http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[188 Issues]
[1844 Articles]
Home About US Temples Facebook
Issue No. 188

இதழ் 188
[ ஏப்ரல் 2026 ]


இந்த இதழில்..
In this Issue..

பெண்தெய்வ வழிபாடு தோற்றமும் வளர்ச்சியும் - 2
சக்கரபாணி சுவாமி மாடக்கோயில் - 1
A sculpture of “Ravana Anugraha Murthy” at Ellora Kailasanatha Temple
சமய எழுச்சியால் சமூக மறுமலர்ச்சி காட்டிய அப்பர் - 11
குன்றக்குரவை போற்றும் குமரன்
இதழ் எண். 188 > இலக்கியச் சுவை
குன்றக்குரவை போற்றும் குமரன்
ச. கமலக்கண்ணன்

தமிழில் இலக்கியங்கள் சங்க இலக்கியங்கள், சங்கம் மருவியகால இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், பிற்கால இலக்கியங்கள், நவீன இலக்கியங்கள் எனும் வரிசையில் அமைகின்றன. எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் சேர்ந்த பதினெண்மேல்கணக்கு நூல்கள் சங்க இலக்கியங்கள். பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், ஐம்பெரும் காப்பியங்கள், ஐஞ்சிறுங் காப்பியங்கள், ஆகியவை சங்கம் மருவியகால இலக்கியங்கள். தேவாரம் முதலான சைவத்திருமுறைகள், பிரபந்தம் முதலான வைணவத் திரட்டுகள், கம்பராமாயணம், பெரியபுராணம் ஆகியவை பக்தி இலக்கியங்கள். உலா, பரணி, பள்ளு முதலான சிற்றிலக்கியங்கள் பிற்கால இலக்கியங்கள்.

சங்ககாலம் என்பதைப் பொ.ஆ.மு 300 முதல் பொ.ஆ. 200 வரையிலான காலகட்டம் என்பது பெரும்பாலான தமிழறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட முடிபு. அதற்கு அடுத்த 300 ஆண்டுகளைச் சங்கம் மருவிய காலமாகக் கொள்ளலாம். ஒவ்வோர் இலக்கியத்தின் ஆண்டுக்கணக்கையும் குறிப்பாக அறுதியிட்டுக் கூறவியலாது. சங்க இலக்கியங்களில் காலத்தால் பிற்பட்ட இலக்கியங்களும் உண்டு. உதாரணம் பரிபாடல், திருமுருகாற்றுப்படை ஆகியவை. சங்கம் மருவியகால இலக்கியங்களில் காலத்தால் முற்பட்ட இலக்கியங்களும் உண்டு. உதாரணம் திருக்குறள், சிலப்பதிகாரம், ஆகியவை. எனவே, முருக வழிபாட்டைக் கொண்டிருக்கும் திருமுருகாற்றுப்படையும் பரிபாடலும் சிலப்பதிகாரமும் ஏறத்தாழ சமகாலத்தவை என்று கொள்வதில் தவறில்லை.

உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் வகையைச் சேர்ந்த சிலப்பதிகாரம் ஒரு குடிமக்கள் காப்பியம் ஆகும். அரசகுலத்தைச் சேராத எளிய மக்களை முதன்மைக் கதைமாந்தர்களாகக் கொண்ட இலக்கியம். அதுமட்டுமின்றி இதுவொரு மதநல்லிணக்க நூலும் ஆகும். இதன் ஆசிரியர் இளங்கோவடிகள் ஒரு சமணத்துறவியாக இருந்தாலும் அப்போது நிலவிவந்த பிற நம்பிக்கைகளின் வழிபாட்டு முறைகளையும் பதிவு செய்யத் தவறவில்லை. கதையின் தலைவன் கோவலன் சமண சமயத்தைச் சேர்ந்த வணிகனாக இருக்கலாம். ஒரு கட்டத்தில் அவனையும் கண்ணகியையும் வழிப்படுத்தும் கவுந்தியடிகள் சமணத்துறவியாக இருக்கலாம். ஆனால் சிலம்பை ஒரு சமணக்காப்பியம் என்று வகைப்படுத்த இயலாமல் மதநல்லிணக்கக் காப்பியம் என்று குறிப்பிட ஏதுவாக இருப்பவை வேட்டுவ வரி, ஆய்ச்சியர் குரவை, குன்றக் குரவை போன்றவை. கதையின் போக்கில் நடைபெறும் நிகழ்வுகளாக இவ்வழிபாட்டு முறைகள் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன.

கோவலனும் கண்ணகியும் மதுரைக்கு ஏகும்போது புறஞ்சேரியை அடையும்முன் வேட்டுவர்கள் கொற்றவையை வழிபடும் காட்சி வேட்டுவவரி ஆகும். மாதரியின் இல்லத்தில் கண்ணகியை இருத்திவிட்டுக் கொலைக்களத்துக்குக் கோவலன் கொண்டுசெல்லப்பட்ட நேரத்தில் மாதரியின் சுற்றத்தாரான ஆய்ச்சியர் திருமாலைப் பாடுவது ஆய்ச்சியர் குரவை. குரவை என்பது ஒருவகைக் கூத்து. எளிய மக்கள் ஆடும் இக்கூத்தைக் காண அரச குலத்தவர் வரமாட்டார் என்பது ஒரு கூற்று. மதுரையை எரித்தபின் கோவலன் வானவூர்தியில் வந்து கண்ணகியை அழைத்துச் சென்றதைக் கண்ட மலைமகளிர் குமரனைப் போற்றிப் பாடுவது குன்றக்குரவை.

இம்மூன்று காதைகளும் இல்லாமலேயே சிலம்பின் கதை தொடர்ச்சி உடையதாகத்தான் இருக்கும். இருப்பினும் இவற்றை நேர்மையாக இணைத்ததன் வழியாக இளங்கோ தானொரு வரலாற்றறிஞர் என்பதையும் வெளிப்படுத்துகிறார். மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் முருகனைப் பாடியது வியப்பன்று. சமணத்துறவி இளங்கோவடிகள் தம் சமயத்தை மட்டும் முன்னிறுத்தி இக்காப்பியத்தை இயற்றியிருப்பினும் யாரும் கேள்விக்கு உள்ளாக்கியிருக்க முடியாது. மணிமேகலைபோல் சமயக்கணக்கர் திறம் கேட்டு வாதம் புரிந்திருந்தாலும் குறை கண்டிருக்க முடியாது. ஆனால் அக்காலத்தில் நிலவிவந்த நம்பிக்கைகளைப் பதிவு செய்யும் பொருட்டு நேர்மையாகப் பதிவு செய்வதே இளங்கோவின் நோக்கமாக இருந்தது என உறுதியாகக் கூறலாம்.

குன்றக்குரவை ஆடும் முதன்மைப் பாத்திரத்தின் வழியே இளங்கோ குமரனின் சிறப்புகளை விவரிக்கிறார். அக்காலத்தில் முருகனின் வரலாறு என நிலவிவந்த நம்பிக்கைகளைப் பதிவு செய்கிறார். கண்ணகி கோவலனுடன் சென்றதைக் கண்ட பெண்ணின் வாயிலாகக் கதை நகர்கிறது. குன்றில் வாழும் மக்களுக்குத் தான் கண்ட காட்சியை விவரிக்கிறாள். இக்காதை கீழ்க்கண்ட பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு பிரிவிலும் ஒருபொருள் அடுக்கியது என்ற உத்தியில் ஒரே செய்தி பல்வேறு வடிவங்களில் சொல்லப்படுகிறது.

1. கண்ணகியைக் கோவலன் அழைத்துச் செல்லுதலும் மலைமக்கள் கண்ணகியை வழிபட வேண்டியதையும் உரைத்தல்
2. மலையருவியின் புதுப்புனலில் நீராடுவதைக் கூறுதல்
3. முருகனின் சிறப்புகளைக் கூறிக் குரவையாடுதல்
4. காதல் நோய்க்கான காரணம் தெரியாமல் தாய் வேலனின் வெறியாடலை வேண்டுவது நகைப்புக்கு உரியது எனக் கூறுதல்
5. ஒருவேளை வெறியாடலின்போது முருகப்பெருமான் உண்மையாகவே வந்தால் அவரிடம் மலையரசனை மணம்முடிக்க வேண்டுவதாக உரைத்தல்
6. தான் காதல்கொண்ட மலையரசன் முருகன்போல் மறைந்துநின்று கேட்கிறான் என்றல்
7. கண்ணகியை வழிபட வேண்டியதைக் கூறுதல்

கண்ணகியை வழிபட வேண்டியதன் அவசியத்தை உரைத்து மூலக்கதையிலிருந்து விலகும் இக்காதை முடிவில் அதே புள்ளியில் முடிந்து கதை தொடர்கிறது. இனிக் குரவையாடும்போது உரைக்கப்படும் குமரனின் சிறப்புகளைக் காண்போம். முருகப்பெருமானின் வாழ்வில் நடந்ததாகப் பல்வேறு புராணங்கள் உரைக்கும் கீழ்க்கண்ட நிகழ்வுகளும் குறிப்புகளும் குன்றக்குரவையில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

1. கடலுக்குள் மாமர உருவில் நின்ற சூரபத்மனை அழித்தல்
2. முருகனுக்கு உகந்த தலங்கள் செந்தில் (திருச்செந்தூர்), குன்றுதோராடல் (திருத்தணி), ஏரகம் (சுவாமிமலை) ஆகியவை
3. ஆறு முகங்களையும் பன்னிரு கைகளையும் உடையவன்
4. தேவாசுரப் போரின்போது இந்திரனின் வேண்டுகோளுக்கிணங்க தேவர் படையை வழிநடத்திச் செல்லுதல்
5. சூரபத்மனை அழித்து மயிலை வாகனமாகவும் சேவலைக் கொடியாகவும் கொள்ளுமுன் பிணிமுகம் என்னும் யானை முருகனின் வாகனமாக இருந்தது
6. சரவணப் பொய்கையில் கார்த்திகைப் பெண்டிர் பாலூட்டுதல்
7. சக்கரம் ஏந்தி வந்த அசுரர்களை அழித்தல்
8. கொக்குமலையை (கிரவுஞ்ச பர்வதம்) வேல்கொண்டு பிளத்தல்

இவையெல்லாம் நேரடியாக முருகனைப் பற்றிக் குறிப்பவை. இத்தகைய சிறப்புகளை உடைய குமரனைப் போற்றிக் குரவையாடத் தோழிகளை அழைக்கிறாள் தலைவி. அதனூடே அகப்பொருள் சார்ந்த நம்பிக்கை ஒன்றும் குறிப்பிடப்படுகிறது. தலைவி காதல்வயப்பட்டிருப்பது அறியாமல் அவளுக்குப் பேய் பிடித்திருப்பதாகத் தாய் நினைக்கிறாள். வெறியாட்டு நிகழ்த்தினால் பேய் அகன்றுவிடும் என்ற நம்பிக்கை அக்காலத்தில் நிலவிவந்தது. வெறியாட்டு என்பது பெண்ணின் உடலில் இறங்கியுள்ள பேயைப் பூசாரியின் உடலில் இறங்கிய வேலன் விரட்டுவது என இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

காதல் வயப்பட்ட பெண்ணின்மீது பேய் இறங்கியது என ஐயுறும் தாய் வெறியாட்டுக்கு ஏற்பாடு செய்வது வழக்கமாக இருந்தது. ஆனால் அப்பெண்ணுக்கு மட்டுமே தன் மீது பேய் இறங்கவில்லை, தன் நோய்க்குத் தீர்வு தன் தலைவனை மணம் முடித்தலே என்பது தெரியும். குன்றக்குரவையில் தலைவி தன் தாயின் அறியாமையை எண்ணி நகைக்கிறாள். தாய் ஒரு சாதாரண மானிடப்பெண். அவள் அறியாமை கொண்டிருப்பது இயல்பு. ஆனால் பூசாரியின் உடலுக்குள் இறங்கப்போகும் முருகனும் மடவனாக இருக்கிறானே என்று தலைவி உரைப்பதில் கண்ணகி மட்டுமல்லாது சங்ககாலப் பெண்டிர் அனைவரும் தவறையும் மடமையையும் இடித்துரைக்கத் தயங்காதவர் என்ற வரலாற்றுச் செய்தி வெளிப்படுகிறது. இளங்கோ இதனூடேயும் புராணங்கள் முருகன் தொடர்பாகக் கூறும் கூடுதல் தகவல்களைப் பதிவு செய்கிறார். அவையாவன:

1. ஆலமர் செல்வனின் (தென்முகக் கடவுள் எனப்படும் தட்சிணாமூர்த்தியின் - சிவபெருமானின்) மகன்
2. கார்காலத்துக்குரிய கடம்பமாலையைத் தோள்களில் அணிந்தவன்
3. கயிலையில் வாழும் இறைவனின் (சிவபெருமானின்) மகன்
4. மலைமகளின் (பார்வதியின்) மகன்
5. குறவர்தம் மகளாருடன் (வள்ளியுடன்) காட்சி தருபவன்
6. வள்ளி குறப்பெண் என்ற தகவல்

இவற்றையெல்லாம் தலைவி சொல்லி முடித்தவுடன் மீண்டுமொருமுறை கண்ணகி எவ்வாறு மலைவாழ் மக்கள் தம் குலதெய்வமாகக் கொள்ள தகுந்தவள் என்ற காரணத்தை உரைப்பதுடன் குன்றக்குரவை எனும் காதை முடிவுறுகிறது.

இத்தகைய செய்திகளைப் பொதித்து வைத்துள்ள இளங்கோவை நாம் ஏன் வரலாற்றறிஞர் என்று பாராட்டுகிறோம்? ஒரு வரலாற்றறிஞர் என்பவர் தமது ஆய்வுரைகளில் தாம் எடுத்துக்கொண்ட பொருள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் பதிவுசெய்ய வேண்டியவர். ஒரு குறிப்பிட்ட இறைவடிவத்தின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் ஆய்வுசெய்ய விரும்பும் ஒரு வரலாற்றாய்வாளருக்கு இவைபோன்ற பதிவுகளே அவ்விறைவடிவத்தின் காலநிரலான வரலாற்றை வழங்கவல்லன. கல்வெட்டும் சிற்பங்களும் தரும் வரலாற்றுத் தகவல்களில் உண்டாகும் இடைவெளியை நிரப்ப இலக்கியங்களே துணை. அத்தகைய இலக்கியங்கள் வரலாற்றுச் சுரங்கங்களாக அமைவது ஆசிரியரின் கையில். எனவே குடிமக்கள் காப்பியமான சிலம்பு மதநல்லிணக்க நூல் என்ற நிலையையும் தாண்டி மிகச்சிறந்த வரலாற்றுநூலாக மிளிர்வதற்குக் காரணம் இளங்கோவின் கைவண்ணமே என்பதில் ஐயமில்லை.
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.