![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 173
![]() இதழ் 173 [ நவம்பர் 2023 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
புராணப் பாத்திரமான மகாபலிக்கும் தமிழக வரலாற்றில் பல முதன்மைகளுக்குச் சொந்தக்காரரான மாமல்லருக்கும் என்ன தொடர்பு? மல்லைக் கடலோரம் பல்லவர் சிற்பக்கலைச் சாதனைகள் அலையொலியோடு எதிரொலிக்க இறுமாந்து நிற்கும் அழகுப் பெட்டகம் – மாமல்லபுரமா மகாபலிபுரமா? பிணங்களிடு காடதனுள் நடமாடு பிஞ்ஞகனோடு இணங்குதிருச் சக்கரத்தெம் பெருமானார்க் கிடம்விசும்பில் கணங்களியங்கு மல்லைக் கடன்மல்லைத் தலசயனம் வணங்குமனத் தாரவரை வணங்கென்றன் மடநெஞ்சே (திருமங்கையாழ்வார்) திருமங்கையாழ்வார் தம் பெரிய திருமொழியில், கடல்மல்லைத் தலசயனத்துறையும் பெருமாளை நெஞ்சுருகப் பாடுகிறார். 'புரம்' என்று ஊர்ப் பெயர் முடிந்தால், அது வணிகர்கள் இருப்பிடத்தைக் குறிக்கும். கடல்மல்லையாம் மாமல்லபுரம், பல்லவர்களின் வணிகத் தளமாக விளங்கிய துறைமுகப்பட்டினம். பல்லவ அரசைத் தமிழகத்தில் நிலையாகக் கோலூன்றச் செய்த சிம்மவிஷ்ணுவின் மகன் முதலாம் மகேந்திரவர்ம பல்லவர். இவருடைய காலம் பொதுக்காலம் 590 முதல் 630 வரையாகும். மலைகளை வெட்டி, குடைந்து குடைவரைக் கோயில்களை உருவாக்கியவர். அதுவரை வழக்கிலிருந்த செங்கல், மரம், உலோகம், சுதை இல்லாமல் தமிழ்நாட்டில் முதன்முதல் கோயிலை எடுப்பித்த பெருமையை , தம் மண்டகப்பட்டுக் கல்வெட்டில் உலகிற்குப் பேரறிவிப்பாகப் பறைசாற்றுகிறார் மகேந்திரர். சிவனுக்கும் திருமாலுக்கும் தனித்தனிக் குடைவரைக் கோயில்கள் கட்டியதோடு, மண்டகப்பட்டில் மும்மூர்த்திக் கோயிலும் அமைத்தவர். இயல் இசை நாடகக் கலையில் வல்லவராகவும் சிறந்த ஓவியராகவும் திகழ்ந்தவர். இது பெருங்கடலின் ஒரு துளிதான். மகேந்திரரின் சிறப்புக்களைச் சொல்ல ஒரு பதிவு போதாது. மகேந்திரவர்ம பல்லவரின் மகன், 'வாதாபி கொண்ட நரசிங்கப் போத்தரையன்' என்று கல்வெட்டு கூறும் முதலாம் நரசிம்மவர்மர். கருநாடகத்தில் உள்ள அன்றைய வாதாபியான இன்றைய பாதாமி கல்வெட்டு, இவரை 'மகாமல்லன்' என்று குறிப்பிடுகிறது. மகேந்திரரால் தொடங்கப்பட்டு, மகன் முதலாம் நரசிம்மவர்மரால் மெருகூட்டி வளமாக்கப்பட்டன தமிழ்நாட்டின் தொடக்ககாலக் குடைவரைக் கோயில்களும், அழகுறச் செதுக்கப்பட்ட புதுமைச் சிற்பங்களும். மாமல்லபுரத்தை உலகம் போற்றும் பெருங்கற்கோயில் கலைக்களஞ்சியமாக உயர்த்திய பெருமை இவர்கள் வழிவந்த இரண்டாம் நரசிம்மவர்மரான இராஜசிம்மனையே சேரும். இவருடைய காலம் பொதுக்காலம் 690 முதல் 725 வரை ஆகும். கடல்மாமல்லை என்ற மாமல்லபுரம், தமிழகக் கோயில் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை வரலாற்றில் பற்பலப் புதுமைகளின் முன்னோடி என்பதில் தமிழன் தனிப்பெருமை கொள்ளவேண்டும். 'அருச்சுனன் தபசு' என்று அழைக்கப்படும் புடைப்புச் சிற்பப் பாறையில்தான் எத்தனை எத்தனைச் சிற்பங்கள்… இறை வடிவங்கள், வானவர், மக்கள், விலங்குகள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். பொய்யாகத் தவம் செய்யும் பூனையும், பூனை கண்மூடியிருப்பதால் மகிழ்ந்தாடிக் களிக்கும் எலிகளும், தன் துணைக்குப் பேன் பார்க்கும் ஆண் குரங்கும், அத்தாய்க்குரங்கின் மார்பிலிருந்து பால் அருந்தும் குட்டிகளும் .. அப்பப்பா கல்லில் கலைநயமிக்க உளிவண்ணம். இங்கே, தொடர்பில்லாமல் பஞ்ச பாண்டவர்களையும் திரெளபதியையும் இணைக்கிறார்கள் கதைச்சொல்லிகள். பஞ்சபாண்டவர் ரதமென்று அழைக்கப்படும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோயில். அவற்றை ஒருகல் தளிகள் அல்லது செதுக்குத் தளிகள் என்று வரலாற்றறிஞர்கள் கூறுவார்கள். 'தளி' என்பது கோயிலைக் குறிக்கும் சொல். ஒவ்வொரு ரதத்திலும் அதாவது தளியிலும் அமைந்துள்ள சிற்பங்கள், பல்லவச் சிற்பிகளின் உளித்திறனைப் பறைசாற்றும். கற்பாறைகளைக் குடைந்து முதன்முதல் வடிவங்களை உருவாக்கும்போதே உச்சம்தொடும் வளமான சிற்பங்களை அமைத்திருப்பது சிற்பக்கலை வல்லவர்களின் பேராற்றல். ஆனால், பஞ்ச பாண்டவர்களுக்கும் இக்கோயில்களுக்கும் தொடர்பு ஏதும் இல்லை. கூடுதலாக, பெண்வாயில் காப்பாளர்கள் வடிக்கப்பட்டிருப்பதாலேயே கொற்றவைக் கோயிலை திரெளபதி ரதமென்று ஆக்கிவிட்டார்கள். மாறிய பெயர்களில் ஒரு மண்டபம் தப்பித்துக்கொண்டது. திருமாலின் வராக அவதாரத்தைக் காட்டும் மண்டபத்திற்கு வராக மண்டபமென்றே பெயர் அமைந்துள்ளது வியப்புத்தான். இங்கே நாம் காணும் மற்றொரு சிற்பம்- 'மூவுலகும் ஈரடியால்' என்று சிலப்பதிகாரம் கூறும் வாமன அவதாரத்தைக் குறிக்கும் திரிவிக்கிரமச் சிற்பம். விண்ணை அளக்கத் தூக்கிய காலின் கீழே மகாபலி அமர்ந்திருக்கிறார். அப்பாடா…. மகாபலிபுரம் என்று பெயர்க்காரணம் சொல்ல ஒரு சிற்பமாவது கிடைத்தது. பரந்து விரிந்த மாமல்லையில் கண்களுக்கு விருந்தாகும் கலைவடிவங்கள் வேறு என்னென்ன? சிவனும், திருமாலும், பிரமனும், மகிஷனை வீழ்த்திய மகிஷாசுரமர்தினியும், இவர்களின் மூல உருவான கொற்றவையும் எழிலுற வடிக்கப்பட்டுள்ளார்கள். …………..குடமாடு கூத்தன்தன்னைக் கோகுலங்கள் தளராமல் குன்றமேந்திக் காத்தானை, எம்மானைக் கண்டுகொண்டேன் கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே என்று திருமங்கையாழ்வார் பாடிய கடல்மல்லைத் தலசயனப் பள்ளிகொண்ட பெருமாள் மிக அழகு. குன்றைக் குடையாக ஏந்திய கண்ணன், பால் கறக்கும் ஆயன், பானையுடன் பெண்டிர், சோமாஸ்கந்தர், யாளி மண்டபம் என்று கண்களையும் எண்ணத்தையும் பூரிக்கச் செய்யும் பணிநேர்த்தியை என்னவென்று சொல்ல.. ஒவ்வொரு தொகுதியிலும் மனதைக் கொள்ளைக் கொள்ளும் சிற்பங்கள். உளியைக் கொண்டு அற்புதங்கள் படைத்திருக்கிறார்கள் பல்லவச் சிற்பிகள். சரி..கரையோரக் கோயில்களின் அழகில் மயங்கிப் பயணிக்கத் தொடங்கிவிட்டோமே… இது மாமல்லபுரமா? மகாபலிபுரமா? அதற்கு, தர்மராஜ ரதம் என்றழைக்கப்படும் கோயிலுக்கு வரவேண்டும். தர்மராஜ ரதத்திற்கு அதை உருவாக்கியவர் வைத்த பெயர்தான் என்ன? மாமல்லைக் கோயில் தொகுதியில் வியக்கவைக்கும் சாதனைகள் புரிந்தவர் இரண்டாம் நரசிம்மவர்மரான இராஜசிம்மன் என்பதையும், தர்மராஜ ரதம் அவரால் உருவாக்கப்பட்டது என்பதையும் கட்டடக்கலை, கல்வெட்டு மற்றும் சிற்பச் சான்றுகளால் உறுதிசெய்துள்ளார் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தொல்காப்பியர் விருது பெற்ற வரலாற்றறிஞர் டாக்டர் இரா. கலைக்கோவன். 2004இல் வெளியிடப்பட்ட அவருடைய நூலான 'அத்யந்தகாமம்' இதை உலகிற்கு அறிவித்து 18 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. அன்னாரின் ஆய்வுகளால் நாம் அறிவது என்ன? குறிப்பாகக் கல்வெட்டுத் தகவல்களைப் பார்ப்போம். 'அத்யந்தகாமம்' என்பது என்ன? தர்மராஜ ரதத்தில் கிடைத்த 39 வடமொழிக் கல்வெட்டுக்களில் இரண்டு, 'அத்யந்தகாம பல்லவேசுவர கிருகம்' என்று அக்கோயிலை அடையாளப்படுத்துகின்றன. ஆக, தர்மராஜ ரதத்திற்கு அதை உருவாக்கிய பல்லவ அரசர் வைத்த பெயர் 'அத்யந்தகாம பல்லவேசுவர கிருகம்'. ஏனைய 37 கல்வெட்டுக்களும் அரச விருதுப் பெயர்களாய் அமைந்துள்ளன. ஶ்ரீ நரசிம்மன், புவனபாஜனன், ஶ்ரீமேகன், நயனமனோகரன், பராபரன், வாமன், ரணஜயம், அத்யந்தகாமன், மகாமல்லன் என்று விருதுப் பெயர்கள் சுட்டப்பட்டுள்ளன. இதனால் இக்கோயில் அத்யந்தகாமன் என்றும் மகாமல்லன் என்றும் சிறப்புப் பெயர்களையுடைய பல்லவ அரசரால் உருவாக்கப்பட்டது தெரிகிறது. எனில், மகாமல்லன் என்றும் விருதுப் பெயர்கொண்ட அத்யந்தகாமன் யார்? கடல் மாமல்லையில் தமிழகச் சிற்பக்கலைச் சாதனைகளைக் கல்லிலே உலகிற்கு 1300 ஆண்டுகளுக்குமுன் அறிவித்த மகாமல்லன் என்ற அந்தப் பல்லவர் யார்? கடற்கரைக் கோயிலையும் காஞ்சி கயிலாயநாதர் கோயிலையும் கட்டிய இரண்டாம் நரசிம்மவர்மரான இராஜசிம்மர்தான் மகாமல்லன் என்றும் அத்யந்தகாமன் என்றும் அழைக்கப்பட்டவர். தர்மராஜ ரதமென்னும் அத்யந்தகாம பல்லவேசுவர கிருகத்தை உருவாக்கியவர். 'இராஜசிம்மர் காலத்துக் கோயில்களான அதிரண சண்டேசுவரம், மல்லைக் கடற்கரைக் கோயில் வளாகம், காஞ்சி கயிலாயநாதர் கோயில் என்றறியப்படும் இராஜசிம்மேசுவரம் ஆகியவற்றிலும் பனைமலைக் குகைக்கோயிலிலும், அவர் வெட்டுவித்த வாயலூர் மற்றும் திருப்போரூர்க் கல்வெட்டுக்களிலும் இத்தகு விருதுப் பெயர்கள் பலவாக இடம்பெற்றுள்ளன', என்கிறார் டாக்டர் கலைக்கோவன். நம் ஆர்வத்துக்குரிய 'மகாமல்லன்' என்ற பெயர், இராஜசிம்மனின் வாயலூர் பொறிப்புகளிலும் காஞ்சிபுரம் இராஜசிம்மேசுவரத்திலும் வெட்டப்பட்டுள்ளது. 'அத்யந்தகாமன், ரணஜயம், மகாமல்லன் என்ற இம்மூன்று பெயர்களையும் தம்முடைய விருதுப் பெயர்களாகக் கொண்டவராக இராஜசிம்மனைத் தவிர வேறெந்தப் பல்லவ மன்னரையும் வரலாறு நமக்குக் காட்டவில்லை' என்று ஆணித்தரமாகத் தன் கட்டுரையொன்றில் கூறுகிறார் 'அத்யந்தகாமத்தின் ஆசிரியர். மாமல்லபுரத்தில் மாமல்லனைக் குறிக்கும் கல்வெட்டு, அத்யந்தகாமனின் கல்வெட்டு மட்டுமே. ஆக, தர்மராஜ ரதமென்று இன்று பொருத்தமின்றி அழைக்கப்படும் அத்யந்தகாம பல்லவேசுவர கிருகத்தை உருவாக்கி, அதில் தம் விருதுப் பெயரான 'மகாமல்லனையும்' கல்வெட்டாகப் பொறித்துச் சென்றுள்ளார் இராஜசிம்மர். இவ்வளவு சிறப்புமிகு சிற்பங்கள் அமைந்த, பல்லவர் மரபால் மாமல்லை என்று பெயர்பெற்றிருந்த துறைமுகச் சிற்பப் பட்டினத்திற்கு, ஒரு சிற்பம் இடம்பெற்றிருப்பதாலேயே வலிந்து பொருள்கொண்டு மகாபலிபுரமென்று பெயர் வழங்குவது சரியா? பெயரைக் கேட்டதும் பின்னணியைத் தேடும் ஆர்வமுடையோருக்கு- ● மாமல்லபுரம் மாமல்லனுடன் கூடிய பல்லவர் வரலாறைத் தேட வைக்கும்; ● பொருத்தமில்லா மகாபலிபுரமோ தமிழக வரலாறை மறந்து புராணக் கதைகளில் பாயவைக்கும். எல்லாம் இறைவன் செயலாக இருக்கலாம். யாரும் காணாத அந்த இறைவனுக்கும் வடிவம் தந்து செதுக்கி 1300 ஆண்டுகளுக்குப் பின்பும்… இன்றும் நம் கண்முன் காட்டும் கலைக்குச் சொந்தக்காரர்களான சிற்பிகளை மறக்கலாமா? அவர்களை வளர்த்த மாமன்னர்களின் சிறப்பைப் புறந்தள்ளலாமா? புறக்கணிக்கலாமா? அத்யந்தகாமத்தைப்போல, பற்பலக் கோயில்களில் கல்வெட்டுக்களாகவும் சிற்பங்களாகவும் நமக்குப் பல அரிய தகவல்களை விட்டுச் சென்றிருக்கிறார்கள் நம் முன்னோர். அது அவர்களுடைய வரலாறு மட்டுமல்ல; நம்முடைய வரலாறு என்பதை நாம் உணர்வது எப்போது? யுனெஸ்கோ இணையதளம் முதல் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் வரை, மாமல்லபுரத்தை மகாபலிபுரம் என்று பலரும் பிறழ்ந்தே அழைக்கின்றனர். தமிழையும் தமிழக வரலாறையும் பேணவேண்டிய அரசுசார் அலுவலகங்கள் இந்தப் பிழையை முதலில் திருத்திக்கொள்ள வேண்டும். எனவே, வரலாறு அறிந்த, உணர்ந்த… நாம் அனைவரும் மாமல்லபுரம் என்றே இனி அழைப்போம். |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |