http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[178 Issues]
[1762 Articles]
Home About US Temples Facebook
Issue No. 161

இதழ் 161
[ ஜனவரி 2022 ]


இந்த இதழில்..
In this Issue..

ஆண்டாள் - கால ஆய்வு
அழுந்தூர் வரகுணீசுவரம் - 2
திருவாசி மாற்றுரை வரதீசுவரர் கோயில் கல்வெட்டுகள் - 2
புள்ளமங்கை ஆலந்துறையார் கோயில் கண்டபாதச் சிற்பங்கள் - 2
தேவடிமையான பரதேசிகள்
ஜப்பானியப் பழங்குறுநூறு - 6 (உறைபனி கூட்டும் அழகு)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 5 (தனிமையின் வலியறிவார் யார்?)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 4 (முகட்டில் பொழியும் வெண்மழை)
இதழ் எண். 161 > இலக்கியச் சுவை
ஜப்பானியப் பழங்குறுநூறு - 6 (உறைபனி கூட்டும் அழகு)
ச. கமலக்கண்ணன்

பாடல் 6: உறைபனி கூட்டும் அழகு

மூலப்பாடம்:

காஞ்சி எழுத்துருக்களில்
かささぎの
渡せる橋に
おく霜の
白きを見れば
夜ぞふけにける

கனா எழுத்துருக்களில்
かささぎの
わたせるはしに
おくしもの
しろきをみれば
よぞふけにける

ஆசிரியர் குறிப்பு:

பெயர்: கவிஞர் யகாமொச்சி

காலம்: கி.பி 718-785.

இவரும் காலத்தால் அழியாத 36 கவிஞர்கள் என ஜப்பானிய இலக்கிய வரலாற்றில் உள்ள காலத்தால் முற்பட்ட நிஷி ஹொங்கான்ஜி பட்டியலில் இடம்பெற்று இருப்பவர்தான். அதைவிட இவருக்குப் பெருமை சேர்ப்பது கி.பி 456 முதல் கி.பி 759 வரை இயற்றப்பட்ட 4,516 தனிப்பாடல்களையும் மான்யோஷு என்ற பெயரில் தொகுத்தவர் என்பதுதான். இவரது தந்தை தபிதோ பீலியன்ன நீள் இரவு என்னும் 3வது பாடலை எழுதிய ஹிதாமரோவின் நண்பர். இருவரும் பேரரசி கென்மெய்யின் அரசவையில் பணியாற்றினர். யகாமொச்சியின் 13 வயதிலேயே தந்தை தபிதோ இறந்துவிட, அத்தை சகானோஉவே என்பவரால் வளர்க்கப்பட்டார்.

பேரரசர் ஷோமுவின் அரசவையில் உயரதிகாரியாகப் பணியாற்றினார். தனது திறமையால் குறுகிய காலத்திலேயே அரசருக்கு அடுத்து மூன்றாவது அதிக அதிகாரம் பெற்றவராக முன்னேறினார். கி.பி 740ல் தென்மேற்கு ஜப்பானில் எழுந்த கலவரத்தை அடக்க அரசரால் அனுப்பப்பட்டார். அதை வெற்றிகரமாக அடக்கியதால் எட்ச்சூ மாகாணத்தின் ஆளுனராக நியமிக்கப்பட்டு கி.பி 751 வரை பணியாற்றினார். பின்னர் இரண்டாம்நிலை அதிகாரியாகப் பதவி உயர்வு தரப்பட்டுத் தலைநகருக்கு மாற்றலானார். கி.பி. 754ல் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டார். அப்போது அமைச்சராக இருந்த நக்காமரோவைக் கொலை செய்யச் சதித்திட்டம் தீட்டியதாக ஐயம் எழுந்தநிலையில் மீண்டும் ஆளுனராகப் பதவியிறக்கம் செய்யப்பட்டு சட்சுமா மாகாணத்துக்கு அனுப்பப்பட்டார். பின்னர்ப் பேரரசரிடம் நல்லெண்ணத்தை வளர்த்து மீண்டும் இராணுவத் தளபதியாகி இரண்டாவது அதிக அதிகாரம் பெற்ற நபராக மாறினார். கி.பி 785ல் நடந்த ஒரு விபத்தில் இவர் மரணமடைந்தார். அதற்குச் சில மணி நேரங்களிலேயே அரசவையில் உயர் பொறுப்பிலிருந்த தனேட்சுகு என்ற அதிகாரி கொலை செய்யப்பட, இவரும் அச்சதியில் ஈடுபட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டு அரசு மரியாதையுடன் கூடிய நல்லடக்கம் மறுக்கப்பட்டது. அவ்வளவு உயரிய பொறுப்பிலும் இலக்கியப் பங்களிப்பையும் செய்த இவரது உடல் அனாதைப் பிணம்போலப் புதைக்கப்பட்டது ஒரு வரலாற்றுத் துயரம்.

மான்யோஷு தொகுப்பில் அதிகப் பாடல்களை இயற்றியவர் இவர். ஒரு சீனமொழிப் பாடல் உட்பட மொத்தம் 479 பாடல்கள். இத்தனை பாடல்களையும் இயற்றி 4,516 பாடல்களையும் தொகுத்தது எல்லாம் பொறுப்பு மிகுந்த உயர்பதவிகளை வகித்தபோதுதான் என்பதை அறியும்போது இவரது பன்முக ஆற்றலை வியக்காமல் இருக்க முடியவில்லை.

பாடுபொருள்: கார்கால இரவை மேலும் அழகாக்கும் பனி

பாடலின் பொருள்: நரா அரண்மனையின் முன்பு கசாசகிப் பறவைகள் இணைந்து உருவாக்கிய பாலத்தைப் போலிருக்கும் பாதையின்மீது படிந்திருக்கும் பனியின் வெண்மை நிறம் இந்தக் கார்கால இரவை மேலும் அழகாக்குகிறது.கசாசகிப் பறவை என்பது உருவில் காகத்தைப் போல ஆனால் உடலின் கீழ்ப்பாதி வெண்மை நிறமாகவும் சிறகுகள் நீல நிறமாகவும் இருக்கும். ஆங்கிலத்தில் இதை Magpie எனக் கூறுவார்கள். கொரியாவின் தேசியப்பறவை இது. கசாசகிப் பறவைகள் இணைந்து உருவாக்கிய பாலம் ஒரு ஜப்பானியப் புராணக்கதையில் இடம்பெற்றிருக்கிறது. அந்தக் கதையின் பெயர் தனாபட்டா.

முன்பொரு காலத்தில் வானுலகில் ஒரிஹிமே என்றொரு பெண் கடவுளுக்கு ஆடைகள் தயாரித்துக் கொடுத்துக் கொண்டிருந்தாள். அவளது ஆடைகளின் அழகிய வேலைப்பாட்டால் மகிழ்ச்சியுற்ற கடவுள் அவளைத் தன் மகள்போலப் பாவித்து வந்தார். அவள் திருமண வயதை எட்டியதும் கடவுள் அவளுக்கு மணமுடிக்க எண்ணி வரன் பார்க்கத் தொடங்கினார். பால்வெளித்திரளில் உள்ள ஓர் ஆற்றின் அக்கரையில் மாடு மேய்க்கும் சிறுவன் ஹிக்கோபோஷி என்பவன் இவளுக்குப் பொருத்தமாக இருப்பான் என எண்ணி அவனை அறிமுகப்படுத்துகிறார். இருவரும் சந்தித்த உடனே காதலில் விழுந்து திருமணமும் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்கள். நாட்கள் செல்லச்செல்ல இருவரும் பணியை மறந்து இருந்ததால் கடவுளுக்கான ஆடைகள் தட்டுப்பாடாகியது. ஹிக்கோபோஷியின் மாடுகளும் சரியான கவனிப்பின்றி நோய்வாய்ப்பட்டன. ஊர் மக்கள் பால் கிடைக்காததைக் கடவுளிடம் முறையிட்டார்கள். இதனால் கோபமடைந்த கடவுள் இருவரையும் பிரித்து வைத்தார். பின்னர் ஒரிஹிமேவின் பிரிவுத் துயரக் காணத் தாளாமல் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இருவரும் ஒருவருக்கொருவரைச் சந்திக்க அனுமதித்தார். பின்னர் இருவரும் அந்த நாளை எதிர்நோக்கியே தத்தம் வேலைகளைக் குறைவின்றிச் செய்துவந்தனர். ஒருமுறை இருவருக்குமிடையே இருந்த ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சந்திக்க வேண்டிய நாளில் சந்திக்க இயலாத நிலை உருவானது. அப்போது கசாசகிப் பறவைகள் தங்கள் சிறகுகளால் ஒரு பாலத்தை அமைத்து, ஒரிஹிமே அதன் வழியாகச் சென்று ஹிக்கோபோஷியைச் சந்திக்க உதவின.தற்போது இருவரும் வேகா (ஒரிஹிமே) மற்றும் ஆல்டேர் (ஹிக்கோபோஷி) என இரு நட்சத்திரங்களாக வானில் வாழ்வதாகக் கருதப்படுகிறார்கள். ஜூலை 7ம் நாள் மட்டுமே இந்நட்சத்திரங்களை ஜப்பானிலிருந்து பார்க்க முடியும் என்பதால் ஜப்பானியர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 7ம் நாள் விழாவாகக் கொண்டாடுகிறார்கள். இவ்விழாவின் சடங்குகள் ஏறத்தாழ மேற்கத்திய நாடுகளின் ஹாலோவீன் கொண்டாட்டத்தை ஒத்ததாக இருக்கும். இந்தக்கதை சீனாவின் புராணங்களிலும் இருக்கிறது. இளவரசர் ஷோதொக்கு சீனாவுடன் கலாச்சார உறவை உருவாக்கியபோது பரிமாறிக்கொள்ளப்பட்ட கூறுகளில் இக்கதையும் ஜப்பானுக்கு வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. கசாசகிப் பறவைகள் ஜப்பானியக் கவிதைகளில் முதல்முறை இடம்பெறுவதும் இப்பாடலில்தான்.

வெண்பா:

இல்லறந் துய்த்துப் பணிமறந்த வானோர்க்கு
நல்வழி காட்டியது போலக்கோ - இல்லத்து
முன்றில் தரைமேல் உறைபனியால் மேலும்
அழகாய்க் குளிரும் இரவு

(மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்)
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.