http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 23
இதழ் 23 [ மே 16 - ஜூன் 15, 2006 ] இந்த இதழில்.. In this Issue.. |
திருமுக்கூடல், செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் பாதையின் வலப்புறத்தே அமைந்துள்ள சிற்றூர். பறவைகளின் கீச்சொலியும் காற்றடித்தால் படபடக்கும் கிளையொலியும் தவிர வேறு துணையில்லாத ஒதுக்குப்புறத்தில் வெங்கடேசப் பெருமாள். இந்தியத் தொல்லியல் துறையினர் எப்போதும் பூட்டி வைத்திருக்கும் இந்த நினைவுச்சின்னம், தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நூற்றுக்கணக்கில் மாணவர்கள் பயிலும் கல்லூரியொன்றையும் அந்த மாணவர்களும் கோயில் அலுவலர்களும் நோய்வாய்ப்பட்டால் உடன் கவனித்து மருத்துவம் செய்ய மருத்துவமனையொன்றையும் கொண்டு, மக்கள் குழுமும் மகேசன் தலமாய் மகிழ்ந்திருந்தது. ரிக், யஜுர், வியாகரணம், ரூபாவதாரம், சிவாகமம், வைகானசம் மற்றும் மகா பாஞ்சராத்ரம் என வேதங்களையும் இலக்கணங்களையும் தர்க்க சாத்திரங்களையும் ஆகமங்களையும் முறையாகப் பயிற்றுவிக்கும ஆசிரியர்கள் இந்த மண்ணில்தான் நடமாடினர். கற்பூரங்களாய் பற்றி, கற்றதும் கேட்டதும் நெஞ்சிலேற்கும் முதல் நிலை மாணவர்களாய் இங்குப் புதிய தலைமுறைகள் உருவாக்கப்பட்டன. இலட்சம் இலட்சமாய் அள்ளிக் கொடுத்துப் பயிலும் இற்றை நாளைப் போல் இல்லாமல், அரசும் கோயிலும் அரவணைத்த படிப்பு. படித்தவருக்கும் படிப்பு சொல்லிக் கொடுத்தவருக்கும் நெல்லும் பொருளும் வழங்கப்பட்டன. இன்றைய உதவித் தொகைகளைப் போல் அல்லாது இவை தொடர்ந்தும் தொல்லையின்றியும் யாருக்கும் எதுவும் தராமலும் பரிந்துரைகள் இல்லாமலும் ஏழைகளை நோக்கியும் தகுதியுள்ளாரைக் கருதியுமே வழங்கப்பட்டன. கல்வி சொல்லித்தர ஞானநாத மண்டபமும் மாணவர் உணவருந்தச் சாலையொன்றும் திருக்கோயில் வளாகத்திலேயே இருந்தன. சனிதோறும் எண்ணை தேய்த்துக் குளிக்க வாய்ப்பாக, அது நல்ல வழக்கமென்று அந்நாளில் கருதப்பட்டதால், ஆண்டு முழுவதும் ஐம்பத்தோரு சனிக்கிழமைகளிலும் இலவசமாக இவர்களுக்கு எண்ணெய் தரப்பட்டது. படுத்துறங்கப் பாயும் வழங்கப்பட்டது. இக்கல்லூரி மாணவர்க்கோ, இங்குப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்க்கோ அல்லது பணியாளர்க்கோ உடல் நலம் குன்றினால் கவனித்து நோய் நீக்கக் கோயில் வளாகத்திலேயே வீரசோழன் மருத்துவமனை செயற்பட்டது. பொதுமருத்துவர் ஒருவரும் அறுவை மருத்துவர் ஒருவரும் நோய் நாடி, நோய் முதல் நாடி, அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பப் பணியாற்றினர். மூலிகைகள் பறித்து வரவும் மருந்துகளைக் காய்ச்சவும் விறகு கொண்டு வரவும் பணியாட்கள் இருந்தனர். நோயாளிகளை கவனித்துக் கொள்ளப் பெண் செவிலியர் இருவர் இருந்தனர். நோயாளிகளுக்கு ஒரு நாளைக்குத் தலைக்கு (ஒருவருக்கு) ஒரு நாழி உணவு அளிக்கப்பட்டது. அவர்கள் அருந்த வாய்ப்பாக நீர் பிடித்து வைக்கப்பட்டது. இரவு நேரங்களில் தொல்லைகள் தவிர்க்க விளக்கெரிக்கப்பட்டது. இவை எல்லாவற்றையும்விட வியப்பைத் தருவது மிகத் தேவையான மருந்துகளைத் தேவையான அளவு கையிருப்பில் வைத்திருந்ததும் அந்தக் கையிருப்பு குறையாமல், அவ்வப்போது குறைவதை நிறைவு செய்யப் பொருள் ஒதுக்கீட்டை முன்கூட்டியே திட்டமிட்டு அவர்கள் ஒதுக்கியிருந்ததும் தான்! இந்த நாள் இலவச மருத்துவமனைகளில் எண்ணிக்கூடப் பார்க்கமுடியாத இந்த வசதிகளை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு கோயில் மருத்துவமனை வழங்கி வந்தது. கல்வி தந்து, பக்திக்கு வடிகாலாய் நின்று, உள்நோயும் புறநோயும் நீக்கிய இந்தக் கோயில் எந்தச் சமுதாயத்திற்காகத் தன்னைத் தந்ததோ அந்தச் சமுதாயத்தாலேயே இன்று முழுவதுமாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கோயிலின் இந்த வரலாறு கூறும் கல்வெட்டுத் தொடர்கள்கூட இன்றைக்குச் சுண்ணாம்புப் பூச்சுகளுக்குள் சிதைந்து கொண்டிருக்கின்றன. விழுப்புரத்திற்குப் பக்கத்தில் சின்னஞ்சிறு கிராமமாய் வறுமைக் கோலம் பூண்டு வாடிக்கிடக்கும் எண்ணாயிரம், சரியாகத் தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் செழிப்பும் வனப்புமாய்ச் செம்மாந்திருந்த ஊர். தமிழ்நாட்டின் மதிப்பைத் தாம் எழுப்பிய இராஜராஜீசுவரத்தின் வழி விண்முட்டச் செய்தாரே முதல் இராஜராஜர், அந்த மாமனிதரின் பெயரைக் கொண்டிருந்த மகத்தான மண். ஆம், எண்ணாயிரத்தின் அன்றைய பெயர் இராஜராஜ சதுர்வேதிமங்கலம். முதல் இராஜேந்திரர் காலத்தில் இவ்வூரில் பல திருக்கோயில்கள் இருந்தன. அவற்றுள் ஒன்றுதான் இராஜராஜ விண்ணகரம். அழகிய நரசிங்கப் பெருமாள் கோயிலாய்ப் பிற்காலத்தில் பெயர் மாற்றம் பெற்ற இத்திருக்கோயில் இன்று இடிந்து சிதிலமாகி, பார்ப்போர் கண்களில் இரத்தத்தை வரவழைக்கும் நிலையில் உள்ளது. நினைக்கமுடியாத அளவிற்கு இண்ரு நிலை தாழ்ந்து போய்விட்ட இந்த இராஜராஜ விண்ணகரில் இராஜேந்திர சோழன் காலத்தில் புகழ் பெற்ற கல்லூரியொன்று இயங்கி வந்தது. அந்தக் கல்லூரியில் எத்தனை மாணவர்கள் பயின்றனர், எவ்வளவு ஆசிரியர்கள் இருந்தனர், என்னென்ன பாடங்கள் பயிற்றுவிக்கப்பட்டன என்பன பற்றியெல்லாம் விரிவான செய்திகளை, விரிசல் விட்டுப்போயிருக்கும் சுவர்களில், விக்கித்து நிற்கும் வரித் தொடர்பற்ற கல்வெட்டுகள் வேதனையோடு எடுத்துரைக்கின்றன. இருநூற்று எழுபது பட்டப் படிப்பு மாணவர்களும் எழுபது பட்டமேற்படிப்பு மாணவர்களும் பயின்ற இக்கல்லூரியில் பல்வகைப் பாடங்களையும் பயிற்றுவிக்கத் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் பன்னிருவர் இருந்தனர். இவர்கள் அனைவர்க்குமாய்ச் சேர்த்து ஆண்டுதோறும் பத்தாயிரத்து ஐந்நூற்று ஆறு கலம் நெல்லும் அறுபத்தொன்றரைக் கழஞ்சுப் பொன்னும் செலவிடப்பட்டது. இந்தக் கல்லூரியின் நிர்வாகத்தை அரசோ, பல்கலைக்கழகமோ, நகராட்சியோ மேற்கொண்டிருக்கவில்லை. ஒரு கிராம சபையே மிக ஒழுங்குடன் இதைச் செய்துவந்திருக்கிறது. அந்நாளைய ஊரவைகளின் செயல்திறமைக்கு இது ஒன்றே போதுமான சான்றாகும். ஆண்டுதோறும் நேரக்கூடிய இந்தச் செலவுகளைத் தொடர்ந்து சரிக்கட்ட வாய்ப்பாக, வருடம் தோறும் இத்தொகையை வருவாயாகத் தரவல்ல 45 வேலி நிலத்தை இராஜராஜ சதுர்வேதிமங்கலத்துச் சபையார் இக்கல்லூரியை நடத்திவந்த கோயிலுக்குக் கொடையளித்தனர். இன்றைக்கு வங்கிகளில் வைப்பு நிதி போட்டு வட்டி பெறுவது போல், இந்த நிலம் வைப்பு நிதியாகக் கொள்ளப்பட்டு இதன் விளைச்சல் கல்லூரிச் செலவுகளை ஈடுகட்டும் வட்டியாகப் பெறப்பட்டது. இது போல் திரிபுவனையில் ஒரு கல்லூரி, பார்த்திவசேகரபுரத்தில் ஒரு கல்லூரி, திருவாவடுதுறையில் மருத்துவக் கல்லூரி என்று அந்நாளைய கோயில் கல்லூரிகளின் பட்டியலைக் கல்வெட்டுகள் வளத்துக்கொண்டே போகின்றன. கல்வி வளர்த்த இந்தக் கோயில்கள் மனித நேயத்துடன் மருத்துவச் சாலைகளையும் நடத்தின. திருவரங்கத்தில் ஒய்சளர் காலத்தில் தன்வந்தரி மருத்துவமனை மிகச் சிறப்பாகச் செயல்பட்டது. இறைவனே, 'இவர் நம் மருத்துவர்' என்று பெருமைப்படுத்திய கருடவாகன பட்டர், கஷாயம் கொடுத்தே நோய்களை நலப்படுத்தியதாகக் கல்வெட்டுப் பேசுகிறது. ஏழைகளுக்கும் ஆதரவற்றவர்களுக்குமாய் நடத்தப்பட்ட ஆதுலர் சாலைகளைப் பற்றிப் பல கல்வெட்டுகள் பேசுகின்றன. நலிந்தோரை நோக்கி நேசக்கரம் நீட்டிய கோயில்களை இன்று இந்த நலிந்தவர்கள்கூடத் திருப்பிப் பார்ப்பதில்லை. தேவையானவர்களைத் தேடித் தேடிப் படிப்பறிவு ஊட்டிச் சரியான குடிமக்களாக மாற்றித் தந்த கோயில்களை மக்கள் மறந்துவிட்டனர். வரலாற்றை உருவாக்கி வரலாறாய் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தத் திருக்கோயில்கள் அழிந்துவிட்டால் தமிழக வரலாற்றுக்கு வரிவடிவங்களே இல்லாமல் போய்விடும். கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். இலக்கிய, கல்வெட்டுச் சான்றுகள் ஏறத்தாழப் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்கள் அழிந்துபோய்விட்டதை உறுதிபடுத்துகின்றன. அண்மைக்கால ஆய்வுகள் இருக்கும் கோயில்களில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவை, அதாவது, மூன்றில் ஒரு பங்கு அழிவின் பாதையில் விரைந்துகொண்டிருப்பதை எடுத்துக்காட்டுகின்றன. இழந்தவையும் இழந்துகொண்டிருப்பனவும் போதாவா? இருப்பதையும் இழந்துவிட்டு அடையாளம் தெரியாமல் போவதா? உறக்கம் கலைந்து விழிக்க வேண்டாமா? இந்த வரலாற்று வரைவுகளை அரவணைத்துக் காப்பாற்ற ஆளுக்கொரு கையேனும் உயர்த்தவேண்டியது சமுதாயக் கடமையல்லவா? இனியும் மௌனமென்றால் ஒரு சகாப்தம் அழிந்துவிடும். ஒரு சமுதாயம் மண்மூடிப்போகும். இந்த நிலவுலகில் தோன்றிய மிக உயர்ந்த பண்பாடும் நாகரிகமும் இருக்குமிடம் தெரியாமல் தேய்ந்தகலும். தடுக்கப் போகிறோமா? தூக்கம் கலையாமல் இருக்கப் போகிறோமா? this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |