http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 24

இதழ் 24 [ ஜூன் 16 - ஜூலை 15, 2006 ]
குடவாயில் பாலு சிறப்பிதழ் ]


இந்த இதழில்..
In this Issue..

ஓய்வு ஏது ஐயா, உங்கள் பணிக்கு ?
எனக்கு இந்தியா வேண்டாம்!
Perspectives On Hindu Iconography
தட்சிண கயிலாயம்
எண்ணியிருந்தது ஈடேற...
உடையார்குடி கல்வெட்டு - ஒரு மீள்பர்வை
கபிலக்கல்
Links of the Month
சங்கச் சிந்தனைகள் - 11
இதழ் எண். 24 > பயணப்பட்டோம்
எண்ணியிருந்தது ஈடேற...
ச. கமலக்கண்ணன்
ஆதித்த கரிகாலன் : என்ன! பழுவூர் இளையராணி அவர்களே! பட்டப்பகலில் பட்டு மெத்தையில் படுத்துக்கொண்டு பகல்கனவு கண்டு கொண்டிருக்கிறீர்கள்! ஆஹா! ஒரே வாக்கியத்தில் எத்தனை 'ப'!

நந்தினி : ஏன் 'பழரசம் பருகிவிட்டு' என்பதை விட்டுவிட்டீர்கள்? இன்னும் இரண்டு 'ப' சேர்ந்திருக்குமே!

ஆ.க : உன் அளவுக்கு என்னால் வார்த்தை வித்தை காட்டமுடியுமா? வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்றுதான் ஆதித்த கரிகாலனுக்குப் பேசத் தெரியும் என்பது பொன்னியின் செல்வன் படித்த அனைவருக்கும் தெரிந்த விஷயம்தானே!

நந்தினி : இன்னும் தங்களுக்கு நான் பழுவூர் இளையராணிதானா? எனக்காகத் தங்கள் பிறந்த நாட்டையும், தாய்தந்தையரையும், உற்றார் உறவினரையும் துறந்துவிட்டு, கப்பல் ஏறிக் கடல் கடந்து வந்து, இந்த அற்புதமான ஜப்பான் தீவைக் கைப்பற்றிய பிறகும் பழைய நினைவு போகவில்லை போலிருக்கிறது.

ஆ.க : கோபித்துக்கொள்ளாதே கண்ணே! பழுவூரில் இருந்தாலென்ன? பாண்டிய நாட்டில் இருந்தாலென்ன? என்றும் என் இதய சிம்மாசனத்தில் நீதான் ராணி! கமலக்கண்ணன் என் அன்புத்தம்பி அருமொழி கட்டிய இராஜராஜீசுவரம் சென்று விட்டு, இன்று ஜப்பான் திரும்புகிறார். தாய்நாட்டைப் பற்றி அவர் கூறப்போகும் விஷயங்களைக் கேட்கும் ஆவல் பழைய நினைவுகளைக் கிளறி விட்டுவிட்டது.

நந்தினி : இந்தக் கையகலச் சோழநாடென்ன? இதைப்போலப் பலமடங்கு பெரிய இராஜ்யத்தையே என் வாளின் துணைகொண்டு என்னால் நிர்மாணிக்க முடியும் என்ற உங்கள் தன்னம்பிக்கையினால் ஈர்க்கப்பட்டவர். கொங்கு நாட்டில் பிறந்திருந்தாலும், சோழ நாட்டின் மேல் காதல் கொண்டு மயங்கிக் கிடப்பவர்! தமிழகம் சென்று ஒருவாரம்தானே ஆயிற்று? ஏன் அதற்குள் திரும்புகிறார்? இன்னும் ஒருவாரம் இருந்து விட்டு வருவதுதானே!

ஆ.க : அவருக்கு மட்டும் ஆசையில்லையா என்ன? பணிச்சூழல் அப்படி! இன்னும் ஆறு மாதங்கள் கழித்து இரண்டு வார விடுப்பில்கூடச் சென்றிருக்கலாம்தான். ஆனால், சரித்திர ஆர்வ வியாதிக்குச் சிகிச்சை எடுக்க வேண்டுமானால், அடிக்கடி சோழநாடு சென்று வைத்தியரைப் பார்ப்பதுதானே வழி! ஆறு மாதங்கள் புத்தக மாத்திரைகளை வைத்துக் கழித்ததே பெரிய விஷயம். அதிலும் மற்ற அனைவரும் இராஜராஜீசுவரத்தின் சிகரத்தில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தைப் பார்த்தவுடன், நோய் இன்னும் அபாய கட்டத்தை நெருங்கி விட்டது. உனக்குத் தெரியாததா? சுகதுக்கங்களை என்னைவிட, உன்னிடம்தானே அதிகம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்!

நந்தினி : உண்மைதான். ஒரு மாதத்துக்கு முன்பு, தமிழ்நாட்டுக்குச் செல்வதென முடிவெடுத்தபின், டாக்டர். கலைக்கோவனுடன் தொலைபேசியிருக்கிறார். 'இரண்டு நாட்களும் உங்களுக்காகத்தான். எங்கு போக வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அங்கு செல்லலாம்' என்று டாக்டர் கூறியதும், எத்தனை சந்தோஷப்பட்டார் தெரியுமா? அப்போது நானும் அவர் இல்லத்தில்தான் இருந்தேன். அன்று நான் தங்களை மணக்கச் சம்மதம் சொன்னபோது மகிழ்ச்சியில் எப்படிப் பூரித்துப் போனீர்களோ, அதைவிட நூறுமடங்கு அதிகம்! அன்று வெகுநேரம் அதைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தார். டாக்டர் இதைக் கிளம்பும் அன்று சொல்லியிருந்தால், விமானமே தேவைப்பட்டிருக்காது. மகிழ்ச்சியிலேயே பறந்திருப்பார்!

ஆ.க : இயல்புதானே! கலைக்கோவனின் நட்பும் வழிகாட்டலும் வரலாற்றில் ஆர்வமிருக்கும் எல்லோருக்கும் கிடைக்கக்கூடிய ஒன்றா? அப்படியே கிடைத்தாலும் பெரும்பாலான பயணங்களின்போது உடன்வருவதென்பது இயலக்கூடிய காரியமா? இளைஞர்களின் ஆர்வத்துக்காக மட்டுமே, மிகுந்த சிரமத்துக்கிடையில் மருத்துவமனைக்கு விடுமுறை அளித்துவிட்டு வருகிறார்.

நந்தினி : இதில் அவருக்கு என்ன சிரமம்? மருத்துவமனை அவருடையதுதானே! அவர் சென்றால் மருத்துவமனை திறக்கப்படும். இல்லாவிட்டால் விடுமுறை. அவ்வளவுதானே!

ஆ.க : அப்படி அல்ல நந்தினி! இரண்டு நாட்கள் வருமானம் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, தொடர்ந்து இரண்டு நாட்கள் மருத்துவமனை மூடப்பட்டிருந்தால், மூன்றாவது நாளும் விடுமுறையாக இருக்கலாம் என எண்ணி நோயாளிகள் வராமல் இருக்க வாய்ப்புண்டு. வார இறுதிகளில் குடும்பத்தினருடன் சேர்ந்து இருக்கும் சந்தோஷம் பறிக்கப்படுகிறது. இதைவிட, இவரது ஆய்வு நேரமும் படிக்கும் நேரமும் பாதிக்கப்படுகிறது. சிந்தனைத் தொடர்ச்சி விட்டுப்போவதால், தற்போது எழுதிக்கொண்டிருக்கும் கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் வெளியீடு தாமதமாகிறது.

நந்தினி : இதில் இத்தனை விஷயங்கள் இருக்கிறதா? வரலாறு.காம் குழுவினர் கொடுத்து வைத்தவர்கள்தான். இதோ அவரே வந்துவிட்டார்! வாருங்கள்! வாருங்கள்! பிறந்தநாள் வாழ்த்துக்கள்! போனவருடம் திருவலஞ்சுழியில் பத்மநாபன் வீட்டு விருந்துடன்! இந்த வருடம் தாய் ஏர்வேஸ் விமானப் பணிப்பெண்களின் பரிமாறலில் தாய்லாந்து நாட்டு உணவுடன்! வாழ்க வளமுடன்! எப்படி இருந்தது தாய்நாட்டு விஜயம்?"

கமல் : போனவருடம் இதேநாளன்று, என் பிறந்தநாளுக்காகத் தஞ்சை சென்று, இரவு பக்தர்கள் அனைவரும் சென்றுவிட்டபிறகு, அமானுஷ்யம் நிறைந்த ஆளரவமற்ற அப்பெரிய வளாகத்தில், இருட்டுக்குள் தரையில் அமர்ந்து, நிலவொளியில் விமானத்தைக் கண்டு இரசித்ததைப் போலப் பலமடங்கு பரவச அனுபவங்களை அடைந்தேன்.

ஆ.க : இப்படி 'மொட்டைத்தாசன் குட்டையில் விழுந்தான்' என்று சொன்னால் எப்படி? எந்த மொட்டைத்தாசன், எந்தக் குட்டையில், எப்படி விழுந்தான், எப்பொழுது விழுந்தான், விழுந்தவன் எழுந்தானா என முதலில் இருந்து விளக்கமாகச் சொல்லுங்கள்.

கமல் : சென்னையில் இறங்கியவுடன் முதல் சந்திப்பே பூங்குழலியுடனும் பெரியண்ணன் சிவபாதசேகரருடனும்தான். விமானநிலையத்திலிருந்து கிளம்பும்போதே, ஆறு மாதங்களில் நடந்தவற்றின் சுருக்கத்தைப் பூங்குழலி கூறிவிட்டார். ஆனால், பணிநிமித்தமாக அவர்தான் அமெரிக்கா செல்ல வேண்டியிருக்கிறது.

நந்தினி : இதனால் வரலாறு.காம் இதழுக்கு என்ன பாதிப்பு?

கமல் : பாதிப்பு என்று எதுவும் இல்லை. இணையத்தில் இது ஒரு வசதி. குறிப்பிட்ட இடத்தில் இருந்தாக வேண்டும் என்ற கட்டாயமில்லை. எங்கிருந்தாலும் பூங்குழலியின் எழுத்துப்பணி தொடரும். நான் ஜப்பான் வந்தபோதும் இதே கேள்வி கேட்கப்பட்டது. இன்னும் தொடர்ந்து கொண்டுதானே இருக்கிறது? என்னை மட்டும் நம்பியா இதழ் மலர்ந்து கொண்டிருக்கிறது?

ஆ.க : பெரியண்ணன் எப்படி இருக்கிறார்? அவருக்கு இது தேர்வு சமயமாச்சே?

நந்தினி : என்ன தேர்வு?

கமல் : அடுத்தநாள் அவருக்கு முதுமுனைவர் ஆய்வுத் தேர்வு. சோழர் வரலாற்றைத்தான் தனது விருப்பப்பாடமாகத் தேர்ந்திருக்கிறார்! அதில் அவர் தேர்ச்சி பெறாவிட்டால் யார்தான் வெற்றி பெறுவர்? அடுத்தவாரம் நடைபெறவுள்ள குழுச் சந்திப்பைப் பற்றி விளக்கிக் கொண்டிருந்தார். திருமதி.சீதாலட்சுமியும் அதற்கு முன்தினம்தான் சென்னை வந்து சேர்ந்திருந்தார்கள். இன்னும் மூன்று மாதங்கள் தமிழகத்தில்தான் அவருக்கு வாசம். கல்வெட்டுப் பயிற்சிப் பாசறை உட்பட நிறைய நல்ல செயல்களைத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

நந்தினி : அவர்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெற வாழ்த்துக்களைத் தெரிவித்து விடுங்கள். திரு.மா.ரா.அரசு அவர்களைச் சந்திக்க வேண்டும் எனச் சொல்லிக் கொண்டிருந்தீர்களே! சந்திக்க முடிந்ததா?

கமல் : சந்தித்தேன். அதுமட்டுமல்ல. ஜப்பானைப் பற்றி நான் எழுதிய மூன்று கட்டுரைகளின் அச்சுப்பிரதியையும் கொடுத்தேன். படித்துவிட்டு மிகவும் பாராட்டினார். 'உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின், வாக்கினிலே ஒளி உண்டாகும். ஏதோ எழுதவேண்டுமே என்பதற்காக எழுதாமல், உண்மையான ஆர்வம் உங்கள் எழுத்தில் தெரிகிறது' என்று வாழ்த்தினார். முன்பெல்லாம் அவர் இதுபோல் பாராட்டும்போது, அதீதமாகப் புகழ்வது போல் தோன்றும். ஆனால், டாக்டர் ஒருமுறை, 'நான் கூடச் சில சமயங்களில் ஊக்குவிப்பதற்காகப் பாராட்டுவதுண்டு. ஆனால், அரசு உண்மையில் நன்றாக இருந்தால் மட்டுமே பாராட்டுவார். போலியாகப் புகழ்வது அவருக்குப் பிடிக்காது' என்று சொன்னார். அதுமட்டுமின்றி, கல்லூரியில் அவரது மாணவர்களிடமும் வரலாறு.காம் பற்றிக் கூறிவருவதாகச் சொன்னதைக் கேட்டதும், சந்தோஷமாக இருந்தது.

ஆ.க : ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு புத்தகம் தருவாரே! இந்தமுறை என்ன கொடுத்தார்?

கமல் : அவரது முனைவர் ஆய்வான வ.உ.சி வளர்த்த தமிழ் தொடர்பான வ.உ.சியைப் பற்றிய ஒரு நூலைத் தந்தார். அதன்பின்னர் அவருடன் இரவு உணவுக்குச் சென்றோம். இரவு பதினொன்றரை மணி ஆனதையும் பொருட்படுத்தாது, தொடர்வண்டி நிலையம் வரை வந்து வழியனுப்பிவிட்டுத்தான் சென்றார்.

நந்தினி : ஓ! சென்னையிலிருந்து நேரே திருச்சிக்குத்தானா?

கமல் : சரியாய்ப்போச்சு! வீட்டில் 'டின்' கட்டி விடுவார்கள்! முதலில் கோபி சென்றுவிட்டு, நான்கைந்து நாட்கள் சமாதானப் படலம் முடிந்தபின், ஜூன் 1ம் தேதிதான் திருச்சி சென்றேன். காலை 7 மணிக்கே திருக்கோளக்குடிக்குக் கிளம்பிவிட்டோம். வழிநெடுக, உடையாளூர் ஆய்வுகள், வாணன் வந்து வழி தந்து நூல், ஆயிரம் ரூபாய்த் திட்டம், பயணக்கட்டுரையில் இடம்பெறாத ஆறுமாத அனுபவங்கள், டாக்டர் கலந்து கொண்ட கருத்தரங்குகள், லலிதாவின் சென்னைப் பயணங்கள் ஆகியவற்றைப் பற்றிப் பேசிக்கொண்டே சென்றோம்.

ஆ.க : திருக்கோளக்குடியில் பிசாசைப் பார்த்தீர்களா, இல்லையா?

கமல் : பின்னே? சென்றதே அதற்குத்தானே! பார்த்தது மட்டுமில்லை. பாச மிகுதியால் லலிதாவைத் தண்ணீருக்குள்ளும் இழுத்துக் கொண்டது.

நந்தினி : ஐயய்யோ! அப்புறம்?

கமல் : அப்புறமென்ன! கஷ்டப்பட்டு எழுந்து வந்தார். குடைவரையின் கட்டடக்கலை அமைப்பைப் பார்த்துக் கொண்டிருந்த நாங்கள் ஓடிவந்து பார்க்க, சுற்றிக்காட்ட உடன் வந்தவர், 'அதான் அதோட பேச்சுக் கொடுக்காதீங்கன்னு அப்பவே சொன்னேன்ல!' என்று திட்டிக் கொண்டிருந்தார். அடடா! இந்நேரம் கோகுல் இல்லையே என்று எண்ணிக் கொண்டிருந்தோம். பைசாசம் தொடர் வேறு கோணத்தில் போக ஆரம்பித்திருக்கும்.

ஆ.க : குடைவரை எப்படி இருந்தது? பல்லவர் குடைவரைக்கும் பாண்டியர் குடைவரைக்கும் ஏதாவது வித்தியாசம் தெரிந்ததா?

கமல் : எனக்கென்னவோ, பெரிதாக ஒன்றும் வித்தியாசம் இல்லாதது போல்தான் தோன்றியது. ஆனால், பாண்டியர் குடைவரையை நான் பார்ப்பது இதுதான் முதல்முறை. ஒருவேளை இன்னும் சிலவற்றைப் பார்த்தால் புலப்படுமோ என்னவோ! முகமண்டபத்தில் இருந்த ஒரு மேடை சற்றுக் குழப்பியது. டாக்டர் உடன் இருந்ததால், ஐயம் தெளிந்தது. குடைவரையை விட, அதன் அருகிலிருந்த நிலவறை சுவாரசியமாக இருந்தது.

நந்தினி : வேட்டைமண்டபம் போன்றதா?

கமல் : அத்தனை பெரிதெல்லாம் இல்லை. ஐந்து அல்லது ஆறு அடிகள்தான் இருக்கும். இப்போதிருக்கும் என் உருவம் உள்ளே நுழைய முடியாது. லலிதா மட்டும்தான் இறங்கினார். இங்கு டாக்டர் இன்னொரு விஷயத்தையும் நினைவு கூர்ந்தார். முதல்முறை அங்கு சென்றபோது காலஞ்சென்ற பெரியவர் குன்றக்குடி அடிகளாரும் இருந்தாராம். அந்நிலவறையினுள் இறங்க உள்ளே என்ன இருக்குமோ என அனைவருக்கும் தயக்கம். இதற்குள்ளேதான் பிசாசு ஊருணியைக் காத்த கல்வெட்டு உள்ளது. உள்ளே இருக்கும் கல்வெட்டைப் படிக்கத் தான் இறங்கத் தயார் என நளினி மேடம் கூறியதும், அனைவரும் வியந்து போனார்களாம். இறங்கிப் படித்து வந்தபின், கல்வெட்டுகளின்மேல் இருக்கும் ஆர்வத்தைக் கண்டு, 'கல்வெட்டுக் கலைச்செல்வி' என்ற பட்டத்தை அளித்தாராம்.

நந்தினி : அங்கிருந்து தஞ்சாவூருக்கோ மதுரைக்கோ சுரங்கப்பாதை செல்வதாகச் சொல்லியிருப்பார்களே!

கமல் : இங்கு மட்டுமல்ல. இதுவரை தமிழ்நாட்டில் வேறெங்குமே சுரங்கப்பாதைகள் கண்டறியப்பட்டதில்லை. இப்படித்தான் திருவெறும்பூரில் உள்ள நிலவறையைப் பார்த்துக்கொண்டிருந்தோம். அருகில் இருந்த பெரியவர் ஒருவர் சொன்னார். இங்கிருந்து தஞ்சாவூர் பெரியகோயிலுக்கு ஒரு சுரங்கப்பாதை இருந்தது. இப்பொழுது மூடிவிட்டார்கள் என்றார். உடனே அங்கிருந்த தொல்லியல்துறைக் காப்பாளருக்கு வந்ததே கோபம்! 'ஏன் சார் இல்லாததும் பொல்லாததும் கூறிக் கதைகட்டி விடுகிறீர்கள்? அப்படி இருந்தால் சந்தோஷப்படும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன்' என்றார்.

ஆ.க : ஏன் சந்தோஷப்படுவார்?

கமல் : மாதாமாதம் சம்பளம் வாங்கத் தஞ்சாவூர் செல்லும் பேருந்துக் கட்டணம் மிச்சமாயிற்றே! ஆனாலும், இங்கே சுரங்கப்பாதை இருந்திருக்க வாய்ப்பே இல்லை. குடைவரை தரையிலிருந்து சற்று உயரத்தில் அமைந்திருக்கிறது. தரையிலிருந்து ஏறி வருவதற்காகப் படிகள் அமைத்திருக்கிறார்கள். பிறகு மண்டபம் கட்டியபோது, படிக்கட்டுகளைச் சுற்றிலும் இடைவெளி விட்டுவிட்டு, மேலே பலகை போன்ற கற்களை வைத்து மூடியிருக்கிறார்கள். அது நிலவறையாயிற்று. அதன் பின்னர், வெளியிலிருந்த அரிதான சப்தமாதர் சிற்பத் தொகுதியைப் பார்த்துவிட்டு, குளிர்ச்சியான வேப்ப மரத்தடியில் அமர்ந்து இளநீர் பருகிக்கொண்டிருந்தோம். அங்கிருக்கும் கல்வெட்டுகளைப் படியெடுக்கப் பெரிய அடிகளார் உதவியதையெல்லாம் டாக்டர் நினைவு கூர்ந்தார். கல்வெட்டுப் படியெடுப்பதற்காக, அரசுத்துறை சாராத ஒருவருக்குச் சாரம் கட்டிக்கொடுக்கப்பட்டது என்றால், அது இங்கு மட்டும்தான். வரலாற்றின் முக்கியத்துவத்தை அடிகளார் உணர்ந்திருந்ததால்தான் அதுவும் சாத்தியமாயிற்று.

நந்தினி : அருகிலுள்ள குன்றின் மீதுள்ள சிவலிங்கத்தைப் பார்த்தீர்களா?

கமல் : அங்கிருந்த யாருக்கும் வழி தெரியவில்லை. டாக்டரும் இதற்குமுன் ஒரேதடவைதான் சென்றிருக்கிறார். அதிர்ஷ்டவசமாக, இளநீர் பருகி முடிப்பதற்குள் ஒரு ஊர்ப்பெரியவர் வந்து வழி தெரியும் எனக் கூறினார். மலைமேல் கல்வெட்டும் இருப்பதாகக் கூறினார். நடந்தோம், நடந்தோம், நடந்து கொண்டே இருந்தோம். ஒரு நல்ல கல்வெட்டுக்காக, காடு, மலை எல்லாம் சுற்றினோம். அருமையான சுற்றுச்சூழல். அடுத்தமுறை இயக்குனர் சுசிகணேசனின் உதவி இயக்குனர் நண்பர் அரும்பாவூர் சரவணன் 'ஏதாவது நல்ல லொகேஷன் இருந்தால் சொல்லுங்கள்' எனக்கேட்கும்போது இதைச் சொல்லலாம் என முடிவு செய்து கொண்டோம். பிறகு ஒருவழியாக, சிவலிங்கமும் கல்வெட்டும் தரிசனம் கொடுத்தன. அருகிலிருந்த கோளநாத்தையும் பார்த்தோம்.

நந்தினி : அது என்ன கோளநாத்?

கமல் : அக்குன்றின்மீது, இயற்கையாகவே ஒரு பாறை லிங்க வடிவில் இருந்தது. வடநாட்டில் இவ்வாறு பனியில் உருவாகும் லிங்கங்களைப் பத்ரிநாத், கேதார்நாத் என்பதுபோல, கோளக்குடியில் இருப்பதால், கோளநாத் என்று நாங்களே பெயர் வைத்து விட்டோம். ஏறியதைவிட, இறங்குவது எளிதாக இருந்தது. குளிர்ந்த காற்று வீச ஆரம்பித்திருந்தாலும், அடித்த வெயிலுக்கு அதெல்லாம் போதவேயில்லை. குவாலிஸில் அமர்ந்து ஏசியைப் போட்டதும்தான் ஒருவாறு சூடு தணிந்தது. சரியாக மதிய உணவு நேரத்தில் தமிழ்மடத்தை அடைந்தோம். ஏற்கனவே தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்து இருந்ததால், இயற்கை உரங்கள் மூலம் விளைவிக்கப்பட்ட காய்கறிகளுடன் மதிய உணவு தயாராக இருந்தது.

ஆ.க : குன்றக்குடி மடமா? அதை ஏன் தமிழ்மடம் என்கிறீர்கள்?

கமல் : மற்ற மடங்களைப் போல் சமஸ்கிருதத்திற்கு முக்கியத்துவம் தராமல், தமிழுக்குத்தான் இங்கே முதல்மரியாதை. அதுமட்டுமல்ல. இம்மடம் ஆன்மீகத்தைவிட, மனிதநேயத்தையே அதிகம் வலியுறுத்துகிறது. அடிகளாரின் அறையில் தந்தை பெரியார் படம் இருந்ததைக் கண்டு ஆடிப்போய்விட்டேன். தமிழகத்தின் வேறு எந்த மடத்திலாவது இப்படி இருக்குமா என்பது சந்தேகமே! பெரிய அடிகளாரின் இந்தத் துணிச்சலான முடிவைக் கண்டு வியப்பாக இருந்தது. பெரியாரும் பெரிய அடிகளாரும் நெருங்கிய நண்பர்களாம். இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களை வறட்சி மிகுந்த மாவட்டங்களாகத்தான் அரசு அறிவித்திருக்கிறது. ஆனால், இந்த மாவட்டத்தில் இருக்கும் குன்றக்குடி ஒரு செழிப்பான ஊராக இருப்பது பெரியவரின் முயற்சியால்தான். காரைக்குடி செக்ரியுடன் இணைந்து பல அறிவியல் பூர்வமான செயல்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்கள். குன்றக்குடியிலேயே வேளாண் அறிவியல் மையம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. இன்று கலைஞர் பல கோடி ரூபாய் கூட்டுறவுக் கடன்களைத் தள்ளுபடி செய்திருக்கிறார். ஆனால், இந்தியாவிலேயே குன்றக்குடி கூட்டுறவு வங்கியில் மட்டும்தான் பல வருடங்களாக, ஒரு பைசா பாக்கியில்லாமல் கடன் வசூல் ஆகியிருக்கிறது. இத்தகைய அருஞ்செயல்களைப் புரிந்த பெரியவரைப் பற்றி வரலாறு ஆய்விதழ் 4ம் தொகுதியில் டாக்டர் எழுதியுள்ளார்.

நந்தினி : பிரமிப்பாக இருக்கிறது. உன்னால் முடியும் தம்பி படத்தில் வருவது போலல்லவா இருக்கிறது! குன்றக்குடியில் வேறு என்னென்ன பார்த்தீர்கள்?

கமல் : வரிசையாக மூன்று பாண்டியர் குடைவரைகள் இருக்கின்றன. மூன்றும் மூன்றுவிதம். டாக்டர் தற்போது எழுதிவரும் 'பாண்டியர் குடைவரைகள்' நூலின் குன்றக்குடி பற்றிய கட்டுரைகளைச் சரிபார்த்தோம். மூன்றாவது குடைவரையின் கோட்டங்களிலிருந்த சிற்பங்களின்மேல் அளவுக்கதிகமாகச் சுதை பூசப்பட்டிருந்ததால், சிற்பச்சிறப்புகளும் கைகளிலிருந்த ஆயுதங்களும் சில மாறியிருந்தன. மூன்று குடைவரைகளையுமே, வெளியிலிருந்து பார்த்தால், குடைவரை என்றே சொல்ல முடியாது. குடைவரை எந்த இடத்தில் ஆரம்பிக்கிறது என்ற சுவடே தெரியாமல் அதே மாதிரியான வளைவுகளைக் கொண்ட கற்களைக் கொண்டு மண்டபத்தை இணைத்திருக்கிறார்கள்.

ஆ.க : எதற்காகக் குடைவரையை வடித்து விட்டு, அச்சுவடே தெரியாமல் மண்டபத்தையும் கட்ட வேண்டும்? மகேந்திரர் எடுத்தது போல் அப்படியே விட்டுவிட்டால் என்ன?

கமல் : பொதுவாக, குடைவரைகளின் முன்னிருக்கும் மண்டபங்கள் அந்தக் காலகட்டத்தில் கட்டப் படுபவை அல்ல. பின்னால் வரும் மன்னர்களின் கைவண்ணம். குன்றக்குடியில் இருப்பது நாயக்கர் கால மண்டபம். மகேந்திரரின் குடைவரைக்கும் முன்னால் மண்டபம் கட்டியுள்ளனர். சீயமங்கலத்தில். இரண்டாம் பாண்டியப் பேரரசு காலத்தில்.

நந்தினி : அதானே! முதலாம் பாண்டியர்களை இவர்கள் எங்கே கலைப்பணி செய்ய விட்டார்கள்! குடைவரைக்குள் புகுந்து கொலைப்பணிதானே செய்தார்கள்! குடைவரைகளைக் குடைந்ததே பெரிய விஷயம்.

ஆ.க : அது வந்து... அது எதற்கு இப்போது? குன்றின்மேல் சமணப்படுக்கைகள் இருந்திருக்குமே! பார்த்தீர்களா?

கமல் : சமணப்படுக்கை என்ன? அருகிலிருந்த பிராமிக் கல்வெட்டையே பார்த்தோம்.

நந்தினி : ஓ! பார்த்தீர்களா? படித்தீர்களோ என்று நினைத்தேன்.

கமல் : இந்த மதுரைக்காரங்களுக்கே குசும்பு கொஞ்சம் அதிகம்தான். சோழர் கல்வெட்டையே தடவித் தடவித்தான் படிக்கிறோம். இதில் பிராமி வேறயா? இந்தத் துறையில் 40 ஆண்டுகள் அனுபவம் உள்ள ஐராவதம் மகாதேவன் சொல்றதையே ஏத்துக்காம ஆளாளுக்குக் கிளப்பி விடறாங்க. இதுல நாங்க என்னத்தப் பண்ண? இன்னும் கொஞ்ச காலம் ஆகும். அதிலேயும், ஒரு பிராமிக் கல்வெட்டைத் தலைகீழாக வெட்டியிருந்தார்கள். ஏன்னு கேட்டா, 'கல்வெட்டு வாசகத்தை ஒரு துணியில் எழுதி, சிற்பியிடம் கொடுத்திருப்பார்கள். அவர் வெட்டும்போது, துணியின் பின்பக்கத்தைப் பார்த்து வெட்டியிருப்பார்' என்று நளினி மேடம் சொன்னார். சமணப்படுக்கைகள்தான் அநியாயத்துக்குச் சிறியதாக இருந்தன. இதில் ஒரு மனிதன் எப்படிப் படுத்து உறங்குவான் என்று திருச்சி வரும்வரை பேசிக்கொண்டு வந்தோம்.

ஆ.க : திரும்பவும் சோழநாட்டுக்கா? சீக்கிரம் தஞ்சாவூர் மேட்டருக்கு வாங்க!

கமல் : வர்றேன். வர்றேன். அதுக்குத்தானே இத்தனை பீடிகையும்! காலையில் வண்டியில் ஏறி உட்கார்ந்ததுமே, மனசு தவியாய்த் தவித்துக்கொண்டிருந்தது. விமானத்தில் சாரத்தை இன்னும் வைத்திருப்பார்களா, அவிழ்த்திருப்பார்களா என ஒரு போராட்டமே நடந்து கொண்டிருந்தது. இரண்டு மாதங்கள்தானே ஆயிற்று. அதற்குள் வேலை முடிந்திருக்குமா? வைத்திருப்பார்கள், எனக் கடவுள் பாதிநேரமும், இரண்டு மாதங்கள் ஆகிவிட்டனவே, இன்னுமா வேலை முடியாமல் இருக்கும்? அவிழ்த்திருப்பார்கள் என மிருகம் பாதிநேரமும், ஆட்டி வைத்துக்கொண்டிருந்தன. தமிழ்ப்பல்கலைக்கழகத்தைத் தாண்டும்போதே, வேறு எந்த விவாதத்திலும் கவனம் செல்லவில்லை. ஜன்னல் பக்கம் திரும்பி அமர்ந்து கொண்டேன். சரி, களைப்பாக இருக்கிறது. மீதியை நாளை சொல்லட்டுமா?

ஆ.க : (என்னடா இது! சரியான சமயத்தில் கழுத்தறுக்கிறான் என மனசுக்குள் எண்ணிக்கொண்டே), யாரங்கே! இவருக்குக் குவளை நிறையக் குளிர்ச்சியான பன்னீர்சோடா கொண்டு வாருங்கள். சீக்கிரம் ஆகட்டும்!

கமல் : ஆஹா! இந்த முறை பன்னீர்சோடாவைக்கூடக் குடிக்கமுடியவில்லை. அத்தனை வேலைகள்.

நந்தினி : அது சீக்கிரம் வந்துடும். நீங்க மேலே சொல்லுங்க. சாரம் இருந்ததா இல்லையா?

கமல் : வண்டி திருச்சி பைபாஸ் சாலையிலிருந்து தஞ்சாவூருக்குள் நுழைந்ததுமே, விமானம் கண்ணில் பட்டது. சாரம் இருக்கிறதா என்று தேடித்தேடிப் பார்க்கிறேன், எவ்வளவு தேடினாலும் கிடைக்கவில்லை. சரி! நமக்குக் கொடுத்து வைத்தது அவ்வளவுதான். லலிதா அனுப்பிய புகைப்படத்தைப் பார்த்துத் திருப்திப் பட்டுக்கொள்ள வேண்டியதுதான் என்று சமாதானப் படுத்திக் கொண்டேன். பிறகு கோயில் அருகிலுள்ள முனையில் வண்டி திரும்பியதும்தான், சாரம் விமானத்தின் வடக்குப்புறம் இருப்பது தெரிந்தது. அதுவும் எதுவரை இருக்கிறது எனப் பார்த்தால், சிகரம் வரை இருந்தது. உற்சாகம் தாங்கமுடியவில்லை. ஏசியையும் மீறி வியர்த்துக் கொட்டியது.

ஆ.க : அப்பாடா! உடனே கோயிலுக்குள் போய்விட்டீர்களா?

கமல் : போனோம். மதுரையிலிருந்து வாணியும், சென்னையிலிருந்து குமரவேலும் வருவதாகக் கூறியிருந்தனர். அவர்கள் வந்திருந்தால், அவர்களையும் அழைத்துக்கொண்டு, காலை உணவு முடித்துக்கொண்டு வந்துவிடலாம் என எண்ணி உள்ளே போனோம். அவர்கள் இல்லாததால், நாங்கள் மட்டும் ஹோட்டலுக்குச் சென்றுவிட்டோம்.

நந்தினி : வாணி இப்பொழுது மதுரையில் இருக்கிறார்களா? இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் முதல் ஆய்வு மாணவிதானே அவர்? குமரவேல் யார்? சென்னையில் பொன்னியின் செல்வன் நாடகத்தை நடத்தியவரா?

கமல் : அவர்கள் இருவரும்தான்! குமரவேல் டாக்டரின் உறவினரும்கூட. மூத்த அண்ணன் இளங்கோவனின் மகன். அன்று டாக்டர் சிறுவயதில் கபடி விளையாடியதை எல்லாம் சொல்லிக்கொண்டிருந்தார். அவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தால், நேரம் போவதே தெரியாது. அங்கே இன்னொரு சுவாரசியமான இளைஞரைச் சந்தித்தோம். பெயர் மாதவ வர்மா. மேல்நிலைப் பள்ளியை முடித்துவிட்டு, கல்லூரியில் நுழையக் காத்திருக்கிறார். வரலாற்றில் மிகுந்த ஈடுபாடு இருக்கிறது. ஆனால், சரியான வழிகாட்டல் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். எந்த அளவுக்கு ஆர்வம் என்றால், ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறிவரும் கல்வெட்டில் காணப்படும் தமிழ் எழுத்துருக்களை நோட்டுப்புத்தகத்தில் எழுதிப் பயிற்சி செய்து வருகிறார். பல்வேறு காலகட்ட நாணயங்களைச் சேகரித்துப் பள்ளியில் கண்காட்சியும் நடத்தி வருகிறார். இத்தணையும் எந்த அறிஞரின் துணையுமில்லாமல், சுயமாக.

நந்தினி : பெரிய விஷயம்தான். சரி, எப்பொழுது விமானத்தின்மேல் ஏறினீர்கள்?

கமல் : உள்ளே நுழைந்ததுமே நேரே, சாரத்தின்மேல் ஏறத் தொடங்கிவிட்டோம். வெயில் அதிகமாகி விட்டால், ஏறுவது கடினமாகிவிடும். ஒவ்வொரு தளமாக ஏறும்போதே சிற்பங்களையும் பார்த்து விடுங்கள் என டாக்டர் சொன்னார். ஆனால் நாங்களோ, சிகரத்தைத் தொடுவதில்தான் எல்லாரும் கவனமாக இருந்தோம். அழகான ஒரு சிற்பத்தின்மீது கொஞ்சம் சுதை பூசப்பட்டிருந்தால்கூட, உற்சாகம் சிறிது குன்றிவிடும். ஆனால், இவ்விமானத்திலிருந்த அனைத்துச் சிற்பங்களுக்கும் சுதை அபிஷேகம் செய்யப்பட்டிருந்தன. ஆகவே, ஏனாதானோவென்று பார்த்துக்கொண்டே மேலேறினோம். கிரீவத்தை அடைந்து, நந்தியின்மேல் வசதியாக அமர்ந்து கொண்டோம். சிறுவயதில் எங்கள் பள்ளியின் வரலாற்றாசிரியர் ஒருவர், பெரியகோயிலின் உச்சியில், இரண்டு பெரிய லாரிகள் ஒன்றுக்கொன்று எதிரும்புதிருமாக மோதிக்கொள்ளாமல் செல்லுமளவிற்கு நந்திகளுக்குப் பின்னால் இடமிருக்கிறது என்று சொன்னார். அவரை விமானத்தின் மீதிருந்து கீழே தள்ளி விடவேண்டும் என்று தோன்றியது. இரண்டு லாரி டிரைவர்கள் கூட ஒருவரையொருவர் கடந்து செல்லமுடியாது. சரி, ஏதோ தெரியாமல் சொல்லிவிட்டார். மன்னித்து விட்டு விடுவோம் என்று சிகரத்தின்மீது ஏற ஆரம்பித்தோம்.

ஆ.க : நந்திகூட அவ்வளவாகப் பெரியதில்லையாமே? லலிதா தனது கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.

கமல் : ஆமாம். அளவைநாடா இல்லாததால், துல்லியமாக அளக்க முடியவில்லை. நந்தியின் முதுகு என் இடுப்புயரமும், கொம்பின் முனை என் தோள்பட்டை உயரமும் இருந்தன. அதுவும் சுதையுடன். சுதையில்லாமல் இருந்தால், இன்னும் சிறியதாக இருந்திருக்கும். ஆனால், கீழே இருக்கும் சுதையில்லாத நந்தியின் முதுகே என் தோள்பட்டை உயரம் இருக்கும். ஒருவழியாகச் சிகரத்தை அடைந்தே விட்டோம். இஞ்சிசூழ் தஞ்சையின் கண்கொள்ளாக் காட்சிகளை உண்மையாகவே கண்கள் கொள்ளவில்லை. இந்தப்பக்கம் சிவகங்கைப் பூங்காவைப் பார்ப்பதா, அதைத் தாண்டிக் கோயிலிலிருந்து கூப்பிடு தொலைவிலிருக்கும் பேறு பெற்ற தஞ்சை மக்களின் குடியிருப்புகளைக் காண்பதா, இந்தப்பக்கம் அரண்மனை, சரஸ்வதிமஹால் ஆகியவற்றைப் பார்ப்பதா எனத் தவியாய்த் தவித்துக் கொண்டிருந்தோம். இவ்வளவு நேரம் விழுந்துவிடாமல் ஏறுவதிலேயே கவனம் செலுத்தினோம். கலசத்தைப் பிடித்து நின்றுகொண்டே, ஒரு பெருமூச்சுடன் டாக்டரைப் பார்த்தேன். சிகரத்தின்மீது நின்று கொண்டிருக்கிறேன் என்று நம்பவே முடியவில்லை. சில நாட்களுக்கு முன் இப்படியொரு வாய்ப்புக் கிடைக்கும் என்றே நினைத்திருக்கவில்லை என்றேன். உண்மையான ஆர்வம் இருந்தால், இறைவன் நிச்சயம் துணைநின்று நிறைவேற்றி வைப்பான் என்றார். இதன்மீது ஒருமுறை ஏறியதற்கே இவ்வளவு பெருமையாக இருக்கிறதே, இதைச் சிந்தையில் வடித்து, நிஜத்தில் நிகழ்த்திக் காட்டிய இராஜராஜருக்கு எப்படி இருந்திருக்கும்? வரலாற்றாசிரியர்கள் Rajaraja the Great என்று சொல்வது நிச்சயம் பொருத்தம்தான்.

நந்தினி : கங்கைகொண்டசோழபுரத்தில் ஏறிய போதும் இப்போதும் உங்கள் மனம் எப்படி உணர்ந்தது?

கமல் : கங்கைகொண்டசோழபுரத்தின் விமானத்தின் உச்சியைத் தொட்டது சுமார் இரண்டரை வருடங்களுக்கு முன்பு. அப்பொழுதுதான் ஆய்வுலகின் அழைப்புமணியை அழுத்தியிருந்தோம். அப்பொழுது அதன் முக்கியத்துவத்தை நாங்கள் அவ்வளவாக உணர்ந்திருக்கவில்லை. திடீரென்று வாய்ப்புக் கிடைத்து ஏறிப் பார்த்து விட்டோம். ஆனால், இராஜராஜீசுவரம் அப்படியல்ல. எத்தனைமுறை கீழிருந்து பார்த்து ஏக்கப் பெருமூச்சு விட்டு, ஒவ்வொரு தளத்திலும் என்னென்ன சிற்பங்கள் இருக்கின்றன, ஆர உறுப்புகள் எந்த வரிசையில் அமைக்கப்பட்டிருக்கின்றன என ஆராய முற்பட்டுத் தலைசுற்றிக் கீழே விழுந்து, ஏங்கித் தவித்துப் பெற்ற வாய்ப்பு. கலசத்தைக் கட்டிப்பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தபோது சுற்றுப்புறம் யாருமின்றி அமைதியாக இருக்க, உள்ளக்கடல் கொந்தளித்துக்கொண்டிருந்தது. அலைகடல் ஓய்ந்திருக்க, அகக்கடல் பொங்கியது போல. அவ்வுணர்ச்சியை விவரிக்க வார்த்தைகளே இல்லை.

ஆ.க : இப்படிச் சொல்லி நழுவிக்கொண்டால் எப்படி? ஏதாவது உதாரணம் சொல்லி விளக்கலாமே!

கமல் : இதற்கு ஈடாக என்ன உதாரணம் சொல்வீர்கள்? எனக்கு ஏதும் தோன்றவில்லை. உங்களுக்கு ஏதாவது தோன்றினால் சொல்லுங்கள். பொருந்தி வருகிறதா என்று பார்ப்போம்.

ஆ.க : வெகுகாலம் பிரிந்திருந்த காதலர் சேர்ந்தபோது அடைந்த உவகை?

கமல் : முதல்தளத்தில் ஆடற்கரணங்களைப் பார்த்தாலே அதைவிட அதிக உவகை தோன்றும்.

நந்தினி : பசியால் வாடுபவன் முன்னால் அறுசுவை உணவை நீட்டினால் அடையும் இன்பம் போல?

கமல் : சாந்தாரத்தில் உள்ள ஓவியங்களுக்கு முன் அறுசுவை உணவு எம்மாத்திரம்?

நந்தினி : நெடுநாட்களாகக் கண் இல்லாமல் அவதிப்பட்ட ஒருவன் பார்வை கிடைத்தவுடன் தனக்குக் கண்தானம் அளித்தவனைக் கண்டு மகிழ்ந்தது போல?

கமல் : நான்காம் தளத்தில் இருந்துகொண்டு கைலாயக்காட்சியைப் பார்ப்பதற்கு ஈடாகுமா?

ஆ.க : நீண்டகாலம் குழந்தைப் பேறு இல்லாமல் இருந்த ஒரு பெண்ணுக்குக் குழந்தை பிறந்தவுடன் அடையும் மகிழ்ச்சியைப் போல?

கமல் : கருவறைக்குள்ளிருந்து மேல்நோக்கிப் பார்த்தால் தெரியும் கட்டடக்கலை நேர்த்தி இம்மகிழ்ச்சியைத் தூக்கிச் சாப்பிட்டுவிடும்.

நந்தினி : நாயன்மார்களுக்கு இறைவனைக் கண்டபோது ஏற்பட்ட பூரிப்பு?

கமல் : கிரீவத்தை அடையும்போதே மனம் ஆடிய ஆனந்தக்கூத்தை விடவா?

ஆ.க : இவையனைத்தும் ஒருங்கே வாய்க்கப்பெற்றவன் அடையும் நிம்மதி?

கமல் : இருக்கலாம். இது வேண்டுமானால் அதில் ஓரிரு சதவீதங்கள் இருக்க வாய்ப்புண்டு.

நந்தினி : அடேயப்பா! அப்படியானால், இதைவிட நீங்கள் பார்த்துப் பிரமிக்கும் விஷயம் உலகில் எதுவுமே இல்லையா?

கமல் : இப்படித்தான் நாங்களும் நினைத்துக் கொண்டிருந்தோம். இசை ஆசிரியை லலிதாம்பாள் கொண்டு வந்திருந்த உணவை ரசித்து உண்டு கொண்டிருக்கையில், ஒரே நாளில் இராஜராஜர் எங்களை மகிழ்ச்சியின் முடிவற்ற எல்லைக்கு இருமுறை அழைத்துச் செல்வார் என்று நினைத்தே பார்க்கவில்லை. 'பெரிதினும் பெரிதுகேள்', 'வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு' போன்ற மொழிகள் பொய்யா என்ன? இதைவிட அதிகமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் இதே அளவு அற்புதத்தைக் கண்டு களிக்கும் வாய்ப்பு அன்று மதியமே கிடைத்தது. மதிய உணவுக்குப் பின் என்ன சார் பார்க்கலாம் என்று டாக்டரைக் கேட்டபோது, கேரளாந்தகன் திருவாயிலின்மேல் ஏறிப் பார்க்கலாம் என்றார். விமானம் கருங்கல் என்பதால் மிகப் பிரம்மாண்டமாக இருந்தது. ஆனால் கேரளாந்தகன் திருவாயில் கோபுரம் செங்கல் ஆயிற்றே! அதில் பார்ப்பதற்கு என்ன இருக்கப் போகிறது என்று எண்ணினோம். டாக்டர் சொன்னால், அதில் ஏதாவது பயனுள்ளதாக இருக்கும். சரியென்று ஏறினோம்.

ஆ.க : என்ன இருந்தது?

கமல் : என்ன இருந்ததா? எல்லாத்தையும் நானே சொல்லிக்கொண்டிருக்க முடியுமா? நீங்களே போய்ப் பாருங்களேன்!

நந்தினி : சரிதான்! எல்லோராலும் போக முடியாதுன்னுதானே கேட்கிறோம்? பார்க்க அரிதான சில இடங்களைப் பார்த்து விட்டால், உடனே தலைக்கு ஏறிக்கொள்கிறதே! விருப்பமில்லைன்னா விட்டுடுங்க!

கமல் : அட, இருங்க! இதுக்கு ஏன் கோவிச்சுக்கறீங்க? விமானத்தின் அழகையே, ஏதோ உங்களையே உதாரணம் சொல்லச்சொல்லி ஒப்பேத்திட்டேன். இதை எப்படி விளக்குறதுன்னு தெரியாமத்தானே நழுவப்பார்த்தேன்! உடனே கர்வம், அது, இதுங்கறீங்களே! அவ்வளவு பெரிய பிரம்மாண்டத்தை எடுப்பித்த இராஜராஜரை வியந்தவர்கள் யாருக்காவது கர்வம்ங்கற வார்த்தையை உச்சரிக்கத் தகுதி இருக்கா? சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன். இதன் சிக்கலான கட்டடக்கலை அமைப்பைப் பார்த்துட்டு, டாக்டரே, தன்னால் இதை விளக்க முடியாதுன்னு சொல்லிட்டார். இதிலும் சாந்தாரநாழி இருக்கு தெரியுமோ? இத்தனைநாள் விமானத்தில் மட்டும்தான் இருக்கிறதென்று நினைத்துக்கொண்டிருந்தோம். ஆனால் இங்கும் கிட்டத்தட்ட அதே அளவு சுற்றளவில் அமைந்திருக்கிறது. மேலே வருவதற்காக உட்புறமாகவே படிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. விமானத்தில், இரண்டு இணைச்சுவர்கள் மட்டும் இரண்டாம் தளம்வரை செங்குத்தாகச் சென்று, மூன்றாம் தளத்தில் ஒன்றிணைந்து, நான்காம் தளத்தைத் தாங்கி நிற்கின்றன. அதற்குமேல், ஒரே சுவராக எழும்புகிறது. ஆனால், இங்கு, ஒவ்வொரு தளத்துக்கும் ஒரு சுவர் மேல்நோக்கி எழும்பி, அந்தந்தத் தளங்களில் ஒன்றிணைந்து, அதற்கு மேலுள்ள தளத்தைத் தாங்குகின்றன. ஆகவே, நிறையக் கூம்பு வடிவங்களைக் காணமுடியும். இப்படி நான்கு புறமும் திரும்பிய பக்கமெல்லாம் கூம்புகள் தென்படுவதாலேயே கட்டுமானத்தைப் புரிந்துகொள்வது சிக்கலாகிவிடுகிறது.

ஆ.க : கோபுரத்தின் சாந்தாரத்திலிருந்து விமானம் இதுவரை கண்டிராத ஒரு கோணத்தில் வெளிப்பட்டிருக்குமே!

கமல் : ஆமாம். கோபுரத்தின் உச்சி மீது ஏறிநின்று, நேருக்கு நேர் விமானத்தைப் படம் பிடிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாளைய கனவு. ஆனால், சாரம் கட்டினாலன்றி, உச்சிக்குச் செல்ல வழியே இல்லை. கோபுரத்தின் மேற்குப்புறச் சாந்தாரத்திலிருந்து விமானத்தை நோக்கினால், இராஜராஜன் திருவாயில் பாதி மறைத்துக் கொள்கிறது. அப்படியும், விமானத்தின் அழகு சிறிதும் குன்றவில்லை. பாதி ஆடையும், மீதி வெட்கமும் மூடியுள்ள ஒரு பெண்ணின் அழகிய முகத்தைப் போலிருந்தது. ஆனால், சாந்தாரத்தின் தென்மேற்கு மூலையில் இருந்து பார்த்தால், கிட்டத்தட்ட முழுமையாகத் தெரிகிறது. அங்கே நின்று அனைவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டு, சிந்தனையை அங்கேயே விட்டுவிட்டுக் கீழிறங்கினோம்.

நந்தினி : மறக்க முடியாத அனுபவம்தான்.

கமல் : அடுத்தநாள் முழுக்க இதைத்தவிர வேறொன்றுமே நினைவிலில்லை. எத்தனை மணிக்கு வீட்டிற்கு வந்தோம், எப்பொழுது தூங்கினோம், எப்பொழுது சென்னை கிளம்பினோம் என எல்லாமே மணிரத்னம் படத்தில் வருவதுபோல் மங்கலாகவே தெரிந்தது.
அன்று கோபியிலிருந்து டாக்டருக்கு போன் செய்தபொழுது, நேற்றைய அனுபவம் எப்படி இருந்தது எனக்கேட்டார். அடுத்தமுறை வரும்வரை தாங்கும் எனக்கூறினேன். ஆனால், இப்பொழுது இதைச் சொல்லும்பொழுதே, மீண்டும் ஒருமுறை செல்லவேண்டும் எனத் தோன்றுகிறது. என்ன நடக்கிறதென்று பார்ப்போம்.

ஆ.க : சென்னை வந்தபிறகாவது தெளிந்ததா இல்லையா?

கமல் : ம். ஓரளவுக்கு. சென்னையில் சில நண்பர்களைப் பார்த்துவிட்டு, மாலை தி.நகரில் பொ.செ குழு நண்பர்களைச் சந்திக்கத் தயாரானோம். தொல்லியல் அறிஞர்கள் திரு.சத்தியமூர்த்தி, திரு.இராமச்சந்திரன், திரு.தசரதன் ஆகியோரைச் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது. பொ.செ குழு நண்பர்கள் கல்வெட்டு வாசிக்கக் கற்றுக்கொள்ளும் முயற்சிக்கு வாழ்த்துக்கூறி, விடைபெற்றேன். மீண்டும் ஊருக்குச் செல்லும் வரை இந்நினைவுகள்தான் துணை. போய் வருகிறேன்.

நந்தினி : அலுவலகத்திலும் இதே நினைவுடன் இருந்துவிட்டு, மேலதிகாரியிடம் திட்டு வாங்காதீர்கள்! போய் வாருங்கள்.

கமல் : வணக்கம்.
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.