http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[178 Issues]
[1762 Articles]
Home About US Temples Facebook
Issue No. 24

இதழ் 24 [ ஜூன் 16 - ஜூலை 15, 2006 ]
குடவாயில் பாலு சிறப்பிதழ் ]


இந்த இதழில்..
In this Issue..

ஓய்வு ஏது ஐயா, உங்கள் பணிக்கு ?
எனக்கு இந்தியா வேண்டாம்!
Perspectives On Hindu Iconography
தட்சிண கயிலாயம்
எண்ணியிருந்தது ஈடேற...
உடையார்குடி கல்வெட்டு - ஒரு மீள்பர்வை
கபிலக்கல்
Links of the Month
சங்கச் சிந்தனைகள் - 11
இதழ் எண். 24 > அறிஞர் பக்கம்
உடையார்குடி கல்வெட்டு - ஒரு மீள்பர்வை
குடவாயில் பாலசுப்பிரமணியன்
தமிழக வரலாற்றில் குறிப்பாக சோழர் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக விளங்குவது உடையார்குடி கல்வெட்டாகும். தற்போதைய கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடியின் ஒரு பகுதியாக விளங்கும் உடையார்குடி அனந்தீசுவரம் சிவாலயத்தில் கருவறையின் மேற்குப்புற அதிட்டானத்தில் இச்சாசனம் இடம்பெற்றுத் திகழ்கின்றது. கோஇராஜகேசரிவர்மரின் (முதலாம் இராஜராஜ சோழனின்) இரண்டாம் ஆட்சியாண்டு குறிக்கப் பெற்றுள்ள இச்சாசனத்தினை எபிக்கிராபிகா இண்டிகா தொகுதி 21இல் எண் 27, கட்டுரையாகத் தமிழ் ஒலிபெயர்ப்போடு கூடிய (ஆங்கிலத்தில் அமைந்த) விளக்க உரையுடன் வெளியிட்ட வரலாற்றுப் பேரறிஞர் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியார் தம் "சோழர் வரலாறு" (The Cholas) எனும் நூலில் மேற்குறித்த உடையார்குடி சாசனத்தின் அடிப்படையில் ஆதித்த கரிகாலன் கொலை பற்றிய செய்திகளை விவரித்துள்ளார். அப்பகுதியில் சுந்தரச் சோழனின் தலைமகனும் மாமன்னன் முதலாம் இராஜராஜ சோழனின் அண்ணனுமாகிய ஆதித்த கரிகாலனின் கொலை நிகழ்வின் பின்புலத்தில் மதுராந்தக உத்தம சோழனின் துரோகம் இருந்திருக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளார். இக்கருத்தே மதுராந்தக உத்தமச் சோழன் மீது ஏற்றப்பெற்ற களங்கமாக அமைந்தது.

வரலாற்று அறிஞர்களின் கருத்துக்கள்
பிற்காலச் சோழர் வரலாறு எனும் நூலினை எழுதிய தி.வை.சதாசிவ பண்டாரத்தார் பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியாரின் கருத்துக்கு மாறுபட்டு ஆதித்த கரிகாலன் கொலை நிகழ்வில் உத்தமச் சோழன் பங்களிப்பு இருந்திருக்க இயலாதென்பதை வலியுறுத்துகிறார். இருப்பினும் சாஸ்திரியாரின் கருத்துக்களை மறுத்துரைப்பதற்கான தெளிவான சான்றுகள் எதனையும் அவர் முன்வைக்கவில்லை. 1971ம் ஆம் ஆண்டு வெளிவந்த சென்னை விவாகானந்தா கல்லூரி மலரில் இராஜராஜ சோழன் பற்றிய கட்டுரை ஒன்றினை வரைந்த ஆர்.வி.சீனிவாசன் என்பார் ஆதித்த கரிகாலன் கொலையின் பின்புலத்தில் செயல்பட்டவர்கள் அருண்மொழியும் (இராஜராஜனும்) அவனது தமக்கை குந்தவையும்தான் என்பதை வலியுறுத்துவதோடு பல கேள்விக் கணைகளையும் எழுப்பி தன் கருத்துக்களை மறுப்பவர்களுக்கு அறைகூவலும் விடுத்துள்ளார். சீனிவாசன் அவர்களின் கருத்துக்களை வன்மையாக மறுக்கும் டாக்டர் க.த.திருநாவுக்கரசு அவர்கள் அருண்மொழி ஆய்வுத்தொகுதி எனும் கட்டுரைத் தொகுப்பு நூலொன்றில் உத்தம சோழனுக்கு எந்த விதத்திலும் இக்கொலையில் தொடர்பு இல்லை என்றும் கொலையாளிகளைக் கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்பட்டு இராஜராஜனின் இரண்டாம் ஆட்சியாண்டில்தான் கண்டுபிடிக்க இயன்றது என்றும் பிராமணர்களாகிய கொலையாளிகளை மனுதரும சாத்திரத்தின் அடிப்படையில் அரசன் தண்டனை கொடுத்திருப்பானேயன்றி கொலை தண்டனை அளித்திருக்க இயலாது என்றும் தன் கருத்துக்களை பல சான்றுகளின் அடிப்படையில் கூறியுள்ளார். இவ்வறிஞர்களைத் தவிர மேலும் பல வரலாற்று ஆய்வாளர்களும் ஆர்வலர்களும் மதுராந்தக உத்தம சோழனைக் குற்றவாளி என்றும் இல்லை என்றும் தங்கள் தங்கள் கோணங்களில் எடுத்துரைத்துள்ளனர். ஆனால் இவர்கள் யாரும் தெளிந்த சான்றுகளோடு தங்கள் கருத்துக்களை மெய்ப்பிக்க இயலவில்லை.

புதின ஆசிரியர்கள் பார்வையில்...
"பொன்னியின் செல்வன்" என்ற வரலாற்றுப் புதினத்தால் தமிழகத்தில் தணியாத ஒரு வரலாற்று தாகத்தை ஏற்படுத்தித அமரரான கல்கி (இரா.கிருஷ்ணமூர்த்தி) அவர்கள் ஆதித்த கரிகாலன் கொலை நிகழ்வை மையமாக அமைத்து புதினத்தைப் படைத்துக் காட்டியதோடு அதில் கொலையின் பின்புலத்தில் செயல்பட்டவர்கள் என ஊகிக்கத் தக்கவர்களாக வரலாற்றுப் பாத்திரங்கள் சிலரையும் கற்பனைப் பாத்திரங்கள் சிலரையும் உலவவிட்டு உண்மையான குற்றவாளி யார் என்பதை வாசகர்களே ஊகித்து அறிவார்களாக என்று தன் முடிவையும் கூறிச் சென்றுள்ளார். எழுத்துச் சித்தர் பாலகுமாரன் அவர்கள் ஆதித்த கரிகாலன் கொலையினையே முடிவாகக் கொண்டு கடிகை என்ற பெயரில் புதினமொன்றினைப் படைத்த போதும் கொலையாளிகளான பிராமணர்களுக்கு பின்புலத்தில் செயல்பட்டவன் மதுராந்தக உத்தமச் சோழன்தான் என்பதை தன் எழுத்தின் வன்மையினால் நிறுவியுள்ளார். புதினங்கள் வரலாற்று ஆய்வுக்குத் துணைநிற்கமாட்டாவெனினும் ஆதித்த கரிகாலன் கொலையைப் பொறுத்தவரை பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியார் கண்ட முடிவு புதினப் படைப்பாளர்களுக்கு அடித்தளமாய் அமைந்தது என்பது மட்டுமல்லாமல் மதுராந்தக உத்தமச் சோழனை குற்றவாளியாகவே முன்னிருத்தினர் என்பதுதான் உண்மை.

உடையார்குடிக் கல்வெட்டு
ஆதித்த கரிகாலன் கொலைபற்றிக் குறிப்பிடும் வரலாற்றுச் சாசனமான உடையார்குடி கல்வெட்டின் வாசகத்தினை இனி காண்போம்.

"ஸ்வஸ்தி ஸ்ரீ கோ ராஜகேசரிவர்மர்க்கு யாண்டு 2 ஆவது வடகரை பிரமதேயம் ஸ்ரீ
வீரநாராயண சதுர்வேதி மங்கலத்து பெருங்குறி பெருமக்களுக்கு சக்கரவர்த்தி ஸ்ரீமுகம் பாண்டியனைத் தலைகொண்ட கரிகால சோழனைக் கொன்று துரோகிகளான சோமன்............................................... தம்பி
ரவிதாசனான பஞ்சவன் பிரம்மாதிராஜனும் இவன்றம்பி பரமேஸ்வரன் ஆன இருமுடிச் சோழ பிரம்மாதிராஜனும் இவர்கள் உடப்பிறந்த மலையனூரானும் இவர்கள் தம்பிமாரும் இவர்கள் மக்களிடும் இவர் பிரமாணிமார் பெற்றாளும் இ........................ராமத்தம்
பேரப்பன் மாரிடும் இவர்கள் மக்களிடம் இவர்களுக்குப் பிள்ளை குடுத்த மாமன்மாரிடும் தாயோடுடப் பிறந்த மாமன் மாமன்மாரிடும் இவர்கள் உடபிறந்த பெண்களை வேட்டாரினவும் இவர்கள் மக்களை வேட்டாரினவும் ஆக இவ்வனைவர் (முடமை)யும் நம் ஆணைக்குரியவாறு கொட்டயூர் பிரம்ம ஸ்ரீராஜனும் புள்ளமங்கலத்து சந்திரசேகர பட்டனையும் பெறத்தந்தோம். தாங்களும் இவர்கள் கண்காணியோடும் இவர்கள் சொன்னவாறு நம் ஆணைக்குரியவாறு குடியோடு குடிபெறும் விலைக்கு விற்றுத்தலத்திடுக இவை குருகாடிக்கிழான் எழுத்து என்று இப்பரிசுவரஇ
ஸ்ரீமுகத்தின் மேற்பட்ட மலையனூரான் ஆன பாப்பனச்சேரி ரேவதாச கிரமவித்தனும் இவன் மகனும் இவன்றாய் பெரிய நங்கைச்சாணியும் இம்மூவரிதும் ஆன நிலம் ஸ்ரீ வீரநாராயன சதுர்வேதி மங்கலத்து மிப்பிடாகை தேவமங்கலம் ஆன பட்டில நிலம் ஸ்ரீவீரநாராயண சதுர்வேதி மங்கலத்து சபையார் பக்கல் வெண்ணையூர் நாட்டு வெண்ணையூருடையான் நக்கன் அரவணையானான பல்லவ முத்தரைய மகன் பரதனான வியாழகஜமல்லப் பல்லவரையனேன் இந்நிலம் பழம்படி இரண்டே முக்காலே ஒருமாவும் அகமனை ஆறும் ஆக இந்நிலமும் இம்மனையும் நூற்றொருபத்தி
ருகழஞ்சு பொன் குடுத்து விலைகொண் டிவ்வூர் திருவனந்தீஸ்வரத்து பட்டாரகர் கோயிலிலே இவ்வாட்டை மேஷநாயற்று நாயற்றுக்கிழமை பெற்ற புரட்டாசி ஞான்று சந்திராதித்தவர் ஆழ்வார் கோயில் முன்பு மூவாயிரத்தரு நூற்றுவனான நிலையம்பலத்து தண்ணீர் அட்டும் பிராமணன் ஒருவனுக்கு நிச
தம் படி நாழி நெல்லும் ஆட்டைவட்டம் ஒரு காகம் நிசதம் பதினைவர் பிராமணர் உண்பதற்கு ஆக பதினாறு இவறுள் ஐவர் சிவயோகிகள் உண்ணவும் வைத்தேன்
அரையன் பரதன் ஆன வியாழகஜமல்ல பல்லவரையனேன் இதர்மம் ரஷிகின்ற மகாசபையார் ஸ்ரீபாதங்கள் என் தலை மேலன"

(தொடரும்...)
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.