http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 161

இதழ் 161
[ ஜனவரி 2022 ]


இந்த இதழில்..
In this Issue..

ஆண்டாள் - கால ஆய்வு
அழுந்தூர் வரகுணீசுவரம் - 2
திருவாசி மாற்றுரை வரதீசுவரர் கோயில் கல்வெட்டுகள் - 2
புள்ளமங்கை ஆலந்துறையார் கோயில் கண்டபாதச் சிற்பங்கள் - 2
தேவடிமையான பரதேசிகள்
ஜப்பானியப் பழங்குறுநூறு - 6 (உறைபனி கூட்டும் அழகு)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 5 (தனிமையின் வலியறிவார் யார்?)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 4 (முகட்டில் பொழியும் வெண்மழை)
இதழ் எண். 161 > கலையும் ஆய்வும்
ஆண்டாள் - கால ஆய்வு
சு.சீதாராமன்

திருவாடிப் பூரத்து செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே
பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே
உயரரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருமல்லி வள நாடி வாழியே!!!

வண்புதுவை நகர்க் கோதை மலர்ப் பதங்கள் வாழியே.
வேயர்புகழ் வில்லிபுத்தூர் ராடிப்பூரம்
மேன்மேலும் மிகவிளங்க விட்டுசித்தன்
தூயதிரு மகளாய் வந்த ரங்கனார்க்குத்
தூழாய்மாலை முடிசூடித் கொடுத்த மாதே!
நேயமுடன் திருப்பாவை பாட்டாறந்தும்
நீயுரைத்த தையொரு திங்கட்பாமாலை
ஆயபுகழ் நூற்றுநாற்பத்து மூன்றும்
அன்புடனே யடியேனுக்குகருள் செய்நீயே

மேற்கூறிய பாடல்களிலிலிருந்தும் குருபரம்பரைச் செய்திகளிலிருந்தும் ஸௌ.ஆண்டாள் ஆடி மாதம் சுக்ல பக்ஷம் சதுர்த்தியும் பூர நட்சத்திரமும் (செவ்வாய்க் கிழமையும்) கூடிய நன்னாளில் துளசிசூழ் நந்தவனத்தில் பெரியாழ்வாரால் கண்டெடுக்கப்பட்டாள் என்பதை நாம் அறியலாம்.

மேலும் சமயப் பெரியோர்கள் "கலி 98 வதான நள வருடம் ஆடி மாதம் சுக்ல பக்ஷம் சதுர்த்தியும் பூர நட்சத்திரமும் கூடிய நன்னாள், பெரியாழ்வார் என்கிற விஷ்ணு சித்தர் நந்தவனத்திலே துளசிச் செடியின் கீழே ஓர் அழகிய பெண்குழந்தை அவருக்குக் கிடைத்ததாகப் பதிவு செய்துள்ளனர். அவரும் அக்குழந்தையை தன் மகளாகவே கருதிக் "கோதை" என்று பெயரிட்டு மிகுந்த பாசத்தோடு வளர்த்து வந்தார். கோதை, நாச்சியார் என்றும் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என்றும் அழைக்கப்பட்டாள். ஆண்டாள் பூமிப்பிராட்டியின் அவதாரமாவும் கருதப்படுகிறார். எது எப்படியோ, நமக்கு ஆண்டாளின் பிறப்புக் குறித்தத் தகவல்களின் அடிப்படையில் கீழ்க்கண்ட தகவல்கள் பலரின் பதிவுகளிலிலிருந்து உறுதி செய்யப்படுகிறது.

பிறந்த இடம் : ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள "துளசிசூழ் நந்தவனம்"
கிழமை : செவ்வாய்க் கிழமை
மாதம் : ஆடி மாதம்
நட்சத்திரம் : பூர நட்சத்திரம்
திதி : சுக்கில சதுர்த்தி

மேலும் அவள் திருப்பாவை இயற்றிய காலம் பற்றி அவரே தமது பாடல்களில் அழகான வானியல் குறிப்புகளை விட்டுச்சென்றிருக்கிறார்.

"மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்"
"வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்று"

மேற்கூறிய இரு வரிகளிலிருந்து ஆண்டாள் திருப்பாவை எழுதிய ஆண்டைக் கண்டறியப் பல ஆய்வறிஞர்கள் முயற்சி மேற்கொண்டனர். அவர்களில் ஆய்வறிஞர் திருவாளர். மு. இராகவ அய்யங்கார் அவர்கள் கி.பி.1929 ல் எழுதிய "ஆழ்வார்கள் காலநிலை" என்ற நூல் பின்னாளில் இந்தக்காலப் பகுப்பாய்வு மேற்கொள்வோர் பலருக்கும் கலங்கரை விளக்கமாய்த் திகழ்ந்தது என்றால் அது சற்றும் மிகையாகாது. இன்றளவிலும் அவருக்குப் பின்வந்த ஆய்வாளர்கள் பலரும் அவரது ஆய்வு முடிவையே ஆழ்வார்களின் காலமாக ஏற்கும் நிலையையும் நாம் அறிய முடிகிறது. அதற்கு மிக முக்கியக் காரணமும் உண்டு. அவர் ஒருவர்தான் மேற்கூறிய தரவுகளை வானியல் கண்கொண்டும் பகுப்பாய்வு செய்து ஆண்டாளின் பிறந்த வருடம் மற்றும் திருப்பாவை இயற்றப்பட்ட வருடம் ஆகியவைகளை ஒரு புள்ளியில் மையப்படுத்தியிருக்கிறார்! அவ்வாறு அவர் ஆண்டாள் அவதரித்ததாக நிறுவிய ஆண்டு கி.பி. 716.



திரு. மு. இராகவ அய்யங்கார் அவர்கள் அளித்த குறிப்புகள் கொண்டு கி.பி. 716 ஆம் ஆண்டு ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரம் குறிக்கும் ஆங்கில தினம் ஜுலை மாதம் 29ம் தேதியாகும்! இத்தரவுகளின் படி அன்றைய தினம் சுக்கிலபட்சம் துவிதியை மற்றும் சனிக்கிழமை ஆகும்!

அவருடைய மேற்கூறிய நூலில் கி.பி 716ம் வருடத்திய ஆடிப்பூரத்தன்றே ஆண்டாளின் அவதாரம் நிகழ்ந்திருக்கிறதென்று தனது புத்தகத்தில் நிறுவியிருக்கிறார். ஆண்டாளின் அவதாரமாக அவர் மேலும் இரண்டு நாட்களைத் தேர்வு செய்து அவரே சில வாதங்களை முன்வைத்து அந்த நாட்களில் ஆண்டாள் அவதரித்திருப்பது இயலாது என்ற முடிவுக்கும் வருகிறார். மேலும் அவரது புத்தகத்தில் பக்கம் 91ல் ஆண்டாள் அவதார தினம் ஆடி மாதம் சுக்கில சதுர்தசியும் செவ்வாய்க்கிழமையும் கூடின பூர நட்சத்திரம் என்று குருபரம்பரைகள் கூறுகின்றன என்றும் இக்காலக்குறிப்பைக் கொண்டு கி.பி.776ஆம் வருடம் ஜுன் மாதம் 25ம் தேதி ஆண்டாள் அவதரித்திருக்கலாம் என்று ஸ்ரீமான் சாமிக்கண்ணுப்பிள்ளை அவரது நூலில் கணித்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். மேற்கூறிய குறிப்பும் கட்டுரையாசிரியரால் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.



கி.பி.776ஆம் வருடம் ஜுன் மாதம் 25ம் தேதி அன்று நட்சத்திரமே முதலில் பொருந்திவரவில்லை. திதி மற்றும் கிழமைகளும் பொருந்திவரவில்லை. உண்மையில் அந்த வருடம் ஆடி மாதம் பூர நட்சத்திரத்துடன் அமைந்த தேதி ஜுலை மாதம் 26ம் தேதியாகும். இந்தத் தேதியிலும் திதி மற்றும் கிழமைகள் பொருந்தி வரவில்லை.



"வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்று" என்ற திருப்பாவை வரிகொண்டு திருப்பாவை இயற்றப்பட்ட ஆண்டாகக் கி.பி 731 டிசம்பர் 18 என்று வானூல் அறிஞர்கள் கணிப்பதாகத் தனது நூலில் அவர் எடுத்துரைக்கிறார். இக்குறிப்பும் கட்டுரையாசிரியரால் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இத்தரவுகளைப் பகுப்பாய்வு செய்யுமுன் சோதிடரீதியாகச் சில செய்திகளைப் பார்த்திடல் நலம்.

சோதிடக் கலையானது 27 நட்சத்திரங்களையும் 12 இராசிகளையும் 9 கிரகங்களையும் மையமாக வைத்தே இயங்குகிறது. இதில் இந்தக் கிரகங்களின் ஆதிக்கத்தையும் அவைகள் இடம் பெற்றுள்ள இராசிக்கட்டத்தை வைத்தும் இலக்னம் என்பதை முதற்கட்டமாக வைத்தும் ஜாதகருக்கான பலனைக் கணித்துச் சொல்லும்முறை தொன்றுதொட்டு நிலவிவரும் வழக்கமாகும். பொதுவாக இராகு கேது நீங்கலாக மீதமுள்ள ஏழு கிரகங்களுக்கும் அவர்களுக்கென்று இந்த 12 இராசிகளில் வீடுகள் உண்டு. சூரியனுக்கும் சந்திரனுக்கும் ஒரு வீடும் மற்றைய கிரகங்களுக்குத் தலா இரண்டிரண்டு வீடுகளும் உள்ளாதாகச் சோதிட சாஸ்திரங்கள் கூறும். இவைகளில் சில வீடுகளில் சில கிரகங்கள் உச்சமாவதும், சில வீடுகளில் சில கிரகங்கள் நீச்சமடைவதும் சோதிட வல்லுனர்கள் அனைவரும் அறிவர். இதில் தனிமனிதர்களுக்குச் சோதிடம் சொல்லும்போது இலக்னத்தை மையமாகவைத்து இலக்னத்திற்கு 6, 8 & 12ம் இடங்கள் மறைவு ஸ்தானங்களாக கருதப்பட்டு அந்தச் சாதகருக்கு அதற்குரிய பலன்கள் கூறுவது வழக்கம். "வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்று' என்ற வரிகளை நூலாசிரியரும் அவருக்கு உதவிய சோதிட அறிஞர்களும் எவ்வாறு புரிந்து கொண்டுள்ளனர் என்பது குறித்த சந்தேகம் இந்தத் தரவுகளை ஆய்வு செய்யும்போது நமக்கு ஏற்படுகிறது. மேலும் ஆண்டாள் தனது திருப்பாவையில் அந்தக் காலகட்ட வானியலைப் பதிவு செய்வதற்கான வாய்ப்புகள்தான் அதிகமே தவிரத் தனிமனிதக் கோள்களின் அமைப்புகளைச் சொல்லியிருக்க வாய்ப்புகள் இல்லை.



இலக்னத்திற்கு 6, 8 & 12ம் இடங்கள் மறைவு ஸ்தானங்கள் என்ற நிகழ்தகவிற்கு வாய்ப்பில்லை. இவைகள் நீங்கலாக ஒரு வாய்ப்புதான் இருக்கிறது. அது என்னவென்றால் வியாழன் 12 வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே மகரராசியில் நீச்சமடையும்! அந்த நிகழ்வையே ஆண்டாள் "வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்று' என்று குறிப்பிட்டிருக்கக் கூடும் என்பது கட்டுரையாசிரியரின் கருத்தாகும். கீழ்வானில் சூரிய உதயத்திற்கு முன்பு வெள்ளி முளைப்பது அன்றாட நிகழ்வு. ஆனால் வியாழன் உறங்குதல் 12 வருடத்திற்கு ஒருமுறை வரும் அபூர்வ நிகழ்வாகும். எனவே ஆண்டாள் திருப்பாவை இயற்றிய வருடத்தில் இரண்டு அதிசய நிகழ்வுகள் நிகழ்ந்திருக்கின்றன.

ஒன்று அந்த வருட மார்கழி மாதம் "பெளர்ணமியில்" துவங்கியிருக்கிறது! இரண்டு அதே வருடத்தில் வியாழன் மகரராசியில் சஞ்சரித்து நீச்சமடைந்திருக்க வேண்டும். இந்த வகையில் மேற்கூறிய 18-டிசம்பர் 731ல் இலக்னத்திற்கு 6, 8 & 12ம் இடங்களில் வியாழன் மறையவும் இல்லை. மகரத்தில் நீச்சமடையவும் இல்லை. எனவே ஆண்டாளின் அவதாரதினமாக திரு. சாமிக்கண்ணுப்பிள்ளை குறிப்பிடும் தேதியும் (25-06-776) திருவாளர். மு. இராகவ அய்யங்கார் குறிப்பிடும் கி,பி 716 ஆடி மாதமும் வானியல் ரீதியாக நிச்சயமாக ஒத்துப் போகவில்லையாகையால் இந்தத் தேதிகளில் ஆண்டாளின் அவதாரம் நிகழ்ந்திருக்க வாய்ப்புகள் இல்லை என்று கட்டுரை ஆசிரியர் உறுதியாகக் கருதுகிறார்.

அதேபோல் கி.பி 600 நவம்பர் 27லிலும் வானியல் கூறுகளின்படி மேற்கூறிய வகையில் இலக்னத்திற்கு 6, 8 & 12ம் இடங்களில் வியாழன் மறையவும் இல்லை. மகரத்தில் நீச்சமடையவும் இல்லை. ஒருவேளை நூலாசிரியர் திரு. மு. இரா "நள" ஆண்டு என்ற தகவலை மட்டுமே மையமாக வைத்தும் சிந்தித்திருக்கக் கூடும். அந்த ஆண்டுகளை மையமாக வைத்து அவர்கள் மேற்கொண்ட இந்த ஆய்வுகள் நிச்சயம் போற்றுதலுக்கும் வணக்கத்திற்கும் உரியவை. திரு. சாமிக்கண்ணுப்பிள்ளையும் திரு. மு. இராகவ அய்யங்காரும் எடுத்து ஆய்வு செய்யாத கி.பி.836 மற்றும் கி.பி.896 ஆகிய "நள" வருடங்களின் ஆடிப்பூர நாட்களை இக்கட்டுரை ஆசிரியர் ஆய்வுக்கு உட்படுத்தி அதன் விவரங்களையும் இக்கட்டுரையில் வழங்கியிருக்கிறார்.



எனவே மூன்று நூற்றாண்டுகளில் இடம் பெற்ற "நள" ஆண்டுகளில் இடம்பெற்ற ஆடிமாதப் பூர நட்சத்திரங்களில் "சுக்கில பட்ச சதுர்தசியும்", "செவ்வாய்க் கிழமையும்" இடம் பெறாமையால் இக்கட்டுரையாசிரியர் "நள" ஆண்டில் ஆடிப்பூரத்தில் ஆண்டாள் அவதரித்தாள் என்ற கருத்து ஆய்வு ரீதியாக ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல என்று கருதுகிறார். இப்பொழுது வரலாற்றுத் தகவல்கள் சிலவற்றை இக்கருத்துக்களுடன் பொருத்தி இக்கால ஆராய்ச்சியை இதே வானியல் கூறுகள் கொண்டு ஒரு முயற்சியை மேற்கொள்வோம்.

விஷ்ணு சித்தராகிய பெரியாழ்வார் பாண்டிய மன்னன் ஒருவனின் அமைச்சரவையில் "பர தத்துவம்" நிர்ணயம் செய்து பொற்கிழி பெற்றார் என்ற செய்தியை நினைவில் கொள்வோம்!

ஸ்ரீ பாண்டிய பட்டர் அருளிச் செய்த தனியன்

"பாண்டியன் கொண்டாட பட்டர்பிரான் வந்தான் என்று
ஈண்டிய சங்கம் எடுத்தூத -வேண்டிய
வேதங்களோதி விரைந்து கிழி யறுத்தான்
பாதங்கள் யாமுடைய பற்று "



இப்பாடலில் குறிக்கப்பட்ட பாண்டிய மன்னன் ஸ்ரீமாறன் ஸ்ரீ வல்லபன் என்றும் பட்டர்பிரான் திரு. பெரியாழ்வார்தான் என்றும் பல வைணவ நூற்குறிப்புகள் உண்டு. வரலாற்றின் காலக் குறிப்பில் ஸ்ரீமாறன் ஸ்ரீ வல்லபன் ஆட்சி செய்த ஆண்டுகளாக கி.பி. 835 லிருந்து கி.பி.862 என்பதாகப் பல வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்துள்ளதை ஈண்டு நினைவு செய்தல் பொருத்தமாயிருக்கும். எனவே பெரியாழ்வார் ஆண்டாளைக் கண்டெடுத்த ஆடிப்பூரம் இந்த ஆண்டுகளுக்கிடையேதான் நிகழ்ந்திருக்க வேண்டும் என்று கருதிய கட்டுரை ஆசிரியர் இவ்வாண்டுகளில் உள்ள ஆடிப்பூரங்களை ஆய்வு செய்ததில் ஆண்டாள் பிறந்த தினமாக பிரமோத வருடம்19-07-850ல் வருவதையும் அந்நாளில் ஆடி மாதத்தில் பூர நட்சத்திரமும், சுக்கில சதுர்த்தியும், செவ்வாய்க்கிழமையும் ஒருங்கே அமையப்பெற்று வருவதையும் கண்டு 19-07-850 தான் ஆண்டாள் உதித்த ஆடிப்பூரம் என்று இக்கட்டுரை ஆசிரியர் கருதுகிறார்.



இந்த நாளை அடிப்படையாகக் கொண்டு ஆண்டாள்

"மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்"
"வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்று"

என்று குறிப்பளித்த வண்ணம் அவர் திருப்பாவை அருளிச்செய்த வருடம் எது என்பதை ஆய்வு செய்ய அந்நாள் 16-12-870 என்பதாக இக்கட்டுரையாசிரியர் கண்டடைகிறார்.



இந்த நாளில் தனுர் ராசியில் இலக்னம் அமைவதுடன் தனுர் ராசியில் வெள்ளி விளங்க மகர ராசியில் வியாழன் நீச்சமடைகிறார். இந்த தினம் பௌர்ணமியாகவும் அமைந்து வருவதால்,"மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்", "வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்று" என்ற குறிப்புகள் முற்றிலும் பொருந்தி வரும் இந்த 870வது வருடமே ஆண்டாள் திருப்பாவை இயற்றிய வருடமாகவும் இக்கட்டுரையாசிரியர் கருதி இக்கட்டுரையை மகிழ்வுடன் நிறைவு செய்கிறார்.
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.