http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 156
இதழ் 156 [ ஜூலை 2021 ] இந்த இதழில்.. In this Issue.. |
தமிழர் வாழ்வில் அகத்திலும் புறத்திலும் வரலாற்றுக் காலத் தொடக்கத்திலிருந்தே சூளுரைத்தல் சிறப்பான இடத்தைப் பெற்றிருந்தமை சங்க இலக்கியங்களால் வெளிப்படும் உண்மையாகும். காதலியிடம் சூளுரைப்பதில் தொடங்கிப் போர்க்களத்துச் சூள் வரை தமிழ்ப் பாடல்களில் காட்சிப்படுத்தப் பட்டிருக்கும் நிகழ்வுகள் மானுட மாண்புகளையும் சமூகவியல் சார்ந்த நம்பிக்கைகளையும் தொடர்புடையோரின் உளவியல் கூறுகளையும் கண்முன் இருத்துகின்றன. ‘இப்படிச் செய்வேன் என்று தெய்வத்தை முன் நிறுத்தி உறுதி கூறாதே. உன் சொல் பிழைத்தால் உனக்குத் துன்பம் நேரும்’ என்று தெய்வம் காட்டிச் சூளுரைத்த தலைவனிடம் மன்றாடிய தலைவிகளுக்கிடையே, ‘உன்னை எனக்குத் தெரியாதா, சூளுரைப்பதும் பின் அச்சூளில் பிழைப்பதுமே உன் செயல்’ என்று நகையாடிய தலைவிகளும் இருந்தனர். காதலியின் கண்ணீர் துடைத்து, அவள் கவலை நீக்கி, உள்ளம் தேற்ற உறுதிப்பாடு தந்த தலைவனைக் காட்டும் அதே இலக்கியம், நெஞ்சறியப் பொய் புகன்று அதை உண்மையாக்கத் திருப்பரங்குன்றம் மலை மேல் சூளுரைத்த காதலனையும் காட்சிப்படுத்துகிறது. சூளுரைத்தல் என்ற நிலைப்பாட்டின் பின்னே சூள் பிழைத்தல் என்ற நடைமுறையும் வழக்கில் இருந்தமை இலக்கியங்களால் புலப்படும் உண்மை. கல்வெட்டுகளில்? பல்லவர், பாண்டியர் காலக் கல்வெட்டுகளைவிட எண்ணிக்கையில் சோழர் காலக் கல்வெட்டுகள் மிகுதியாகக் கிடைப்பதாலோ அல்லது சோழர் காலச் சமூகத்தில் சூளுரைத்தலும் சாபமிடுதலும் பெருகியதன் விளைவாகவோ இவை குறித்த பதிவுகள் சோழர் எழுத்துப் பொறிப்புகளில் பரவலாகக் கண்காட்டுகின்றன. இலக்கியங்களில், ‘இதை இப்படிச் செய்வேன் - தவறினேனாயின் எனக்கு இன்னது நேரட்டும்’ என்ற சூள் மரபுக்குப் பாண்டியன் நெடுஞ்செழியனின் புறநானுற்றுப் பாடல் சிறந்த சான்றாகும். சோழர் பதிவுகள் இந்தப் பார்வையிலேயே சூளுரைத்து, சூள் தவறினால் எத்தகு இழிவுகள் சூழும் என்பதையும் பட்டியலிடுகின்றன. திருவரங்கம் திருக்கோயிலின் நான்காம் சுற்றில் உடையவர் திருமுன்னுக்கு எதிர்ப்பகுதியிலிருந்து படியெடுக்கப்பட்டிருக்கும் மூன்று கல்வெட்டுகள், திருவரங்கத்துக் கைக்கோளர் சிலர், வீற்றிருந்தான் சேமநாத அகளங்க நாடாழ்வான் என்னும் சிற்றரசரை முன்னிருத்தி மேற்கொண்ட சூளைப் பதிவு செய்துள்ளன. சூளுரைத்தவர்கள் மூவரும் அக்காலத்தே அரசர்களின் உயிர் காக்கும் படையாக விளங்கிய வேளைக்காறப்படையைச் சேர்ந்தவர்கள். தம் உயிரைத் தந்தேனும் அகளங்க நாடாழ்வானைக் காப்பது அவர்தம் பொறுப்பாக விளங்கியது. படையில் இணையும்போதே சூளுரைத்துப் பொறுப்பேற்றல் அக்கால மரபாக இருந்தது போலும். நாயனான அழகிய மணவாள மாராயன், அரியான் கிடாரத்தரையன், உலகனான அழகானைச் சோழ மாராயன் எனும் இம்மூன்று வேளைக்காறப்படை வீரர்களும், ‘அகளங்க நாடாழ்வார்க்கு உடன் வேளையாகச் சாவக் கடவேனாகவும் இவர்க்குப் பின்பே சாவாதே இருந்தேனாகில்’ என் மனைவிக்கு இன்னது நேர்க, என் தாய்க்கு இன்னது நேர்க என்று தாம் உயிரினும் மேலாகக் கருதும் உறவுகளுக்கு இன்னாதன நிகழட்டும் எனச் சூளுரைத்துப் பொறுப்பேற்றதுடன், தம் உறுதிப்பாட்டைத் தம் ஊர்த் திருக்கோயிலிலும் பதிவுசெய்துள்ளனர். சூளுரைக்கிறோம், அதில் தவறினோமாயின் சமுதாயத்தில் மிக இழிவாகக் கருதப்படும் நிலைகள் எம் நெஞ்சத்துக்கு நெருக்கமான உறவுகளுக்கு நேர்க எனக் கூறுவதும் அக்கூற்றைப் பதிவு செய்வதும் அப்படிச் செய்த வீரர்தம் உள்ள உறுதி காட்டுவதுடன், சமுதாயத்தில் ஒழுக்கம் குறித்து நிலவிய சிந்தனைகளையும் மகளிருக்கிருந்த உரிமையற்ற சூழலையும் படம்பிடிக்கிறது. இது ஒத்த இரண்டு கல்வெட்டுகளைச் சிராப்பள்ளி மாவட்டம் திருச்செந்துறை சந்திரசேகரர் திருக்கோயில் வெளிச்சுற்றுச் சுவரிலிருந்து டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய ஆய்வாளர்கள் அண்மையில் கண்டறிந்து வெளிப்படுத்தினர். அவற்றுள் ஒன்றில், கைக்கோளர் அம்மையாழ்வான் திருப்பிலா மாராயன் அழகிய சேமன் என்பார் அரசர் மீகாமனுக்குப் பின் தாம் உயிர்வாழ்தல் இல்லை எனக் கோயில் இறைவன் முன் சூளுரைத்து, அச்சூள் பிழையின் தம் உடன் பிறந்தாளான குணச்சாளுக்குத் தாமே அகமுடையானாவேன் என்று கூறியமை பதிவாகியுள்ளது. சூளுரைத்து அதில் தவறினால் தெய்வம் தண்டிக்கட்டும் என்ற அகநிலையும் குடிமக்கள் என்னைக் கொடியவன் என்க - உறவுகளுக்குத் தரமுடியாத வறுமை என்னைச் சூழ்க - புலவர் என் நிலம் பாடாது ஒழிக என்று தன்னை முன்நிறுத்தியே தண்டனைகள் வேண்டிய புறநிலையும் இருந்த சங்கச் சூழல், கால ஓட்டத்தில் பெரிதும் மாறி, ஒருவர் சூள் தவறினால் அதற்குத் தண்டனை ஏற்கும் பொறுப்பு அவர் குடும்பத்துப் பெண்களிடம் தள்ளப்பட்டமை, பெண்ணியம் சார்ந்து சமுதாயத்தில் நிகழ்ந்த சிந்தனை மாற்றங்களையும் ஒழுக்கம் சார்ந்த நெறிகளுக்கு நேர்ந்த விலக்கங்களையும் படம்பிடிப்பதாகக் கொள்ளலாம். |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |