![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [188 Issues] [1844 Articles] |
|
Issue No. 188
இதழ் 188 [ ஏப்ரல் 2026 ]
இந்த இதழில்.. In this Issue..
|
தமிழ்நாட்டிலுள்ள வைணவக் கோயில்களில் திருமாலின் சக்கரத்தையே கருவறை இறைவடிவமாகக் கொண்டமைந்த பெருங்கோயில் கும்பகோணம் சக்கரபாணி சுவாமி மாடக்கோயில். பெருவளாகமாய் விரிந்துள்ள இக்கோயிலின் முதன்மை விமானங்கள் இரண்டுமே பிற்சோழர் காலக் கட்டமைப்பில் உள்ளன. வளாகத்தின் பல இடங்களில் திருப்பணிக்கால மாற்றங்களையும் அவற்றின் விளைவான கட்டுமான இணைப்பு களையும் காணமுடிகிறது.1 முதல் கோபுரம் இக்கோயிலின் கிழக்கு நுழைவாயிலாக உள்ள ஐந்து நிலைக் கோபுரத்தின் கீழ்த்தளம் துணைத்தளத்தின் மீது உறுப்பு வேறுபாடு பெற்ற தாங்குதளத்துடன் எழுகிறது. துணைத்தள மேற்கு முகத்தில் தெற்கிலும் வடக்கிலும் சிதைந்த சிற்பங்கள். கிழக்கில் சாலை உயர்வின் காரணமாக இத்துணைத்தளமும் தாங்குதளத்தின் சில உறுப்புகளும் தரைமறைவாய் உள்ளன. வாயில் பெற்றுள்ள பெருஞ்சாலைப்பத்தி கபோதபந்தத் தாங்குதளம் கொள்ள, அதன் இருபுறச் சுவர்களும் தாமரை ஜகதியுடன் பாதபந்தத் தாங்குதளம் பெற்று எழுகின்றன. மேலே வேதிகைத்தொகுதி. பாம்புப்படம் பெற்ற பாதத்தின் மீதெழும் எண்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், பூமொட்டுப் போதிகைகள் தாங்கும் வெறுமையான வலபி உள்ளிட்ட கூரையுறுப்புகள் கொண்டுள்ளது. இத்தளத்தின் கூரைநீட்டல் மேலோட்டமான கூடுகள் பெற்ற கபோதமாக அமைய, மேலே மூலைகளில் கர்ணகூடங்கள், நடுவில் இரு சாலைகளைப் பக்கங்களில் கொண்ட பெருஞ்சாலை, அவற்றுக்கிடையில் பஞ்சர மென ஆரஉறுப்புகள் அமைந்துள்ளன. அனைத்து ஆரஉறுப்புகளும் சுதையுருவங்கள் கொள்ள, மேற்றளங்கள் அளவில் சுருங்கிச் சுதையுருவங்களுடன் ஆரஉறுப்புகள் ஏற்றுள்ளன. பெரும்பாலான சுதையுருவங்கள் விஷ்ணு தொடர்பான புராணக்கதைகளின் விளக்கங்களாக அமைய, ஆங்காங்கே பாலுணர்வு இணைகளும் உள்ளன. ஐந்தாம் தளத்தின் மேல் வானவர்கள் தாங்கும் சாலை சிகரம் விரிய, கிரீவம் உள்ளடங்கிச் சுதையுருவங்கள் கொண்டுள்ளது. கோபுரத்தின் தென், வடபகுதிகளின் ஆரங்கள் இடைச்சாலை களைத் தவிர்த்துள்ளன. கோபுரத்தின் உட்பகுதி இருபுறத்தும் மேல், கீழ் அறைகளாக அமைய, தென்சுவர்க் கோட்டத்தில் கண்ணனின் பிற்சோழர் கால ஊர்த்வஜாநு கரணச் சிற்பம். மண்டல நிலையில் இடப்பாதத்தைத் திரயச்ரமாக்கி, வலமுழங் காலை உயர்த்தி ஆடும் கண்ணனின் தலையைக் கிரீடமகுடம் அழகு செய்ய, செவிகளில் பனையோலைக் குண்டலங்கள். பல்வகைக் கழுத்தணிகள், தோள், கை வளைகள், கால் சதங்கைகள் அணிந்து இடையில் மணிகள் கோத்த முடிச்சிடப்பட்ட வளையத் தொங்கலுடன் பிறந்த மேனியராய் ஆடும் இந்த அழகரின் மார்பில் ஸ்ரீவத்சமறு. அவரது வலக்கை கடகம் காட்ட, இடக்கை அர்த்தரேசிதத்தில். கோபுரத்தை அடுத்து விரியும் வளாகத்தில் கோபுரவாயிலுக்கு நேரிருக்குமாறு கோயிலாரால் எட்டுக்கால் மண்டபம் என அழைக்கப்பெறும் ஏழு வளைவு வாயில்களுடன் வேசர வடிவில் தூபி, சிகரத்துடனான புதிய கட்டமைப்பு. தென்கிழக்கில் செயல் அலுவலர் அலுவலகமும் வடகிழக்கில் நீர் நிறைந்த பெருங்குளமும் அதையடுத்துத் தேர்நிலையும் அமைய, தென்புறம் கோயிலுக்கான மற்றொரு வாயில் சரிவுப் பாதையுடன் எளிய வாயிலாக அமைந்துள்ளது. அதன் மேல் முகப்பில் தெற்கிலும் வடக்கிலும் சுதையுருவங்கள். கிழக்கு, மேற்கு மூலைகளில் வணங்கிய கருடனும் இடைப்பகுதியில் கீர்த்திமுக வளைவில் தேவியருடன் சக்கரத்தாழ்வாரும் அமைய, இருபுறத்தும் கவரிப் பெண்கள், சங்கு, சக்கரம். நடைமண்டபம் - இரண்டாம் கோபுரம் எட்டுக்கால் மண்டபத்தின் மேற்கில் பலித்தளமும் கொடிமரமும் அமைய, வரிசைக்கு ஐந்தென நான்கு வரிசைகளில் ஒட்டுத் தூண்களாக அமைந்த பெருந்தூண்கள் தலைப்பில் அமர்சிம்மத்துடன் கூரை தாங்கும் நடைமண்டபம். அதன் கபோத அலங்கரிப்புப் பெற்ற முகப்பின் மேற்பகுதியில் ஐந்துதலைப் பாம்பு குடையாகத் தலைவிரிக்க, அதன் கட்டுடலில் சுகாசனத்தில் அமர்ந்தவராய் விஷ்ணு. இருபுறத்தும் தேவியர். இம்மண்டபத்தின் வடபுற அறைகளில் ஒன்றில் ஆஞ்சநேயரும் பிற இரண்டில் ஆழ்வார் திருமேனிகளும் உள்ளன. வண்ண ஓவியங்கள் பெற்ற கூரையுடன் விளங்கும் இந்நடைமண்டபத்தின் மேற்கில் இரண்டாம் கோபுரவாயில். இரண்டாம் கோபுரம் சக்கரபாணி சுவாமி, விஜயவல்லித் தாயார் மாடக்கோயில்களுக்கும் அவற்றைத் தழுவியுள்ள வெளிச்சுற்றுக்கும் வழியாக அமைந்துள்ள இரண்டாம் கோபுரவாயிலின் கிழக்குமுக வடபுறத் தாங்குதளத்தில் படிக்கவியலாதவாறு சிதைந்துள்ள மூன்று பிற்சோழர் காலக் கல்வெட்டுத் துண்டுகள் கட்டுமானத்தில் இணைந்துள்ளன. பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, எண்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், வெட்டுப் போதிகை கள் தாங்கும் கூரையுறுப்புகள் கொண்டு இருதளச் சாலையாக அமைந்துள்ள இக்கோபுரத்திலும் சுதையுருவங்கள். வெளிச்சுற்று வெளிச்சுற்றின் கிழக்கு விரிவு தென்வடலாக இரு வரிசைகளில் அமைந்த பெருந்தூண்கள் கூரை தாங்கும் மற்றொரு நடைமண்டபமாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. கோபுர வாயிலை ஒட்டியுள்ள பெருந்தூணில் இம்மண்டபத்தை உருவாக்கிய அனுமானூர் ஆர். சக்கரபாணி செட்டியாரின் திருமேனி பெயர்ப் பொறிப்புடன், இறையக மாடக்கோயிலை வணங்கிய நிலையில் சிற்பமாக்கப்பட்டுள்ளது. இங்குள்ள தூண்கள் சிலவற்றின் சதுரங்கள் கொடி, பறவை, பூங்கொத்துச் செதுக்கல்களுடன், இம்மண்டபத் திருப்பணிக்குத் துணையிருந்தார் உருவத்திருமேனிகளையும் கொண்டுள்ளன. இராமர், கண்ணன், குதிரைவீரர் சிற்பங்களும் இடம்பெற்றுள்ள இம்மண்டபத்தின் வடபுறத் தூணொன்றின் சதுரத்திலுள்ள ஆஞ்சநேயர் சிற்பம் தனித் திருமுன்னாக்கப்பட்டுள்ளது. ஒரு தூணின் சதுரத்தில் எழுத்தலங்காரம். மண்டபத் தென்வாயில் வளைவு அலங்காரத்துடன் விளங்க, மேற்கிலுள்ள மரத்தாலான கருடவாகனம் சிறப்பானது. அப் பகுதியிலுள்ள உத்திரத்திலும் அனுமானூர் சக்கரபாணி செட்டியார் திருப்பணி குறித்த கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இந்நடைமண்டபத்தின் தெற்கிலும் வடக்கிலும் இணைக்கப்பட்டுள்ள தூண்கள் சில தாராசுரம் இராஜராஜேசுவரம் கோயில் மண்டபத் தூண்களை ஒத்துள்ளன. ஐந்தல்லது ஆறடுக்குத் தூண்களாகக் கட்டமைக்கப்பட்டுள்ள அவற்றுள் சிலவற்றில் சிற்றுருவச் சிற்பங்கள். நடைமண்டபத்தின் தென்கிழக்கிலுள்ள மடைப்பள்ளி இப்பகுதியிலிருந்து சிதைந்த கோயிலொன்றின் தூண்கள், பிற கட்டட உறுப்புகள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள தூண்கள் சிலவற்றிலும் உத்திரம், போதிகை ஆகியவற்றிலும் பிற்சோழர் காலக் கல்வெட்டுகள் உள்ளன. அவற்றுள் இரண்டு கல்வெட்டுகள் படியெடுக்கப்படாதவை. தூண் ஒன்றின் தலைப் பில் இணைக்கப்பட்டுள்ள சங்கூதும் பூதம் அழகிய சோழர் காலச் சிற்பமாகும். மற்றொரு தூண் போதிகையின் நடுப்பகுதி யில் சிதைந்த சிற்பமாய் இரண்டு ஆடற்பெண்கள். இருக்கையின் கீழ்ப்பகுதிகளாக விளங்கிய இரண்டு சிம்மச் சிற்பங்களும் இங்குள்ளன. இந்நடைமண்டபத்தின் வடக்கிலுள்ள வண்டிக்கூரை மண்டபத்தில் கண்ணாடித் திருப்பள்ளியறையும் யாகசாலையும் உள்ளன. பள்ளியறைக்கு முன்னுள்ள படிவரிசையின் மேல்படி கல்வெட்டுப் பொறிப்புடன் உள்ளது. மண்டப மேற்குச்சுவர், இறைவன் மாடக்கோயில் உள்சுற்றின் முன்னுள்ள விரிவு மண்டபத்திற்குப் பின்சுவராக அமைந்துள்ளது. அதன் கீழ்ப்பகுதி மேடையில் வண்ணப்பூச்சுப் பெற்ற பேரளவிலான சுதைக் காவலர்களும் அவர்களுக்கிடைப்பட்டுச் சக்கரம், சங்கு, திருநாமம் ஆகியனவும் உள்ளன. சுவரில் மேற்புறத்தே வலப்புறம் தேவியருடன் சக்கரத்தாழ் வாரும் இடப்புறம் தேவியருடன் விஷ்ணுவும் வண்ண ஓவியங்களாய் அமைய, மேடையின் இருபுறத்துள்ள சுவர்களில் தெற்கில் கருடனும் வடக்கில் ஆஞ்சநேயரும் ஓவியங்களாகக் காட்சியாகின்றனர். மேடையின் முன்னிருக்குமாறு அழகிய வேலைப் பாடுகளுடன் பித்தளையிலான பேரகல் விளக்கு, பின்னணியில் திருவாழியுடன் இருத்தப்பட்டுள்ளது. இச்சுவரிலுள்ள கல்வெட்டு, இந்நடைமண்டபம் அனுமானூர் ஆர். சக்கரபாணி செட்டியாரால் சதாரண ஆண்டு ஆவணித் திங்களில் தொடங்கப்பட்டு, அவர் மகன் இராம கிருஷ்ண செட்டியாரால் இராட்சச ஆண்டு ஆவணித் திங்களில் 35 அங்கணங்கள் விளங்கும் பெருமண்டபமாகக் கட்டி முடிக்கப்பட்ட செய்தியைத் தருகிறது. இச்சுவரின் கீழ்ப்பகுதியில் கண்டறியப்பட்ட முற்சோழர் எழுத்தமைதியிலான இரு வரித் துண்டுக் கல்வெட்டு, அபூர்விகள் எடுத்த மனைகளைக் குறிக்கிறது. மண்டபக் கூரையில் இராசிமண்டலமும் அதன் தென்புறம் யாளிகளும் அமைய, வடபுறத்தே வானவப் பெண்கள். இச்சுற்றின் தென்பகுதி வெறுமையாக அமைய, மேற்கில் பூந்தோட்டம். அங்குள்ள கல்வெட்டு, இவ்வெளிச்சுற்றின் தரைப்பகுதி முக்னிராம், இராம்குமார் கொடையால் 1960இல் உருவாக் கப்பட்டதாகக் கூறுகிறது. பூந்தோட்டத்தில் தென்னை மரத்தடியில் கிடத்தப்பட்டுள்ள தூண் போதிகையில் இடக்கை, தாளக் கலைஞர்கள் இருபுறத்தும் இசையெழுப்ப, இடையிலாடும் காரிகையின் பிரமரகக் கரணத் தோற்றச் சிற்பம் பத்மநாபன், கணேசன் இணையரால் கண்டறியப்பட்டது. சுற்றின் வடபுறம் விஜயவல்லித் தாயாரின் மாடக்கோயில். வடகிழக்கு மூலையிலுள்ள சிறிய திருமுன்னில் பின்னாளைய சிற்பமாய்க் காளிங்க நர்த்தனர். சுற்றின் நடுப்பகுதியில் பேரளவிலான வெற்றுத்தளத்துடன் இறைவனின் மாடக்கோயில் கம்பீரமான இருதள வேசர மாக எழுந்துள்ளது. படிவரிசைகள், வெற்றுத்தளம் இறைவன் மாடக்கோயிலுக்கான படிவரிசைகள் நடைமண்டபத்தின் மேற்குச்சுவர் ஒட்டி, தெற்கிலும் வடக்கிலுமாய் 15 படிகளுடன் மேலேறுகின்றன. படிவரிசை முடியுமிடத்து, சக்கரபாணி இறையக உள்சுற்றின் கிழக்கிலுள்ள விரிவு மண்டபத்தின் தெற்கு, வடக்கு வாயில்களைத் தொடுமாறு தளம் அமைக்கப்பட்டுள்ளது. தெற்கு வாயில் தட்சிணாயன வாயிலாகவும் வடவாயில் உத்தராயன வாயிலாகவும் பெயரிடப்பட்டுள்ளன. தட்சிணாயன வாயிலின் வலப்புறம் சுவரில் இணைக்கப்பட்ட நிலையில் காட்சிதரும் செவ்வகச் சட்டகத்தில் தாமரை இதழ் அணைவுடன் காட்டப்பட்டுள்ள மூன்று சதுரங்களில் ஆடற்பெண்கள். முழுமையாக உள்ள முதல் சிற்பத்தில் இடமுழங்காலை மார்பளவு உயர்த்தி வலப்பாதத்தைப் பார்சுவத்தில் இருத்தித் தண்டபட்சக் கரணம் காட்டும் ஆடலரசியின் இடக்கை வேழக்கையாக, வலக்கை மடித்து உயர்த்திய பதாகமாக உள்ளது. பிற இரு சிற்பங்களும் இடுப்பளவில் சிதைந்துள்ளன. மண்டல நிலையிலுள்ள அவ்விரு ஆடலரசியருள் ஒருவர் ஒரு கையைக் கடகத்திலும் மற்றொரு கையை ரேசித வீச்சிலும் கொண்டுள்ளார். இன்னொருவரின் கைகளுள் ஒன்று தொடையில் அமர, மற்றொன்று நெகிழ் கையாக உள்ளது. படித்தளத்தின் மேற்கில் தெற்கிலும் வடக்கிலும் இறங்கும் இரண்டு படிவரிசைகளுள் ஒன்று இறையகத்தின் இடைச்சுற்றுக்கு வழியமைக்க, மற்றொன்று கோயில் வெளிச்சுற்றின் மேற்குப்பகுதியில் முடிகிறது. 3. 06 மீ. உயர இறையக வெற்றுத்தளம் தளத்திற்கான உறுப்புகள் பெறாமல் வெறுஞ்சுவராக அமைந்துள்ளது. இறையக உள்சுற்று தட்சிணாயன, உத்தராயனப் படிவரிசைகள் வழிக் காட்சியாகும் சக்கரபாணி மாடக்கோயிலின் உள்சுற்று விரிவாய் உள்ள கிழக்கு மண்டபம் தென், வடலாக இரு வரிசைகளில் அமைந்த எட்டுத் தூண்கள் கூரை தாங்கும் கட்டமைப்பாக உள்ளது. அவற்றுள் நடுவிலுள்ள நான்கும் ஒரு பக்கப் போதிகை மட்டும் கொள்ள, ஏனையன இரு பக்கப் போதிகைகள் பெற்றுள்ளன. தாராசுர இராஜகம்பீரன் மண்டபத் தூண்களை நினைவூட்டும் இந்த ஐந்தடுக்குத் தூண்களுள் சில சிற்பங்கள் கொள்ள, சில வெறுமையாக உள்ளன. இத்தூண்களின் போதிகைகளுள் எட்டின் நடுப்பகுதியில் ஆடற்சிற்பங்கள். இந்த எட்டுச் சிற்பங்களுமே ஒவ்வொன்றிலும் இட, வலமாகக் கருவிக்கலைஞர்களாய் ஆடவர்களையும் இடையில் ஆடற்பெண்ணையும் கொண்டுள்ளன. ஏழு சிற்பங்களில் தாளக் கலைஞருடன் இடக்கைக் கலைஞர் காட்சிதர, ஒன்றில் மட்டும் இரண்டு கருவிக் கலைஞர்களுமே தாள வல்லுநர்களாய்க் காட்டப்பட்டுள்ளனர். ஒருவர் செண்டுதாளத்துடன் விளங்க, மற்றொருவர் கையில் இலைத்தாளம். இக்கலைஞர்களுள் பெரும்பாலோர் ஆடலரசிக்காய் ஒருக்கணித்திருக்க, ஓரிருவர் எதிர்த் திசையில் திரும்பியுள்ளதையும் காணமுடிகிறது. பனையோலைக் குண்டலங்கள், கழுத்தணிகள், தோள்வளைகளுடன் சிற்றாடையும் கொண்டையும் கொண்டுள்ள இக்கருவிக்கலைஞர்களுள் சிலர் ஒரு கையை உயர்த்தி ஆடலையோ அல்லது எதிருள்ள கருவிக்கலைஞரின் திறனையோ போற்றுமாறு காட்சிதர, எட்டுச் சிற்பங்களிலுமுள்ள ஆடற்பெண்கள் இடைக்கட்டுடனான பட்டாடை, தோள், கை வளைகள், கழுத்தணிகள், சுவர்ண வைகாக்ஷம், குறங்குசெறி, மாறுபட்ட பனையோலைக் குண்டலங்கள் பெற்றவர்களாய்ப் பெருங்கொண்டையுடன் ஆடுகின்றனர். எண்மரில் எழுவர் மண்டல நிலையில் ஆட, ஒருவர் வைஷ்ணவ நிலையில் உள்ளார். சிலர் கைகளை நெகிழ்த்த, சிலர் உயர்த்திய விஸ்மயமாகவும் வீசிய ரேசிதமாகவும் அதைக் கொண்டுள்ளனர். சிலரது கைகள் தொடையில் அமர, ஒருவர் மட்டும் கைகளைக் கூப்பியுள்ளார். பெரும்பாலோர் நேர்ப்பார்வையராய் இருக்க, ஓரிருவர் முகத்தை சற்றே உயர்த்தியுள்ளனர். இம்மண்டப மேற்குச்சுவர்ச் சாளரமாடத்தில் வணங்கிய நிலையில் கருடாசனத்தில் கருடன். வலப்புறம் சுவரொட்டிய நிலையில் தஞ்சாவூரை ஆண்ட மராத்திய அரசர் இரண்டாம் சரபோஜி, அவரது மகள் ஆகியோரின் திருமேனிகள் சக்கரத் தாழ்வாரை வணங்கிய நிலையில் உள்ளன. அதே சுவரின் வடபகுதியில் புதிதாகக் கண்டறியப்பட்ட கல்வெட்டு, ‘சாளுவத் திருமலைய் தேவ மஹாஇராஜாவின் தன்மம்’ குறிக்கிறது. அதனருகே கோட்டுருவச் செதுக்கலாகத் தாங்கலில் இருத்தப்பட்ட திருவாழியும் அதன் கீழ்ச் சிதைந்த கிரந்தக் கல்வெட்டும் உள்ளன. உத்தராயன வாசலை ஒட்டிய வடசுவரில் இறைவனை வணங்குமாறு கோட்டுருவமாகச் செதுக்கப்பட்டுள்ள ஆடவரின் வடிவமும் அதனருகே ஐந்து வரிகளிலான தமிழ்க் கல்வெட்டும் கண்டறியப்பட்டன. கோட்டுருவத்தைக் கிஷ்ணராய நாயக்கர் மகன் பெத்தப்ப நாயக்கராக அடையாளப்படுத்தும் கல்வெட்டு, அவர் திருவாழி ஆழ்வாரின் பாதத்திற்குச் சதாசேவை செய்வதாகத் தெரிவிக்கிறது. இந்நடைமண்டபத்தின் மேற்கில் இறையகத்தைச் சூழ வளரும் உள்சுற்று, துணைத்தளத்தின் மீதான தூண்கள் தாங்கும் மாளிகையாக அமைந்துள்ளது. மாளிகையின் பின்சுவரில் தெற்கு, மேற்கு, வடக்குப் பகுதிகளிலுள்ள மாடங்களில் பலித்தளம் ஒத்த அமைப்புகள். தென்மேற்கு மூலையிலுள்ள மாடம் முகப்பில் ஒருதளச் சாலை விமானமெனச் சுதையால் அழகு படுத்தப்பட்டுள்ளது. அதில், தும்பிக்கை ஆழ்வாராய்ப் பிள்ளையார் இலலிதாசனத்திலுள்ளார். கரண்டமகுடம், சரப்பளி, முத்து உதரபந்தம், முப்புரிநூல் கொண்டுள்ள இந்த இடம்புரிப் பிள்ளையாரின் பின் கைகளில் சங்கு, சக்கரம். வலத்தந்தம் உடைந் திருக்கும் அவரது வல முன் கையில் உடைந்த தந்தத்தின் பகுதி. இட முன் கை மோதகத்தைத் துளைக்கை சுவைக்கிறது. வடமேற்கிலுள்ள அதே அமைப்பிலான மாடத்தில் ஐந்துமுக ஆஞ்ச நேயர். திருப்பணிகளின் விளைவாய்ப் பல்வகைத் தூண்கள் கூரை தாங்கும் இம்மாளிகையின் வடபுறத்தே உள்ள இரண்டு தூண்கள் வெளிச்சுற்று, உள்சுற்று நடைமண்டபங்களிலுள்ள தாராசுரத் தூண்களை ஒத்துள்ளன. சுற்று மாளிகையினும் தாழ இருக்குமாறு சக்கரபாணி இறைவனின் இறையகம், முகமண்டபம், பெருமண்டபம் அமைந்துள்ளன. விமானம் சாலைப்பத்தி முன்தள்ளலுடன் கோபுரம் போலவே உறுப்பு வேறுபாட்டுடன் அமைந்த தாங்குதளம் ஐந்து உபான அடுக்குகளின் மேல் அமைந்துள்ளது. சாலைப்பத்தி உபானங்களுள் ஒன்று தாமரை உபானமாக, அதன் தாங்குதளம் கபோத பந்தமாக உள்ளது. கர்ணபத்திகள் பாதபந்தத் தாங்குதளம் கொண்டுள்ளன. வேதிகை, சாலைப்பத்தியில் இயல்பான வடிவிலும் கர்ணபத்திகளில் கபோத வடிவிலும் மாறி அமைந்துள்ளது. திருப்பத்தூண்கள் பாம்புப்படப் பாதத்தின் மீதெழும் பன்முகத் தூண்களாகத் தாமரைப் பலகையுடன் அமைய, சாலை அணைவுத் தூண்கள் பாலியுடன் எண்முகத் தூண்களாக உள்ளன. சுவரின் முப்புறத்தும் உள்ள கோட்டங்களை பாம்புப்படப் பாதத்தின் மீதெழும் பன்முகச் சட்டத்தலை அரைத்தூண்கள் தழுவியுள்ளன. மேலே கபோதம், பூமிதேசம், கிரீவம், சாலை சிகரம். தெற்குக் கோட்டத்தில் இலட்சுமி நரசிம்மரும் மேற்குக் கோட்டத்தில் இலட்சுமி நாராயணரும் சுகாசனத்தில் காட்சிதர, வடக்குக் கோட்ட வைகுந்தர் உத்குடியாசனத்தில். தென்கோட்டத்தின் முன் அதைத் தனித்துக் காட்டும் முயற்சியாக இருபுறத்தும் சுவரெழுப்பிக் கூரையமைத்துள்ளனர். கூரையின் முகப்பிலுள்ள மகரதோரண நடுப்பகுதியில் திருநாமம் இடையிட்ட சங்கு, சக்கரம். இம்முன்னிழுப்பின் வாயிலொட்டிய தூண்கள் முச்சதுர, இருகட்டாக அமைய, அவற்றை ஒட்டி நான்முக அரைத்தூண்கள். இச்சுவரின் கிழக்குமுகத்தில் பொ. கா. 1505இல் பொறிக்கப்பட்ட கல்வெட்டு. இறையகச் சுவர்த்தூண்கள் அனைத்துமே அழகிய மாலைத்தொங்கல், கட்டு கொண்டுள்ளபோதும் தெற்கிலும் வடக்கிலும் உள்ள கர்ணபத்தித் திருப்பத் தூண்கள் அவற்றின் பன்முகக் கட்டுகளில் செதுக்கப்பட்டுள்ள நந்திஅணுக்கர், அம்மையப்பர், நந்தியுடன் உமை, காவலர்கள், இறையாடல் உள்ளிட்ட சிற்றுருவச் சிற்பங்களால் தனித்துத் தெரிகின்றன. சுவர்த்தூண்களின் பூமொட்டுப் போதிகைகள் கூரையுறுப்புகள் தாங்க, வலபியில் மதலை. குமிழாணிகள் பொருத்திய இருப்புச் சலாகைகள் ஒத்த உள்கட்டமைப்புடன் வளைந்திறங்கும் கபோதம் கூடுவளைவுகளுடன் அமைய, மேலே பூமிதேசம், சுதையுருவங்களுடன் ஆரம். இரண்டாம் தளச் சுவரைப் பஞ்சரங்கள் அழகு செய்ய, கூரையில் நாற்புத்தும் அர்த்தபத்மாசனத்தில் வணங்கிய கருடன். கிரீவகோட்டங்களில் தெற்கில் சுகாசனத்தில் நரசிம்மரும் கிழக்கிலும் மேற்கிலும் இலட்சுமி நாராயணரும் வடக்கில் உத்குடியில் வைகுந்தரும் சுதையுருவங்களாக அமைய, சிகரம் வேசரமாக உள்ளது. அமைய, மேலே தூபி. மண்டபங்கள் விமானத்தை அடுத்து உள்ளடங்கியுள்ள முகமண்டபம் அதே உபான அடுக்குகளுடன் பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, எண்முக, நான்முக அரைத்தூண்கள் தழுவும் கோட்டங்களற்ற சுவர், கூரையுறுப்புகள் கொள்ள, அதன் முன் விரியும் பெருமண்டபமும் அதே கட்டமைப்பில் சுவர்த் தூண்களின்றித் திருப்பத் தூண்கள் மட்டுமே பெற்று காட்சி யளிக்கிறது. முகமண்டபம் கண்டபாதங்களிலும் பெருமண்டபம் கண்ட, வேதிபாதங்களிலும் பல்வேறு நிலையிலான பூதங்களைச் சிற்றுருவச் சிற்பங்களாகப் பெற்றுள்ளன. இச்சிற்பத்தொகுதி முகமண்டபத்தின் தென்புறம் அமையவில்லை. விமானத்தின் கண்ட, வேதிபாதங்களில் இடம்பெறாத இப்பூதத் தொடர் மண்டபங்களில் மட்டுமே இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. பெருமண்டப வலபியில் ஆங்காங்கே பூதவடிவங்கள். பெருமண்டப வடபுற மேற்குச்சுவரில் ஆடற்சிற்பமும் ஆடவர் கருடாசனத்தில் இரு கைகளையும் உயர்த்திய நிலையில் உள்ள சிற்பமும் இடம்பெற்றுள்ளன. காவலர்கள் நடைமண்டபத்தின் மேற்கிலுள்ள பெருமண்டப வாயிலின் தெற்கில் இருவரும் வடக்கில் இருவருமாய்க் கோரைப்பற்களுடன் காவலர்கள். நால்வருமே தனித் தளங்களின் மீது உருள் பெருந்தடிகளுடன் நிற்கின்றனர். வாயில் அருகிலுள்ள உயரக் குறைவான காவலர்கள் சண்டன், பிரசண்டன் எனும் பெயர்களுடன் விளங்க, தள்ளியுள்ளவர்களை ஜயன், விஜயன் என்கின்றனர் கோயிலார். நால்வரின் பின் கைகளிலும் சங்கு, சக்கரம் விளங்க, முன் கைகளில் ஒன்று அச்சுறுத்தும் முத்திரையில். மற்றொன்று உருள்பெருந்தடி மீது தாங்கலாக இருத்தப்பட்டுள்ளது. நால்வரில் பிரசண்டனின் இடக்கை வேழமுத்திரையில் உள்ளது. தள்ளியுள்ள இருவரும் சமபாதத்திலிருக்க, வாயிலருகிலுள்ள இருவரும் வாயிலுக்காய் ஒருக்கணித்து, ஒரு பாதத்தை உருள்பெருந்தடியின் மீது இருத்தியுள்ளனர். தள்ளியுள்ளவர்களின் உருள்பெருந்தடியையும் பிரசண்டரின் தடியை யும் பாம்பு சுற்றியுள்ளது. உட்புறம் பெருமண்டப வாயிலை நான்முக அரைத்தூண்கள் தழுவ, மேலே கூரையுறுப்புகள். கபோதம் இரண்டு கூடுவளைவுகளுடன் விளங்க, அவற்றிற்கு இடைப்பட்டுத் திருநாமம். வாயிலின் வலச்சுவரில் சுதையில் சக்கரம், சங்கு. பெருமண்டபத்தின் உட்புறத்தே வடக்கிலுள்ள மேடையில் உற்சவத் திருமேனியாய்ச் சக்கரத்தாழ்வாரும் தாயாரும் விளங்க, மண்டபக் கூரையைத் தெற்கில் இரண்டும் வடக்கில் இரண்டுமாய் நாற்சதுர, முக்கட்டுத் தூண்கள் பூமொட்டுப் போதிகையுடன் தாங்குகின்றன. உற்சவராய் உள்ள சக்கரத்தாழ்வாரின் வலக்கைகளில் மேலிருந்து கீழாகச் சக்கரம், கத்தி, அங்குசம், தாமரை விளங்க, இடக்கைகளில் மேலிருந்து கீழாகச் சங்கு, உருள்பெருந்தடி, பாசம், வில்-அம்பு உள்ளன. அருகில் அர்த்தபத்மாசனத்திலுள்ள தாயாரின் பின் கைகள் தாமரைகள் கொள்ள, முன் கைகள் காக்கும், அருட் குறிப்பில். பெருமண்டபத்தின் பின்னுள்ள முகமண்டபத்தின் எளிய வாயிலின் மேல்நிலையை மூடியுள்ள பித்தளைத் தகடு இருபுறத்தும் கருடாசனத்தில் வணங்கிய நிலையில் கருடனையும் ஆஞ்ச நேயரையும் கொள்ள, அடுத்த நிலையில் திருநாமம் இடைப்பட சக்கரம், சங்கு. தூண்களற்ற சிறிய முகமண்டபத்தை அடுத்த கருவறையில் மூலவராகவும் உற்சவராகவும் தாயாருடன் சக்கரத்தாழ்வார். கருவறை கருவறையில் பின்சுவரொட்டிய மேடை மீதுள்ள பெருஞ் சக்கரத்தைத் தாவும் சிம்மயாளிகள் தாங்க, சக்கரத்தின் நடுவில் சமபாதத்தில் தளத்தின் மீது நிற்கும் சக்கரத்தாழ்வாரைக் குந்துசிம்மம் தலையில் தாங்குகிறது. சுடர்முடியுடனான மகுடம், பனையோலைக் குண்டலங்கள், பல்வேறு கழுத்தணிகள், தோள், கை வளைகள், முப்புரிநூல், உதரபந்தம், இடையாடை கொண்டு விளங்கும் இறைவனின் வலக்கைகளில் முன் கை தாமரையேந்த, பின் கைகளில் அங்குசம், கத்தி, சக்கரம். இடக்கைகளில் முன் கை வில், அம்பு கொள்ள, பின் கைகளில் பாசம், உருள்பெருந்தடி, சங்கு. சக்கரத்தாழ்வாரின் இடப்புறத்தே தளத்தின் மீது அர்த்தபத்மாசனத்தில் மூலவராய் விஜயவல்லித் தாயார். பின் கைகளில் தாமரைகள் கொண்டுள்ள அவரது முன் கைகள் காக்கும், அருட் குறிப்புகளில். மேடையில் அடுத்த நிலையிலுள்ள உற்சவர் திருமேனிகள் மூலவரை ஒத்துள்ளன. கோட்டச் சிற்பங்கள் தெற்குக் கோட்டத்தில் இடத்தொடையில் இலட்சுமி வீற்றிருக்க சுகாசனத்திலுள்ள நரசிம்மரின் இட முன் கை தேவியை அணைத்துள்ளது. கரண்டமகுடம், முப்புரிநூல், உதரபந்தம், தோள், கை வளைகள், பட்டாடை பெற்றுள்ள நரசிம்மரின் பின் கைகளில் சங்கு, சக்கரம் விளங்க, வல முன் கை காக்கும் குறிப்பில். வணங்கிய கைகளுடன் உள்ள இறைவி கரண்டமகுடம், பனையோலைக் குண்டலங்கள், தோள், கை, வளைகளுடன் இடையில் பட்டாடை விளங்கக் காட்சிதருகிறார். சுகாசனத்திலுள்ள மேற்குக் கோட்ட இலட்சுமி நாராயணரின் இடத்தொடையில் இருகைகளையும் கூப்பிய நிலையில் பட்டாடையுடன் இலட்சுமித்தேவி அமர்ந்துள்ளார். கரண்டமகுடம், பனையோலைக் குண்டலங்கள், நெற்றிப்பட்டம், தோள், கை வளைகளுடன் விளங்கும் அம்மையை அணைத்தவாறு நாராயணரின் இட முன் கை அமைய, அவரது வல முன் கை காக்கும் குறிப்பில். கிரீடமகுடம், மகரகுண்டலங்கள், சரப்பளி, முப்புரிநூல், தோள், கை வளைகள், பட்டாடை, தாள்செறியுடன் திகழும் இறைவனின் பின் கைகளில் சங்கு, சக்கரம். இரு இறைத்திருமேனிகளும் பாதமிருத்தத் தனித் தளங்கள். வடக்குக் கோட்டத்தை அணிசெய்யும் வைகுந்தர் பாம்பு இருக்கையில் உத்குடியில் உள்ளார். வல முன் கை தளத்திலிருக்க, இட முன் கை முழங்கால் தொட்டு நெகிழ்ந்துள்ளது. கிரீடமகுடம், மகரகுண்டலங்கள், தோள், கை வளைகள், சரப்பளி, பட்டாடை பூண்டவராய்ப் பின் கைகளில் சங்கு, சக்கரமேந்தி எழிலுடன் விளங்கும் வைகுந்தருக்குக் குடையெனப் பாம்பின் தலைகள் விரிந்துள்ளன. பக்கத்திற்கொருவராய் வணங்கிய கைகளுடன் தேவியரிருவரும் பாம்பிருக்கையை ஒட்டி நிற்கின்றனர். - வளரும் |
சிறப்பிதழ்கள் Special Issues
புகைப்படத் தொகுப்பு Photo Gallery
|
| (C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. | ||