http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 27
இதழ் 27 [ செப்டம்பர் 16 - அக்டோபர் 15, 2006 ] இந்த இதழில்.. In this Issue.. |
தொடர்:
கல்வெட்டுக் கதைகள்
முன்குறிப்பு : கதை கத்திரிக்காயெல்லாம் எனக்கு சுட்டுப்போட்டாலும் வராது. என்னுடைய கற்பனா சக்தி குழந்தைகளுக்குச் சொல்லும் சிங்கம் முயல் கதையோடு சரி ! வரலாறு டாட் காம் நண்பர்கள் மிகவும் வற்புறுத்திக் கேட்டுக் கொண்டதால் இதனை எழுதுகிறேன். சாமானியனான என்னுடைய முப்பது வருட மத்திய அரசாங்கப் பணியில் கதையாகச் சொல்லுமளவிற்கு பிரமாதமாக எதுவும் நடக்கவில்லை. எதுவுமே நடக்க... பொறுங்கள். ஒன்றே ஒன்று இருக்கிறது சொல்வதற்கு. மிக வித்தியாசமானதொரு அனுபவம். அதையே சற்று கதைவடிவத்தில் எழுதிக்கொண்டு போகவா? *********************************************************************************************** "கிர்....ரிங்" விடியற்காலை அலாரம் எப்போது அடித்தாலும் தொந்தரவாகத்தான் தெரிகிறது. வீம்புக்காக ஒருநாள் பத்து மணிக்கு அலாரம் வைத்தேன். என்ன நடந்தது தெரியுமா ? பத்து மணி வரை தூங்கிக்கொண்டிருந்துவிட்டு அதன் தலையில் மட்டென்று ஒரு அடி அடித்துவிட்டு அரைமணி கூடத் தூங்கிவிட்டு பத்தரைக்கு எழுந்தேன் ! கொஞ்சம் பொறுங்கள் - எங்கிருக்கிறேன் ? ஆங்...சேலத்தில். அரசினர் விடுதியில். அரசாங்கப்பணியில் வருவதால் இன்ன இடத்தில்தான் தங்கிக் கொள்ள வேண்டும் இன்ன இடத்தில்தான் ...... என்று வேண்டாத விதிமுறைகளெல்லாம் இருக்கின்றன. மூட்டைப்பூச்சியோ கொசுக்கடியோ அங்குதான் வாசம். இந்த முறை இரண்டு நாள் பயணம். நாளை மாலை சென்னைக்குக் கிளம்பிவிடுவேன். அதற்குள் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஒரு தமிழ்ப் பிராமிக் கல்வெட்டை வாசித்து - கொல்லிமலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஒரு நடுகல் கல்வெட்டைப் படியெடுத்து அதன் கால நிர்ணயத்தை சரிபார்த்து - அலுவலக வேலைகளை கவனித்துவிட்டு முடிந்தால் நாமக்கல் சென்று அதியேந்திரன் குடைவரைக் கல்வெட்டையும் சரிபார்த்து..... இரண்டு நாட்களில் நான்கு நாட்களுக்கான வேலையை அடுக்கிக்கொண்டு வந்திருக்கிறேன். இதெல்லாம் மத்திய அரசாங்கப் பணி. ஏன் எதற்கென்றெல்லாம் கேள்வி கேட்க முடியாது. தென்னகம் முழுவதிலும் உள்ள கல்வெட்டுக்களைப் படிக்க - படியெடுக்க - சரிபார்க்க - பதிப்பிக்க - என்னையும் உள்ளிட்டு இலாகாவில் நான்கே பேர்தான் ! அக்கிரமமாகத் தோன்றவில்லை ? சரி, சரி - சற்று என்னுடைய காலை வேலைகளைக் கவனித்துக்கொண்டே உங்களிடம் பேச்சுக்கொடுக்கிறேன். என்னை அம்மன்கோயில்பட்டிக்கு - அதுதான் நான் செல்ல வேண்டிய முதல் இடம் - அழைத்துச் செல்வதாகச் சொன்ன நண்பர் சரியாக மணியடித்தாற்போல் எட்டு மணிக்கு எழுந்தருளிவிடுவார். அவரை அதிக நேரம் காக்க வைத்தால் நன்றாக இராது. அவரைப் பற்றி அப்புறம் சொல்கிறேன். ....என்ன சொல்லிக் கொண்டிருந்தேன் ? தமிழ்ப் பிராமிக் கல்வெட்டு ! தமிழை பிராமியோடு இணைத்துச் சொல்வதே தவறு என்று எனக்குப் படுகிறது. தமிழின் தொன்மையை வைத்துப் பார்க்கும்போது அதற்கு முற்காலத்தில் தனியொரு எழுத்துவடிவம் ஏன் இருந்திருக்கக்கூடாது ? ஏதோ இன்றைய தேதியில் அசோகர் கல்வெட்டைவிட மூத்த கல்வெட்டு கிடைக்கவில்லை என்பதற்காக வடநாட்டிலிருந்துதான் தமிழன் எழுதும் முறையைக் கற்றுக்கொண்டான் என்று சொல்வது பேதமையாகத் தோன்றுகிறது. நாளை அசோகர் கல்வெட்டினும் மூத்த தமிழ்க் கல்வெட்டு தமிழ்நாட்டின் ஏதாவது மூலையில் அகப்பட்டுவிட்டால் ? (1) அதற்காகக்தான் நாடுமுழுவதும் அலைந்து.... அடக்கடவுளே ! எடுத்தவுடன் என்னைப் பற்றி ஒரு முறையான அறிமுகம்கூட செய்துகொள்ளாமல் பிராமி அது இது என்று உங்களிடம் உளறிக்கொண்டிருக்கிறேன் ?.... தவறாக நினைத்துக்கொள்ளாதீர்கள். அடியேனுக்கு மத்திய அரசின் தொல்லியல் அளவீட்டுத் துறையில் - பயந்துவிடாதீர்கள் - சுருக்கமாக ஏ.எஸ். ஐ (ASI) என்று சொல்வார்களே அந்த நிறுவனத்தில் வேலை. கல்வெட்டாய்வாளன். Epigraphist என்பார்கள் ஆங்கிலத்தில். கோயில் கோயிலாகப் போய் தென்னகம் முழுவதுமிருக்கும் கல்வெட்டுக்களைப் படியெடுக்கும் வேலை. Junier Epigraphist, Epigraphist, Senior Epigraphist, Archaeologist, Suprending Archaeologist - தலை சுற்றுகிறதா ? (1) கதை எண்பதுகளில் நடப்பதாகக் கொள்க. இந்நாளில் தமிழ் எழுத்து வடிவம் பிராமிக்கு மூத்தது என்பது ஐயந்திரிபற நிரூபிக்கப்பட்டு விட்டது. பார்க்க வரலாறு டாட் காம் இதழ்கள் 22, 23 இன்றைக்கு முதலில் போகவேண்டிய அம்மன்கோயில் பட்டியைப் பற்றிச் சொல்லிவிடுகிறேன். இங்கு பண்டைய தமிழ்க் கல்வெட்டு இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டு செய்தித்தாள்களிலும் வந்துவிட்டது. நான் வந்திருப்பது படியெடுத்த கல்வெட்டைச் சரிபார்த்து இலாகாவின் வருடாந்திரக் கல்வெட்டு வெளியீட்டில் - ARE என்று சொல்வார்களே, கேள்விப்பட்டதில்லை ? - அதில் வெளியிட்டாக வேண்டும். மிகப் பெரிய வேடிக்கையென்ன தெரியுமா ? கடந்த பத்து பன்னிரண்டு வருடங்களாக எடுக்கப்பட்ட கல்வெட்டுகளே இன்னும் வெளியாகி முடிக்கவில்லை. இன்று பதிவு செய்யப்போகும் கல்வெட்டு எந்த யுகத்தில் பதிப்பாக வெளிவருமென்பது யாருக்குமே தெரியாது. அப்படி ஏற்கனவே வெளியான அறிக்கைகளும் கல்வெட்டுச் சுருக்கங்கள்தான் - மூலப்பாடங்கள் கிடையாது. அப்படியிருந்தும் ஏன் தொடர்ந்து கல்வெட்டுக்களைப் படியெடுத்துக்கொண்டிருக்கிறாய் என்று கேட்கிறீர்களா ? மூச் ! அதையெல்லாம் அரசாங்கப் பணியிலிருப்பவன் பேசக்கூடாது. எவன் சார் நாட்டில் கல்வெட்டுக்கள் பதிப்பிக்கவேண்டுமென்று அழுகிறான் ? என்பார்கள். "அதற்கெல்லாம் பட்ஜெட் கிடையாது - Priority sector இல்லை..." என்று ஆயிரம் வியாஜ்ஜியங்கள். அதுசரி, உங்களிடம் நான் வேலை செய்யும் இலாகாவைப்பற்றியே மனம்விட்டுப் புலம்பிக்கொண்டிருக்கிறேனே - உங்களில் யாரும் எனக்கெதிராக மொட்டைக்கடுதாசி எழுதிவிடமாட்டீர்கள்தானே ? அப்படி எழுதினாலும் கவலையில்லைதான். தண்ணியில்லாக் காட்டுக்கு மாற்றிவிடுவேன் என்று யாரும் என்னை பயமுறுத்த முடியாது. ஏனெனில் நான் அலைந்து திரிவதே மனித நடமாட்டமில்லாத பாழடைந்த கோயில்கள் - குளம் குட்டைகள் என்றுதானே ? சொல்ல வந்ததை விட்டுவிட்டு என்ன என்னமோ புலம்பிக்கொண்டிருக்கிறேன் பாருங்கள் - இதுதான் என்னுடைய மிகப்பெரிய பிரச்சனை. அம்மன் கோயில் பட்டியைப் பற்றியல்லவா சொல்லிக்கொண்டிருந்தேன் ? சுருக்கமாக அ.பட்டி என்று குறிப்பிட்டுக்கொள்வோம் (மதுரைப் பக்கத்தில் ஊர்களுக்கெல்லாம் கூட இனிஷியல் உண்டாம் - இப்படிப் பெரிய கிராமத்தின் பெயர்களைத்தான் இனிஷியல் வைத்து சுருக்கிவிட்டார்கள் போலும் !). அ.பட்டி தமிழ்நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான கிராமங்களில் ஒன்று. இன்னும் நாகரீகத்தின் எச்சம் எட்டிப் பார்க்காத இடம் என்று நண்பர் சொன்னார். அங்குபோய் ஒரு பண்டைய தமிழ்க் கல்வெட்டு ஒளிந்துகொண்டிருக்கிறது பாருங்கள் - அதைச்சொல்ல வேண்டும் ! இந்த சேலம் - தருமபுரி மாவட்டம் முழுவதிலுமே பண்டைய மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் கிடைக்கின்றன. அதியமான் கோட்டை (காரணப் பெயர் !) என்றொரு ஊருக்குப் போகவேண்டும் நீங்கள்.... மண்ணை எங்கு தோண்டினாலும் பண்டைய பானையோடுகள் - அணிகலன்கள் - கொஞ்சம் அதிருஷ்டமிருந்தால் தங்கக் காசுகள் கூடக் கிடைக்கும். கிடைத்திருக்கிறது. தருமபுரி அருங்காட்சியகத்திற்குச் சென்று பாருங்கள். சேலத்திலிருந்து தாரமங்கலத்திற்குச் செல்லும் வழியில் அமைந்திருக்கிறதாம் நமது அ.பட்டி. தாரமங்கலம் சிவன் கோயில் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்தானே...? பல்லவர் சோழர் அளவுக்குப் பழமையானதென்று சொல்ல முடியாது. என்றாலும் இங்கே குறுநில மன்னர்களாக ஆட்சிபுரிந்த கெட்டி முதலி மன்னர்களின் கலைப்பணியை - கலைப் பாணியை - புரிந்துகொள்ள சிறந்த இடம். அங்கு கைடுகள் என்கிற பெயரில் அலைந்து திரிந்துகொண்டிருக்கும் மனிதர்களிடம் மாட்டிக்கொண்டுவிடாதீர்கள் ! வெளியில் வரும்போது கருவறையிலிருக்கும் இறைவன் இறைவியைவிட உங்கள் காதுகளில்தான் அதிகமாக மலர் அலங்காரங்கள் தொங்கிக்கொண்டிருக்கும். அ.பட்டியைப் பற்றிச் சொல்வதற்கு அதிகமில்லை. கிராமமென்று சொல்லிவிட்டுப் போங்கள். அல்லது குக்கிராமம் என்றுகூடச் சொல்லிக்கொள்ளுங்கள் - பட்டிக்குக் கோபம் வருமென்று தோன்றவில்லை. இந்தப் பட்டியில் பழங்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் ஏதாவது கிடைக்குமா என்று ஆராய வேண்டும். பாவம், கிராமத்து மனிதர்களுக்கு பண்டைய மண்பாண்டங்கள் பனையோடுகள் பற்றித் தெரிவதில்லை. ஏதோ மண் சட்டி என்று வெளியிலெறிந்துவிடுகின்றனர். இன்றைக்குச் சிறிது நேரமெடுத்துக்கொண்டு அந்தப் பகுதியை ஆராய வேண்டும். ஒரு இடத்திற்குச் சென்றாலும் உருப்படியாக அங்கே வேலை செய்துவிட்டு வரவேண்டும் என்பதுதான் என் கொள்கை. என்னை அ.பட்டிக்குக் கூட்டிக்கொண்டுபோக நண்பர் வருவார் என்று சொன்னேனல்லவா ? அவரை இனிமேல் "புலவர்" என்கிற அடைமொழியுடன் அழைப்போம். அந்தக் காலத்தில் ஏதோ தமிழ்ப் புலவர் தேர்வில் வெற்றி பெற்றாராம். அதிலிருந்து அனைவரும் அவரைப் புலவர் என்றே அழைக்கத் துவங்கிவிட்டார்களாம். புலவர் என்றதும் சங்ககாலப்புலவர்கள்தான் ஞாபகத்துக்கு வருகின்றனர். கிழிந்த அல்லது ஒட்டுப்போட்ட பட்டாடைகள் - அதனை மறைக்கும் உத்திரீயம் - வெகுவாக வறுமையில் இளைத்துத் துரும்பாகிப்போன உடம்பு - அப்படிப்பட்ட உடம்பையும் கர்வத்தோடு தலைநிமிர்த்தி நடக்கத்செய்யும் கல்வி - தன்மானம் - நல்ல வேளை, நமது நண்பருக்கு... மன்னிக்கவும்... புலவருக்கு இந்த வர்ணனைள் அத்தனையும் பொருந்தாது. அதனால் வேறு விதமான சித்திரத்தை உங்கள் மனதில் தீட்டத்துவங்குங்கள். வெள்ளை வெளேரென்று வெளுத்த தலை. நரை மீசை. சிரிக்கும் கண்கள். வெள்ளைச் சட்டை - வேட்டி. பேச்சில் / நடத்தையில் எளிமை - சிரிப்பில் தாராளம். இத்தனையும் சொல்லிவிட்டு அவர் தமிழாசிரியராக முப்பது வருடம் பணிபுரிந்து ஓய்வு பெற்றுவிட்டார் என்பதையும் சொல்லிவிட்டேனானால் அந்தச் சித்திரம் பூர்த்தியாகிவிடாதா ? புலவர் ஐந்து வார்த்தைகள் பேசினால் அதில் ஐந்து நகைச்சுவைத் துணுக்குகள் இருக்கும். பழகுவதற்கு மிக இனிமையான மனிதர். தொன்மை நிலப்பரப்பான சேலம்- நாமக்கல் வட்டத்தில் இவர் கால்படாத கிராமங்கள் இல்லை என்னுமளவிற்கு கல்வெட்டுக்களையும் தொல்லியல் தடயங்களையும் தேடி அலைந்திருக்கிறார். ஒரு அங்கீகாரம் - ஒரு விருது....ம்ஹூம் ! இன்றுவரை எவரும் இவரது பணியைப் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. புரிந்துகொண்டால்தானே பாராட்டும் அங்கீகாரமும். கிடக்கட்டும். இதையெல்லாம் எதிர்பார்த்துப் பணியில் ஈடுபட்டவரில்லை அவர். ஏதோ தொல்லியல் துறையில் அபரிமிதமான ஒரு ஈடுபாடு அவ்வளவுதான். நான்கூட இந்த மத்திய அரசாங்கப்பணி கிடைக்கவில்லையென்றால் வேறு தொழில் செய்துகொண்டே இந்த வேலையையும் தொடர்ந்திருப்பேனோ என்னவோ.... புலவருக்கும் எனக்கும் பதினைந்து வருடப் பழக்கம். ஒவ்வொரு முறை சேலத்திற்கு வரும்போதும் அவரைப் பார்க்காமல் செல்வது கிடையாது. நேரமாகிவிட்டதே ! டாணென்று குறிப்பிட்ட நேரத்திற்குள் வந்துவிடுவார். இருங்கள், சட்டை - கால்சட்டை அணிந்துகொண்டு விடுகிறேன். *********************************************************************************************** "இந்தப் பாதைதான் - இப்படியே போய் இடதுபுறம் திரும்பினால்..." என்றார் புலவர் டிரைவரைப் பார்த்து. திரும்பவே முடியவில்லை. நெடுஞ்சாலை நேராக தர்மபுரிக்கே மீண்டும் என்னைக் கொண்டுபோய் சேர்த்துவிடும் போலிருந்தது. "நிச்சயமாக இந்தச் சாலைதானா - ஒரு முறை நிதானமாக யோசியுங்கள்...." "அது...வந்து... அம்மன்கோயில்பட்டிக்கு வந்து சில நாட்களாகிவிட்டதா...அதனால்தான்..." "என்ன இழுக்கிறீர்கள் ? கடைசியாக வந்தது எப்போது ?" "அது கிடக்கும் - ஒரு பத்து பதினைந்து வருஷம் !" என்றார். "சரியாய்ப் போயிற்று !" என்றேன். வண்டி "அடியைப் பிடியடா பரத பட்டா" என்று மீண்டும் சேலம் நோக்கி வந்த பாதையிலேயே திரும்பியது. அப்புறம் அங்கும் இங்கும் விசாரித்து சரியான பாதையைப் பிடித்து பத்து நிமிடங்கள்கூடப் போயிருக்க மாட்டோம்..... சாலை முடிவுக்கு வந்துவிட்டது ! "அட யாரப்பா ! தாரமங்கலத்துக்குப் போகும் சாலை இதுதானே..."என்று விசாரித்தார் புலவர். "அத ரோடு போடறதுக்காக மூடிட்டாங்க சாமி - இதோ இங்ஙன சுத்திக்கிட்டு...." அந்த மாங்காய்க் கிழவி சொன்ன வழிதான் சரியான வழியாக இருந்தது. சிறிது தூரம் அவள் சொன்ன வழியில் வண்டி சென்றவுடன் ஒரு சிறிய போர்டு "அம்மன்கோயில்பட்டி" என்று அறிவித்தது. ஒரு வழியாக ஊருக்குள் நுழைந்தோம். *********************************************************************************************** "ஊர்" என்பது வெறும் ஒற்றைத்தெரு. நீ.....ண்டுகொண்டே செல்லும் மண்சாலையில் ஒன்றரை கி.மீ வண்டியைச் செலுத்தியதும் சிறிய தீப்பெட்டி வீடுகள் தென்பட ஆரம்பித்தன. "கிராமத்தில் எங்கே தமிழ்பிராமி எழுத்துக்கள் எந்தப் பகுதியில் இருக்கின்றன என்று ஞாபகம் இருக்கிறதா ?" என்று புலவரை விசாரித்தேன். "அதைத்தான் யோசித்துக்கொண்டிருக்கிறேன்.... அது அ.பட்டி தாண்டி..ம்.... இன்னொரு குக்கிராமம் வருமே...." "அட ஆண்டவா ! நாம் அங்கு போய்ச்சேர்ந்தார்ப்போல்தான் !" "அலுத்துக்கொள்ளாதீர்கள் ! பிடித்துவிடுவோம்..." என்று நம்பிக்கையூட்டிய புலவர் அங்கு கோலி விளையாடிக்கொண்டிருந்த சிறுவனைப் பிடித்தார். எங்கு சென்றாலும் பத்து பன்னிரண்டு வயதுச் சிறுவர்களைத்தான் முதலில் பிடிப்பார். அவர்களிடம் இது என்ன அது என்ன என்று ஒரே கேள்விகள் ! ஓய்வு பெற்றுவிட்டாலும் மேல்நிலைப் பள்ளி பாசம் அவரை இன்னமும் பிடித்தாட்டிக்கொண்டிருக்கிறது போலும் ! "டேய் தம்பி, இங்கே வா !" அவன் தன்னுடைய இணைபிரியாத சைக்கிள் டயரை டுர்.....என்று விட்டுக்கொண்டே வந்தான். ஏறக்குறைய புலவரை நெருங்கும் சமயத்தில் டயருக்குக் கோபம் வந்து வேறு பாதையில் திரும்பிவிட - அவனுக்குள் புலவரா டயரா என்கிற தீர்மானம் ஷணத்தில் ஏற்பட்டு டயர்தான் ! என்று முடிவுசெய்து வேறுபக்கம் ஓடிவிட்டான் ! இந்த ஆட்டத்தைச் சகிக்க முடியாமல் நானும் கீழிறங்கி பக்கத்தில் தென்பட்ட வீட்டில் விசாரித்தேன். "ஏனம்மா - இந்த ஊரில் பாறையில் எழுத்துக்கள் (நம்ம ஊரில் கல்வெட்டுக்கள் என்றெல்லாம் சொன்னால் பேந்தப் பேந்த விழிப்பார்கள் ! பாறை - எளுத்து - அம்புட்டுத்தான் !) எங்கே இருக்கின்றன என்று....." அந்தப் பெண் என்ன நினைத்துக்கொண்டதோ - "ஏனுங்க..." என்று இழுத்தாற்படியே ஓடிவிட்டது. அப்புறம் அந்த வீட்டுக் கிழவர் வந்துதான் வழிசொன்னார். "இப்படியே போனீங்கன்னா அம்மன் கோயில் வரும் - அங்ஙனயே வண்டியை நிறுத்திவிட்டு தெற்கால நடக்க வேண்டியதுதான்.... நத்தமேடு தாண்டி வரும்..." புலவருக்கு வாயெல்லாம் சிரிப்பு. "பரவாயில்லையே - சரியாக வழி சொல்கிறார்களே - நம்மைப் போன்ற "கேசுகள்" பலதும் கல்வெட்டுக்களைத் தேடிக்கொண்டு வந்திருக்கும் போலிருக்கிறதே...." "கிண்டலெல்லாம் அப்புறம் - பேசாமல் வாருங்கள் !" என்று அவரைப் பிடித்து வண்டியில் போட்டுவிட்டு அம்மன் கோயில் நோக்கிக் கிளம்பினோம். "நத்தமேடு என்னும் பெயர் பற்றி யோசித்தீர்களா - நத்தம் என்றால் பழமை என்றொரு அர்த்தம் உண்டு. நத்தமேடு என்றால் பழமையான மேடு என்று அர்த்தம் - ஒருவேளை அங்கு தோண்டினால்...." "பேசாமல் இருங்கள் - நேராக கல்வெட்டுக்குப் போவது - படியெடுப்பது - கிளம்புவது - என்றிருக்க வேண்டும் ! வேலையை விட்டுவிட்டுத் தோண்டுதல் ஆராய்ச்சிக்கெல்லாம் தூண்டினீர்களானால் அவ்வளவுதான் !" புலவர் கெக்கலித்துச் சிரித்தார். அவருக்கு என்னுடைய பலகீனம் அத்துப்படியாக தெரியும். போகிற வழியில் யாராவது "அட, இந்தப் பானை ஓடு சற்று பழமையானதாக இல்லை !" என்று வியந்தால்கூட அங்கேயே நான்கு நாட்கள் டெண்ட் அடித்து விடுவேன். அதெல்லாம் ஒரு காலம் ! இப்போதும் அந்த பூதம் மனதின் ஒரு ஓரத்தில் ஒளிந்துகொண்டுதான் இருக்கிறது - அதனைத்தான் புலவர் சற்று சீண்டிவிட்டுப் பார்க்கிறார். என்னுடைய எண்ணங்களை முழுமையாகப் புரிந்துகொண்டதால்தான் அந்த கெக்கலிப்பும் சிரிப்பும். "புலவரே ! வீட்டாரைப் பற்றிச் சொல்லுங்கள் - வீட்டில் அனைவரும் செளகரியம்தானே !" "என் மனைவிக்கு இவர் திருந்தமாட்டார் என்பது தெளிவாகிவிட்டது. அதனால் இருவரும் ஒரு ஒப்பந்தத்துக்கு வந்துவிட்டோம். பகலில் எங்கே சுற்றித்திரிந்தாலும் இரவு பத்து மணிக்குள் வீடுதிரும்பிவிடுவேன் என்று வாக்குக் கொடுத்திருக்கிறேன் !" "ஓய்வு பெற்றுவிட்டு பேசாமல் வீட்டிலிருந்தபடி ஓய்வெடுத்துக்கொள்ளவேண்டியதுதானே.." "அழைக்காதே.... நினைக்காதே..." என்று மெல்லிய குரலில் பாடினார் புலவர். அது ஒரு பழைய பாடல். அந்தப் பாடலில் பூவுலகில் ஒரு புல்லாங்குழல் வாசித்தால் தேவலோக மங்கை அப்படியே சொருகிச் சொருகி இழுக்கப்படுவாள். ஒரு இக்கட்டான சமயத்தில் அவள் இருக்கும்போது கதாநாயகன் அந்தக் குழலை வாசிப்பான். அவளால் வரவும் முடியாமல் வராமல் இருக்கவும் முடியாமல் தர்மசங்கடமான நிலையில் இருக்கும்போது அந்தப் பாடலைப் பாடுவாள். இதற்கு என்ன அர்த்தம் என்றால் அந்தப் புல்லாங்குழலைப்போல் தொல்லியல் ஆர்வம் புலவரை இழுக்கிறதாம் ! அந்த இழுப்பை தட்டவும் முடியாமல் வெட்டவும் முடியாமல் புலவர் தர்மசங்கடத்திலிருக்கிறாராம் ! அடக்க முடியாமல் நானும் சிரித்தேன். இதற்குள் அம்மன்கோயில் பட்டியின் "அம்மன் கோயில்" வந்துவிட்டது. "இறங்குங்கள் ! இதற்குமேல் "நட - ராஜா" சர்வீஸ்தான் !" இருவரும் இறங்கி அந்த மனோகரமான சுற்றுப்பிரதேசத்தை ஒருமுறை பார்த்துக்கொண்டோம். கண்ணுக்கு முன்னால் பருத்தி வயல்கள். அதனைத்தாண்டி தென்னை மற்றும் பல மரங்கள். மிக அழகான நாகரீக வெளிச்சம் படாத பிரதேசத்திற்கு வந்துவிட்டோம். (தொடரும்...) this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |