http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 15
இதழ் 15 [ செப்டம்பர் 16 - அக்டோபர் 15 பயணச் சிறப்பிதழ் ] இந்த இதழில்.. In this Issue.. |
ஆண்டுகள் பன்னிருநூ றும்இயற்கைச் சீற்றமுந்
தாண்டிச் சுனாமியையுந் தாங்கியெதிர் - கொண்டு இராஜசிம்மன் பேர்சொல்லி அத்யந்த காமமென நீண்டு நிலைக்கும் தளி. தளியின் பெயரிலேயே உண்மைகளை ஆராய்ந்து நளினியுடன் கலைக்கோவன் தந்த - களிப்பூட்டும் புத்தகத்தை வாசித்த இன்ப அனுபவத்தின் துளிகூறும் பின்னூட்டம் இஃது. பரமேஸ்வரன், மஹாமல்லன். இந்த இரண்டு சொற்களையும் வைத்துக்கொண்டு தத்தம் விருப்பம்போல் மணல்வீடுகள் கட்டி வரலாற்றறிஞர்கள் நடத்தி வந்த குழப்படிகளுக்குத் தன்னுடைய அறிவியல் ரீதியிலான கலை வரலாற்றாய்வினால் தீர்வு கண்ட முனைவர்கள் இரா.கலைக்கோவன் மற்றும் மு.நளினி ஆகியோரின் ஆய்வு முடிவுகளைத் தாங்கி நிற்கும் இப்புத்தகம் மாமல்லபுரம் தர்மராஜரதத்தின் கட்டடக்கலை, கல்வெட்டு மற்றும் சிற்பங்களின் எந்த ஒரு கூறையும் விட்டுவிடாது உண்மைத்தரவுகள் என்ற கற்களை மட்டுமே கொண்டு கட்டப்பட்ட கட்டுமானத்தளியாக நிமிர்ந்து நிற்கிறது. இத்தளியை ஆய்வு செய்ய விழையும் வருங்கால ஆய்வாளர்களுக்கு இது ஒரு வழிகாட்டும் நூலாக மட்டுமின்றி Single point reference ஆகவும் இருக்குமென்பதில் சந்தேகமில்லை. இது உதடுகள் உச்சரிக்கும் வெறும் புகழ் வார்த்தைகள் அன்று. சான்றுகள் உண்டு. இந்நூலாசிரியர்கள் எப்படி திரு. கூ.இரா.சீனிவாசனின் The Dharmaraja Ratha and its Sculptures, Mahabalipuram என்ற புத்தகத்தைத் தளிக்கே எடுத்துச் சென்று படித்து மகிழ்ந்தார்களோ அதேபோல் அத்யந்தகாம பல்லவேசுவரகிருகத்தைப் புரிந்து கொள்ளும் நோக்கில் நாங்களும் (வரலாறு.காம் ஆசிரியர் குழு உறுப்பினர்கள்) மாமல்லபுரத்துக்கே இப்புத்தகத்தை எடுத்துக் கொண்டு சென்று படித்தோம். அத்யந்தகாமம் தளியும் சரி; புத்தகமும் சரி; ஒரே நாளில் பார்த்து அல்லது படித்து முடித்து விடக்கூடியவை அல்ல. ஒருமுறை முனைவர் அகிலாவுடன், அடுத்தமுறை இந்நூலாசிரியர்களுடன், அடுத்தமுறை இந்நூலுடன், அதற்கு அடுத்தமுறை எதுவுமின்றித் தனியாக எனப் பலமுறைகள் கண்டு களித்திருக்கிறோம். கடைசியாகச் சென்றபோது ஆதிதளத்தின் தென்முக ஆர உறுப்புகளில் உள்ள சாலையின் நாசிகையைத் தாங்கி நிற்பதுபோல் அமைக்கப்பட்டிருக்கும் சிறு அரைத்தூண் ஒன்று ஒரு Chess Board போல அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்த Chess Board அமைப்பை இப்புத்தகத்தில் படித்ததாக நினைவில்லையே! நாம் சரியாகப் படிக்கவில்லையா அல்லது புத்தகத்திலேயே இடம்பெறவில்லையா எனக் குழம்பிக் கொண்டிருந்தோம். பிறகு புத்தகத்தைப் புரட்டிப் பார்த்தபோது பெரும்பாலான ஆர உறுப்புகளின் கண்டம் குறுக்கும் நெடுக்குமான சதுரப்பட்டிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடப்பட்டிருந்தது. இதைவிட வேறென்ன சான்று வேண்டும் இந்நூலின் முழுமைத்தன்மையை எடுத்துரைக்க? வெறும் தரவுகளை மட்டுமே கொண்டு விவரணையாக இல்லாமல் கட்டமைப்பின் சிறப்புக்கூறுகள், சிற்பச்சிறப்புகள், நிழலும் நிஜமும் ஆகிய பகுதிகளைக் கொண்டு ஒரு முழுமையான ஆய்வு நூலாக மலர்ந்துள்ளது. அத்யந்தகாமத்தைப் பற்றி ஆய்வறிஞர்கள் கூறியிருக்கும் கருத்துக்களின் உண்மைத்தன்மையை இந்நூலாசிரியர்கள் நிறுவியுள்ள விதம் டாக்டர். மா.இராசமாணிக்கனாரின் ஆய்வு நூல்களைப் படிக்கும் உணர்வை (ஓர் அறிஞரின் கருத்தை மறுக்கும்போது அவ்வறிஞர் அக்கருத்துக்குச் சான்றாகப் பட்டியலிடும் உதாரணங்களையும் ஒவ்வொன்றாகத் தக்க ஆதாரங்களுடன் மறுப்பது) ஏற்படுத்தியது. இதற்குச் சான்றாக, கூ.இரா.சீனிவாசனின் ஒருவரால் தொடங்கப்பட்ட பணி மற்றொருவரால் முடிக்கப்பட்டதற்கு உதாரணங்களான ஆனைமலை மற்றும் நார்த்தாமலை ஆகியவை அத்யந்தகாமத்துடன் ஒப்பிடப்படுவதையும், மைக்கேல் லாக்வுட்டின் கணேசரதக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் பரமேசுவரன் என்ற பெயர் பல்லவ மன்னன் பரமேசுவரவர்மனைக் குறிப்பதாகக் கூறுவதையும் மறுத்திருப்பதைக் கூறலாம். வரலாறு என்பது ஒரு தனித்துறையல்ல. பல்வேறு துறைகளை உள்ளடக்கியது என்று இந்நூலாசிரியர்கள் அடிக்கடி கூறுவதை இந்நூலில் மெய்ப்பித்துள்ளனர். உதாரணமாக, சிற்பச்சிறப்புகள் என்ற பகுதியில் அணுக்கச்சிற்பங்களை விளக்குமிடத்து உபயோகித்துள்ள புராணக்கூறுகள், ஒவ்வொரு சிற்பத்தையும் வர்ணிக்குமிடத்துக் குறிப்பிடும் கை முத்திரைகள் மற்றும் கால் அமைப்புகளைக் குறிப்பிடும் ஆடற்கரணங்களின் பெயர்கள், ஒவ்வொரு இறைத்திருமேனியும் அணிந்திருக்கும் ஆடை அணிகலன்களின் பெயர்கள் ஆகியவற்றைக் கூறலாம். வரலாற்றாய்வுகளும் அறிவியல் ஆய்வுகளைப்போலவே இதற்குமுன் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுமுடிவுகளையும் அடிப்படையாகக் கொள்ளவேண்டும் என்பதையும் இந்நூலாசிரியர்கள் உணர்த்தியுள்ளனர். பல்லவர்களின் பல்வேறு கட்டுமானங்களையும் அவற்றில் இடம்பெற்றுள்ள சிற்பங்களையும் அத்யந்தகாமத்துடன் ஒப்புநோக்கியிருப்பதும், இந்நூலை எழுதத்தொடங்கும் முன் 67 நூல்களைப் படித்திருப்பதுமே இதற்குச் சான்றாகும். அதேபோல் ஆய்வு என்பது இன்று சிலர் வேதம் ஓதுவதைப் போன்று இயந்தரத்தனமானதல்ல; மிகுந்த விழிப்புணர்வும் Common Sense - ம் Logical thinking - ம் வேண்டும் என்பதை முறையே நிழலும் நிஜமும் பகுதியில் கூ.இரா.சீனிவாசனின் கேள்விகளுக்குப் பதிலிறுக்கும் போதும், இடைத்தளக் கிழக்குமுகத் தளிப்பரிவாரத்தினரின் செயல்பாடுகளை விவாதிப்பதிலும் பல்லவத்தளிகளிலிருக்கும் சோமாஸ்கந்தர்களை ஒப்பிட்டுக் கேள்விகளை எழுப்பியிருப்பதையும் கொண்டு விளங்கிக் கொள்ளலாம். வரலாற்றுத்துறையில் ஆய்வுப் பெருந்தகையாக விளங்கும் அமரர் கூ.இரா.சீனிவாசன் அவர்களது நூலிலேயே 197 மாறுபட்ட கருத்துக்கள் இருப்பதை அடிக்குறிப்புகள் மூலம் இந்நூலாசிரியர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். அதைப்போலவே இந்நூலிலும், நிழலும் நிஜமும் என்ற தலைப்பிலமைந்த பகுதியின் 134ம் பக்கத்தின் இரண்டாவது பத்தியில் கீழ் மற்றும் இடைத்தளங்களில் மேற்கில் அமைந்திருக்கும் முன்றில்களைக் கிழக்கு முகமாக அமைந்துள்ளன எனக்குறிப்பிட்டுள்ளனர். ஆய்வுகளிலும் ஆய்வு முடிவுகளிலும் எத்தகைய தவறும் நேராத வண்ணம் மிக மிகக் கவனமாகவும் பொறுப்புடனும் செயல்படும் இந்நூலாசிரியர்களின் மீள்பார்வைக்கு இச்சிறு தவறு அகப்படாமல் போனதற்கு அச்சுப்பிழைத் திருத்தத்தின்போது அவர்களுக்கு ஏற்பட்ட பணிச்சுமைதான் காரணமாக இருந்திருக்கமுடியும். உணர்வு வயப்படாமல் ஓர் ஆய்வுமேதையின் கருத்துக்களைக் கருத்துக்களால் மறுக்கும்போது இந்நூலாசிரியர்களுக்கு உள்ளம் வலித்தாலும் அதைச் சரியான கோணத்தில் ஏற்றுக்கொள்ளும் திரு. கூ.இரா.சீனிவாசனின் ஆத்மா இவ்வாய்வுக்காணல்களை நிச்சயம் வாழ்த்தும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இப்படிக்கு ச.கமலக்கண்ணன் ஆசிரியர் வரலாறு.காம் this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |