http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 15
இதழ் 15 [ செப்டம்பர் 16 - அக்டோபர் 15 பயணச் சிறப்பிதழ் ] இந்த இதழில்.. In this Issue.. |
வந்தியத்தேவனுக்கு கூட கிடைத்திராத வாய்ப்பு. இரண்டே நாளில் வீராணம் ஏரி, கொள்ளிடத்தையெல்லாம் தாண்டி தஞ்சைக்கு சென்றுவிட்டு திரும்புவது என்பது. சாகஸங்களும் சந்தோஷங்களும் வந்தியத்தேவனை மட்டுமல்ல ஆயிரம் வருஷங்களுக்கு பின்னர் பொன்னியின் செல்வன் பக்தர்களையும் பின் தொடர்ந்தது. ஆன்மீகம், வரலாறு, இலக்கியம் என மூன்று துறைகளிலும் ஆர்வத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு சரித்திர நாவலை எழுதிக்கொண்டிருக்கிறோம் என்பதை ஐம்பது வருஷங்களுக்கு முன்னர் கல்கியே நினைத்து பார்த்திருக்கமாட்டார். இணையத்தின் மூலம் நட்பு வளர்த்து வந்தியத்தேவன் வலம் வந்த இடங்களுக்கெல்லாம் சென்று வந்த பொன்னியின் செல்வன் குழுமத்து நண்பர்களுக்கு இது மூன்றாம் யாத்திரை. வீராணம் ஏரி நிரம்பி வழிகிறது. ஏறக்குறைய ஆயிரம் வருஷங்களுக்கு முன்னர் இங்குதான் வந்தியத்தேவன் குதிரையை விட்டு இறங்கினான் என்ற நண்பர் சொன்ன தகவலின் நம்பகத்தன்மை பற்றி யாருக்கும் கவலையில்லை. கல்கியே நேரில் வந்து வந்தியத்தேவன் வீராணம் ஏரிக்கு வரவேயில்லை என்று சொன்னாலும் யாரும் நம்ப மாட்டார்கள். வீராணம் ஏரி, கொள்ளிடக்கரை, பழுவூர் பங்களா என்ன கும்பகோணத்து ஜோதிடர் வீட்டைக்கூட நேரில் பார்க்க எல்லோருக்கும் விருப்பம்தான். தஞ்சையை நோக்கிய பயணத்தில் கங்கை கொண்ட சோழபுரத்தை கண்டுகொள்ளாமல் விட்டுவிடலாமா? எங்கெங்கு காணினும் மஞ்சள் சாயமாய் கோபுரமும், சுற்றுப்புற சுவர்களும். புதிதாக பொலிவு வந்திருக்கிறதா அல்லது பழைய பொலிவை இழந்திருக்கிறதா என்பதை பற்றி இன்னொரு நாள் சாவகாசமாக பட்டிமன்றம் நடத்தலாம். தஞ்சை பெரிய கோயில். வாழ்நாள் முழுவதும் இங்கேயே தங்கியிருந்தாலும் எல்லா விஷயத்தையும் தெரிந்து கொள்ள முடியாது என்று டாக்டர் கலைக்கோவனும் எப்போது கோயிலுக்கு வந்தாலும் புதிது புதிதான விஷயங்கள் கண்ணில் படுவது வழக்கம் என்று குடவாயில் சுப்ரமணியனும் மாய்ந்து மாய்ந்து பேசும்போது நாமெல்லாம் எம்மாத்திரம்? ஒரு பதினைந்து, பதினேழு முறையாவது வந்து போன இடம் அது. பிள்ளையாரிடம் பர்மிஷனிடம் வாங்கிவிட்டு பெருவுடையாரை பார்க்க அவசரப்படும் யாருமே அந்த சேஷத்திரபாலகர்கள் சொல்லும் செய்தியை கவனிக்க மறப்பது இயல்புதான். யானையை விழுங்கும் அந்த கொடிய பாம்பை மிதித்து 'ஏகன் அநேகன்' என இறைவனின் பெருமையை சொல்லும் ஷேத்திர பாலகர்களின் முகபாவங்கள் முக்கியமானவை. இப்போதெல்லாம் எட்டு அடுக்கு மாளிகை கட்டினாலும் எட்டு வருடங்களுக்கு கூட ஒழுங்காக இருப்பதில்லை என்று அங்கலாய்த்த அந்த சிவில் கான்டிராக்டருக்கு இரண்டாவது தளத்தில் நிறைய விஷயங்கள் காணக்கிடைத்தன. நான்கு அடி அடித்தளத்தை கொண்டிருக்கும் பெரிய கோயில் ஆயிரம் வருஷங்களை கடந்தது எப்படி என்பதற்கான பதில் இரண்டாம் தளத்தில் சொல்லப்பட்டுவிடுகிறது. கோபுரத்தின் பாரத்தை இரு பிரிவாக சரிசமமாக பங்கீட்டுக்கொள்ளும் அந்த சுற்றுப்புற சுவர்களைக் கூட யாரும் சும்மா விட்டுவைக்கவில்லை. எண்பத்தொரு நடன முத்திரைகளை சிவனே செய்து காட்டுவதாக வடிக்கப்பட்டிருக்கும் சிற்பங்கள், கலாசேஷ்த்ரா கலைச்செல்விகளுக்கு பாலபாடம். ஒரு குடைவரைக் கோயிலுக்குள் நுழைந்த பிரமையை தந்த கோபுரத்தின் உட்புறச் சுவர்களில் சதுரம், செவ்வகம், வட்டம், முக்கோணம் என சகலவிதமான கணித அளவுகோல்களையும் காணமுடிகிறது. ராஜராஜன் மணிமண்டபம் வெறும் காட்சிப்பொருள்தானே என்று அலட்சியப்படுத்தியவனை ஆச்சர்யப்படுத்தும் விஷயங்களை கொண்டிருக்கிறது மணிமண்டபத்தின் தரைத்தளம். பதினாறு பகுதியாக சிதைக்கப்பட்டிருக்கும் அந்த கல்வெட்டு சொல்லும் செய்தி வரலாற்று ஆய்வாளர்களுக்கு முக்கியமானது. ராஜராஜனின் வீர, தீர பராக்கிரமங்களை சொல்லும் முதல் கல்வெட்டு. பெருவுடையாருக்காக பெரிய கோயிலையே எழுப்பிய ராஜராஜன் இஷ்ட தெய்வமாக பூஜித்த ஸ்ரீகால பைரவர் இங்கேதான் இருக்கிறார். கைகள் சிதைக்கப்பட்டாலும் கம்பீரம் சிதைந்து போகாமல் அம்பு, வில் சகிதம் கம்பீரமாக நிற்கும் கால பைரவர் இன்னொரு ராஜராஜ சோழனுக்காக இங்கே காத்திருக்கிறார். ஊருக்கு ஒதுக்குப்புறமாய் கவனிப்பாரற்று கிடக்கும் அந்த சின்னக் கோயிலில் உறையும் சிவனின் பெயர் தெரியவில்லை. வெளியே சுற்றுப்புறச்சுவர்களில் புதைந்திருக்கும் நூற்றுக்கணக்கான ஆச்சர்யங்கள் அவருக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. தெரிந்திருந்தால் கருவறையை மூடிவிட்டு பிரகாரத்திற்கு பக்கமாய் உட்கார்ந்திருப்பார். உள்ளங்கை சைஸ் கல்லில் நாலு இன்ச்சில் அபாரமான முகபாவத்துடன் கூடிய தேவர்களை செதுக்கி தள்ளியிருக்கும் அந்த சிற்பி இன்று இருந்தால் கின்னஸில் இடம்பெற்றிருப்பார். ருத்ர தாண்டவத்துடன் நடனமாடும் சிவன், காலனை சம்ஹரிக்கும் சிவன், உமையவளுடன் ஊடலில் இருக்கும் சிவன் என புராணக் காட்சிகள் சிற்பங்களாய் காட்சியளிக்கின்றன. மரணப்படுக்கையில் இருக்கும் வாலியை சுற்றி நிற்கும் மனைவியர்களின் சோகமும், தலையில் அடித்துக்கொண்டு அழும் வானரங்களின் கதறலும் இன்னும் கண்ணிலேயே நிற்கின்றன. பார்ப்பதற்கு படு சாதாரணமாக காட்சியளிக்கும் அந்த கோயில் ஒரு பெரிய வரலாற்று செய்தியை சுமந்து நிற்கிறது. தனது சித்தியான சேரன் மாதேவியின் நினைவாக ராஜேந்திர சோழன் எழுப்பிய பள்ளிப்படை அது. பிரகாரம் சுற்றி வரும்போதுதான் அந்த பள்ளத்தை கவனிக்க முடிந்தது. அது பாதாள அறையா, சுரங்க அறையா, அல்லது வெறும் பாதாள சாக்கடையா என்கிற சுவராசியமான விவாதம் அரைமணி நேரத்திற்கு நீண்டு பின்னர் முடிவு தெரியாமலேயே அடங்கியது. மூன்றாம் யாத்திரை முடிவுக்கு வந்தும் மனதில் அவ்வப்போது வந்து போகும் இடம் அது. சேரன் மாதேவி பள்ளிப்படைக்கு அருகே வரும் வழியில் இடிபாடுகளுடன் மூடிக்கிடந்த அந்த கோயில்தான். அதுவும் ஒரு பள்ளிப்படையாக இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். அதிலும் ஏதாவது ஒரு கல்வெட்டோ, சில சிற்பங்களோ சிதைந்து கிடக்கலாம். கலை, இலக்கியம், வரலாற்றுடன் சம்பந்தப்பட்ட ஏதாவது விஷயங்கள் கண்ணில் கிடைக்கலாம். முயன்றுதான் பார்ப்போமே.... ஏதாவது கிடைத்தால் சந்தோஷம். கிடைக்காவிட்டால் வருத்தப்படுவதற்கு என்ன இருக்கிறது?this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |