http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 171
இதழ் 171 [ செப்டம்பர் 2023 ] இந்த இதழில்.. In this Issue.. |
மூலப்பாடம்: காஞ்சி எழுத்துருக்களில் 由良のとを 渡る舟人 かぢを絶え ゆくへも知らぬ 恋の道かな கனா எழுத்துருக்களில் ゆらのとを わたるふなびと かぢをたえ ゆくへもしらぬ こひのみちかな ஆசிரியர் குறிப்பு: பெயர்: புலவர் யொஷிததா காலம்: கி.பி. 10ம் நூற்றாண்டின் பிற்பகுதி. தாங்கோ மாகாணத்தில் ஓர் உயரதிகாரியாகப் பணியாற்றினார். பேரரசர்கள் என்யூ மற்றும் கஸான் ஆகியோரின் அரசவையில் புலவராக இருந்தார். நிறையக் கவிதைகளை இயற்றியுள்ளார். இவரது தனிப்பாடல் திரட்டாக யொஷிததா ஹ்யாக்குஷூ என்ற 100 பாடல்கள் அடங்கிய தொகுப்பு இவரது பெயரிலேயே வெளியிட்டிருக்கிறார். ஜப்பானிய இலக்கிய வரலாற்றில் 100 பாடல்களைத் தொடராக இயற்றிய முதல் புலவர் இவர்தான். இதுதவிர ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 89 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இவரது சொற்பயன்பாடுகள் சமகாலத்திலேயே வெகுவாக விதந்தோதப்பட்டன. அப்போதைய கதைகளிலும் புதினங்களிலும் இவரது பாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் இவரது மனநிலை பிறழ்ந்தவர் போன்ற நடவடிக்கைகளால் பொதுமக்களிடமிருந்து விலகியே இருந்தார். பொதுமக்களும் இவருடன் உறவாட அச்சப்பட்டனர். கி.பி 985ல் பேரரசர் கஸான் என்யூயின் என்ற கோயிலில் ஏற்பாடு செய்திருந்த கவிதைப்போட்டிக்கு இவரை அழைக்கவில்லை. அதனால் கோபமுற்ற இவர் மிக மோசமான ஆடைகளை அணிந்து கவிதைப்போட்டிக் கூடத்தின் வாயிலில் நின்று "இங்குக் கூடியிருப்பவர்களைவிட உன் திறமை சற்றும் குறைந்ததல்ல. உன்னைவிடத் திறமையானவர்களை இவர்களால் அழைக்கமுடியாது" என உரத்த குரலில் தனக்குத்தானே கூறி வெளியேறியிருக்கிறார். பாடுபொருள்: தன் காதல் என்னவாகும் எனத் தெரியாமலிருத்தல் பாடலின் பொருள்: கடலின் முகத்துவாரத்தில் நுழையும் சுக்கான் இல்லாத தோணி கரைசேருவது எப்படி நிச்சயமற்றதோ, அப்படி இருக்கிறது என் காதல். காதலின் நிச்சயமற்ற எதிர்காலத்தை விளக்கும் ஓர் எளிய அகப்பாடல். தற்போதைய கியோத்தோ மாகாணத்தில் மியாசு நகரில் யுரா நதி ஓடிக்கொண்டிருக்கிறது. அது கடலில் சேரும் நீரிணைப்பு பேரலைகளைக் கொண்டது. அதில் சுக்கானை இழந்த ஒரு தோணி செல்லுமாயின் கரை ஒதுங்குவது என்பது நிச்சயமற்ற ஒன்று. அதுபோலவே என் காதலும் நிறைவேறுமா என நிச்சயமற்றதாகவே இருக்கிறது. யுரா நதி வெண்பா: தக்கது கொண்டு நெறிக்கா மனமெனச் சுக்கான் இழந்திடத் தள்ளாடி - அக்கரை சேர்ந்திடாத் தோணியும் ஒத்ததே காதலின் பாதை தெரியா முடிவு (மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்) இக்கட்டுரை சொல்வனம் இதழில் வெளியானது. |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |