http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 24
இதழ் 24 [ ஜூன் 16 - ஜூலை 15, 2006 ] குடவாயில் பாலு சிறப்பிதழ் ] இந்த இதழில்.. In this Issue.. |
வாசகர்களுக்கு வணக்கம்.
தமிழகத்தின் மூத்த வரலாற்றறிஞரும் தஞ்சை சரஸ்வதி மகால் நூல் நிலையத்தின் இயக்குனருமான டாக்டர் குடவாயில் பாலசுப்பிரமணியனின் ஆய்வுப் பணியை கெளரவிக்கும் சிறப்பிதழாக வரலாறு டாட் காமின் இந்த இதழ் மலர்கிறது. தமிழகத்தின் நாளிதழ்கள் மற்றும் வார இதழ்களைப் படிப்போர் இவ்வறிஞர் எழுதிய சரித்திரக் கட்டுரைகளை நிச்சயம் ஒரு முறையேனும் வாசித்திருப்பார்கள். தஞ்சை மற்றும் அதனைத் சார்ந்த சோழர் பிரதேசத்தின் கோயில்கள் பற்றியும் சரித்திரப் புகழ்பெற்ற இடங்கள் பற்றியும் மண்ணில் வாழ்ந்து மறைந்துபோன மன்னர்கள் பற்றியும் இருநூற்றுக்கும் மேலான ஆய்வுக்கட்டுரைகளையும் பத்துக்கும் மேற்பட்ட வரலாற்றாய்வு நூல்களையும் தமிழகத்துக்கு ஈந்து பெருமை கண்டவர் இவ்வறிஞர். நமது குழுவுடன் குடவாயில் அவர்கள் குடவாயிலின் தலையாய ஆய்வுப் பகுப்புகளாக கீழ்க்கண்டவற்றைக் குறிப்பிடலாம். * திராவிட கோபுரக் கலை மற்றும் அவை சார்ந்த ஆலய அமைப்பு பற்றிய ஆய்வு - இதுவே அவரது முனைவர் பட்ட ஆய்வேடாகவும் அமைந்தது. இந்த ஆய்வேடு தற்போது "கோபுரக் கலை மரபு" எனும் புத்தகமாக வெளியாகியுள்ளது. * தேவாரம் மற்றும் மூவர் முதலிகள் பற்றிய ஆய்வு - தேவாரம் என்னும் தொகுப்பாகக் குறிக்கப்படும் பாடல்கள், சமுதாயத்தில் அவைபெற்ற சிறப்பிடம், மூவர் முதலிகள் என்று குறிப்பிடப்படும் அப்பர், திருஞானசம்மந்தர் மற்றும் சுந்தரர் முதலியவர் தெய்வ நிலை தந்து வழிபடப்பட்டமை, தேவாரப் பாடல்களை உருவக்காட்சிகளாக விளக்கும் சிற்ப - ஓவிய அமைப்புக்கள் என்று பரந்துபட்டு விரியும் ஆய்வு. "தேவார மாண்பும் மூவர் முதலிகளும்" என்னும் புதிய நூலாக வடிவம் பெற்றுக்கொண்டிருக்கிறது * நந்திபுரம் பற்றிய ஆய்வு - பல்லவர்களின் பிற்காலக் கோநகரமாகக் குறிப்பிடப்படும் "நந்திபுரம்" என்னும் தலைநகரத்தைப் பற்றிய ஆய்வு. குடவாயிலுக்குப் பெருமை சேர்த்த இந்த ஆய்வு "நந்திபுரம்" எனும் தலைப்பில் இன்டாக் நிறுவனத்தாரால் பதிப்பிக்கப்பட்டுள்ளது * சோழமன்னர்கள் பற்றிய ஆய்வு - பல்வேறு கட்டுரைகளாக வெளிவந்துள்ள பரந்த தொகுப்பு. "சோழ வரலாற்று நாயகர்களின் சிற்பங்களும் ஓவியங்களும்" என்னும் முழுமையான புத்தகமும் இவரால் எழுதப்பெற்றது. * நாயக்க மன்னர்கள் பற்றிய ஆய்வு - தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்களின் சரித்திரம் பற்றிய முழு ஆய்வு. "தஞ்சை நாயக்க மன்னர்களின் வரலாறு" எனும் தலைப்பில் சரஸ்வதி மகால் நூல்நிலையத்தாரால் பதிப்பிக்கப்பட்டுள்ளது * சோழ தேசத்தின் முக்கிய நகரங்கள் பற்றிய ஆய்வு - "தஞ்சாவூர்" மற்றும் "திருவாரூர்" புத்தகங்கள் இவருடைய பெயர் சொல்லி நிற்கும் ஆய்வுகள் * பெரிய கோயிலின் கட்டுமானம், சிற்பம் மற்றும் ஆகம அமைதி பற்றிய ஆய்வு - "தஞ்சாவூர்" மற்றும் "இராஜராஜேஸ்வரம்" முதலிய புத்தகங்களில் வெளிவந்துள்ளது இவர் எழுதி பதிப்பில் வெளிவந்துள்ள ஒருசில நூல்களின் வரிசை பின்வருமாறு * கருணாகரத் தொண்டைமான் * நந்திபுரம் * சோழ வரலாற்று நாயகர்களின் சிற்பங்களும் ஓவியங்களும் * தஞ்சாவூர் * இராஜராஜேஸ்வரம் - கையேடு * திருவாரூர் * கபிலக் கல் - கட்டுரைகள் * குடமுழா * கோனேரிராயன் * கோபுரக் கலை மரபு * தேவார மாண்பும் மூவர் முதலிகள் வழிபாடும் - அச்சில் இதனைத்தவிரவும் சரஸ்வதி மகாலின் வெளியீடாக வந்திருக்கும் பெரும்பாலான புத்தகங்களிலும் தமிழகத்தின் பல்வேறு ஆலய மலர்கள், குடமுழுக்கு மலர்கள் மற்றும் திருக்கோயில் கையேடுகளிலும் இவ்வறிஞரின் கைவண்ணத்தைக் காணலாம். குடவாயில் அவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பும் அவருடைய வழிகாட்டலில் ஒருசில சரித்திரப் புகழ்பெற்ற இடங்களை சுற்றிப் பார்த்ததும் நமது பொன்னியின் செல்வன் குழுவிற்குக் கிடைத்த பேறு. "நிறைகுடம் தளும்பாது" என்பார்கள். அதற்கு முன்னுதாரணம் திரு குடவாயில். தன்னுடைய அத்தனை மேதமையையும் ஒரு சிநேகிதமான புன்னகையில் மறைத்துக்கொண்டு "வாங்க சார் !" என்று வாய் நிறைய அழைக்கும்போதே மனது குழைந்துவிடும். "பெரிய ஆய்வறிஞர்", "முத்த ஆய்வாளர்" என்னும் பயமுறுத்தும் பட்டத்தையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு "சிநேகிதமான பண்பாளர்" எனும் எண்ணம் மேலோங்கிவிடும். சிறிது காலம் பழகினாலோ "அடடா ! இத்தனை இனிய மனிதரா இவர் !" எனும் ஆச்சரியம் மட்டுமே மிஞ்சும். இவர் நமது குழுவிற்கு அறிமுகமாகக் காரணமாக இருந்தவர் நமது பெரியண்ணன் சுந்தர் பரத்வாஜ் அவர்கள். அவருக்கு நன்றி சொல்லி மாளாது என்பதால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறோம். குடவாயில் அவர்களை முதன் முதலில் சந்தித்தது இன்னும் பசுமரத்தாணியாக நெஞ்சில் நிலைகொண்டுள்ளது. அதனால்தான் ஆண்டுகள் இரண்டு கழிந்துவிட்ட நிலையிலும் அந்த முதல் சந்திப்பை இப்போது கட்டுரையாக வடிக்க முடிந்தது (இக்கட்டுரை இந்த இதழில் பயணப்பட்டோம் பகுதியில் வெளியாகியுள்ளது). தொடர்ந்து பல சந்திப்புக்கள் - தொலைபேச்சுக்கள் - பயணங்கள் - என்று இந்த இரண்டாண்டு காலத்தில் நமது குழுவிற்கும் குடவாயில் அவர்களுக்குமான உறவு பலப்பட்டு இறுகி அனுதினம் வளர்ந்த வண்ணம் உள்ளது. சென்ற ஆண்டு (2005) ஒரு ஜனவரி சனிக்கிழமை குடவாயில் அவர்களுடன் கும்பபோணம் சாரங்கபாணி கோயில் / இராமசுவாமி கோயில் - பழையாறை வடதளி மற்றும் பட்டிசுவரம் - இராமநாதன் கோயில் என்றழைக்கப்படும் பஞ்சவன் மாதேவி பள்ளிப்படை - வாகீஸ்வரர் அருள்புரியும் திருக்கண்டியூர் என்று சகட்டு மேனிக்கு நாள் முழுவதும் சுற்றினோம். உச்சக்கட்டமாக இந்நாளில் வீரசிங்கம்பேட்டை மற்றும் இரட்டை கோயில் என்றழைக்கப்படும் அந்நாளைய கிழார் கூற்றத்து நந்திபுர ஆயிரத்தளியை (சகஸ்ரலிங்கேஸ்வரம்) மாலையில் அவருடன் பார்வையிட்டது வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம். ஒவ்வொரு இடத்திற்கும் துள்ளிக்கொண்டே அழைத்துச் சென்றார் அந்த அறுபது வயது இளைஞர். தொடர்ந்து நாள்முழுக்க அவரைக் கேள்விகளால் வாட்டி வதைத்தும் சிறிதும் முகம்கோணாமல் கடைசிவரை பதில்சொன்ன அந்தப் பெருந்தகை அன்று எங்கள் மதிப்பில் இமயமாக உயர்ந்தார். சந்திரன் முளைத்துவிட்ட அந்த முன்னிரவு வேளையில் வீரசிங்கம் பேட்டையில் வையிரங்காய்ச்சித் தோப்பு (!) என்னும் காரணப் பெயர் புண்ட தென்னந்தோப்பில் மாலைக் குருவிகளின் கீச்சொலிகளுக்கு மத்தியில் நந்திபுர முற்றுகையை விரிவாக அவர் விளக்கியது இன்று நிகழ்ந்ததுபோல் நெஞ்சில் நிழலாடுகிறது. அன்றிரவு அங்கே அமர்ந்திருந்த பொன்னியின் செல்வன் நண்பர்கள் அனைவரும் தாங்கள் நந்திவர்ம பல்லவ மல்லன் ஸ்தாபித்த பல்லவ சாம்ராஜ்ஜியத்தின் பிரஜைகளாகவும் உதயேந்திரம் செப்பேடுகள் கொண்டு புகழ்பெற்ற ஈடு இணையற்ற வீரத் தளபதி உதய சந்திரனின் படைவீரர்களாகவும் சுந்தரச்சோழர் ஆண்ட சோழநாட்டின் குடிமக்களாகவும் ஒருசேர உணர்ந்தார்கள். ஏறக்குறைய ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவர் விவரித்த சரித்தரம் நம்மை ஆயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னால் இழுத்துச்சென்று கட்டிப்போட்டு விட்டது. சொற்பொழிவு முடிந்தபின் ஒரு சில நண்பர்கள் உணர்ச்சி வசப்பட்டு வீரசிங்கம்பேட்டையிலிருந்து கும்பகோணம் திரும்புவதற்கு இந்தக் கணம் புரவிகள் கொண்டுவந்தால்தான் ஆயிற்று என்று பிடிவாதமே பிடிக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் ! பல வகைகளில் சமாதானம் சொல்லியும் கேட்காமல் அடம் பிடித்துக் கொண்டிருந்தவர்களை கடைசியாக கும்பகோணம் "மாமி மெஸ்"ஸில் இரவு உணவு என்று சொல்லித்தான் காரிலேயே ஏற்ற முடிந்தது. இந்த மாதம் தனது சரஸ்வதி மகால் இயக்குனர் பணியிலிருந்து குடவாயில் ஓய்வு பெறுவதாகக் கேள்விப்பட்டு அவருடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது தன்னுடைய பல்வேறு புதிய ஆய்வுகள் பற்றி அடுக்கிக்கொண்டே போனார். ஓய்வு அவரது தினசரி அலுவலகப் பணிக்கு மட்டும்தான் என்று தோன்றுகிறது. அவருடைய தமிழாய்வுக்கு.... வரலாற்றாய்வுக்கு..... வழிகாட்டலுக்கு..... ஏது ஓய்வு ? உற்சாகம் மிகுந்த இந்த இனிய அறிஞரை இந்தச் சிறப்பிதழ் மூலம் வரலாறு டாட் காம் வாழ்த்தி / வணங்கி மகிழ்கிறது. ஐயா, உங்களைப் போன்றோரின் ஆசிகள்தான் எங்களை இயக்கும் எரிபொருள். மிக்க அன்புடன் ஆசிரியர் குழுthis is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |