http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 174
இதழ் 174 [ ஜனவரி 2024 ] இந்த இதழில்.. In this Issue.. |
கல்வெட்டுகள் இக்கோயிலில் இருந்து படியெடுக்கப்பட்டுள்ள எண்பத்து மூன்று கல்வெட்டுகளுள் நாற்பத்தொன்பதின் பாடங்கள் தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி 22இல் வெளியாகியுள்ளன. முப்பத்து நான்கு கல்வெட்டுகளின் பாடச் சுருக்கங்கள் 1937-38ஆம் ஆண்டுக் கல்வெட்டறிக்கையில் உள்ளன. அவற்றுள் நாற்பத்தெட்டுக் கல்வெட்டுகள் சோழர் காலத்தவை. முதலாம் இராஜராஜரிலிருந்து மூன்றாம் இராஜராஜர் ஆட்சிக்காலம் வரையிலான இக்கல்வெட்டுகளுள் ஒன்று இராஜமகேந்திரன் ஆட்சிக்காலத்திலும் மற்றொன்று சோழக் கேரள தேவரின் மூன்றாம் ஆட்சியாண்டிலும் பதிவாகியுள்ளன. நான்கு கல்வெட்டுகளே இரண்டாம் பாண்டியப் பேரரசுக் காலத்தவை. பன்னிரண்டு கல்வெட்டுகள் விஜயநகர அரசர்களின் ஆட்சிக் காலத்தே வெட்டப்பட்டுள்ளன. ஒரு கல்வெட்டு நாயக்கர் காலத்திலும் இரண்டு கல்வெட்டுகள் கோப்பெருஞ்சிங்கரின் முப்பதாம் ஆட்சியாண்டிலும் பதிவாகியுள்ளன. பதினாறு கல்வெட்டுகள் மன்னர் பெயரின்றிக் காணப்படுகின்றன. முற்சோழர் கல்வெட்டுகளில் ஊருடைய மகாதேவர் என்றழைக்கப்படும் இறைவன் பின்னாளில் ஊர்பாகம் கொண்டருளிய நாயனாராகப் பெயர் மாற்றம் பெறுகிறார். இறையாநரையூர் என்று பெரும்பாலான கல்வெட்டுகளில் குறிப்பிடப்படும் இவ்வூர் மிகப் பிற்பட்ட காலத்திலேயே எலவானசூர் எனும் பெயரை அடைந்துள்ளது. மலாடான ஜனநாத வளநாட்டுப் பரனூர்க் கூற்றத்து பிரமதேயமாகக் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படும் இறையாநரையூர் சோழக்கேரளச் சதுர்வேதிமங்கலம் என்றும் அறியப்பட்டது. வளநாடு, நாடு, ஊர் ஜயங்கொண்ட சோழமண்டலம், விருதராஜபயங்கர வளநாடு இவற்றுடன் செம்பூர்க் கோட்டம், மணவிற்கோட்டம், கிழார்க் கூற்றம், வடநரையூர்க் கூற்றம், பரவைநாடு, உவற்றூர்நாடு, ஆவூர்நாடு, மேற்காநாடு, இருங்கோளப்பாடி நாடு, திருமுனைப்பாடி நாடு எனும் வருவாய்ப் பிரிவுகளும் கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளன. எழுபத்து ஐந்து ஊர்ப்பெயர்களைத் தரும் இக்கல்வெட்டுகளில் குடி என்ற பின்னொட்டுடன் முடியும் ஊர்ப்பெயர் ஒன்றேனும் அமையவில்லை. மங்கலம் என்ற பெயரில் இருந்த ஒன்பது ஊர்களுள்2 இரண்டு, சதுர்வேதி மங்கலங்களாக அமைந்தன. இருபத்தொன்பது ஊர்கள் ஊர் என்ற பின்னொட்டுக் கொண்டிருந்தன.3 கல்யாணபுரம், சோழபாண்டியபுரம் எனும் இரண்டு ஊர்களும் வணிகர் குடியிருப்புகளைப் பெற்றிருந்தன. இரண்டு ஊர்கள் நல்லூர் எனும் பின்னொட்டுக் கொள்ள,4 முப்பத்து மூன்று ஊர்கள் பல்வேறு பின்னொட்டுக்களைப் பெற்றிருந்தன.5 அவற்றுள் பருந்தல், மலையவிச்சாதிரநல்லூர் என்றும் அறியப்பட்டது. அரச ஆணைகள் அரச ஆணைகளாக உள்ள கல்வெட்டுகளில் கோப்பெருஞ்சிங்கரின் முப்பதாம் ஆட்சியாண்டிற்குரியவை இரண்டு.6 வாண கோவரையர் வன்நெஞ்ச நாயனார், பொன்பரப்பின வாணகோவரையர் ஆகிய இருவர்தம் நிலக்கொடைகளை இறையிலியாக்கி மன்னர் இட்ட உத்தரவுகளில் திருமந்திர ஓலைகளாக விழுப்பாதராயரும் பொன்பரப்பின வேளாரும் வெளிப்படுகின்றனர். கேள்வி முதலிகளாகச் சிங்களராயர், இராஜவீரராயர், இராஜேந்திரசோழ பிரம்மமாராயர், மதுராந்தக பிரம்மமாராயர், குருகுலராயர் ஆகியோர் கையெழுத்திட்டுள்ள இத்திரு முகங்களில் புரவுவரியாரும் எழுத்திட்டுள்ளனர். முதற் குலோத்துங்கரின் முப்பத்தைந்தாம் ஆட்சியாண்டில் வெளியான அரச ஆணை புரவுவரித் திணைக்கள நாயகம், திணைக்கள முகவெட்டிகள் ஆகியோர் பெயர்களைத் தருகின்றது.7 விக்கிரமசோழரின் நான்காம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு மன்னர் முடிகொண்ட சோழபுர அரண்மனையின் உள்ளாலை ஆட்டத்து வெளி மேலை மண்டபமான இராஜேந்திர சோழனில் சேதிராஜன் எனும் இருக்கையில் அமர்ந்திருந்தபோது வெளியிட்ட அரச ஆணையாக அமைந்துள்ளது.8 இவ்வாணையிலும் புரவுவரித் திணைக்களம் சார்ந்த நாயகங்கள், முகவெட்டிகள் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர். இரண்டாம் இராஜராஜர் ஆயிரத்தளி அரண்மனை உள்ளாலை ஆட்டத்து வெளியில் பல்லவராயன் மண்டபத்தே இருந்தபோது கிளியூர் மலையமான் நீரேற்றான் மலையகுலராயன் பரிந்துரையை ஏற்று நான்கு ஊர் நிலங்களை இணைத்து இராஜராஜமங்கலம் எனப் பெயரிட்டு தேவதான இறையிலியாகக் கோயில் வழிபாட்டிற்கு வழங்கியதைச் சுட்டும் அரசஆணை மன்னரின் பதின்மூன்றாம் ஆட்சியாண்டில் பிறப்பிக்கப்பட்டதாகும். இவ்வாணையில் ஸ்ரீகரணநாயகங்கள் கையெழுத்திட்டுள்ளனர்.9 இவ்வூர்க் கல்வெட்டுகளில் மலையமான்கள், வாணகோவரையர்கள், காடவராயர்கள் முதலிய சிற்றரசர்கள் பரவலாக இடம்பெற்றுள்ளனர். கிளியூர் மலையமானுக்கும் பொன்பரப்பின வாணகோவரையனுக்கும் இடையில் நிகழ்ந்த ஒப்பந்தம் இருவர்தம் நாட்டு எல்லைகளையும் தீர்மானிப்பதுடன், அரச காரியங்களில் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு நல்க அவர்கள் முடிவெடுத்தமையையும் தெரிவிக்கிறது.10 வரிகள் பல கல்வெட்டுகள் அந்நாளில் வழக்கில் இருந்த வரிகள், வரி பெறும் முறைகள் பற்றிப் பேசுகின்றன. கடமை, குடிமை, அந்தராயம், அதரவிநியோகம், கார்த்திகைப் பச்சை, சந்திவிக்கிரகப்பட்டி, தெண்டம், குற்றத்தெண்டம், தறியிறை, தட்டார் பாட்டம், செட்டிறை, செக்கிறை, ஏரிமீன்பாட்டம், மாவடை, வெட்டிமுட்டையாள், நல்லெருது, நற்பசு, சாற்கல்லாயம், கருவிப்பணம், திரிகைஆயம், ஆயம், வழிச்சாரி, மாதரிகம், தலையாரிக்கம், செக்கோட்டு, சோடி, சூல வரி முதலிய வரிகள் பெறப்பட்டன. கிராம பிடாரனாகப் பொறுப்பேற்ற கைக்கோள முதலி காங்கேயராயர் இறையிலித் தறி கொள்ள, சூரப்ப நாயக்கரின் பிரதானி வெங்கப்பையர் அனுமதி அளித்தமையை ஒரு கல்வெட்டு தெரிவிக்கிறது.11 திரிபுராரி தேவரின் ஆணைப்படி நாகதே அன்னகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலம் பழைய முறைப்படிப் பகுக்கப்பட்டு வரிகள் பெறுவது எளிதாக்கப்பட்டது.12 கிருஷ்ணதேவராயர் தம்முடைய திக்விஜயத்தை முன்னிட்டு வரி விலக்களித்த கோயில் நிலங்களில் இறையாநறையூர் நிலங்களும் அடக்கம். அரச நாராயணன் ஏழிசை மோகனான ஜனநாத கச்சியராயன் இறைவனின் சாத்துகைகளுக்காகச் செட்டியார், வாணியர், பணிசெய் மக்கள் ஆகியோர் இறுத்து வந்த கீழிறையான அந்தராயம், தறியிறை, தட்டார்பாட்டம் ஆகிய வற்றைக் கோயில் பண்டாரத்திற்கு அளித்தார். இவ்வரிகளைத் தண்டும் பொறுப்பு கோயில் ஸ்ரீகாரியத்திடம் ஒப்புவிக்கப்பட்டது.13 கிளியூர் மலையமான் புத்தூரிலிருந்து தாம் பெற்று வந்த கடமை, பாடிகாவல் இவற்றையும் பணிசெய் மக்கள், உழுகுடிகள் செலுத்தி வந்த ஊர்த் தறியிறை, தட்டார் பாட்டம் இவற்றையும் கோயில் நிலங்களில் இருந்து பெறப்பட்ட வெட்டி முட்டையாள், நஞ்சைக் கடமை ஆகியவற்றையும் ஊர் சபை பெற்று இறைவனின் அமுதுபடி, மேற்பூச்சு இவற்றிற்காகப் பண்டாரத்தில் சேர்க்கவேண்டுமென உத்தரவிட்டார்.14 ஊர்க் கணக்கர்கள் இளமை வேங்கடமான பண்டிதப்பிரியன், இளமை கருமாணிக்கமான பட்டபிரியன் ஆகியோர் வரிகட்டாமல் ஓடிப்போனமையால் அவ்வரியைக் கட்டுவதற்காக அவர்களுக்குரிய நிலம், கிணறு, மனை ஆகியவற்றை சபை கோயிலுக்கு விற்றது. அதன் வழி வந்த பொருள் அரையன் பொன்னம்பலக் கூத்தன் எழுந்தருளுவித்த பள்ளியறை நம்பிராட்டிக்கு வழிபாடு, படையல் இவற்றிற்காக அளிக்கப்பட்டது.15 வேளாண்மை, நீர்ப்பாசனம், அளவைகள் வேளாண் நிலத்துண்டுகள் பல்வேறு பெயர்களால் அறியப்பட்டன. நாவல் குண்டு, வேப்பங்குண்டு, புளியங்குண்டு, புளியஞ்செய், காஞ்சிரஞ்செய், இலுப்பஞ்செய் என விளைவு சார்ந்தும் குளச்செய், ஏரிச்செய் எனப் பாசனம் சார்ந்தும் கடம்பன் தடி, நீலிப்பெருஞ்செய் எனத் தனியர் பெயர் கொண்டும் நிலங்கள் அமைந்தன. குளம், ஏரி, கிணறு இவை வாய்க்கால், வதிகள் வழி நிலங்களுக்கு நீரளித்தன. நல்லரைசூர்க் குளம், பெருங்குளம், வானவன்மாதேவிப் பேரேரி, கேரளாந்தகப் பெரிய ஏரி இவற்றுடன் நின்மலன்கால், ஏரிப்பெருங்கால், ஏற்ற வாய்க்கால், பெருவாய்க்கால், உத்தமசோழ வதி எனும் நீர்வழிகளும் கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளன. கிணற்று நீர் ஏற்றம் வைத்து இறைக்கப்பட்டது. ஏரி நீர் உரிமை குறித்து ஒரு கல்வெட்டுப் பேசுகிறது.16 ஊர் பாகம் கொண்டான் மரக்கால், பொத்தகக் கோல் என்பன அளவைகளாகப் பயன்பட்டன. கோயிற் கட்டுமானம் ஆளப்பிறந்தான் ஏழிசை மோகனான குலோத்துங்க சோழக் காடவராயர் ஏழிசை மோகன் திருமண்டபம், திருமாளிகை எழுப்பித் திருப்பணிக்கும் கொடையளித்தார். வெங்கப்ப இலிங்கராஜய்யன் கோபுரம், கோயில் திருப்பணிகளுக்குக் கொடையளித்தார். கூடலூர் ஆளப்பிறந்தான் இராஜகம்பீர காடவராயனான அழகிய பல்லவன் சாடும் பெருமாள் கோயில் வெளிக்கோபுரத்தை எழுப்பினார். கோபுரத்தின் முன் திருமாளிகை செய்தவராகக் கிளியூர் மலையமான் சூரியன் நீரேற்றான் எதிரிகள் நாயனான இராஜராஜ மலையகுலராயரை ஒரு கல்வெட்டுச் சுட்டுகிறது.17 பாண்டிய நாட்டு நாள்குறிச்சியைச் சேர்ந்த திருமாலிருஞ்சோலை நின்றான் மழவராயன் பிள்ளை மீனன் இறைவன் வீதி உலாவுக்குத் தடையாக இருந்த பாறையை அகற்றித் திருவீதி செய்தான். வழிபாடு, படையல், விழா பொன்னின் சிவந்தான் திருமுடிக்காரி கோயிலில் தாம் எழுந்தருளுவித்த சொக்கநாயினாருக்கு வழிபாடு செய்யவும் படையலிடவும் வாய்ப்பாக வேங்கைபாடி எனும் ஊரைக் கொடையளித்தார். பட்டாலகன் சிந்தாமணி இறைவன் வழிபாட்டிற்கும் படையலுக்குமாக நிலமளித்தார். முனையதரையன் இராஜராஜ காடவராயன் தாம் பெற்ற வரியினங்களுள் சிலவற்றை இறைவனுக்கான அமுதுபடி, மேற்பூச்சு, பரிசட்டம், விளக்கு, திருநாள்படிகள் இவற்றிற்காகக் கொடையளித்தார். இறைவனின் காலை முழுக்காட்டலுக்கு 36 பொன், 5 பணம் தந்த பொம்மு நாயக்கர் செட்டி ஏந்தல் தாங்கலில் நிலமும் அளித்தார். இக்கொடை கிருஷ்ணப்ப நாயக்கருக்குப் புண்ணியமாகச் செய்யப்பட்டது. மலாடுடையார் பராந்தகன் யாதவ வீமனான உத்தமசோழ மலாடுடையார் இறைவனுக்கு நள்ளிரவுத் திருஅமுது, அக்காரடலைத் திருவமுது அளிக்க வாய்ப்பாக 102 பசுக்களும் நிலமும் தந்தார். வீரராஜேந்திரபுரத்து திருத்தான்தோன்றீசுவரத்துத் தேவரடியாள் இராஜசுந்தரி இக்கோயில் இறைவனின் சிறுகாலைப் போனகத்திற்கு நல்லரைசூரில் நிலமளித்ததுடன் 45 கலம் நெல்லும் முதலாகத் தந்தார்.18 கோயிலில் இருந்த அமரபுயங்க தேவருக்கு மூன்று சந்திக்கும் திருவமுது அளிக்க வாய்ப்பாக உத்தமசோழ மலாடுடையார் அளித்த 120 காசுக்கு சபை நிலம் வாங்கிக் கோயிலுக்கு அளித்தது. பால், நெய் இவற்றிற்காக 102 பசுக்களும் வழங்கப் பட்டன. இறைவனின் ஆனைந்து முழுக்காட்டிற்காகக் கச்சியராயர் மகன் காளத்திநாதன் ஐந்து பசுக்களை அளித்தார். பள்ளியறை ஆளுடையார் ஞாயிறுகளில் புறம்பே எழுந்தருளி மாணிக்கவாசகரின் சாழல் கேட்டு, அமுதுண்டு, கோயில் சூழ எழுந்தருளும் செலவினங்களுக்காக ஒரு கலம் மூன்று குறுணி நெல் ஒதுக்கப்பட்டது. இதைப் பெறத் திருநாமத்துக்காணியாக நிலம் வாங்கப்பட்டது.19 இறைக்கோயில் படையல், வழிபாடு இவற்றிற்காகச் சூரியன் நீரேற்றான் பணம் கொடையளித்தார். அரசரின் நலம் கருதி திருமலைதேவ மகாராயர் கட்டளை ஏற்று போகைய்ய தேவ மகாராயர் போகீசுவரமுடைய தம்பிரானார் வழிபாட்டிற்குச் சீயமங்கலத்தைக் கொடையாகத் தந்தார். திருக்கோயிலூர் நரசிங்கமுடையார் கோயில் வழிபாட்டிற்காகப் பன்னிரண்டு பற்று நாட்டவரால் குமுளி வரிகளாக 36 பொன், குதிரைக் காணிக்கை நீக்கிய ஐந்தே கால் பணம் இவை போகைய்ய தேவ மகாராயர் முன்னிலையில் கச்சியராயரால் அளிக்கப்பட்டன. பழங்கூர்ப் பற்று நாட்டுக் கணக்கு புழுவினைப் பெருமாள் இக்கல்வெட்டின் வழி வெளிப்படுகிறார். வென்று மாலையிட்டார் கலியுகராமத் தொண்டைமானார் பரிந்துரைக்க, ஆனந்தத் தாண்டவப் பெருமாள் தொண்டைமானார் கோயில் தேர்த் திருவிழாச் செலவினங்களுக்காக வீரமங்கலத்தைக் கொடையாகத் தந்தார். பெரிய திருநாளில் ஆறாம் நாள் இறைவன் தோப்பில் எழுந்தருளும் நிகழ்ச்சிக்குரிய செலவினங்களுக்காகவும் தோப்புப் பணி செய்வார் வாழ்நாள் ஊதியமாகவும் வேலூர் பொம்முநாயக்கர் கிருஷ்ணப்ப நாயக்கருக்குப் புண்ணியமாகப் பிச்சாண்டாங்குறிச்சித் தாங்கலை சர்வமானியமாக அளித்தார். இறைவனின் பங்குனி வேட்டை, புரட்டாசி வேட்டை இவற்றிற்கும் இவற்றிற்கான தீர்த்தங்களுக்கும் மார்கழித் திருவாதிரை தீர்த்தத்திற்கும் தாழங்குட்டத் தீர்த்த மண்டபத்திலே இறைவன் எழுந்தருளி அமுது செய்ய சூரநாயக்கரான நானூற்றுவப் பல்லவரையர் நிலமளித்தார். கிளியூர் மலையமான் பெரியுடையார் சூரியதேவன் சோழேந்திர சிங்கமலையகுலராயன் பங்குனித் திருநாள் எழுச்சிப்படிக்குக் காப்புநாண் சாத்த இறைவனுக்கு அரைக்கால் பொன்னும் இறைவிக்குப் பன்னிரண்டு பொன்னும் அளித்தார். இறைவனுக்கான இரவுச்சந்தி அமுது, கறியமுது, போனகம், விளக்கெண்ணெய், செங்கழுநீர்ப்பூ 4,000, அறஞ்செய்ய அரிசி, உப்பு, எள், ஐந்து அந்தணர்களுக்குச் சோறு, சைவாச் சாரியாருக்கு உணவு, இறைவன் ஊருக்கு எழுந்தருளும்போது உணவு, கருப்புக்கட்டி முப்பது பலம், அமாவாசை தோறும் நிவந்தம் இவை அளிக்க வாய்ப்பாகப் புலியுண்ணிப்பாடியில் நிலம் அளிக்கப்பட்டது.20 நாவலூர் வணிகர் ஆட்கொண்ட தேவன் கொண்டப் பிள்ளை பத்தாம் திருநாளில் இறைவன் திருவனந்தல் எழுந்தருளி ஆஸ்தான மண்டபத்து இருந்து, தீர்த்தம் தந்து, சாயற்பொழுது உலாவிற்கு ஆடியருள அமுதுபடி, சாத்துபடி, மேற்பூச்சு, பனிநீர், கற்பூரம், கத்தூரி, சாந்து, குங்குமம், செங்கழு நீர் வெள்ளைப்பூ இவையும் திருமாளிகை எழுந்தருளித் திருவுலாவர விளக்கெண்ணெயும் அளிக்க வாய்ப்பாக ஒரு நாளுக்குப் பத்துப் பணம் என நான்கு நாட்களுக்கு நாற்பது பணம் தந்தார். அத்துடன், சபையாரில் எடுத்தழகியாரான சோமிதேவபட்டர் வரிகட்ட முடியாது ஓடிப்போக, அவருக்குப் புணையாக நின்றவர் நிலத்தை விற்க, கொண்டப்பிள்ளை அந்நிலத்தை வாங்கித் திருநாமத்துக்காணியாகக் கோயிலுக்கு அளித்தார்.21 ஆளப்பிறந்தார் மோகனான நாலுதிக்கும் வென்றான் இராஜராஜக் காடவராயன் புராட்டாசித் திருவோண விழாவிற்கு தமக்குரிய மலையவிச்சாதிரநல்லூர் சார்ந்த பாடிகாவல், தறியிறை, தட்டார் பாட்டம், அந்தராயம், அதரவிநியோகம் ஆகியவற்றைத் தந்தார். இறைவனுக்கு நந்தவனம் அமைக்க நிலக்கொடை வழங்கப்பட்டது. அஸ்திரதேவருக்கு நந்தவனப் புறமாகவும் பூக்கட்டுவானுக்கு வாழ்வூதியமாகவும் வசிஷ்டன் திருவரங்கன் நிலமளித்தார். நந்தவனத்தைத் திருத்தவும் பூப்பறிக்கவும் அடியாள் வெள்ளாளன் தாய் திருவெண்காடன் பணியமர்த்தப்பட்டார். அவர் நிலத்தில் விளைந்த கீழ்ப்பயிரில் நாள்தோறும் கோயிலுக்குக் கறியமுது அளித்தார். பெரும்பூசை, திருப்பணி இவற்றிற்காகச் செம்பியன்மாதேவி ஊரின் வருவாய் ஒதுக்கப்பட்டது. விநாயகர், கூத்தாடும் தேவர், பிராட்டி, சேத்ரபாலர் திருமேனிகளுக்குத் தூணி அரிசி, இரு தூணிப்பதக்கு நெல், நானாழி நெய், பாக்கு 200, வெற்றிலை 100 பற்று, கறியமுது இரண்டு நிறை, தயிர், திருக்கொடிச் சாந்து, உத்திரம் கொண்டு சிறுகாலைச் சந்தி அமைக்கக் கோயில் சிவஅந்தணர்கள் ஒப்பினர். தாங்கள் பெற்றுக் கொண்ட பற்றுகளுக்கான உள்வரியாக அரைக்காலுக்கு உட்பட்ட பொன்னும் திரமம் ஒன்றும் வழங்கவும் அவர்கள் இசைந்தனர்.22 விளக்குக் கொடை கோயிலில் சந்திவிளக்கொன்று எரிக்க வெள்ளை வாரண நம்பி 22 காசுகள் அளித்தார். நந்தாவிளக்குகள் எரிக்கத் திருக்கோயிலூர் வாணியரும் பெண்ணாகட வாணியரும் காசுகள் தந்தனர். இராஜநாராயண நரசிங்க முனையதரையன் நந்தாவிளக்கொன்று ஏற்ற நிலமளித்தார். துணையாழ்வான் கைய்உகிராளி சந்திவிளக்கேற்ற நூற்றிருபது காசுகள் தந்தார். வசிஷ்டன் ஸ்ரீராகவன் பரமேசுவரன் சந்திவிளக்கொன்று எரிக்கக் கோயில் தானபதியிடம் 28 காசுகள் அளித்தார். கிருஷ்ண பட்டன் மனையாள் மாசறுசோதிசானி விளக்கொன்று ஏற்ற அறுபது காசுகள் அளித்தார். திருமலை மேல் இரவில் விளக்கேற்ற மங்கலங்கிழான் ஐம்பொழிலி இராமன் 16 காசுகள் அளித்தார். அதற்கான மாத வட்டி 8 மாக் காசு கொண்டு விளக்கேற்ற ஒப்பினார் கருமாணிக்கமான பரசமய கோளரிபட்டன். காளத்திநாதர் இரண்டு நந்தா விளக்குகள் ஏற்றத் தம் நஞ்சை நிலத்தை இறையிலித் திருநாமத் துக்காணியாகக் கோயிலுக்களித்தார். நறையூர்க் கிழவர்கள் சோமன் தோன்றியும் சோமன் உடையானும் திருமலை மேல் இரண்டு சந்திவிளக்குகள் ஏற்ற முப்பது காசுகள் அளித்தனர். அதைப் பெற்றுக்கொண்ட கோயில் பட்டர்கள் நால்வர் அத்தொகைக்கான மாத வட்டி முக்கால் காசு கொண்டு விளக்கேற்ற ஒப்பினர். திருமலை மேல் மண்டபத்தில் இரவுச்சந்தியில் விளக்கு எரிக்க வாணியன் மூவாயிரத்தொருவன் சோலைப் பிரான் 15 காசுகள் அளிக்க, அதன் வழி மாத வட்டி காலே அரைக்கால் காசு கொண்டு விளக்கேற்றப்பட்டது. திருவேங்கடத்தின் மனைவி காரைக்கால் அம்மையும் வணிகர் அவையம்புக்கான் நாயக்கரும் தேவரடியாள் துக்கை நீரேற்றாளான விக்கிரமன் குலமாணிக்கமும் மலை மேல் இரவுச்சந்தி விளக்கெரிக்க ஆளுக்கு 15 காசுகள் அளித்தனர்.23 சிந்தைக்கினியான் தம் தந்தை புகழன் பெரியானுக்கு நன்றாக இரண்டு சந்திகளில் விளக்கேற்றுமாறு 16 காசுகள் தந்தார். வணிகன் சோறன் இடங்கொண்டானுக்கு நன்றாக அவர் மகன் இடங்கொண்டான் வையம்புக்கான் இக்கோயிலில் இரவுச்சந்தி விளக்கேற்ற பொற்கோயில் பட்டனிடம் 16 காசுகள் தந்தார். திருவாலக்கோயில் தெற்றியான சிற்றம்பல மூவேந்த வேளான் இரவுச்சந்தி விளக்கேற்ற ஒன்றே மூன்று மா காசு தந்தார். செம்போதி வில்லவதரையரின் மகன் மாணிக்க நாயனார் காங்கேயராயன் நந்தாவிளக்கொன்று ஏற்றுவதற்காக நிலமளித்தார். சிக்காட்டுப் பற்றில் சீதேவி ஊரில் வாணாதராயன் ஏந்தலில் குடிநீங்கா விளக்குப்புற இறையிலியாக நிலத்துண்டு ஒன்றைக் கொப்பண்ண உடையார் கடிதப்படி திருமுடிக்காரி கோயிலுக்கு அளித்தார். இரவில் பன்றி வேட்டையின்போது பள்ளி படியன் தந்தரன் மகன் தில்லையான ஆறாயிரப் போயன் தவறுதலாக அம்பு பட்டு இறந்தமையால் அவன் நினைவாக முடிகொண்டான் காரியான வீரப்போயன் கோயிலில் நந்தாவிளக்கேற்ற 32 பசுக்கள் அளித்தார்.24 உய்யக்கொண்டார் தெரிந்த திருமஞ்சணத்தார் வேளக் கைக்கோளன் கூத்தன் வீமனான செயங்கொண்ட சோழ மாராயன் உச்சிப்போதில் கோயில் இறைவனை வழிபட்ட அபூர்விக்குச் சட்டிச்சோறு, பொரிக்கறி அளிக்க வாய்ப்பாக ஏரி வாய்ச்செய், அதன் மேலைச் செய் இரண்டையும் அளித்தார். சிறப்புச் செய்திகள் இரண்டு சிற்றூர்களை இணைத்துத் தம் சகலையின் நினைவாகத் திருமலைராஜபுரம் எனப் பெயர் சூட்டிய அச்சுத தேவன் அவ்வூரை இறையாநரையூர் வரதராஜ சரசுவதி தீட்சிதருக்கு அளித்தார்.25 கோயில் தேவரடியாளின் ஆடலுக்கும் பாடலுக்கும் ஊதியமாக அரும்புலிப்பாடியான இராஜராஜ மங்கலம் வழங்கப்பட்டது.26 இறைசைப் புராணம் செய்தமைக்காகத் திருவண்ணாமலை மெய்கண்ட சந்தானத்து சத்யஞான தர்ஜனிகளின் சீடரான திருமலை நயினார் சந்திரசேகரருக்கு ஆனந்தத் தாண்டவன் திருவீதியில் நிலமும் மனையும் வழங்கப்பட்டன.27 கோயில் பாரசைவர்களுக்குப் பாண்டிய, சோழ, மகதை மண்டலப் பாரசைவர்கள் அனுபவித்து வந்த மரியாதைகள் தானத்தாரால் வழங்கப்பட்டன.28 அஞ்சு சாதிப் பஞ்சாளத்தார் ஊர் விலகியதால் பன்னிரண்டு பற்று நாட்டார் இராயசம் திருமலையரிடமும் கிருஷ்ணப்ப மழவராயரிடமும் செஞ்சி, படைவீடு, திருவண்ணாமலை முதலிய இடங்களில் வழங்கப்படும் உரிமைகளை இறையாநரையூர்ப் பஞ்சாளத்தாருக்கு வழங்க ஒப்பினர்.29 சந்திரகிரகணத்தன்று காவிரிக் கரையிலுள்ள தில்லைஸ்தானத்தில் தங்கியிருந்த கிருஷ்ணதேவராயரின் அதிகாரி மல்லப்ப நாயக்கரின் மகன் திம்மப்ப நாயக்கர் இறையாநரையூர்க் கோயிலுக்குச் செம்பியன் மாதேவி ஊரை மீட்டளித்தார். தம் மன்னர் நலத்திற்காக அவர் இப்பணியைச் செய்ததாகக் கூறும் கல்வெட்டு வழுதிலம்பட்டு உசாவடியையும் கெடிலம் நதியையும் குறிப்பிடுகிறது.30 அது போலவே வாசல் மல்லப்ப நாயக்கரின் நான்கு மகன்களின் நலத்திற்காகப் பசவநாயக்கர் மகன் இராமய்யரால் சூற்றியன்குறிச்சி கிராமம் கோயிலுக்கு மீட்டளிக்கப்பட்டுப் பின் பண்டாரவாடையாக மாற்றப்பட்டது.31 முதல் இராஜேந்திரர் கால அரசு அதிகாரி கிழவன் சதுரனான வானவன் மூவேந்த வேளார் கோயிலுக்கு 30 காசுகள் முதலாக அளித்தார். அதன் ஆண்டு வட்டியாக 6 காசுகள் கிடைத்தது. பத்தாண்டு வட்டி கொண்டு இறைவன் ஏறி வலஞ்செய்ய ஐந்திரம் (யானை) அமைக்கவும் மண்டபங்களுக்குச் சாந்திடும் பணி மேற்கொள்ளவும் சாலையிடவும் ஒப்புதலானது.32 மிலாடு இராமதேவன் பட்டாலகன், உத்தமசோழ மலாடுடையான் ஆகியோரால் அமைக்கப்பட்ட இரண்டு சதுர்வேதி மங்கலங்கள் உத்தமசோழரின் பதினைந்தாம் ஆட்சியாண்டில் ஒன்றிணைக்கப்பட்டன. கோச்சாத்தன் காமனின் மனையாள் தன் மகள் மீது கோலொன்றை எறிய, அது தவறி மிண்டன் காமன் மகள் மேல் பட்டு அப்பெண் இருபது நாட்களில் இறந்தாள். 'கை பிழை பாடு' என இச்செயல் கருதப்பட்டு காமன் மனைவியைக் கோயிலில் நந்தாவிளக்கொன்று ஏற்ற நாட்டவர் உத்தரவிட்டனர். அதன்படி காமன் மனைவி கோயிலுக்கு 32 பசுக்களை அளித்தார்.33 பதின்மூன்றாம் நூற்றாண்டளவில் இறையாநரையூரிலும் கோயிலிலும் பாடிகாவல் செய்தவர்களாக ஊர் பாகம் கொண்ட பேரையன், நானூற்றுவன் பேரையன் ஆகிய இருவர் பெயர்களையும் ஒரு கல்வெட்டு வெளிப்படுத்துகிறது.34 பொ. கா. 1429ல் கோயில் பெரிய மண்டபத்தில் சபையார், தானத்தார் முன்னிலையில் வலங்கை, இடங்கை வகுப்பினர் கூடினர். நாச்சியார் திருக்கோயில் கட்டளைகளுக்கு இம்மண்டபத்தார் செய்யும் காரியங்கள் சீரமைக்கப்பட்டன. கைக்கோளர் நூல்ஆயம் தறிக்கு ஒன்றரைப் பணமாகவும் பறைத்தறிக்கு முக்கால் பணமாகவும் திட்டமிடப்பட்டது. பல சீரமைப்புகளை முன் வைக்கும் இக்கல்வெட்டால் இறையாநரையூரின் சமூக, பொருளாதார வரலாறு வெளிச்சமாகிறது.35 இரண்டாம் தேவராயர் காலத்தில் வலங்கை, இடங்கைப் பயிராளர்களிடமிருந்து வலிந்து பெறப்பட்ட காணிக்கையைத் தரமாட்டாது அவர்கள் ஓட, நிலங்கள் விளைவிழக்க, கோயில்கள் வழிபாடின்றி நலிந்தன. அரசர் செவிக்குச் செய்தி வர, அண்ணப்ப உடையார் வழி இனவரி, இடங்கைவரி பெறவேண்டாம் எனத் தீர்வு பிறந்தது. இத்தீர்வை அனைத்துக் கோயில்களிலும் கல்வெட்டாக்க உத்தரவிட்டும் இறையாநரையூர்க் கோயிலில் அது நிகழாமையின் மக்கள் நாகராஜ உடையாருக்கு விண்ணப்பித்துக் கல்வெட்டிக் கொண்டனர். இக்கல்வெட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள, 'மனித்தர் உள்ளம் செத்து' என்னும் தொடர் உள்ளத்தை உருக்குவதாக உள்ளது.36 பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த கோனேரிதேவ மகாராயர் காலத்தில் கச்சி கண்ணப்பராயன் இறைசை பச்சையன் நம்பியார் சூற்றியன்குறிச்சியைக் கோயிலுக்களித்தார். பராந்தகன் தாமோதர பட்டனான பாண்டவ தூதன் தம் படையெடுப்பைப் பற்றிப் பாடியுள்ள செய்யுள் கல்வெட்டாகியுள்ளது. 'விதியார் எழுத்தை வெற்றெழுத்தாக்கி தெவ்வேந்தர் தங்கள் பதி கொண்டு மதியால் வளங்கொண்டான் மறையவர் கோன்.'37 அது போலவே குன்றை சோமாசி மாதவனின் சிறப்புகள் குறித்த பாடலொன்றும் இங்குள்ளது.38 இராஜராஜ மலையகுலராயன் நீரேற்ற பெருமாளான எதிரிகள் நாயனின் வேளைக்காரப் படையைச் சேர்ந்த வீரர்கள் சிலர் (திரிகை உடையான், தேவப்பிள்ளை, திருமுண்டமழகியார்) நாயன் மறைவுக்குப் பின் தாங்கள் உயிர் வாழோம் எனச் சூளுரைத்தமையைச் சில கல்வெட்டுகள் பகிர்ந்துகொள்கின்றன.39 மற்றொரு கல்வெட்டு மலையராயனின் வேளைக்காரி தேவப்பெருமாளின் சூளுரையாக அமைந்துள்ளது. எதிரிகள் நாயனுக்குப் பிறகு தாம் உயிர்வாழ நேரின் அவருடைய பெண்டிருக்கு நீரும் சோறும் தந்து அவர்கள் உண்ட எச்சிலைத் தாம் உண்ணுவதாகவும் தாம் இறவாது வாழின் காண்பார் தம்மைக் கொல்லும்படியாகவும் நெருப்பில் இடும்படியாகவும் வேண்டும் இவ்வம்மை, அவ்வாறு செய்யாதவர் தம் மனைவியை நாயனின் குதிரைக்காரனுக்குத் தந்தவர்களாவர் என்று இழித்துரைத்திருப்பது அக்காலச் சமுதாய வழக்காறுகளின் வெளிப்பாடாக உள்ளது.40 குறிப்புகள் 2. வீரமங்கலம், விக்கச்சிமங்கலம், குஞ்சிரமங்கலம், குமார மங்கலம், புத்தமங்கலம், பன்றிமங்கலம், சீயமங்கலம், செம்பியன்மாதேவிச் சதுர்வேதிமங்கலம், அறங்கலக்கிச் சதுர்வேதிமங்கலம். 3. அதகூர், ஆதனூர், நெட்டூர், கூடலூர், நல்லரசூர், குத்தனூர், பழுவூர், எறும்பியூர், கிளியூர், ஆசனூர், உஸெதூர், பாலூர், திருக்கோவலூர், பெருங்கூர், மாண்டையூர், துறையூர், அந்தர குளத்தூர், மாமூர், நாவலூர், நெடுமானூர், மலையனூர், எழுவத்தூர், கொட்டையூர், வேளூர், பழங்கூர், சிறு நாவலூர், நரையூர், பரனூர், உவற்றூர். 4. திருநாமநல்லூர், இராஜநாராயணநல்லூர். 5. பழம்பட்டினம், வடவல், வெட்சி, வழுதிலம்பட்டு, பிச்சாண்டாங்குறிச்சி, செட்டி ஏந்தல் தாங்கல், பாளையம், செங்குறிச்சி, நடுவிற்பட்டு, புவனேகவீரன் பட்டணம், செம்பியன் மாதேவி, சூற்றியன்குறிச்சி, குன்றை, திருமுனைப் பாடி, வாணபிராட்டி, இலச்சியம், புலியுண்ணிப் பாடி, கோமர், ஸ்ரீதேவி, அரும்புலிப்பாடி, மணவில், அரும்பாக்கம், நறை, சிறுபாத்து, பருந்தல் (மலைய விச்சாதிரநல்லூர்), வாங்கல், புதுக்கழனி, புத்தூர்ப்பாடி, குமிழி, காட்டுமயில், மாம்பட்டு, திருப்பர். 6. SII 12: 35, 234. 7. SII 22: 167. 8. SII 22: 168. 9. SII 22: 163. 10 . SII 22: 158. 11. ARE 1937-38: 486. 12. ARE 1937-38: 491. 13. SII 22: 157. 14. SII 22: 158. 15. SII 22: 164. 16. SII 22: 136. 17. ARE 1937-38: 498. 18. SII 22: 158. 19. SII 22: 165. 20. SII 22: 140. 21. SII 22: 160. 22. SII 22: 169. 23. SII 22: 145, 146, 147. 24. SII 22: 138. 25. ARE 1937-38: 479. 26. ARE 1937-38: 489. 27. ARE 1937-38: 485. 28. ARE 1937-38: 492. 29. ARE 1937-38: 493. 30. ARE 1937-38: 494. 31. ARE 1937-38: 495. 32. SII 22: 135. 33. SII 22: 148. 34. SII 22: 155. 35. ARE 1937-38: 490. 36. SII 22: 161. 37. ARE 1937-38: 497. 38. ARE 1937-38: 499. 39. SII 22: 156. ARE1937-38: 500, 501. 40. SII 22: 156. - நிறைவு |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |