http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 24
இதழ் 24 [ ஜூன் 16 - ஜூலை 15, 2006 ] குடவாயில் பாலு சிறப்பிதழ் ] இந்த இதழில்.. In this Issue.. |
அன்புள்ள வாருணி, 11.6.2006 கல்கி இதழ் பார்த்திருப்பாய் என்று நம்புகிறேன். நம் மதிப்பிற்குரிய திரு. வை. கணபதி ஸ்தபதியை நேர்முகம் கண்டு திரு. மருதன் கட்டுரை வெளியிட்டுள்ளார். அதில்தான் நம் பெருந்தச்சர் (ஸ்தபதி), 'வேண்டாம், நான் எங்காவது வெளிநாட்டுக்குப் போயிடறேன் சார், எனக்கு இந்தியா வேண்டாம். இந்தியா ஒரு வெளிநாடு மாதிரிதான். நான் இங்கே அந்நியன்தான்.' என்று சினப்பட்டிருக்கிறார். அவர் பேசப்பேச அவரது ஆதங்கத்துக்குப் பின்னாலிருந்த வலியைப் புரிந்துகொள்ள முடிந்ததாகத் திரு. மருதன் கூறுகிறார். திரு. கணபதியின் வலிதான் என்ன?
1. 'இந்தத் தலைமுறைக்குச் சிற்பக்கலையைத் தெரிஞ்சுக்கணும்னு துளி ஆர்வமாவது இருக்கா?' 2. 'அற்புதமா பல வி?யங்களைச் செய்ய வேண்டிய இளைய தலைமுறை நம்மோட கலாசாரத்தை, பெருமையை, பாரம்பரியத்தை உதாசீனப்படுத்தறது வேதனையா இருக்கு.' 3. 'ஒவ்வொரு சிற்பத்துக்குப் பின்னாலும், ஒவ்வொரு கட்டடத்துக்குப் பின்னாலும் ஆச்சரியமான, அதிசயமான, அற்புதமான கணக்குகள் இருக்கு. ஸ்தபதிகளான எங்களுக்குப் பல நூற்றாண்டுக்காலப் பாரம்பரியம் இருக்கு. ஆனால், இதையெல்லாம் தெரிஞ்சுக்க இன்னிக்கு யாராவது ஆர்வம் காட்டறாங்களா?' 4. 'இலக்கியம் சிற்பக்கலைக்காக எதுவும் செய்யலை.' 5. 'ஒரு சினிமா நடிகருக்கும் நடிகைக்கும் கொடுக்கிற முக்கியத்துவத்துல நூற்றில் ஒரு பங்கு கூட இந்தக் கலையைப் புரிஞ்சுக்கிறதுக்குக் கொடுக்க மாட்டேங்கறாங்க.' திரு. வை. கணபதி சிற்பியை நான் பல்லாண்டுக் காலம் அறிவேன். அவருடைய அன்புக்குரியவர்களில் நானும் ஒருவன். முதன் முதலில் அழகப்பா பல்கலையிலும் அடுத்து மதுரைப் பல்கலையிலும் தொடர்ந்து உலகத் தமிழ் மாநாட்டிலும் நாங்கள் கட்டுரையாளர்களாகப் பங்கேற்றுள்ளோம். அவருடைய ஆற்றலும் கட்டுமானத் திறனும் சிற்ப அறிவும் உலகறிந்த உண்மைகள். 'சிற்பச் செந்நூல்' அவருடைய அனுபவத்தில் விளைந்த நல்முத்து. இதைப் போல் கட்டடக் கலை குறித்தும் ஒரு நூல் எழுதுமாறு அவரை நான் பலமுறை வேண்டியுள்ளேன். மாமல்லபுரம் சிற்பக்கலைக் கல்லூரியில் முதல்வராக இருந்த காலகட்டத்தில் மாணவர்களுக்கு அவர் வழங்கிய பாடத் தொகுப்புக்களைப் பார்த்திருக்கிறேன்; பயின்றிருக்கிறேன். தமிழ்நாட்டின் தவப்புதல்வர்களுள் அவரும் ஒருவர் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்கமுடியாது. துறைப் புலமையுடைய எந்த ஓர் அறிஞருக்கும் அவர் சார்ந்திருக்கும் துறையில் அவர் அளவிற்கு வேறு யாரும் வளரவில்லை என்பது போல் ஒரு 'மாயை' தோன்றுவது இயல்புதான். அது மட்டுமன்று; தாம் புலமை பெற்றிருக்கும் துறையில் ஊரே, உலகே ஈடுபாடு கொண்டு உயரவேண்டுமென்ற அவாவும் விடாயும் இருக்கும். இந்த உணர்வுகளை, ஏக்கத்தை, வேதனையை, விரக்தியை புலமை சான்ற அறிஞர்களிடம் நான் பார்த்திருக்கிறேன். திரு. கணபதி சிற்பியும் அத்தகு அறிஞர்களுள் ஒருவராய்த்தான் கல்கியில் பதிவாகியிருக்கிறார். அவர் கூற்றுகள் சரியானவைதான் என்பதை விரிவாகவே விவாதிக்கலாம். 'இந்தத் தலைமுறைக்குச் சிற்பக்கலையைத் தெரிஞ்சுக்கணும்னு துளி ஆர்வமாவது இருக்கா?' என்று ஆதங்கப்பட்டிருக்கிறாரே, எந்தத் தலைமுறைக்கு இந்த ஆர்வம் அவர் எதிர்பார்க்கும் அளவில் இருந்தது? அவர் தலைமுறைக்கு இருந்ததா? இருந்திருந்தால், தமிழ்நாட்டில் குறைந்த பட்சம் நூறு கணபதி சிற்பிகளாவது உருவாகியிருப்பர் அல்லவா? ஆர்வமே இல்லாமல் சிற்பக்கலைத் தொழில் ஒரேயடியாய் நசிந்துவிட்டது என்று கூறமுடியுமா? அப்படியானால், மாமல்லபுரம் சிற்பக்கல்லூரியில் ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கை நிகழ்கிறதே, அவர்களெல்லாம், படிப்பு முடித்து என்னாகிறார்கள்? சிற்பக் கல்லூரியில் கல்வி முடித்து வெளிவருபவர்கள் தேர்ந்த திறனாளர்களாக ஒளிர்வதில்லை என்று திரு. கணபதி கருதுவாரானால், அதற்கான காரணங்களை அப்பெருந்தகை நேர்செய்திடலாம். ஆயிரக்கணக்கான சிற்பிகள் இன்றைக்குத் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். இவர்களுள் எத்தனை பேர் திரு. கணபதி கருதும் அளவிற்குத் தொழில் நேர்த்தி உடையவர்கள் என்பது கேள்விக்குறியே. என்றாலும், இவர்களுக்கென்று ஓர் அமைப்பு உள்ளது. இந்த அமைப்பின் கூட்டங்களில் கலந்துகொண்டு நான் உரையாற்றியுள்ளேன். இதன் உறுப்பினர்கள் கேட்கும் ஆர்வம் உடையவர்களாகவே இருப்பதை என் அனுபவத்தால் அறிவேன். இத்தகு அமைப்புகளை திரு. கணபதி பயன்படுத்திக்கொள்ளலாம். சிற்பக்கலையைப் பற்றித் தெரிந்துகொள்ளும் ஆர்வம் சிற்பத் தொழில் நாடுவார் தவிர மற்றவர்களுக்கெல்லாம் இருக்கவேண்டும் என்று திரு. கணபதி எதிர்பார்க்கிறார் என்றால், அந்த எதிர்பார்ப்பு நியாயமானதே. ஆனால், அத்தகு ஆர்வம் 'துளிக்கூட' இந்தத் தலைமுறைக்கு இல்லை என்னும் கூற்றுதான் பொருத்தமற்றதாய்த் தோன்றுகிறது. கோயில்களுக்கு வருவாரில் பல்லவர், பாண்டியர், சோழர் சிற்பங்களைக் கண்டு வியக்காதவர்கள் எண்ணிக்கையில் குறைவே. சிற்பங்களைப் பார்ப்பதும் அவற்றின் அழகை, அமைப்பைப் போற்றுவதும் வியப்பதும் எல்லோருக்கும் சாத்தியமே. ஆனால், 'இரசிப்பு' என்பதும் அதன் அளவுகளும் தனிமனித இயல்புகள் சார்ந்தன. ஒரு சிற்பத்தைப் பார்ப்பதற்கும் புரிந்துகொள்வதற்கும் இரசிப்பதற்கும் பல படி நிலைகள் உள்ளன. இவற்றையெல்லாம் தாண்டிய பிறகே சிற்பத்தின் பின்னாலிருக்கும் கணக்குகள், பார்வைகள், பதிவுகள் புலனாகும். என்னுடைய இருபத்தைந்து ஆண்டுக்காலக் கோயிற்கலை அனுபவத்தில் நானே இந்தப் படிநிலைகளையெல்லாம் ஒவ்வொன்றாகவும் ஒருங்கிணைந்தும் கடந்துவந்திருக்கிறேன். பத்தாண்டுகளுக்கு முன் ஒரு சிற்பத்தைப் பார்த்த என் பார்வைக்கும் இப்போதுள்ள பார்வைக்கும் உள்ள வேறுபாடுகள் என் அனுபவம் எனக்கு வழங்கிய கொடை. இந்த வரலாறு டாட் காம் இதழின் ஆசிரியர் குழுவினரையே எடுத்துக்கொள்வோம். இவர்கள் மூன்றாண்டுகளுக்கு முன் ஒரு திருக்கோயிலைப் பார்த்த பார்வையிலும் இப்போது பார்க்கும் பார்வையிலும் மலையளவு வேறுபாடுகள் இருப்பதை அவர்தம் கட்டுரைகளே வெளிப்படுத்தவில்லையா? மூன்றாண்டுகளுக்கு முன் இவர்களையும் சேர்த்து வரலாறு பேச என் இல்லம் வந்தவர்கள் இருபது பேர். அவர்களுள் தொடர்ந்து வந்தவர்கள் ஏழு பேர். அவருள்ளும் கலைகளுக்குள் கருத்திழந்து ஒன்றியவர்கள் நால்வரே. அந்த நால்வரும் கோயிற் கலைகளை நாளும் கற்பதை வரலாறு டாட் காம் கட்டுரைகள் உணர்த்தவில்லையா? சிற்பக்கலையைப் பற்றித் தெரிந்துகொள்ளும் ஆர்வம் பலருக்கு இருக்கிறது. தமிழ்ப் பல்கலைக்கழகத்திலுள்ள சிற்பத்துறையில் முதுகலைஞர், முதுநிறைஞர், முனைவர் பட்ட மாணவர்கள் ஆண்டுதோறும் பயின்று வெளிவருகின்றனர். மதுரைப் பல்கலையில் உள்ள கலைத்துறை சிற்பக்கலைப் பாடமும் கொண்டுள்ளது. இங்கும் மூன்று நிலை மாணவர்கள் ஆண்டுதோறும் வெளிவருகின்றனர். இவர்களுள் பலர் கல்லூரிகளில் பேராசிரியர்களாகி, அவர்தம் மாணவர்களுக்குச் சிற்பக்கலை பற்றிய விழிப்புணர்வு தருவதைக் காணமுடிகிறது. நானும் முனைவர் மு. நளினியும் திரு. ம. இராமச்சந்திரனும் உடையாளூர் சிவன் கோயில் களப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, குடந்தை அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை மாணவர்களைப் பேராசிரியர் ஒருவர் அக்கோயிலுக்கு அழைத்து வந்திருந்தார். மாணவர்களுக்குச் சிற்பங்களை அவர் அறிமுகம் செய்தமையை நாங்கள் அனைவருமே பார்த்தோம்; கேட்டோம். சிற்பக்கலையைத் தெரிந்துகொள்ள, 'துளிக்கூட' ஆர்வமில்லாமல் இந்தத் தலைமுறை இருப்பதாகத் திரு. கணபதி கூறுவது சரியன்று என்பதை நூறு சான்றுகள் தந்து மெய்ப்பிக்கலாம். நாங்கள் களப்பணிக்குச் செல்லும் பெரும்பாலான கோயில்களில் சிற்பங்கள்-கட்டுமானம் குறித்து நாங்கள் நிகழ்த்தும் உரையாடல்களைக் கேட்டுச் சிறு கூட்டம் எப்போதும் இருக்கும். அவர்கள் எங்களைச் சார்ந்தவர்கள் அல்லர். இயல்பாகக் கோயிலுக்கு வருபவர்களே. ஆனால், எங்கள் உரை கோயில் சார்ந்து இருப்பதால், சிற்பங்கள் பற்றிய விவாதமாக, கல்வெட்டுகள் பற்றிய கேள்வி பதில்களாக இருப்பதால், நின்று கேட்பார்கள். சிலர் ஆர்வம் மேலிட்டு விவாதங்களின்போது அவர்களுக்குத் தெரிந்ததைக் கூறுவதும் உண்டு. கோயில்களுக்கு வருவோரில் பத்தில் ஒரு பங்கினராவது கோயிலைப் புரிந்துகொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்களுக்குச் சொல்லித்தரக் கோயில்களில் தகுதியானவர்கள் இல்லை. கோயில் சார்ந்த எந்த அலுவலருக்கும் கோயில்களைப் பற்றிய முழுமையான பார்வையில்லை. இதற்குக் காரணம் கோயில் சார்ந்த பணிகளில் அமரக் கோயில் தொடர்பான அறிவு அடிப்படைத் தேவையாகக் கருதப்படவில்லை. நூற்றாண்டு நாயகர் அமரர் டாக்டர் மா. இராசமாணிக்கனார் தம்முடைய நூலொன்றில், 'கோயில்களில் பணியாற்றும் குருக்கள் தகுதி வரையறை செய்யப்படல் வேண்டும். பத்தாம் வகுப்புத் தேறியவர்க்குப் பல்கலைக்கழகத்தின் சார்பில் வரலாறு, சமயம், ஓவியம், சிற்பம், நடனம், இசை, கட்டடக்கலை, கல்வெட்டு இவற்றில் ஓரளவு பயிற்சி அளித்துத் தேர்வு வைத்துப் பட்டம் தரல் வேண்டும். அப்பட்டதாரிகளே குருக்களாக அமைய வேண்டும். அந்நிலையிற்றான் கோயில்கள் சாத்திரீய முறையில் விளங்கும்; யாவும் தூய்மையாக இருக்கும். கோயில் நிர்வாக அலுவலர்களாக வருபவர்களும் கோயில் சார்ந்த கலைகளில் புலமை உடையவராதல் வேண்டும்' என்று கூறியுள்ளமை இங்கு நினைக்கத்தக்கது. கோயில்களை நில உடமையாளர்களாக மட்டுமே பார்த்து நிர்வாக அலுவர்களைப் பணியமர்த்துகிறது அரசு. பூசை, வழிபாடு நிகழ்த்தும் பணியாளர்களோ கோயில்கள் வெறும் பக்திமயக் கூடங்கள்தான் என்ற நம்பிக்கையுடன் கதைகளை வளர்த்து, வருவார் காதுமடல்களில் பூச்செருகுகிறார்கள். கோயில்கள் இறை வழிபாட்டிற்காக உருவாக்கப்பட்டவைதான் என்றாலும், அவை நாளடைவில் வரலாற்றுக் களங்களாக உருமாறிய வரலாற்றை மக்கள் அறிந்துகொள்ள வாய்ப்பமைய வேண்டும். வரலாறு டாட்காம் போல் பல மின்னிதழ்கள் வரவேண்டும். திரு. கணபதி தம்முடைய திருப்பணிகளுள் ஒன்றாய்ச் சிற்பக்கலை உணர்வை மக்களுக்கு ஊட்ட இதழ் தொடங்கலாம். வசதியும் வாய்ப்பும் செல்வாக்கும் உள்ள அவர்போன்ற பெருமக்கள் முயன்றால் முடியாதென உண்டோ! அந்த இதழ்களில் ஒவ்வொரு சிற்பத்துக்குப் பின்னாலும் கட்டடத்துக்குப் பின்னாலும் உள்ள ஆச்சரியமான, அதிசயமான, அற்புதமான கணக்குகளை அவர் வெளிப்படுத்தலாம். தமிழ்நாட்டில் முப்பத்து மூன்றாயிரம் கோயில்கள் இருப்பதாக ஒரு கணக்குச் சொல்கிறது. இவற்றுள் கட்டுமான அற்புதங்களாய் ஆயிரம் கோயில்கள் தேறலாம். இந்த ஆயிரம் கோயில்களில் தலைநாயகர்களாய்த் திகழும் ஒன்றிரண்டு கோயில்களின் கட்டுமானக் கணக்குகளையேனும் திரு. கணபதி மக்கள் முன் வைக்கலாம். 'ஆச்சரியமான, அதிசயமான, அற்புதமான' அந்தக் கணக்குகளை மக்கள் அறியக் காத்திருக்கிறார்கள். தஞ்சாவூர் இராஜராஜீசுவரம் கட்டப்பட்டிருக்கும் அற்புதத்தை அக்கட்டமைப்பின் பின்னிருக்கும் தொழில் திறனை, கலை நேர்த்தியை திரு. வை. கணபதி வார இதழ்களில் மக்களுடன் பகிர்ந்துகொள்ளலாம். எவ்வளவுதான் வணிக நோக்குடைய இதழ்களாக இருந்தாலும், 'ஆச்சரியமான, அதிசயமான, அற்புதமான' வி?யங்களை நம்முடைய வார இதழ்கள் அவ்வலவு லேசில் ஒதுக்கிவிடாவென நம்பலாம். இன்றைய இளைய தலைமுறை பல அற்புதமான சாதனைகளைச் செய்துகொண்டுதான் இருக்கின்றது. ஒவ்வொரு துறையிலும் இளைஞர்கள் சிறந்து திகழ்வது கண்கூடு. உலகத்தின் பெரும்பாலான நாடுகளில் தமிழ் இளைஞர்கள் பல்வேறு துறைகளில் முன்னணியில் உள்ளனர். எந்த நாட்டு அறிவுப்புலத்துக்கும் தமிழ் அறிவு சளைத்ததன்று. இந்த இளைஞர்களுள் பலர் 'நம் கலாசாரத்தை பெருமையை பாரம்பரியத்தை' உணர்ந்திருக்கிறார்கள். அவை பற்றி ஆழமாகத் தெரிந்துகொள்ள அவாவுகிறார்கள். நிறையக் கேட்கிறார்கள். ஆனால், 'அறிஞர்கள்' எனும் நிலையில் இருப்பவர்கள் கேள்விகளை வரவேற்பதில்லை. அவற்றைச் சந்திக்கவும் விரும்புவதில்லை. விளக்கம் தர அவர்களால் பெரும்பாலும் முடிவதுமில்லை. இதுதான் உண்மை நிலை. திரு. ச. கமலக்கண்ணனும் திரு. ம. இராமச்சந்திரனும் மூன்றாண்டுகளாக என்னிடம் எத்தனையோ கேள்விகளைக் கேட்டுள்ளனர். பலவற்றிற்கு என் அநுபவம் கொண்டு விடையிறுத்திருக்கிறேன். பலவற்றிற்கு எப்படி மறுமொழி கூறுவதென்று தெரியாமல் தவித்திருக்கிறேன். அது போன்ற நேரங்களில் என் அறியாமையைப் புலப்படுத்திக் கொள்ள நான் தயங்கியதே இல்லை. அவர்கள் கேட்கக் கேட்க நான் சிந்திக்க முடிந்தது. என்னை வளர்த்தவர்கள் என்னிடம் வந்தவர்களே. என்னைச் சூழ்ந்தவர்கள் அறிவையெல்லாம் நான் பெற்று வளர்ந்தேன். இதுதான் உண்மை நிலை. கேட்பவர்களுக்கும் தெரிந்தவர்களுக்கும் இடையில் திரை கூடாது. அந்தத் திரை இருவருக்குமே வளர்ச்சி தராது. இளைய தலைமுறையைக் குற்றம் கூறுவதற்கு முன் நாம் அந்தத் தலைமுறையைக் கவர என்ன செய்தோம் என்று சிந்திக்கவேண்டும். ஒரு நடிகரோ நடிகையோ திரையில் எதையோ சாதிக்கிறார். அதனால்தான் மக்கள் அந்தக் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு அவர் பின் செல்கிறார்கள். அந்த அளவு கவர்ச்சியை நம் சிற்பங்கள் கொண்டுள்ளன என்பதை மக்களுக்கு உணர்த்த சிற்ப அறிஞர்கள் இதுநாள்வரை எடுத்த முயற்சிகள் என்ன? ஒரு சிற்பத்தில் என்னென்ன பார்க்கலாம் என்பதை யார் எப்படி எங்கிருந்து அறியமுடியும்? எந்தத் திருமடத்துத் தலைவர்கள் அல்லது தவமுனிவர்கள் இதற்கெல்லாம் வழிகாட்டியுள்ளனர்? திருவாடுதுறை ஆதீனம் தவிர வேறெந்தத் திருமடமாவது இதற்காகக் கருவி நூல்களை வெளியிட்டுள்ளனவா? திருவாடுதுறைத் திருமடம் வெளியிட்டுள்ள நூல்கள் பற்றி மக்களுக்குத் தெரியுமா? இப்படி நூறு கேள்விகளை அடுக்கிக்கொண்டே போகலாம். குறை சொல்வதும் ஆதங்கப்படுவதும் ஒப்பிட்டு நோக்கி விரக்தியுறுவதும் என்ன பயன் தந்துவிடமுடியும்? அமெரிக்கர்களும் ஐரோப்பியர்களும் நம் கலைச் செல்வங்களை இரசிக்கிறார்கள் என்பது ஓரளவிற்கு உண்மைதான். ஆனால், அவர்கள் அளவிற்கு இந்தியர்கள் தம் நாட்டுக் கலைவளத்தைப் போற்றுவதில்லை என்ற கூற்று பொய்யானது. எத்தனையோ கோயில்கள் அழியாமல் நின்றுகொண்டிருப்பது யாரால்? அறியாமையும் பொருளாதார வளமற்ற சூழலும் இருந்தபோதும் தொடர்ந்து ஊர்க் கோயில்களை இந்த மண்ணின் மைந்தர்கள் காப்பாற்றி வரவில்லை? சரியான வழிகாட்டல், முறையான அரவணைப்பு, தெளிவுதரும் சிந்தனைச் சூழல் என ஏதும் இல்லாத நிலை இங்குத் தொடர்ந்து நிலவப் பகைவர் படையெடுப்புகளே காரணம் என்பதை உணரவேண்டும். எத்தனையோ சிற்றூர்களில் இவற்றையெல்லாம் மீறி அழகழகான கோயில்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. இந்தக் கோயில்களைக் காப்பாற்ற எத்தனை பேர் தங்கள் உயிர்களைத் தந்திருக்கிறார்கள் என்பதைக் கல்வெட்டுகள் எடுத்துரைக்கின்றன. எங்கோ, எப்படியோ, எதன் காரணமாகவோ ஏற்பட்ட உள்காயம் திரு. வை. கணபதியை, 'எனக்கு இந்தியா வேண்டாம்' என்று கூறவைத்திருக்கிறது. அந்தக் காயத்தைக் காலமும் இன்றைய இளைஞர்களும் ஆறவைப்பர். காயங்களுக்கு மருந்துண்டு. காயப்படதவர் யார்? காலம் காலமாக அறிஞர்கள் காயப்பட்டுத்தான் வந்திருக்கிறார்கள். அதனால்தான் வள்ளுவர் கூடத் தீயினால் சுட்டபுண்ணையும் நாவினால் சுட்ட வடுவையும் அடிக்கோடிட்டுக் கூறியிருக்கிறார். ஆனால் வாருணி, ஊமைக் காயங்களுக்காக என் மண்ணை இழக்கச் சொல்லளவில் கூட நான் ஒருப்படேன். இந்த மண் கலைகளின் துகள்களால் ஆனது. எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய இந்த இனிய மண்ணில்தான் இனி எத்தனைப் பிறவிகளென்றாலும் என் பிறப்பு இருக்கவேண்டும். நெடிதோங்கிய கோபுரங்களையும் பண்பாட்டின் உச்சம் காட்டும் விமானங்களையும் அந்த வளாகங்களில் இன்றும் நம்மை விழித்து நோக்கி எழுச்சிப் பண் பாடும் எண்ணற்ற சிற்பங்களையும் பார்த்துப் பார்த்தே நான் வளர வேண்டும், வாழ வேண்டும், சாக வேண்டும். அன்புடன், இரா. கலைக்கோவன்.this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |