![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [188 Issues] [1844 Articles] |
|
Issue No. 188
இதழ் 188 [ ஏப்ரல் 2026 ]
இந்த இதழில்.. In this Issue..
|
கல்வெட்டுகளில் சிற்பங்களில் பெண்தெய்வங்கள் கி.பி. 250ல் ஆந்திரத்தின் தென்பகுதியிலும் தமிழ்நாட்டின் வடபகுதியிலும் கால்கொண்ட பல்லவராட்சி கி.பி. 590 வரை செப்பேடுகளைப் பிராகிருதத்திலும் வடமொழியிலும் வெளியிட்டுள்ளதெனினும் அவற்றுள் ஒன்றிலும் பெண் தெய்வங்கள் இடம்பெறவில்லை. இக்காலகட்டத்தில் பாண்டிய நாட்டில் களப்பிரர் ஆட்சி நடந்தது. இக்காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் பூலாங்குறிச்சிக் கல்வெட்டுகளும் தேவகுலங்களைக் குறிக்கின்றனவே தவிரப் பெண்தெய்வங்களைச் சுட்டவில்லை. தமிழ்நாட்டுக் கல்வெட்டுகளில் இடம்பெறும் முதல் பெண் தெய்வம் பார்வதியான உமையன்னைதான். திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டையின் மேல்குடைவரையிலுள்ள பல்லவ மன்னர் முதலாம் மகேந்திரவர்மரின் கல்வெட்டு,(42) நதிப் பிரியனான சிவபெருமானை அங்குத் தனியே விட அஞ்சி மலையரசர் மகளும் உடன் வந்ததாகக் கூறுகிறது. மாமல்லபுரத்து அதிரணசண்டேசுவரத்திலும் காஞ்சிபுரம் மகேந்திரவர்மேசுவரம் கோயிலிலும் கிடைக்கும் பல்லவக் கல்வெட்டுகள்(43) உமையை மலைமகளாகச் சுட்டி, இறைவனுடன் உமையும் அக்கோயில்களைத் தங்கள் நிரந்தரக் குடியிருப்புகளாக்கிக் கொள்ளுமாறு வேண்டுகின்றன. கி.பி. ஆறாம் நூற்றாண்டின் இறுதிக்கும் எட்டாம் நூற்றாண்டின் இறுதிக்கும் இடையிலான காலகட்டத்தில் (கி. பி. 590-796) தமிழ்நாட்டில் நிலவிய பெண்தெய்வ வழிபாட்டு அமைப்பை அறியச் சிற்பங்களே பெருமளவிற்கு உதவுகின்றன. இந்த நூற்றாண்டுகளில் வடதமிழ்நாடு பல்லவராட்சியிலும் தென் தமிழ்நாடு பாண்டியர் ஆட்சியிலும் இடைப்பட்ட பகுதிகள் முத்தரையர் போன்ற சிற்றரசர்கள் ஆட்சியிலும் இருந்தன. சங்க மக்களின் முழுமுதற் பெண்தெய்வமாய் விளங்கிய கொற்றவையைத் தேவாரப் பெரியவர்கள் மறந்தபோதும் மக்கள் விடவில்லை. குறிப்பாக வடதமிழ்நாட்டில் கொற்றவை வழிபாடு துர்க்கை வழிபாடாகிச் சீரோடும் சிறப்போடும் தொடர்ந்தது. உமையை ஏற்றுக்கொண்டபோதும், அவரையே சிவபெருமானுடன் உறையும் கருவறைத் தெய்வமாய் அமைத்தபோதும் பல்லவ மன்னர்களால் வீரத் தெய்வமான பழங்கொற்றவையை விட்டுக்கொடுக்கக் கூடவில்லை. மக்கள் தெய்வமாக இருந்த காரணத்தாலேயே கொற்றவை தொடர்ந்து கோயில்களில் துர்க்கையாக எழுந்தருள முடிந்தது. கொற்றவை, பல்லவ மண்ணில் மட்டுமல்லாது பாண்டிய மண்ணிலும் தமக்கெனத் தனிக்கோயில் பெற்றார்; கோட்டத் தெய்வமாகவும் இருந்தார். வடதமிழ்நாட்டினர் சீராட்டிய அளவிற்கு இல்லையாயினும், தென்தமிழ்நாட்டிலும் அவருக்கு இடமிருந்ததைப் பரங்குன்றம், குன்றக்குடிக் குடைவரைச் சிற்பங்கள் உணர்த்துகின்றன. தமிழ்நாட்டின் இருபகுதிகளிலும் உமை, சோமாஸ்கந்தர் தொகுதியில் இடம்பெற்றதுடன், சிவபெருமானுடன் இணைந்தமர்ந்து அவரை உமாசகிதராக்கினார். இறைவனின் பெரும்பாலான திருத்தோற்றங்களில் அவர் தேவி என்ற நிலையிலும் காட்சிதந்தார். புதிய வரவான எழுவர் அன்னையர் தொகுதி தென்தமிழ்நாட்டில் பெற்ற பரவலான வரவேற்பை வடதமிழ்நாட்டில் பெறக்கூடவில்லை. பாண்டியர் பகுதியில் திருக்கோளக்குடி, குன்னத்தூர், கோகர்ணம், பரங்குன்றம், மலையடிப்பட்டி எனும் ஐந்து குடைவரைகளில் இடம்பெற்ற இத்தொகுதி வடதமிழ்நாட்டில் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலில் மட்டுமே காணப்படுகிறது. திருக்குறளில் தலைகாட்டும் ஜேஷ்டை,(44) எவ்வித இலக்கியப் பின்புலமும் அற்ற நிலையில், இக்காலகட்டத்துப் பெண் தெய்வமாய்த் தமிழ்நாட்டின் இருபகுதிகளிலும் தோற்றம் காட்டுகிறார். காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலிலும், பரங்குன்றத்திலும் ஏறத்தாழ ஐம்பதாண்டுக் கால இடைவெளியில் அறிமுகமாகும் ஜேஷ்டை, தனிக் கோயில் தகுதியைப் பெற்றிருந்தமை அத்தெய்வத்தின் வழிபாட்டு முக்கியத்துவத்தை உணர்த்தவல்லதாகும். தந்திவர்மப் பல்லவர் காலத்திலிருந்து சோழர்களின் தொடக்கக் காலம் வரை (கி. பி. 796 - 946) ஏறத்தாழ ஒன்றரை நூற்றாண்டுக் காலத்திற்குத் தமிழ்நாடெங்கிலும் பரவலாகக் கிடைக்கும் கல்வெட்டுகளைத் தொகுத்தாராய்கையில் பல அரிய தகவல்கள் கிடைக்கின்றன. அவற்றுள் குறிப்பிடத்தக்கது 'பிடாரி' எனும் சொல். கல்வெட்டுகளில் பிடாரி என்றும், படாரி என்றும், பட்டாரி என்றும் வழங்கும் இச்சொல், பெண்தெய்வத்தைக் குறிக்கும் பொதுச் சொல்லாகவே வழங்கியுள்ளது. மாயா படாரி, மாகாளத்துப் பிடாரி, துர்க்கா படாரியார், உமா பிடாரி எனும் சொல்லாட்சிகள் இக்கருத்துக்கு அரணாகின்றன.(45) ஆலம்பாக்கம் கல்வெட்டில் அன்னையர் எழுவர் கோயில், படாரி கோயில் என்றே சுட்டப்படுகிறது.(46) இக்காலகட்டத் தமிழ் இலக்கியங்களிலோ, இவற்றிற்குக் காலத்தால் முற்பட்ட தேவாரப் பதிகங்களிலோ ஆளப்பெறாத இச்சொல், கல்வெட்டுகளில் பெருவழக்குப் பெற்றிருப்பது எளிய மக்களிடையே இச் சொல்லுக்கு இருந்த செல்வாக்கை உணர்த்துவதாய் அமைகிறது. சாத்தம் படாரி, வேளான் படாரி, ஆதித்த படாரி, பட்டம் படாரி(47) என மக்களும் அறியப்பட்டமை இக்கருத்தை உறுதி செய்கிறது. இச்சொல்லுக்கு இணையான ஆண்பாற் சொல்லாக படாரர்(48) எனுஞ் சொல் கல்வெட்டுகளில் ஆண் தெய்வங்களைக் குறிக்க ஆளப்பட்டுள்ளது. இச்சொற்களே பின்னாளில் பட்டாரகர், பட்டாரகி என்று மாற்றம் பெற்றன. துர்க்கா படாரியார் என்று சீனிவாசநல்லூர்க் கல்வெட்டில் குறிக்கப்படும் துர்க்கை, புள்ளலூர் இராஜகேசரிக் கல்வெட்டில் துர்க்கா பட்டாரகியாகச் சுட்டப்படுவதும், உமா பிடாரி முதற் பராந்தகர் கல்வெட்டில் உமா பட்டாரகியாக அழைக்கப் பெறுவதும் இதைத் தெளிவாக்க வல்லன.(49) கல்வெட்டுகள் சுட்டும் பிடாரிக் கோயில்களுள் சில எத்தகு பெண்தெய்வத்தைக் கொண்டிருந்தன என்பதை அறியக்கூடவில்லை. இத்தகு கோயில்களுள் குறிப்பிடத்தக்கது நியமத்தில் இருந்த மாகாளத்துப் பிடாரிக் கோயில். இன்றைய செந்தலை சுந்தரேசுவரர் கோயிலின் முன்மண்டபத்தில் நிறுத்தப்பட்டுள்ள தூண்களில் காணப்படும் பல்லவ, பாண்டிய, முத்தரையர் காலக் கல்வெட்டுகள்(50) இக்கோயில் தெய்வத்திற்கு நடந்த வழிபாடுகளையும் இவ்வம்மைக்கு அளிக்கப்பட்ட கொடைகளையும் சுட்டுகின்றன. இப்பிடாரியின் திருமுன் நந்தாவிளக்குகள் ஏற்றப்பட்டன; திருவமுது படைக்கப்பட்டது. இத்தேவியின் கோயிலில் ஆராதனை செய்தவர், திருவமுது சமைத்தவர், தூபமும் மணியும் பிடித்தவர், கோயிலைத் தூய்மை செய்தவர், நந்தவனப் பணியாளர் ஆகியோர் இருந்தனர். பல்லவ, பாண்டியச் சிற்பங்களிலும் பின்னாளைய பரணி தரும் காணிக்கைச் செயல் குறித்து ஒரு கல்வெட்டுக் கிடைததுள்ளது.(51) கம்பவர்மப் பல்லவரின் கல்வெட்டாக அமைந்துள்ள இதில், பட்டைப் பொத்தன் என்பானுக்குப் படாரி நன்மை செய்ததென்று, நாகன் ஒக்கதிந்தன் நவகண்டங் கொடுத்து, அத்துடன் நில்லாது தன் தலையையும் அறுத்து இறைவியின் பலித்தளத்தில் வைத்த செய்தி காணப்படுகிறது. தலைக் காணிக்கை நிகழ்ந்துள்ளதால் இந்தப் படாரியை துர்க்கா படாரியாகக் கொள்ளலாம்.(52) படாரி என்ற பெயரைப் போலவே துர்க்கை என்ற பெயரும் மக்களுக்கு வழங்கியது. துக்கையன் கிரமவித்தன், துக்கையன் சாத்தன், துக்கையன் ஆட்டி எனும் பெயர்களை இக்காலக் கல்வெட்டுகளில் பெறமுடிகிறது.(53) துர்க்கை வழிபாடு சிறப்புற அமைந்திருந்தமையைப் பல கல்வெட்டுகள் சுட்டுகின்றன. புள்ளலூர்க் கோயிலில் துர்க்கா பட்டாரகிக்குச் சிவபிராமணர் திருவாராதனை செய்தனர்.(54) உத்தரமேரூரில் துர்க்கா பட்டாரகிக்குச் சென்னடை, விளக்குகள், அர்ச்சனா போகம், ஸ்ரீபலி ஆகிய செலவினங்களுக்காக நிலம் வழங்கப்பட்டிருந்தது. திருவூறல் ஆழ்வார் கோயிலில் எழுந்தருளியிருந்த துர்க்கைக்கு நந்தா விளக்குகள் எரிக்கப்பட்டன. கங்கைகொண்டானில் இருந்த ஸ்ரீகைலாயத்து துர்க்கையார்க்கு மூன்று சந்திக்கும் சந்தி விளக்குகள் எரிக்கப்பட்டன. கச்சிப்பேட்டிலிருந்த ஐஞ்சந்தி துர்க்கா பட்டாரகிக்குச் சிறப்பான வழிபாடுகள் அமைந்தன.(55) முற்சோழர் கல்வெட்டுகள் சில, 'காடுகாள்' என்ற பெண் தெய்வத்தைச் சுட்டுகின்றன.(56) இக்காடுகாள் துர்க்கையாகலாம். பல்லவர் காலத்தின் தொடக்கத்தில் தனிப்பெருந் தெய்வமாய்த் தனிக்கோயில்கள் பெற்றுச் சிறந்திருந்த துர்க்கைக்குக் கோட்டத் தெய்வமாகவும் விளங்கும் நிலை இராஜசிம்மர் காலத்தில் தொடங்கியது. பல்லவர்களின் இறுதிக் காலக் கோயில்களில் விமானத்தின் முன்னமைந்த மண்டபத்தின் வடகோட்டத்தில் துர்க்கைக்கு இடமளிக்கப்பட்டது. இந்த வைப்புமுறை சோழர்களால் மாற்றமின்றித் தொடரப்பட்டது. சிராப்பள்ளி மாவட்ட ஆலம்பாக்கத்திலும், சென்னை வேளச்சேரியிலும், காஞ்சிபுரம் மாவட்ட உத்தரமேரூரிலும் எழுவர் அன்னையரைக் குறிக்கும் பழங்காலக் கல்வெட்டுகள் கிடைத் துள்ளன.(57) இவற்றுள்ளும் காலத்தால் முற்பட்டது ஆலம்பாக்கம் செல்லியம்மன் கோயில் கல்வெட்டு. திருவொற்றியூரனான இராயர் அலங்காரப் பிரியனால் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அமைக்கப்பட்ட இக்கோயில் இன்றும் நன்னிலையில் உள்ளது. இக்கோயிலில் உள்ள பெண்தெய்வங்களைக் கல்வெட்டு, 'ஸப்தமாத்ருக்கள்' என்றழைக்கிறது. இற்றைநாள் வரை கிடைத்திருக்கும் கல்வெட்டுச் சான்றுகளின் அடிப்படையில் தமிழ்நாட்டில் அன்னையர் எழுவருக்கென்றே அமைந்த முதல் தனிக்கோயிலாக ஆலம்பாக்கம் செல்லியம்மன் கோயிலை அடையாளப்படுத்தலாம். வேளச்சேரியிலும், உத்தரமேரூரிலும் கிடைத்திருக்கும் கல்வெட்டுகள் அன்னையர் எழுவர் கோயிலில் திருவிளக்கு ஏற்றவும், அத்திருமேனிகளுக்குத் திருவமுது படைக்கவும், அர்ச்சனாபோகம், திருப்பலி ஆகியவற்றிற்காகவும் நிலக்கொடை அளிக்கப்பட்ட தகவலைத் தருகின்றன. தனிக்கோயில் தகுதியைப் பெற்றிருந்த முற்சோழர் காலத்திலேயே, அன்னையர் எழுவர் திருமேனிகள் மையக் கோயிலைச் சுற்றியமைந்த பரிவாரக் கோயில்களுள் ஒன்றில் அடைக்கலமானதையும் காணமுடிகிறது. திருக்கட்டளைச் சுந்தரேசுவரர் கோயில், கீழையூர் அவனிகந்தர்வ ஈசுவர கிருகம் முதலிய முற்சோழர் காலக் கோயில்களில் அன்னையர் எழுவருக்கென அமைத்த பரிவாரத் திருமுன்கள் ஆங்காங்கே சிதைவுற்றபோதும் இன்றளவும் அதே கட்டமைப்பில் காணுமாறு உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.(58) உத்தரமேரூர் சதுர்வேதிமங்கலத்தின் குமண்பாடி ஏரிக்கரையிலிருந்த ஜேஷ்டைக் கோயிலை ஒரு பழங் கல்வெட்டுச் சுட்டுகிறது. திருவையாறு கோயிலில் உள்ள கல்வெட்டொன்று அங்கிருந்த ஜேஷ்டைக்குத் திருநாரண மகாதேவி என்ற சோழ அரசி விளக்கறம் செய்ததைத் தெரிவிக்கிறது.(59) முற்சோழர் காலத்துப் பரிவாரக் கோயில்களுள் ஒன்றில் ஜேஷ்டை இடம்பெற்றதைத் திருக்கட்டளைச் சுந்தரேசுவரர் கோயில் வளாகத்திலுள்ள ஜேஷ்டையின் சுற்றாலைத் திருமுன்னும் திருப்பராய்த்துறைக் கல்வெட்டும் உறுதிப்படுத்துகின்றன. இக்கல்வெட்டில் ஜேஷ்டை திருக்கேட்டைக் கிழத்தி என்று சுட்டப்படுகிறார்.(60) இக்காலகட்டத்தைச் சேர்ந்த அற்புதமான ஜேஷ்டைச் சிற்பங்களை இந்நூலாசிரியர்கள் பல கோயில்களில் கண்டறிந்துள்ளனர். குமண்பாடியில் கோனேரி நங்கைக் கோயிலொன்று இருந்ததாகவும் ஒரு கல்வெட்டால் அறியமுடிகிறது.(61) இக்கோனேரிநங்கை எந்தப் பெண்தெய்வத்தைக் குறிக்கிறது என்பதை அறியக்கூடவில்லை. முதன்முதலாகச் சிலப்பதிகாரத்திலும் காரைக்காலம்மையின் மூத்த திருப்பதிகத்திலும் சுட்டப்பெறும் காளியின் பெயரையும் மக்கள் கொண்டிருந்தமைக்குப் பல கல்வெட்டுகள் சான்றாகின்றன. காளி கேசன், காளி மாறன், நங்காளி, பொற்காளி, காளி நீலி, நக்கன் காளி என்பன அவற்றுள் சில.(62) ஆனால், இதுநாள்வரை கிடைத்துள்ள இக்காலகட்டக் கல்வெட்டுகளுள் ஒன்றுகூட காளி என்ற பெயரில் பெண்தெய்வம் அமைந்திருந்தமையைச் சுட்டவில்லை. 'தேவர்களும் பேய்க்கணங்களும் வணங்கும் திருவடிகளை யுடைய நிசும்பசூதனியின் திருவருளால் நான்கு கடல்களாலும் சூழப்பெற்ற இந்த நில உலக ஆட்சியாகிய பாரத்தை ஒரு பூமாலையைப் போல தரித்த விஜயாலயன் அத்தெய்வத்தின் வடிவத்தைப் பிரதிஷ்டை செய்தான்' என்று குறிப்பிடும் திருவாலங்காட்டுச் செப்பேடும், அச்செய்தியை வலியுறுத்தும் கன்னியாகுமரிக் கல்வெட்டும் சுட்டும் நிசும்பசூதனியைத் தஞ்சாவூரில் அடையாளம் காணக்கூடவில்லை.(63) விஜயாலயன் குறிப்பிடும் திருமேனியின் பெயர் நிசும்பசூதனி என்றிருப்பதால் அத்திருமேனி நிசும்பனைக் கொன்றதாகக் கூறப்படும் காளி அன்னையின் வடிவமாகவே இருக்கவேண்டுமென்று கருதலாம். அப்படியாயின் தமிழ்நாட்டின் உறுதியான முதல் காளி வடிவமாக விஜயாலயர் நிறுவிய நிசும்பசூதனியைக் கொள்ள முடியும். இளங்கோ முத்தரையர் காலத்து நியமத்து மாகாளப் பிடாரியைக் காளியாகக் கொள்ளின், அது விஜயாலயர் எழுந்தருளுவித்த நிசும்பசூதனிக்கும் காலத்தால் முற்பட்ட காளிச் சிற்பமாக அமையும். இவ்விரண்டு சிற்பங்களுமே இன்றைக்குப் பார்வைக்குக் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. காலத்தால் முற்பட்ட காளியின் சிற்பங்கள் சிற்றுருவச் சிற்பங்களாக முற்சோழர் கோயில்களில் டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய ஆய்வர்களால் அடையாளப் படுத்தப்பட்டுள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தக்கன பொன்செய் நல்துணையீசுவரம், கொற்றமங்கலம் விஷ்ணுகோயில், திருச் சென்னம்பூண்டிச் சடையாரி கோயில், திருச்செந்துறை சந்திரசேகரர் திருக்கோயில் ஆகியவற்றில் இடம்பெற்றுள்ளன.(64) இறைவனின் உடனுறைத் தேவியாகும் பெருமைக்குரிய சிறப்பு நிலைகளைப் பெற்றிருந்தபோதும், துர்க்கை, ஜேஷ்டை, அன்னையர் எழுவர் போல உமைக்குத் தனிக்கோயில் அமைந்திருந்ததாக அறியக்கூடவில்லை. உமையை மட்டும் தனித்துக் காட்டும் பழஞ்சிற்பங்களும் இதுநாள்வரையிலும் கிடைத்தில. காலத்தால் முற்பட்ட கல்வெட்டுகளிலும் உமைக்கு மட்டுமென அமைந்த தனித்த நிலையிலான வழிபாட்டுச் சுட்டல்களைக் காணக்கூடவில்லை. முற்சோழர் காலத்தில்தான் உமாபட்டாரகி என்னும் பெயருடன் செப்புத்திருமேனிகள் இறைவனுக்கான தேவியென்ற நிலையில் அமைக்கப்பெற்று வழிபாட்டு நிவந்தங்கள் பெறுவதைக் கல்வெட்டுகள் வழி உணரமுடிகிறது.(65) இந்நிலையில் பழங்கால அம்மன் கோயில்களாக வழக்கில் அறியப்படும் மதுரை மீனாட்சி, காஞ்சி காமாட்சி ஆகியவற்றின் பழமைத்தன்மை கேள்விக்குறியாதல் தெளியலாம். முடிவுரை தாய்த்தெய்வ வழிபாட்டில் தொடங்கிய பெண்தெய்வ வழிபாட்டுச் சிந்தனைகளின் முதற்படி கொற்றவை. சங்க காலத்தின் பிற்பகுதியிலேயே கொற்றவை துர்க்கையாகி சிவபெருமானின்றும் நீங்கத் தொடங்க, புதுவரவான உமை அவ்விடம் பெறுகிறார். இறைவனை நீங்கத் தொடங்கிய நிலையிலும் சிலப்பதிகாரக் காலம்வரை கொற்றவை சிவ பெருமானின் மனைவியாகவே கருதப்படுகிறார். பல்லவர்கள் அவரைத் தொடர்ந்து போற்றிப் பின் அவரைக் கோட்டத் தெய்வமாக்கி மண்டபத்திற்கு அனுப்புகிறார்கள். சிலப்பதிகாரம் அடையாளப்படுத்தும் அன்னையர் எழுவரும் காளியும் தனிக்கோயில்கள் பெற்றாலும், துணைத் தெய்வங்களாகவே அமைகின்றனர். இவ்விருவருள், அன்னையரின் செல்வாக்கு அதிகமாயுள்ளதைக் கோயில்களும் சிற்பங்களும் கல்வெட்டுகளும் உணர்த்துகின்றன. வள்ளுவர் வழியில் வரும் ஜேஷ்டை, கல்வெட்டிலும் இடம்பெற்றுத் தனிக்கோயிலும் பெற்றுச் சோழர்கள் காலத்தில் பரிவாரக் கூட்டத்திற்குள் அடங்கிப்போகிறார். இப்பெண்தெய்வங்களுடன் கோனேரிநங்கை போன்ற பெயரிடப்பட்ட பெண்தெய்வங்கள் சிலவும், பெயரிடப் படாத பிடாரிகள் பலவும் வழிபாட்டில் இருந்ததை உணர முடிகிறது. இவை கடல்கெழு செல்வி, சூரர மகளிர், வரையர மகளிர், அணங்குகள் போன்றவற்றின் தொடர்நிலைகளாகலாம்.(66) குறிப்புகள் 1. Debi Prasad Chattapadhyaya, Lokayata, pp.238-242, 252-265. 2. Ibid., pp.251-2. 3. Ibid., p.293. 4. John Marshall, Mohenjo-Daro And The Indus Civilization, vol.I & III, pp.49-52; pls. XII, XCIV & XCV; Debi Prasad Chattapadhyaya, Lokayata, pp.302-5. 2004ல் இந்தியத் தொல்லியல் அளவீட்டுத்துறையால் ஆதிச்சநல்லூரில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்விலும் தாய்த்தெய்வம் பொறிக்கப்பட்ட சுடுமண் பானைப்பகுதி ஒன்று கிடைத்துள்ளது. இதில் நெற்கதிர் தனித்தும், அதையடுத்துத் தாய்த்தெய்வத் தோற்றமும் உள்ளன. கூடுதலாகக் கொக்கு, மான், முதலை எனக் கொள்ளத்தக்க வடிவங்களும் உள்ளன. ஊர்வன, பறப்பன, நடப்பன என வகைக்கொரு வடிவம் இடம்பெற்றிருப்பதும் வளமைக் குறியீடுகளாய் நெற்கதிர், தாய்த்தெய்வம் காட்டப் பட்டிருப்பதும் இப்பானையோட்டின் சிறப்பை மிகுவிக்கின்றன. தற்போது கிடைத்துள்ள அறிவியல் கணக்கீடுகளின்படி ஆதிச்சநல்லூர் நாகரிகம் கி.மு.1700ஐத் தொடக்கூடும் என்று தொல்லியல் அறிஞர்கள் கருதுகின்றனர். 5. தொல்காப்பியம், பொருளதிகாரம், இளம்பூரணம், நூற்பா எண். 62. 6. திருமுருகாற்றுப்படை 258; கலித்தொகை - மருதம் 24 : 8; பரிபாடல் 11 : 100. 7. திருமுருகாற்றுப்படை 258 - 9. 8. பெரும்பாணாற்றுப்படை 457 - 9. 9. அகநானூறு 345 : 4; மணிமேகலை 6 : 50-52. 10. குறுந்தொகை 218. சூலிக்குப் பெண்கள் நேர்ந்துகொள்ளும் வழிபாட்டுமுறை விரிவாகப் பேசப்பட்டுள்ள பாடல் இது. 11. கலித்தொகை 81 : 9 - 10 ; 83 : 14-5. 12. பெரும்பாணாற்றுப்படை 494 ; குறிஞ்சிப்பாட்டு 194 - 5 ; அகநானூறு 162 : 24-5,369, 370. 13. கலித்தொகை 38: 1 - 5. 14. மு. நளினி, இரா. கலைக்கோவன், அம்மனின் தொன்மையான சிற்பங்கள், அம்மன் களஞ்சியம், பக். 67-95. 15. பரிபாடல் 5: 26 - 50, 8 : 127 - 8. 16. திருமுருகாற்றுப்படை 253 - 9. 17. சிலப்பதிகாரம் 6 : 42, 28 : 74, 103. 18. மேற்படி, 14:7. 19. பரிபாடல் 11: 99 - 100. 20. சிலப்பதிகாரம் 12 : முன்றிற் சிறப்பு 2:3 - 4, முன்னிலைப் பரவல் 10: 3-4. 21. மேற்படி, 12: 68, முன்றிற் சிறப்பு 4: 4. திருமாலின் கருவிகளான சங்கையும் சக்கரத்தையும் கொற்றவை பெற்ற சிலப்பதிகாரக் கால அமைப்பு என்றும் மாறாமல் நிலைத்துப் போனமைக்குக் காலங்காலமாய்ப் படைக்கப்பட்ட பல்லவ, சோழ, பாண்டிய, நாயக்கர் காலக் கொற்றவைச் சிற்பங்களே சான்றுகளாகின்றன. 22. மேற்படி, 12 முன்னிலைப் பரவல் 9:3-4 23. மேற்படி, 12 முன்னிலைப் பரவல் 10 : 3-4. 24. இரா. நாகசாமி (பதிப்.), செங்கம் நடுகற்கள், 1972. 25. ஆறாம் திருமுறை, ப. 607. 26. முதல் திருமுறை, ப. 195. 27. ஐந்தாம் திருமுறை, ப. 363. 28. இரண்டாம் திருமுறை, ப.141. 29. பதினோராந் திருமுறை, மூத்த திருப்பதிகம் 5, 6. 30. இரா.கலைக்கோவன், தமிழ்நாட்டு ஆடற்கலை வரலாறு, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வரலாற்றுக் கருத்தரங்கக் கட்டுரை. 31. அரு. இராமநாதன், தேவி பாகவதம் - இரண்டாம் பாகம், பக். 79 - 105; கார்த்திகேயன், ஸ்ரீலிங்கபுராணம், பக்.232, 234. நடராஜதாசன், சித்தியருளும் சக்தி வழிபாடு, பக். 76 - 78, 83 -85. 32. நான்காம் திருமுறை, ப. 251. 33. சும்ப, நிசும்பர்களின் படைத்தலைவர்களான சண்ட, முண்டர்களை அழித்தமையால் காளி சாமுண்டியானதாகக் கூறுகிறது தேவிபாகவதம். இதனால் காளியின் மற்றோர் அம்சமே சாமுண்டி என்பது பெறப்படும். ஆனால் சாமுண்டியை இயமனின் மனைவியாக ஆகமங்கள் சுட்டுவதும் இங்குச் சிந்தித்தற்குரியது. பிற்கால ஆகமங்கள் ஒன்றுக்கொன்று பலவகைகளில் இதுபோல் முரண்படுவது, அக்காலச் சமயச் சிந்தனைகளில் ஏற்பட்ட மாறுபட்ட கருத்துப் போக்குகளையே அடையாளம் காட்டுகின்றது. அரு. இராமநாதன், தேவி பாகவதம், பக். 93-101; T.A. GopinathaRao, Elements of Hindu Iconography, vol.I, part II, pp.333-34. 34. T.A. Gopinatha Rao, Elements of Hindu Iconography, vol.1, part II,pp. 380-81, 386. 35. மு.நளினி, இரா. கலைக்கோவன், திருக்கோளக்குடிக் குடைவரையும் கற்றளிகளும், வரலாறு - 6, பக். 134 - 168. 36. நான்காம் திருமுறை, ப. 696. 37. இரண்டாம் திருமுறை, ப. 141. 38. ஐந்தாம் திருமுறை, ப. 230. 39. தேவார அடங்கன்முறை, முதல் பாகம், பக். 46 - 51. 40. முதல் திருமுறை, ப. 123 : 5. 41. அப்பர் மட்டுமே பழைய நினைவுகளிலிருந்து விடுபட முடியாமல், 'போகமார் மோடி கொங்கை புணர்தரு புனிதர் போலும்' என்று பாடுகிறார். மோடி, கொற்றவையைக் குறிக்கும் சொல்லாகும். நான்காம் திருமுறை, ப.453, 42. SII :1, pp.29, 30. 43. SII :1, pp.7, 23-24, 28. 44. திருக்குறள் : 617. 45. SII 13:103, 6:446, 13:159, 7:810. 46. SII 13:314. 47. IPS :77, SII 14:64, 3:96, IPS:67. 48. SII 14:41. 49. SII 13:159, 341; 7:810, 17:617. 50. SII 6:446-449. 51. SII 12:106. 52. துர்க்கையின் பழஞ்சிற்பங்கள் பெரும்பாலானவற்றில் உடன்கூட்டமாகத் தலைக் காணிக்கை தரும் அடியார்களைக் காணமுடிகிறது. விரிவான தரவுகளுக்கு மு. நளினி, இரா. கலைக்கோவன், அம்மனின் தொன்மையான சிற்பங்கள், அம்மன் களஞ்சியம், பக். 67-95. 53. SII 13:7, 87; 17:516. 54. SII 13:341; 'மறையேத்தவே நிற்பாய்' என்ற சிலப்பதிகாரக் காலத்து வேட்டுவர்கள் கனவு, ஏறத்தாழ ஐந்நூறு ஆண்டுக் கால இடைவெளியில் நிறைவேறியமை உணர்ந்து மகிழ்தற்குரிய உண்மையாகும். அதுபோலவே, 'சிவபெருமான், திருமால், நான்முகன் ஆகிய மூவரின் இதயத்திற்கும் விளக்கானவள்' என்று கொற்றவையைக் குறிக்கும் இளங்கோவடிகளின் சிந்தனையும், பல்லவர் காலத்தில் சிற்பவடிவம் பெற்றுவிடுவதை மாமல்லபுரம் மும்மூர்த்திக் குடைவரையில் காணமுடிகிறது. இங்குள்ள முருகன், 'பிரம்மசாஸ்தா' என்பது குறிப்பிடத்தக்கது. 55. SII 13:159; 3:174; 5:724; 13:149. 56. SII 3:101, 151A; 13:191. 57. SII 13:314; 6:342; ARE 1911:316, 317; எஸ். ஆர். பாலசுப்பிரமணியம், முற்காலச் சோழர் கலையும் சிற்பமும், பக். 92, 327. 58. இரா. கலைக்கோவன், பழுவூர் அரசர்கள், கோயில்கள், சமுதாயம், பக்.43-44. 59. S11 6:293; எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், முற்காலச் சோழர் கலையும் சிற்பமும், ப.141. 60. மு. நளினி, இரா. கலைக்கோவன், திருப்பராய்த்துறைத் தாருகாவனேசுவரர் கோயில், வரலாறு 8, ப. 115; SII 8: 560. 61. SII 3:173. 62. SII 6:10; 7:33, 504, 514, 525; 17:640. 63. SII 3, p. 418. தஞ்சாவூரில் வைத்தியநாதசாமி கோயில் அருகிலுள்ள நிசும்பசூதனி என்னும் வடபத்ரகாளியம்மன் வடிவத்தையும் உக்கிரமாகாளி அம்மன் கோயிலிலுள்ள வடிவத்தையும் நேரிடை ஆய்வுசெய்ததில் இரண்டுமே பிற்பட்ட சிற்பங்கள் என்பதைக் கண்டறியமுடிந்தது. நாள்: 24. 5. 2003. உடனிருந்து உதவியவர் இரா. லலிதாம்பாள். 64. இரா. கலைக்கோவன், சோழர் கால ஆடற்கலை, ப. 89. 65. SII 7:891;17:617. 66. கி. பி. 900க்குப் பிறகுதான் பெண்தெய்வ வழிபாடு புத்துணர்ச்சி பெறுகிறது. சோழர்களே இறைவிக்குப் பல வகைகளிலும் சிறப்புச் செய்கிறார்கள். பெண்தெய்வ வழிபாடு பேசும் நூற்றுக்கணக்கான கல்வெட்டுகள் இக்காலகட்டத்தைச் சேர்ந்தவையாகத் தமிழ்நாடெங்கிலும் பரவலாகக் கிடைக்கின்றன. பல்வேறு வகையினவாய்ச் சிற்பங்களும் உருவாக்கப்பட்ட இக்காலத்துப் பெண்தெய்வ வழிபாட்டையும் தொடர்ந்து வந்த பிற அரசுகளின் ஆட்சிக் காலம் சார்ந்த தமிழ்நாட்டுப் பெண்தெய்வ வழிபாட்டையும் ஆராயப் பெரும் பொருளும் காலமும் தேவைப்படுவதால் இவ்வாய்வைச் சோழர்களின் தொடக்கக் காலத்துடன் இனிதே முடிக்கிறோம். சைவம் சார்ந்து அமைந்த இவ்வாய்வொப்ப வைணவம் சார்ந்தும் தரவுகள் உள்ளன. அவற்றைத் தொகுக்கவும் களஆய்வுகள் வழி உறுதிப்படுத்தவும் அந்தத் திருமகள்தான் மனங்கொள வேண்டும். |
சிறப்பிதழ்கள் Special Issues
புகைப்படத் தொகுப்பு Photo Gallery
|
| (C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. | ||