http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 163

இதழ் 163
[ மார்ச் 2022 ]


இந்த இதழில்..
In this Issue..

குரங்கநாதர் கோயில் கல்வெட்டுகள்
மெய்யத்துக் களவும் கொலையும்
உறையூர்த் தான்தோன்றீசுவரம்
ஜப்பானியப் பழங்குறுநூறு - 10 (பிறத்தலே இறத்தலின் முதல்படி)
இதழ் எண். 163 > கலையும் ஆய்வும்
குரங்கநாதர் கோயில் கல்வெட்டுகள்
அர. அகிலா, மு. நளினி, இரா. கலைக்கோவன்

குரங்கநாதர் கோயிலிலிருந்து 1904இல் 16 கல்வெட்டுகளும் 1965-66இல் 3 கல்வெட்டுகளும் நடுவணரசின் கல்வெட்டுத் துறையால் படியெடுக்கப்பட்டுள்ளன.1 அவற்றுள் 1904இல் படியெடுக்கப்பட்ட கல்வெட்டுகளின் பாடங்கள் தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதி 17இல் பதிவாகியுள்ளன.2 1965-66இல் படியெடுக்கப்பட்ட 3 கல்வெட்டுகளின் பாடங்கள் வெளியாகாமையின் அவை களஆய்வின்போது படித்தறியப்பட்டன. இப்பத்தொன்பது கல்வெட்டுகளுள் காலத்தால் முற்பட்ட இராஜகேசரிவர்மரின் 24ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டை அதன் உயரிய ஆட்சியாண்டு, உள்ளீடு கொண்டு முதலாம் ஆதித்தருடையதாகக் கொள்ளலாம்.3 அவரது மகன் முதலாம் பராந்தகர் காலக் கல்வெட்டுகள் ஆறும்4 கண்டராதித்த சோழராகக் கொள்ளத்தக்க இராஜகேசரியின் கல்வெட்டுகள் நான்கும்5 இங்குள்ளன. மன்னர் பெயரற்றதாகக் கிடைத்துள்ள 14ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுக்குரிய பரகேசரி உத்தமசோழராகலாம்.6

முதலாம் குலோத்துங்கரின் 21ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டும் முதலாம் இராஜேந்திரர், பிற்பாண்டிய மரபைச் சேர்ந்த மாறவர்மர் விக்கிரமபாண்டியர் ஆகியோரின் மெய்க்கீர்த்தி சுட்டும் கல்வெட்டுகளும் இங்குள்ளன.7 மன்னர் பெயரற்ற நிலையில் கிடைத்திருக்கும் மூன்று கல்வெட்டுகளில்8 இரண்டு சோழர் காலத்தவை. பொ. கா. 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கொள்ளத்தக்க தெலுங்குக் கல்வெட்டு சம்மடகொம்டப்பா பெயரைத் தருகிறது.



குரக்குத்துறை

இக்கோயிலுள்ள இடம் முற்சோழர் காலத்தில் வடகரை மழநாட்டு பிரமதேயமான மகேந்திரமங்கலத்துத் திருக்குரக்குத்துறை எனப் பெயர் பெற்றிருந்தது. அதிராஜேந்திரர் காலத்தில் பிரமதேயத்தின் பெயர் ஜெயங்கொண்டசோழச் சதுர்வேதிமங்கலமாக, வடகரை மழநாடு வீரராஜேந்திர வளநாடானது. குரக்குத்துறை மீமலைநாட்டின் கீழ் இணைக்கப்பட்டது.9 இப்பகுதியின் (சீனிவாசநல்லூர்) இராமநாதசுவாமி கோயிலிலுள்ள முதல் குலோத்துங்கரின் 42ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு வளநாட்டின் பெயர் மீண்டுமொரு மாற்றத்தைப் பெற்றுத் தியாகவல்லி வளநாடானதாகக் கூறுகிறது.10 குரக்குத்துறை என்ற ஊர்ப்பெயர் இங்குள்ள பிறகோயில் கல்வெட்டுகளில் பதிவாகவில்லை.11 ஜெயங்கொண்ட சோழச் சதுர்வேதிமங்கலம் என்ற புதிய பெயர் நாளடைவில் மறைந்து மகேந்திரமங்கலம் என்ற பழம் பெயரே இன்றளவும் நிலைபெற்றுள்ளது. கோயில் இருக்கும் பகுதி தற்போது சீனிவாசநல்லூராக அறியப்பெறுகிறது.

நாடு, ஊர்

கிழார்க்கூற்றம், ஆன்மூர்க்கூற்றம், மீமலைநாடு, தென்கரை குறுநாகநாடு எனும் வருவாய்ப் பேரமைப்புகள் குரங்கநாதர் கோயில் கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் மீமலை நாடு இப்பகுதியை உள்ளடக்கி இருந்தது. 17 ஊர்கள் கண்காட்டும் இக்கல்வெட்டுகளில் குடி எனும் பின்னொட்டுடன் இசணைக்குடியும் ஊர் என்ற பின்னொட்டுடன் 4 குடியிருப்புகளும் (கடவூர், வழகூர், தென்னூர், குவாவனூர்), புரம் எனும் பின்னொட்டுடன் இராஜகேசரிபுரமும் நல்லூர் எனும் பின்னொட்டோடு கிளிநல்லூரும் தென்படுகின்றன. மங்கலம் என முடியும் ஊர்களாக மகேந்திரமங்கலம், நாரணமங்கலம், ஸ்ரீராஜராஜச் சதுர்வேதிமங்கலம், கொற்றமங்கலம் என்பன அமைய, பல்வேறு பின்னொட்டுகளைக் கொண்ட ஊர்களாகக் குறும்பில், கான்கயம் (காங்கேயம்), இளநகர், குரக்குத்துறை, தொட்டியம், தசவலப்பாடி, நெற்குப்பை ஆகியன பதிவாகியுள்ளன.

மூலபருடையார்

பிரமமேதயங்களை நிருவாகம் செய்த ஊரவை தொடக்கக் காலங்களில் சில இடங்களில் மூலபருடை என்றும் அழைக்கப்பட்டது. இதுவே நாளடைவில் பெருங்குறி மகாசபையாகப் பெயர் மாற்றம் பெற்றது. மூலபருடையோம், சபையோம் எனும் சொல்லாட்சிகள் ஒரே கல்வெட்டில் ஒரே அவையைக் குறிக்க மிடைந்து வருவது இந்நூலாசிரியர்களால் கண்டறியப்பட்டுள்ளது. முற்சோழர் காலத்தே நிகழ்ந்த இம்மாற்றத்தைச் சிராப்பள்ளி மாவட்டச் செந்துறைக் கல்வெட்டாலும் இடைச்சோழர் காலத்திலும் இச்சொற்கள் கலந்தாளப்பட்டமை துடையூர் விஷமங்களேசுவரர் கோயில் கல்வெட்டாலும் தெளிவாகும்.12 தனியுடைமையாகவும் பொதுவுடைமையாகவும் நிலங்களைக் கொண்டிருந்த மூலபருடையார், ஊர் சார்ந்த நிலங்களுக்கான வரி மதிப்பீடு, வரிநீக்கம், நிலவிற்பனை ஆகியவற்றை முதன்மைப் பணிகளாகக் கொண்டிருந்தனர். கோயில் நிவந்தங்கள் தொடர்பான அறக்கட்டளைகளை முறைப்படுத்தும் பணியையும் அவர்கள் மேற்கொண்டிருந்தனர். மூன்று குரக்குத்துறைக் கல்வெட்டுகள் பருடையாரின் நிலவிற்பனை, வரிநீக்கம் பற்றிப் பேச, ஒரு கல்வெட்டு, அரசு அலுவலர் ஆணையேற்றுக் குரக்குத்துறைப் பெருமானடிகளுக்கு இறையிலித் தேவதானமாக அளிக்கப்பட்ட நிலத்துண்டுகளை மூலபருடையார் அவற்றுக்குரிய அறக்கட்டளைகளோடு பொருத்தி நிவந்தப்படுத்திப் பதிவுசெய்த செய்தியைப் பகிர்ந்து கொள்கிறது.

கோயிலிடமிருந்து பலவகையாலும் பெற்ற 156 கழஞ்சு 8 மஞ்சாடித் துளைப்பொன்னுக்கு ஒரு வேலி முக்காணி ஒன்றரை முந்திரிகை நிலத்தை இறையிலித் தேவதானமாக மூலபருடையார் கோயிலுக்கு விற்றனர். இந்த ஆவணத்தை எழுதியவராகப் பருடை மத்யஸ்தன் இந்தன் எழுவன் கையெழுத்திட்டுள்ளார்.13

மூலபருடையார் 1 வேலி 3 மாக்காணி நிலத்தை இறையிலித் தேவதானமாகக் கோயிலுக்கு விற்றனர்.14 கோயில் நிருவாகத்திடமிருந்து கையெழுத்து ஓலை வழிப் பெற்ற 175 பொன்னும் குறும்பில் உடையாருக்கும் நாரணமங்கலமுடையாருக்கும் கடமை, பஞ்சவார நெல்லாகக் கான்கயத்துச் சோழகோனால் தராது விடுபட்டுப்போன 400 கலம் நெல்லுக்கான பொன் 58 கழஞ்சும் ஆகப் பொன் 233 கழஞ்சு 5 மாவரை அதற்குரிய விலையாக அமைந்தது.

அரசு உயர் அலுவலரான அரையர் ஆச்சாரகாந்த பிரம்மாதிராஜர் குரக்குத்துறை இறைவனுக்குப் பல்வேறு அறக்கட்டளைகளுக்காக அளிக்கப்பெற்ற நிலத்துண்டுகளை அந்தந்த அறக்கட்டளைகளோடு இணைத்து முறைப்படி நிவந்தம் செய்து அதைக் கல்வெட்டுப் பதிவாகக் கோயிலில் இடம்பெறச் செய்யுமாறு மூலபருடையாருக்கு அறிவுறுத்தினார்.15 தகவல்களைச் சரிபார்த்து, அளிக்கப்பட்ட நிலங்களை அறக்கட்டளைகளுக்கேற்பத் தொகுத்துக் கணக்கிடும் பணிக்காக வாரியம் அமைத்த மூலபருடையார், கணக்கரோடு இணைந்த நிலையில் வாரியம் அதைச் செய்யுமாறு ஆற்றுப்படுத்தினர். வாரியக் கணக்கீடுகள் எட்டு அறக்கட்டளைகளையும் அவற்றுக்கான நிலத்துண்டுகளையும் அடையாளப்படுத்திய நிலையில் தரவுகள் பருடை, கோயிலார் ஒப்புதலுடன் கோயில் சுவரில் கல்வெட்டாயின.16

அதன்படி,
1. இறைவனுக்கான திருவமுது போது நாழியாக 3 போதுகளுக்குக் குறுணி 4 நாழி வழங்க, 4 மா ஆலஞ்செய், ஒன்றரை மா களாஞ்செய், எல்லை நிலம் 1 மா மாக்காணி.
2. இறைவனின் நெய்யமுது போது ஆழாக்காக நாளும் உழக்கு ஆழாக்கு அளிக்க, 2 மா நாவற்செய், 2 மா செம்புணிவாரம்.
3. இறைவனை ஆராதிக்கும் 1 பிராமணருக்கு வாழ்வூதியமாக கணத்தார் பெருஞ்செய் 8 மாவில் நாலரை மா முந்திரிகை.
4. கோயிலில் நாளும் 18 சந்திவிளக்கேற்றும் எண்ணெய்ச் செலவுக்காக (நாளும் உழக்கு, ஆழாக்கு) கிழக்கடை நிலம் 3 மாக்காணி, அரை காணி, முந்திரிகை.
5. அர்ச்சனாபோகத்திற்கு 2 மாண் (மணமாகாத பிராமணர்) இட்டு வேண்டும் பணி செய்துகொள்ள அவர்களுக்கு வாழ்வூதியம் செம்புணிவாரம் 4 மா, மருதஞ்செய் 2 மா, நிகளிகனொட்டைக்கூறு 2 மாவில் தெற்கடைய 1 மா.
6. ஸ்ரீபலியின்போது கொள்ளும் பிடிவிளக்கிற்கான எண்ணெய்க்காக (நாளும் உழக்கு) நிகளிகனொட்டைக் கூறு 2 மாவில் வடக்கடைய 1 மா.
7. கோயில் நிகழ்வுகளில் இசைக்க (உவச்சுசெய்ய) 7 கலைஞர்களுக்கு (மத்தளம் 3, கரடிகை 1, படகம் 1, சேகண்டிகை 1, தாளம் ஓரணை) வாழ்வூதியமாகக் கொடுங்கோடு இட்டேரிக்கு மேற்கு, ஆற்றுக்குலைக்கு வடக்கு, வாய்த்தலைக்குக் கிழக்கு, பெருவாய்க்காலுக்குத் தெற்கு என நடுவுபட்ட நிலம், இதனோடான கீழ் இட்டேரி ஒன்றரை மா, தென்னூர் 3 மா.
8. இரண்டு காளம் ஊதக் கலைஞர்களுக்கு வாழ்வூதியமாகக் குரங்கன் வசக்கல் கால் வேலி, அரைசங்கால் என நிவந்தங்கள் அமைந்தன.

நிலவிற்பனை

குரக்குத்துறைக் கல்வெட்டுகள் இப்பகுதியில் நிகழ்ந்த பல நிலவிற்பனைகளைப் பதிவு செய்துள்ளன. பொ. கா. 10 அல்லது 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கொள்ளத்தக்க துண்டுக் கல்வெட்டொன்று ஓமச்ச நாரணக்கிணன் மனைவி நக்கநாராயணி திருவி 55 கழஞ்சுப் பொன்னுக்கு நிலம் விலைக்குப் பெற்றதாகக் கூறுகிறது. இதற்கான ஆவணத்தைப் பருடையார் பணிக்க மத்யஸ்தன் தியம்பகன் மானன் எழுதியுள்ளமையால் இவ்விற்பனையில் பருடையார் பங்களிப்பு உள்ளமை தெளிவு.17

குரக்குத்துறைப் பானச்சன் நாராயணன் கிருஷ்ணன் மனைவி காளிநீலி தமக்கான உணவு, உடைக்காக (சோறு, கூறை) கணவனிடம் பெற்ற தோட்ட நிலம் 1 மாவைப் பானச்சன் நாராயணன் சேந்தனை முன்னிருத்தி (முதுகண்) கோயிலில் திருவிளக்கேற்றத் தந்தார். இந்நிலத்துக்கான எல்லைகளைக் கூறுமிடத்துத் தாயன் அரங்கன் மனைவி உமையாள் ஸ்ரீதனம் பெற்ற தோட்டமும் இப்பகுதியிலிருந்த திருவைகுந்தப் பெருமானடிகள் தேவதான நிலமும் சுட்டப்பட்டுள்ளன.18 பருடையாரின் பொதுநிலமாக இருந்த அழிச்செய் இறையிலித் தேவதானமாகக் கோயிலுக்கு விற்கப்பட்டது.19 பானச்சன் தூவேதி நாராயணன் காளியின் ஒரு மா, காணி அளவுள்ள இசணைக்குடித் தோட்டம் 10 கழஞ்சுப் பொன்னுக்குக் கோயிலாரிடம் விற்கப்பட்டது.20 ஒன்ற

இந்நிலத்தின் எல்லைகளாகக் காழிகநாராயண நாராயணன், கூட்டு ஒற்றியாகப் பற்றி ஆளும் நிலமும் சதுர்வேதிபட்ட தானப்பெருமக்கள் நிலமும் சுட்டப்பட்டுள்ளன. ஒற்றியாக நிலம் கொள்ளப்படுவது கல்வெட்டுகளில் பயிலப்பட்டிருந்தாலும் கூட்டாக ஒற்றிகொள்ளும் முறை சிராப்பள்ளிக் கல்வெட்டுகளில் இடம் பெறுவது இதுவே முதல் முறை எனலாம். பருடையார் 2 கழஞ்சுப் பொன்னுக்கு வசக்கு விசமேற்றிய (நிலத்தை விளைவிற்கேற்பப் பண்படுத்துவதற்கான செலவுத் தொகையைக் கூட்டி) நிலத்துண்டைக் கோயில் தேவகன்மிகளுக்கு விற்றனர்.21 பிராமணர் அறுவர்க்கு உணவளிப்பதற்காக நடநாராயணன் ஆதித்தபிடாரன் கோயிலுக்களித்த நிலத்தை இறையிலியாக்கிய மூலபருடையார் ஆவணத்தைக் கோயிலில் கல்வெட்டாகப் பொறித்தனர். இந்த ஆவணத்தைப் பருடை மத்யஸ்தன் பிரம்ம மங்கல்யனான நிந்தன் எழுவன் எழுதியுள்ளார்.22

வேளாண்மை, நீர்ப்பாசனம்

நெல் முதன்மைப் பயிராக அமைந்தது. காவிரியாற்றின் வடகரை ஊராகக் குரக்குத்துறை அமைந்திருந்தமையால் செழிப்பான பாசனம் இருந்தது. இப்பகுதி நிலங்களுக்கு நீரளித்த பெருவாய்க்கால்களாகப் புன்னைவாய்க்கால், குண்டைவள்ளி வாய்க்கால் அமைந்தன.23 இவ்விரு முதன்மை வாய்க்கால்களும் தெற்கிலும் வடக்கிலும் கிளைகள் கொண்டு நிலங்களை வளப்படுத்தியமை கல்வெட்டுச் சான்றால் தெரியவருகிறது. சில நிலத்துண்டுகளின் எல்லையாகக் குறிக்கப்படும் கவர், இப்பகுதி நிலங்களைச் செழுமைப்படுத்திய மற்றொரு காலாகலாம். ஆற்றுக்குலையும் வாய்த்தலையும் உவச்சுக்களித்த நிலப்பகுதியின் எல்லைகளாக அமைந்தமை இவ்வூரின் நீர் மேலாண்மைத் திறத்தை உணர்த்தும். வாய்த்தலையிலிருந்து நீரெடுத்துச் சென்ற பெருவாய்க்கால் ஒன்றும் கல்வெட்டொன்றில் இடம்பெற்றுள்ளது.24

நிலத்துண்டுகள் உரிமையாளர் பெயராலும் (சதுர்வேதி பட்ட தானப்பெருமக்கள் நிலம், கணத்தார் பெருஞ்செய், பானச்சன் பாலைநாரணன் நிலம், பானச்சன் சாத்தன் சுவரன் தோட்டம்) விளைவின் பெயராலும் (ஆலஞ்செய், களாஞ்செய், நாவற்செய், மருதஞ்செய், அரைசங்கால்) நிவந்தம் செய்யப்பட்ட அறக்கட்டளைகளுக்கேற்பவும் (பள்ளிச்சந்தம், திருவிளக்கு நிலம், திருவைகுந்தத்துப் பெருமானடிகள் நிலம், நாகர்செய்) அழைக்கப்பெற்றன. சில நிலங்கள் செம்புணிவாரம், நிகளிகனொட்டைக் கூறு, 2 மாவென்னும் பியர், இட்டேரி, அழிச்செய், குருவிக்கட்டுத் தோட்டம், துரற்று எனப் பொதுப்பெயர்களால் சுட்டப்பெற்றன.

காவிரியின் வெள்ளப்பெருக்கால் மணலடிக்கப்பெற்று மேடாகத் திகழ்ந்த நிலத்துண்டுகள் மணலீடு என்றும் பண்படுத்தல் வழிக் களர்நிலை நீக்கப்பெற்று விளைவிற்காகத் திருத்தப்பட்ட நிலங்கள் வசக்கல் நிலங்களாகவும் அறியப்பட்டன. இக்கோயிலில் காளம் ஊத நிவந்தமாக்கப்பட்ட நிலத்துண்டு குரங்கன் வசக்கல் என அழைக்கப்பட்டது. இத்தகு பண்படுத்தலுக்குச் செலவழிக்கப்பட்ட தொகை வசக்குவிசம் ஆனது.

மகளிர்

இக்கோயில் கல்வெட்டுகள்வழி முற்சோழர் காலத்தே பிராமணப் பெண்கள் அவர்களுக்கான உணவு, உடைகள் தடையின்றிப் பெற வாய்ப்பாகத் தங்கள் உரிமையில் நிலம் பெற்றிருந்ததோடு, அவற்றை விருப்பம் போல் விற்கவும் கொடையளிக்கவும் உரிமை பெற்றிருந்தனர் என்பதை அறியமுடிகிறது.25 நிலங்களை விற்கும்போது தம் சார்பாக விற்பனை மேற்கொள்ள அவர்கள் முன் நிறுத்தும் உறவு அல்லது நட்புசார் ஆடவர்கள் முதுகண் எனப்பெற்றனர்.26 நாராயணன் கிருஷ்ணனின் பிராமணி காளிநீலி தன் தோட்டத்தைக் குரக்குத்துறை இறைவன் திருமுன் விளக்கேற்றக் கொடையளித்தபோது பானச்சன் நாராயணன் சேந்தன் அப்பரிமாற்றத்திற்கு முதுகண்ணாக அமைந்தார். பிராமணப் பெண்கள் ஸ்ரீதனமாக நிலம் பெற்றிருந்தமை, ‘பிராமணி உமையாள் ஸ்ரீதனம் பெற்ற தோட்டம்’ எனும் கல்வெட்டுத் தொடரால் அறியப்படும்.27

வரிகள் அளவைகள்

இறை, எச்சோறு, வெட்டி, செந்நீர்வெட்டி, வேதினை, ஊரிடுவரி என்பன நிலஞ்சார்ந்து கொள்ளப்பட்ட வரிகளாகும். இறை கடமையென்றும் அறியப்பட்டது. எச்சோறு ஊர்ப்பணிகளுக்காக வரும் அரசு அலுவலர்களுக்கு உணவளிக்கப் பெறப்பட்ட வரி. வெட்டி, செந்நீர்வெட்டி, வேதினை இம்மூன்றும் நீர்நிலைகளைப் புரப்பதற்காக ஊர்மக்களிடமிருந்து பெறப்பட்ட உடலுழைப்பைக் குறிக்கும். ஊரின் தேவைக்கும் சூழலுக்கும் ஏற்ப ஊரவையால் அறிவிக்கப்பட்டு மக்களிடமிருந்து கொள்ளப்படும் வரி ஊரிடு வரியானது.

கலம், மரக்கால், குறுணி, நாழி முதலியன தானியங்களை அளக்கவும் உழக்கு, ஆழாக்கு முதலியன எண்ணெய் உள்ளிட்ட திரவங்களை அளக்கவும் பயன்பட்டன. முந்திரிகை, மா, காணி, வேலி முதலியன நிலஅளவைகளாக அமைய, பொன்னளக்கக் குடிஞைக்கல், பண்டாரக்கல், பாச்சில்கல் ஆகியன வழக்கில் இருந்தன.28 பொன்னின் அளவைக் குறிக்கக் கழஞ்சு, மஞ்சாடி எனும் சொற்கள் பயன்பட்டன.

கோயில்

அனைத்துக் கல்வெட்டுகளிலும் குரக்குத்துறைப் பெருமானடிகள் கோயிலாகவே அறியப்படும் குரங்கநாதர் கோயில், தேவர்கன்மிகளின் ஆளுகையில் இருந்தது. கோயிலுடையார் என்றும் அழைக்கப்பட்ட இவர்தம் பொறுப்பிலேயே கோயில் நிவந்தங்களுக்கான அறக்கட்டளைகள் அமைந்தன.29 இறைவழிபாடு நிகழ்த்தியவர் ஆராதிக்கும் பிராமணராகக் குறிக்கப்படுகிறார். வழிபாட்டுப் பணிகளுக்காக மாண் என்றழைக்கப்பட்ட பிராமணர்கள் இருவர் இருந்தனர். கோயில் வழிபாடுகளின்போது தடையின்றி இசைவழங்க உவச்சர்கள் என்றழைக்கப்பட்ட கருவிக்கலைஞர்கள் ஒன்பதின்மர் பணி செய்தனர்.30 மூவர் மத்தளம் இசைக்க, இருவர் காளம் ஊத, கரடிகை, படகம்31 எனும் தோல்கருவிகள் வாசிக்க இருவர் இருந்தனர். சேகண்டிகை வாசிக்க ஒருவரும் ஓரணை தாளம் கொண்டு ஒலியெழுப்ப ஒருவரும் பணி செய்தனர். இவர்களனைவருக்கும் வாழ்வூதியமாக நிலம் அளிக்கப்பட்டிருந்தது. கோயில் உவச்சர்கள் சமுதாயத்தில் மிகு மதிப்புடன் விளங்கியமை, நிலவிலை ஆவணங்களில் சான்றாளர்களாக அவர்கள் கையெழுத்திட்டுள்ளமை கொண்டு தெளியலாம்.32

குரக்குத்துறை இறைவனுக்கு 3 சந்திகளிலும் வழிபாட்டின்போது சந்திக்கு நாழியென குறுணி 4 நாழி திருவமுது வழங்கப்பட்டது. போது ஆழாக்கு நெய்யாக நாளும் உழக்கு ஆழாக்கு நெய் வழிபாட்டிற்குப் பயன்பட்டது. திருப்பலியின்போது பிடிக்கும் கைவிளக்கிற்கான எண்ணெய் நாளும் உழக்களவில் அமைந்தது.33

நந்தாவிளக்குகள்

குரக்குத்துறைக் கோயிலில் 4 நந்தாவிளக்குகள் ஏற்றப்பட்டன. எழுவன் கங்காதரன் அளித்த பொன் கொண்டு மூலபருடையார் இறையிலியாகத் தந்த 3 மாச்செய் நிலம் பெற்ற கோயிலார் இறைத்திருமுன் நந்தாவிளக்கேற்றினர்.34 எழுவன் அளித்த 4 சாண் உயர நிலைவிளக்கில் அந்நந்தாவிளக்கு ஒளிர்ந்தது. கிளிநல்லூர்க் கிழவன் சற்பதேவனாகிய செம்பியன் கிழார்நாட்டுக்கோன் இறைத் திருமுன் நந்தாவிளக்கொன்று ஏற்ற நிலைவிளக்குடன் 12 கழஞ்சுப் பொன்னளித்தார். அவரே கிரகணத்தன்று இறை முழுக்காட்ட நீர்க்கொள்ளும் செப்புக்குடம் ஒன்றும் இறைவன் திருமுன் பாக்கு இட வெள்ளித்தட்டு ஒன்றும் அளித்தார்.35 தொட்டியத்துக் காச்சுவன் சாதவேதன் நீலன் இக்கோயிலில் நந்தாவிளக்கொன்று ஏற்றும் தன் விழைவை சபை வாரியர், ஆரியப்படாரர் முன்னிலையில் தெரிவித்துத் தம் குருவிக்கட்டுத் தோட்டத் துரற்றில் ஒன்றரை மா நிலம் அளித்தார். நிலத்திற்கான வரியினங்களைத் தம் பொறுப்பில் ஏற்பதாகவும் தெரிவித்தார்.36 மகேந்திரமங்கலத்து எழுவன் கங்காதரன் இங்கு நந்தாவிளக்கு ஏற்றச் செம்மறிஆடு 30, வெள்ளாடு 30 வழங்கினார். ஆடுகளை உரிய இடையர்களிடம் ஒப்புவித்து நெய் பெற்று விளக்கேற்றும் பொறுப்பைக் கோயில் தேவர்கன்மிகள் ஏற்றனர். இக்கொடையைத் தடையின்றி நிகழுமாறு 18 நாட்டுப் பன்மாகேசுவரர் கண்காணித்தனர்.37

பிறவிளக்குகள்

இக்கோயிலில் நாளும் 18 சந்திவிளக்குகள் உழக்கு, ஆழாக்கு எண்ணெய் கொண்டு ஏற்றப்பெற்றன. தேவியார் நங்கை கூற்றப் பெருமாள் 4 விளக்கேற்றப் பொன் அளித்தார். அத்தொகைக்குக் கோயிலாரால் நிலத்துண்டொன்று விலைக்குப் பெறப்பட்டு அதன் விளைவு கொண்டு எண்ணெய்ச்செலவு கொள்ளப்பட்டது.38 அரிகண்டி அளித்த 5 கழஞ்சுப் பொன் இக்கோயிலில் பகல்விளக்கொன்று ஏற்றப் பயன்பட்டது.39 காளிநீலி 1 திருவிளக்கு ஏற்றக் கோயிலாரிடம் ஒரு மா தோட்டநிலம் அளித்தார்.40

இளநகர் வலக்கூற்றன் பிடாரன் கண்டன் மணவாட்டி சந்திர ரமணி இங்குப் பகல்விளக்கு ஏற்ற 4 எருமை, 1 கிடாக்கன்று வழங்கினார். இவற்றை நடை 5 எனக் குறிக்கும் கல்வெட்டு, இவற்றுக்கான விலை மதிப்பு எட்டுக் கழஞ்சுப் பொன் என்கிறது. சந்திர ரமணி நடை ஐந்துடன் 2 கழஞ்சுப் பொன்னும் அளிக்கவே பொன்னின் மதிப்பு 10 கழஞ்சு ஆனது. ஒரு கழஞ்சிற்கு மாதம் ஒரு மாவரைப் பொன் வட்டி என்ற நிலையில் 10 கழஞ்சிற்கு மாதந்தோறும் 1 மஞ்சாடி 7 மாப் பொன் கிடைத்தது. கழஞ்சுக்கு 40 நாழி எண்ணெய் என்ற கணக்கில் மஞ்சாடி 7 மாவிற்கு 4 நாழிக்கு ஓர் உழக்குக் குறைவான எண்ணெய் கிடைத்தது. இது கொண்டு நாளும் ஆழாக்கு எண்ணெய் பயன்படுத்தி ஒரு பகல்விளக்கு, கதிரவன் தோன்றியதும் ஏற்றப்பெற்று கதிரவன் மறையும் அளவு இங்கு ஒளிர்ந்தது. இவ்விளக்கைத் தொடர்ந்து ஏற்றுவார் திருவடிகளைத் தம் தலை மேல் கொள்வதாக வலக்கூற்றன் தெரிவித்துள்ளார்.41

காலம்

குரங்கநாதர் வளாகக் கல்வெட்டுகளில் காலத்தால் முற்பட்டது முதலாம் ஆதித்தருடையதென்பதால் இக்கோயிலின் காலத்தைப் பொ. கா. 9ஆம் நூற்றாண்டின் இறுதியாகக் கொள்ளலாம். கோயில் கட்டமைப்பும் சிற்பயிருப்பும் அக்காலத்தை உறுதி செய்கின்றன.

குறிப்புகள்
1. ARE 1904: 586, 586B - 598; 1965 - 66: 319 - 321.
2. SII 17: 632, 634 - 648.
3. SII 13: 306.
4. SII 17: 636, 638 - 641, 643.
5. SII 13: 2, 3, 26, 158.
6. SII 19: 340.
7. SII 17: 645, 648, 635.
8. ARE 1965 - 66: 319 - 321.
9. SII 17: 653.
10. SII 17: 659.
11. SII 17: 633, 649 - 662.
12. அர. அகிலா, மு. நளினி, இரா. கலைக்கோவன், சிராப்பள்ளி மாவட்டச் சோழர் தளிகள் நான்கு, பக். 53 - 54; எறும்பியூர் துடையூர் - சோழர் தளிகள் ப. 146.
13. SII 17: 636.
14. SII 17: 643.
15. Y. Subbarayalu, South India under the Cholas, pp. 141 - 144.
16. SII 3: 13. முகமண்டபத்தின் வடசுவரில் இன்றும் படிக்கும் நிலையில் தெளிவாக உள்ள இக்கல்வெட்டு முற்றுப்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
17. SII 17: 634.
18. SII 17: 640.
19. SII 13: 26.
20. SII 13: 158.
21. SII 17: 641.
22. ARE 1965 - 66: 320. கல்வெட்டறிக்கை 5 பிராமணர் என்கிறது.
23. SII 17: 636.
24. SII 13: 3.
25. SII 17: 634, 640.
26. SII 17: 636, 640.
27. SII 17: 640.
28. SII 17: 636, 641, 643.
29. SII 17: 639; 19: 340.
30. SII 13: 3.
31. படகம் மிக அரிய இசைக்கருவியாக இருந்திருக்கவேண்டும். ஐம்பேரொலி எழுப்பப் பெற்ற சோழமாதேவி கயிலாசநாதர் கோயில் உள்ளிட்ட சிராப்பள்ளி மாவட்டக் கோயில் கல்வெட்டுகளில் இந்நூலாசிரியர்கள் அறிந்தவரையில் படகம் இடம்பெறாமையின் இவ்விசைக்கருவியை அரிதான தோலிசைக் கருவியாகவே கருதவேண்டியுள்ளது. மதுரைத் தமிழ்ப் பேரகராதி படகத்தை இரணபேரியாகவும் தம்பட்டமாகவும் சுட்டுகிறது. தம்பட்டம் சொல்வழக்கில் இன்றளவும் பயன்படுத்தப்படும் சூழலில், சோழர் காலத்தே அது அரியதோர் இசைக்கருவியாக இருந்தமை வியப்பூட்டுகிறது. இது குறித்து விரிவாக ஆராயவேண்டியுள்ளது.
32. SII 3: 26.
33. SII 13: 3.
34. SII 17: 639.
35. SII 17: 638.
36. SII 13: 306.
37. SII 13: 2.
38. ARE 1965 - 66: 319.
39. SII 17: 641.
40. SII 17: 640.
41. SII 19: 340.
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.