http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 20
இதழ் 20 [ பிப்ரவரி 15 - மார்ச் 15, 2006 ] இந்த இதழில்.. In this Issue.. |
தொடர்:
கல்வெட்டாய்வு
பல கல்வெட்டுகளில் ஊரோம், ஊர் சபையோம், மஹாசபையோர் என்றெல்லாம் வருமல்லவா. ஊர் சபை என்பது ஊரை நிர்வகிக்கும் ஒரு அமைப்பு. இப்பொழுதும் ஒவ்வொரு ஊர்களுக்கும் பஞ்சாயத்துகளும், தாலுகா அலுவலகங்களும் இருக்கின்றனவல்லவா. அப்படி பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, ஏன் பராந்தக சோழர் காலத்திற்கு முன்பிருந்தே இப்படி ஒவ்வொரு ஊரினையும் நிர்வகிக்கும் அமைப்பு இருந்திருக்கிறது என்பதனை நாம் கல்வெட்டுகளின் வாயிலாக அறிகிறோம்.
இப்பொழுது அரசு என்ற ஒரு நிர்வாக அமைப்பின் கீழ் பல துறை இலாக்காக்களும், அந்தந்த துறையினை நிர்வகிக்கும் அமைப்புகளும் இருக்கின்றன. மின்சார வாரியம், கழிவுநீர் அகற்று வாரியம், நிதி அமைச்சகம் என்று பல்வேறு துறையை நிர்வகிக்க அமைப்புகள் இருக்கின்றன. இப்படி பல அமைப்புகள் பண்டைய தமிழ்நாட்டில் இருந்தனவா? இக்கேள்விக்கு கல்வெட்டுகள் ஆம் இருந்தன என்று பதிலளிக்கின்றன. பின்வரும் கல்வெட்டுப் பாடத்தையும், செய்தியையும் பாருங்கள். இக்கல்வெட்டு காவிரிப்பாக்கம் என்ற ஊரில், அவ்வூர்சபையின் கீழ் பல்வேறு செயற்குழுக்கள் இருந்ததைப் பற்றியும், அவற்றை மக்கள் எவ்வாறு அணுகி தங்கள் அல்லது ஊர் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டனர் என்பதைப் பற்றியும் மிகவும் தெளிவாக எடுத்துரைக்கிறது. இக்கல்வெட்டு சுந்தரசோழரின் மகன் ஆதித்தகரிகாலரின் நண்பராக பொன்னியின்செல்வனில் வரும் பார்த்திபேந்திரவர்மரின் காலத்தியது. 1) ஸ்வஸ்திஸ்ரீ கொபார்த்திபெந்திராதிபந்மர்க்கு யாண்டு முன்றாவது நாள் முப்பத்தொன்பதாவது படுவூர் கொட்டத்து காவிரிபாக்கமாகிய அமநிநாராயண சதுர்வெதிமங்கலத்துள் இவ்வாட்டை ஸம்வத்ஸரவாரிய 2) பெருமக்களும் தொட்டவாரியபெருமக்களும் எரிவாரியபெருமக்களும் கழநிவாரியபெருமக்களும் ஸ்ரீவடவிரநாராயணபெருமக்களும் பஞ்சவாரவாரியபெருமக்களும் கணக்குவாரியபெருமக்களும் கலிங்குவாரியபெரும 3) க்களும் தடிவழிவாரியபெருமக்களும் பட்டர்களும் விஸிஷ்டர்களும் உள்ளிட்ட மஹாஸபையும் ஊராள்கிந்ற பல்லவன் ப்ரம்ஹாதரயனும் கண்காணி அரும்பாகிழானும் இவூர் பெரியதளி அபிஷெகமண்டபத்தெ 4) கூடி இருக்க இத்தான(ம்)முடைய சிவப்ராமஹணன் மாகண்டநன் பெருமாள் திருக்கரபுரத்து பெருமான் அடிக்கு அர்ச்சனாபொகமான தொட்டமும் புலமும் ஆறு உடைந்து மணல் இட்டு கிடந்திதென்று விண்ணப்பம் செய 5) ஸபையாரும் இவ்வாட்டை கழநிவாரியபெருமக்கள்ளெ இத்திருக்கரபுரத்து பெருமான்னடிகள் அச்சிநாபொகமான பூமி மணல் இட்டு கெட்டு கிடந்த பூமியொடு இந்நிலம் கழநிகொல்லால் ஆயிரத்துநானூறு குழி 6) ஊர்மஞ்சிக்கமாந பூமி நொக்கி கல்நட்டு சிலாலெகைய் செய்துகொள்க என்று ஸபை திருமுகமருளிச்செய்த திருமுகத்தின்படி கழநிவாரியபெருமக்களொம் திருகரபுரத்து பெருமான் அடிகளுக்கு அச்சிநா 7) பொகம்* செய்வதாந பூமி இவ்வூர் பிடாகை ஒச்செரி வடகழனி மஹாதவாய்க்கால் தெற்கு ஊர்மஞ்சிக்கம் ஆய் வரிசிலத்து கிடந்த பூமிக்கு கிழ்பாற்கெல்லை மாங்காட்டுச்சொமாசிபூமிக்கு 8) மெர்கும் தென்பார்க்கெல்லை ஊர் மஞ்சிக்கமாய் கிடந்த மெட்டுக்கு வடக்கும் மெல்பார்க்கெல்லை திருபன்றிஸ்வரத்து திருமுலட்டானத்து பெருமான்னடிகள் உதமாதம்பட்டிக்கு கிழக்கும் வடபாற்கெல்லை மா 9) தவாய்க்கால்லுக்கு தெற்கும் இந்நால்பால்கெல்லையும் உள்ளகப்பட்ட நிலம் கழனிகொலால் நானூறு குழியும் இதன் தெற்கில் ஊர்மஞ்சிகமான மெட்டுசிறுகருகெசுவகழநி திருநாரணவாய்க்கால் வ 10) டசிறகு ஊர்மஞ்சிக்கமாய் வரிசிலத்து கிடந்த பூமி கிழ்பாலற்கெல்லை அங்காரை மாதெவபட்டர் பூமிமெலருகெ பொன நடைகாலுக்கு மெற்கு தென்பால்கெல்லை திருநாரணவாய்க்காலின் வடக்கும் மெல்பால்கெல்லை ஐயன்பெருமாந் பூமிக்கு கிழக்கு வடபார்கெல்லை முடும்பைப்பொற்கூளி பூமிக்கு வடக்கும் நால்பால்லெயுள்ளகப்பட்ட நிலம் க 11) ழனிகொலால் நாநூறு குழியும் இக்கால் தென்சிறகு ஊர் மஞ்சிகமாய் வரிசிலத்து கிடந்த பூமிக்கு கிழ்பார்கெல்லை வரிசிரையாய் கிடந்த பூமிக்கு மெர்கும் தெந்பார்கெல்லை அவட்டை கிழவந் நிலமாந சொமாசிபூமிக்கு இதன் கிழக்கில் குண்டிலுக்கும் வடக்கும் மெல்பார்கெல்லை எடுக்குப்பட்டிகளும் இகுடிகாளயசொமாசிபூமிக்கு கிழக்கும் காலுக்கு தெற்கும் நால்பால் எல்லை 12) யும் ஆக மாநிலம் கழநிகொலால் அறுநூறு குழியும் ஆக ஆயிரத்து நாநூறு குழியும் இத்திருகரபுரத்து பெருமான் அடிகளுக்கு நிசதம் இருநாழி அரிசியால் ஒரு பொழுது திருஅமுதுக்கும் முந்று ஸந்தியும் ஒருவிளக்கு கொளித்திகொண்டு திருஆராதினை செய்வதாகுமாக சந்திராதித்தகாலமும் இறைஇலி அச்சநாபொகமாக வைச்சு சிலாலெகை செய்து கல் நட்டு குடுத்தொம் சபையார் . . . . . . கு . . . பல்வேறு உறுப்பினர்க மற்றும் பெருமக்களின் எழுத்து (கையெழுத்து) வரும் இக்கல்வெட்டின் கடைசி 5 வரிகள் இக்கட்டுரையில் கொடுக்கப்படவில்லை. காலம்: பார்த்திபேந்திரவர்மரின் மூன்றாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு. இடம்: படுவூர் கோட்டத்து, கல்வெட்டில் காவிரிப்பாக்கம் என்று வழங்கப்படும் அமநி நாராயணசதுர்வேதிமங்கலத்தில், இன்றைய திருப்பாற்கடல் என்று வழங்கப்படும் ஊரில் உள்ள கரபுரீசுவரர் கோயிலில் வடக்குச் சுவரில் உள்ள கல்வெட்டு. கல்வெட்டு செய்தி: முதல் மூன்று வரிகள், அவ்வூர் சபையுள் அடங்கியிருக்கும் பல குழுக்களைக் குறிக்கிறது. அந்த வருடத்து ஸம்வத்ஸர வாரியம் (வருடந்தோறும் கண்காணிப்பு செய்யும் வாரியம், அந்த வருடத்து ஸம்வத்ஸர வாரியம் என்று வருவதிலிருந்து, வருடந்தோறும் இந்த வாரியக் குழுவினர் மாற்றப்படுவர் என்ற செய்தி தெரிகிறது.) தோட்ட வாரியம், ஏரி வாரியம், கழனி வாரியம், ஸ்ரீவட வீரநாராயண பெருமக்கள் (வடவீரநாராயண என்ற இடத்தினைச் சேர்ந்த சபைக்குழுவுனர், இவ்விடம் காவிரிப்பாக்கத்தைச்சேர்ந்ததா அல்லது அதனை ஒட்டிய ஒரு புறநகர்ப் பகுதியா என்பது தெரியவில்லை), பஞ்சவார வாரியம் (பஞ்சவாரம் என்பது நிலத்தை குத்தகை விட்டதிலிருந்து வரும் வருமானத்திலிருந்து அரசுக்கு சேரவேண்டிய பகுதியை பணமாக அல்லாது பொருளால் கொடுக்கக்கூடிய ஒருவித வரி, ஒரு அகராதியில் அது ஐந்தில் ஒரு பங்கு வருமானத்தை அரசுக்கு பொருளாகக் கொடுக்கவேண்டிய ஒரு வரி என்று கொடுக்கப்பட்டிருக்கிறது. பஞ்சவார வாரியம் என்பது அவ்வரியை திரட்டி அரசு கஜானாவில் சேர்க்க ஏற்படுத்தப்பட்ட ஒரு குழு) , கணக்கு வாரியம் (கணக்குவழக்குகளை கண்காணிக்கும் அமைப்பு), கலிங்கு வாரியம் (மதகு அமைப்பது, நீர்பாய கால்வாய் வெட்டுவது போன்றவற்றை கடமையாகக் கொண்டது), தடிவழி வாரியம் (நிலங்களை பார்வையிடும் குழு) இத்தனைக் குழு பெருமக்களையும் மற்றும் அவ்வூர் பட்டர்களையும், விஸிஷ்டர்களையும் கொண்டது தான் காவிரிப்பாக்கம் ஊர் சபை. இவ்வூர் சபையும், அந்த ஊரை ஆள்கின்ற பல்லவன் ப்ரம்ஹாதரயனும், கண்காணி செய்யும் அரும்பாகிழானும் அவ்வூர் கோயில் அபிஷேக மண்டபத்தில் கூடியிருந்தபொழுது, அக்கோயில் சிவப்பிராமணன் மாகந்தணன் என்பவன் "ஆறு உடைப்பெடுத்ததால் கோயிலைச் சேர்ந்த (பெருமானடிகளுக்கு அர்ச்சனாபோகமாக, அதாவது நிலத்திலிருந்து வரும் வருமானத்தை கடவுளின் அர்ச்சனைக்கு பயன்படுத்துவது) தோட்டமும், நிலங்களும் நீரில் முழுகி பாழானதால் ஒன்றும் செய்யப்படாமல் வீணாகக் கிடக்கின்றன" என்று விண்ணப்பம் செய்கிறான். உடன் அங்கு கூடியிருந்த சபையினர் வீணான நிலத்திற்கு பதிலாக அவ்வூர் மஞ்சிக நிலத்திலிருந்து (அதாவது நல்ல விவசாய நிலத்திலிருந்து) ஆயிரத்து நானூறு குழி நிலத்தைக் கழனிக்கோலால் அளந்து அர்ச்சனாபோகமாக அவ்வூர் பெருமானடிகளுக்கு வழங்குமாறும் மேலும் நில எல்லைகளை குறிக்க கல்வைக்கவும், அவ்வாறு கொடுத்த கொடையைப் பற்றி கல்லில் வெட்டிக்கொள்ளவும், அவ்வருடம் பொறுப்பு கொண்ட கழனிவாரியப் பெருமக்களுக்கு ஆணையிட்டனர். அவ்வாணையை மேற்கொண்டு, கழனிவாரியப் பெருமக்கள் ஆயிரத்து நானூறு குழி நிலத்தினை எல்லைகள் குறித்து கொடையாக வழங்கி கல்லிலேயும் வெட்டுவித்தனர். இதில் நானூறு குழி மஹதவாய்க்காலுக்கு தெற்கே ஒச்சேரி என்னுமிடத்திலும், நானூறு குழி திருநாரண வாய்க்காலுக்கு வடக்குப்பக்கமிருக்கும் நிலத்திலிருந்தும், அறுநூறு குழி நிலம் திருநாரணவாய்க்காலுக்கு தெற்குப்பக்கமுள்ள நிலங்களிலிருந்தும் எல்லைகள் குறிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலங்களை வரிநீக்கிய நிலமாக, இறையிலியாக வழங்கியிருக்கின்றனர். இதனைக் கொண்டு, வரிநீக்கும் உரிமையும் கழனிவாரியத்திற்கு இருந்ததை அறிகிறோம். திருக்கரபுர பெருமாளுக்கு தினமும் ஒருவேளை இருநாழி அரிசி கொண்டு திருவமுதும், மூன்று வேளை பூஜையும், மற்றும் விளக்கேற்றவும் இந்நிலங்கள் கொடையாக வழங்கப்பட்டதாக கல்வெட்டு தெரிவிக்கிறது. இக்கொடைக்கு சாட்சியாக, கணக்கர், மத்யஸ்தர் என்று பலரும் கையெழுத்திட்டிருக்கின்றனர். மத்யஸ்தர்கள் என்பவர்கள் தரகர்கள் போல இருநபர்களுக்கு நடுவில் மத்யஸ்தம் செய்யும் அதாவது இருவரையும் ஒரே நிலையில் ஒன்றுபட வைக்கும் நபர்கள். இதிலிருந்து பண்டைய தமிழ்நாட்டிலும் தரகர்கள் இருந்தது தெரிகிறது. இவ்வாறு இந்த ஒரு கல்வெட்டே அந்நாளைய சமூக அமைப்பை நமக்கு நன்கு படம்பிடித்துக் காட்டுகின்றது. இவ்வாறு பல கல்வெட்டுகள் நமக்கு பல விஷயங்களைத் தெளிவுற விளக்குகின்றன. அக்கல்வெட்டுகளை அடுத்துவரும் இதழ்களில் காண்போம். this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |