http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[179 Issues]
[1771 Articles]
Home About US Temples Facebook
Issue No. 20

இதழ் 20
[ பிப்ரவரி 15 - மார்ச் 15, 2006 ]


இந்த இதழில்..
In this Issue..

ஜனாதிபதி விருதுகள் என்னும் கேலிக் கூத்து
ஜனாதிபதி விருதுகள் என்னும் கேலிக்கூத்து
பழுவூர் - 9
கல்வெட்டாய்வு - 14
படிமவியல் - ஒரு பார்வை (ஆய்வுத் தொடர்)
மலைநடுவே மலையரசன்
வலஞ்சுழி வாணர் - வரலாற்று ஆய்வும் ஆய்வு வரலாறும்
ஆயிரம் வருஷத்துப் புன்னகை - I
சங்கச் சிந்தனைகள் - 8
இதழ் எண். 20 > பயணப்பட்டோம்
ஆயிரம் வருஷத்துப் புன்னகை - I
கோகுல் சேஷாத்ரி

புள்ளமங்கை திரு ஆலந்துறையார் திருக்கோயில் பயண அனுபவங்கள்


(முன்பு திசைகள் டாட் காமில் வெளியான இந்த பயணக் கட்டுரை இங்கு சில புதிய தகவல்கள் மற்றும் புகைப்படங்களுடன் வரலாறு டாட் காம் வாசகர்களுக்காக மறுபதிப்பு காண்கிறது. நமது குழு, ஆய்வாளர் டாக்டர் இரா.கலைக்கோவன் மற்றும் டாக்டர் மு.நளினியுடன் மேற்கொண்ட முதல் சரித்திரப் பயணம் இது)


அந்த ஆகஸ்ட் சனிக்கிழமை மாலை டாக்டர் இரா கலைக்கோவன் வீட்டில் ஏறத்தாழ நான்கு மணிக்கு பொன்னியின் செல்வன் மைந்தர்கள் அனைவரும் ஆஜரானோம். ஒரு நல்ல துவக்கமாக தன்னுடைய "Rare karana sculptures from Thirumazhapaadi" என்னும் கட்டுரையை தன்னுடைய கையெழுத்திட்டுக் கொடுத்தார். அப்போது கட்டுரையின் செய்திகள் அவ்வளவாகப் புரியாவிட்டாலும் பத்திரப்படுத்திக்கொண்டோம். (பின்னால் வரலாறு டாட் காமில் ஆங்கிலப் பகுதி துவங்கியபொழுது இக்கட்டுரையே முதல் கட்டுரையாக வெளியானது)

மெதுமெதுவாக சேரர் - சோழர் - பாண்டியர் - பல்லவர் ஆரம்பித்து இந்த ஜென்மத்தில் சரித்திர சம்மந்தமாய் எங்களுக்கு ஏற்பட்ட எல்லா சந்தேகங்களையும் ஒரே நாளில் தீர்த்துக் கொண்டுவிடவேண்டுமென்ற ஆவேசத்துடன் கேள்விக்கணைகளை தொடுத்துக் கொண்டிருந்தோம். ஒருவழியாய் நாங்கள் அயருகிறபோதெல்லாம் நல்ல டீ, காபியைக் கொடுத்து கொஞ்சம் தெம்பூட்டி மீண்டும் களத்துக்கனுப்பிய(?) பெருமை டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாராய்ச்சி மைய ஆய்வாளர்கள் டாக்டர் நளினி மற்றும் டாக்டர் அகிலா இவர்களையே சாரும்.

டாக்டரும் சோர்ந்துபோகிற வழியாய் தெரியவில்லை. விவாதம் ஏறத்தாழ நான்கு மணி நேரங்களுக்குமேல் தொடர்ந்தது.

இடையில் "நாளை எங்கே செல்வதாக உத்தேசம் ?" என்று கேட்டார் டாக்டரவர்கள். அசடுவழிய ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். அது எங்களுக்கே தெரிந்தால்தானே ? முடிவாக "அதையும் நீங்களே சொல்லிவிடுங்கள் - தஞ்சைக்கருகில் பார்க்கக்கூடிய நல்ல இடங்களாகச் சொல்லுங்களேன்!" என்று அவர் தலையில் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டோம்.

அவருக்குக் கொஞ்சம் அதிர்ச்சிதான் ! என்னடா இது இவ்வளவு பெரிய கோஷ்டி சரித்திர ஆர்வம் பிடித்து வேலை மெனக்கெட்டு திருச்சி வரை வந்துவிட்டு மேற்கொண்டு எங்கே போவது என்றுகூட முடிவெடுக்காமல் இருக்கிறார்களேயென்று. கொஞ்சம் யோசித்துவிட்டு "புள்ளமங்கைக்குச் செல்லலாமே ? தஞ்சை - குடந்தைக்கு நடுவில் அமைந்திருக்கும் புள்ளமங்கையும் பூம்புகார் செல்லும் பாதையில் அமைந்துள்ள புன்செய் கோயிலும் பார்க்கவேண்டிய கோயில்கள் - தரிசிக்கவேண்டிய சன்னிதி ! புள்ளமங்கையை பார்த்துவிட்டு இராஜராஜேஸ்வரம் வருவோம் !" என்றார். கூடவே "நானும் எங்கள் மைய ஆய்வாளர்களும் உங்களுடன் வருகிறோம் ! அப்போதுதான் உங்களால் அந்த இடங்களை நன்கு பார்த்து ரசிக்க முடியும் - நிறைய தெரிந்துகொள்ளவும் முடியும்" என்று இன்ப அதிர்ச்சி வேறு கொடுத்தார் !

அவ்வளவுதான் ! பொன்னியின் செல்வன் நண்பர்களின் முகத்தைப் பார்க்க வேண்டுமே...அத்தனைபேருடைய முகத்திலும் ஆயிரம் கோடி சூரியப் பிரகாசம்தான் ! அடியேன் உட்பட அத்தனை பேரும் தேன் குடிக்கப்போகும் நரிகளாய் "ம்...ம்.." என்று அப்போதே சப்புக் கொட்ட ஆரம்பித்துவிட்டோம். "அடிச்சாச்சு லக்கி பிரைஸ் !" என்று பாடாத குறை. இருந்தாலும் பெரியவர்கள் முன்னிலையில் அதிக ஆர்பாட்டம் வேண்டாமென்று சந்தோஷத்தை மனதில் தேக்கிக் கொண்டு கமுக்கமாக உட்கார்ந்திருந்தோம்.

"புள்ளமங்கையின் இராமாயண சிற்பங்களை நீங்கள் மறக்கவே முடியாது... ஒரு curtain raiser போல அந்தக் காவியத்தின் குறிப்பிட்ட காட்சிகளை மட்டும் முன்னிறுத்தி அந்தச் சிற்பிகள் மிகச்சிறிய இடத்திற்குள் Miniatureகளான அதாவது சிறு சிற்ப வடிவங்களாக செதுக்கி வைத்துள்ளார்கள். அற்புதமான இடம்" என்று அந்த இடத்தைப் பற்றி டாக்டர் விளக்க விளக்க நாவில் நீர் ஊறியது.

எங்களின் கற்பனைகளையெல்லாம் மீறி நிற்கப்போகும் புள்ளமங்கையின் பேரழகைப் பற்றி அப்போது சிறிதும் தெரிந்திருக்கவில்லை. மறுநாள் எங்களுக்குக் கிடைக்கப்போகும் இன்பகரமான அனுபவங்களைப் பற்றி அப்போதே தெரிந்திருந்தால் டாக்டர் முன்னிலையிலேயே கூச்சமின்றி ஆனந்தக் கூத்தாடியிருப்போம்.


***********************************************************************************************


மறுநாள் காலை அந்த அற்புதமான பயணம் எங்களுடைய வழக்கமான தாமதத்துடன் ஆரம்பித்தது. ஏழு மணிக்கு டாக்டர் வீட்டில் சந்திப்பதாக ஏற்பாடு. ஆனால் நமக்கோ ஏழேகால் ஏழரைக்குத்தான் வழக்கமான திருப்பள்ளியெழுச்சி நடக்கும். காலைத் தூக்கத்தை நண்பர் கமல் தொந்தரவு தாங்காமல் தியாகம் செய்து ஏதோ அடித்துப் பிடித்துக்கொண்டு கிளம்பினாலும் டாக்டர் வீட்டை அடையும்போது மணி ஏழரையாகிவிட்டது. டாக்டர் வீட்டு வாசலில் ஆய்வாளர் நளினியுடன் தயாராக இருந்தார். ஏழு மணிக்கே அவர் தயாராகிவிட்டதாகச் சொன்னதைக் கேட்டு வெட்கம் தாங்காமல் வேனின் பின்னால் சாமான்கள் வைக்குமிடத்தில் முகத்தை சிறிதுநேரம் புதைத்துக் கொண்டோம்.

முதலில் திருச்சி மலைக்கோட்டைக்குக் கீழே அமைந்துள்ள குடைவரைக் கோயிலை தரிசித்தோம். அந்த அனுபவங்களை வேறொரு கட்டுரையில் காணலாம்.

வேன் அந்நாளைய - இந்நாளைய திருச்சி தஞ்சை இராஜபாட்டையில் திருஎறும்பியூர், துழாய்க்குடி(இந்நாளில் துவாக்குடி), வல்லம் எல்லாம் தாண்டி தஞ்சைப் பாதையில் திரும்பியது. எங்கள் தொந்தரவை - அதாவது கேள்விகளை - முதல்நாள் விட்ட இடத்திலிருந்து ஆரம்பித்தோம். பாவம் ! அவருக்குப் பொறுமை அதிகம்தான். விடாமல் எங்கள் கேள்விகளுக்கு விளக்கமான தெளிவான பதில்களை அளித்துவந்தார். சரித்திரத் தகவல்களோடு அவருடைய இளமைக்கால மருத்துவக்கல்லூரி வாழ்க்கையையும் பகிர்ந்துகொண்டோம். ஏறக்குறைய இரண்டு மணிநேரம் போனதே தெரியவில்லை.

வேன் தஞ்சையைத் தாண்டிக் கொண்டு குடந்தை சாலையை நோக்கித் திரும்பியது. வேன் கண்ணாடி வழியே இராஜராஜேஸ்வரத்தை ஒருமுறை ஏக்கத்தோடு பார்த்தோம். "அதான் மதியம் இங்க வரப்போறோம் இல்ல ?" என்று கமல் ஆதரவு கூறினார். மனதை தேற்றிக் கொண்டு கவலையை மறக்க உருளைக்கிழங்கு சிப்ஸை வாயில் போட்டு நற நறவென்று சிறிதுநேரம் கடித்துவைத்தோம்.

வறண்ட நிலம்போய் நல்ல பசுமை தெரிய ஆரம்பித்தது. அடடா ! ஒருவழியாய் சோழதேசத்திற்கு வந்தே விட்டோமா ? காவேரி தகறாறு நாட்களிலேயே இந்தப் பசுமையென்றால் ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் எப்படி இருந்திருக்குமோ ? என்று வியக்காமல் இருக்க முடியவில்லை. வரப்பில் கால்வைக்க முடியாமல் இரண்டு பக்க நாற்றுக்களும் நெல்முதிர்ந்து தலைசாய்ந்திருந்திருக்கும். இந்த இன்பகரமான காட்சிகளில் மனதைப் பறிகொடுத்து கேள்விகளை சற்று நிறுத்திக் கொண்டதில் டாக்டர் தொண்டைப் புண்ணிலிருந்து தப்பித்தார்.

ஒரு சிறிய திருப்பத்தில் - "இதோ புள்ளமங்கை !" என்று அறிவித்தார் டாக்டர். ஒரு சிறிய நாகரீக பெயிண்ட் அடிக்கப்பட்ட கோயில் கோபுரம் எங்களுக்குமுன் விரிந்தது.

கோபுரவாயில்


"அட - இம்பூட்டுதானா ? இதைப் பாக்கவா அம்பூட்டு தூரம் கூட்டியாந்தாக ?" என்றொரு கேள்வி மனதில் எழும்பியது. அதனைப் புரிந்துகொண்டவர்போல் " கோயில் சமீபத்தில் திருமுழுக்கு கண்டிருக்கிறது ! பழங்காலக் கோயில் பின்னால் இருக்கிறது" என்றார் டாக்டர்.நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சமாதானமானோம்.

கோயில் பூட்டியிருந்தது.

எங்களுக்கு முன்பே குடந்தையிலிருந்து அங்கு வந்துசேர்ந்திருந்த பொன்னியின் செல்வன் நண்பர் திரு. சீதாராமன் கோயில் குருக்களை கூட்டிவர ஏற்பாடு செய்திருந்தார். அவருக்கு கல்கி பாணியில் ஒரு "பேஷ்!" போட்டு வைத்தோம்.

டிரைவர் வேனை கோயிலுக்கருகில் நிறுத்தினார். வெய்யில் தாங்காமல் எல்லோரும் அருகிலிருந்த குடிசையில் ஒதுங்கினார்கள்.

நம்மால்தான் ஒருநிமிடம் சும்மாயிருக்க முடியாதே ? முடிந்தவரை கோயில் கோபுரத்தை ஆராய்ந்தோம்.

அடடா ! இதென்ன காட்சி ?

அந்த நாகரீக கோபுரத்தின் அருகில் ஒரு பழங்கால கருங்கல் நந்தி ! எதோ அனாமதேயமாய்க் கிடந்ததை எடுத்து பெயிண்ட் அடித்த கோபுரத்தருகில் வைத்துவிட்டார்கள். அந்த நந்தியின் முகத்தில் அப்படியொரு சோகம் அப்பிக்கிடந்தது. "சேர்ப்பாரிடம் தெரியாமல் - பராந்தக சோழர் காலத்து ஆசாமியான என்னை இந்த நவநாகரீக கோபுரத்துக்கருகில் சேர்த்துவைத்துவிட்டார்களே!" என்று புலம்புவதுபோல் தெரிந்தது.

சோகமே உருவாய் சோழர்கால நந்தி


போட்டோவில் அதை பத்திரப்படுத்திக் கொண்டோம்.

வாண்டுகளின் தொல்லை தாங்கமுடியாமல் லஞ்சமாய் ஓரிரு கிளிக்குகள் அவர்களுக்கு தத்தம் செய்து அவர்களிடம் அதனை உடனடியாக போட்டுக் காண்பிக்க அவர்கள் முகத்தில் ஆயிரம் வாட் சிரிப்பு ! ஏழ்மையையெல்லாம் மீறி சட்டென்று மனதைத் தொடும் குழந்தைத்தனம் !

குழந்தைகள் கண்களில் என்னதான் மாயமோ ?


மறுபடி வழியைப் பார்த்தோம். இன்னும் குருக்களை காணவில்லை.

வேனை நோக்கியபோது ஒரு யோசனை தோன்றியது. பொன்னியின் செல்வன் குழுவின் முதல் வந்தியத்தேவன் யாத்திரையை மனதில் வைத்துக்கொண்டு (இந்த முதல் யாத்திரை வேன் கதை ஒரு தனிக் கதை - எடுத்து வெளியில் விட்டேனானால் நண்பர்கள் தர்ம அடி கொடுத்தே படுக்கப்போட்டு விடுவார்களாதலால் கப்சிப் !) விடுவிடுவென்று வேனின்மேல் ஏறி கோயிலின் பிற்பகுதியை பார்வையிட முனைந்தோம்.

சந்தன நிறத்தில் அற்புதமான அழகோடு ஒரு கருவரை விமானம் தெரிந்தது. அடடா ! நல்ல இடத்திற்குத்தான் வந்து சேர்ந்திருக்கிறோம் ! என்று மனது விம்மியது. சும்மாயிருக்கமுடியாத மற்றொரு பொ.செ. நண்பரும் வேனின் மீதேறினார். ஓரிரு நிமிடங்களுக்குமேல் வேன்மீது சூரிய பகவானின் திருவருளைத் தாங்க முடியாமல் மடமடவென்று கீழிறங்கவும் குருக்கள் வருவதற்கும் சரியாக இருந்தது.

வேனின் உச்சியிலிருந்து விரிந்த காட்சி


அனைவரும் கோயிலுக்குள் நுழைந்தோம். கோயிலுக்குள் மட்டுமா நுழைந்தோம் ? ஏறக்குறைய ஆயிரத்தி இருநூற்றி வருடங்களுக்கு முன்பிருந்த காலகட்டத்துக்குள்ளும் நொடிப் பொழுதில் நுழைந்துவிட்டோம்.

கோயிலின் முன்பாதி கும்பாபிஷேகத்தின்போது எழுந்த புதிய கட்டுமானம். பிற்பாதி - முக்கியமாய் கருவரை, அதன் மீது எழுந்துள்ள விமானம் சுற்றுச்சுவர், தேவகோஷ்டங்கள் - எல்லாம் முற்காலச் சோழர் காலத்தவை. நல்ல வெய்யிலில் அந்த சந்தன நிற கருங்கற்களை பார்க்க வேண்டுமே ! அப்பப்பா ! கடும் வெய்யிலையும் மீறி இரசிக்கலாம் !

வழக்கமாக பழங்காலக் கோயில்களில் கும்பாபிஷேகம் நடக்கும் காலங்களில் "சீ, பழசெல்லாம் எதற்கு ?" என்பதுபோல் திருப்பணிக்குழுவினர் ஆங்காங்கே கிடக்கும் கல்வெட்டுக்கள் மற்றும் சிற்பங்களை தூர எறிந்தோ அல்லது குறைந்தபட்சம் அந்தக் கோயில் கல்வெட்டுக்களை எவரும் படிக்கமுடியாதபடி பெயிண்ட் அடித்தோ நாசம் செய்துவிடுவது வழக்கம். எங்கே பின்னால் வரும் சந்ததியர்க்கு இவையெல்லாம் சென்று சேர்ந்துவிடுமோ என்ற பயம்தான் இதற்குக் காரணம். புள்ளமங்கையும் இந்த ஆபத்தில் எக்கச்சக்கமாக சிக்கிக்கொண்டது. அப்புறம் எவர் புண்ணியமோ - தமிழ்நாட்டு ஆய்வாளர்களெல்லாம் (டாக்டர் கலைக்கோவன் மற்றும் டாக்டர் குடவாயில் உட்பட) மல்லுக்கட்டி நின்று - எப்படியோ கோயிலைக் காப்பாற்றிவிட்டார்கள்.

முதலில் கருவரை விமானத்தைச் சுற்றியுள்ள சிற்பங்களை ஆராய ஆரம்பித்தோம்.

கருவரை ஏறக்குறைய மூன்றடி ஆழத்திற்கு பூமியில் புதைந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகாலத்தில் ஏற்பட்ட நிலமாற்றம். இதேபோலத்தான் ஸ்ரீநிவாஸநல்லூர்க் கோயிலும் புதைந்து கிடக்கிறது.

பள்ளதில் அமிழ்ந்த காவியம். சுவரில் தெரியும் சிற்பங்களையெல்லாம் விட்டுவிட்டு கீழே ஓடிக்கொண்டிருக்கும் கரப்பான் பூச்சியொன்றை மும்முரமாக கவனித்துக்கொண்டிருப்பவர் நண்பர் கிருபாசங்கர்


அல்லது கோயிலின் பாரம் தாங்காமல் அஸ்திவாரம் பூமிக்கடியில் சற்று அமிழ்ந்துவிட்டது என்றும் கொள்ளலாம்..

முதலில் கிழக்குப் பகுதிச்சுவரை ஆராய்ந்தோம்.

கிழக்குப் பகுதியின் தேவகோஷ்டத்தில் பொதுவாய் தட்சிணாமூர்த்தி அருள் பாலிப்பார். இங்கும் தட்சிணாமூர்த்தி உண்டு. ஆனால் அவருக்கும் முன்னதாக ஒரு அற்புதமான கணபதி தரிசனம் தருகிறார்.

கணங்கள் புடைசூழ கணபதி


சுற்றிலும் பூதகணங்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு உணர்ச்சியை தங்கள் அபிநயத்தின் வாயிலாகக் காண்பிக்கிறார்கள் என்று விளக்கினார் டாக்டர்.

மேலே குடைவிரிய, அதற்கும்மேல் கிம்புரு கின்னரர் வாழ்த்த அமைதியான மோனத்தில் அமைந்த எளிமையான கணபதி. கணபதியின் வாகனமான மூஞ்சூறு அமைந்துள்ள இடத்தையும் பாங்கையும் கவனியுங்கள். சிற்பியின் வேலைப்பாடு தெரியும்.

மேலே ஒரு கணம் கணபதி வாகனத்தை "ஓட்டி" வருகிறது. நடுக் கணத்தின் கரங்களில் கணபதிக்குப் பிடித்த மோதகங்கள்


இந்தக் கணபதி தொகுதியின் அழகிலேயே இலயித்துப்போய் பல்வேறு கோணங்களில் புகைப்படமெடுத்துத் தள்ளிக்கொண்டிருந்தோம்.

வித்தியாசமான கோணத்தில் கணபதி


இடையே "கணபதி தொகுதிக்கு மேல் அமைந்துள்ள மகரதோரணங்களையும் சற்று கவனியுங்கள் !" என்றார். அண்ணாந்து நோக்கினோம். நோக்கியது நோக்கியபடி நின்றோம். தோரணத்திற்கு நடுவில் இராமாயணக்காட்சி. சபரி இராம லட்சுமணர்களை உபசரித்து வணங்கி நிற்கிறாள். அவர்களைச் சுற்றி சிறு கணங்கள், மகர யாளியின் வாயிலிருந்து புறப்படும் சிங்கமுக யாளிகள், அந்த யாளிகளின் மேலிருக்கும் வீரர்கள் என்று ஏகப்பட்ட விபரங்கள்.

இராமபிரானை சோழர்காலக் கல்வெட்டுக்கள் "அயோத்தியாழ்வார்" என்று அன்புடன் அழைப்பதை நினைவுகூர்ந்தோம்.

மகர தோரணத்தில் இராமாயணக் காட்சி


கணபதிக்கு மேல் வலபியில் வரிசையாக சிறு பூதகணங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதனை ஏறக்குறைய எல்லா கோயில்களிலும் கவனிக்கலாம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு பாவங்களில் ஈடுபட்டிருக்கும். கணங்களுக்கு நடுவில் - அட ! இதென்ன ? கணபதி தெரிகிறாறே ? கணங்களுக்கு மத்தியில் அவரைக் காண்பிப்பது மரபு இல்லையே என்பதுபோல் கேள்விக்குறியோடு டாக்டரை நோக்கினேன்.

அற்புதமான விளக்கம் கிடைத்தது அவரிடமிருந்து. "கணங்களின் அதிபதியல்லவா கணபதி ? அதனால்தான் கணங்களுக்கு நடுவில் அவரை அமர்த்தியிருக்கிறான் சிற்பி !" என்கிறார்.

கண நாதன் - தொண்டர்களுடன் "தலைவர்"


அடடா ! என்ன கற்பனை !

மரபு, மரபை மீறிய படைப்பு என்றெல்லாம் இன்றைக்குப் பேசுகிறோம். ஆனால் எந்த சப்தமும் செய்யாமல் அழகாக, மரபை ஒட்டி ஆனால் மரபை மீறி - எப்படியொரு படைப்புப்பாருங்கள் ! கணங்களை வரிசையாகப் படைக்க அவனுக்கு பணிக்கப்பட்டது. ஆனால் அதனை அவன் மீற நினைத்தான். கணங்களுடன் அவற்றின் நாயகன் அமர்ந்திருக்க வாய்ப்புள்ளதல்லவா ? மேடையில் மட்டுமே தோன்றும் தலைவன் அவ்வப்போது தொண்டர்களை உற்காசப்படுத்த அவர்களுடன் சரிக்கு சமமாய் கலந்துகொள்வதில்லையா ? அதைப் போலத்தான் !

இந்த அளவிற்கு யோசிக்க சிற்பிக்கு எத்தனை ஞானம் வேண்டும் ? எத்தனை படிப்பு வேண்டும் ? ஆகமங்களையும் வேதநுட்பங்களையும் எந்த அளவிற்கு ஆழ்ந்து கற்றிருக்கவேண்டும் என்றெல்லாம் யோசனை போகிறது.

இந்த கணங்களுக்கு மத்தியில் கணநாதனாகத் தோன்றும் படைப்பு அரிதின் அரிதென்பது என் எண்ணம்.

"சற்றே அண்ணாந்து விமான தளத்தின் மேலே அமைந்துள்ள பெரிய பூதகணங்களைக் கவனியுங்கள்" என்றார் டாக்டர்.

தலையை உயரத் திருப்பினால் - அடடா ! நாம் பார்ப்பதென்ன ?

கோயில் மதிலில் ஏறக்குறைய இரண்டடி இடைவெளியில் வரிசையாய் பெரிய பெரிய தனி பூதகணங்கள். ஒவ்வொன்றின் உணர்ச்சிகளையும் பாவங்களையும் கவனிக்க வேண்டுமே ! ஒன்று மத்தளம் வாசிக்கிறது... ஒன்று இலைத்தாளம்.. ஒன்று உடுக்கை.... ஒன்று குழல்... ஒன்று இந்த கச்சேரியை பேஷ் போட்டு இரசிக்கிறது...இன்னொன்று சங்கீதத்தை கவனிக்காமல் தன் வயிற்றைத் திறந்து நமக்கு வேடிக்கை காட்டுகிறது...அற்புதம் ! அற்புதம் !வாத்தியங்களுடன் பூதகணங்கள்
வலக்கரத்தில் குணிலுடன் உறுமி வாசிக்கும் ஒரு கணம்


வழக்கமாக பெரும்பாலான கோயில்களில் பூதகணங்கள் வலபியில் மட்டும் பூதவரியாக அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் புள்ளமங்கையில் மட்டும்தான் வலபி பூதவரி தவிர விமானம் துவங்கும் மேல் தளத்திலும் தனிச்சிற்பங்களாக பூத கணங்கள் இடம்பெற்றுள்ளன. ஒருவேளை வேறு பலகோயில்களிலும் இதுபோன்ற அமைப்பிருந்து பிற்காலத்தில் இந்த பூதசிற்பங்கள் அழிந்தொழிந்தனவோ என்னவோ - யாரரிவார் ?

வலபி பூதவரியும் விமானதளத்து கணங்களும்


சிற்பக்கலை என்பது கணநேர உணர்ச்சிளை நிரந்தரப்படுத்திவிடுவது என்று கொண்டோமானால் அந்த பராந்தகன் காலச் சிற்பிக்கு ஒரு பொற்கிழி கொடுத்து நமஸ்கரித்துவிடலாம். அத்தனை பாவங்கள். கணபதி சிற்பத் தொகுதியைத்தாண்டி அமைந்துள்ள தட்சிணாமூர்த்தி தொகுதி பெரிதும் பாதிப்புக்குள்ளாகி பிற்கால தட்சிணாமூர்த்தி இந் தேவகோஷ்டத்தில் இடம்பெற்றுள்ளார்.

பீடமின்றி வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் சப்தமாதர் தொகுதி


தட்சிணாமூர்த்தியையொட்டி கோயிலின் தென்மேற்கு மூலையில் ஒரு ஓரமாக வரிசையாக அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் சப்தமாதர் சிற்பங்கள் ஒரு காலத்தில் இக்கோயிலில் சிவாலயங்களில் எட்டு பரிவார தேவதைகளும் இடம்பெற்றிருந்தனவோ என்று எண்ணத்தூண்டுகிறது. இவ்வாறு பல கோயில்களிலும் இடம்பெற்றிருந்த பரிவாராலயங்கள் பின்னாளில் அதிக பாதிப்புக்குள்ளாகிவிட்டன. தஞ்சை இராஜராஜேஸ்வரம்கூட இதிலிருந்து தப்ப முடியவில்லை ! இந்நாளில் அத்தனை பரிவார ஆலயங்களையும் சோழர்கால மூர்த்தங்களுடன் ஒரிஜினலாக தரிசிக்க வேண்டுமென்றால் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள திருக்கட்டளை சுந்தரேஸ்வரர் கோயிலுக்குத்தான் படையெடுக்க வெண்டும்.

(...பயணம் தொடரும்)

this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.