http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[181 Issues]
[1796 Articles]
Home About US Temples Facebook
Issue No. 15

இதழ் 15
[ செப்டம்பர் 16 - அக்டோபர் 15
பயணச் சிறப்பிதழ் ]


இந்த இதழில்..
In this Issue..

வந்தியத்தேவன் வழியிலிருந்து வரலாற்று வழிக்கு
பழுவூர் - 5
கல்வெட்டாய்வு - 11
காந்தள்
ஒரு கடிதம்
மூன்றாம் யாத்திரை
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே!
நான்கு மணிக்குப் பின் நாகேஸ்வரன் கோயில்
Around My World in Two Days
சங்கச் சிந்தனைகள் - 3
அத்யந்தகாமம் - பின்னூட்டம்
இதழ் எண். 15 > கலையும் ஆய்வும்
தொல்காப்பியப் பொருளதிகாரப் புறத்திணை இயலில் வெட்சித் திணையின் துறைகளைப் பட்டியலிடும் பகுதி மூன்று நூற்பாக்களாக அமைந்துள்ளது. இவற்றுள் மூன்றாம் நூற்பா, 'வெறி அறி சிறப்பின் வெவ்வாய் வேலன் வெறியாட்டு அயர்ந்த காந்தளும்' என்று தொடங்குகிறது. இந்த வரிக்கு 'வெறி ஆடுதலை அறியும் சிறப்பினை உடைய வெவ்விய வாயினையுடைய வேலன் வெறியாடிய காந்தளும்' என்று இளம்பூரணர் விளக்கம் தருகிறார். (1). 'தெய்வத்திற்குச் செய்யும் கடன்களை அறியும் சிறப்பினையும், உயிர்க்கொலை கூறலின் வெவ்வாயினையும் உடையனாகிய வேலன் தெய்வமேறி ஆடுதலைச் செய்த காந்தள்' என்று நச்சினார்க்கினியர் விளக்குகிறார்.(2)

இந்த இரண்டு விளக்கங்களைப் படித்த பின்பும் பல கேள்விகள் எழுகின்றன. தொல்காப்பியரின் நூற்பாக்கள் சொற் சுருக்கத்துக்கும், பொருட் பெருக்கத்துக்கும் பெயர் பெற்றவை. 'வேலன் அயர்ந்த காந்தள்' என்றோ, 'வெறியாட்டயர்ந்த காந்தள்' என்றோ சொல்லியிருக்க வேண்டிய செய்தியைப் பல சொற்கள் சேர்த்து நீட்ட வேண்டிய தேவையென்ன? வேலன் என்றாலே வெறியாட்டும், வெறியாட்டென்றாலே வேலனும் நினைவுக்கு வரும்போது இரண்டில் ஒன்றைச் சொல்லியிருந்தால் போதுமானதாக இருந்திருக்குமே. வேலன் வெறியாடுதலைச் செய்வதால் அவன் வெறி அறி சிறப்பினனாகத்தான் இருக்க முடியும். இருந்தும் அதைச் சொல்லி வேலனைக் காட்ட வேண்டிய அவசியம்? அப்படியானால் வெறி அறியா வேலர்களும் இருந்தனரா? இந்தக் கேள்விகளையெல்லாம் மீறிக்கொண்டு எழும் மிகப்பெரிய கேள்வி காந்தள் என்றால் என்ன?

பேரகராதி காந்தளைக் கார்த்திகைப் பூ என்கிறது. பிற பொருள்களாகக் காமிகள் மடல் மா ஏறுதல், உமிஞைத்திணைத் துறைகளுள் ஒன்று, சவுக்காரம் என்பன சுட்டப்படுகின்றன. (3) 'காந்தள் என்பதனை மடலேறுவதற்குப் பெயராகக் கூறுவார் உளர் ஆதலின் வெறியாட்டு அயர்ந்த காந்தள் என்றார்' என்று தொல்காப்பியர் சொல்லாட்சிக்கு விளக்கம் தரும் முகத்தான் நம் முதல் கேள்வியின் ஒரு பகுதிக்கு விடையிறுப்பதுடன் காந்தளின் பொருளைப் பிரித்துக் காட்டுகிறார் இளம்பூரணர். (4) இதன் வழி காந்தள் வெறியாட்டில் சேர்ந்ததென அறிகிறோம்.

புறப்பொருள் வெண்பா மாலையில் உமிஞைத்திணையின் துறைகளுள் ஒன்றாகக் காந்தள் காட்டப்படுகிறது. கருங்கடலில் சூரபன்மாவைக் கொன்ற முருகனின் செழிப்புடைய காந்தட் பூவின் சிறப்பைச் சொல்லும் துறை இதுவெனக் கொளு பேகிறது. (5) காந்தள் முருகனுக்குரிய பூ. முருகன் கடல் போரில் சூடிய பூ. வெற்றி கருதிப் போரில் இறங்குவோர் தம்மை இன்னார் என அடையாளம் காட்டிக்கொள்ளும் திணைப் பூக்களோடு காந்தளும் சூடினர். காந்தள் வெற்றிக்குரிய பூவாகக் கருதப்பட்டது போலும். இப்பூவைச் சூடி வேலன் ஆடிய வெறியாட்டுதான் காந்தளா? நச்சினார்க்கினியர் அப்படித்தான் கருதுகிறார். 'காந்தளைச் சூடி ஆடியதால்தான் காந்தள் என்றார் தொல்காப்பியர்' என்பது நச்சினார்க்கினியர் விளக்கம். (6) வேலன் ஆடலுக்குக் காந்தட் கூத்தென்று மறுபெயரும் இருந்தது என்றும், (7) காந்தளைச் சூடி ஆடியதால் காந்தள் எனப்பட்டது என்றும் (8) சில ஆய்வறிஞர்கள் கருதுகின்றனர்.

வேலனின் வெறியாடல் பற்றிப் பல சங்க இலக்கியப் பாடல்கள் பரக்கப் பேசுகின்றன. தலைவியின் காதல் அறியாத் தாயும் செவிலியும் தலைவியை வாட்டுவது எதுவென்றறிய எடுத்துக்கொள்ளும் முயற்சிகளுள் ஒன்றே வெறியாடல். இந்த வெறியாடலை வேலன் செய்ததாகவே இலக்கியங்கள் பேசுகின்றன. வெறி அயர்ந்த களம், அதை அமைத்த முறை, அங்கு நிகழ்ந்த வெறியின் அமைப்பு, அதன் முடிவு என்று பல செய்திகள் விளக்கமாகக் கிடைக்கின்றன. இந்த வெறியாடலில் வேலன் காந்தள் சூடியிருந்தான். அது குருதி ஒண்பூங்காந்தள், வெண்காந்தள், கடவுட்காந்தள் என்று பலபடப் போற்றப்பட்டது.

காந்தள் சூடி வேலன் ஆடிய இந்த வெறியாடல் அகத்திணைக்குறியது. இதுதான் காந்தளென்றால் இதைப் புறத்திணைக்குரியதாகத் தொல்காப்பியர் கூறியது எப்படிப் பொருந்தும்? இந்த இடத்தில் தான் இளம்பூரணர் சிக்கலைத் தீர்க்க உதவுகிறார். 'அன்றியும் காந்தள் என்பது மடலேறுதலான் அத்துணை ஆற்றாளாகிய பெண்பால் மாட்டு நிகழும் வெறி காந்தள் எனவும் பெயராம். இதனாலே காம வேட்கையின் ஆற்றாளாகிய பெண்பாற் பக்கமாகிய வெறியும், அந்நிலத்துள்ளார் வென்றி வேண்டி ஆடும் வெறியும் கொள்ளப்படும்.'(9) இதனால் காந்தளை வெறிக் கூத்தாக இனம் கண்டு உறுதிபடுத்திக்கொள்ள முடிவதுடன், இருவகையாகப் பிரிக்கவும் முடிகிறது. ஒன்று அகக்கூத்து. மற்றது புறக்கூத்து. அகக்கூத்தில் காமவேட்கை ஆற்றாளாகிய பெண் வெறியாடுகிறாள். புறக்கூத்தில் வெற்றி கேட்டு வெறியாட்டம் நிகழ்கிறது. இத்தெளிவான பிரிப்பால் காந்தளைச் சூடி வேலன் ஆடிய தலைவி நோயறியும் வெறியாட்டு காந்தளல்ல என்பதும், அது முற்றிலும் அகஞ்சார்ந்த வெறிக்கூத்து என்பதும் புலனாகின்றன.

அகஞ்சார்ந்த வெறியாட்டு இரண்டாகும். ஒன்று வேலன் ஆடியது. மற்றது காமவேட்கை ஆற்றாப் பெண் ஆடியது. இந்த இரண்டாம் வகை வெறியாட்டு காந்தள் எனப் பெயரிடப்பட்டதுடன் அகப்புறக் கூத்தாக இனம் பிரிக்கப்பட்டது. தலைவியின் ஒழுக்கப்பண்புகளை வரையறுக்கும் தொல்காப்பிய நெறியிலிருந்து சற்று வழுவிய நிலை இது என்பதால் அகப்புறமானது. மகளிர் வெறியாடியமைக்கு இலக்கியச் சான்றுகள் உள்ளன. ஆனால் அது எத்தகு வெறியாட்டு, அதன் அமைப்பு முறை என்ன, ஆடிய காரணம், பின்னணி யாவை என்பதற்கான விளக்கங்கள் பாடல்களில் இல்லை. இவ்வகை வெறியாட்டைச் சுட்டும் இளம்பூரணரே எடுத்துக்காட்டுப் பாடலைப் புறப்பொருள் வெண்பாமாலையில் இருந்துதான் தருகிறார். பெருந்திணைப் படலத்தில் வெறியாட்டு என்னும் தலைப்பிலுள்ள இத்துறையின் கொளு, தலைவி தலைவனின் அன்பு வேண்டித், தாய் அது அறியா வண்ணம், முருகனுக்கென்று ஆடிய வெறிக்கூத்து என்று இவ்வகைக் கூத்தை அடையாளம் காட்டுகிறது. (10)

'ஆற்றாமையாலே வெவ்விதாக நெடுமூச்செறிந்து தலைவன் தனக்குத் தண்ணளி செய்தலை நினைந்து மயக்கத்தினையுடைய அயல்மனை மகளிருடனே தன் தாயின் சொல்லுக்கு அஞ்சித் தன் இல்லத்தே தன் ஐயம் நீங்கும்படி வெறிக்கூத்தாடினாள்' என்று புறப்பொருள் வெண்பா மாலையின் வெறியாட்டுப் பாடல் விளக்கம் தருகிறது. (11)

சங்க இலக்கியப் பெண் வெறியாடியதற்கும் புறப்பொருள் காலத்துப் பெண் வெறியாடியதற்கும் பல வேறுபாடுகளைக் காண்கிறோம். 'கடியுண் கடவுட்கு இட்ட செழுங்குரல் அறியாதுண்ட மஞ்ஞை ஆடு மகள் வெறியுறு வனப்பின் வெய்துற்று நடுங்கும்', என்ற குறுந்தொகைப் பாடல் (12), ஆடுமகள் வெறியாடும் அழகை மயிலைக் கொண்டு உவமிக்கிறது. உடல் சிலிர்த்து, நடுக்குற்று நிகழ்ந்த வெறியாடலின் மெய்ப்பாட்டு விளக்கத்தை இங்குப் பெறமுடிகிறது. ஆநிரை துள்ளியதுபோல் இவ்வெறியாட்டு இருந்ததாக மற்றோர் பாடல் பேசுகிறது (13). வெறியாடிய மகளிர் பொலிவிழந்த காட்சியை அகம் காட்டுகிறது (14). இவ்வெறியாடல், மகளிரால் தனித்த நிலையில் நிகழ்த்தப்பட்டதாகவே பாடல்கள் சுட்டுகின்றன. ஆனால் புறப்பொருள் வெண்பாமாலை காட்டும் மகளிர் வெறியாடல் குழு ஆடலாகக் காட்சியளிக்கிறது. சங்கப் பாடல்கள் சுட்டும் மகளிர் வெறி எதற்காக நடந்தது, எப்படி நடந்தது என்ற அடிப்படைகளை நம்மால் அறியக்கூடவில்லை. ஆனால் அந்த வெறியாட்டில் மயக்கம் இருந்தது. ஆடிய மகளிர் அழகு நலம் இழக்கும் அளவு விரைவும் சுழற்சியும் இருந்தன. புறப்பொருள் வெறியாட்டிலும் மயக்கம் இருந்தது. அதனாலே சுழற்சியும் இருந்திருக்கும். இது காமவயப்பட்ட பெண் காதலன் துணை தேடி ஆடியதெனப் பாடல் தெளிவுறுத்துவதால் தவிப்பும், விரைவும் தவிர்க்க முடியாத மெய்ப்பாடுகளாய் இருந்திருக்கும்.

சங்க காலத்தில் வேலன் ஆடிய வெறியாட்டிற்கும், மகளிர் ஆடிய வெறியாட்டிற்கும் வேறுபாடுகள் இருந்தன. வேலன் வெறியாட்டில் வேலன் மட்டுமே களம் அமைத்து ஆடினான். அங்கே தலைவியின் நோய்க்குக் காரணம் அறிய வெறியாட்டு நிகழ்ந்தது. நடத்தியவள் தாய். சங்க மகளிரின் வெறியாட்டு எதற்காக நடந்தது என்பது தெரியவில்லையாயினும், பயன்பாட்டு முறையில் அது வேலன் வெறியாட்டிலிருந்து மாறுபட்டிருந்ததை உணர முடிகின்றது. இம்மகளிர் ஆடுமகளிர் என்றழைக்கப்பட்டிருப்பதால் இது தொழில்முறைக் கூத்தாக இருந்திருக்கலாமென்பதை ஊகிக்கலாம். இத் தொழில்முறைக்கூத்தே பின்னாளில் மகளிர்க்குத் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்திக் கொள்ள ஒரு சாளரமாய் அமைந்து, அந்த முறை பலராலும் பின்பற்றப்பட்டிருக்கலாம் என்பதற்குப் புறப்பொருள் வெண்பாமாலை காட்டும் மகளிர் வெறியாட்டு சிறந்த சான்றாகும்.

காந்தள் காமவயப்பட்ட மகளிர் ஆடிய வெறிக்கூத்து என்றுரைக்கும் இளம்பூரணர், வென்றி கேட்டு ஆடும் வெறியும் காந்தளே என்கிறார். இவ்வகை வெறிக்கு அவர் சிலம்பில் சாலினி ஆடும் ஆடலை எடுத்துக்காட்டாகத் தருகிறார். சிலம்பின் வேட்டுவ வரி ஓர் அற்புதமான பகுதியாகும். கொற்றவை வழிபாட்டின் பல்வேறு படிநிலைகளையும் விளக்கமாகப் பேசும் இப்பகுதியில் எயினர் வெற்றி கேட்க, எயினப் பெண் சாலினி ஆடியபடியே, பலி தந்தால் வெற்றி கிடைக்கும் என்கிறாள். 'கலையாகிய ஊர்தியைப் பொருந்திய கொற்றவை தான் கொடுத்த வெற்றிக்கு விலையாகிய உயிர்ப்பலியை உண்ணக் கொடுப்பின் அல்லது நும் வில்லுக்குப் பொருந்திய வெற்றியைக் கொடுப்பாள் ஒருத்தி அல்லள்'; இது சாலினி கூற்று.(15) உடன் எயினர்கள் எயினப் பெண் ஒருத்தியைக் கொற்றவை போல் அழகு செய்து, பலிப்பொருட்கள் ஏந்தி, வழிபாடு செய்து பலியிட்டு மகிழ்கின்றனர். வேட்டுவர் வெற்றி வேண்டும் இக்கூத்தை ஆடியது பெண்.

காந்தள் கூத்தின் இரண்டு பிரிவுகளான வெறிக்கூத்தும், வெற்றிக்கூத்தும் பெண்களாலேயே நடத்தப்பட்டுள்ளன. ஒன்று காதல் சார்ந்த வெறி. மற்றொன்று வீரம் சார்ந்த வெறி.

புறப்பொருள் வெண்பா மாலையில் வெட்சித்திணைப் பகுதியில் வெறியாட்டு என்றொரு துறை.(16) அழகிய அணிகலன்களையுடைய மறக்குடி மகளிர், தம் கணவர் மேற்கொண்ட போர்த்தொழில் நன்றாகி முடிதற் பொருட்டு வேலனோடு வள்ளிக்கூத்து ஆடியதே வெறியாட்டென்று இத்துறையின் கொளுப்பொருள் கூறுகிறது. கொளுவில் 'வேலனோடு வெறியாடின்று' என்று மட்டுமே உள்ளது. 'வெட்சி மறவன் மனைவி முருகக் கடவுளைத் தன் உடலில் நிறுத்தி வேற்படையை உடைய முருகனுக்கு ஆடிய வள்ளிக்கூத்து கண்டால் சிவனும் மகிழ்வான்' என்று இத்துறைப் பாடலின் பொருள் பேசுகிறது. பாடலில் வள்ளிக்கூத்து என்னும் பெயரே இடம்பெறவில்லை. 'ஆடும் வெறி' என்று மட்டுமே உள்ளது. கொளுவிலும், பாடலிலும் வள்ளிக்கூத்து குறிக்கக்ப்படாத நிலையிலும், பொருள் விளக்கம் வள்ளிக்கூத்தை வலிந்து இணைத்து இன்பம் காண்கிறது. இந்த வெறியாட்டு வெற்றியைக் குறித்து வெற்றியை வேண்டி வெட்சிப் பெண்களால் நிகழ்த்தப்பட்டது.

இதனால் வெற்றி கேட்டு ஆடிய அல்லது வெற்றி கருதி ஆடிய காந்தள் வகை வெறிக்கூத்து சிலப்பதிகாரக் காலத்திலும், புறப்பொருள் காலத்திலும் பெண்களால் நிகழ்த்தப்பட்டது உறுதியாகிறது. பிற்காலத்தில் பெண்கள் மேற்கொண்ட இக்கூத்தைத் தான் தொல்காப்பியர் காலத்தில் வெட்சிக்காக வேலன் செய்தான்.

சங்க காலத்தில் வேலன் வெறியாடல் மட்டுமே செய்துள்ளான். வெற்றிக்கூத்தான காந்தளை ஆடியதற்குச் சான்றுகள் இதுவரையிலும் கிடைக்கவில்லை. மகளிர் வெறிக்கூத்து ஆடியுள்ளனர். அதைக் காந்தள் வகைக் காமவெறியின் முதற்படி என்றே கொள்ளலாம். இது வேலன் ஆடிய வெறியிலிருந்து வேறுபட்டது. இந்த நிலை தொல்காப்பியர் காலத்திலேயே இருந்திருக்க வேண்டும். அதனால்தான் வேலன் வெறியாட்டயர்ந்த காந்தள் என்று இனம் பிரிக்கவேண்டியிருந்தது. வெறியாட்டயர்ந்த காந்தள் என்று மட்டும் கூறியிருந்தால் அது மகளிர் வெறியாடலைக் குறித்துவிடலாமென்று தொல்காப்பியர் கருதியிருக்கலாம். காந்தள், வெறியாட்டுவகைக் கூத்தென்பதாலும், அதை மடலேறுதலில் இருந்து பிரித்துக் காட்டுவதற்காகவும் வெறியாட்டயர்ந்த காந்தள் என்று சிறப்பிக்க வேண்டியதாயிற்று.

'வெறி அறி சிறப்பின்' என்ற சொற்கள் பொருள் கருதியே தரப்பட்டுள்ளன. வெறியாட்டு பல வகைகளாக இருந்தமையாலும், வேலன் அவற்றை நன்கு அறிந்தவன் என்பதாலும், 'வெறி அறி' என்னும் சொற்கள் சேர்க்கப்பட்டன. இக்கூத்தின் வழி வேலன் சொல்லும் சொற்கள், அது எவ்வகை வெறியாய் இருப்பினும், வெவ்விய சொற்களாகவே அமைந்தமையின், 'வெவ்வாய்' என்ற சொல் பெறப்பட்டது. 'சிறப்பின்' என்ற சொல் காந்தளைச் சேர்ந்து பொருள் கூட்டும். வெறிவகைகளை நன்கறிந்து வெவ்விய சொற்களையுடைய வேலன் வெறியாடிச் செய்த சிறப்புக்குரிய காந்தள் என்பதே நூற்பாவின் பொருளாக அமையும்.

இந்நூற்பாவின் உதவியால் வெறி, வேலன் ஆடிய அகவெறி, மகளிர் ஆடிய அகப்புறவெறி, வேலனும் மகளிரும் ஆடிய புறவெறி என மூவகைத்தாய் இருந்தமை தெரியவந்துள்ளது. பின்னவை இரண்டும் காந்தள் என்ற பெயரின்கீழ் வகைப்படுத்தப்பட்டன. மேலும் தொல்காப்பியர் காலத்தில் வேலனே அகவெறியையும், புறவெறியையும் நிகழ்த்தியுள்ளான். அகப்புறவெறி தொல்காப்பியர் காலத்தில் நிகழ்ந்தமைக்குச் சான்றில்லை எனினும் சங்கப் பாடல்கள் கொண்டு, நிகழ்ந்திருக்கலாம் என்று ஊகிக்க இடமுண்டு. தொல்காப்பியர் காலத்தில் வேலன் என்னும் ஆணிடம் இருந்த புறவெறியாடும் சிறப்புரிமை சிலப்பதிகாரக் காலத்தில் சாலினி என்னும் வேட்டுவப் பெண்ணை அடைந்துவிடுகிறது. இந்த மரபுமாற்றம் புறப்பொருள் வெண்பாமாலைக் காலத்திலும் பின்பற்றப்பட்டுள்ளது. பழைய நினைவின் எச்சமாக இங்கு வேலனும் சேர்த்துக்கொள்ளப்படுகிறான். தொல்காப்பியர் காலத்தில் சுட்டப்படாத அகப்புறவெறி, சங்க காலத்தில் தலையெடுத்து, புறப்பொருள் காலத்தில் பரவலாகி, ஒப்புக்கொள்ளப்பட்ட ஓர் ஒழுகலாறாகவே இடம்பெற்றுவிடுகிறது.

காந்தள் கூத்தை கருங்கூத்தென்கிறார் நச்சினார்க்கினியர்.(17) கருங்கூத்தென்பது எதைக் குறிக்கிறதென்பதற்கு நச்சினார்க்கினியரிடம் விளக்கமில்லை. இதையே தம் நூலில் கையாளும் திரு. ஜாண் ஆசீர்வாதம், காந்தட்கூத்து, கண்டனத்திற்குரிய கூத்து என்ற பொருளில் கருங்கூத்தானதாகத் தவறாகப் பொருள் கொண்டு வழி மாறுகிறார்.(18) மேலும் இக்கூத்துவகையை இழிகுலத்தார் ஆடிய கூத்தாகவும் அவர் குறிக்கிறார். காந்தள் கூத்து இழிகுலத்தார் ஆடிய கூத்தென்று எந்த நூலும் குறிப்பிடவில்லை. சிலப்பதிகார உரையில் கூத்து பற்றிப் பேசும் அடியார்க்கு நல்லார், 'வெறியாட்டை விநோதக் கூத்தில் சேர்த்து ஏழென்பாரும் உளர்' என்கிறார்.(19) இதன் அடிப்படையில் காந்தளை விநோதக் கூத்து வகைகளில் ஒன்றாகக் கொள்வதே பொருந்தும். சங்க வழிவந்த குரவை கூட விநோதக் கூத்தாகவே வகைபடுத்தப்பட்டுள்ளது.(20) காந்தளைப் போலவே குரவையும் காமம், வெற்றி இவற்றைப் பொருளாகக் கொண்டது.(21) இது குரவைச் செய்யுட் பாட்டாகக், குழுவாய்க் கை பிணைந்தாடும் கூத்து வகையாகும். மகளிர் ஆடிய காமக் காந்தள் புறப்பொருள் காலத்தில் குழு ஆடலாக மாறியது இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.

அடிக்குறிப்புகள்:

1. தொல்காப்பியம், பொருளதிகாரம் - இளம்பூரணம், கழக வெளியீடு, 1956, பக். 81.

2. தொல்காப்பியம், பொருளதிகாரம் - நச்சினார்க்கினியம், கழக வெளியீடு, 1970, பக். 142.

3. மதுரைத் தமிழ் பேரகராதி, பக். 477.

4. தொல்காப்பியம், பொருளதிகாரம், இளம்பூரணம், பக். 81.

5. புறப்பொருள் வெண்பாமாலை, கழக வெளியீடு, 1978, பக். 117.

6. தொல்காப்பியம், பொருளதிகாரம், நச்சினார்க்கினியம், பக். 142.

7. ஜாண் ஆசீர்வாதம், தமிழர் கூத்துகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, 1985, பக். 88.

8. தொல்காப்பியம், ஆராய்ச்சிக் காண்டிகையுரை, பொருளதிகாரம் - 1, பாவலரேறு ச. பாலசுந்தரம், தாமரை வெளியீட்டகம், தஞ்சாவூர், 1989, பக். 144.

9. தொல்காப்பியம், பொருளதிகாரம், இளம்பூரணம், பக். 81.

10. புறப்பொருள் வெண்பா மாலை, பக். 333.

11. மேற்படி., பக். 334.

12. குறுந்தொகை, உ.வே.சா. உரை, 1937, பக். 276, பாடல் எண். 105.

13. புறநானூறு, உ.வே.சா. உரை, 1956, பக். 435, பாடல் எண். 259.

14. அகநானூறு, நித்திலக்கோவை, ந.மு. வேங்கடச்சாமி நாட்டார், நா. வேங்கடாசலம் பிள்ளை உரை, கழக வெளியீடு, 1944, பக். 726, பாடல் எண். 370, வரி, 14-15.

15. சிலப்பதிகாரம், உ.வே.சா. உரை, தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு, 1985, பக். 311, வரி 16-17, பக். 321, உரை விளக்கம்.

16. புறப்பொருள் வெண்பாமாலை, பக். 29.

17. தொல்காப்பியம், பொருளதிகாரம், நச்சினார்க்கினியம், பக். 143.

18. ஜாண் ஆசீர்வாதம், தமிழர் கூத்துகள், பக். 93.

19. சிலப்பதிகாரம், பக். 80.

20. மேலது, பக். 80.

21. மேலது, பக். 80.this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.