http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 20
இதழ் 20 [ பிப்ரவரி 15 - மார்ச் 15, 2006 ] இந்த இதழில்.. In this Issue.. |
தொடர்:
சங்கச் சிந்தனைகள்
நதி கடலை நோக்கி இரு கரங்களையும் நீட்டிபடி துள்ளித்துள்ளி ஒரு சிலிர்ப்போடு நகர்ந்து வந்தது. "இந்தா ! என்னை முழுவதுமாக எடுத்துக்கொள் ! உன்னில் நான் அடங்கி அவிகிறேன். உன்னுள் நான் சங்கமிக்க விழைகிறேன். நீயில்லாமல் என் வாழ்வு முழுமையடையாது. ஏனெனில் நீதான் என் மறுபாதி. உன்னிலிருந்து - உனக்காகவே - நான் பிறந்தேன். உனக்காகவே நான் பூப்படைந்தேன். நீதான் என் நிரந்தர இருப்பு. உன்னைத் தேடித்தான் நான் என் நதிமூலத்திலிருந்து கிளம்பினேன். உன்னில் கலக்கத்தான் நான் கல்லையும் மண்ணையும் பொருட்படுத்தாமல் ஓடி வந்தேன். உனக்காக மரங்களிலிருந்து பழங்களை, செடிகொடிகளிலிருந்து பூக்களை, காற்றில் மிதந்த கீதங்களை, சிறுவர் விட்டு அமிழ்ந்த சிறு காகிதக் கப்பல்களை, வானம் சிந்திய மழைநீரை - இன்னும் வழியில் அகப்பட்ட இரத்தின, முத்து மாணிக்கக் கற்களை - உனக்காக நான் ஏந்தி வந்தேன். என்னை மறுக்காமல் ஏற்றுக்கொள். விரைவில் - விரைவில் - என்னை அணைத்துக்கொள் !" நதியின் நகர்தலில் ஒரு ஏக்கம் தெரிந்தது. "இன்னும் எத்தனை காலமாகும் உன்னை அடைய ?" எனும்படியான தோற்றம் விரிந்தது. கடலும் அந்த நதிக்காக வெகுகாலமாகக் காத்திருந்தது. ஒரு தவசியைப்போல வரங்கொடுக்கும் கடவுளுக்காக அது காத்து நின்றது. நாள் செல்லச்செல்ல தாபம் தாங்கமாட்டாது தன்னுடைய இயலாமையை - தான் நகர்ந்து நதியை ஆட்கொள்ளமுடியாமல் இருக்கிறோமே என்ற இயலாமையை - ஒரு கோபமாக கரைகளில் காட்டியது. அதன் அலைகளின் ஆர்பரிப்பில் ஒரு கோபம் தெரிந்தது. ஒவ்வொரு நாளும் தன் ஆண்மையின் கம்பீரத்தோடு விரிந்து பரந்து அந்த வளைகுடாவை வளைத்து நின்று நதி வரக்கூடிய திசையெங்கும் நிமிர்ந்து பார்த்தது. "ஓ நதியே ! உன்னை என்னால் எப்படி ஏற்காமல் இருக்க முடியும் ? கண்ணீரோடு ஈர இரவுகளில் உனக்காக - உன் வரவுக்காக - தவித்துக் காத்திருந்த நாட்களை நீ எப்படி அறிவாய் ? சிப்பி, முத்து, பவளம், மீன்கள் மற்றும் பல்வேறு செல்வங்களைக் கொண்டிருக்கும் என்னையே ஒரு பிச்சைக்காரனாக உணரச் செய்தவள் அல்லவா நீ ? உன்னைப் பற்றி அறிந்த பிறகுதானே நான் காதலைப் பற்றி அறிந்து கொண்டேன் ? என்னில் பொங்கித் ததும்பும் ஆண்மையை சரியான முறையில் அடையாளம் காட்டியவளல்லவா நீ ? நீயில்லாமல் என் வாழ்க்கை எத்தனை வெறிச்சோடிக் கிடக்கிறது ? ஆழமாக இருந்தாலும் அடர்ந்தும் இருண்டும் கிடக்கும் என் இதய ஆழங்களில் வெளிச்ச விளக்கேற்ற வந்த விடிவெள்ளியல்லவா நீ ? உன்னை மறுப்பது என்னையே மறுப்பது போலாகுமல்லவா ? இது ஒரு விசித்திரமான வியாபாரம். இங்கே கடவுள் பக்தனுக்காக ஏங்கிப்போய் காத்துக்கொண்டிருக்கிறார்." இயற்கை அந்த இருவரின் தாபத்தையும் கவனித்துக்கொண்டது. வானம், மேகம், பிரபஞ்சம், நட்சத்திரங்கள், சூரிய சந்திரர் என்று அதன் அத்தனை அங்கங்களும் அந்த இருவரின் தாபத்தைத் தீர்க்க முடிவு செய்தன. விரக தாபத்தால் மெலிந்திருந்த நதி மேற்கொண்டு நகரக்கூட முடியாமல் ஒரு குளத்தில் கால்மடங்கிப் படுத்திருந்தது. இயற்கையின் உத்தரவின்பேரில் மழை மிகச்சரியாக அந்த இடத்தில் ஒரு வாரம் இரவும் பகலுமாய் கொட்டித் தீர்த்தது. ஓய்ந்து போயிருந்து நதியின் கால்களுக்கு புதிய பலம் கிடைத்தன. நதி மீண்டும் எழுந்து நின்றது. "கடலிருக்கும் திசை தெரியவில்லையே ? எந்த திசையில் பயணப்படுவது ?" என்று கலங்கி நின்றது. குளம் நதியைத் தேற்றியது - "திசைகளைப் பற்றிக் கவலைப்படாதே. ஏனெனில் எல்லா திசைகளிலும் இருக்கிறது கடல். நீ எங்கே புறப்பட்டாலும் கடலைத்தான் அடைந்தாக வேண்டும். அதுதான் எல்லாமாக இருக்கிறது. ஆக திசைகளைப் பற்றிய பயத்தை ஒழித்துவிட்டு முதல் அடி எடுத்து வை. பத்திருபது அடிகள் கடந்ததும் அடுத்த பத்திருபது அடிகளை எந்த திசையில் வைக்க வேண்டுமென்று நீயே தெரிந்து கொள்வாய் !" நதி குளத்தை ஆசானாக நினைத்துத் தொழுது நின்றது. "சென்றுவா மகளே ! உன் தாபமே உன் வழிகாட்டி ! உன் தாபமே உன் விளக்கு ! உன் நீர் அல்ல - உன் தாபமே உன் கால்கள் ! தாபம் இருக்கும்வரை நீயும் உயிரோடு இருப்பாய் !" என்று கையுயர்த்தி ஆசி கூறியது. நதி மீண்டும் புறப்பட்டது. இந்தமுறை கடலை அடைந்தே தீரவேண்டுமென்கிற வெறியோடு மீண்டு புறப்பட்டது. இயற்கை முன்பே சொல்லிவைத்திருந்ததால் அது கால்வைக்கும் பாதையெங்கும் மண்ணும் கற்களும் எளிதில் விலகி வழிவிட்டன. பாறைகள் வழியில் பிளந்து கிடந்தன. நதியை முன்பு வழிமறித்த நாணற் புதற்கள் இப்போது வணங்கி நின்றன. நதி இந்த மரியாதைகளால் செருக்கடைந்து விடாமல் தன் ஒரே குறிக்கோளோடு ஓடிக்கொண்டிருந்தது. ஒரு வழியாக அந்த நாளும் வந்தது. மாலைச் சூரியன் அஸ்தமனவேளையில் வண்ணங்களைக் குழைத்து வாரியடித்துக்கொண்டிருந்தான். அந்த வெளிச்சச் சிதறல்கள் நதி மீதும் தெளித்தன. அவை அதற்கு அலங்காரமாயின. கடலின் அண்மைமை நதி அதன் இரைச்சல் சப்தத்தைக்கொண்டு உணர்ந்தது. எங்கிருந்தோ நாணமும் வெட்கமும் அதனைச் சூழ்ந்தன. கண்களில் எதனாலோ கண்ணீர் துடைக்கத் துடைக்க விடாமல் திரண்டது. "இதுதான் ! இதுதான் ! இதற்காகத்தான் ! இதற்காகத்தான் !" என்று மனம் அடித்துக்கொண்டது. கடலும் நகரவில்லையே தவிர நதி அணுகிவிட்டதை தன் உள்ளுணர்ச்சியால் அறிந்துகொண்டது. அதன் கம்பீரம் சட்டென்று காணாமற்போய் ஒரு குழைவு அதன் தோற்றத்திற்கு வந்து விட்டது. அலைகளும் மிக மெல்லியதாகவே அடித்தன. இதோ ! நதி வளைகுடாவில் நுழைந்துவிட்டது. கடல் ஒரு தவிப்போடு நதியைப் பார்த்து நின்றது. நதி நுழைந்தவுடனேயே எந்த அறிமுகமும் இல்லாமல் அவள் யாரென்று கடல் புரிந்துகொண்டது. இவள்தான். இவளேதான். எத்தனையோ யுகங்கள் ஆகின்றன - ஆனால் இன்னமும் அந்த முகத்தை மறக்க முடியவில்லை. அந்த உடலின் மென்மையை இன்னமும் மறக்கமுடியவில்லை. அந்தத் தழுவலின் பரவசத்தை.... நீண்ட இரவுகளில் பின்னிப் பின்னி காதல் புரிந்த அந்த போக உணர்ச்சிகளை வார்த்தைகளில் வர்ணிக்க முடியவில்லை. கடலை நெருங்க நெருங்க நதி மிக மெல்லியலாளாக தோற்றம் கொண்டது. அதன் கம்பீரமும் வேகமும் காணாமற்போக தலைகுனிந்து உடல் மடக்கி ஆட்கொள்ளப்படப்போகும் அடியாளின் பணிவுடன் மெதுவாகக் கடலை அணுகியது. கடல் அலைக்கரங்களை உயர்த்தி உயர்த்தி நதியை எட்டிப் பிடிக்க முயன்றுகொண்டிருந்தது. "அதுதான் வந்துகொண்டிருக்கிறாளே ? அதற்குள் என்ன அவசரம் ?" என்று எவரோ அதட்ட கடல் வெட்கத்துடன் சற்று பின்வாங்கியது. அண்ட சராசரங்களும் கண்ணிமைக்காமல் அந்தக் கண்கொள்ளாக் காட்சிக்காக காத்து நின்றன. கடலை அடைய ஒரு அடி இருக்கும்போதுதான் நதி நிமிர்ந்து பார்த்தது. அவ்வளவுதான் ! தாங்கமாட்டாமல் அப்படியே ஓடிச்சென்று கடலின் கரங்களில் தன்னை ஒப்புவித்தது. சட்டென்று சொல்லிவைத்ததுபோல் வானத்தில் இருள்சூழ்ந்தது. அதுவரை நடந்தது பகிரங்கக் காட்சி. அதற்குமேல் நடக்கப்போவது அந்தரங்கம் என்பதுபோல இயற்கை அந்த சங்கமத்தைத் திரையிட்டது. கடல் நதியைத் தொட்ட அந்தக் கணத்தில் அதுவரை கடலைப் பிணித்திருந்த சமூகத்தின் அத்தனை தளைகளும் படீரென தெறித்து விழுந்தன. நெறிமுறைகளும் கலாச்சாரங்களும் காணாமற்போயின. கடல் ஆழமாக இழுத்துப் பெருமூச்சொன்று விட்டது. "ஓம் சாந்தி ! ஓம் சாந்தி !" என்று கடலின் ஆழங்களிலிருந்து ஒரு குரல் எழுந்தது. நதி மெளனமாக கடலில் கரைந்து கலந்து காணாமற் போனது. எத்தனை வார்த்தைகள் கொண்டு வர்ணித்தாலும், உருவகங்களை உபயோகப்படுத்தினாலும் சங்கம நேரத்தின் பரவசத்தை அத்தனை எளிதில் சொல்ல முடிவதில்லை. ஏனெனில் அது வார்த்தைகளுக்கும் வர்ணனைகளுக்கும் அப்பாற்பட்டது. ஒரு இறையுணர்வைப்போல ஞானமடையும் அந்தக் கணத்தைப் போல சங்கம நேரமும் மிகப் புனிதமானது. அருவமானது. ஆழமானது. தலைவன் கூற்று நிகழும் இடங்களைச் சொல்ல வரும் தொல்காப்பியர் சங்கமத்தின் முக்கியமான கூறொன்றினை வெளிச்சமிட்டுக் காட்டுவதன் மூலம் அந்தப் பரவசத்தைச் சொல்ல விழைகிறார். "கரணத்தின் அமைந்து முடிந்த காலை நெஞ்சுத் தளை அவிழ்ந்த புணர்ச்சிக் கண்ணும்.." (தொல்காப்பியம் / பொருளதிகாரம் - கற்பியல் - எண் 1090) கரணம் என்பது திருமணம் என்று முன்பே கூறினோம். திருமணம் முடிந்ததும் தளை அவிழ்கிறது. இந்த நெஞ்சத் தளை என்பதுதான் மிக முக்கியமான வார்த்தை. சங்கம நேரம் நெஞ்சத் தளைகள் தெறித்து விழும் நேரம். நமக்கு நாமே போட்டுக்கொண்ட தளைகள், சமூகம் போட்ட தளைகள், உற்றார் உறவினர் இட்ட தளைகள்.... கடமைகளென்ற பெயரில் தளைகள்.... கட்டாயங்களின் பேரில் தளைகள்... இன்னும் மதத்தின் பேரால், பண்பாட்டின் பேரால், கலாச்சாரத்தின் பேரால்...ஓ! மானுடத்திற்குத்தான் எத்தனை தளைகள் ! தளைகளிலிருந்து மனிதனை விடுதலை செய்வதே ஆன்மிகத்தின் குறிக்கோள். அந்த வகையில் புணர்ச்சியும் தெய்வத்தை தரிசிக்க ஒரு வழி. காமத்திலிருந்து கடவுளுக்குச் செல்லும் வழி. (மேலும் சிந்திப்போம்) this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |