http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 161

இதழ் 161
[ ஜனவரி 2022 ]


இந்த இதழில்..
In this Issue..

ஆண்டாள் - கால ஆய்வு
அழுந்தூர் வரகுணீசுவரம் - 2
திருவாசி மாற்றுரை வரதீசுவரர் கோயில் கல்வெட்டுகள் - 2
புள்ளமங்கை ஆலந்துறையார் கோயில் கண்டபாதச் சிற்பங்கள் - 2
தேவடிமையான பரதேசிகள்
ஜப்பானியப் பழங்குறுநூறு - 6 (உறைபனி கூட்டும் அழகு)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 5 (தனிமையின் வலியறிவார் யார்?)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 4 (முகட்டில் பொழியும் வெண்மழை)
இதழ் எண். 161 > கலையும் ஆய்வும்
அழுந்தூர் வரகுணீசுவரம் - 2
இரா.கலைக்கோவன், மு.நளினி

கல்வெட்டுகள்

வரகுணீசுவரர் கோயில் வளாகத்திலிருந்து எட்டுக் கல்வெட்டுகள் பதிவுசெய்யப்பட்டன.15 பெருமண்டபத்தின் கிழக்கு, வடக்கு, தெற்குச் சுவர்களிலிருந்து நான்கு கல்வெட்டுகளும் கருவறையின் மேற்குச் சுவரிலிருந்து ஒரு கல்வெட்டும் வரகுணீசுவரர் பலித்தளத்தில் ஒரு கல்வெட்டும் கண்டறியப்பட்டன. பெருமண்டபத் தெற்கு நுழைவாயிலருகே படிக்கட்டாகப் பயன்பட்ட கல்துண்டிலிருந்தும் செங்குளத்தருகே கிடைத்த கல்துண்டிலிருந்தும் இரண்டு துணுக்குக் கல்வெட்டுகள் படித்தறியப்பட்டன. இங்குக் கிடைத்த வீரக்கல், சாளரம், சேட்டைத்தேவி சிற்பங்களிலுள்ள கல்வெட்டுகளும் செட்டிஊருணிப்பட்டியில் படிக்கப்பட்ட கல்வெட்டும் 2015இல் இப்பகுதியில் இரண்டு துண்டுகளாகக் கிடைத்த சுந்தரபாண்டியர் கல்வெட்டும்16 அழுந்தியூர்க் கல்வெட்டுகளாக இணைக்கப் பெற்றன.

அவற்றுள் காலத்தால் முற்பட்டதாக முதல் குலோத்துங்கரின் 48ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டைக் குறிக்கலாம். அரசாணை யாக விளங்கும் கோனேரின்மை கொண்டான் கல்வெட்டு சோழர் காலத்தது.17 சடையவர்மர் சுந்தரபாண்டியர், கோமாறவர்மர் குலசேகரர் காலக் கல்வெட்டுகள் நான்கு இங்குள்ளன. செட்டிஊருணிப்பட்டி தவிர்த்த பிற கல்வெட்டுகள் அனைத்தும் பொ. கா. 9 அல்லது 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. செட்டிஊருணிப்பட்டிக் கல்வெட்டுப் பொ. கா. 16 அல்லது 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகலாம்.

அழிந்தியூர் ஊரவை

இப்பதின்மூன்று கல்வெட்டுகளும் அழிந்தியூர் பற்றிய பல தகவல்களைப் பகிர்ந்துகொள்கின்றன. தற்போது அழுந்தூர் என்றழைக்கப்படும் இவ்வூர் முதல் குலோத்துங்கர் காலத்தில் அழிந்தியூராக அறியப்பட்டது. இரட்டபாடி கொண்ட சோழ வளநாட்டின் உட்பிரிவான உறத்தூர்க் கூற்றத்தின் கீழ் இணைக்கப்பட் டிருந்த இவ்வூர், ஊரவையின் ஆட்சியில் செழித்திருந்தது. முதல் குலோத்துங்கரின் 48ஆம் ஆட்சியாண்டின்போது வரகுணீசுவரத்தில் திருப்பணி மேற்கொண்டு, மண்டபம் எழுப்பி, இறைத்திரு மேனியை எழுந்தருளுவிக்கக் கருதிய ஊரவை, இத்திருப்பணி களுக்கான செலவினங்களுக்காக ஊரின் நன்செய், புன்செய் நில விளைவில் நன்செய்க்குக் கலத்துக்கு நாழி தானியமும் புன்செய்க்கு இரண்டு திரமமும் அளிக்க முடிவெடுத்தனர்.

அரசாணை

பாண்டிகுலாசனி வளநாட்டில் இணைக்கப்பட்டிருந்த திருவானைக்காவின் ஆனைக்கா கோயில் தேவகன்மிகள், மாகேசுவர கண்காணி செய்வார், ஸ்ரீகாரியம் செய்வார் ஆகியோருக்குச் சோழர் காலத்தே இடப்பெற்ற அரசாணையாக விளங்கும் மன்னர் பெயரற்ற முற்றுப்பெறாத கல்வெட்டு, இறைவனின் வழிபாடு, படையல்களுக்காக 30 வேலி நிலம் வரிநீக்கி முதலில் தரப்பட்டதையும் பின், சித்திரைத்திங்கள் சந்திரகிரகணத்தன்று கூடுதலாக 20 வேலி நிலம் நீர்வார்த்து அளிக்கப்பட்டதையும் குறிக்கிறது. கல்வெட்டு மொழியப்பட்டுள்ள முறை, இந்த 50 வேலி நிலமும் திருவானைக்கா இறைவனின் நிவந்தங்களுக்கு அளிக்கப்பட்டு, அதில் ஒருபகுதி அழிந்தியூர் இறைவனுக்கு வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்க இவ்வாணை பிறப்பிக்கப்பட்டதாகக் கருத இடமளிக்கிறது.

வரகுணப்பெருமாள்நல்லூர்

மாறவர்மர் குலசேகரரின் 38ஆம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டு, அழிந்தியூரை வடகோனாட்டின் கீழிருந்த வருவாய்ப்பகுதியாகச் சுட்டுகிறது. நாயனார் மன்னருக்கு விற்பனை செய்திருந்த தட்டான் குளமும் கணக்கன் குளமுமான வரகுணப் பெருமாள்நல்லூர் எனும் குடிகாட்டைத் திரிசூலக்கற்கள் நட்டு வரகுணீசுவரத்துக்குக் குடிநீங்காத் தேவதானமாக மாற்றிய அழிந்தியூர் ஊரார் அதற்கான கடமையை நிச்சயித்தனர். அதன்படி, வரகுணப்பெருமாள்நல்லூர் வயலில் பயிரிடப்பட்டு விளைவு கண்ட நிலத்தில் பயிர் பார்த்து, மாத்தால் 5 கலமாக வந்த நெல்லைக் கோயில் நிருவாகத்தாரான தேவர்கன்மிகள், கணக்கர், ஸ்ரீகாரியம் செய்வார் முன்னிலையில் நாயனார் மன்னர் கோயில் திருக்கொட்டாரத்தே அளக்கவேண்டும். புன்செய்ப் பயிர்களான எள், வரகு, தினை விளைந்த நிலங்களில் மாத்தால் 2 பணம் கடமையாகத் தரவேண்டும். கடமை நிருணயிக்கப்பட்ட இந்த ஆவணத்தில் கோனாட்டுவேளார், அணுக்கநம்பி, பிள்ளைவேளார், இராச ராசவேளார், அழகியசோழவேளார், திருநீற்றுச்சோழவேளார், அணுக்கவேளார், அழகர்மூவேந்தவேளார், சேரநர், விக்கிரமசோழ வேளார் ஆகிய ஊரவை உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

திருப்பணிக் கல்வெட்டுகள்

பெருமண்டபத் தெற்குச் சுவரிலுள்ள பொ. கா. 13ஆம் நூற்றாண்டினதாகக் கொள்ளத்தக்க மன்னர் பெயரற்ற கல்வெட்டு, அழிந்தியூரில் காணியுரிமை பெற்றிருந்த வலைப்பாடி காப்பாரான வலையன் சூற்றிச் சாந்தனான பெரியநாட்டு முத்தரையர் இக்கோயில் திருமண்டபத்திற்குத் தட்டோடுகள் இட்ட தகவலைத் தருகிறது. கருவறையின் மேற்குச் சுவரிலுள்ள இருவரிக் கல் வெட்டு, அக்கட்டமைப்பிலுள்ள கற்களுள் ஒன்றை அழிந்தியூர்ச் சலவைத் தொழிலாளர் அழிவில்லாததேவன் மகன் மொண்ணை அளித்ததாகத் தெரிவிக்கிறது.

திருமடங்கள்

இவ்வளாகத்தில் கிடைத்த 12ஆம் நூற்றாண்டு எழுத்தமைதியில் உள்ள இரு துண்டுக் கல்வெட்டுகளுள் ஒன்று பூதிதிரு ஆழ்வான் நாவாமை அழகிய பல்லவரையன் குமனன் மாறன் கல்லனான தடுனன் கங்கனின் மகனாகச் செமின் திருவை அறிமுகப்படுத்துகிறது. மற்றொரு துண்டுக் கல்வெட்டு நாயனார் கோயில் பணி செய்வித்த பிச்சியார் மடத்தைச் சேர்ந்தவரின் அறத்தைச் சுட்டுகிறது. கல்வெட்டுச் சிதைந்திருப்பதால் அன்னாரின் பெயரையும் அவர் செய்த அறத்தையும் அறியக்கூடவில்லை.

இரண்டு துண்டுகளாக அகழ்ந்தெடுக்கப்பட்ட சடையவர்மர் சுந்தரபாண்டியரின் 5ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, அழிந்தியூரிலிருந்த பெரியநாட்டான் மடத்து18 மழவரையர், சிதைவுற் றிருந்த வரகுணீசுவரம் கோயிலைப் புதுக்கிய செய்தியை அளிப்பதுடன், அம்மடம் அஞ்சினார் புகலிடமாக விளங்கியதையும் தெரிவிக்கிறது. இதுவே சிராப்பள்ளி மாவட்டத்தில் கிடைத்துள்ள ஆஸ்ரயம் குறிக்கும் முதல் அஞ்சினான் புகலிடக் கல்வெட்டு என்பது குறிப்பிடத்தக்கது.

குலோத்துங்க சோழ விண்ணகரம்

பல துண்டுகளாகப் பலித்தளத்தில் இணைத்துக் கட்டப்பட்டுள்ள மாறவர்மர் குலசேகரரின் 41ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, அழிந்தியூரில் இருந்து சுவடழிந்த குலோத்துங்கசோழ விண்ணகரத்தை வரலாற்று வெளிச்சத்திற்குக் கொணர்கிறது. மேலை இநாங்குடியை இக்கோயிலுக்கு திருநாமத்துக்காணியாக அவ்வூரார் விற்றுக் குடுத்த ஆவணமாக விளங்கும் இக்கல்வெட்டின் முழுமையான செய்தியை அறியக்கூடவில்லை. இவ்வளாகத்திலிருந்து சிராப்பள்ளி அருங்காட்சியகத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட விஷ்ணு, நிலமகள், மார்க்கண்டேயர் சிற்பத்தொகுதி களும் தற்போது இப்பகுதியில் கிடைத்துள்ள முச்சதுர, இரு கட்டுத் தூண்களும் இக்கோயிலுக்குரியனவாகலாம்.

விஷ்ணுதொகுதி பொ. கா. 9ஆம் நூற்றாண்டினதாக அமைந் துள்ளமையால், பல்லவர் காலத்தே அழிந்தியூரில் விளங்கிய விண்ணகரம், முதற் குலோத்துங்கர் காலத்தில் திருப்பணிக்காளாகி மன்னர் பெயரையேற்றுக் குலோத்துங்க சோழ விண்ணகரமாக ஒளிர்ந்திருக்கலாம். மாறவர்மர் குலசேகரரின் ஆட்சிக் காலமான 14ஆம் நூற்றாண்டுவரை நன்னிலையில் இருந்த அக்கோயில் காலப்போக்கில் சிதைந்து அழிந்தது போலும். கட்டமைப்பு காற்றில் கரைந்து போயிருந்தாலும் சுவடுகள் தப்பிப் பிழைத்து வரலாற்றை வெளிச்சப்படுத்தியுள்ளன.19

நிலக்கொடை

செட்டிஊருணிப்பட்டியில் படிக்கப்பெற்ற கல்வெட்டுப் பல இடங்களில் சிதைந்திருந்தாலும் துக்காமாட சீநாயக்கர் தம் சீர்மையின் வடமுகமான அழுந்தூர்ப் புரவிற்கு உட்பட்டிருந்த 'விரைப்பர் அளைமுகில்' எனும் பெயரிலிருந்த நிலத்தின் விளைவைப் பசானபோகம் நீக்கி இராசதனமாக்கியதைக் கூறுகிறது. இந்நிலத்தை அளித்தவராக இருமுடி செட்டியாரின் பெயரும் நிலத்திற்கு அருகிலிருந்த நீர்நிலையாக நந்தவனத் தெப்பக்குளத்து ஊருணியும் குறிப்பிடப்பட்டுள்ளன. இக்கல்வெட்டால் இப்பகுதியில் கோயில் நந்தவனமும் தெப்பக்குளமாகப் பயன்பட்ட ஊருணியும் இருந்தமை தெரியவருகிறது. தெப்பக்குளம் என்ற சொல்லாட்சி கொண்டு அக்காலக்கட்டத்தே இப்பகுதியில் இவ்வூருணியில் தெப்பஉற்சவம் நிகழ்த்தப்பட்டதாகக் கருதவும் இடமுண்டு.

காலம்

கல்வெட்டுகளில் கோயிலின் பெயர் வரகுணீசுவரம் என்றி ருப்பதால், முற்பாண்டிய அரசர்களுள் ஒருவரான வரகுண பாண்டியர் காலக் கட்டுமானமாக இதைக் கொள்ளலாம்.20 உறையூர்த் தான்தோன்றீசுவரம் உள்ளிட்ட பல கோயில்களில் கொடையளித்தவராக வானவியல் குறிப்புகள் கொண்டு முன்னிருத்தப்படும் இரண்டாம் வரகுணராக இம்மன்னரைக் கருதமுடியும். முதல் குலோத்துங்கர் காலத்தில் இவ்வளாகத்தில் நிகழ்ந்த திருப் பணிகள் செங்கல் அல்லது கருங்கல் தளியாக இருந்த வரகுணீசுவரத்தின் வடிவம் மாற்றியிருக்கலாம். சுந்தரபாண்டியர் காலத்தில் இங்கு மற்றொரு திருப்பணி நிகழ்ந்தமையை மழவரையர் கல்வெட்டு வெளிப்படுத்துகிறது.

பல்லவர் காலத்தில் இப்பகுதியில் விளங்கிய விண்ணகரம் முதல் குலோத்துங்கர் காலத்தில் குலோத்துங்க சோழ விண்ணகர மாகப் பெயரேற்று, குலசேகர பாண்டியர் காலம்வரை வாழ்ந் திருந்து, காலப்போக்கில் காற்றில் கரைந்தது போலும். கட்டு மானங்களும் கல்வெட்டுகளும் சிற்பங்களும் வரலாற்றை மீட்டுருவாக்கத் துணைநிற்க முடியும் என்பதற்கு அழிந்தியூரினும் சிறந்த சான்று வேறில்லை.

குறிப்புகள்
15. வரலாறு 3, பக். 11-14, வரலாறு 25, பக். 19-22. புதிதாகக் கண் டறியப்பட்ட இக்கல்வெட்டுகளை நடுவணரசின் கல்வெட் டுத்துறை அலுவலர் முனைவர் மு. து. சம்பத்தும் தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வெட்டுத்துறைப் பேராசிரியர் முனைவர் செ. இராசுவும் படியெடுத்தனர். திரு. சம்பத் படியெடுத்த கல்வெட்டுகளின் சுருக்கங்கள் 1985 - 86ஆம் ஆண்டிற்கான இந்தியக் கல்வெட்டறிக்கையில் (394 - 403) பதிவாகியுள்ளன.
16. தினமணி 18. 4. 2015. இக்கல்வெட்டு 19. 4. 2015 அன்று கள ஆய்வின்போது படித்துப் படியெடுக்கப்பட்டது.
17. இந்த அரசாணைக் கல்வெட்டில் இடம்பெற்றுள்ள வள நாட்டின் பெயர் பாண்டிகுலாசனி வளநாடு. சோழர் காலத் தில் இப்பெயர் கொண்டிருந்த இவ்வளநாடு பிற்பாண்டியர் ஆட்சிக் காலத்தே பாண்டிகுலபதி வளநாடாக மாறியது. சில பின்னாளைய கல்வெட்டுகள் மீண்டும் இவ்வளநாட்டைப் பாண்டிகுலாசனி வளநாடாகக் குறிப்பிட்டபோதும், அரசா ணைக் கல்வெட்டின் எழுத்தமைதி அதைப் பிற்சோழர் காலக் கல்வெட்டாக உறுதிசெய்கிறது.
18. சோழர் காலத்தில் இவ்வூரில் இயங்கிய பிச்சியார் மடமே பிற்பாண்டியர் காலத்தில் பெரிய நாட்டான் திருமடமாகப் பெயர் மாற்றம் பெற்றிருக்கலாம்.
19. தினமணி 11. 5. 2015, Deccan Chronicle 10. 5. 2015, The Hindu 14. 5. 2015, Indian Express 12. 5. 2015.
20. வரகுணீசுவரம் கோயிலை அதன் பெயர் கொண்டும் வரகுணப்பெருமாள் நல்லூருக்குக் கடமை நிச்சயிக்கும் கல்வெட்டாவணத்தில் காணப்பெறும், 'நாயனார் மன்னற்கு' என்ற சொல்லாட்சியின் அடிப்படையிலும் வரகுணரின் பள்ளிப்படைக் கோயிலாகக் கொள்கிறார் புலவர் செ. இராசு.
வரகுணீசுவரம் வளாகத்திலிருந்து படியெடுக்கப்பட்ட கல்வெட்டுகளில், முதல் குலோத்துங்கர் கல்வெட்டு இக்கோயில் இறைவனைக் குறிக்கும்போது, 'வரகுணீசுவரம் உடைய மகா தேவர்' என்றும் சுந்தரபாண்டியரின் 5ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, 'அழிந்தியூர் வரகுணீசுவரமுடையார்' என்றும் குலசேகரபாண்டியரின் 38ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, 'உடையார் வரகுணீசுவரமுடைய நாயனார்' என்றும் குறிப்பிடுகின்றன. இம்மூன்று கல்வெட்டுகளின் எந்த ஓர் இடத்திலும் கோயில் இறைவன் 'நாயனார் மன்னர்' என்ற பெயரில் அழைக்கப்பெறவில்லை.
சிராப்பள்ளி மாவட்டம் பேட்டைவாய்த்தலையிலுள்ள மதுராந்தக ஈசுவரமான மத்யார்ச்சுனேசுவரர் கோயிலில் காணப்படும் விஜயநகர அரசரான தேவராயர் காலக் கல் வெட்டு, கோனாடான கடலடையாதிலங்கை கொண்ட சோழ வளநாட்டு ஒல்லையூர்க் கூற்றத்து ஒல்லையூர்மங்கலத் திருந்த உடையார் வரகுணீசுவரமுடைய நாயினார் கோயில் ஒன்றைச் சுட்டுகிறது. வரகுணீசுவரம் என்று பெயர் கொண்டிருப்பதாலேயே அழிந்தியூர் வரகுணீசுவரம் வரகுணரின் பள்ளிப்படையாகும் எனில் ஒல்லையூர்மங்கலத்து வரகுணீசுவரத்தை எதுவாகக் கொள்வது என்ற கேள்வி எழுகிறது.
குலசேகர பாண்டியர் காலக் கடமை நிச்சயிக்கும் ஆவணமாக அழிந்தியூர் வரகுணீசுவரத்தில் பதிவாகியுள்ள கல் வெட்டிலேயே நாயனார் மன்னர் இடம்பெறுகிறார். இந்த மன்னர் என்ற சொல்லாட்சியை அதன் நாயனார் என்னும் முன்னொட்டுக் கொண்டு அத்தொடர் அரசனான இறைவன் எனும் பொருள் தருவதாகக் கருதி அதன் அடிப்படையில் அழிந்தியூர் வரகுணீசுவரத்தை வரகுணரின் பள்ளிப் படையாகக் கொள்கிறார் புலவர் இராசு.
'ஊரவரோம் நாயநார் மன்னற்கு நாங்கள் பிரமாணம் பண்ணிக் குடுத்த பரிசாவது எங்கள் பக்கல் இவர் விலை கொண்டு நாங்கள் உடையார் வரவுணீசுவரமுடைய நாயநாற்கு குடி நீங்கா தேவதாநமாகத் திருச்சூலத்தாபனம் பண்ணிக் குடுத்த' என்று தங்கள் செயற்பாட்டை ஊரார் கல்வெட்டில் மிகத் தெளிவாக விளக்கியுள்ளனர். நாயனார் மன்னர் என்பவர் அழிந்தியூர் ஊராரிடம் விலைக்குப் பெற்ற வரகுணப்பெருமாள் நல்லூரை வரகுணீசுவரமுடைய நாயனாரான இறைவனுக்குக் குடிநீங்காத் தேவதானமாக ஆவணப்படுத்திய ஊரார், அவ்வூருக்கான கடமையை (நிலவரி) நிச்சயித்தபோது, 'பயிர் கண்ட நிலத்துக்கு மாத்தால் அஞ்கலமாக வந்த நெல் நாய(நார்) திருக்கொட்டாரத்தே தேவகந்மி கோயில் கணக்கந் சீகாரியம் செய்வாரோடும் அள(க்க) கடவாராகவும்' என்று அக்கடமையை நாயனார் மன்னர் கோயில் நிருவாகிகளுடன் இணைந்து கோயில் கொட்டாரத்தில் செலுத்துமாறு பணித்தனர்.
அந்த ஆவணம் நாயனார் மன்னர் என்ற தனியருக்கு அளிக்கப்பட்டதை ஆவணத்தின் இறுதியிலுள்ள 'பிரமாணம் பண்ணிக் குடுத்தோம் நாயநார் மன்நற்கு வடகோநாட்டு அழிந்தியூர் ஊரவரோம்' என்ற தொடர் தெளிவுபடுத்துகிறது. இந்த ஆவணம் இறைக்கோயிலுக்கு அளிக்கப்பட் டிருக்குமாயின், கல்வெட்டின் தொடக்கத்தில் உள்ளவாறு போன்றே, 'உடையார் வரவுணீசுவரமுடைய நாயநாற்கு' பிரமாணம் பண்ணிக் கொடுப்பதாகவே ஊரார் குறித்திருப்பர்.
வரகுணீசுவரம் என்ற பெயரில் ஒன்றுக்கு மேற்பட்ட கோயில்கள் கோனாட்டிலேயே விளங்கியமையாலும் நாயனார் மன் னர் என்ற தொடர் தனிமனிதரைக் குறிப்பதாலும் இவ்விரண்டின் அடிப்படையில் அழிந்தியூர் வரகுணீசுவரத்தை வரகுணரின் பள்ளிப்படையாகக் குறிக்கும் புலவர் செ. இராசுவின் கூற்று ஏற்புடையதன்று என்பது தெளிவு. மேலும், தமிழ் நாட்டில் இதுநாள்வரை கண்டறியப்பட்டுள்ள பள்ளிப்படைக் கோயில்கள் அனைத்திலும் அவற்றிலுள்ள கல் வெட்டுகள் அக்கோயில்களைப் பள்ளிப்படை என்று சுட்டுவதும் அத்தகு சுட்டல் ஏதும் அழிந்தியூர் வரகுணீசுவரம் கல் வெட்டுகளில் இல்லாமையும் கருதத்தக்கது. புலவர் செ. இராசு, 'அழுந்தூரும் அழிந்தியூரும்', ஆய்வுக்கோவை, இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்ற வெளியீடு, 1995.
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.