http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 174

இதழ் 174
[ ஜனவரி 2024 ]


இந்த இதழில்..
In this Issue..

திருமடத்துக் குடைவரைகள்
Gajendra Moksham - A Miniature panel from Thiruvalanchuzhi
The dance of Shiva in Thiruvalangadu and karana Vishnukrantam
வலஞ்சுழி வாணர் கோயில் கல்வெட்டுகள் - 2
எலவானசூர்க்கோட்டை மாடக்கோயில் - 2
ஜப்பானியப் பழங்குறுநூறு - 58 (மறந்ததைக் காற்றும் மறைக்காதே!)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 57 (நிலவென மறைந்தது நீயா?)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 56 (ஒருமுறை வந்து பாராயோ?)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 55 (நெஞ்சம் மறப்பதில்லை)
இதழ் எண். 174 > இலக்கியச் சுவை
ஜப்பானியப் பழங்குறுநூறு - 57 (நிலவென மறைந்தது நீயா?)
ச. கமலக்கண்ணன்


மூலப்பாடம்:

காஞ்சி எழுத்துருக்களில்
めぐりあひて
見しやそれとも
分かぬまに
雲がくれにし
夜半の月かな

கனா எழுத்துருக்களில்
めぐりあひて
みしやそれとも
わかぬまに
くもがくれにし
よはのつきかな

ஆசிரியர் குறிப்பு:

பெயர்: புலவர் முராசாகி ஷிக்கிபு

காலம்: கி.பி. 973-1014. (1025ல் இறந்தார் என்றொரு கூற்றும் உண்டு)

உலக இலக்கியங்களில் உரைநடை தோன்றிய ஆரம்ப காலத்தில் எழுதப்பட்ட புதினங்களில் ஒன்றான 'கென்ஜியின் கதை'யை எழுதிய இவரைப் பற்றிய ஏராளமான வரலாற்றுக் குறிப்புகள் காணப்படுகின்றன. அக்கால ஜப்பானிய சமுதாயத்தில் பெண்களுக்கு மறுக்கப்பட்ட பல உரிமைகளை இவர் கேள்விக்குள்ளாக்கித் தன் சொந்த வாழ்வில் பெற்று அனுபவித்தார். தன் இளம் வயதிலேயே பெற்ற தாயை இழந்த இவர் தனது மாற்றாந்தாயால் பல இன்னல்களுக்கு உள்ளானார். மாற்றாந்தாய் இருந்தவரை இவரது திறமைகள் வெளியே தெரியாமலேயே இருந்தன.

அக்காலத்தில் சீனமொழியைப் பயிலப் பெண்களுக்கு அனுமதி இல்லை. அரண்மனையில் அதிகாரிகளாகப் போகும் ஆண்களுக்கு மட்டுமே ஆசிரியர்களை வைத்துக் கற்றுத்தரப்பட்டது. இவரது அண்ணன் சீனத்தைப் பயில்வதற்காக இவரது தந்தை ஏற்பாடு செய்திருந்தார். வகுப்புகள் நடக்கும்போது அறைக்கு வெளியே அமர்ந்து கவனித்துத் தானே கற்று இலக்கியங்களை வாசிக்கும் அளவுக்கு முன்னேறினார். இதைக் கவனித்த தந்தை இவர் ஓர் ஆணாகப் பிறக்காமல் போய்விட்டாரே என்று வருத்தப்பட்டதைத் தன் நாட்குறிப்பில் பதிவு செய்திருக்கிறார்.

பேரரசர்கள் இச்சிஜோவின் அரசவையில் நடுத்தரநிலை அதிகாரியாக இருந்த இவரது தந்தை தமேதொக்கி கி.பி 996ல் எச்சிஜென் மாநில (தற்போதைய ஃபுக்குய் மாநிலம்) ஆளுநராகப் பணிமாற்றம் செய்யப்பட்டார். அப்போது முராசாகியும் தந்தையுடன் பயணப்பட்டார். அக்காலத்தில் தொலைதூரப் பயணங்கள் பெண்களுக்கு மறுக்கப்பட்டிருந்தன. 5 நாட்கள் ஆகும் பயணத்தை மேற்கொண்ட முதல் பெண்மணி இவர்தான். இரண்டு ஆண்டுகளில் தலைநகருக்குத் திரும்பிவந்து தன் தந்தையின் நண்பர் நொபுதக்காவைத் திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவருக்குப் பல மனைவிகள் மட்டுமின்றிப் பல காதலிகளும் இருந்ததால் அவரை முராசாகி வெறுக்கத் தொடங்கினார்.

பின்னர் சில ஆண்டுகளில் நொபுதக்கா அப்போது ஜப்பானில் பரவிய காலரா பெருந்தொற்றால் இறந்துவிடுகிறார். அதன் பிறகு சிலகாலம் முராசாகி தனிமை தன்னை வாட்டியதாகத் தம் நாட்குறிப்பில் பதிவு செய்திருக்கிறார். குடும்ப நண்பர்களின் அறிவுரைப்படி அருகிலுள்ள ஷிகா மாநிலத்தின் பிவா எனும் ஏரிக்கரைக்குக் குடிபெயர்கிறார். அங்கிருந்த அமைதியான சூழல் இவரை இலக்கியத்தின் பக்கம் திருப்பி இசேவின் கதைகள், தக்கேதொரியின் கதைகள் போன்ற புதினங்களை வாசித்தது மட்டுமின்றிப் புகழ்பெற்ற கென்ஜியின் கதையையும் படைத்தார்.

கி.பி. 1008 முதல் 1010 வரையிலான நிகழ்வுகளை 'முராசாகி ஷிக்கிபுவின் நாட்குறிப்புகள்' என்று பதிவு செய்திருக்கிறார். ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 128 பாடல்களும் ஒரு தனிப்பாடல் திரட்டும் இந்த நாட்குறிப்பும் 'கென்ஜியின் கதை' புதினமும் இடம்பெற்றிருக்கின்றன. காலத்தால் அழியாத புலவர்களின் பட்டியலில் இவர் பிற்காலப் பட்டியலிலும் பெண்பாற்புலவர்கள் பட்டியலிலும் இடம்பெற்றவர்.

பாடுபொருள்: குழந்தைக்கால நண்பனைத் தற்செயலாகச் சந்தித்தபோது

பாடலின் பொருள்: நிலவொளியை ரசித்துக் கொண்டிருந்தபோது நாம் தற்செயலாகச் சந்தித்தோம். ஆனால் உன்னை நான் கண்டுணர்வதற்குள் நிலவு மேகத்துக்குள் ஓடி மறைந்ததுபோல் சென்றுவிட்டாய்.

மிகவும் நேரடியாகப் பொருள் தரக்கூடிய வார்த்தை அலங்காரமற்ற எளிமையான பாடல். பிவா ஏரிக்கரையில் இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழ்ந்தபோது இயற்றப்பட்ட பாடல். தான் அனுபவித்ததை எழுதினாரா அல்லது கற்பனையா என்று தெரியவில்லை.

வெண்பா:

அந்தியில் அம்புலி ஊர்ந்திடும் மங்கலில்
வந்திடும் உன்முகம் ஆயினும் - வந்ததும்
சென்றது என்னெஞ் சறியாமை காட்டும்
முகிலில் மறையும் நிலவு

(மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்)

இக்கட்டுரை சொல்வனம் இதழில் வெளியானது.
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.