![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 173
![]() இதழ் 173 [ நவம்பர் 2023 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
வலஞ்சுழி வாணர் வளாகத்திலிருந்து 1902இல் நடுவணரசின் கல்வெட்டுத்துறை இருபத்தைந்து கல்வெட்டுகளைப் படியெடுத்து அவற்றின் பாடங்களை இருபத்துநான்காகத் தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி எட்டில் பதிப்பித்துள்ளது.1 இந்த இருபத்தைந்து கல்வெட்டுகளில், ஐந்து கல்வெட்டுகள் கோயிலில் முழுமையாக இருந்தபோதும், பதிப்பில் முன் அல்லது பின் அல்லது முன், பின் தொடர்புகள் விட்டுப்போன நிலையில் பதிவாகியுள்ளன. 217ஆம் எண் கல்வெட்டு இருபத்துமூன்று வரிகள் மட்டுமே பதிவாகியுள்ளது. பெருமண்டபக் கிழக்குச் சுவரின் தென்புறம் அடர்த்தியான சுண்ணப்பூச்சின் கீழிருந்த இதன் எஞ்சிய பகுதி மைய ஆய்வர்களால் படியெடுக்கப்பட்டுள்ளது. 235ஆம் எண் கல்வெட்டு, முற்பகுதியும் பிற்பகுதியும் அற்ற நிலையில் படியெடுக்கப்பட்டுள்ளது. களஆய்வில் இக்கல்வெட்டு முதல் இராஜேந்திரருடையது என அடையாளப்படுத்தப்பட்டு, இதன் தொடக்கமும் தொடர்ச்சியும் கண்டறியப்பட்டன. 236, 237ம் எண் கல்வெட்டுகள் முறையே இரண்டு வரிகளும், மூன்று வரிகளும் மட்டுமே பெற்றுத் தொகுதியில் பதிவாகியுள்ளன. இவற்றின் விட்டுப்போன தொடர்ச்சிகள் ஆய்வின்போது கிடைத்தமையால் பதிவுசெய்யப்பட்டன. 230ஆம் எண் கல்வெட்டு இரண்டே வரிகளுடன் பதிவாகியுள்ளது. இதன் எஞ்சிய ஆறு வரிகள் அறியப்பட்டுப் பதிவுசெய்யப்பட்டன. இக்கல்வெட்டு, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின், 'திருவலஞ்சுழி கல்வெட்டுகள்' தொகுதியிலும் பதிவாகியுள்ளது. ஆனால், தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதி பற்றிய குறிப்பேதும் அப்பதிவில் இல்லை. நந்திமண்டபத்திலிருந்து படியெடுக்கப்பட்டனவாய்த் தொகுதி எட்டில் இரண்டு கல்வெட்டுகள் பதிப்பிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் 232ஆம் எண் கல்வெட்டு, மண்டபச் சுவரிலுள்ள இரண்டு தனிக் கல்வெட்டுகளை ஒரே கல்வெட்டாகக் கருதிப் பதிப்பிக்கப்பட்டதாகும். இப்பதிவின் முதல் மூன்று வரிகள் ஒரு கல்வெட்டிற்கும் எஞ்சிய வரிகள் மற்றொரு கல்வெட்டிற்கும் உரியன. இவற்றுள் முதல் கல்வெட்டு இம்மண்டபத்தை, 'எதிரிலாப் பெருமாள்' எனப் பெயரிடுவது குறிப்பிடத்தக்கது. 1927-28இல் மேலும் இருபத்திரண்டு கல்வெட்டுகளைப் படியெடுத்த இத்துறை, அவற்றின் சுருக்கங்களை அவ்வாண்டுக் கல்வெட்டறிக்கையில் பதிப்பித்துள்ளது.2 அவற்றுள் பத்தொன்பது கல்வெட்டுகள் முன்மண்டபத் தாங்குதளம், அதன் வடசுவர், இரண்டாம் சுற்றின் கிழக்கு, வடக்கு, மேற்குச் சுவர்கள் ஆகியவற்றிலிருந்து படியெடுக்கப்பட்டுள்ளன. ஒரு கல்வெட்டு இரண்டாம் சுற்றின் தெற்குச் சுவரிலிருந்தும் மற்றொரு கல்வெட்டு மூன்றாம் கோபுரவாயிலின் இடப்புறமிருந்தும் மூன்றாம் கல்வெட்டு வெள்ளைப் பிள்ளையார் திருமுன் நிலைகளிலிருந்தும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசுத் தொல்லியல்துறை, 'திருவலஞ்சுழி கல்வெட்டுகள்' என்ற பெயரில் 2001இல் ஒரு தொகுதியை வெளியிட்டுள்ளது. அதில் வலஞ்சுழி வளாகத்திலிருந்து படியெடுக்கப்பட்டன என்ற அறிவிப்புடன் ஐம்பத்தொன்பது கல்வெட்டுகள் பதிவாகியுள்ளன. அவற்றுள் ஒன்பது கல்வெட்டுகள் இரண்டாம் சுற்றின் வடக்குச் சுவரிலிருந்தும் எட்டுக் கல்வெட்டுகள் மேற்குச் சுவரிலிருந்தும் இருபத்தேழு கல்வெட்டுகள் தெற்குச் சுவரிலிருந்தும் படியெடுக்கப்பட்டுள்ளன. ஆறு கல்வெட்டுகள் மூன்றாம் சுற்றின் தென்கிழக்குப் பகுதியிலுள்ள தெற்குக் கோபுரத் தாங்குதளத்திலிருந்து பதிவு செய்யப்பட்டுள்ளன. எஞ்சிய ஒன்பது கல்வெட்டுகள் மூன்றாம் கோபுர வாயிலின் கிழக்கு முகத்திலிருந்தும் அதையெhட்டிய சுவர்களிலிருந்தும் வந்துள்ளன. இவற்றுள் 211ஆம் எண்ணின் கீழ்த் தெற்குக் கோபுரத்திலிருந்து படியெடுக்கப்பட்டதென்ற குறிப்புடன் வெளியாகியுள்ள கல்வெட்டு, மூன்றாம் சுற்றுக் கிழக்குச் சுவரில் உள்ளது. இரண்டாம் சுற்றின் தெற்குச் சுவரிலிருப்பதாக வெளியாகியிருக்கும் 220, 221ஆம் எண் கல்வெட்டுகள், சுற்றின் மேற்குச் சுவரிலுள்ளன. மேற்குச் சுவரிலிருப்பதாக இத்தொகுதி சுட்டும் 188, 191ஆம் எண் கல்வெட்டுகள் இரண்டும் ஒரே கல்வெட்டின் இரண்டு பதிவுகளாக அமைந்துள்ளன. கல்வெட்டெண் 231, தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதி எட்டில் பதிப்பிக் கப்பட்டுள்ள 229ஆம் எண் கல்வெட்டின் மறுபதிவாகும். 1927-28 கல்வெட்டறிக்கையில் சுருக்கங்களுடன் பதிவாகியுள்ள பதினான்கு கல்வெட்டுகளின் பாடங்களையும் இத்தொகுதி வெளியிட்டுள்ளது.3 தெற்குக் கோபுரத்திலிருந்து பதிவாகியிருக்கும் ஆறு கல்வெட்டுகளும் அக்கோபுரத்தின் வடமுகத் தாங்குதளப் பகுதியில் துணுக்குகளாய்க் கிடைப்பனவாகும். கோபுரத்தின் தென்முகத்திலும் இது போல் கல்வெட்டுத் துணுக்குகள் உள்ளன. அவற்றை, 'திருவலஞ்சுழி கல்வெட்டுகள்' தொகுதி பதிவுசெய்யவில்லை. கோபுரத்தின் இருமுகத் துணுக்குகளையும் இணைத்துப் பார்த்தபோது, அவை இரண்டு கல்வெட்டுகளின் சிதறிய பகுதிகள் என்பதை அறியமுடிந்தது. அவற்றுள் ஒன்று மதுராந்தக உத்தமசோழரின் ஆணையைப் பதிவுசெய்துள்ளது. வலஞ்சுழியிலிருந்து சுவடழிந்த மதுராந்தக ஈசுவரம் என்ற திருக்கோயிலுக்கு அளிக்கப்பட்ட நிலக்கொடை பற்றியும் அந்நில வருவாய் வழி அக்கோயிலில் நிறைவேற்றப்பட்ட நிவந்தங்களைப் பற்றியும் இக்கல்வெட்டு விரித்துரைக்கிறது. மற்றொரு கல்வெட்டு இறுமுக்கரையர் மகளுக்கு விற்கப்பட்ட நிலம் பற்றிய தகவலைத் தருகிறது. திருவலஞ்சுழி கல்வெட்டுகள் தொகுதியில் வெளியாகியிருக்கும் பிற கல்வெட்டுகளை மறுபடிப்புச் செய்தபோது, பதிவாகத் தவறியிருக்கும் பல தரவுகளைக் கண்டறியமுடிந்தது. பெரும்பாலான கல்வெட்டுகளுடன், பதிப்பில் விட்டுப்போயிருக்கும் சொற்கள், வரிகள் படித்தறியப்பட்டுச் சேர்க்கப்பட்டன. தொடரொழுங்கின்றி இருந்த கல்வெட்டுகளும் மறுபடிப்பில் சரிசெய்யப்பட்டன. நடுவணரசும் தமிழ்நாடு அரசும் வெளியிட்டுள்ள கல்வெட்டுப் பதிவுகளைச் சீர்மைசெய்த பிறகு, இத்திருக்கோயில் வளாகத்தில் நிகழ்த்தப்பட்ட முனைப்பான கல்வெட்டுத் தேடலின் வழி இதுவரை எத்துறையாலும் படியெடுக்கப்படாதிருந்த முப்பத்தொரு புதிய கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுப் பதிவுசெய்யப்பட்டன.4 இவை தவிர எழுபது துணுக்குக் கல்வெட்டுகள் வளாகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து படித்தறியப்பட்டன. கல்வெட்டாய்வுப் பணி முழுமையுற்ற நிலையில் இவ்வளாகக் கல்வெட்டுகளைப் பதிவின் அடிப்படையில் பின்வருமாறு வகைப்படுத்தலாம். தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதி-8 25 இந்தியக் கல்வெட்டறிக்கை 1927-28 22 திருவலஞ்சுழி கல்வெட்டுகள் தொகுதி 36 புதிய கல்வெட்டுகள் 31 114 இந்நூற்றுப் பதினான்கு கல்வெட்டுகளுள் காலத்தால் முற்பட்டது தெற்குக் கோபுரத்தில் துணுக்குகளாய்ச் சிதறியிருக்கும் உத்தமசோழரின் ஆணைக் கல்வெட்டேயாகும். உத்தமசோழரின் பெயரில் அவர் அன்னையார் செம்பியன் மாதேவியார் இவ்வூரில் எழுப்பியிருந்த மதுராந்தக ஈசுவரத்திற்கு மன்னர் அளித்த நிலக்கொடை பற்றிப் பேசும் இக்கல்வெட்டு, அந்நில வருவாய் வழி மதுராந்தக ஈசுவரத்தில் நிறைவேற்றப்பட்ட நிவந்தங்களையும் வரிசைப்படுத்துகிறது. இதே மன்னருடையதாகக் கருதத்தக்க பன்னிரண்டாம், பதின்மூன்றாம் ஆட்சியாண்டுகளைச் சேர்ந்த இரண்டு ஆவணங்கள் இக்கோயில் வளாகத்துள்ள முதல் இராஜராஜரின் கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளன.5 முதல் இராஜராஜரின் பதினொரு கல்வெட்டுகள், இம்மன்னரின் பதினோராம் ஆட்சியாண்டிலிருந்து இருபத்தைந்தாம் ஆட்சியாண்டுவரை பரவிய நிலையில் இவ்வளாகத்தில் பதிவாகியுள்ளன. பதினோராம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுகள் இரண்டும் பதினான்கு, பதினேழு, பதிbனட்டாம் ஆட்சியாண்டுகளைச் சேர்ந்தனவாய் மூன்றும் ஆட்சியாண்டு அற்ற நிலையில் ஒன்றும் சேத்ரபாலர் கோயிலில் உள்ளன. வலஞ்சுழி வாணர் கோயிலில் உள்ள இம்மன்னரின் கல்வெட்டுகளில் காலத்தால் முற்பட்டது பதினேழாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டாகும். எஞ்சியன இருபத்தொன்றாம், இருபத்துநான்காம், இருபத்தைந்தாம் ஆட்சியாண்டுகளைச் சேர்ந்தவை. இப்பதினொரு கல்வெட்டுகளுமே வரலாற்றுத் தரவுகளின் தொகுப்புகளாக உள்ளன. இவற்றுள் மூன்று முதல் பராந்தகர், உத்தமசோழர் கொடைகளைச் சுட்டித் தொடர்வது குறிப்பிடத்தக்கது. முதல் இராஜராஜரின் வீரத்திருமகனும் தமிழர் பெருமையைக் கடல் கடந்த பல தொலைநாடுகளில் பதிவு செய்த முதல் இந்திய வேந்தருமான முதல் இராஜேந்திரரின் ஏழு கல்வெட்டுகள் இவ்வளாகத்திலுள்ளன. அவற்றுள் ஐந்து கல்வெட்டுகள் அவருடைய மூன்றாம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்டுள்ளன. ஐந்தாம், எட்டாம் ஆட்சியாண்டுகளின் பதிவுகளாக இரண்டுள்ளன. அவரது மூன்றாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டொன்றால், இராஜேந்திரரின் மூன்றாம் ஆட்சியாண்டும் இராஜராஜரின் இருபத்தொன்பதாம் ஆட்சியாண்டும் ஒன்றிணைந்து இருந்த தகவலைப் பெறமுடிகிறது.6 வலஞ்சுழி வாணர் வளாகத்திலிருந்து புதிதாகக் கண்டறியப்பட்ட இவ்வேந்தரின் ஐந்தாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுப் பல அரிய தகவல்களின் தொகுப்பாகத் திகழ்கிறது. தம்முடைய மூன்றாம் ஆட்சியாண்டின் ஐம்பத்தைந்தாம் நாள், அதாவது கி.பி. 1014ல் இப்பெருவேந்தர் வலஞ்சுழி வாணர் கோயிலுக்கு வந்து, இவ்வளாகத்தின் மேற்கிலிருந்த, 'வியாள கஜமல்லன்' எனும் நந்தவனத்துக் காவணத்தில் உணவருந்தியபோது, வாணர் கோயில் நிவந்தங்களுக்குக் கொடையளித்திருக்கிறார். கோயில் பெருமண்டபக் கிழக்குச் சுவரின் தென்புறமிருக்கும் இவர் தந்தையார் கல்வெட்டுப் போலவே, அதே சுவரின் வடபுறமிருக்கும் இவர் கல்வெட்டும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வாணர் கோயில் செயற்பாடுகளை விரிவாகப் படம்பிடித்துள்ளது. இதுவரை தமிழ்நாட்டு வரலாறு அறிந்திராத இம்மன்னருடைய விருதுப்பெயரொன்றையும் இக்கல்வெட்டுப் பெற்றுள்ளது. முதல் இராஜராஜர் தம்மை சிவபாதசேகரன் என்றழைத்துப் பெருமையுற்றதை அவருடைய பல்வேறு கல்வெட்டுகள் வழி அறியமுடிகிறது.7 'சிவபாதசேகரர்' என்ற அந்தப் பெயரில் ஒரு மாளிகை இருந்த மையையும், அதே பெயரில் ஓர் ஊர் விளங்கியமையையும், ஒரு குழலுக்குக்கூட அப்பெயர் மன்னராலேயே தரப்பட்டிருந்தமையையும் கல்வெட்டுகள் இனிதே உணர்த்துகின்றன.8 தந்தையும் மகனும் ஒரே விருதுப்பெயரைப் பெறலாகாது எனக் கருதியோ என்னவோ, அதே பொருளுடைய, ஆனால் சற்று மாறுபட்டமைந்த, 'சிவசரணசேகரன்' எனும் விருதுப்பெயரை முதல் இராஜேந்திரர் கொண்டிருந்தமை இக்கல்வெட்டினால் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. முதல் இராஜேந்திரரின் திருமகன்களுள் இரண்டாம் இராஜேந்திரரின் கல்வெட்டுகள் இரண்டும் வீரராஜேந்திரரின் கல்வெட்டு ஒன்றும் இக்கோயிலில் உள்ளன. இரண்டாம் இராஜேந்திரரின் கல்வெட்டுகள் இரண்டும் விக்கிரமசோழர் காலத்தில் படியெடுத்து வெட்டப்பட்டவையாக, மிகச் சிதைந்த நிலையில் உள்ளன. கட்டுமானம் ஒன்றால் மறைக்கப்பட்டிருந்த வீரராஜேந்திரரின் நான்காம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, வாணர் முகமண்டபத் தெற்குத் தாங்குதளப் பகுதியிலிருந்த கட்டமைப்பை அகற்றிய நிலையில் படிக்கப்பட்டது. இக்கல்வெட்டினால் தற்போதிருக்கும் வாணர் விமானம், முகமண்டபம் ஆகியவற்றை எழுப்பியவர் பெயர் கிடைத்துள்ளது. சாளுக்கியச் சோழர்களின் காலத்தில்தான் இக்கோயில் வளாகம் விரிவடைந்தது. இச்சோழ மரபைத் தொடங்கிவைத்த முதல் குலோத் துங்கரின் கல்வெட்டுகள் மூன்று இங்குள்ளன. இவர் மகன் விக்கிரமசோழரின் கல்வெட்டுகள் இரண்டும் இரண்டாம் இராஜராஜரின் கல்வெட்டுகள் மூன்றும் வாணர் வளாகத்துள்ளன. இரண்டாம் இராஜாதிராஜர் காலத்தனவாய் நான்கு கல்வெட்டுகளும் மூன்றாம் குலோத்துங்கர் காலத்தனவாய் நான்கு கல்வெட்டுகளும் உள்ளன. தமிழ்நாட்டின் வேறெந்தத் திருக்கோயிலிலும் இல்லாத அளவிற்கு மூன்றாம் இராஜராஜரின் ஐம்பத்தெட்டுக் கல்வெட்டுகள் இக்கோயில் வளாகத்தில் பதிவாகியுள்ளன. மன்னரின் இரண்டாம் ஆட்சியாண்டிலிருந்து இருபதாம் ஆட்சியாண்டுவரை ஓர் ஆண்டு விடாது கல்வெட்டுப் பதிவுகள் உள்ளன. இருபதாம் ஆட்சியாண்டிற்குப் பிறகு இருபத்தைந்தாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டே காணப்படுகிறது. அதற்குப் பிறகு இவ்வேந்தரின் கல்வெட்டெதுவும் இவ்வளாகத்தில் காணுமாறு இல்லை. சோழ மரபின் இறுதி வேந்தரான மூன்றாம் இராஜேந்திரரின் கல்வெட்டுகள் இரண்டு இங்குள்ளன. மன்னரின் மூன்றாம், எட்டாம் ஆட்சியாண்டுகளைச் சேர்ந்த இக்கல்வெட்டுகளும் மூன்றாம் இராஜராஜரின் அனைத்துக் கல்வெட்டுகளும் இக்கோயில் வளாகத்துள்ள வெள்ளைப் பிள்ளையார் திருமுன்னிற்கு வழங்கப்பட்ட கொடைகளைப் பற்றியே பேசுவது குறிப்பிடத்தக்கது. இவ்வெள்ளைப் பிள்ளையார் திருமுன்னைப் பற்றிக் குறிப்பிடும் முதல் கல்வெட்டாக மூன்றாம் குலோத்துங்கரின் முப்பத்தாறாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டைக் குறிப்பிடலாம். கோப்பெருஞ்சிங்கரின் கல்வெட்டுகள் இரண்டும் விஜயநகர வேந்தரான வீரவிருபாக்ஷர் காலக் கல்வெட்டொன்றும் பெற்றுள்ள இவ்வளாகத்துள், இரண்டாம் பாண்டியப் பேரரசுக் காலப் பதிவு கள் ஒன்றுகூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. வலஞ்சுழியைச் சுற்றி அமைந்துள்ள பல கோயில்களில் பிற்பாண்டியர் கல்வெட்டுகள் காணப்பெறுவதும் இங்கு மட்டும் விதிவிலக்காக அவர்தம் கல்வெட்டுகள் ஒன்றுகூட இடம்பெறாமையும் வியப்பூட்டுகிறது. முற்றிலும் சோழர்களின் செல்லப்பிள்ளையாய் விளங்கிய இவ்வளாக வாணர் கோயிலும் முதல் இராஜராஜரின் குடும்பம் போற்றிய சேத்ரபாலர் கோயிலும் மூன்றாம் குலோத்துங்கர், அவர் திருமகன் மூன்றாம் இராஜராஜர், பெயரர் மூன்றாம் இராஜேந்திரர் ஆகியோர் கால அரவணைப்புப் பெற்ற வெள்ளைப் பிள்ளையார் திருமுன்னும் பிற்பாண்டியர்களால் புறக்கணிக்கப்பட்ட காரணம் தெரியவில்லை. பிற்பாண்டியர் அரவணைப்புப் பெறவில்லையாயினும் சிற்றரசர்களும் மக்களும் இவ்வளாகத்தைத் தொடர்ந்து புரந்தமைக்குப் பிற்காலக் கல்வெட்டுகள் சான்றுகளாக அமைகின்றன.9 இவ்வளாகத்துள்ள நூற்றுப் பதினான்கு கல்வெட்டுகளையும் எழுபது துணுக்குக் கல்வெட்டுகளையும் விரிவான ஆய்விற்கு உட்படுத்திய நிலையில் வலஞ்சுழியின் வரலாற்றையும் தொடர்புடைய தமிழ்நாட்டு வரலாற்றையும் அரசு, சமுதாயம், கோயில் எனும் மூன்று தலைப்புகளின் கீழ்ப் பகுத்தறிய முடிந்தது. குறிப்புகள் 1. SII 8 : 215 - 238. 2. ARE 1927 - 28: 192 - 213. 3. திருவலஞ்சுழி கல்வெட்டுகள்: 199 - 212. இப்பதிவில் சில சொற்கள், தொடர்கள் விடுபட்டிருப்பதும் சில சொற்கள், தொடர்கள் பிழையாகப் பதிவாகியிருப்பதும் களஆய்வில் அறியப்பட்டுச் சரிசெய்யப்பட்டன. காண்க: வரலாறு 14 - 15, பக். 20 - 46. 4. இவற்றுள் பதினாறு கல்வெட்டுகள் வரலாறு 14 - 15ம் தொகுதியில் புதிய கல்வெட்டுகள் பகுதியில் (பக். 1-19.) வெளியாகியுள்ளன. ஏனையன வலஞ்சுழி வாணர் நூலின் பின்னிணைப்பாகத் தரப்பட்டுள்ளன. 5. SII 8 : 222; பு. க. 5. 6. SII 8: 237; முதல் இராஜராஜரின் இருபத்தொன்பதாம் ஆட்சியாண்டும் முதல் இராஜேந்திரரின் மூன்றாம் ஆட்சியாண்டும் அடுத்தடுத்துக் குறிக்கப்பட்ட நிலையில் தஞ்சாவூர் இராஜராஜீசுவரத்தின் வடக்குத் திருச்சுற்று மாளிகைச் சுவரிலும் ஒரு கல்வெட்டுள்ளது. 7. SII 8 : 222 ; 2: 1. 8. ARE 1927: 315, 311, 314; SII 2 : 1 9. SII 8 : 232, 233, 238; வரலாறு 14 - 15, பக். 22 - 26. - வளரும் |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |