http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 23
இதழ் 23 [ மே 16 - ஜூன் 15, 2006 ] இந்த இதழில்.. In this Issue.. |
"ஆண்டவன் படைச்சான்! என்கிட்ட கொடுத்தான்! அனுபவி ராஜான்னு அனுப்பி வெச்சான்!"
தமிழ் தெரிந்திருந்தால், பெரும்பாலான ஜப்பானியர்கள் இப்பாடலைப் பாடித்திரிந்து கொண்டிருப்பது நிச்சயம். சில நேரங்களில், ஜப்பானியர்கள் வாழ்க்கையை அனுபவிக்கவென்றே பிறந்தவர்களோ என்றுகூடத் தோன்றும். இயற்கை வளங்கள் வெகுவாக இல்லாவிட்டாலும், குறைவற்ற வசதிகள்! கேளிக்கை விடுதிகள் மிகுந்திருந்தாலும், குற்றங்களற்ற நகரங்கள்! சாதிகள் இருந்தாலும், ஏற்றத்தாழ்வு பாராட்டாத சமத்துவமான சமுதாயம்! ஆங்கிலம் தெரியாவிட்டாலும், அந்நியர்களை உபசரிக்கும் பாங்கு! இயற்கை அடிக்கடி சீறினாலும், உடனடியாக உதவ ஓடோடி வரும் அரசாங்கம்! குப்பைபோடத் தடைச்சட்டம் இல்லாவிட்டாலும், சுத்தமான பொது இடங்கள்! கூட்ட நெரிசல் இருந்தாலும், வினாடி தவறாமல் வந்துபோகும் புகைவண்டி மற்றும் பேருந்துகள்! இவற்றையெல்லாம் பார்க்கும்போது சற்று பொறாமையாகக்கூட இருக்கும். அதேசமயம், நம் இந்தியாவும் இந்தியர்களும் இத்தகைய பண்புகளையும் வசதிகளையும் பெற நம்மாலான முயற்சிகளைச் செய்யவேண்டும் என உறுதிகொள்ளவும் வைக்கும். இப்போதிருக்கும் பெரும்பாலான இந்தியர்களுக்குக் கிடைக்காத ஒரு வாய்ப்பு இவர்களுக்கு இருக்கிறது. சிறுவயது முதலே தாங்கள் விரும்பிய துறை சார்ந்த படிப்புகளைப் படித்து, அதே துறையிலேயே பணிபுரிந்து வாழ்வில் உயர முடியும். இந்தியாவிலும் இதுபோல் சாதனை புரிபவர்கள் இருக்கிறார்கள் என்றாலும், மிகச்சிலரே. வலிமையான பொருளாதாரப் பின்புலமோ அல்லது பெற்றோர் நல்ல வேலையில் இருந்து, வசதி படைத்தவர்களாகவோ இருந்தால் மட்டுமே சாத்தியம். உதாரணமாக, ஒருவர் நாட்டியத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். வேறு எந்த வேலைக்கும் செல்லாமல், கல்லூரியிலும் நாட்டியத்தையே பயின்று, அரங்கேற்றம் செய்து, புகழ்பெற்ற நாட்டியக்கலைஞராக ஆக, நடுத்தர மற்றும் அதற்குக்கீழ் நிலையில் இருக்கும் எத்தனை இந்தியர்களால் முடியும்? குறைந்த பட்சம் வயிற்றுப் பிழைப்புக்காகவாவது ஏதாவது ஒரு வேலை செய்துகொண்டு, பகுதிநேரமாகத்தான் லட்சியங்களை அடைய முயலமுடியும். இதுதான் வளரும் நாடுகளுக்கும் வளர்ந்த நாடுகளுக்கும் உள்ள வித்தியாசம். இப்படிப்பட்ட ஒரு பெண்மணியைச் சென்றவாரம் சந்தித்தேன். பெயர் தொமிகோ. சிறுவயதில், ஏதோ ஒரு திரைப்படத்தைப் பார்த்தபோது, அதில்வரும் பரதநாட்டியத்தின்மீது ஆர்வம் கொண்டார். பின்னர் அரசு உதவியுடன், இந்தியா வந்து, சென்னை கலாக்ஷேத்ராவில் சாந்தா தனஞ்செயன் தம்பதியிடம் சுமார் 10 ஆண்டுகள் முறையாக நாட்டியம் பயின்று, இன்று ஓஸகாவில் பரதநாட்டியப்பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். வருடந்தோறும் கலாக்ஷேத்ராவில் நடைபெறும் நாட்டியவிழாவில் கலந்து கொள்கிறார். இவரது நாட்டிய நிகழ்ச்சியைச் சென்ற வாரம் காணும் வாய்ப்பு கிடைத்தது. ஓஸகா அருகிலுள்ள கோபெ (Kobe) யில் உள்ள இந்தியச் சமுதாய மையத்தில், வாழும்கலை ஸ்ரீரவிசங்கர் அவர்களின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. அதில் ஒரு நிகழ்ச்சியாக சுமார் அரை மணிநேரம் இவரது நாட்டியமும் அமைந்திருந்தது. ஸ்ரீவள்ளி நாட்டிய நாடகமும், தீராத விளையாட்டுப்பிள்ளை மற்றும் நதிக்கரை நிலவொளியில் ஆகிய பாடல்களும் இடம்பெற்றன. அற்புதமான நடனம். அருமையான பாவங்கள். பார்வையாளர்கள் அனைவரும் அப்படியே சொக்கிப்போய் அமர்ந்திருந்தோம். அதிலும், 'கள்ளால் மயங்குவது போலே' என்று வரும்போது, அனைவரும் 'கண்மூடி வாய்திறந்தே கேட்டிருந்தோம்' என்று சொன்னால், மிகையில்லை. டி.கே.பட்டம்மாளின் குரலுக்கு, இவரது அபிநயம் அமைத்த கூட்டணியைக் கண்டு, சொர்க்கத்திலிருக்கும் அந்த மகாகவியே உள்ளம் பூரித்துப் போயிருப்பார். அவ்வளவு அருமையாக இருந்தது. ஜப்பான் வாழ்க்கை இத்தனை சுவாரசியமாக இருக்கும் என்று நினைத்தே பார்த்திருக்கவில்லை. இங்கு வந்ததிலிருந்து, தமிழ்பேசும் யசுதாவிலிருந்து, அடுத்தடுத்து இன்ப அதிர்ச்சிகள். இன்னும் என்னென்ன ஆச்சரியங்கள் காத்திருக்கின்றனவோ தெரியவில்லை. 'எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா' என்று மீசைக்கார நண்பர் பாடியதன் பொருள் இப்போதுதான் கொஞ்சங்கொஞ்சமாக விளங்கி வருகிறது. அயல்நாட்டில் வாழும்போது, தாய்நாட்டுடன் தொடர்புடைய ஏதாவதொரு சிறுநிகழ்வு நடந்தால்கூட மனதுக்கு நெகிழ்ச்சியாக இருக்கும். அதிலும், நம்நாட்டைப் போலவே கொண்டாடும் பண்டிகைகளின்போது, கூடுதல் சந்தோஷம். இந்தியாவில் எப்படியும் மாதம் ஓரிரு நாட்கள் கூடுதல் விடுமுறை அல்லது ஏதாவது ஒரு பண்டிகை வந்துவிடுவது போலவே, இங்கும் பண்டிகைகளுக்குப் பஞ்சமே இல்லை. போன மாதம் (ஏப்ரல்) முழுக்கவே நாடே திருவிழாக்கோலம் பூண்டிருந்தது. காரணம், சக்குரா. பனிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை குறிஞ்சிப்பூ பூப்பதுபோல, ஆண்டுக்கொருமுறை மட்டும் இங்கு செர்ரிப்பூப் பூக்கும். அதற்கு இவர்கள் கொடுக்கும் வரவேற்பு இருக்கிறதே! அப்பப்பா! வார்த்தைகளால் சொல்லி மாளாது. சாதாரணமாகவே, பார்ட்டி, பார்ட்டி என அலைந்து கொண்டிருப்பவர்கள். வழக்கமாக நடப்பதைவிட ஏதாவது வித்தியாசமாக நடந்துவிட்டால் போதும். உடனே ஒரு பார்ட்டி. முன்பு வேலை செய்த அலுவலகத்தில், ரொம்ப நாளாகத் தாடி வளர்த்து வந்த ஒருவன் ஒருநாள் சவரம் செய்துவிட்டு வந்தான். அவ்வளவுதான்! உடனே ஒரு பார்ட்டி ஏற்பாடு செய்து விட்டார்கள். இப்படியிருக்க, ஒரு தடவை பூக்க ஒரு வருடம் காத்திருக்கும் சக்குரா பூத்தால்? கேட்கவா வேண்டும்? அமர்க்களம்தான். ஏப்ரல் மாதம் முழுவதும், ஊரிலிருக்கும் அனைத்து சக்குரா மரங்களின் கீழும், காலை முதல் மாலை வரை ஒவ்வொரு கும்பல் அமர்ந்திருக்கும். ஒவ்வொரு சனி ஞாயிறும் பார்ட்டிதான். அதற்கு ஒரு பெயர் வேறு வைத்திருக்கிறார்கள். ஹனாமி. ஹனா என்றால் பூ. மி என்றால் பார்த்தல். பூவைப்பார்ப்பதற்காக ஒரு பார்ட்டி. இங்கே பார்ட்டியென்றால், குடித்து விட்டுக் கும்மாளம் போடுவது என நினைக்கவேண்டாம். ஒவ்வொருவரும் அவரவர் வீட்டில் செய்தோ, கடையில் வாங்கியோ உணவுகளை எடுத்து வரவேண்டும். எல்லாவற்றையும் ஒன்றாக வைத்து, பகிர்ந்து உண்பார்கள். சுருக்கமாகச் சொன்னால், நம் ஊரில் நிலாச்சோறு சாப்பிடுவது போலத்தான். ஏப்ரல் மாதத்தில் சக்குரா ஹனாமி என்றால், மே மாதத்தின் அமர்க்களமான கொண்டாட்டம் தங்கவாரம். தங்கவாரம் என்றால், ஏதோ அட்சய திரிதியை போல என எண்ணிக்கொள்ள வேண்டாம். தங்கத்துக்கும் இதற்கும் பெயரைத்தவிர வேறெந்தத் தொடர்பும் கிடையாது. மே முதல்வாரம் முழுக்க விடுமுறை. இதற்கு, ஏப்ரல் மாத ஹனாமி பார்ட்டியின்போதே, திட்டமிட ஆரம்பித்து விடுவார்கள். நாங்களும் அதைக்கொண்டாட முடிவெடுத்து, திட்டங்கள் தீட்டினோம். உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், ஹிரோஷிமா போய்விட்டு வந்து, அணுகுண்டு என்ற கட்டுரையை எழுதவேண்டும் என்றுதான் எண்ணியிருந்தேன். எவ்வளவு முயன்றும், தங்குவதற்கு இடம் கிடைக்காததால், கைவிட வேண்டியதாயிற்று. எனவே, ஓஸகாவைச் சுற்றியுள்ள யுனிவர்சல் ஸ்டுடியோஸ், கியோட்டோ, உலகம் சுற்றும் வாலிபன், ஜப்பானில் கல்யாணராமன் ஆகிய படங்கள் படமாக்கப்பட்ட எக்ஸ்போலேண்ட், கடல் கண்காட்சி போன்ற இடங்களுக்கு மட்டுமே சென்று வந்தோம். அதிலும், கடைசியாக நரா என்ற இடத்துக்குச் சென்றதும், உயர் இரத்த அழுத்தம் எகிறியது. அதற்கு வைத்தியம் பார்ப்பதற்கு முன், நராவைப் பற்றி ஒரு சிறிய அறிமுகம். ஜப்பானின் ஆரம்பகாலத் தலைநகரம் நரா. கி.பி 8 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், ஷோமு என்ற மன்னரின் ஆட்சிக்காலத்தில், இங்கு பிரம்மாண்டமான ஒரு புத்தர் கோயில் எழுப்பப்பட்டு, வைரோகணா புத்தர் என்று பெயரிடப்பட்ட சிலை நிறுவப்பட்டது. வைரோகணா என்றால், 'சூரியனைப் போல, உலகம் முழுவதும் ஒளிவீசக் கூடிய' என்று பொருள். இக்கோயிலுக்குப் பெயர் தோதாய்ஜி (Todaiji). இதற்கு, கிழக்கிலிருக்கும் பெரியகோயில் என்று பெயர். இது கோயில் மட்டுமல்ல. புத்தரைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் மையமாகவும் செயல்பட்டு வருகிறது. இம்மையம், உலகம் முழுவதிலும் பல்வேறு புகழ்பெற்ற பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை உருவாக்கி இருக்கிறது. கெகோன் (Kegon) என்ற புத்தமதப் பிரிவின் தலைமையிடமும் இதுதான். நம் ஊரில், ஆகம விதிப்படி சிற்பங்களை அமைப்பதுபோல, இங்கிருக்கும் வைரோகணா புத்தர் சிலை, கெகோன் சூத்திரம் என்ற மதநூலின்படி உருவாக்கப்பட்டது. முதலில், வெண்கலத்தால் செய்யப்பட்டு, பின்னர் தங்கத் தகடுகளால் போர்த்தப்பட்டது. இதன் அளவுகள் பின்வருமாறு:- சிலையின் மொத்த உயரம் : 14.98 மீட்டர் (48.91 அடி) தலையின் நீளம் : 5.41 மீட்டர் (17.75 அடி) கண்ணின் நீளம் : 1.02 மீட்டர் (3.34 அடி) காதின் நீளம் : 2.54 மீட்டர் (8.33 அடி) அமர்ந்திருக்கும் தாமரைப்பீடத்தின் உயரம் : 3.05 மீட்டர் (10.0 அடி) கி.பி 8ஆம் நூற்றாண்டிலேயே அமைக்கப்பட்டிருந்தாலும், அடுத்து வந்த ஆட்சிகளில் நடந்த போர்களின்போது, பலத்த சேதங்களுக்கு உள்ளாகி, பலமுறை புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், கி.பி 1180 மற்றும் 1567ல் நடந்த போர்களில் இருமுறை எதிரிகளால் தீக்கிரையாக்கப்பட்டிருக்கிறது. இப்போதிருக்கும் சிலையும் கோயிலும் கடைசியாக, 18ம் நூற்றாண்டில் புதுப்பிக்கப்பட்டவை. சிலை ஏறக்குறைய அதே அளவாக இருந்தாலும், கோயிலின் அளவு, முதலில் இருந்ததைவிட, மூன்றில் ஒரு பங்கே ஆகும். ஆனால், இன்னும், உலகிலேயே மிகப்பெரிய மரக்கட்டுமானம் இதுதான். யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலகப் புராதனச் சின்னமும் ஆகும். இங்கு மக்களைக் கவரும் இன்னொரு விஷயம், சுதந்திரமாகச் சுற்றித் திரியும் புள்ளிமான்கள். நம் ஊர் மான்களைப் போல, மனிதர்களைக் கண்டு மிரண்டு ஓடுவதில்லை. ஏதாவது சாப்பிடத் தருவார்களா என மனிதர்களைத் தேடிவருகின்றன. குழந்தைகளின் கைகளில் இருக்கும் பழங்களைப் பறித்துக் கொண்டு ஓடும் பழனிமலைக் குரங்குகளைப் போலவும் சில குழந்தைகளிடம் கைவரிசை (வாய்வரிசை?) காட்டின. விடுமுறை நாளாதலால், இங்கும் யசுகுனி ஜிஞ்ஜாவைப் போலவே, தெருவின் இருபுறமும் திருவிழாக் கடைகள். தலைக்கு 500 யென் வசூலித்தபோதிலும், எக்கச்சக்கமான கூட்டம். சிறுவயதில், எங்கள் குலதெய்வக் கோயிலில் பேயோட்டும்போதுதான் இப்படிப்பட்ட கூட்டத்தைக் கண்டிருக்கிறேன். நாங்கள் சென்றிருந்தபோது, அன்று மாலை நடைபெறப்போகும் ஏதோ கலைவிழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தன. இருப்பினும், பார்வையாளர்களுக்கு எந்தவித இடையூறும் இல்லை. பார்வையாளர்களா? பக்தர்களா? இந்தக் கோயிலில், சுற்றுலாப்பயணிகளைத் தவிர, வழிபட வந்தவர்கள் தேடினாலும் கிடைக்க மாட்டார்கள். பலருக்குக் கடவுள் நம்பிக்கை இல்லாதது ஒரு காரணம். மேற்கத்தியக் கலாச்சாரத்துக்கு மெல்ல மாறிவருவது இன்னொரு காரணம். மொத்தமாகப் பார்த்தால், இங்கே இருப்பது ஒரு பூங்கா, அதன் நடுவில் அருங்காட்சியகம் போன்றதொரு கோயில் மற்றும் சில மான்கள். 160 அடி உயரக் கட்டுமானமாக இருந்தாலும், அவ்வளவு ஒன்றும் அதிசயமாகத் தெரியவில்லை. என்னதான் 49 அடி உயரப் பிரம்மாண்டமான சிலையாக இருந்தாலும், கலை உணர்ச்சி என்பது மருந்துக்குக்கூட இல்லை. உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், தொலைக்காட்சியில், 'ப்ப்ப்ப்ரம்ம்ம்ம்மாண்ண்ண்ண்டமாய்ய்ய்ய்ய்...' என சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம் வரும்போது என்ன தோன்றுகிறதோ, அப்படித்தான் இருந்தது. இதற்கே இவர்கள் செய்யும் அலட்டல் இருக்கிறதே! சர்க்கரை இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ போன்றதுதான். யாரைக்கேட்டாலும், 'Nara is a beautiful temple. It is a must see!' என்றுதான் சொல்வார்கள். அதுமட்டுமல்ல. இக்கோயிலைச்சுற்றி எடுக்கப்பட்ட ஒரு டாகுமெண்டரி படம், CD, DVD, அதன் அழகை வர்ணித்துப் புத்தகங்கள்! இதையெல்லாம் பார்க்கும்போதுதான், இரத்த அழுத்தம் அதிகரித்தது. நம் ஊரில், இதைவிடப் பலமடங்கு இனிப்பான வெல்லமே இருந்தும், சரியாகச் சுவைக்கத் தெரியாமல் இருக்கிறோமே என்ற ஏக்கமும் பிறந்தது. மற்ற பயணிகளைவிட மாணவர்களின் எண்ணிக்கை இங்கு அதிகம். ஏனெனில், நடுநிலைப் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களும், ஜப்பானில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில்களைப் பார்வையிட்டிருக்க வேண்டியது அவசியம். பல்கலைக்கழகத்தில் சேரும்போது, இவற்றைப் பற்றிய பயணக்கட்டுரைகளுக்கு மதிப்பெண்களும் முன்னுரிமையும் உண்டு. காரணம், பொறியியல், மருத்துவம் உட்பட, பெரும்பாலான பட்டப்படிப்புகளில் வரலாறு கட்டாயப்பாடம். வரலாறு தொடர்பான வேலைக்குச் செல்ல விரும்புவோர்தான் வரலாறு படிக்க வேண்டுமென்பதில்லை. ஒருவர் சிறந்த குடிமகனாக இருக்க, அவரவர் மொழி, நாடு, இனம் ஆகியவற்றின் வரலாற்றைத் தெரிந்து கொண்டிருப்பது மிகவும் அவசியம் என்பதை இவர்கள் நன்கு உணர்ந்துள்ளனர். நாம்தான், 'அதான் நடந்து முடிஞ்சிருச்சில்ல! இன்னும் என்ன?' என்று விதண்டாவாதம் பேசிக்கொண்டிருக்கிறோம். வரலாறு படிப்பதால் ஏற்படும் நன்மைகளை, வாழும் உதாரணங்களான அமெரிக்காவின் கறுப்பின மனிதர்களிடம் கண்கூடாகக் காணலாம். ஆரம்பத்தில் வெள்ளையர்களிடம் அடிமைகளாக இருந்தவர்கள் இன்று உரிமை கேட்டுப் போராடுவதும், போராடிப் பெற்ற உரிமைகளைத் தக்க வைத்துக் கொள்வதும், தாங்கள் முன்பு எவ்வாறெல்லாம் கேவலமாக நடத்தப்பட்டோம் என்ற வரலாற்றைத் தொடர்ந்து படித்து வருவதால்தான். பலநூறு வருடங்களுக்கு முன் நிகழ்ந்த கொடுமைகள் மீண்டும் திரும்பிவிடக் கூடாது என்ற விழிப்புணர்வுடன் அவர்கள் இருப்பதற்குக் காரணம் வரலாறன்றி வேறென்ன? ஒரு காலத்தில் அதீத தன்னம்பிக்கையினால் மற்ற நாடுகளின்மீது படையெடுத்துச் சூறையாடி வந்த ஜப்பானியர்கள் இன்று அமைதியை விரும்பக் காரணம் என்ன? மீண்டும் அந்தக் கொடிய வரலாறு திரும்பக்கூடாது என்ற எண்ணம் வரக்காரணம் என்ன? வரலாறு படித்து உண்மையை உணர்ந்திருப்பதால்தானே? அலைகடல் ஓரத்தில் அமைதியாய் இருக்கும் அழகுக்கூடங்களை அதிசயித்து அனுபவிக்கும் ஆசைதான் இல்லை. விண்ணின் பெருமைக்கு ஈடுசொல்லும் வித்தையை வியப்புறவாவது வேண்டாமா? கலைக்க முயன்ற காலத்தின் கைகளையும் தோற்கடித்த காவியங்கள் அல்லவா அவை? பஞ்சபாண்டவர் ரதங்கள் என அழைக்கப்படும் ஐந்து தளிகளும் ஒரே கல்லால் ஆனவை. தனித்தனிக் கற்களால் அல்ல. யோசித்துப் பாருங்கள்! எந்த இயற்கைச் சீற்றத்தால் இவை அழியும்? நிலநடுக்கம் ஏற்பட்டால்கூட, உதிர்வது சாத்தியமா? நிலத்திலும் நீரிலும் மூழ்கினாலும் கருங்கல்லுக்குச் சேதம் ஏற்படுமா? என்றாவது ஒருநாள் வெளியில் வந்துதானே தீரும்? அல்லது, தீயிட்டுத்தான் கொளுத்த முடியுமா? எரிமலையில் வேகுமா? அட, சுனாமியால்கூட ஒன்றும் செய்யமுடியவில்லையே! இதுவல்லவோ காலத்தை வென்று நிற்கும் படைப்பு! மனித மூளை இயற்கையை வென்றதற்கு இதுவன்றோ சாட்சி! சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திப்பது போல, இயற்கையின் வழியிலேயே சென்று, இயற்கையை வென்ற திறன். ஆனால், இதைச் சிதைக்க மனிதன் முடிவெடுத்து விட்டால், ஒரு சிறு உளி போதுமே! இரும்பினால் செய்யப்பட்ட உளியால் கொத்தினால்தான் இதற்குச் சேதமா? இல்லை. அறியாமை என்ற கண்ணுக்குத் தெரியாத உளியும் இதன் அழிவுக்குக் காரணமாகலாம். ஒரு கலையை மக்கள் வெறுத்தால்தான் அது தேயும் என்று சொல்லமுடியாது. உரிய முக்கியத்துவம் தராமல் புறக்கணித்தால்கூட, கால ஓட்டத்தில் சென்று மறைந்துவிடும். கலை என்பது மக்களைச் சென்றடைந்து, அதை அனுபவித்து அவர்கள் உள்ளம் பூரித்தால்தான் அதற்கு உயிர் இருக்கிறது என்று பொருள். கோயிற்கலையும் இதற்கு விதிவிலக்கல்ல. கருவறையில் குடிகொண்டிருக்கும் இறைக்குப் பாதுகாப்பு அளிக்கும் கூடாரம்தான் என்றாலும், கண்களைக் கொள்ளை கொள்ளும் கட்டடக்கலையும், வழிபாட்டுக்காக இடம்பெற்றிருக்கும் இறைத்திருமேனிதான் என்றாலும், சிந்தையை அள்ளும் சிற்பக்கலையும், நிகழ்வுகளைப் பதிவு செய்யவே என்றாலும், கடந்த காலத்தைக் காட்டும் கண்ணாடியான கல்லெழுத்துக்கலையும், மக்களுக்காகவேயன்றி, வேறு யாருக்காக? கலை வளர்ப்பதற்காகத் திருக்கோயில்களை அமைத்து, பயனுள்ள பொழுதுபோக்குக்கூடமாகவும், இயற்கைச் சீற்றங்களின்போது பாதுகாப்பிடமாகவும், அறிவு புகட்டும் பாடசாலைகளாகவும் நடத்திவந்த நம் முன்னோர்கள் என்ன முட்டாள்களா? ஆனால், இப்படிப்பட்ட மாபெரும் கொடைகளை அளித்த பல்லவர்களுக்கும் சோழர்களுக்கும் இன்று நாம் அளிக்கும் பட்டம், 'தொழிற்கல்வியில் இடம் கிடைக்க உதவாதவர்கள்'! இப்படியே புலம்பிக் கொண்டிருந்தால் இதற்கு என்னதான் தீர்வு? முறையான பராமரிப்பின்றிக் கிடக்கும் நம்நாட்டுப் பண்பாட்டுக் கருவூலங்களும் மற்ற முன்னேறிய நாடுகளின் நிலையைப் போல் உயர்வெய்துவதெப்போது? உணவுக்கே வழியின்றிப் பல கோடி மக்கள் இருக்கும் நாட்டில், கலை இரண்டாம் பட்சம்தான். அதற்காக, 100% வளர்ச்சியை எட்டிய பிறகுதான் வரலாற்றுச் சின்னங்களுக்கு முன்னுரிமை என்று காத்திருக்க முடியுமா? மனித உடம்பின் அனைத்து உறுப்புகளும் ஒரேசமயத்தில் வளர்ந்தால்தான் வளர்ச்சி என்று பெயர். இல்லாவிடில், அதனை வீக்கம் என்றுதான் சொல்லவேண்டும். அடுத்தவேளைச் சாப்பாட்டுடன் நேரடித் தொடர்புள்ள தொழிலும் விஞ்ஞானமும் மட்டும் வளர்ந்தால் போதாது. நாம் கடந்து வந்த பாதையையும் மறக்கக் கூடாது. கடந்தகாலத் தவறுகளைத் திரும்பவும் செய்யக்கூடாது. எப்படி இருந்த நாம் இன்று இப்படி ஆகிவிட்டோம் என்று ஒவ்வொரு மனிதனும் சிந்திக்க ஆரம்பித்து விட்டால், நாட்டு முன்னேற்றத்தின் வேகம் அதிகரிக்காதா? 100% வளர்ச்சியை அடைய இது மறைமுகமான தூண்டுகோல் இல்லையா? இதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன? பல்லாயிரம் ஆண்டுகால வரலாற்றைத் தாங்கிநிற்கும் வரலாற்றுச் சின்னங்களை மக்கள் வலிந்து அனுபவிக்க வகை செய்தல் வேண்டும். அவை சொல்லும் செய்திகளை மக்கள் அனைவரும் அறியும்படி செய்தல் வேண்டும். அதற்கான வழிமுறைகளை, அமெரிக்கா மற்றும் ஜப்பானில் நான் கண்ட புராதனச் சின்னங்கள் பராமரிக்கப்படும் முறையின் அடிப்படையில், பின்வரும் பரிந்துரைகளை முன்வைக்கிறேன். கையேடுகள் எல்லா இடங்களுக்கும் இது முதல் முக்கியத்தேவை. ஒரு கோயிலுக்குச் சென்றால், உள்ளே நுழைந்ததும் நேரே கருவறைக்குச் சென்று, குடும்பத்திலுள்ள அனைவரின் பெயரிலும் ஒரு அர்ச்சனை செய்துவிட்டு, அடுத்த கோயிலுக்குச் செல்வதைத்தான் பெரும்பாலானோர் செய்து கொண்டிருக்கிறோம். ஏன்? அதைப்பற்றிப் போதுமான விபரங்களை அறியாமல் இருப்பதே. மேலும், இவற்றை விளக்கிச்சொல்லச் சரியான நபர்களும் இல்லை. இந்த இடைவெளியைக் கையேடுகள் பூர்த்தி செய்யும். ஏற்கனவே தலபுராணம் என்ற பெயரில் சில கட்டுக்கதைகள் வியாபாரமாகிக் கொண்டுதான் இருக்கின்றன. நடைமுறைக்கு ஒவ்வாத, சாதாரணமாக நம்பமுடியாத, சிந்திப்பவர்களிடம் அவநம்பிக்கையை ஏற்படுத்தும் கதைகளைக் காட்டிலும், உண்மையான வரலாற்றுத் தகவல்களைத் தாங்கிவரும் கையேடுகளுக்கு நிச்சயம் அதிக வரவேற்பிருக்கும். நாங்கள் ஒருமுறை தஞ்சாவூர் அருகிலுள்ள திருக்கருகாவூர் சென்றிருந்தபோது, இருட்டி விட்டிருந்தது. மங்கிய விளக்கு வெளிச்சத்தில், அக்கோயில் யாரால் கட்டப்பட்டது என்ற தகவலைக் கல்வெட்டுகளிலும் கட்டடக்கலையிலும் தேடிக்கொண்டிருந்தோம். அப்போது, அங்கு கோயில் நிர்வாகம் ஒரு கையேடு வெளியிட்டிருப்பதை ஒரு பக்தர் சொல்லக்கேட்டு, வாங்கிப் பார்த்தோம். திரு. குடவாயில் பாலு அவர்கள் தலைமையில் தயாரிக்கப்பட்டிருந்த அக்கையேட்டில், கல்வெட்டுகளிலுள்ள செய்திகள் வெளியிடப்பட்டிருப்பதைக் கண்டு மிக மகிழ்ந்தோம். இது, வரலாற்றில் ஆர்வமுள்ள மற்ற பக்தர்களுக்கும் உதவியாய் இருந்திருக்கும் என்பது திண்ணம். உலகப்புகழ் பெற்ற கோயில்களின் கையேடுகளை, விமானநிலையம், வெளிநாடுகளில் இருக்கும் இந்தியத் தூதரகங்கள், விமானசேவை நிறுவனங்கள் ஆகியவற்றில் விநியோகிப்பது வெளிநாட்டுப் பயணிகளிடையே மிகுந்த வரவேற்பைப் பெறும். மேலும், அக்கோயில்கள் தொடர்பான புத்தகங்களை அந்தந்தக் கோயில்களிலேயே விற்பதும், எழுத்தாளர்களை ஊக்குவிக்கும். நுழைவுக்கட்டணம் தமிழர்கள் இலவசத்தால் அடித்த பிண்டங்களா என்று தெரியாது. ஆனால், நுழைவுக்கட்டணம் செலுத்தி ஒரு புராதன மையத்தைப் பார்க்க வேண்டுமென்றால், மூக்கால் அழுவார்கள் என்பது மட்டும் நிச்சயம் தெரியும். நுழைவுக்கட்டணம் வசூலிக்காவிட்டால், பராமரிப்புச் செலவுகளை எப்படிச் சமாளிப்பது என அரசு கேள்வி கேட்கும். இதன்மூலம், கணிசமான அளவு அந்நியச் செலாவணியும் அரசுக்கு வந்து சேருகிறது எனச் சுற்றுலாத் துறையின் பட்ஜெட் தெரிவிக்கிறது. ஜப்பானில், ஒவ்வொரு இடத்துக்கும் குறைந்தது 400 யென்களாவது (சுமார் 150 ரூபாய்) வசூலிக்கிறார்கள். ஒரே ஊரில் இருந்தாலும், தனித்தனியாக நுழைவுக்கட்டணம் செலுத்த வேண்டும். மாமல்லபுரத்தில் பரவாயில்லை. கடற்கரைக் கோயிலுக்கும் பஞ்சபாண்டவர் ரதங்களுக்கும் சேர்த்தே 10 ரூபாய்தான். ஆனால், வெளிநாட்டுப்பயணிகளுக்குத்தான் தொல்லை. தலைக்கு 10 அமெரிக்க டாலர்கள் அல்லது 250 ரூபாய். என்ன கணக்கு எனத் தெரியவில்லை. 15 வருடங்களுக்கு முன் அப்போதைய பணமாற்று விகிதத்திற்கேற்ப விதித்த கட்டணத்தை இன்னும் மாற்றாமல் வைத்திருக்கிறார்கள். இப்படியிருந்தால், டாலராகக் கொடுப்பார்களா அல்லது ரூபாயாகக் கொடுப்பார்களா என்பதைச் சிறுகுழந்தை கூடச் சொல்லிவிடும். பிறகெப்படி அந்நியச் செலாவணி வருகிறது எனத்தெரியவில்லை. மேலும், வெளிநாட்டுக்காரர்கள் அனைவருமே பணக்காரர்கள் என்ற மாயை நமக்கு இருக்கிறது. இந்தியாவிற்கு வரும் சுற்றுலாப்பயணிகளில் பெரும்பாலானோர் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள்தான். ஆராய்ச்சியாளர்களுக்குக்கூட, திட்டப்பணிச் செலவுக்கான ஒதுக்கீடு இருக்கும். ஆனால், மாணவர்களுக்குத்தான் கஷ்டம். வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில், இந்தியாவைப் போலன்றி, பெற்றோர் உதவியின்றி, உதவித்தொகை மூலம் படிக்கும் மாணவர்கள்தான் அதிகம். அந்த உதவித்தொகையில், செலவுகளைச் சிக்கனப்படுத்தி, சேர்த்த தொகையைக் கொண்டுதான் வெளிநாடுகளைச் சுற்றிப் பார்க்க வருகிறார்கள். பயணச்சேவை நிறுவனங்களும் இவர்களுக்குக் குறைந்த கட்டணத்தில் பயணச்சீட்டுகள் அளிக்கின்றன. இப்படி வருபவர்களுக்கு, 250 ரூபாய் என்பது மிகப்பெரிய தொகை. கையேடுகளும் இல்லாமல், இதைப்பற்றி அவ்வளவாக விவரமும் தெரியாமல், இதற்குப்போய் எதற்கு 250 ரூபாய் என எண்ணி, வெளியிலிருந்தே மேம்போக்காகப் பார்த்துவிட்டுச் செல்லும் பல வெளிநாட்டுப் பயணிகளைச் சந்தித்திருக்கிறேன். வேறு எந்த நாட்டிலும் இதுபோல் பாகுபடுத்திப் பார்க்கும் நிலை இல்லை என நினைக்கிறேன். மேலும், விமான நிலையத்திலேயே, ஒரு மாவட்டத்திலுள்ள அனைத்துக் கோயில்களுக்குமான ஒருங்கிணைந்த நுழைவுச்சீட்டுகளை (Package entrance fee) விற்கலாம். ஆனால், அனைவருக்கும் ஒன்றுபோல நுழைவுக்கட்டணம் இருப்பது அவசியம். அல்லது, அரசு பட்ஜெட்டிலேயே இதற்கு நிதி ஒதுக்கி, பெருமளவிலான மக்களை இலவசமாகப் பார்க்க வைக்கலாம். தகவல்பலகை தனியாகக் கையேடுகள் தயாரிக்குமளவுக்கு வருமானமில்லாத கோயில்களில், வாயிலில் வைக்கப்பட்டிருக்கும் தகவல் பலகை மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இதிலும் தலபுராணங்கள் போலல்லாது, உண்மையான தகவல்கள் சரியாகப் பதியப்பட வேண்டும். மாமல்லபுரத்திலுள்ள தவறான தகவல் பலகையை ஏற்கனவே ஒருமுறை சுட்டிக்காட்டி இருக்கிறோம். தஞ்சாவூரிலுள்ள பலகை இன்னும் உச்சியில் இருப்பது 80 டன் எடையுள்ள ஒரே கல் எனக் கூறிக்கொண்டுதான் இருக்கிறது. நுழைவுக்கட்டணம் செலுத்தாமல், வெளியிலிருந்தே பார்த்துவிட்டுச் செல்லும் பயணிகளும் தகவல் அறிந்து கொள்ள உதவியாய் இருப்பது இத்தகவல் பலகைகள்தான். வருகைதரும் எல்லாப் பயணிகளும் புரிந்து கொள்ளும் வகையில், தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் இருப்பது அவசியம். அண்டை மாநில எல்லைகளுக்கருகில் இருக்கும் இடங்களில் அம்மாநிலச் சுற்றுலாத்துறையின் உதவியுடன், அந்தந்த மொழியிலும் கூடுதலாக ஒரு பலகையை வைக்கலாம். அரசு வழிகாட்டிகள் கையேடுகள் மற்றும் தகவல் பலகையிலுள்ளவை போக, மேலதிக விவரங்கள் அறிய விரும்பும் பயணிகளுக்கு உதவும் வகையில், பயிற்சியளிக்கப்பட்ட வழிகாட்டிகளை நியமிப்பது அவசியம். இதன்மூலம், வரலாறு படிப்பவர்களுக்கு வேலைவாய்ப்பும் ஏற்படும். அரசே இவ்வாறு வழிகாட்டிகளை நியமிக்கும்போது, அங்கீகாரமற்ற, அரைகுறையாகக் கற்ற தனியார் வழிகாட்டிகளின் எண்ணிக்கை குறையும். வெளிநாட்டுப் பயணிகளும் ஏமாற்றப்படுவது குறையும். மாமல்லபுரத்திலும் காஞ்சிபுரத்திலும் இத்தகைய வழிகாட்டிகள் விடும் கரடிகளுக்கு அளவே இல்லை. ஒருநாள் மாமல்லபுரம் தர்மராஜ ரதத்தின் அருகில் வெளிநாட்டுப் பயணிகளுக்கு ஒருவர் விளக்கிக் கொண்டிருந்தார். கேட்டதும் மயக்கம் வராத குறைதான். பின்னொரு சமயத்தில் அவர் கூறியவை பொய் எனத் தெரியவந்தால், சிதைவது வழிகாட்டியின் நம்பகத்தன்மை மட்டுமல்ல. இந்தியாவின் மரியாதையும் பெருமையும்தான். ஒரு பெருமையுமின்றிப் பொய் சொல்லித் திரிகிறார்கள் என்று எளிதாக முத்திரை குத்தி ஒதுக்கி விடுவார்கள். ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு, ஜப்பானிய மற்றும் சீன மொழியறிந்த வழிகாட்டிகளை வெளிநாட்டுப் பயணிகள் நிச்சயம் பயன்படுத்திக் கொள்வார்கள். அரசுக்கு வருமானமும் கூடும். ஒலிவழிகாட்டிகள் ஜப்பானில் நான் கண்டு வியந்த ஒரு விஷயம், ஒலிவழிகாட்டிகள். ஒரு CD பிளேயர் போன்ற உபகரணத்தை வாடகைக்கு எடுத்துக்கொண்டால், காதில் பொருத்திக்கொண்டு, அக்கோயிலைப் பற்றிய தகவல்களனைத்தையும் ஒலிவடிவில் கேட்கலாம். கற்பனை செய்து பாருங்கள்! மாமல்லபுரம் தர்மராஜ ரதத்தைப் பார்க்கும்போது, கையேட்டில் இருப்பனவற்றை, ஒவ்வொரு வரியாகப் படித்துப் பார்த்து, கட்டடக்கலையை விளங்கிக் கொள்வதைவிட, ஒலிவடிவில் கேட்டுக்கொண்டே அத்தளியைப் பார்த்து இரசிப்பது எளிதல்லவா? நடுநடுவில் விளம்பரங்கள் வந்தாலும் தவறில்லை. விளம்பரத்தில் வரும் வருமானத்தைக் கொண்டு இதைச் செயல்படுத்தலாம். பாடத்திட்டங்கள் கற்றுத்தராத வரலாற்றுத் தகவல்களை, இதன்மூலம் மக்களுக்குக் கொண்டு சேர்க்கலாம். இணையவழி விளம்பரங்கள் ஏற்கனவே இந்திய மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகங்கள் தனக்கென ஒரு இணையத்தளம் வைத்திருந்தாலும், அவை சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் ஈர்ப்பதாகத் தெரியவில்லை. வெளிநாட்டுப் பயணிகள் பயணத்திட்டம் வகுக்கும்போது, முதலில் அவர்கள் நுழைவது இணையத்தில்தான். இப்போது இந்தியாவிலும் இணையம் பரவலாக உபயோகிக்கப்படுகிறது. எனவே, இணையவழி விளம்பரம் என்பது மிக அவசியம். மேலும், இன்று மென்பொருள் நிறுவனங்களுக்கு வருகைதரும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களையும் இவ்விணையம் மூலம் கவரலாம். திங்கள் முதல் வெள்ளி வரை தொழில் பற்றிப் பேசியது போக, வார இறுதிகளில் கலாச்சாரச் சின்னங்களைப் பார்க்க வாடிக்கையாளர் விரும்புவர். இன்றைய நிலையில், அந்நிறுவனங்களில் பணிபுரியும் மேலாளர்கள், தங்களுக்குத் தெரிந்த இடங்களுக்கு மட்டுமே அழைத்துச் செல்கின்றனர். இதற்குப் பதிலாக, இவர்களுக்கெனவே, ஒரு ஒருங்கிணைந்த ஓரிரு நாள் பயணத்திட்டத்தைச் சுற்றுலாத்துறை வகுத்துக் கொடுத்தால், நம் கலாச்சாரப் பெருமைகள் உலகெங்கும் பரவும். சுற்றுச்சூழல் ஒவ்வொரு கோயிலிலும், அதன்மீதான நல்லெண்ணம் துளிர்விடக் காரணமாக இருப்பது சுற்றுச்சூழல்தான். இந்த ambience தரும் மனநிறைவைத்தான் இறைஅருள் என்கிறோம். திருச்சிக்கருகில், அல்லூர் என்ற இடத்திலுள்ள காட்டுக்குள் ஒரு கலைக்கோயில் இருக்கிறது. அக்கோயிலால் காட்டுக்கு அழகா அல்லது காட்டிலுள்ள மரங்களால் கோயிலுக்கு அழகா என்று வியப்பாக இருக்கும். ஆனால், அம்மரங்களே கோயிலின் அழிவுக்குக் காரணமாகி விடக்கூடாதில்லையா? சென்னை அருகிலுள்ள மணிமங்கலத்துக்குச் சென்றால், அழகான ரோஜாத்தோட்டத்திற்கு நடுவில் பள்ளி கொண்டிருக்கும் ரங்கநாதரை நாள் முழுவதும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். கட்டுப்படுத்தப்படாவிட்டால், இயற்கை மட்டும்தான் கோயிலுக்குச் சேதம் விளைவிக்கும் என்றில்லை. மனிதர்களும் கூடத்தான். இன்று பலருக்கு, மாமல்லபுரம் என்றதும், பல்லவர்கள் நினைவுக்கு வருவதில்லை. ஒருநாள், சென்னையில், என் நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தபோது, அந்தவார இறுதியில், மாமல்லபுரம் செல்ல இருப்பதாகக் கூறினேன். உடனே, கண்ணடித்துக்கொண்டே, 'யார் கூட?' என்று நக்கலாகக் கேட்டார். கிழக்குக் கடற்கரைச் சாலை, மாமல்லபுரம் என்றாலே, கல்லூரி மாணவர்கள் கட் அடித்துவிட்டு, ஜோடியாகச் சுற்றும் இடம் என்றோ, கெட்ட காரியங்களுக்குத் துணைபோகும் விடுதிகள் நிறைந்த இடம் என்றோதான் ஒரு எண்ணம் மக்களிடையே விரவிக் கிடக்கிறது. திருத்தணி, திருவண்ணாமலை கூட இதற்கு விதிவிலக்கல்ல. இப்படியிருந்தால், அங்குள்ள தங்கும்விடுதிகளில் சுற்றுலாப் பயணிகள் பயமின்றித் தங்க நினைப்பது எங்ஙணம்? இதைப்போக்க, சுற்றுலாத்துறை காவல்துறையுடன் இணைந்து நடவடிக்கை எடுத்தால்தான் முடியும். பயணிகளுக்கு, சுற்றுச்சூழல் தொடர்பான இன்னொரு இடைஞ்சல், அங்குள்ள கடைகள். தஞ்சாவூரில் தலையாட்டி பொம்மைகளையும், மாமல்லபுரத்தில் சிறு சிற்பங்களையும் விற்கும் நபர்கள் பயணிகளைப் படுத்தும் தொல்லை, விவரிக்க இயலாதது. அதுவும் வெளிநாட்டுப் பயணிகளென்றால், கேட்கவே வேண்டியதில்லை. வேண்டவே வேண்டாம் என எத்தனை முறை சொன்னாலும் விடவே மாட்டார்கள். அவ்வளவாகப் பயணிகள் இல்லாத சமயத்தில் வழிப்பறியில் ஈடுபடுவோரும் உண்டு. எனது ஜப்பானிய நண்பர்கள் இதைப்பற்றிப் பலமுறை புகார் கூறியிருக்கிறார்கள். இதைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியமான ஒன்று. இவை மட்டுமல்ல. இதுபோன்ற இன்னும் எண்ணற்ற காரணிகள் இருக்கலாம். அவற்றையெல்லாம் தயவு தாட்சண்யமின்றிக் களைந்தால்தான், மாமல்லபுரம், தஞ்சாவூர் போன்ற அதிசயங்கள் ஜப்பானிலிருந்தால் எவ்வளவு தூரம் முன்னிலைப் படுத்தப்பட்டு, உலக மக்களின் வரவேற்பைப் பெற்று, அதற்குரிய அங்கீகாரத்தைப் பெறுமோ, அந்நிலை வரும். அயல்நாட்டவரின் மனதில் நம் தனித்தன்மையும் தொன்மையும் உயர்வும் நாகரீகமும் பெருமையும் உயர்மதிப்பைப் பெறும். இந்தியாவும் முன்னேறிய நாடாக மாறும். ஜெய்ஹிந்த்!!! this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |