http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 15
இதழ் 15 [ செப்டம்பர் 16 - அக்டோபர் 15 பயணச் சிறப்பிதழ் ] இந்த இதழில்.. In this Issue.. |
பல நாள் கனவு நிறைவேறியது என்பார்களே, அது சிலருக்குத்தான் அமையும். பொன்னியின் செல்வன் யாஹூ குழுமத்தினர், பல நாட்களாகத் தஞ்சை யாத்திரை செல்ல வேண்டும் என்று புலம்பித் தீர்த்த பின், ஸ்வேதாவின் தூண்டுதலால், பெரியண்ணன் சுந்தர் பரத்வாஜ் அவர்கள் அதற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினார். மடல் தட்டியதுதான் தாமதம், நீ நான் என்று போட்டி போட்டுக்கொண்டு ஆட்கள் குவிந்தனர். பல நாட்களுக்குப் பிறகு, இல்லை இல்லை, பல ஆண்டுகளுக்குப் பிறகு, குழுமத்தினர் யாத்திரைக்குத் தயார் ஆனார்கள். களை கட்டியது கல்யாணக்களை கட்டுகிறது என்பார்களே, அதைக் குழுமத்தின் மடல்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம். என்ன ஒரு உற்சாகம்! என்ன ஒரு ஈடுபாடு! பலரும் வருகைக்கு வாக்களித்தார்கள். கடைசி நேரத்தில் சேர்ந்தவர்கள்தான் அதிகம். சுந்தர் பரத்வாஜ் அவர்கள் இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறையின் அனுமதி பெறுவதிலிருந்து, தஞ்சையில் தங்குவதற்கு உட்பட அனைத்து வேலைகளையும் கவனித்துக் கொண்டார். இராமர் பாலம் கட்ட அணில் உதவியது போல, நான் பயணம் மேற்கொள்ளச் சிற்றுந்து ஏற்பாடு செய்தேன். அது காலை வாரியது வேறு விஷயம். பின்னால் அதை பார்ப்போம். இரண்டு நாட்களுக்கு முன்பிருந்தே தூக்கம் பிடிக்கவில்லை. எப்போதடா சனிக்கிழமை வரும், தஞ்சை செல்லலாம் என்று ஆவலாய்க் காத்திருந்ததில், அலுவல் பணிகள் முடங்க, மேலாளரிடம் அர்ச்சனை வாங்கியதுதான் மிச்சம். பயணம் சிறப்பாக அமைய யோசனைகள் குவிந்தவண்ணம் இருந்தன. பயணிப்போரின் பட்டியலைக் கமலக்கண்ணன் அவர்கள் அழகாகத் தொகுத்துத் தர, பயணம் களை கட்டியது. பார்க்கப் போவதைப் பற்றிய பரபரப்பு, பார்க்காத பல குழும நண்பர்களைப் நேரில் காணப்போகும் ஆவல் என ஒரு கலப்படமான உணர்வு அனைவரின் இதயத்தையும் ஆக்கிரமித்திருந்ததை யாராலும் மறுக்க முடியாது. புறப்பாடு இரவெல்லாம் தூக்கம் பிடிக்காமல், எப்பொழுது விடியும் என்று காத்திருந்தது வீண் போகவில்லை. அந்த நாளும் வந்தது, அந்த நேரமும் வந்தது. வீட்டு வாசலில் சிற்றுந்தை பிடித்து, தி.நகர், வெங்கட் நாராயணா தெருவில் இருக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தான வாசலை அடைந்ததுதான் தாமதம். இருவர் என்னை அனுகி, "சதீஷ்..." என்று இழுத்தார்கள். "உமா, சந்திரசேகர்...." என்றேன். உடனே ஒரு பரஸ்பர அறிமுகப் படலம். உமா அவர்கள், இந்த பயணத்திற்காக மும்பையிலிருந்து வந்திருப்பதை அறிந்து திக்குமுக்காடிப் போனேன். உமாவின் சகோதரர் சந்திரசேகர் சென்னைவாசியென்பது பிறகு தெரிந்தது. சிறிது நேரத்திற்கெல்லாம் பலரும் வந்து சேர்ந்தார்கள். மடல்களைப் பார்த்து, திவாகர் என்பவர் எப்படி இருப்பார் என்று பலவாறாகக் கற்பனை செய்திருந்த அனைவருக்கும் பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது. நேர்மாறான தோற்றம். கமல், இராம் வந்த ரெயில் தாமதம் ஆனதால் அவர்களைத் தாம்பரத்தில் வந்து சேர்ந்து கொள்ளும்படி சுந்தர் அவர்கள் கூறிவிட்டு, புறப்பட தயாரானோம். இராஜேந்திர சோழன் அவர்களும், நடராஜன் அவர்களும் வந்து எங்களை வழியனுப்பி வைத்தார்கள். நிர்னயித்த நேரத்தை விட 10 நிமிடங்களே தாமதித்து புறப்பட்டோம். வழியில் சிலர் சேர்ந்து கொண்டார்கள். உணவு, செவிக்கா வயிற்றுக்கா? 'செவிக்குண வில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும்" என்பது வள்ளுவன் வாக்கு. ஆனால் நாம்(ன்)தான் எதிர்மறையான புத்தி உள்ளவராயிற்றே. அதனால், செவிக்கு உணவளிப்பதற்கு முன்பு வயிற்றுக்கு உணவளிக்க எண்ணி பிருந்தாவனத்தில் இறங்கினோம். எங்களுக்கு என்ன வேண்டும் என்று பட்டியல் எடுத்த உணவக ஊழியருக்குப் பைத்தியம் பிடிக்காத குறைதான். ஒருவழியாகக் காலை உணவு முடித்துக் கிளம்பியதும், செவிக்கு உணவளிக்க எண்ணி உரையாடலைத் தொடங்கினோம். ஒவ்வொருவரும் எப்படி "பொன்னியின் செல்லவன்" படித்தோம், எப்படி இந்த குழுமத்தில் சேர்ந்தோம், என்பன பற்றியான செய்திகளை பறிமாறிக்கொள்ளவே பாதி நேரம் கழிந்தது. வழி நெடுக வெங்கடேஷ் அவர்களும், சுந்தர் பர்த்வாஜ் அவர்களும் இன்ன இடங்களுக்கு இன்ன இன்ன சிறப்பு என்று பல தலவரலாறுகளைக் கூறிக்கொண்டே வந்தனர். ஹா, நமக்கு அருகிலேயே இருக்கும் விஷங்கள் நமக்கு தெரியவில்லையே என்று நினைத்த பொழுது சிறிது வெட்கமாக இருந்தது. சில இடங்களில் வண்டியை நிறுத்தி அந்த இடங்களின் சிறப்பைப் பற்றிச் செய்திப் பரிமாற்றங்கள் செய்து பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்தோம். எண்ணாயிரம், வடலூர், வீரநாராயண ஏரி போன்றவை அவை. எண்ணாயிரத்தில் "காளமேகப் புலவர் பிறந்த ஊர்" என்றொரு 20ம் நூற்றாண்டுக் கல்வெட்டைப் பார்த்துவிட்டு வண்டி ஏறும்பொழுது, நண்பர் கமலக்கண்ணன் கூறினார், "என் அலுவலக நண்பர் ஒருவர், பல நாட்களாய்க் காளமேகப் புலவரின் பாடல்கள் படிக்க வேண்டும் என்று கூறிக்கொண்டிருந்தார், என்னடா இது இலக்கியம் ஒன்றும் படிக்காத இவருக்கு ஏன் காளமேகத்தின் மேல் இவ்வளவு பற்று என்று கேட்டேன், அதற்கு நண்பர், காளமேகம் டபுள் மீனிங் பாட்டு எழுதுவாராமே, அதனால என்றார்" என்றாரே பார்க்கலாம். கங்கை கொண்டான் பொன்னியின் செல்வனைப் பற்றியும் இன்ன பிற வரலாற்றுச் செய்திகள் பற்றியும் அளவளாவியிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. அந்த சமயத்தில் சுந்தர் பரத்வாஜ் அவர்கள் ஒரு கள்ளுக்கடைக்கு அழைத்துச் சென்றார். செல்வதற்கு முன் ஒரு எச்சரிக்கை செய்தார். அதைப் வெளியிலிருந்து பார்த்துவிட்டு வந்து விட வேண்டும், உள்ளே செல்ல அனுமதி இல்லை, சென்றால் தஞ்சைக்கு நேரத்தோடு செல்ல முடியாதென்று. அந்த கள்ளுக்கடை, கங்கை கொண்ட சோழபுரம்தான். வெளியிலிருந்து பார்த்துவிட்டு வா என்றால் நடக்கிற காரியமா? உள்ளே எப்படி இருக்கிறது என்றாவது பார்க்க வேண்டாமா? அந்த ஆவலில், சிலர் அதன் வாசல் வரை சென்று புகைப்படம் எடுத்து வந்தார்கள். என்ன ஒரு படைப்பு! என்ன ஒரு அற்புதம்! தமிழ்நாட்டின் இப்பேர்ப்பட்ட கலைச்செல்வங்களுக்கு ஈடாக இந்த உலகில் வேறு ஒன்று உண்டு என்றால், அது மடமையன்றோ? அரை மனதுடன் அந்த இடத்தைவிட்டு அகன்றோம். இராஜேந்திரன் உண்மையாகவே கங்கை வரை சென்றானா, என்ற திசையில் விவாதம் சென்றது. இராஜேந்திரன் கங்கை செல்லவில்லை ஹூக்ளிதான் சென்றான், அதனால் அவன் ஹூக்ளி கொண்ட சோழ்ன்தான் என்று திவாகர் வாதிட்டதால், சோழ வம்சத்து குலக்கொழுந்துகளின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொண்டார். குடந்தையில் உணவு செவிக்குப் போதிய உணவு கிடைத்த ஆதங்கத்தில் வயிறு தான் இருப்பதைச் சத்தம் போட்டு உணர்த்தியது. நல்ல வேளையாகக் குடந்தையை அடைந்திருந்ததால் அங்கு மதிய உணவிற்கு இறங்கினோம். நம் குழுமத்திற்குப் பரிச்சயமான மடிப்பு கலையா சீதாராமன் அங்கு வந்து சேர்ந்து கொண்டார். பிரயாணக்களைப்பில் அனைவரும் ஒரு பிடி பிடித்தோம். நேரம் ஆனதால் பரபரப்போடு தஞ்சையை நோக்கி கிளம்பினோம். பெரிய கோயில் சிற்றுந்து எங்களது வேகத்திற்கு ஈடு கொடுக்காததால் எரிச்சலுற்றோம். வழியில் மழை வேறு வேகத்தைத் தடை செய்தது. மாலை 4.00 மணியளவில் தஞ்சை சென்று சேர்ந்தோம். நேரே தங்கும் விடுதிக்குச் சென்று, சிரமப் பரிகாரம் செய்து கொண்டு 4.30 மணியளவில் அனைவரும் பெரிய கோயிலை நோக்கிப் படையெடுத்தோம். அடாது மழை பெய்தாலும் விடாது முன்னேறிச் சென்று பெரிய கோயிலை அடைந்தோம். "சென்னைவாசிகளே, குளிக்கத் தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படும் நீங்கள், நன்றாகக் குளித்துச் சுத்தமாக என்னைக் காண வாருங்கள்" என்று பெருவுடையார் நினைத்தாரோ என்னமோ, அனைவரும் சொட்டச் சொட்ட நனைந்து கோயிலுள் நுழைந்தோம். "எத்தனை கோடி யின்பம் வைத்தாய் - எங்கள் இறைவா! இறைவா! இறைவா!" என்ற பாரதியின் பாடல் நினைவு வந்தது. பல கோடி இன்பங்களுள் இதுவும் ஒன்றோ என்று வியந்தபடியே, பெருவுடையாரைத் தரிசிக்க விழைந்து உள்ளெ சென்றோம். இராஜராஜன் யார், சோழர்களைப் பற்றி தெரிந்து கொண்டு என்ன செயவது என்று விதண்டாவாதம் செய்யும் நபர்கள், இப்படிபட்ட இன்பங்களை அனுபவிக்க தெரியாத மூடர்கள். கண்ணிருந்தும் குருடர்கள். நேராகத் தெரியும் பெருவுடையாரின் பிரம்மாண்டம் மனதைக் கொள்ளை கொண்டது. "ப்ரஹ்மாண்ட வ்யாப்த தேஹா.." என்று வேதம் கொண்டாடும் அகில கோடி ப்ரம்மாண்ட நாயகன். அவனுக்கு ப்ரம்மாண்டமான லிங்க மூர்த்தத்தை ஸ்தாபிக்க வேண்டும் என்று நினைத்தானே இராஜராஜன், அவனுடைய பக்தியை என்னவென்றுரைப்பது! ஐம்பொறிகளையும் கட்டிப்போடும் வசீகரம். பக்தி வெள்ளத்தில் திக்குமுக்காடி போய் அந்த இறைவனை அர்ச்சித்து அங்கிருந்து அகன்றோம். புதையலைத் தேடி சரி வந்த விஷயத்தைப் பார்ப்போமா, என்று அனைவரும் அடக்கவொன்னா ஆர்வத்துடன் காத்திருக்க, மழை விட்டபாடில்லை. மழை நிற்கக் காத்திருந்தால் நேரம் ஆகிவிடும் என்பதால், மழையில் நனைந்தபடியே, இரும்பு ஏணியில் ஏறி இரண்டாம் தளத்தை அடைந்தோம். இரண்டாம் தளத்தில், உள்ளே, கர்ப்பக்கிருகத்திற்கு மேலே, ஆட்கள் செல்ல வழி அமைக்கப் பெற்றிருக்கும். சமீபத்தில் தொல்லியல் துறையால் போடப்பெற்ற உத்திரத்தை நீக்கிப் பார்த்தால், பெருவுடையாருக்கு நேர் மேலே, கலசம் வரை திறந்த வெளிதான். விமானம் சுற்றிலும் கற்கள் அடுக்கி மேலே உயர்த்தியுள்ள கட்டிடக்கலையை வியக்கக்கூடப் பலருக்கு அறிவாற்றல் போதாது என்று சொன்னால், அது மிகையாகாது. கர்ப்பக்கிருகத்தைச் சுற்றி ஒரு சுவரும், அதற்கு வெளியில் ஒரு சுவரும் அமைத்து, இரு சுவர்களுக்கும் நடுவில் நடக்கும் அளவிற்கு வழி சமைத்தால், அந்தக் கட்டுமானத்தைச் சாந்தாரம் என்று கூறுவர். இந்தக் கோயிலின் சிறப்பு என்னவென்றால், இந்த சுற்றுப் பாதை இரண்டாம் தளம் வரை மேலிழுக்கப்பட்டுள்ளது. முதல் தளத்தில் இருந்ததால், இரு சாந்தாரச் சுவர்களும் எப்படி இணைக்கப்பட்டுள்ளன என்பதைத் தெளிவாகப் பார்க்க முடியும். இந்தக் கட்டடக்கலை நுணுக்கத்தை, வரலாறு குழுவினர் விளக்கினார்கள். பார்த்துப் புரிந்துகொள்ளவே முடியாத அந்த அற்புதத்தை, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் படைத்த நிபுணர்களின் திறமையை எண்ணி எண்ணி வியந்தோம். முதல் தளச் சாந்தாரச் சுற்றில், சுவர்களில் அந்தச் சிவனே ஆடும்படியாக அமைந்த 108 நாட்டிய கரணங்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. 108 கரணங்களில், 81 மட்டுமே பூர்த்தியாகியுள்ளது விவாதத்திற்குரிய விஷயமாகும். சிவபெருமானே ஆடும்படியான சிற்பங்கள், வேறு எங்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஓவியமா, காவியமா? மேல்தளத்தைப் பார்த்து முடித்தபின், யாத்திரையின் முக்கியமான கட்டம் வந்தது. அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த, சோழர் காலத்து ஃப்ரெஸ்கோ ஓவியங்கள். கீழிறங்கி, கர்ப்பக்கிருகத்தைச் சுற்றும் பாதையினுள் நுழைந்தோம். முதலில் வரவேற்றவர் வீரபத்திரர். அவரை விட்டு அகன்று ப்ரதட்ச்சனமாகச் சென்றால் கண்கவர் ஓவியங்கள். இரு குழுவாகப் பிரிந்து பார்க்கத் தொடங்கினோம். ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும் பளபளப்பு குன்றாமல், மிளிரும் இக்கலைப் பொக்கிஷங்களை மூடி மறைக்க, அந்த நாயக்கர் மன்னர்களுக்கு எப்படித்தான் மனது வந்ததோ? 'வானகமே, இளவெயிலே, மரச்செறிவே, நீங்களெல்லாம் கானலினீரோ? - வெறுங் காட்சிப் பிழைதானோ?" என்று இயற்கையைப் பார்த்துப் பாடிய பாரதி, இந்த ஓவிங்களைப் பார்த்திருந்தால், இயற்கையை விட்டுவிட்டு, இந்த ஓவியங்களைப் பாடியிருப்பார். காண்பது கனவா, நினைவா, காட்சிப்பிழையா என்று சித்தத்தைச் சிதறடிக்கும் ஓவியங்கள். எதைப் பார்ப்பது எதை விடுப்பது என்ற குழப்பத்துடன், கிடைத்த நேரத்தில் கண்ணில் பட்டதை மனதில் படம் பிடித்துக்கொண்டோம். தென் திசை நோக்கிய தட்சிணாமூர்த்தியாகட்டும், மேற்கு நோக்கிய சுந்தரர் வரலாறு ஆகட்டும், அங்குள்ள அனைத்துமே ஒன்றை ஒன்று விஞ்சக் கூடியது. சிறு ஓவியத்தொகுதியாகட்டும், சுவரை மறைக்கும் பெரிய ஓவியமாகட்டும், அனைத்திலுமே எத்தனை விரிவான செய்திகள். ஃப்ரெஸ்கோ ஓவியத்தை ஒரு நாளில் வரைந்து முடிக்க வேண்டுமாம். ஓவியத்திலுள்ள ஒவ்வொருவரின் முகத்திலும்தான் எத்தனை பாவங்கள். அத்தனை பாவத்தையும் 24 மணி நேரத்தில் அந்த ஓவியன் எப்படித்தான் படம் பிடித்தானோ, அந்த உடையாருக்கே வெளிச்சம். அரை மனத்துடன் மேற்குப்புறம் சென்றால் ஒரு பக்கத்தில் சுந்தரர் வாழ்க்கை வரலாறு. சுந்தரரின் வாழ்க்கையைத் தத்ரூபமாகப் படம் பிடித்துள்ள ஓவியனின் கைகளுக்கு இராஜராஜன் நிச்சயம் தங்கக் காப்பு அணிவித்திருப்பான். தடுத்தாட்கொள்ளும் தொகுதியில் வயோதிக அந்தணர், கையில் வைத்துள்ள ஓலையில் உள்ள எழுத்துக்களைப் படிக்கும் அளவிற்குத் துல்லியத்தைக் காட்டியுள்ளனர். அதையடுத்த சுவரில் ஒரு கோவில் வழிபாட்டுக்காட்சி. இதுதான் பலரது தூக்கத்தைக் கெடுத்து, நண்பர்களையும் பகைவராக்கத்தக்க வாக்குவாதத்தில் கொண்டு விடும் சித்திரம். சிதம்பரம் கோயிலில் ஒரு ஆடவன் சில பெண்டிருடன் வழிபடும் காட்சி. இது இராஜராஜனாகத்தான் இருக்க வேண்டும் என்று ஒரு சாராரும், இல்லவே இல்லை என்று மற்றுமொரு சாராரும் வாதிடத் தொடங்கினர். (அந்த வாதம் இன்னும் தொடர்கிறது என்பது வேறு கதை). இந்தத் தொகுதியில் அக்காலத்திய ஆடை அலங்காரங்களைப் பற்றிய விரிவான தகவல்களைக் காண முடிகிறது. சட்டை போட்ட மனிதர்களைக் கூடக் காணலாம். (இதிலிருந்து சட்டை அல்லது மெய்பை நமக்கு புதிதல்ல என்பது தெள்ளத்தெளிவு) கிழக்குத் தொகுதியில் மனதைக் கிறங்கடிக்கும் காட்சி. தலை சிறந்த ஓவிய வல்லுனர்களால், ஆயிரம் 'மோனாலிசா'க்களுக்குச் சமம் என்று வருணிக்கப்பட்ட திரிபுராந்தகன் சித்திரத் தொகுதி. கண்களில் கோபக்கனலை வீசி, உதட்டில் புன்னகையைத் தவழ விட்டுக் காட்சி தரும் திரிபுராந்தகன், சுற்றிலுமுள்ள ப்ரம்மா, கொற்றவை, தேவகணங்கள், அசுரகணங்கள் என்று பற்பல உருவங்கள், ஒவ்வொரு உருவத்திலும் பயம், சந்தோஷம், கர்வம், சாந்தம் போன்ற எண்ணற்ற பாவங்கள், இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். வெளியே வர மனம் இல்லாமல் அந்த இடத்தை விட்டு அகன்றோம். இவ்வளவு நேரம் பார்த்து அனுபவித்த பிறகும், பார்த்த திருப்தி இல்லாததால்தான் அந்த ஓவியங்கள் காட்சிப் பிழையோ என்ற எண்ணம் தோன்றியது. குடையில்லாமல் குடவாயிலுடன் வெளியே வந்து கோயிலை ஒரு சுற்றுச் சுற்றுவதற்கும், குடவாயில் முனைவர். பாலு அவர்கள் வருவதற்கும் சரியாக இருந்தது. வானம் சிறு தூறலைத் தூவிக்கொண்டே இருந்தது. குடவாயில் அவர்கள் கோயிலின் கட்டட அமைப்பு, அதன் நேர்த்தி, சிறப்புகள் போன்றவற்றைக் குழுவிற்கு எடுத்துரைத்தார். இராஜராஜன் கைலாயத்தையே, எப்படி தட்சிணமேருவாக இங்கே கொண்டுவந்துள்ளார் என்பதை மிக அழகாக, அனுபவித்துச் சொல்லிக்கொண்டிருந்ததில் நேரம் போனதும் தெரியவில்லை, தூறலில் நனைவதும் தெரியவில்லை. தென்கிழக்கு மூலையில் இருந்த ஒரு மேடையில் எங்கள் கதாகாலட்ஷேபம் நடந்து கொண்டிருந்தது. கோயிலைச் சுற்றி வரலாமென அங்கிருந்து நகர்ந்தது நம் குழு. கோயிலின் சுவரில், தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது, ஒரு ஆடவல்லான் சிற்பத் தொகுதி. குடவாயில் அவர்கள் அதன் அழகை விவரித்ததில், அந்தச் சிற்பத்தொகுதி உயிர் பெற்றுக் கண் முன்னே நிஜமாக ஆடிய ஒரு உணர்வு ஏற்பட்டது. "குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிழ் சிரிப்பும்.." என்று பாடலுக்கு உயிர் ஊட்டியது அந்த சிற்பம். அதன் அழகில் திளைத்திருந்தபோது, கங்கை கொண்ட சோழபுரத்தில் இதே இடத்தில் இதைப்போன்ற ஆடவல்லான் சிற்பத்தொகுதி இதை விட அழகாக இருக்கும் என்று குடவாயில் பாலு அவர்கள் சொல்லிய பிறகு, கங்கை கொண்ட சோழபுரம் செல்லும் ஆவல் மிகுதியானது. வலமாக வந்து, ஆடவல்லானின் செப்புத்திருமேனி இருந்த மண்டபத்திற்குள் நுழைந்தவர்களுக்கு அங்கிருந்த சூழல் உருவாக்கிய பரவச நிலையை வர்ணிக்க வார்த்தை இல்லை. சாம்பிராணிப் புகைபோட்டு, ஆடவல்லானுக்குப் பூசை நடந்து கொண்டிருந்தது. ஒரு ஓதுவார் தன்னை மறந்து தேவாரத் திருப்பதிகங்களைப் பாடிக்கொண்டிருந்தார். ஆடவல்லானின் அழகைக் காணச் சென்றவர்கள் அதை மறந்து பக்தியில் மூழ்கித் திளைத்தோம். "காரொளிய திருமேனி¢ச் செங்கண் மாலுங் கடிக்கமலத் திருந்தயனுங் காணா வண்ணஞ் சீரொளிய தழற்பிழம்பாய் நின்ற தொல்லைத் திகழொளியைச் சிந்தைதனை மயக்கந் தீர்க்கும் ஏரொளியை இருநிலனும் விசும்பும் விண்ணும் ஏழுலகுங் கடந்தண்டத் தப்பால் நின்ற பேரொளியைப் பெரும்பற்றப் புலியூ ரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே." என்று அப்பர் பெருமானின் திருப்பதிகத்தை அவர் பாடியதைக் கேட்ட அனைவரின் கண்களிலும் நீர் துளிர்த்தது. பரவசமூட்டும் பதிகம், பக்திமணம் கமழும் சாம்பிராணிப் புகை, எதிரே ஆனந்தமாய்த் தாண்டவம் ஆடும் எம்பெருமானின் அழகிய தோற்றம், இப்பேற்றைப் பெற என்ன தவம் செய்திருக்க வேண்டும் என்று எண்ணினேன். பாடல் முடிந்த பிறகே அனைவரும் சுய உணர்வு பெற்றனர். அந்தச் செப்புத் திருமேனியின் சிறப்பை விளக்க வந்த பாலு அவர்கள், இந்தப் பரவச நிலையில் வந்த வேலையை மறந்து, அங்கிருந்து நகரப்பார்த்தார். விடுவாரா நம் பெரியண்ணன். அந்தச் செப்புத் திருமேனியைப் பற்றிக் குழுவிற்கு விளக்குமாறு வேண்டினார். கண்களில் துளிர்த்த நீரை மெதுவாகத் துடைத்துக் கொண்டு, பாலு அவர்களின் ப்ரசங்கத்தைக் கேட்கச் செவிகள் தயாராயின. அந்த ஆடவல்லான், இராஜராஜனே செய்வித்து, துதித்துப் போற்றியது என்றும், அதன் அழகைப் பற்றியும் கூறியதைக் கேட்டவுடன், இராஜராஜன் நின்று வழிபட்ட இடத்தில் நாமும் இன்று நிற்கிறோமே என்று ஒரு பெருமிதம் ஏற்பட்டது. அந்தப் பெருமிதத்தோடே, மீண்டும் ஆரம்பித்த அந்த மேடைக்கே வந்து சேர்ந்தோம். விடை பெறும் முன், சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ள அனைவரும் குடவாயில் அவர்கள் மேல் கேள்விக் கணைகளைத் தொடுத்தார்கள். பேச்சு கடைசி கட்டத்தை அடையவும், கோயிலில் அர்த்த ஜாம பூஜை தொடங்கவும் சரியாக இருந்தது. விளக்குகள் அணைந்தன, ஆனால் எங்கள் அனைவரின் உள்ளத்திலும் அன்று தோன்றிய பரவசம், புதியதைக் கண்ட சந்தோஷம் என்றும் அணையா தீபமாய்ச் சுடர்விடும் என்பதில் சந்தேகம் இல்லை. ஒரு இனம் புரியாத உணர்வுடன் அன்றைய பொழுது முடிந்தது. மீண்டும் பயணம் முதல் நாள் எவ்வளவுக்கெவ்வளவு தீவிரமாக இருந்தோமோ, அடுத்த நாள் நேர்மாறாக இருந்தது. முதல் நாள் புதிய முகங்கள் என்ற தயக்கம் இருந்தது. கொஞ்சம் பழகிய பிறகு கூச்சமாவது தயக்கமாவது. கேலியும் கிண்டலுமாகப் பயணம் இனிதே தொடர்ந்தது. காலை உணவு முடித்த பின் நேராக, தஞ்சை இராஜராஜன் மணிமண்டபத்திற்குச் சென்றோம். பல அரிய கலைப் பொக்கிஷங்களினூடே, திருவலஞ்சுழி ஷேத்திரபாலர் திருவுருவச்சிலையும் இங்குதான் வைக்கப்பட்டுள்ளது. முன்கை இரண்டும் பின்னப்பட்டுள்ள நிலையில் பார்க்கக் கொஞ்சம் சங்கடமாக இருந்தாலும், அந்தச் சிலையின் அழகு எள்ளளவும் குன்றவில்லை என்பது நிதர்சனமான உண்மை. குடவாயில் பாலு அவர்களும் அங்கு வந்து எங்களுடன் சேர்ந்து கொண்டார். இராஜராஜனின் மாளிகையிலிருந்ததாகக் கருதப்படும் ஒரு மாபெரும் தூண் ஒன்றைக் காண்பித்து அதை எப்படிக் கண்டுபிடித்தார்கள் என்ற கதையை மிக ஸ்வாரஸ்யமாக கூறினார். க்ரந்தத்தில் இராஜராஜனின் புகழ் பாடும் பாடல்கள் அதில் இருப்பதாக அறிந்தோம். கையளவு மனசு அட, பாலசந்தர் தொலைக்காட்சி தொடர் இல்லை, இது வேறு. அன்றைய முதல் கோயிலாகப் புள்ளமங்கையை நோக்கிப் படையெடுத்தது நம் குழு. பார்த்தால் சிறியதாக இருக்கும் அத்திருக்கோயிலில்தான் எத்தனை கலைச்செல்வங்கள். யாரும் எதிர்பார்க்க முடியாத அளவுக்குச் சிற்பச் சிதறல்கள். கையளவே உள்ள சிற்பத் தொகுதிகள் கோயில் சுவர் முழுவதும் இறைந்து கிடக்கின்றன. மனதைக் கொள்ளைகொள்ளும் அந்த சிற்பத்தொகுதிகளைப் பார்க்க ஒரு நாள் போதாது. இராமாயணக் காட்சிகளாகட்டும், ஈஸ்வரன் உமை தொகுதிகளாகட்டும், காணக் கண் கோடி வேண்டும். கையளவுக் கற்சிற்பத்தில் நம் மனதைக் கட்டிப்போடும் ஒவ்வொரு தொகுதியும் ஒராயிரம் முறை பார்த்தாலும் சலிக்காதவை. நேரம் இன்மையால் முதல் தளத்தில் உள்ள அம்மையப்பரைக் கூடப் பார்க்காமல் கிளம்பவேண்டியதாயிற்று. தமிழர் பண்பாடு தமிழர் பண்பாடு என்னவென்றால், விருந்தோம்பல் என்று யாரும் கூறிவிட முடியும். ஆனால் இன்றய அவசர யுகத்தில் நம்மால் அதைச் சரிவரச் செய்ய முடியவில்லை. ஆனால், இலக்கியங்கள் போற்றும் விருந்தோம்பல் என்னவென்று அன்று அனுபவிக்க ஒரு வாய்ப்பு கிடைத்த்து. புள்ளமங்கையிலிருந்து, திருவலஞ்சுழி போவதற்கு முன், ஸ்வேதாவின் வீட்டிற்குத் தேனீர் அருந்த அழைத்தார். அவர் குடும்பத்தினர் அனைவரும் வாசலில் வந்து வரவேற்றனர். தேனீருக்கே இவ்வளவு உபசாரம் என்றால், சாப்பாட்டைத் தவறவிட்டுவிட்டோமே என்று ஏக்கமாக இருந்தது. சுமார் ஒரு மணி நேரம் அவர் குடும்பத்துடன் அளவளாவிவிட்டுக் கிளம்பினோம். மீண்டும் வாசல் வரை வந்து வழியனுப்பினர் அவர் குடும்பத்தார். திருவலஞ்சுழி, பஞ்சவன்மாதேவி பள்ளிப்படை திருவலஞ்சுழியில் செலவிட அதிக நேரம் இல்லாததால் அவசரமாக ஒரு சுற்று சுற்றினோம். முக்கியமானவற்றை, கமல், இராம் குழுவினருக்கு விவரித்தார்கள். இடிந்துபோன ஏகவீரியின் சந்நிதி, புனரமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஷேத்திரபாலர் சந்நிதி, ஏக வீரியின் அற்புதச் சிலை முதலியவற்றைப் பார்த்து ரசித்துவிட்டு அங்கிருந்து கிளம்ப ஆயத்தமானோம். இருக்கும் நேரத்தில் எங்கே செல்வது என்ற குழப்பம். தாராசுரமா, பஞ்சவன்மாதேவி பள்ளிப்படையா? வாக்கெண்ணிக்கையில் பஞ்சவன்மாதேவி பள்ளிப்படை வென்றது. அங்கு மராமத்துப் பணி நடந்து கொண்டிருந்தமையால் சரியாகப் பார்க்க முடியவில்லை. முக்கியமாக "பள்ளிப்படை" என்றுரைக்கும் இராஜேந்திரன் கல்வெட்டு, கட்டுமானப் பொருட்களால் மறைந்திருந்தது வருத்தத்தை உண்டாக்கியது. வேகமாக ஒரு சுற்று சுற்றிவிட்டு கும்பகோணத்தை நோக்கி வண்டியைச் செலுத்தினோம். வழியெல்லாம் ஒருவரை ஒருவர் கிண்டலடித்தும் கலாட்டா செய்தும் பொழுதைப் போக்கிக்கொண்டிருந்தோம். ஏதோ கல்லூரி சுற்றுலா போல் இருந்தது. கும்பகோணத்தை அடைந்தால், ஸ்வேதா குடும்பத்தினர் ஒரு ஹோட்டலில் மதிய உணவிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். அவர்கள் வீட்டில் சாப்பிடவில்லை என்ற குறை நீங்க, வெளியில் சாப்பிட ஏற்பாடு செய்திருந்தது, அவர்களது விருந்தோம்பலைப் பறைசாற்றியது. உணவு முடிந்ததும் பலர் அவர்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு அங்கிருந்தே பயணம் மேற்கொள்ள விடை பெற்றுச் சென்றார்கள். கதாநாயகன் சுமார் 4 மணியளவில் சென்னைவாசிகள் அனைவரும் சிற்றுந்தில் வீடு நோக்கிப் புறப்பட்டோம். பொன்னியின் செல்வன் கதை, அதன் நிறை, குறை, அதன் கதாபாத்திரங்களின் வார்ப்பு எனப் பலவாராகச் சென்றது எங்கள் கலந்துரையாடல். வேடிக்கையாகச் சில பாத்திரங்களைக் குறையும் கூறினோம். இந்தப் பேச்சு ஸ்வாரஸ்யத்தில் இருட்டியதை யாரும் கவனிக்கவே இல்லை. தீடீரென்று வண்டி நின்றதும்தான் சுய உணர்வு பெற்றோம். வண்டியில் ஏதோ கோளாறு என்று ஓட்டுனர் அதைச் சரி செய்யும் முயற்சியில் இறங்கினார். திரைப்படத்தில் வரும் கதாநாயகர்கள், எங்கெங்கு உதவி தேவையோ, அங்கெல்லாம் இருப்பார்கள். எப்படி வருவார்கள் என்பது ஆண்டவனுக்குதான் வெளிச்சம். இதற்காக வசனம் எல்லாம் பேசுவார்கள். ஆனால், இப்படி வசனம் பேசாத உண்மைக் கதாநாயகனைப் பார்திருக்கிறீர்களா? அவர்தான் பெரியண்ணன் சுந்தர் பரத்வாஜ். வண்டி நின்று நடுத்தெருவில் தத்தளித்துக்கொண்டிருந்த 10வது நிமிடத்தில், கும்பகோணத்தில், வேலை நிமித்தம் எங்களைப் பிரிந்து சென்ற அவர், அங்கு வந்து சேர்ந்தார். முனைவர் கலைக்கோவன், "வீக்கெண்ட் விஷ்ணு" என்ற பட்டம் இவருக்குக் கொடுத்தது எவ்வளவு பொருத்தம் என்று வியந்தேன். அவர் வண்டியில் 8 நபர்கள்தான் போகலாம் என்பதால் நான், என் தாயார், மற்றும் சங்கரன், ஸ்ரீராம் முதலியோர் தங்கி விட்டு மற்றோரை, சுந்தர் அவர்களின் வண்டியில் அனுப்பிவிட்டோம். வண்டி சரியாகி, சிறிது நேரம் கழித்து இரவு உணவிற்கு முன் சென்றவர்கள் இறங்கிய விடுதியில் நாங்களும் இறங்கினோம். பிரியாவிடை அங்கிருந்து மீண்டும் கிளம்பும் போது, சிற்றுந்தின் டயர் காற்றுப்போய்த் தட்டையாக இருந்தது. அழகான குழந்தைகளுக்குத் திருஷ்டிப் பொட்டு வைப்பார்களே, அது போல், எங்கள் அழகான பயணத்திற்கு, இது திருஷ்டி போலும். நேரம் 10.30ஐ தாண்டியதால், சுந்தர் அவர்கள், தன் ஓட்டுநரைச் சிற்றுந்தின் ஓட்டுநருக்குத் துணையாக விட்டு விட்டு மற்றவரைத் தன் வண்டியில் திணித்துக்கொண்டார். பாவம் சங்கரனும், ஸ்ரீராமும் இடம் இன்மையால் பின் தங்க நேர்ந்தது. 12 மணியளவில் சுந்தர் அவர்கள் என்னை என் வீட்டில் இறக்கி விட்டார். அனைவரும் பிரியாவிடை பெற்றோம். பயணம் முடிந்ததும் ஏதோ பாரமாக இருந்தது. அந்த நினைவில் தூக்கம் பிடிக்காமல் புரண்டுகொண்டிருந்த போது, நான் வந்த 30வது நிமிடத்தில், ஸ்ரீராமிடமிருந்து தகவல், "வந்து சேர்ந்துவிட்டோம்" என்று.this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |