http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 171
இதழ் 171 [ செப்டம்பர் 2023 ] இந்த இதழில்.. In this Issue.. |
தலைமை ஆயர்கள் இராஜராஜீசுவரத்தில் ஒளிர்ந்த இந்த 82 நந்தா விளக்குகளுக்கு நாளும் விளக்கொன்றிற்கு ஆடவல்லான் எனும் அளவையால் உழக்கு நெய் அளக்க இசைந்து இவ்விளக்கேற்றலுக்குத் தரப்பட்ட கால்நடைகளுக்குப் பொறுப்பேற்ற தலைமை ஆயர்கள் 82 பேர். கல்வெட்டில், 'இடையன்' என்றழைக்கப்பெறும் இப்பெருமக்களுள் இருவர் பெயர்கள் சிதைந்துள்ளன. எஞ்சிய 80இல் கல்வெட்டுச் சிதைவால் இருவர் இயற்பெயர்களையும் ஒருவர் தந்தையார் பெயரையும் இழந்துள்ளனர். இத்தலைமை ஆயர்கள் 82 பேரில் 28 பேர் தஞ்சாவூரைச் சேர்ந்தவர்கள். 54 பேர் பிற கூற்றங்கள் அல்லது நாடுகளில் வாழ்ந்தவர்கள். இவர்தம் பெயர்களை ஆய்வு செய்தபோது பல சுவையான தகவல்களைப் பெறமுடிந்தது. இவ்விடைப்பெருமக்கள் அனைவருமே தந்தையின் பெயரை முன்னொட்டாகக் கொண்டிருந்தனர். இயற்பெயர்கள் பெரும்பாலும் மூன்றல்லது நான்கெழுத்துப் பெயர்களாகவே அமைய, காரி, தாழி, தாழை, ரவி எனச் சில ஈரெழுத்துப் பெயர்களும் உள்ளன. ஐந்தெழுத்துப் பெயர்கள் குறைவாக அமைய, ஆறெழுத்துப் பெயர்கள் 4ம் (கால முக்கியன், குளிர்ந்தான், மதுசூதனன், குட்டத்தாழி) எட்டெழுத்துப் பெயர் ஒன்றும் (இளங்கோதரையன்) காணக்கிடைக்கின்றன. இயற்கையோடு இயைந்த வாழ்வில் நாட்டமுடைய அவர்தம் பெயர்களில் செடி, கொடி, மரங்களும் விலங்குகளும் நீர்நிலைகளும் ஒன்றியிருந்தன. மூவர் நீர்நிலை சார்ந்த பெயர்களையும் (அடவி, குளவன், குமிழி) ஐவர் செடி, கொடி, மரங்களின் பெயர்களையும் (பிரண்டை, தாழை, காளாம்பூ, வேம்பன், குருந்தன்) இருவர் எண்ணிக்கையில் அமைந்த பெயர்களையும் (எழுவன், ஆயிரவன்) கொண்டிருந்தனர். ஐவர் பெயர்கள் விலங்குகளைச் சுட்ட (ஏனன், அரவன், சிங்கன், பன்றி, நந்தி), நால்வர் அரசமரபுகளின் பெயர்களுடன் (மாறன், அரிஞ்சிகை, அரையன், இளங்கோதரையன்) விளங்கினர். 12 பேரின் பெயர்களில் ஊர்களும் (முள்ளூர், மழபாடி, ஆய்ப்பாடி, கொங்கன், ஐயாறன், வடவாயில், அணுக்குடி, பனங்குடி, பாளூர், மண்ணி, விளந்தை, நள்ளாறு) 14 பேரின் பெயர்களில் தெய்வங்களும் (அரங்கன், கூத்தன், சந்திரன், காரி, மாயான், நாராயணன், கயிலாயன், மதுசூதனன், சிவன், ஐயன், சாத்தன், சதையன், வாசுதேவன், நாகன்) இடம்பெற்றுள்ளன. 8 பெயர்கள் அழகிய தமிழ்ப் பெயர்களாக (தோளன் இனியான், பூசல், களரி, களியன், உகந்தான், புகழன், வில்லான், தூறன் குளிர்ந்தான்) விளங்க, 14 பெயர்கள் (சித்தகுட்டி, அரட்டன், காலமுக்கியன், கவடி, பதரை, குட்டத்தாழி, மனத்தான், அழியன், விதியன், சிறுகொள்ளி, துட்டன், விடமன், குப்பை, கோளம்பன்) அரியனவாக அமைந்துள்ளன. நக்கன், வடுகன் என்பன சில ஆயர் பெயர்களின் முன்னொட்டுகளாக இணைந்துள்ளன. அடைகுடிகள் உறவுமுறைசாரா ஆயர்கள் தலைமை ஆயர்கள் தங்கள் பணிக்குத் துணைவர்களாகக் கொண்ட உறவுகளும் உள்ளூர், வெளியூர் ஆயர்களும் அடைகுடிகளாயினர் (குத்தகையாளர்கள்). அத்தகு அடைகுடிகளாக அமைந்த 275 பேரில் உறவுமுறை சாராத ஆயர்கள் 120 பேர். அவர்களுள் உள்ளூரார் 50 பேர். அயலூரார் 70 பேர். இந்த 120 ஆயர்களுள் சிலர் பெயர்கள் சிதைந்துள்ளன. முழு நிலையில் கிடைத்துள்ள பெயர்களை ஆய்வுக்கு உட்படுத்தியபோது பல பயனுள்ள தரவுகளைப் பெற முடிந்தது. அவர்களில் பலர் அழகிய தமிழ்ப் பெயர்களைக் கொண்டிருந்தனர். பாழி, புறம்பி, குடிதாங்கி, விளக்கன், படைவீட்டுத் தாங்கி, பகலஞ்சி, மனநிலை, கம்பன் தத்தை, மீளி, குளிர்கோயில், மழையமன், கடுக்காரி, தமிழன், முத்தமிழ், செருவன், ஓமருதன் என்பன அவற்றுள் சில. திருமலை, திட்டை, கிள்ளிக்குடி, குறுக்கை, கானூர், திருமாலிருஞ்சோலை, வெண்ணி, பெருங்கோளூர் என ஊர்ப்பெயர்களையும் பலர் இயற்பெயராய்க் கொண்டிருந்தனர். எண்ணிக்கைப் பெயர்களாக ஓரம்பன், மூவரையன், முன்னூற்றுவன், ஐநூற்றுவன் ஆகியவற்றைக் குறிக்கலாம். வேம்பன், மூங்கில், பாலை, கண்ணி, முள்ளி முதலிய பெயர்கள் செடி, கொடிகளையும் குளத்தூர், புலியன் முதலிய பெயர்கள் நீர்நிலை, விலங்கையும் சுட்ட, கடவுள் பெயர்களுடன் விளங்கியவர்கள் பலராவர். கேசுவன், காளி, காமன், நீலன், இராமன், திருவடி முதலிய பெயர்கள் குறிக்கத்தக்கன. மாற்றுத்திறனாளிகள் அவர் தம் உடற்குறைகளைச் சுட்டும் சொற்களைப் பெயர்களின் முன்னொட்டாகவோ, பின்னொட்டாகவோ கொண்டிருந்தனர். நாட்டான் குருடன், முடவன் சிற்றேமன், கூனன் மண்ணி ஆகியன குறிக்கத் தக்கன. குட்டேறன், கற்றளி, கூடம், மோடன், செருமதன், எச்சில், பிசங்கன், நிச்சல், நீலக்கிரீவன், தூறாடி என அரிய பெயர்களையும் சில ஆயர்கள் கொண்டிருந்தனர். மிகச் சிலர் விக்கிரமாதித்தன், பராந்தகன் என அரசமரபுசார் பெயர்களையும் பெற்றிருந்தமையைக் காணமுடிகிறது. உறவுகள் தலைமை ஆயரின் அடைகுடிகளில் நெருங்கிய உறவுகளாக விளங்கியவர் 155 பேர். அவர்களுள் தலைமையர் மகன்கள் 35 பேர். தந்தையர் நால்வர். உடன்பிறந்தார் 65 பேர். எஞ்சிய 51 பேர் சிற்றப்பன், சிற்றப்பன் பிள்ளைகள், பேரப்பன் பிள்ளைகள், மாமன், மச்சுனன், மருமகன் எனும் உறவுகளாக விளங்கினர். இதில் பேரப்பன் இடம்பெறாமை குறிப்பிடத்தக்கது. உடன்பிறந்தார் 65 பேரில் ஒரு தலைமை இடையருக்கு 2 உடன்பிறந்தார் என 30 பேரும் மூன்று உடன்பிறந்தார் என 9 பேரும் ஓர் உடன்பிறந்தார் என 26 பேரும் அமைந்தனர். மகன்கள் 35 பேரில் ஒரு தலைமையருக்கு ஒரு மகன் என 12 பேரும் இருவர் என நால்வருக்கு 8 பேரும் மூவர் என இருவருக்கு அறுவரும் அமைய, ஒரு தலைமை இடையர் நான்கு மகன்களுடன் பணி யேற்றார். கணியன் அறிஞ்சி எனும் பெயரில் அமைந்த தலைமையருடன் தீரன், சாத்தன், பிரமன், குமரன், குட்டத்தாழி எனும் 5 மகன்கள் பணியில் இருந்தனர். தலைமையரின் சிற்றப்பன்களாக 11 பேரும் அவர்தம் மகன்களாக 11 பேரும் பேரப்பன் மகன்களாக ஐவரும் விளங்க, சிற்றப்பன் பெயரனாக ஒருவர் இருந்தார். உடன்பிறந்தார் மகன் களாகப் பிச்சன்சீலனும் புன்னை கயிலாயனும் துணையாயினர். 'நன்' என்ற சிறப்பு அடையுடன் குறிக்கப்படும் மாமன்கள் அறுவராகவும் மச்சுனர்கள் பதின்மராகவும் மருமகன்கள் ஐவராகவும் இருந்தனர். இவர்களுள் சிலர் பெயர்கள் கல்வெட்டில் சிதைந்துள்ளன. இவர்தம் பெயராய்வும் பல தரவுகளைத் தந்தது. சிவன், சங்கன், பெருமாள், பிரமன், சோமன், கேசவன், முகுந்தன், குன்றாடி, வாசுதேவன், வேங்கடவன் எனப் பலர் தெய்வங்களின் பெயர்கள் கொள்ள, வீரன், பூவன், அடிகள், ஊரான், மாராயன், கருக்கிளை, தனியன், ஆளன், சீராளன், குளிர்ந்தான், சூறை, மஞ்சன், அழியாக்கலி, ஆய்க்கொழுந்து, இனியான், நிலையன், அழகன், குமரன், பாண்டி, கீழான், அழியன், குட்டன், பிடாரன், நாடன், முழங்கன் தோளன் எனப் பலர் அழகிய தமிழ்ப்பெயர்களுடன் விளங்கினர். சிறுபுலி, தனியானை, பாய்புலி, சிங்கன், அரவன் முதலிய பெயர்கள் அவர்தம் விலங்கு நேயம் காட்ட, புன்னை, தாழை உள்ளிட்ட பல மரம், செடி, கொடிகளின் பெயர்களையும் சிலர் கொண்டிருந்தனர். வேங்கடம், களத்தூர், ஆய்ப்பாடி முதலிய ஊர்ப்பெயர்களுடன் சிலர் விளங்க, உதையாங் குரன் திவாகரன், விச்சாதிரன் எனும் சமஸ்கிருதப் பெயர்களும் சிலருக்கு இலங்கின. நீர்நிலை, எண்ணிக்கை, அரசர் சார்ந்த பெயர்களையும் சிலர் கொண்டிருந்தனர். மாற்றுத் திறனாளியாக குருடன் சங்கன் அமைய, கிளாவன், முகத்தி, மண்டை, விடமன், கோளி, சிற்றமன், துட்டன் உள்ளிட்ட பெயர்கள் அரியனவாக உள்ளன. வருவாய்ப் பிரிவுகள் தமிழ்நாட்டில் மக்கள் வாழ்ந்த குடியிருப்புகள் ஊர்களாக அமைய, பல ஊர்களை உள்ளடக்கிய வருவாய்ப்பிரிவு நாடு அல்லது கூற்றம் எனப்பட்டது. இவ்விரு நிலைகளும் சங்ககாலத்திலிருந்தே நிலவியமைக்கு, 'ஊரன் என்கோ நாடன் என்கோ' எனும் பொய்கையாரின் பாடல் சிறந்த சான்றாக அமையும். இராஜராஜர் காலத்தில் நிகழ்ந்த வருவாய்ச் சீரமைப்பில் பல நாடுகள் ஒன்றி ணைக்கப்பட்டு வளநாடுகள் உருவாக்கப்பட்டன. இக்கல்வெட்டில் கொடையாளர்கள், கால்நடைகளைப் பராமரிக்கும் பொறுப்பேற்ற தலைமை ஆயர்கள், அவர்தம் அடைகுடிகள் ஆகியோரின் வாழிடங்களாக வெளிப்படும் ஊர்ப்பெயர்களும் அவை இடம்பெற்றிருந்த நாடு, வளநாடு குறித்த தரவுகளும் பொ.கா. 10, 11ஆம் நூற்றாண்டுகளில் சோழமண்டலத்தில் விளங்கிய வருவாய்ப் பிரிவுகளின் அமைப்பறிய உதவுகின்றன. ஊர்கள் இக்கல்வெட்டுச் சுட்டும் கொடையாளிகள், கால்நடைப் பராமரிப்பாளர்களின் வாழிடங்களாகவும் சிலர் பெயர்களின் முன் அல்லது பின்னொட்டாகவும் 104 ஊர்ப்பெயர்கள் கிடைக்கின்றன. அவற்றுள் இளம்புலிவாய் சுற்றிய பெரும்புலிவாய், கடலங்குடி, மிடூர், கீழ்த்தெங்கம்பூண்டியான குமாரமங்கலம், பெருங்கோளூர், உத்தரங்குடி, நாட்டார்நல்லூர், வெட்டியார் படைவீடான ஜயங்கொண்ட சோழநல்லூர், கோதண்டபுரம், அழகிய சோழபுரம், ஆலத்தூர், இராஜகேசரிநல்லூர், கொட்டையூர், சாவூர் வயலூர் ஆகிய 15 ஊர்களுள் சிலவற்றிற்கு அவை இணைந்திருந்த நாட்டின் பெயரில்லை. சில ஊர்கள் நாடு, வளநாடு இரண்டின் பெயர்களும் சுட்டப்படாது இடம்பெற்றுள்ளன. மக்கள் பெயர்களாக இணைந்துள்ள இடப்பெயர்களின் நாடு, வளநாடு அமைப்புகள் அறிய தனி ஆய்வு தேவை. ஊரும் குடியும் 28 குடியிருப்புகளின் பெயர்கள் ஊர் என்ற பின்னொட்டுடன் (பழுவூர், ஆலத்தூர், குளத்தூர், கொட்டையூர், பனையூர், பெரும்புலியூர், ஆவூர், கோனூர், அரைசூர், முள்ளூர், பாளூர், பெருமுள்ளூர், பன்றியூர், மழையூர், களத்தூர், பூவணூர், பாநூர், பெருங்கோளூர், வாளூர், வயலூர், ஒக்கூர், நாவலூர், கிளியூர், சாவூர், தஞ்சாவூர், மிடூர், துகவூர், கானூர்) முடிகின்றன. அவற்றுள் பெரும்புலியூர் என்ற பெயரில் 2 ஊர்கள் இருந்தன. ஒன்று பனங்காட்டு நாட்டின் கீழும் மற்றொன்று பொய்கைநாட்டிலும் இணைக்கப்பட்டிருந்தன. பூவணூர் அவனிகேசரிச் சதுர்வேதிமங்கலமாகவும் அறியப்பட்டது. 13 வாழிடங்களின் பெயர்கள் குடி எனும் பின்னொட்டுடன் (கமுகஞ்சேந்தன்குடி, செம்பங்குடி, கிள்ளிக்குடி, உத்தரங்குடி, பெருங்குடி, துறைக்குடி, வீரைக்குடி, கடலங்குடி, பனங்குடி, தென்குடி, மேற்குடி, அணுக்குடி, கண்ணிக்குடி) விளங்கின. அவற்றுள் பெருங்குடியும் துகவூரும் பிராமண குடியிருப்புகளோடு சேர்ந்த சிற்றூர்களாக (பிடாகை) அமைய, குளத்தூர், ஒக்கூர், பாளூர், முள்ளூர், பனங்குடி உள்ளிட்ட சில ஊர்ப்பெயர்கள் மக்கட் பெயரின் முன்னொட்டுக்களாக (ஆவூர்க்குன்றாடி, பனங்குடிப்புறம்பி, பனையூர்க்காரி) அமைந்திருந்தன. மங்கலம், நல்லூர், புரம் மங்கலம் (பெருமங்கலம், கொற்றமங்கலம், ஓலைமங்கலம், வாளுவமங்கலம், குமாரமங்கலம், மங்கலம்) அல்லது சதுர்வேதி மங்கலம் (சந்திரலேகை, காமரவல்லி, இராஜாச்ரய, கண்டராதித்த, ஸ்ரீபராந்தக, விஜயாலய, அவனிகேசரி, மதனமஞ்சரி) எனும் பின்னொட்டுக் கொண்ட பிராமண குடியிருப்புகளின் பெயர்களாக 14ஐக் காணமுடிகிறது. அவற்றுள் ஸ்ரீபராந்தகச் சதுர்வேதிமங்கலம் தனியூராக விளங்கியது. நல்லூர் என்ற பின்னொட்டுடன் (கோயில்நல்லூர், மங்கலநல்லூர், இராஜகேசரிநல்லூர், ஜயங்கொண்ட சோழநல்லூர், மும்மடிசோழநல்லூர், நாட்டார்நல்லூர்) 6 ஊர்களின் பெயர்கள் அமைய, புரம் என்ற பின்னொட்டுடன் (சத்திரியசிகாமணிபுரம், இராஜராஜபுரம், சசிபுரம், கோதண்ட புரம், அழகியசோழபுரம், பாசிப்புரம்) 6 ஊர்களின் பெயர்கள் வழங்கின. ஜயங்கொண்ட சோழநல்லூர் வெட்டியார் படைவீடு என்றும் அழைக்கப்பட்டது. விண்ணனேரி மும்மடிசோழநல்லூராகவும் அறியப்பட்டது. பிற ஊர்கள் பல்வேறு பின்னொட்டுகள் பெற்ற ஊர்ப்பெயர்களாக (அரு மடல், பெருங்கறை, மழபாடி, கலையன்பாடி, நீலன்பட்டி, ஆய்ப்பாடி, நரிக்குடிச்சேரி, மங்கலவாயில், மிறையில், திருப்பழனம், திருஆவணம், இளம்புலிவாய் சுற்றிய பெரும்புலிவாய், வடவாய், வடவாயில், கீழ்த்தெங்கம்பூண்டி, இடவை, பனங்குளம், கருவுகல் வல்லம், தேவதானம், களமலை, குறுக்கை, குலமாணிக்கம், நக்க பிரான்குறிச்சி, சிறுவெண்ணி, மண்ணி, நெடுமணல், வெண்காடு, மாறநேரி, விண்ணனேரி, பூவாழ், விளந்தை, திருமலை, திட்டை, திருமாலிருஞ்சோலை, ஐயாறு, நள்ளாறு, வேங்கடம்) 37 குடியிருப்புகள் இருந்தன. நரிக்குடிச்சேரி சந்திரலேகைச் சதுர்வேதிமங்கலத்தின் கிழக்குப் பிடாகையாக விளங்க, அதன் மற்றொரு பிடாகையாக நக்கபிரான்குறிச்சி அமைந்தது. குலமாணிக்கம் கண்டராதித்த சதுர்வேதிமங்கலத்தின் பிடாகையாகத் திகழ, கீழ்த்தெங்கம்பூண்டி குமாரமங்கலமாகவும் அறியப்பட்டது. நெடுமணல் மதனமஞ்சரிச் சதுர்வேதிமங்கலமாகப் பெயரேற்றது. வெட்டியான், மலையாண் எனும் பெயரிலமைந்த இரு படைவீடுகளும் இக்கல்வெட்டில் குடியிருப்புப் பகுதிகளாகக் குறிக்கப்பட்டுள்ளன. நாடுகள், வளநாடுகள் இந்த 104 ஊர்களுள் பெரும்பான்மையன 35 நாடு அல்லது கூற்றங்களின் கீழ் இணைந்திருக்க, அந்நாடுகளும் கூற்றங்களும் 8 வளநாடுகளின் அங்கங்களாக விளங்கின. 1. பாண்டிய குலாசநி வளநாடு - இதன் கீழ் இக்கல்வெட்டில் இடம்பெறும் 2 கூற்றங்களும் (ஆர்க்காடு, புன்றிற்) 10 நாடுகளும் (ஏரியூர், கீழ்ச்செங்கிளி, மீய்ச்செங்கிளி, பனங்காடு, கீழ்ச்சூதி, பனங்கியநாடு, சுண்டைமூலை, மீய்பொழி, வடசிறுவாய், கிளியூர்) இருந்தன. 2. இராஜராஜ வளநாடு - இதன் கீழ்ப் பொயிற், குன்றிற், புலி வலம், புன்றில், சென்னிமங்கலம் ஆகிய 5 கூற்றங்களும் பன்றியூர், கீழ்வேங்கை, வரகூர் ஆகிய 3 நாடுகளும் இணைந்திருந்தன. 3. நித்தவிநோத வளநாட்டின் கீழ் ஆவூர், பாம்புணி, வெண் ணிக் கூற்றங்களும் நல்லூர், காந்தாரம், வீரசோழ வளநாடு ஆகிய நாடுகளும் விளங்கின. 4. இராஜேந்திரசிங்க வளநாட்டில் மிறை, குன்றக்கூற்றமான உத்துங்கதுங்க வளநாடு ஆகிய கூற்றங்களும் மண்ணி, பொய்கை ஆகிய நாடுகளும் இருந்தன. 5. அருமொழிதேவ வளநாடு நென்மலி, புறங்கரம்பை, மங்கலம் நாடுகளை உள்ளடக்கியிருந்தது. சத்திரியசிகாமணி வளநாடு (திருநறையூர் நாடு), கேரளாந்தக வளநாடு (உறையூர்க் கூற்றம்) ஆகியவற்றின் கீழிருந்த நாடுகளுள் தலைக்கு ஒரு நாடே கல்வெட்டில் இடம்பெற்றுள்ளது. வடகோனாட்டில் இணைந்திருந்த துறைக்குடி எந்த நாட்டின் கீழ் அமைந்திருந்ததென்பதை அறியக்கூடவில்லை. இவ்வடகோனாடு பின்னாளில் கடலடையாதிலங்கை கொண்ட வளநாடென்றும் அறியப்பட்டது. தஞ்சாவூர் பாண்டிகுலாசநி வளநாட்டுத் தஞ்சாவூர்க் கூற்றத்துத் தஞ்சாவூர், உள்ளாலைப்பகுதியாகவும் புறம்படியாகவும் இரு பிரிவுகளாகத் திகழ்ந்தமை இக்கல்வெட்டால் தெளிவாகிறது. உள்ளாலைப் பகுதியிலிருந்த இரு இடங்களாக சாலியத்தெருவும் பாண்டிவேளமும் மட்டுமே சுட்டப்பெறுகின்றன. புறம்படிப் பகுதியில் பல குடியிருப்புகள் அமைந்திருந்தன. காந்தர்வத்தெரு, ஆனையாட்கள்தெரு, ஆனைக்கடுவார்தெரு, பன்மையார் தெரு, வித்யாதரப் பெருந்தெரு ஆகியன அவ்வத் தொழில் சார்ந்தவர் வாழ்ந்த பகுதிகளாகலாம். வீரசோழப் பெருந்தெரு, வானவன்மாதேவிப் பெருந்தெரு ஆகியன அரச குடும்பத்தினர் பெயர்களைக் கொண்டிருந்தன. ஆயர்கள் இருந்த பகுதிகளுள் ஒன்றாகத் திரிபுவனமாதேவிப் பேரங்காடி அமைய, அவர்களும் அரசுப் பணியாட்களும் இருந்த குடியிருப்புகளாகப் பல வேளங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அவை உய்யக்கொண்டார் தெரிந்த திருமஞ்சன வேளம், இராஜராஜத் தெரிந்த பாண்டித் திருமஞ்சன வேளம், அபிமான பூஷணத் தெரிந்த வேளம், உத்தமசீலி வேளம், பஞ்சவன்மாதேவியார் வேளமான கைதவகைத் தெரிந்த வேளம் என அரசமரபினர் பெயர்களையே ஏற்றிருந்தன. தஞ்சாவூர்ப் புறம்படியிலிருந்த படைவீடுகளாக சிவதாசன் சோலையான பிரம்ம மகராஜன் படைவீடு, பலவகைப் பழம் படைகளிலார் குடியிருப்பு ஆகியனவும் அடுக்களைக் குடியிருப்பாக ரௌத்திரமாகாள மடவிளாகமும் குறிக்கப்பட்டுள்ளன. அவற்றுடன் பிரமகுட்டமும் புறம்படிப் பகுதியிலிருந்த வாழிடமாகச் சுட்டப்பட்டுள்ளது. முடிவுரை இராஜராஜீசுவரத்தின் மிகச் சிறந்த பதிவுகளுள் ஒன்றான இந்த 82 விளக்குக் கல்வெட்டு, பொ. கா. 11ஆம் நூற்றாண்டுச் சோழச் சமுதாயத்தின் அரசியல், பொருளியல், வாழ்வியல் முகங்களைத் தொட்டுக் காட்டுவதுடன், அரசர் இராஜராஜரின் இணையற்ற பண்பையும் வெளிச்சப்படுத்துகிறது. இதே கோயிலிலுள்ள மற்றொரு விளக்குக் கல்வெட்டு முற்றிலுமாகத் தம் பொறுப்பில் இராஜராஜர் இங்கு ஒளிரச் செய்த 78 விளக்குகளைச் சுட்டுகிறது. அவர் விழைந்திருப்பின் இக்கல்வெட்டுக் குறிக்கும் 82 விளக்குகளையும் அது போலத் தம் பொறுப்பிலேயே சுடர்விடச் செய்திருக்கலாம். ஆனால், இந்த 82இல் சிலவற்றை மட்டுமே தம் பொறுப்பில் ஏற்றிருப்பவர், சில விளக்குகளைத் தம் அலுவலர்கள் அவர்தம் பொறுப்பில் ஒளிர்விக்க வைத்தமையோடு, பல விளக்குகளை இருவர், மூவர், பலர் எனக் கொடைப்பங்கீடு செய்து ஏற்றுமாறு செய்திருப்பதுடன், தாமும் அவர்களுள் ஒருவராகக் கொடைப்பங்கில் இணைந்திருக்கும் மாண்பு தமிழ்நாட்டையாண்ட வேறெந்த அரசரிடத்தும் காணமுடியாத சிறப்பாகும். இக்கல்வெட்டின் வழி அக்காலத்தே வழங்கிய பெயரிடு முறைகள், தமப்பன், சிற்றப்பன், பேரப்பன் உள்ளிட்ட உறவுச் சொற்கள், சில குறிப்பிட்ட உறவுகள் 'நன்' என்ற சிறப்புச் சொல்லுடன் விளிக்கப்பட்டமை (நன்மாமன், நன்மச்சுனன், நன்மரு மகன்) தெரியவருவதுடன், 'கால்மாடு', 'அடைகுடிகள்' என அந்நாள் சமூகத்தில் பயின்றுவந்த சொல்வழக்குகளும் வெளிப்படுகின்றன. பொன்னைக் குறிக்கும் அக்கம் உள்ளிட்ட பல்வேறு மதிப்புடைய காசுகள் வழக்கிலிருந்தமை அறியப்படுவதுடன், கால்நடைக் கணக்கீடுகளிலுள்ள வேறுபாடுகள், காசு என்ற பெயரிலேயே இருவகை மதிப்புடைய நாணயங்கள் இருந்தமை, அக்காசுகளினும் குறைமதிப்புடன் அக்கம் விளங்கியமை ஆகியவையும் தெளிவாகின்றன. தமிழ்நாட்டுக் கல்வெட்டுகளில் மிகக் குறைவான அளவிலேயே இடம்பெறும் அக்கம், இக்கல்வெட்டின் வழிப் பல விளக்குகளின் ஒளியில் கலந்துள்ளது. இராஜராஜீசுவரத்திலுள்ள பல கல்வெட்டுகள் இராஜராஜர் கால அரசு அலுவலர்கள், பணியாளர்கள் எனப் பலரை அறிமுகம் செய்தபோதும் இந்த 82 விளக்குக் கல்வெட்டுதான் பேரரசரின் பெரும்படையைப் பொறுப்பேற்று நடத்திய 15 பெருந்தர அலுவ லர்களின் பெயர்களைப் பதிவுசெய்துள்ளது. தமிழ்நாட்டளவில் எண்ணிக்கையில் மிகுதியான ஆயர் பெருமக்களின் குடும்பங்களை அறிமுகப்படுத்துவதும் இக்கல்வெட்டே என உறுதிபடக் கூறலாம். பொதுக்காலம் 10, 11ஆம் நூற்றாண்டுகளில் இக்கோயிலுக்கு வழங்கப்பட்ட அளவிற்குக் கால்நடைச்செல்வம் தமிழ்நாட்டின் வேறெந்தக் கோயிலுக்கும் கொடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இராஜராஜரின் 78 விளக்குக் கல்வெட்டுப் போலவே இந்த 82 விளக்குக் கல்வெட்டும் சோழநாட்டிலிருந்த 8 வளநாடுகளையும் அவ்வளநாடுகளுடன் இணைக்கப்பட்டிருந்த 35 நாடு அல்லது கூற்றங்களையும் அவற்றுள் ஒன்றியிருந்த 104 ஊர்களின் பெயர்களையும் பதிவுசெய்துள்ளது. இப்பதிவால் பழைமையான மக்கள் வாழிடங்களை அறியமுடிவதுடன், காலப்போக்கில் சில குடியிருப்புகள் பிராமணர்களுக்கும் (கீழ்த்தெங்கம்பூண்டியான குமாரமங்கலம்) கோயில்களுக்கும் (விண்ணனேரியான மும்மடி சோழநல்லூர்) மாற்றப்பட்ட தகவல்களையும் பெறமுடிகிறது. பிராமண குடியிருப்புகள் பிடாகைகள் என்ற பெயரில் சில சிற்றூர்களை உள்ளடக்கியிருந்தமையும் (இராஜராச்ரய சதுர்வேதி மங்கலத்துப் பெருங்குடி, சந்திரலேகைச் சதுர்வேதி மங்கலத்து நரிக்குடிச்சேரி) தஞ்சாவூர் இரண்டு பிரிவுகளாகப் பல குடியிருப்புகள் கொண்டிருந்தமையும் இக்கல்வெட்டால் வெளிச்சமாகின்றன. இக்கல்வெட்டில் சுட்டப்பெறும் இராஜராஜரின் கோழிப் போருக்கான விளக்குகள் குறித்தோ, இதில் இடம்பெறும் அரசர் தவிர்த்த பிறர் இக்கோயிலில் ஏற்றக் கொடையளித்த திருவிளக்குகள் குறித்தோ, இக்கல்வெட்டுச் சுட்டும் திருமேனிகளுக்கான திருவிளக்குகள் குறித்தோ இவ்வளாகத்தில் வேறு கல்வெட்டுகள் ஏதும் இதுநாள்வரை கண்டறியப்படவில்லை. அவ்வகையில் இந்த 82 விளக்குக் கல்வெட்டு, வேறுவகையில் அறிந்துகொள்ள முடியாத பல அரிய தரவுகளின் களஞ்சியமாக உள்ளது. குறிப்பாக அரசரின் தேவியார் இலாடமாதேவியும் ஈசான சிவபண்டிதரும் இக்கோயிலில் எழுந்தருளுவித்ததாக இக்கல்வெட்டுக் குறிக்கும் பாசுபதமூர்த்தி, குருக்கள் உருவம் குறித்த செய்திகளை இக்கல்வெட்டு மட்டுமே கொண்டுள்ளது. இக்கல்வெட்டுக் குறிப்பிடும் இராஜராஜரின் கோழிப்போரை அடையாளப்படுத்தும் சான்றுகள் இதுவரை கிடைத்தில. இந்த 82 விளக்குகளையேற்ற ஆடுகள், பசுக்கள், எருமைகள், கன்றுகள் தரப்பட்டதுடன், காசும் அக்கமும் கொடையில் இணைந்தன. இக்காசு, அக்கம் இரண்டும் அவற்றின் மதிப்பிற்கேற்பக் கால்நடைகளாக மாற்றப்பட்டே ஆயர்களிடம் வழங்கப்பட்டன. கொடையாளர்கள் வழங்கிய மொத்த ஆடுகளின் எண்ணிக்கை 2563. அவற்றுள் 24 ஆடுகள் 12 பசுக்களாக மாற்றப்பட்டுக் கொள்ளப்பட்டன. அது போலவே அவர்களால் வழங்கப்பட்ட 1620 பசுக்களில் 398 பசுக்கள் மட்டும் 796 ஆடுகளாக மாற்றப்பட்டன. எஞ்சிய 1222 பசுக்கள் கால்மாடாக (கால்நடைச் சொத்து) ஆயர்களிடம் வழங்கப்பட்டன. கொடைஞர்கள் தந்த 40 எருமைகள் 240 ஆடுகளாகவும் 3 கன்றுகள் 5 ஆடுகளாகவும் மாற்றப்பட்டன. இந்த 82 விளக்குகள் ஒளிர வழங்கப்பட்ட 592 காசில் 40 காசு 60 பசுக்கள் பெறவும் 552 காசு 1690 ஆடுகள் பெறவும் உதவின. அதில் 34 காசு, காசுக்கு 4 என 136 ஆடுகளையும் 518 காசு, காசுக்கு 3 என 1554 ஆடுகளையும் பெறத் துணையாயின. கொடையளிக்கப்பட்ட 26 அக்கம் 11 ஆடுகளைப் பெற்றுத்தந்தது. அனைத்து வகைக் கொடைகளையும் இணைத்துப் பார்க்கையில் இக்கல்வெட்டுக் குறிப்பிடும் தலைமை, அவர்தம் அடைகுடிகளான 357 ஆயர்களிடம் ஒப்புவிக்கப்பெற்ற ஆடுகள் 5281. பசுக்கள் 1294. இந்த 82 விளக்குகளில் பசுநெய்யால் ஒளிர்ந்தவை 27. ஆடுகள் 55 விளக்குகளின் சுடரொளிக்குக் காரணமாயின. ஒரு கல்வெட்டு எந்த அளவிற்கு வரலாற்றுக்கு வளம் சேர்க்க முடியும் என்பதற்கு இராஜராஜீசுவரத்தின் ஒவ்வொரு கல்வெட்டுமே இமயச் சான்றாய் நிமிர்ந்து நின்று பெருமை பெறுகிறது. இந்த 82 விளக்குக் கல்வெட்டு அந்த இமயத்தின் வியப்பூட்டும் எண்ணற்ற சிகரங்களுள் ஒன்றெனில் அது மிகையாகாது. |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |