![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [188 Issues] [1844 Articles] |
|
Issue No. 188
இதழ் 188 [ ஏப்ரல் 2026 ]
இந்த இதழில்.. In this Issue..
|
ஆசிரியர்: www.glorioustamils.com; www.attraithingal.com வலையொலி/ podcast- அற்றைத்திங்கள்…. வலையொலியில் தமிழொலி நாவுக்கரசரின் எழுச்சி முழக்கம்- கங்கை யாடிலென் காவிரி யாடிலென்! அன்பே பத்திமையென்று நாயன்மார் அனைவரும் வலியுறுத்தியபோதும், பத்திமையில் பகுத்தறிவு அப்பருக்கேயுரிய சிறப்பு. அதை மேலும் மேலும் ஆணித்தரமாக உணர்த்தியவை அவர்தம் பதிகங்கள். குலவேறுபாடும் கோத்திரச் சார்புகளும், மனிதருள் பிரிவினை ஏற்படுத்துவதும் எளியோரைத் தள்ளிவைப்பதுமான இழிசெயல்களென உலகிற்குரைத்த அச்சமில்லாப் பத்திமைக்குச் சொந்தக்காரர் நாவுக்கரசர் என்பதைச் சென்ற பதிவில் கண்டோம். சாத்திரம் பேசாதீர் என்று திட்டமாகச் சொன்னதும் குலமும் கோத்திரமும் கொண்டென் செய்வீர் என்று சினந்து கேள்வியெழுப்பியதும் நாவுக்கரசர் என்ற சமூகப் போராளியின் ஒரு சிறுமுகந்தான். அவர் பதிகங்கள் காட்டும் வியத்தகு பன்முகங்களில் இழையோடி நிற்பது எழுச்சி வித்துக்களே. இன்றும் பேசவும் எழுதவும் பலரும் தயங்கும் மிகச்சீரிய முற்போக்குக் கருத்துகளைக் குறிப்பாக ஒரு பதிகம் முழுக்க முன்வைத்தார் அவர். அது ஐந்தாம் திருமுறையில் வகுக்கப்பட்ட ‘பாவமும் பழிபற்றற வேண்டுவீர்..’ எனத் தொடங்கும் பொதுப்பதிகம். இறைவனின் கழலடியை மகிழ்ந்து உள்நிறுத்த, காவலராம் சிவபெருமான் கலந்தருள் செய்வார் என்று மென்மையாகவே தொடங்குகிறது பதிகம். முதல் பாடலுக்கு மட்டுமே மென்மைப் பாங்கை வைத்தார் அப்பர். பதிகத்தின் மற்ற பாடல்கள் தீப்பொறி பறக்கும் எரிமலைக் குழம்பு. முதல் பாடல் தவிர்த்த மற்ற ஒன்பது பாடல்களிலும் சிவனை மையப்பொருளாக மனத்திருத்திப் பற்றவேண்டிய நெறிகளைச் சொன்னார். அவை- • எங்கும் ஈசன் என்று சொல்லவேண்டும் • இட்டமெல்லாம்- விருப்பமெல்லாம் ஈசனுடையதே என நினைக்க வேண்டும் • ஈசனை உள்கவேண்டும் • மனம் பொருந்தி ஈசனென்றுருக வேண்டும் • ஞானமயமானவன் இறைவன் என்றுணர வேண்டும் • ஆடல்வேடத்தைத் தரித்தவனாகிய அம்பலக்கூத்தனைப் பாடவேண்டும் • என்றும் ஈசனென்று தொழவேண்டும் • அரன்பால் அன்புகொள்ளவேண்டும் • கழலணிந்த இறைவன் சேவடியைப் பற்றிநிற்றல் வேண்டும். பதிகத்தில் சொல்லப்படும் மேற்கூறிய பற்றுதல்நெறிகள், சமய வழிகாட்டிகள் வகுத்துத்தந்த கடினப் பாதையை மிகமிக எளிதாக்கிய பட்டியல். அதனுள் அப்பர் பதியவைக்கும் பகுத்தறிவுச் சாரமே காலத்தை விஞ்சிநிற்கும் உணர்வுமுழக்கம். பிணி தீர்க்கும் கசப்பு மருந்தில் தேன் கலந்தாற்போல, முற்போக்குச் சிந்தனைகளைத் தமிழ்க் கலந்து தந்த தமிழ்த் தொண்டரும் அவரே. நல்லவற்றையும் அல்லவற்றையும் பகுத்துணரும் பேராற்றலை மனிதர்குலம் பெற்றபோதும், அதனைக் கட்டிவைத்து பின்னுக்கிழுக்கும் காரணிகள் பலவுண்டு. அதில் முதன்மையானது, இறைவழிபாட்டில் சடங்குகள். இறைவனைக் காட்டிலும் வலிமையானவை இந்தச் சமயச் சடங்குகள் என்று நினைக்கத் தோன்றுமளவிற்கு அவை மாந்தரைப் பிணித்துவைக்கக் காணலாம். சடங்குகள்பால் மதிப்பையும் ஈர்ப்பையும் காட்டிலும் சடங்குகளைக் கடைப்பிடிக்காவிடில் ஏற்படும் பாதிப்புகளைச் சுட்டி அச்சமூட்டும் குழுவினரை, இறைவனைக் காட்டிலும் ஆற்றல் மிகுந்தோராகச் சமூகம் ஏற்றிவைப்பது இன்றும் தொடரும் அவலநிலை. அப்படிச் சொன்னோரையும் அவர்கள் விதித்த பத்திமைக் கட்டுப்பாடுகளையும் புறந்தள்ளச் சொன்ன புதுமைக்குச் சொந்தக்காரர் ஏழாம் நூற்றாண்டு நாவுக்கரசர். பத்திமைக் காலம் வலியுறுத்திய வேத வேள்வி சாத்திரச் சடங்குகளை, உள்ளன்புடன் அணுகிய மக்களை இறைவனிடமிருந்து தள்ளிவைத்த முறைகளெனவே அப்பர் பார்த்ததை அவர் பதிகவழி புரிந்துணர முடியும். எவற்றையெல்லாம் எதிர்த்துப் போராடினார் நாவுக்கரசர்? குறிப்பாக நாம் நோக்கும் இந்தப் பதிகத்தில் அப்பர் முன்வைக்கும் முற்போக்குக் கருத்துகள் என்னென்ன? ஏழாம் நூற்றாண்டின் சமயச் சடங்குகளைச் சொல்லம்புகளால் எதிர்த்த அப்பரின் இப்பதிகம், அன்றைய சமூகம் சிக்குண்ட போக்கையும் இன்றும் பகுத்துணராச் சமூகத்துத் துன்பியலையும் ஒருசேரக் காட்டும் காலக்கண்ணாடி. அவர் கையிலேந்தியது சுற்றுச்சூழலைத் தூய்மைப்படுத்திய உழவாரக் கருவியல்ல; வேதச் சட்டங்கள் மற்றும் சமயச் சடங்குகளென்ற விலங்குகளை உடைத்தெறிய முயன்ற உளியென்றே சொல்லவேண்டும். இறைவனின் கழலடிகளை விரும்பி உள்ளன்புடன் நினைக்க, அன்பர் மனத்துடன் கலந்தருள் செய்வார் அவரென்று பதிகத்தைத் தொடங்கினாரில்லையா? அடுத்தடுத்த பாடல்களில், உயர்ந்தவையென்று பத்திமைச் சமூகம் போற்றிச் சொன்ன விதிகளை நோக்கிச் சரமாரியாக எதிர்க்கேள்விகளைத் தொடுத்தார். ஆன்மிகத்தில் ஆறுகளுக்குச் சிறப்பிடம் உண்டு. பாவங்களைப் போக்கும் வழிகளுள் ஒன்றாகப் புனித நீராடலைப் போற்றுவர். இரண்டாவது பாடலில், ‘கங்கை யாடிலென் காவிரியாடிலென்- கொங்கு தண்குமரித்துறை யாடிலென்- ஒங்கு மாகடலோத நீராடிலென்’, என்று கங்கை, காவிரி, குமரி ஆகிய ஆறுகளிலும் பெருங்கடலிலும் நீராடுவதைக் காட்டிலும் உயர்ந்தது எங்கும் ஈசனென்று சொல்வதே என்று ஓங்கியுரைத்தார் அப்பர். மூன்றாவது பாடலிலோ சாடலைச் சற்றே உயர்த்தினார். சைவ சித்தாந்தத்தில் 11 ருத்திரரும் மனம் ஒன்றுடன் சேர்ந்த 10 வாயுக்களும் என்று எண் பதினொன்றுக்கும் சிறப்புண்டு. கோயில் வழிபாட்டை முன்னின்று நடத்தும் பட்டரானாலென்ன? இறைவழிச் சான்றோர் சொன்ன சாத்திரங்களைக் கேட்டாலென்ன? அடுத்தவருக்குக் கொடுத்து மகிழும் ஈதலைப் பற்றினாலென்ன? சித்தாந்தங்கள் வகுத்த பதினொன்றை அறிந்தால் கிட்டும் பயன்தானென்ன? விருப்பமெல்லாம் ஈசனொருவனே என்று சொல்லாதவர்களுக்கு அவற்றால் பயன் ஒன்றுமில்லையாம். ‘படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு’ என்று வள்ளுவர் அரசியலில் ஆறங்கம் விளக்க, பத்திமையை உரிமை கொண்டாடிய குலங்களோ வேதத்தின் ஆறங்கங்களை முன்வைத்தன. அப்பரின் எதிர்ப்புக்குரல் அதையும் சுட்டத் தவறவில்லை. அடுத்த பாடலில், ‘வேத மோதிலென் வேள்விகள் செய்யிலென் நீதிநூல்பல நித்தல் பயிற்றிலென் ஓதியங்கம் ஓராறு முணரிலென்’….ஈசனை மனத்துள்வைத்து உருகுவார்களுக்கு மட்டுமே அருளுண்டு என்றுரைத்தார். சமயம் சார்ந்த சில கடமைகளை அடுத்த பாடலில் குறிப்பிட்டார். மனம் பொருந்தி ஈசனென்றுருகாமல் அதிகாலையில் குளித்து, தவறாமல் விதிகளின்வழி நின்று, ஆலைகளில் வேள்விகள் செய்தாலும் பயனொன்றும் கிட்டப்போவதில்லை என்பதே அது. ஞானமெய்தும் பொருட்டு, காடுகளில் திரிவதும் பெருந்தவங்கள் புரிவதும் உணவையொழித்து நோன்பிருந்து வானை நோக்குவதும் என்ன பயனைத் தந்துவிடும்? இறைவன் ஞானமாகியவன் என்றுருகுவார்களுக்கன்றி மற்றவர்களுக்கு நன்மையில்லை என்பது அவருடைய தெளிவு. பத்திமை விதிகளால் கட்டுண்டோரும் அவ்விதிகளே இறைவனையடையும் வழிகளென்று மற்றவரைக் கட்டுக்குள்வைக்க முற்பட்டோரும் இந்நேரத்திற்குள் பதுங்க இடம் தேடியிருக்கக்கூடும். அந்த அளவிற்குத் தாக்கம் நிறைந்த சொல்லாடல் நாவுக்கரசருடையது. அம்பலக்கூத்தனைப் பாடாமல் வேடங்கள் புனைந்து பத்திமைப் பூண்டோரையும் ஊனை வருத்தித் திரிவோரையும் முன்னிறுத்தி அம்பு தொடுத்தார் அடுத்த பாடலில். ‘உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு’, என்று தவத்தின் உருவை வள்ளுவர் அனைவருக்கும் பொதுவாக்கித் தெளிவுபடுத்தினார். தாமுற்ற துன்பத்தைப் பொறுப்பதும் பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாமலிருப்பதுமே தவமாம். அப்பரோ தவத்தைக் கொண்டு வேறொரு பார்வையை முன்வைக்கிறார். நன்கு தவம் செய்தாலும், பட்டினி கிடந்தாலும், குன்றமேறிப் பெருந்தவம் புரிந்தாலும் ஒரு பயனுமில்லை; ஈசனென்று சொன்னால்மட்டுமே பயனுண்டு என்பதே அவருடைய எளிய வாக்கு. அன்பையும் பற்றையும் விடுத்து இறைவனுக்கும் அன்பருக்குமிடையே பலவிதத் தளைகளை ஏற்படுத்திய சமூகத்தை நோக்கி, இதைவிட அழுத்தமாகக் கேள்வியெழுப்பிய துணிவு எவருக்காவது அவர் காலத்தில் மட்டுமல்ல தொடர்ந்த நூற்றாண்டுகளிலும் இருந்திருக்குமா? அப்பரின் சாட்டையடிக்கிணையாக வேறொரு பத்திமைப் படைப்பைப் பார்க்கவியலாது. கங்கைக் காவிரிக் குமரி நீராடலும், வேத வேள்வி நீதிநூல் சாத்திரங்கள் ஓதலும், காடு திரிந்து தவம் செய்தலும், பட்டினி கிடந்து உடலை வருத்தலும், இறைவன்பால் கொண்ட உண்மை அன்பின்முன் ஒன்றுமில்லை என்பதை அன்பாகச் சொன்னால் இன்றும் கேட்பார் யார்? அதற்காகவே கணைகள் தொடுக்கும் இந்தப் பதிகம் முழுதும் தந்தவர், ஒன்பதாவது பாடலில் உணர்ச்சிப் பிழம்பாய் வெடித்தார். கோடி தீர்த்தங் கலந்து குளித்தவை ஆடி னாலும் அரனுக்கன் பில்லையேல் ஓடு நீரினை யோட்டைக் குடத்தட்டி மூடி வைத்திட்ட மூர்க்கனோ டொக்குமே (05.099.09) பார்த்துப் பார்த்துப் பேசிப் பேசிச் சொல்லிச் சொல்லிப் பொறுமை காத்துச் சோர்ந்துபோன அப்பரின் தொண்டுள்ளம் பொறுமையிழந்த பல நேரங்களில் உதிர்த்த வரிகளின் வீச்சு, இன்றும் நம்மைத் தாக்கும் இயல்புடையது. அதனால்தான், அரனிடத்தில் அன்பின்றிச் சடங்குகளை மட்டும் தவறாமல் கடைப்பிடிப்போரை மூடரென்று சினந்து கூறுகிறார். அதிலும், ஓடும் நீரை ஓட்டைக் குடத்தில் மூடி வைத்த மூடருக்குச் சமமானவர்களாம் அத்தகையோர். ‘அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்’ என்று வள்ளுவர் சொன்ன அறிவார் தொழிலைப் பத்திமை நெறியில் புகுத்திப் பொருள் சொன்னவர் நாவுக்கரசர். அதனால்தான் தனித்தொளிரும் சமூகப் பார்வையால், தேவையற்ற சடங்குகள் பிரிவினைகள் வேறுபாடுகள் கட்டுப்பாடுகள் களைந்து வாழ உறுதிபடப் பாடினார். ஒற்றை மனத்தில் இறைவன் ஒருவன்பால் ஒருமுகப்படுத்தப்பட்ட பற்றை மட்டுமே அச்சாணியாகக் கொண்டு நகரும் வாழ்வில், பிரிவினைகள் மட்டும் பலப்பலவாக இருப்பது சரியா? அன்புநிறைந்த நெஞ்சத்தகத்தில் வேறுபடுத்தும் சிந்தனைகள் எதற்கு? தாம் கடந்துவந்த பெருந்துயர் வாழ்க்கையில் தம் இன்னல் களைந்த ஈசனை மட்டும் நினைக்கவில்லை அப்பர். அந்த ஈசனைப் பற்றிய அடியார்கள் நிலையையும் எண்ணியெண்ணிப் புழுங்கிய மனம் அவருடையது. அதனால்தான், அவர் பாடல்கள் வெறும் பாடல்களாக மட்டும் ஒலிக்காமல், பாடங்களாகவும் திகழ்கின்றன. நன்றி: டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம், திருச்சிராப்பள்ளி. |
சிறப்பிதழ்கள் Special Issues
புகைப்படத் தொகுப்பு Photo Gallery
|
| (C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. | ||