http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 27

இதழ் 27
[ செப்டம்பர் 16 - அக்டோபர் 15, 2006 ]


இந்த இதழில்..
In this Issue..

அர்ச்சகர்கள் - தகுதிகளும் பயிற்சிகளும்
கதை 8 - தேவன் தொட்ட சுனை (பகுதி 1)
வரலாற்றின் வரலாறு - 5
மெய்ப்பொருள் காண்பது அறிவு
தமிழ்நாட்டின் தொடக்கக் காலக் கலை வரலாறும் குடைவரைகளும்
மகேந்திரரின் விருதுப்பெயர்கள்
மும்மூர்த்தி - இலக்ஷிதாயனக் கோவில் (மண்டகப்பட்டு)
உடையார்குடி கல்வெட்டு - ஒரு மீள்பார்வை - 3
இரண்டாண்டு நிறைவு வாழ்த்துச்செய்திகள்
இதழ் எண். 27 > கலைக்கோவன் பக்கம்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
இரா. கலைக்கோவன்
அன்புள்ள வாருணி, உனக்கு நான் எழுதிய மடலின் விளைவாய் மகுடாகமத்தின் ஒரு பகுதி ஒளிஅச்சுச் செய்யப்பெற்று என்னிடம் தரப்பட்டுள்ளது. தந்தவர் நம் அன்புக்குரிய நண்பர் திரு.சுந்தர். நூலின் தலைப்புப் பக்கம், 'மகுடாகமம் பூர்வ பாகம்' (First Part) என்றுள்ளது. இதனைத் தென்னிந்திய அர்ச்சகர் சங்கப் பொதுக் காரியதரிசி திரு. சுவாமிநாத சிவாச்சாரியார் 1977ல் வெளியிட்டுள்ளார்.

அவருடைய பதிப்புரையின்படி இப்போது கிடைத்திருக்கும் பகுதி கிரியா பாதத்தின் 12 படலங்களைக் கொண்டுள்ளது. 'காமிகாகமத்தைப் போலவே மகுடாகமம் சிவபெருமான் நடனப் பிரதான விசேடமுள்ள சிதம்பரம், திருவாரூர் முதலான சிவாலயங்களில் கிரியாப் பிரமாணமாக அநுசரிக்கப்பட்டு வருவதாக'ப் பதிப்பாசிரியர் குறிப்பிட்டுள்ளார். இதன் வழி இப்போது கிடைத்துள்ள மகுடாகமத்திற்கும் தஞ்சாவூர் இராஜராஜீசுவரத்தின் கட்டமைப்பிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது வெள்ளிடை மலையாகிவிட்டது.

முனைவர் திரு. குடவாயில் பாலசுப்ரமணியன் தம்முடைய நூலில் கூறியிருக்கும் மகுடாகமம் பற்றிய தகவல்கள் அனைத்தும் முனைவர் திரு. இரா. நாகசாமியால் கூறப்பட்டவை என்றும், திரு. பாலசுப்ரமணியன் மகுடாகமத்தைப் பார்த்தறியாதவர் என்றும் திரு. சுந்தர் என்னிடம் தெரிவித்தார். இதே கருத்தை அவர் உரைகளைக் கேட்டுள்ள பிறரும் கூறியுள்ளனர். இந்த உண்மையைத் திரு. கோகுல் தம்முடைய கட்டுரையிலோ, அல்லது திரு. பாலசுப்ரமணியன் தம்முடைய நூலில் எங்காவதோ குறிப்பிட்டிருந்தால், மகுடாகமக் கருத்துக்கள் அவருடையவை அன்று என்ற தெளிவு கிடைத்திருக்கும். ஒரு நூலில் பிறர் கருத்துக்களை எடுத்தாளும்போது, தவறாமல் அக்கருத்துப் பெறப்பட்ட நூல் அல்லது அறிஞர் பற்றிய அடிக்குறிப்பு விளக்கம் நூலாசிரியரால் தரப்படுதல் இன்றியமையாதது. வே¦றாருவர் கருத்தைத் தம் கருத்துப் போல எழுதும்போது, கருத்தின் பலன்கள் எழுதுபவரையை சேர்வது தவிர்க்கமுடியாதது. இப்போதாவது அக்கருத்துக்கள் திரு. பாலசுப்ரமணியனுடையவை அன்று என்று தெளிவானதில் மகிழ்வே.

தம்முடைய நூலில், (தஞ்சைப் பெரிய கோயில்) தஞ்சாவூர்க் கோயிலின் வழிபாடு மகுடாகம அடிப்படையில் அமைந்தது என்று கூறும் திரு. பாலசுப்ரமணியன், அதை மகுடாகமம் சொல்லும் நவதத்துவமாக வெளிப்படுத்தியுள்ளார் (பக். 23-24). இந்த நவதத்துவ விளக்கம், திரு. இரா. நாகசாமியின், 'Iconography and Significance of he Brhadisvara Temple' என்ற கட்டுரையிலிருந்து பெறப்பட்டதென்று தற்போது திரு. பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

திரு. இரா. நாகசாமியின் இந்தக் கட்டுரை, 'Discourses on Siva' என்ற நூலில் இடம்பெற்றுள்ளது. இக்கட்டுரையின் ஆறாவது பக்கத்தில் (ப. 176), மகுடாகமம் என்ற தலைப்பின் கீழ்த் திரு. இரா. நாகசாமி பல கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார். அதில் நவதத்துவமும் ஒன்று. இலிங்கத்தில் மகுடாகம முறைப்படி இந்த நவதத்துவம் வணங்கப்படும் வகைமையைக் கீழிருந்து மேலாக, 'பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், மாகேஸ்வரன், சாதாக்ய தத்துவங்கள், பிந்து, நாதம், சக்தி, சிவம்' என்று அவர் வரிசைப்படுத்தியுள்ளார் (பக். 178-179). இந்தத் தகவலுக்கும், மகுடாகமம் தொடர்பாக அவர் கட்டுரையில் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் பிற தகவல்களுக்கும் தரப்பட்டிருக்கும் அடிக்குறிப்புகளுள் ஒன்றுகூட நேரடியாக மகுடாகமத்தைச் சுட்டவில்லை. மாறாக, அவை, 'ஞான வாரணம்' (தருமபுரம்) எனும் நூலைச் சுட்டுகின்றன (அடிக்குறிப்பு எண்கள். 52 - 55; ப. 181). ஞான வாரணத்தில் மகுடாகமம் உள்ளடக்கமா அல்லது இந்த நூலில் மகுடாகமக் கருத்துக்கள் இடம்பெற்றுள்ளனவா என்பதை அறியக்கூடவில்லை.

அது ஒருபுறம் இருக்க, திரு. பாலசுப்ரமணியன் தம் நூலில் தெரிவித்திருக்கும் மகுடாகம நவதத்துவத்திற்கும் திரு. இரா. நாகசாமி குறிப்பிடும் மகுடாகம நவதத்துவத்திற்கும் வேறுபாடு உள்ளது. திரு. பாலசுப்ரமணியன் குறிப்பிடும் நவதத்துவம், 'பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், மகேசன், சதாசிவன், பரபிந்து, பரநாதம், பராசக்தி, பரசிவம்' (பக். 23 - 25) என்றமைந்துள்ளது.

திரு. பாலசுப்ரமணியன் குறிப்பிடும் இந்த நவதத்துவம், 'ஞானாந்த பரிபாஷை' எனும் நூலில் இருப்பதாகத் திரு. இரா. நாகசாமி எழுதுகிறார் (ப. 179). ஆனால், அந்நூல் தொடர்பான அடிக்குறிப்பு எதுவும் அவரால் தரப்படவில்லை. 'பரசிவம் எனும்போது உருவமாகத் திகழும் லிங்கம் மறைந்து பரவெளியான பிரபஞ்சமே சிவமாகத் திகழும்' என்பன போன்ற திரு. பாலசுப்ரமணியன் கருத்துக்கள் டாக்டர் இரா. நாகசாமியின் கட்டுரையில் காணப்படாமை குறிப்பிடத்தக்கது.

இதனால், திரு. பாலசுப்ரமணியனால் முன் வைக்கப்பட்டுள்ள மகுடாகமக் கருத்துக்கள், அந்நூல் சார்ந்தனவாக திரு. இரா. நாகசாமியால் குறிக்கப்படாமையையும், திரு. இரா. நாகசாமி குறிப்பிடும் ஞானாந்த பரிபாஷை நூலின் கருத்துக்களே திரு. பாலசுப்ர மணியனால் மகுடாகமக் கருத்துக்களாய் வெளிப்படுத்தப்பட்டுள்ளமையையும் நீ புரிந்துகொண்டிருப்பாய் என்று நம்புகிறேன். திரு. இரா. நாகசாமி குறிப்பிடும் பரிபாஷைக் கருத்துக்களுடன் திரு. பாலசுப்ரமணியனின் கருத்துக்களும் இணைந்தே பரசிவம் உருவாகியுள்ளது. இந்த நதி மூலம் ரிஷி மூலம் காண உதவியவர் நண்பர் திரு. சுந்தரே. அவருக்கு நாம் நன்றி கூறவேண்டும். இப்போது சுந்தருக்குக் கூடுதலாக ஒரு பணி முளைத்துள்ளது. தருமபுர ஆதீனத்தின் ஞான வாரணத்தை அவர் கண்டறிந்து தந்தால் மகுடாகமம் பற்றி மேலும் அறிய வாய்ப்பிருக்கிறது.

இனி, இராஜராஜீசுவரத்து இலிங்கத் திருமேனியைப் பார்ப்போம். என் மடல் வெளியான நிலையில், இத்திருமேனியின் ஆவுடையார் ஒரே கல்லால் ஆனது என்று ஒரு கருத்து மட்டும் முன்வைக்கப்பட்டு, உண்மை அறிந்த நிலையில், அதுவும் திரும்பப் பெற்றுக்கொள்ளப் பட்டுள்ளது. திரு. பாலசுப்ரமணியனே ஆவுடையார் பல கற்களால் ஆனது என்று இப்போது தெரிவித்துள்ளார். எனவே, இலிங்கத்தை நிறுவிப் பின் விமானம் கட்டப்பட்டதாகக் கூறப்படும் கருத்தும், அது மகுடாகமம் சார்ந்த கட்டமைப்பு முறை என்ற கருத்தும் பொருளற்றுப் போவதை உணர்க.

ஒரு கோயிலை விளங்கிக் கொள்ளவும் அனுபவிக்கவும் ஆராயவும் அக்கோயில் சார்ந்த கலைகளில் அடிப்படைப் பயிற்சி இன்றியமையாதது. தொலைவில் நின்று இரசிப்பது வேறு. அணுகி, இணக்கமாகி, உறவாவது வேறு. கோயிலுக்கு வருவோர், அதைப் பார்ப்போர், அக்கோயிலின் அமைப்பையும் கட்டுமானத்தையும் இரசிப்போர், இவர்தம் உரையாடல்களில் வெளிப்படும் உண்மைத்தன்மை குறித்து யாரும் கவலைப்படுவதில்லை; ஆராய்வதும் இல்லை. ஆனால், ஓர் ஆய்வாளரின் உரையாகவோ, எழுத்தாகவோ வெளிப்படும் உறுதியற்ற கருத்துகள் கூட வரலாறாக்கப்பட்டுவிடும் அபாயம் உண்டு.

இராஜராஜீசுவரத்தின் உச்சித்தளக் கூரை ஒரே கல்லால் ஆனது, அதன் சிகரம் ஒரே கல்லால் ஆனது, அது பெற்றிருப்பது நிழல் விழாத விமானம் என்¦றல்லாம் காலம் காலமாகக் கூறப்பட்டு, எழுதப்பட்டு, நம்பப்பட்டு வந்த தரவுகளை, அவை முற்றிலும் பிழையானவை என்று மெய்ப்பிக்க எத்தனை முயற்சி தேவைப்பட்டது தெரியுமா? இன்னமும்கூட அந்தப் பொய்களை அசைபோடுவதில்தான் பள்ளிப் பாடநூல்களும் பயணக்கட்டுரை நூல்களும் இணையதள ஏடுகளும் களித்துச் செயற்படுகின்றன.

வரலாறு, உண்மைகளின் படப்பிடிப்பாக இருக்க வேண்டாமா? கடுகளவு அய்யம் இருந்தால்கூட அந்தச் செய்தியை ஊகமாக, 'இருக்கலாம்' என்று அய்யத்தின் வெளிப்பாடாக வெளியிடுவதுதானே முறை? மக்களுக்காக வெளியிடப்பட்டுள்ள ஒரு நூலில் (தஞ்சைப் பெரிய கோயில் - குடவாயில் பாலசுப்ரமணியன் - 2002), 'ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்திய மண்ணில் திகழ்ந்த ஒரே பொற்கோயில் தஞ்சைப் பெரிய கோயில்தான் என்பது வரலாற்று உண்மையாகும்' (ப. 47) என்றும், 'தெட்சிண மேரு என்ற பெயரில் மாமன்னன் இராஜராஜன் எடுத்த தஞ்சைப் பெரிய கோயிலின் ஸ்ரீவிமானத்தின் மேல் செப்புத்தகடுகளைப் போர்த்தி அதன் மேல் பொன் கருக்கினான் என்பதை அண்மையில் வெளிப்பட்ட தஞ்சை கோயில் கல்வெட்டொன்று விவரிக்கிறது' (ப. 46) என்றும், 'இப்புதிய கண்டுபிடிப்புக் கல்வெட்டால் 216 அடி (இதே நூலின் இன்னெhரு பக்கத்தில் (ப. 15) விமானத்தின் உயரம் 212 அடி என்று அவரே குறித்திருக்கிறார்) உயரமுடைய ஸ்ரீவிமானம் முழுவதும் பொன் பூசப்பெற்ற தகடுகளால் அணிசெய்யப் பெற்றுத் திகழ்ந்தது என்பதை அறியமுடிகிறது' (ப. 46) என்றும் ஆய்வாளரான திரு. பாலசுப்ரமணியன் எழுதியிருப்பது எந்தவகையில் நியாயம்?

இம்மொழிவுகளுக்கெல்லாம் அடிப்படைச் சான்றாக ஆய்வாளர் வெளியிட்டுள்ள கல்வெட்டு நான்கு வரிகளில் அமைந்துள்ள, சொல் தொடர்பும், பொருள் தொடர்பும் அற்ற துண்டுக் கல்வெட்டு.

1 ராஜீஸ்வரமுடையார்
2 ஸ்ரீவிமானம் பொன்
3 மெய்வித்தா . . . . .
4 . . . . ராஜராஜ . .


இதுதான் அந்தக் கல்வெட்டு.

இந்தக் கல்வெட்டின் எந்த வரியிலாவது, திரு. பாலசுப்ரமணியன் தம் நூலில் குறிப்பிட்டுள்ளாற் போல், 'ஸ்ரீவிமானத்தின் மேல் செப்புத் தகடுகள் போர்த்தி அதன் மேல் பொன் கருக்கிய' செய்தி உள்ளதா? '216 அடி உயரமுடைய ஸ்ரீவிமானம் முழுமையும் பொன் பூசப்பெற்ற தகடுகளால் அணிசெய்யப் பெற்றுத் திகழ்ந்தது' என்று இந்தத் துண்டுக் கல்வெட்டின் எந்த வரியாவது தகவல் தருகிறதா?

இந்தத் துண்டுக் கல்வெட்டைச் சற்றே ஆராய்வோம். இதன் முதல் வரி, 'ராஜீஸ்வரமுடையார்' என்றமைந்துள்ளது. தஞ்சாவூர்க்கோயில் இறைவன் அங்குள்ள பெரும்பாலான இராஜராஜர் கல்வெட்டுகளில், 'உடையார் ஸ்ரீராஜராஜீஸ்வரமுடையார்' (தெ. இ. க. தொகுதி 2 : 3, 6, 24, 25, 26, 63, 65, 66) என்றே அழைக்கப்பட்டுள்ளார். அதனால், இத்துண்டுக் கல்வெட்டின் முதல் வரியிலுள்ள 'ராஜீஸ்வரமுடையார்' என்ற சொல்லுக்கு முன் குறைந்த பட்சமாக, 'உடையார் ஸ்ரீராஜ' எனும் சொற்கள் விடுபட்டுள்ளமையை அறிக. இச்சொற்கள் பத்து எழுத்துக்களால் ஆனவை. இதுபோல் பத்து எழுத்துக்கள் இத்துண்டுக் கல்வெட்டிலுள்ள ஒவ்வொரு வரியின் முன்னும் விடுபட்டுள்ளன என்பதை முதலில் புரிந்துகொள்.

1 . . . . . . . . . . ராஜீஸ்வரமுடையார்
(1 உடையார் ஸ்ரீராஜராஜீஸ்வரமுடையார்)
2 . . . . . . . . . . ஸ்ரீவிமானம் பொன்
3 . . . . . . . . . . மெய்வித்தா . . .
4 . . . . . . . . . . . . . ராஜராஜ . . (ஒவ்வொரு புள்ளியும் விடுபட்டுள்ள ஓர் எழுத்தைக் குறிக்கிறது.)


இப்போது இந்தக் கல்வெட்டைப் படி. விடுபட்டிருக்கும் குறைந்த அளவு எழுத்துக்களைச் சேர்த்துக்கொண்டால், முதல் வரி, 'உடையார் ஸ்ரீராஜராஜீஸ்வரமுடையார்' என்றாகும். இரண்டாம் வரியிலும் குறைந்தபட்சமாய்ப் பத்து எழுத்துகள் விடுபட்டுள்ளன. அவற்றை அறியக்கூடவில்லை. இந்த நிலையில் இப்பத்து எழுத்துகளை அடுத்திருக்கும், 'ஸ்ரீவிமானம்' ராஜராஜீஸ்வரத்து விமானத்தைத்தான் குறிக்கிறது என்று எவ்விதம் கொள்வது? அதே போல் இரண்டாம் வரியின் கடைச்சொல்லான பொன் என்பதற்கும் மூன்றாம் வரியின், 'மெய்வித்தா' என்பதற்கும் இடையில் குறைந்த அளவாகப் பத்து எழுத்துக்கள் விடுபட்டுள்ளன. நான்காம் வரியிலிலுள்ள, 'ராஜராஜ' எனும் சொல் பதினாறு எழுத்துக்கள் விட்டுத் தொடர்கிறது.

விடுபட்டுள்ள சொற்களை மிகக் குறைந்த அளவினவாகக் கொண்டு பார்த்தால்கூட இந்தத் துண்டுக் கல்வெட்டின் தரவை அடையாளப்படுத்துவது இயலாததாகிறது. தரவுத் தொடர்போ, சொல் தொடர்போ ஏதுமற்ற இந்தத் துண்டுக் கல்வெட்டின் அடிப்படையில், 'வரலாற்று உண்மை' என்ற போர்வை போர்த்தப்பட்டு ஊகங்கள் உலா வருவது நேர்மையான வரலாற்றுக்கு உகந்ததா? இது ஏற்கனவே ஊனப்பட்டிருக்கும் தமிழ்நாட்டு வரலாற்றை மேன்மேலும் ஊனப்படுத்துவதாகாதா?

நண்பர் திரு. சுந்தர், ஆரூர்க் கல்வெட்டொன்றையும் வீழிமிழலைக் கல்வெட்டொன்றையும் பொன் விமானம் தொடர்பான எடுத்துக்காட்டுகளாக முன்வைத்துள்ளார். இந்த இரண்டு கல்வெட்டுகளுமே கண்ணெதிர்ச் சான்றுகளாக நின்று இந்தத் துண்டுக் கல்வெட்டுப் பொருளற்ற கல்வெட்டென்பதை நிறுவும் வகைமையை நீ உணரவேண்டும் என்பதற்காகவே இரண்டு கல்வெட்டுகளிலிருந்தும் விமானச் செய்திகளை மட்டும், அவை பதிப்பிக்கப் பட்டவாறே இங்குத் தந்துள்ளேன்.

முதற் கல்வெட்டு, நண்பர் திரு. பாலசுப்ரமணியன் திருவாரூர்க் கோயிலில் படியெடுத்த முதல் இராஜேந்திரரின் இருபதாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு. இதன் பாடம் அவர் நூலில் (திருவாரூர்த் திருக்கோயில், கல்வெட்டு எண். 75, பக். 493-504) வெளியிடப்பட்டுள்ளது. கல்வெட்டின் தொடக்கத்தில் முதல் இராஜேந்திரரின் மெய்க்கீர்த்தி உள்ளது. அதைத் தொடரும் முதற் பகுதியை, 'மேய்ந்த பொன்' பற்றிப் பேசுகிறது. இக்கல்வெட்டுப் பற்றிய தம் குறிப்புரையில் திரு. பாலசுப்ரமணியன் (ப. 494), 'இக்கல்வெட்டு, மாமன்னன் இராஜேந்திர சோழனின் பதினெட்டாம் ஆட்சியாண்டில் வீதிவிடங்கப் பெருமானின் திருக்கோயில் செங்கற் கட்டுமானமாய் இருந்ததைக் கருங்கற் கோயிலாய் மாற்றி அமைத்தது, இம்மன்னனின் அன்புக் காதலியான அணுக்கியர் பரவை நங்கையை என்பதையும் கூறுகிறது. இப்பெண் கற்கோயிலாக மாற்றி அமைத்தது மட்டுமல்லாது, 20, 643 கழஞ்சு எடையுள்ள பொன் தகடுகளைக் கொண்டு கருவறையின் விமானத்தையும் சுற்றுச் சுவர்களையும் வாயிலையும் அலங்கரித்தாள் என்றும், 42, 000 பலம் எடையுள்ள செப்புத் தகடுகளைக் கொண்டு கதவுகள், மண்டபத் தூண்களை அலங்கரிக்கச் செய்தாள் என்றும் கூறுகின்றது' என்று எழுதியுள்ளமையை நினைவில் இருத்துக.

இனி, பொன் மேய்ந்தமை பேசும் இந்தக் கல்வெட்டின் வரிகளைப் பார்ப்போம்.

உடையார் ஸ்ரீராஜேந்திர சோழ தேவர்க்கு யாண்டு
இருபதாவது உடையார் ஸ்ரீராஜேந்திர சோழ தேவர் அணுக்கியார்
பரவை நங்கையார் க்ஷத்திரியசிகாமணி வளநாட்டு
திருவாரூர் கூற்றத்து திருவாரூர் உடையார்
வீதிவிடங்க தேவர் திருக்கற்றளி எடுப்பித்து
உடையார் வீதிவிடங்க தேவர்
அணுக்கியார் பரவை நங்கையார் யாண்டு
18 வது நாள் 38 முதல்
நாள் 199 வரை உடையார்
வீதிவிடங்க தேவர் கோயிலில் குடத்திலும்
பத்மத்திலும் கம்பிலும் சிகரத்திலும் வாய்
மடையிலும் நாலு நாசியிலும் உள் குட்டத்தி
லும் ஆக பந்தயம் கழஞ்சோடு ஆயிரத்து
நானூற்று ஒன்றினாலும் முக்கழஞ்சோடு
ஆயிரத்து நானூற்று முப்பத்தெட்டினாலும்
இருகழஞ்சோடு இரண்டாயிரத்து ஒரு
நூற்று ஒருபத்தெட்டினாலும் தகடு
நூற்றம்பத்தெட்டினாலும் சீரிணி நூற்
¦றாருபத்தினாலும் குடிiஞக் கல்லால்
மேய்ந்த பொன் இருபதினாயிரத்து அறுநூற்று
நாற்பத்து முக்கழஞ்சே ஏழு மஞ்சாடியும்
வீதிவிடங்க தேவர் கோயிலும் இக்
கோயில் முன்பில் மண்டபத்து சூழ்ந்த
கொடுங்கையிலும் சோபானகூடத்திலும்
கதவிலும் மேய்ந்த பொன் நிறை நாற்பத்து
ஈராயிரத்து . . . . . . . . .


இப்பகுதியின் முதல் ஐந்து வரிகள், பரவை நங்கை திருவாரூரில் வீதிவிடங்க தேவர் கற்றளி எடுப்பித்தமையைத் தெளிவாக்குகின்றன. தொடரும் வரிகள், மன்னரின் பதினெட்டாம் ஆட்சியாண்டின் 38ம் நாள் முதல் 199ம் நாள் வரை பரவை நங்கை செய்த தங்கத் திருப்பணியைப் பறைசாற்றுகின்றன. 'வீதிவிடங்கதேவர் கோயிலில் குடத்திலும் பத்மத்திலும் கம்பிலும் சிகரத்திலும் வாய்மடையிலும் நாலு நாசியிலும் உள்குட்டத்திலும்' 20, 643 கழஞ்சு 7 மஞ்சாடி நிறையுள்ள பலவகையான பொன்னோடுகள் வேயப்பட்டன.

இந்த விரிவான உறுப்புப் பட்டியலால் வீதிவிடங்கதேவர் விமானத்தின் தூபி, சிகரம், கிரீவம் ஆகிய பகுதிகள் பொன்னோடுகளால் போர்த்தப்பட்டமை தெளிவாகிறது. திரு. பாலசுப்ரமணியன் தம் குறிப்புரையில், '20,643 கழஞ்சு எடையுள்ள பொன் தகடுகள் கொண்டு கருவறையின் விமானத்தையும் சுற்றுச் சுவர்களையும் வாயிலையும் அலங்கரித்தாள்' என்று கூறியுள்ளமையை இங்கு நினைத்துப்பார்க்க வேண்டும். கல்வெட்டு மிகத் தெளிவாக, 'குடத்திலும் பத்மத்திலும் கம்பிலும் சிகரத்திலும் வாய்மடையிலும் நாலு நாசியிலும் உள்குட்டத்திலும்' பொன் போர்த்தப்பட்டதாகத் தெரிவித்தும், திரு பாலசுப்ரமணியன் கருவறைச் சுவர்களையும் வாயிலையும் பொன் தகடுகளால் போர்த்தியதாகக் கூறியிருப்பது எதன் அடிப்படையில்? இதற்கான தரவேதும் அவர் வெளியிட்டுள்ள கல்வெட்டுப் பாடத்தில் இல்லை என்பதை ஒரு முறைக்கு, இருமுறை கல்வெட்டுப் பாடத்தை படித்து உணருமாறு வேண்டுகிறேன்.

ஏறத்தாழ 42, 000 கழஞ்சுப்(?) பொன் கொண்டு (கல்வெட்டில் நாற்பத்து ஈராயிரத்து என்ற சொல்லின் தொடர்ச்சி சிதைந்துள்ளமை காண்க.), வீதிவிடங்க தேவர் கோயில், அதன் முன் மண்டபம் இவை சூழ்ந்த கொடுங்கையும் சோபானகூடமும் (சோபானம் - படிக்கட்டு) கதவும்அலங்கரிக்கப்பட்டன எனக் கல்வெட்டின் அடுத்த பகுதி கூறுகிறது. திரு. பாலசுப்ர மணியன் இப்பகுதி பற்றித் தம் குறிப்புரையில் கூறும்போது, '42, 000 பலம் எடையுள்ள செப்புத் தகடுகளைக் கொண்டு கதவுகள், மண்டபத் தூண்களை அலங்கரிக்கச் செய்தாள்' என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், கல்வெட்டுப் பாடம் மிகத் தெளிவாக, 'கொடுங்கையிலும் படிக்கட்டுக் கூடத்திலும் கதவிலும் மேய்ந்த பொன் நிறை நாற்பத்து ஈராயிரத்து . . . ' என்று கூறுவது காண்க. இந்தக் கல்வெட்டின் பாடம் அவரே தந்திருப்பது (ப. 497) என்பதையும் அறிக.

தாம் படியெடுத்துப் பதிப்பித்திருக்கும் கல்வெட்டைப் பற்றி, அதே நூலில், தம் குறிப்புரையிலேயே நண்பர் பாலசுப்ரமணியன், கல்வெட்டுப் பாடத்தில் இராத எத்தனை தரவுகளைப் பதிவு செய்திருக்கிறார் என்பதை அருள்கூர்ந்து விளங்கிக்கொள். பொன் செம்பாகியிருக்கிறது. விமானத்தின் மேல் அங்கங்கள் கருவறையின் விமானமாகியுள்ளன. பொன் போர்த்தப்படாத சுற்றுச் சுவர்களும் வாயில்களும் பொன் போர்த்திக் கொண்டுள்ளன. பொன் போர்த்தப்பட்ட கொடுங்கையும் படிக்கட்டுகளும் விடுபட்டுள்ளன. எதுவும் போர்த்தப்படாத தூண்கள் செப்புத் தகடுகள் கொண்டுள்ளன. கதவு கதவுகளாகியுள்ளது. பொன் 42, 000, செம்பு 42, 000 பலமாக மாறியுள்ளது.

அரசர் இராஜேந்திரரின் மெய்க்கீர்த்திக்குப் பிறகு, கோயிலைப் பரவை கற்றளியாக்கிய செய்தி கூறி, அதற்குப் பிறகு 21 வரிகளில் பெரும்பாலும் தொடரொழுங்குடன் பொன் போர்த்தப்பட்ட தகவல் கூறும் இந்தக் கல்வெட்டுடன் தஞ்சாவூர் இராஜராஜீசுவரத்துக் கோபுரத்திலுள்ள துண்டுக் கல்வெட்டை ஒப்பிட்டுப் பார். திருவாரூர்க் கல்வெட்டைப் படித்த பிறகு, செய்தித் தொடர்பற்ற, சொல் ஒழுங்கற்ற இந்தத் துண்டுக் கல்வெட்டின் அடிப்படையில் இராஜராஜீசுவரம் விமானம் பொன் போர்த்தப்பட்டதென்பதை, அதுவும் 216 அடி அளவிற்கான முழு விமானமும் பொன் போர்த்தப்பட்டது என்ற தகவலை எப்படி ஏற்பது?

இரண்டாம் கல்வெட்டின் பாடம் தமிழ்நாடு அரசின் தொல்பொருள் ஆய்வுத்துறை 1994ல் வெளியிட்டுள்ள, 'திருவீழிமிழலைக் கல்வெட்டுகள்' எனும் நூலில் தரப்பட்டுள்ளது. இதன் தொகுப்பாசிரியர் முனைவர் ஆ. பத்மாவதி. இக்கல்வெட்டு, (தொடர் எண் 509/1977; 384:1908) முதல் இராஜாதிராஜரின் 36ம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்டுள்ளது. 94 வரிகளில் அமைந்துள்ள இக்கல்வெட்டின் (ப. 1 - 7) முதல் இருபத்திரண்டு வரிகள் பொன் மேய்ந்தவர்கள் பெயர்களையும் அப்பணிக்குக் கண்காணிகளாக இருந்தவர்தம் பெயர்களையும் தருகின்றன. கல்வெட்டுப் பல இடங்களில் சிதைந்திருந்தபோதும் முக்கியமான தகவல்களைப் பெறமுடிகிறது. பொன்மேய்ந்தவர்களுள் தலைமை இடம்பெறுபவர் இராஜாதிராஜரின் அணுக்கி பல்லவன் பட்டாலி நங்கை என்பவராவார். இவருக்காக இவர் அண்ணன், தம்பி, தங்கை ஆகியோர் இப்பணியில் ஈடுபட்டனர்.

வரி 22ல் இருந்து வரி 44 வரை பொன் மேய்ந்த வகைமை கூறப்படுகிறது. இவ்வரிகள் பல இடங்களில் சிதைவுற்றிருப்பதாகப் புள்ளிகளின் மூலம் குறிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பொருள் கொள்ளத் தடையில்லை.

1 இத்தேவற்கு யாண்டு 36 ஆவது உய்யக்கொண்டார் வளநாட்
2 டு வெண்ணாட்டுத் திருவீழிமிழலை உடைய மகாதேவர் கோயிலில்
3 . . . . மேய்விக்கிற உடையார் ஸ்ரீவிஜைய ராஜேந்திர தேவர் அணுக்கியார் பல்லவந் பட்டாலி நங்கை
4 யார்க்காய்ப் பொந் மேய்விக்கின்ற இவர் தமையனார் பல்லவன் கயிலாயமான உத்தமசோழ கங்
5 . . . . . இவர் தம்பியார் பல்லவரணுக்கனான கங்கை கொண்ட சோழ மூவேந்த
6 . . . ரும் இவர் தம்பியார் படா . . . . யாழ . . . . . . நும் இவர் தங்கச்சி சூற்றி நார
7 ணந் உடையாளும் இவர் முதற் கணக்கு . . . . தேவநாந திருவீழிமிழலை . . . . . . .
8 ணக்கு வேளான் திருவையாறநாந மதுரை கொண்ட சோழ மாராயனும் . . . . உய்யக் கொண்ட சோழ
9 மாராயனும் பொந் மேய்விக்கையாலும் கங்கை கொண்ட சோழபுரத்து . . . கங்கை கொண்ட சோழ மடிகையில்
10 பா ஆச்சிரிக்கநும் கங்கை கொண்ட சோழப் பெருந்தெருவில் வியாபாரி ஆதித்தன் திருச்சிற்றம்பலமுடையாநாந சோ . . . .
11 ற்று தீர்த்த நம்பி செட்டியும் பொந் கொடையாலும் திருவீழிமிழலை ஸ்ரீ . . . . . . ஆரிதந் தாயந் சேந்தனும்
12 . . . .கண்காணி . . . . . . . . திருமா . . . . . . தாங்கலு . . . . .
13 . . . . ராயமாகவும் ஸ்ரீ . . . . க்குடலமாக . . . . . வெண்காடந் . . . . . .
14 த்தக ஸ்ரீகோயிற் கணக்காகவும் இத்திரு . . . . . . சூருடைக் கமலந் தாந்தோந்றி ஆந விண்ணிழி விமாந பொற்
15 கோயிற் பிச்சனும் . . றபந் அணுக்கநாந பொற் கோயில் மிழலை நாயகப் பிச்சநும் குமரந் அண்ணா
16 மலையாந் பொற்கோயில் திருப்பள்ளித்தாமப் பிச்சனும் மறைக்காடன் ஆடவலாநாந விண்ணிழி விமாநப் பொற்
17 கோயில் திருமிழலைத் தேவநும் கண்காணி ஆகவும் இக்கோயில் சிவப் பிராமணரிடய் பொற் பண்டாரி அ
18 ரையந் தேவந் சிங்கநாந ஐஞ்ஞூற்றுவ பட்டநும் பாடிலாக்கந் கூத்தநாந அந்நூற்றுவ பட்டநும் பொற்
19 பண்டாரமாகவும் உடையார் கோயிலுக்குத் திருவீழிமிழலை சபையாரிட்ட திருமெய்காப்பாரில் காரிகுடையாந்
20 தவங்குழகனும் தேவந் மாணிக்கமாந திருநந்தி பள்ளிப் பிச்சநும் கூத்தன் தேவநாந கற்றளிப் பிச்சநும் . .
21 . . . . . . . . இவ்வூர் . . . . . தட்டாரும் . . . .
22 மாற்றும் மாற்றிலி அம்பலமும் கண்காணி ஆக திருநாஸிகள் நாலும் நாஸிக்குட்டம் ஒந்றும் சிகரமும்
23 மத்துக் கீழ்வாயும் மேய்ந்த பொந் . . இரண்டாயிரத்து தொளாயிரத்து இருபத்தைஞ்சிநாலும் சிறு தகடு இ
24 ரண்டிநாலும் பொந் பதிநாலாயிரத்து ஐஞ்ஞூற்று எழுபத்து நாற்கழஞ்சு . . . . சூற்றியு பந்த மேய்
25 ந்த தகடு நாற்பத்தெட்டிநால் மூன்nறாடாகத் தைக்க தகடு பதிநாறிநாலும் . . . . . மூன்றிநாலும் ஐங்க
26 ழஞ்சோடு எட்டிநாலும் பந்தமேய்ந்த பொந் ஆயிரத்து நாநூற்று அறுபத்தி . . . . . செப்பாணித்தலை சுருக்கி
27 மேய்ந்த பொன் நூற்று இருபத்து மூன்றும் . . . . . பதினாராயிரத்து ஒரு ப
28 - 29 இரண்டு வரிகளும் முழுவதுமாய்ச் சிதைந்துள்ளன
30 காம்போதராயர் மேய்ந்த ஓடு ஒந்றிநால் பொன் ஐங்கழஞ்சும் பல்லவந் ஆiநக் காலந்
31 வகை கொண்ட சோழக் காம்போதராயர் மேய்ந்த ஓடு மூந்றிநால் பொந் பதிiநங் கழஞ்சும்
32 . . தேவி மேய்ந்த ஓடு ஒந்றிநால் பொன் ஐங்கழஞ்சும் கோவிந்தந் அமுதந் மேய்ந்த பொந் ஓடு ஒந்றி
33 னால் பொந் ஐங்கழஞ்சும் திருவந் மாணிக்கம் மேய்ந்த ஓடு ஒந்றிநால் பொந் ஐங்கழஞ்சும் ஆக இ
34 வர் மேய்ந்த ஓடு ஏழிநால் பொன் முப்பத்தைங் கழஞ்சும் ஆக நாசிக்கை நாலும் நாசிக்குட்டம்
35 ஒன்றும் சிகரமும் பந்தமும் மேய்ந்த ஓடு இரண்டாயிரத்து தொளாயிரத்து நாற்பதும் பந்தத் தகடு பதி
36 னாறும் வாசித்தகடு ஐஞ்சும் ஆக உரு இரண்டாயிரத்துத் தொளாயிரத்து அறுபத்தொந்றிநால் பொந் ப . . . .
37 இந்த வரி சிதைந்துள்ளது
38 மேய்ந்த பொந் பதிந் ஏழாயிரத்து இருநூற்று ஒரு பத்து ஐங்கழஞ்சரையை மஞ்சாடி நாசிகளிலும் நாசிக்குட்டங்க
39 ளிலும் சிகரத்தும் பந்தத்தும் மேய்ந்த செம்பொந் இரண்டாயிரத்து தொள்ளாயிரத்து நாற்பது பந்த தகடு
40 பதிநாறும் பாததகடு ஐஞ்சும் ஆக இரண்டாயிரத்து தொளாயிரத்து அறுபத்தொந்றிநால் வேய்ந்த இந்த செம்பொந்
41 ஐயாயிரத்தைஞ்ஞூற்று எழுபதிந் பலவரையும் மேய்ந்த செம்பொன் மூவாயிரத்து தொளாயிரமும் மெ
42 ந்தலை சுருக்கி மேய்ந்த செம்பாணி ஐய்யாயிரத்து முந்நூற்று எழுபத்தொந்பதும் ஆக மேய்ந்த ஆணி எழுப
43 தாயிரத்தறுநூற்று எழுபத்தொந்பதிநால் செம்பு நிறை முந்நூற்றறுபத்து முப்பலமும் குடம் மேய்ந்த செ
44 ம்பு நிறை ஐந்நூற்றுப் பலமும் ஆக மேய்ந்த செம்பு நிறை ஆறாயிரத்து முந்நூற்றுத் தொண்ணூற்று முப்பலமும்


இக்கல்வெட்டின்படி திருவீழிமிழலை விமானத்தின் நாசிகள் நான்கு, நாசிக்குட்டம், சிகரம், பத்மத்துக் கீழ்வாய் ஆகியன பொற்றகடுகளாலும் பொன்னோடுகளாலும் மூடப்பட்டன. இவற்றைப் பொருத்த 363 பலம் செம்பாணிகள் பயன்படுத்தப்பட்டன.

பொன் போர்த்தப்பட்ட வரலாறு இங்கு 44 வரிகளில் பொருள் புலப்படுமாறு சொல்லப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டோடும் தஞ்சாவூர் இராஜராஜீசுவரத்துக் கோபுரத் துண்டுக் கல்வெட்டை ஒப்பிட்டுப்பார்.

திரு. சுந்தர், வீழிமிழலைக் கல்வெட்டு, திருவாரூர்க் கல்வெட்டு இரண்டையும் நமக்குச் சுட்டியிருக்காவிட்டால், இத்தனை விரிவாக, தெளிவாக உள்ளங்கைக் கனி போலத் தஞ்சாவூர்க் கல்வெட்டின் தகுதியின்மையை வெளிப்படுத்தியிருக்க முடியுமா? நண்பர் திரு. சுந்தர் நம் அனைவர் நன்றிக்கும் உரிய பெருமகனார். நான் இந்தக் கல்வெட்டுகளைப் பல ஆண்டுகளுக்கு முன் படித்தது. திரு. சுந்தர் சுட்டியதும் மீண்டும் வாசித்தேன். உடன் உனக்கு எழுத விழைந்தேன். உன் வழி அனைவருக்கும் தெளிவு கிடைக்குமல்லவா?

வீழிமிழலைக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் செம்பாணிகள் பற்றித்தான் தஞ்சாவூரில் நண்பர்களிடையை ஒரு முறை பேசினேன். திரு. சுந்தர் இந்த ஆணிகளைத்தான் தம் கடிதங்களில் ஒன்றில் சுட்டி, அவரே அதற்கு விளக்கமும் தந்துள்ளார்.

பொன் விமானம் தொடர்பாக மூன்று இலக்கியச் சான்றுகள் முன் மொழியப்பட்டுள்ளன. கருவூர்த் தேவரின் இராஜராஜீசுவரப் பதிக இறுதிப் பாடலில் இறுதி இருவரிகள், 'சிவபதம் என்னும் பொன்னெடுங் குன்றைக்'குறிக்கின்றன. இங்குப் பொன்னெடுங் குன்றமாய்க் காட்டப்படுவது சிவபதமே அன்றி இராஜராஜீசுவரம் அன்று.

ஒட்டக்கூத்தரின் தக்கயாகபரணிப் பாடலில் வரும், 'சீராசராசீச்சரஞ் சமைத்த தெய்வப்பெருமாளை வாழ்த்தினவே' என்ற அடிக்குத் (கூழ் அடுதலும் இடுதலும், பாடல் எண். 772, உ. வே. சா. பதிப்பு, 1992, ப. 382) திரு உ. வே. சா. பொருள் எழுதும்போது, 'சீராசராசீச்சரம்' என்பது தஞ்சாவூர் இராஜராஜீசுவரத்தைக் குறிப்பதாகக் கொண்டு, தெய்வப் பெருமாளாக முதல் இராஜராஜரைப் பார்த்துள்ளார். அதே பக்கத்தில் இப்பாடலின் கீnழ, திரு. உ. வே. சா. அவர்களே, 'சீராசராசீச்சரம்' என்ற சொல்லுக்கான பாடபேதமாக, 'சீராசராசபுரம்' என்னும், சொல்லைப் பெய்துள்ளார். இந்தச் சொல்லைப் பாடல் அடியுடன் தொடர்புபடுத்தினால், 'தெய்வப்பெருமாள்' இரண்டாம் இராஜராஜராகிவிடுவார். மேலும், இந்தப் பாடலில் உள்ள, சீராசராசீச்சரம் என்ற சொல்தான் சரியான சொல் எனக் கொள்வோமாயின், தஞ்சாவூர் இராஜராஜீசுவர வளாகம் முழுமையுமே தங்கத்தால் தழுவப்பட்டு ஒளிர்ந்ததாகக் கொள்ள நேரும். தமிழ்நாட்டில் எந்த மன்னரும் தங்கக் கோயில் எடுத்ததாக வரலாறு கண்காட்டவில்லை என்றே நினைக்கிறேன்.

இதே ஒட்டக்கூத்தர் விக்கிரமசோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராஜராஜன் இம்மூவரையும் போற்றித் தனித்தனியை உலாக்கள் பாடியுள்ளார். இம்மூன்று உலாக்களிலும் அந்தந்த உலா மன்னர் மரபு கூறும்போது முதல் இராஜராஜரைக் குறிப்பிட்டுள்ளார். மூன்று உலாக்களிலுமே முதல் இராஜராஜர் உதகை கொண்ட செய்தியை விதந்து கூறப்பட்டுள்ளது. ஒட்டக்கூத்தருக்கு முன்னவரான ஜெயங்கொண்டார் முதற் குலோத்துங்கர் காலத்தவர். அவருடைய கலிங்கத்துப் பரணியின் இராஜபாரம்பரியப் பகுதியிலும் முதல் இராஜராஜர் குறிக்கப்பட்டுள்ளார். இங்கும் அவருடைய உதகை வெற்றியை பேசப்படுகிறது. தக்கயாகப்பரணி பாடலடி சுட்டுவது தஞ்சாவூர் இராஜராஜீசுவரம்தான் என்றால் உலாக்களிலும் அப்பெருந்தகை அந்த உயரிய செய்தியைத்தானே உவந்து பாடியிருக்க வேண்டும்? மறுபடியும் கேள்விகள், கேள்விகள்!

மிகப் பின்னாளில் எழுதப்பட்ட கருவூர்ப் புராணமும் சான்றாக்கப்பட்டுள்ளது. இந்நூல் தற்போது என்னிடமில்லை. இருப்பினும், 'பொற்கிரி' குறிக்கும் பாடல் உள்ளது. (தஞ்சைப் பெரிய கோயில், ப. 47)

நேமி நெடுவரை நிவந்த நிறைமணி மாமதிள் கோலிப்
பூமியின் எண்திசை நிலைத்த பொருப்பு எனக் கோபுரம் நிறுத்தி
கோமிளிர் பொற்கிரி எனப் பொற்கோயில் வகுத்து ஏமகிரி
யாமிது என ஏர்குவிந்தாங்கு அமைத்து ஓர் மாமணிச் சிகரம்


இப்பாடலில் மதில், கோபுரம், கோயில், சிகரம் முதலியன புகழப்பட்டுள்ளன. இந்தப் பாடலின் முன்னுள்ள பாடலும், பின்னுள்ள பாடலும் இருந்திருந்தால் நேமி, சிகரம் எனும் சொற்களின் முழுப் பொருள் பெற்றிருக்கலாம்.

மதில் - 'நேமி நெடுவரை நிவந்த நிறைமணி' உள்ளதாகப் புகழப்பட்டுள்ளது.

கோபுரம் - 'பூமியின் எண்திசை நிலைத்த (? நிறைத்த) பொருப்பு (மலை)' எனப் புகழப்பட்டுள்ளது.

கோயில் - 'கோமிளிர் பொற்கிரி எனப் பொற்கோயில்', 'ஏமகிரியாம் (பொன்மலை) இது என ஏர் (அழகு) குவிந்தாங்கு'

தஞ்சாவூர்க் கோயிலின் (இப்பாடல் புகழ்வது தஞ்சாவூர்க் கோயிலா என்பதைக் கருவூர்ப் புராணம் முழுமையும் பார்த்தால்தான் உறுதிபடக் கூறமுடியும்) மதில் நெடுவரை நிறைத்த நிறைமணி மதில் என்பதையும் தஞ்சாவூர்க் கோயிலின் கோபுரம் பூமியின் எண்திசை நிலைத்த மலை என்பதையும் உன்னால் ஏற்றுக்கொள்ளக் கூடுமானால், அதே பார்வையில், பாடலின் மூன்றாம் அடி சுட்டும் கோயிலும், பொற்கிரி எனப் பொற்கோயில், ஏமகிரியாம் இது என ஏர்குவிந்தாங்கு அமைந்திருந்ததாகக் கொள்ளலாம். அப்படிக் கொள்ளின் மீண்டும் தக்கயாகப்பரணி கூற்றுப் போலவே, பாடல் குறிக்கும் கோயில் வளாகம் முழுவதும் பொன்னால் உருவாக்கப்பட்டதாகக் கருதிச் சிகரமும் மாமணிகளால் ஆனதென மகிழ்ந்து களிகொண்டு ஆடலாம். எனக்குத் தடையில்லை.

வரலாற்றாய்வில் ஊகங்கள் கொள்வது அவரவர் விருப்பம். ஆனால், அப்படிக் கொள்வார் அவற்றை, 'ஊகங்கள்' என்று தெளிவுபட அறிவிக்கவேண்டும். எந்த ஒரு கருத்தையும் தகுதியான சான்றுகள் இல்லாமல் வரலாறாக்க முயல்வது சரியன்று. தமிழ்நாட்டு வரலாறு உண்மைகளின் பதிவாக இருக்கவேண்டுமென்று விழையும் சிலருள் நானும் ஒருவன். அதனால்தான், 'வரலாற்று உண்மைகள்' என்ற உறுதியளிப்புடன் முன்வைக்கப்படும் கருத்துக்கள், உண்மைகளாக இல்லாதவிடத்து, அதனை உலகுக்கு உணர்த்தும் பொறுப்பை ஏற்கும்படியாகிறது. இதனால், பலருக்குக் கசப்பேற்படலாம். ஆனால், வரலாறு நேராகிறது.

வரலாற்று ஆய்வாளர்களுக்கு மட்டுமல்ல, வரலாற்றின் வாயிலில் ஆர்வத்தோடு நுழைவார் அனைவருக்குமே பொறுப்புணர்ச்சி வேண்டும். யார் சொல்கிறார்கள் என்று பார்க்காமல், சொல்லப்படுவது உண்மைதானா என்று, கேட்பவர்கள் சற்றுச் சிந்தித்தாலும் போதும், உண்மைகளாய் வடிவம் காட்டும் ஊகங்களை இனம் கண்டுவிடலாம். இதைத்தானே வள்ளுவமும், 'எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு' என்று வலியுறுத்துகிறது.

அன்புடன்,
இரா. கலைக்கோவன்

this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.