சிதைந்தநிலையில் வானவர். சடைமகுடம், மகர, பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, நிவீதமுப்புரிநூல், இடைக்கட்டுடனான சிற்றாடை பெற்றுள்ள இறைவனின் வலக்கை காக்கும் குறிப்பிலிருக்க, இடக்கை தொடையில். இடப் பின் கை கடகத்தில் அமைய, வலப் பின் கை சிதைந்துள்ளது.



கேசபந்தம், பனையோலைக் குண்டலங்கள், இடையாடை கொண்டு இறைவனுக்காய் ஒருக்கணித்துள்ள இறைவியின் இடக்கை தோளருகே. வலக்கை இறைவனைத் தழுவியுள்ளதாகக் கருதலாம். மலையின் இடைப்பகுதியில் உமைக்குக் கீழிருக்குமாறு அமர்ந்துள்ள பெண் பூதம் பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, இடைச்சிற்றாடையுடன், வலக்கையைத் தொடைமீது இருத்தியுள்ளது. இடக்கை சிதைந்துள்ளது. இறைவனின் வலப்புறம் இருக்குமாறு இவ்விடைப்பகுதியில் காட்சிதரும் இரண்டு பூதங்களுள் ஒன்று தலைமீதுள்ள கல்லை மிகுந்த விசையுடன் இராவணன் மேல் எறியும் மெய்ப்பாட்டில் உள்ளது. அதை அடுத்துள்ள பூதம் கை நிறைய கற்களுடன் கல்லெறிப்போரில் முனைந்துள்ளது. இரண்டுமே சடைப்பாரம் குண்டலங்கள், தோள், கை வளைகள், சரப்பளி, இடைச்சிற்றாடை பெற்றுள்ளன.

ஊர்த்வதாண்டவர்

குப்புறப் படுத்தபடி இறைவனுக்காய்த் தலை உயர்த்தியிருக்கும் முயலகன் மீது இடப்பாதத்தைப் பார்சுவத்தில் ஊன்றி, வலக்காலை முதுகுக்குப் பின் தலையளவு உயர்த்தி, லேசான வலஒருக்கணிப்பில் ஊர்த்வதாண்டவமிடும் சிவபெருமானின் வல முன் கை காக்கும் குறிப்பிலிருக்க, பிற வலக்கைகளுள் ஒன்று சுட்டு முத்திரையில். இரு வலக்கைகளில் சப்ளாக்கட்டை, கவரி. ஒரு கைப்பொருளை அறியக்கூடவில்லை. தலைச்சக்கரத்துடனான சடைமகுடம், மகர, பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, தோள், கை வளைகள், முப்புரிநூல், மார்புநூல், இடைக்கட்டுடனான சிற்றாடை, கிண்கிணி பெற்றுள்ள இறைவனின் இட முன் கை மேலுயர்ந்து கீழ்நோக்கிய பதாகமாகத் திரும்ப, ஒரு கையில் பாம்பு. மற்றொரு கை தீச்சட்டிக் கொள்ள, ஒரு கை இடுப்பருகே ஏந்து கையாக உள்ளது. ஒரு கை சிதைந்துள்ளது.



கீழ்ப்பகுதியில் சடைமகுடம், பனையோலைக் குண்டலங்கள், முப்புரிநூல், இடைச்சிற்றாடையுடன் இறைவனின் வலப்புறம் அமர்ந்துள்ள ஆடவர் தமக்கு முன் நிறுத்தியுள்ள ஒரு முக முழவை இயக்குகிறார். அவரது பார்வை இறைவனை நோக்கி. இறைவனின் இடப்புறமுள்ள கருவிக்கலைஞர் குழலிசைக்க, அவரை அடுத்துக் காளியின் அர்த்தசுவஸ்திகக் கரணம். வலக்காலின் முன் இடக்காலைக் குறுக்கீடு செய்து இரு பாதங்களையும் அக்ரதலசஞ்சாரமாக்கிக் கரணம் நிகழ்த்தும் இறைவியின் வல முன் கை காக்கும் குறிப்பு காட்ட, ஒரு கை நெகிழ்ந்துள்ளது. பிற இரு வலக்கைகள் சிதைந்துள்ளன. சடைப்பாரம், இடையாடையுடன் ஆடும் இறைவியின் இட முன் கை வேழமுத்திரையில் அமைய, மற்றொரு கை இடுப்பருகே. ஒரு கை மேலுயர்ந்த பதாகமாக, மற்றொரு கை சிதைந்துள்ளது.

யானையை அழித்த மூர்த்தி

சற்று உயரமான தளத்தின்மீது உடலின் கீழ்ப்பகுதியை இடச்சுழற்சியில் திருப்பிப் பாதங்களை அருகருகே அக்ரதலசஞ்சாரத்தில் நிறுத்தியுள்ள சிவபெருமானின் இடுப்பிற்கு மேற்பட்ட உடற்பகுதி நேர்ப்பார்வையில் உள்ளது. சடைப்பாரம், மகர, பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, தோள், கை வளைகள், முப்புரிநூல், உதரபந்தம், இடைக்கட்டுடனான சிற்றாடை பெற்றுள்ள அவரது வல முன் கைப் பொருளை அறியக்கூடவில்லை. பிற வலக்கைகள் அவரால் அழிக்கப்பெற்ற யானைமுக அசுரனின் தோலைப் பற்றியுள்ளன. இட முன் கை மார்பருகே கடகத்திலிருக்க, ஒரு கை வியப்பு முத்திரையில். பிற இரு இடக்கைகள் யானையின் தோலைப் பற்றியுள்ளன. இறைவனின் இடப்புறம் கீழ்ப்பகுதியில் யானையின் ஒரு காலும் அதன் தலையும் அமைய, வலப்புறம் அதன் மற்றொரு கால். யானையை அழிக்கும் சிவபெருமானின் இக்கோலம் காணமுடியாது அவ்விடத்திருந்து நீங்கும் மெய்ப்பாட்டில் இடக்காலை வலக்கால் முன் நிறுத்தி, முகம் இறைப்பார்வையில் திரும்ப விளங்கும் இறைவியின் வலக்கை தோளருகே. சடைமகுடம், பனையோலைக் குண்டலங்கள், தோள் கை வளைகள், இடையாடை பெற்றுள்ள இறைவியின் இடக்கை இடுப்பருகே. இறைவியின் இடப்புறம் அவரை நோக்கித் தாவும் கோலத்திலுள்ள சிதைந்த வடிவம் முருகனாகலாம்.



கங்காதரர்

தலைச்சக்கரத்துடனான சடைமகுடம், மகர, பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, தோள், கை வளைகள், நிவீதமுப்புரிநூல், இடைக்கட்டுடனான சிற்றாடையுடன் இரு பாதங்களையும் பார்சுவத்தில் இருத்தி கங்காதரராக நிற்கும் சிவபெருமானின் வல முன் கை கடகத்திலிருக்க, பின்கையில் அக்கமாலை. அவரது இட முன் கை கங்கை வந்திறங்க வாய்ப்பாகச் சடைப்புரிகளை நீட்டிப் பிடித்திருக்க, பின் கை இடப்புறத்துள்ள உமையை அணைத்துள்ளது. சடைமகுடம், சரப்பளி, பனையோலைக் குண்டலங்கள், தோள், கை வளைகள், இடைக்கட்டுடனான சிற்றாடையுடன் இடுப்புக்குக் கீழ் இடஒருக்கணிப்பிலும் உடலின் மேற்பகுதி வலஒருக்கணிப்பிலும் இருக்குமாறு விளங்கும் உமையின் வலக்கை கடகத்திலிருக்க, இடக்கை நெகிழ்ந்துள்ளது. இறைவனின் இடப்புறம் அவர் இடுப்பளவிற்காய் நிற்கும் சடைமகுட ஆடவர் பகீரதனாகலாம். இடைக்கட்டுடனான சிற்றாடையுடன் இறைவனை நோக்கும் அவரது வலக்கை நெகிழ்கையாக, இடக்கை சிதைந்துள்ளது. இச்சிற்பத்தொகுதியில் மேற்பகுதியில் வலப்புறத்தே குந்திய நிலையில் நாயும் இடப்புறத்தே சென்னி சூழ்க் கேசபந்தத்துடன் இருகைகளையும் கூப்பி வணங்கிய நிலையில் வந்திறங்கும் கங்கையும். கங்கையின் தோகை போல் காட்டப்பட்டிருக்கும் நீர்ப்பெருக்கு இறைவனின்் இடமேற்கை அருகே.



காவலர்கள்

கருவறை வாயிலைக் காக்கும் காவலர் இருவருமே பேருருவினராய்க் கோரைப்பற்களுடன் சடைக்கற்றைகளுடனான சடைமகுடம், பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, தோள், கை, வளைகள், முப்புரிநூல், மார்புநூல், உதரபந்தம், இடைக்கட்டுடனான சிற்றாடையுடன் கருவறைக்காய் ஒருக் கணித்துள்ளனர். இருவருமே அருகிலுள்ள படமெடுத்த பாம்பு சுற்றிய உருள்பெருந்தடியின் மீது ஒரு கையை இருத்தியவர்களாய்ச் சடைவளையங்கள் காற்றில் பறக்க கம்பீரமாய்க் காட்சிதருகின்றனர். சூலத்தேவராய் விளங்கும் தெற்கர் இட முன் கையில் கடகம் காட்டி, பின்கையை வியப்பில் விரித்துள்ளார். வலப் பின் கை போற்றி முத்திரையில். வலத்தோளருகே படமெடுக்கும் பாம்புடன் நிற்கும் வடக்கர் வல முன் கையைத் தொடைமீதிருத்தி, பின்கையில் சிம்மமுகம் காட்டுகிறார். அவரது இடப் பின் கை போற்றி முத்திரையில்.





கருவறை

கருவறைப் பின்சுவரில் மலர் ஏந்திய அடியவர்களுக்கு இடைப்பட்ட ஆழமான கோட்டத்தில் சோமாஸ்கந்தர். கோட்டத்தைப் பின்சுவர் ஒட்டி அமைந்துள்ள கம்பின் மீதெழும் சட்டத்தலை நான்முக அரைத்தூண்கள் அணைக்க, வளைமுகத் தரங்கப் போதிகைகள் கூரையுறுப்புகள் தாங்குகின்றன. மேலே இருகூடுவளைவுகளுடன் கபோதம். கருவறையின் இரு சுவர்களின் மேலும் கூரையுறுப்புகள். கருவறைக் கூரை வாழைப்பூ அடுக்கு முறையில் மேலே செல்லச் செல்ல அகலக் குறுகலாகிச் சதுரக்கல்லால் மூடப்பட்டுள்ளது. கருவறையின் வடசுவரில் இரு அடியவர்களுடன் நான்முகனும் தென்சுவரில் மலரேந்திய மூன்று அடியவர்களும் காட்சிதர, கருவறைத் தரையின் நடுப்பகுதியில் ஆவுடையாருடன் தாராலிங்கம்.

சோமாஸ்கந்தர்

ஒரு காலைத் தூக்கியவாறு குப்புறப்படுத்துள்ள முயலகன் மீது இடப்பாதத்தை இருத்தி, இருக்கையில் சுகாசனத்திலுள்ள சிவபெருமானின் வல முன் கை காக்கும் குறிப்பு காட்ட, இட முன் கை தியான முத்திரையில் மடியில். தலைச்சக்கரத்துடனான சடைமகுடம், மகரகுண்டலங்கள், சரப்பளி, நிவீதமுப்புரிநூல், தோள், கை வளைகள், இடைக்கட்டுடனான இடைச்சிற்றாடை பெற்றுள்ள இறைவனின் வலப் பின் கையில் பாம்பு. இடப் பின் கையில் அக்கமாலை. அவரது மகுடத்தின் வலப்புறம் அழகிய பிறை. இடைக்கட்டுத் தொங்கல் இருக்கையில் நெகிழ, நேர்ப்பார்வையராய் உள்ள அவரது இடப்புறம் அவருக்காய் ஒருக்கணித்தவராய் உத்குடியில் உமா. சென்னிசூழ்க் கேசபந்தம், பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, தோள், கை வளைகள், இடைக்கட்டுடனான இடையாடை பெற்று இடக்கையை இருக்கையில் இருத்தியுள்ள அம்மையின் வலக்கை அவரது வலத்தொடையில் அமர்ந்துள்ள முருகனைத் தாங்கியுள்ளது. சென்னிசூழ்ச் சிறுமகுடம், பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி பெற்றுள்ள முருகனின் வலக்கை சிவபெருமானின் கை தொட முயற்சிக்க, இடக்கை மார்பருகே.

இறைவனின் பின்னிருக்குமாறு தொகுதியின் மேற்புறத்தே காட்சிதரும் நான்முகனும் விஷ்ணுவும் பின்கைகளில் அவரவர்க்குரிய கருவிகள் கொண்டு முன்கைகளுள் ஒன்றை இடுப்பிலும் மற்றொன்றைக் கடகத்திலும் கொண்டுள்ளனர். நான்முகன் சடைமகுடமும் விஷ்ணு கிரீடமகுடமும் பெற, சரப்பளி, தோள், கை வளைகள், அரைக்கச்சுடனான இடையாடை, முப்புரிநூல் முதலியன இருவருக்கும் ஒன்று போல் உள்ளன.

அடியவர்கள்

சோமாஸ்கந்தர் தொகுதியின் வல, இடப்புறத்துள்ள அடியவர்கள் இறைத்தொகுதிக்காய் ஒருக்கணித்துள்ளனர். சடைமகுடம், நீள்வெறுஞ்செவிகள், சரப்பளி, தோள், கை வளைகள், முப்புரிநூல், பட்டாடையுடன் காட்சிதரும் அவர்கள் இருவருமே ஒரு கையைத் தொடையிலிருத்தி, மற்றொரு கையில் இறைவனுக்காய் மலர் கொண்டுள்ளனர். கருவறை வடசுவரில் இறைப்பார்வையில் அணிவகுத்துள்ள மூவருள் நடுவிலிருப்பவர் நான்முகன். பின் கைகளில் குண்டிகை, அக்கமாலையுடன் வல முன் கையை இடுப்பிலும் இட முன் கையைக் கடகத்திலும் கொண்டுள்ள நான்முகனின் இடையில் இடைக்கட்டுடனான பட்டாடை. நான்முகனின் வலப்புறத்துள்ளவர் சடைமகுடம் மகரகுண்டலங்கள், நிவீதமுப்புரிநூல், தோள், கை வளைகளுடன் வலக்கையைத் தொடையிலிருத்தி, இடக்கையில் கடகம் காட்டுகிறார். அதே ஆடை, அணிகலன்களுடன் இடப்புறத்துள்ளவரின் இருகைகளும் கடகத்திலுள்ளன.

தென்சுவரில் இறைத்தொகுதியை நோக்கி நிற்கும் மூவருமே சடைமகுடம், நீள்வெறுஞ்செவிகள், முப்புரிநூல், தோள், கை வளைகள் பட்டாடை பெற்றுள்ளனர். முதல்வரும் மூன்றாமவரும் இடக்கையைத் தொடையிலிருத்தி, வலக்கையில் மலர் கொள்ள, வலக்கையில் மலருடன் இடக்கையால் இறைத்தொகுதியைப் போற்றும் நடுவர் விஷ்ணுவாகலாம். இருபுறச் சுவர்களிலும் அடியவர்களுக்கிடையில் மேலிருந்து தொங்கும் அழகிய தோரணத் தொங்கல்கள்.
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.