http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[180 Issues]
[1786 Articles]
Home About US Temples Facebook
Issue No. 37

இதழ் 37
[ ஜூலை 16 - ஆகஸ்ட் 15, 2007 ]


இந்த இதழில்..
In this Issue..

தமிழ்ப்பண்பாடு மீட்டுருவாக்கம்
இராவண அனுக்கிரகமூர்த்தி
திரும்பிப் பார்க்கிறோம் - 9
கட்டடக்கலை அருஞ்சொற்பொருள் விளக்கம்
ஆடற்கலை வாயிலாக அறியப்படும் தமிழின் தொன்மையும் தமிழர் பெருமையும் - 2
திருவாலித்திருமகன்
Agricultural Terms in the Indus Script - 1
அங்கும் இங்கும் - 1
Links of the Month
தொலைந்ததெல்லாம் கிடைக்கும்!
சங்ககாலத்து உணவும் உடையும் - 2
இதழ் எண். 37 > தலையங்கம்
தமிழ்ப்பண்பாடு மீட்டுருவாக்கம்
ஆசிரியர் குழு
வாசகர்களுக்கு வணக்கம்.

இந்த இதழுடன் மூன்றாண்டுகளை நிறைவு செய்யும் வரலாறு.காம் ஒவ்வொரு ஆண்டும் வாசகர் வட்டம் பேரளவில் விரிவடைவதை எண்ணிப் பேருவகை கொள்கிறது. தினசரி பார்வையிடுவோரின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியதும் இந்த ஆண்டில்தான். வெறும் எண்ணிக்கைக் கணக்குக்காக இதைச் சொல்லவில்லை. வெவ்வேறு துறைகளில், நாடுகளில் இருக்கும் ஐந்துபேர் பிரதிபலன் எதையும் எதிர்பாராது தொடர்ந்து மூன்றாண்டுகளுக்கும் மேலாக எந்தத் தொய்வுமின்றி நடத்த முடிகிறது என்றால், தமிழக வரலாற்றின்மீது ஈர்ப்புக் கொண்ட இலட்சக்கணக்கான தமிழர்கள் சிறுசிறு குழுக்களாக இணைந்து செயல்பட்டால் எத்தகையதொரு தமிழ் வரலாற்றுப் புதையலை உலகுக்களிக்க முடியும் என்பதற்கு ஓர் உதாரணமே இது.

நான்காவது ஆண்டின் முதல் இதழாக மலர இருக்கும் அடுத்த மாத இதழை இராஜசிம்மன் சிறப்பிதழாகக் கொணர ஆசிரியர் குழு முடிவு செய்துள்ளது. மேலும், இந்த இதழ் முதல், வரலாறு தொடர்பான கருத்தரங்குகள் மற்றும் நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை 'அங்கும் இங்கும்' என்ற பகுதியில் வெளியிடும் என்ற செய்தியையும் தெரிவித்துக் கொள்கிறோம். இதுவரை நாங்கள் தரும் செய்திகளை மட்டுமே படித்துவந்த வாசகர்கள், இனித் தாங்கள் கற்றுணர்ந்த செய்திகளையும் பிற வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இதற்கான அறிவிப்பு அடுத்த இதழில் வெளியிடப்படும்.

அடுக்கடுக்காகப் பல மகிழ்ச்சிகளைப் பகிர்ந்து கொள்ளும் இந்நல்லோரையில், தமிழ் வரலாறு தொடர்பான இரண்டு தலையாய பணிகளை வாசகர்க்கு நினைவூட்டி, தொடர்புடையோரை முயற்சிகளைத் துரிதப்படுத்த வலியுறுத்த விழைகிறோம். 'தமிழ்மொழி மேம்பாட்டு வாரியம்' அமைத்து, தமிழ்மொழி தொடர்பான பிரச்சினைகளுக்கு முன்னுரிமை தந்து செயல்படும் தமிழக அரசிடம் இந்த இரு கோரிக்கைகளும் வைக்கப்பெற்றுள்ளன.

முதலாவது, தமிழ்மொழிக் கலைச்சொல் உருவாக்கம். தமிழ்மீது ஆர்வம் கொண்ட தமிழ்நாட்டிலும் பல்வேறு நாடுகளிலும் பணிபுரியும் அறிவியலாளர்களின் முயற்சியால் அறிவியல் தமிழ் சிறப்பாக வளர்ந்து வருகிறது. அறிவியல் தமிழைப் போலவே கலைத் தமிழும் வளர வழிகாண வேண்டியது, கலையை நேசிக்கும் ஒவ்வொரு தமிழனின் கடமை. தமிழகத்தைத் தமிழரல்லாதோர் மற்றும் தமிழுக்கு முன்னுரிமை தராதோர் ஆட்சி புரிந்த காலங்களில் பிறமொழிச் சொற்கள் தமிழுடன் இரண்டறக் கலந்து, தமிழ் எது, தமிழ் அல்லாதது எது என்று தமிழனைத் தடுமாறவைக்கும் நிலை ஏற்பட்டது. அந்த மயக்கம் நம் காலத்தில் நம் முயற்சியால் களையப்பட்டால், தமிழ் கூறும் நல்லுலகம் என்றும் நம்மை வாழ்த்திக் கொண்டிருக்கும். குன்றக்குடி தமிழ்மடம் வெளியிடும் 'மக்கள் சிந்தனை' மாத இதழில் இது தொடர்பான விவாதம் இடம்பெற்று, தமிழக அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியைக் கீழே தருகிறோம்.




அறிஞர் திரு. தமிழண்ணல் மக்கள் சிந்தனை இதழுக்கு மே 2007ல் எழுதிய கடிதம் :

தமிழ்ப் பண்பாட்டை மீட்டுருவாக்கம் செய்யத் தமிழக அரசுக்கு வேண்டுகோள்

தமிழைச் செம்மொழி - செவ்வியல் மொழி எனச் சீர்தந்த சிறப்புக்கு ஏற்ப, அமையவிருக்கும் "செம்மொழி உயர்தகவு ஆய்வு மையத்தில்" இடைக்காலத்தே களப்பிரர், பல்லவர், நாயக்கர் ஆட்சிகளிலும் புத்த, சமண, வைதிக சமயக் கலப்பாலும் பிறமொழிமயமாக்கப்பட்ட அனைத்துக் கலைகளையும் பெயர்களையும் சொற்களையும் தொழில் சார்ந்தவை - சமயம் சார்ந்தவை என்பன எல்லாவற்றையும் மீட்டுருவாக்கம் செய்து, தமிழாக்க வேண்டுகிறோம்.

- தமிழண்ணல்

முனைவர் இரா.கலைக்கோவன் ஜூன் 2007ல் இதற்கு எழுதிய கடிதம் :

ஒரு வேண்டுகோள்

"தமிழ்ப் பண்பாட்டை மீட்டுருவாக்கம் செய்யத் தமிழக அரசுக்கு வேண்டுகோள்" பார்த்தேன். திரு. ம. மணிக்குத்தான் நன்றி சொல்லவேண்டும். கடந்த பதினைந்து ஆண்டுகளாகப் பல அரங்குகளில் தமிழறிஞர்கள் கல்வெட்டு, கோயிற்கலைகளைப் பற்றி ஈடுபாடு கொள்ள வேண்டுமெனக் கேட்டு வரும் எனக்கு, அறிஞர் பெருந்தகை திரு. தமிழண்ணல் அவர்களின் வேண்டுகோள் மகிழ்வளித்தது. என்றாலும், இந்த வேண்டுகோள் எந்த அளவிற்குப் பயன் தரும் என்பதில் அய்யம் இருக்கிறது. தமிழ்நாடு அரசின் வரலாற்று வல்லுநர் குழு, கல்வெட்டாய்வுக் குழு, ஆவணக் காப்பக ஆலோசனைக் குழு, பல்கலைக்கழகங்களின் தமிழ் மேம்பாட்டுக்குழு இவற்றின் செயற்பாடுகளை உள்ளிருந்து பார்த்த அநுபவம்தான் அய்யத்திற்குக் காரணம்.

அரசிற்கு வேண்டுகோள் வைப்பதைவிட ஆய்ந்தறிந்த அறிஞர் பெருமக்கள் இப்பணியைச் செய்வது பெரும் பயன் தரும். 'பூசகர்' எனுஞ்சொல் வடசொல் அன்று என்பதை அறிஞர் தமிழண்ணல் எவ்வளவு விரிவாக விளக்கியுள்ளார். 'பூசெய' அறிஞர் வீ.ப.கா. சுந்தரனார் விளக்கி அறிந்தேன். 'பூசகர்' இன்றுதான் தெளிவாயிற்று. இந்தத் தெளிவைத் தமிழாய்ந்த பெருமக்களே தரமுடியும். குன்றக்குடித் திருமடமே இவ்வரும் பணியைச் செய்யலாம். வணக்கத்திற்குரிய அருள்திரு குருமகாசந்நிதானம் அவர்களும் அறிஞர் பெருந்தகை திரு. தமிழண்ணல் அவர்களும் தகுதி சான்ற ஆய்வறிஞர் குழு கொண்டு இப்பணியை நாளையே தொடங்கலாம். இதன் வழித் தமிழின் சொல்வளம் பெருகுவதுடன் ஆய்வுக்கட்டுரைகளும் நற்றமிழில் அமைய வாய்ப்பேற்படும்.

தமிழ்நாட்டுக் கோயில்களிலிருந்து படியெடுக்கப்பட்ட முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் இன்றுவரை வெளியிடப்பெறாமல் மைசூரிலுள்ள கல்வெட்டு நிறுவனத்தில் சிதைந்து கொண்டிருக்கின்றன. 1909க்குப் பிறகு படியெடுக்கப்பட்ட இக்கல்வெட்டுகளின் பாடங்கள் இன்றியே தமிழ்நாட்டு வரலாறு எழுதப்பட்டு வருகிறது. இவற்றை வெளியிட வேண்டி, தமிழ்நாட்டரசின் முதலமைச்சர் மாண்புமிகு முதல்வர் கலைஞர் அவர்களுக்கு எழுதியுள்ளேன். மாண்புமிகு நிதியமைச்சர் பேராசிரியர் திரு. க.அன்பழகன் அவர்களிடம் நேரிலேயே விளக்கி வேண்டுகோள் மடல் தந்துள்ளேன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பெருந்தலைவர் தோழர் இரா. நல்லகண்ணு அவர்கள் அரங்கமொன்றில் நான் ஆற்றிய உரைகளையும், வைத்த வேண்டுகோளையும் கேட்டுத் தாமே முன்வந்து விவரங்கள் பெற்று மாண்புமிகு முதல்வரிடம் நேரிடையாகத் தந்துள்ளார். இவையெல்லாம் நிகழ்ந்து ஆறு திங்கள்கள் ஓடிவிட்டன.

இந்த முயற்சிகளைக் கடந்த பத்தாண்டுகளாகப் பல தளங்களில் நான் செய்துவருகிறேன். இன்றுவரை பயனில்லை. முயற்சிகளில் தோற்றுப்போய், என்வரை என் தமிழுக்கு என்ன செய்ய முடியுமோ அதைச் செய்வதில் நிறைவு கண்டு வருகிறேன். இது போன்ற அனுபவ வலிகள்தான் அறிஞர் தமிழண்ணலின் அரசுக்கான வேண்டுகோள் நிறைவேறுமா என்பது குறித்த அய்யத்தைத் தந்துள்ளது. தமிழைச் செழுமைப்படுத்த ஆர்வமுள்ளவர்கள்தான் முயலவேண்டும். எளிய அளவினதாக இருந்தாலும், ஏதேனும் அமையும். தமிழைச் செழிக்கச் செய்யும் முயற்சிகளின் முதல் அறிவிப்பை அடுத்த 'மக்கள் சிந்தனை' இதழில் எதிர்பார்க்கலாமா?

- இரா.கலைக்கோவன்

'மக்கள் சிந்தனை' ஆசிரியரின் மறுமொழி :

'மக்கள் சிந்தனை' சிறப்பாசிரியர் தவத்திரு அடிகளார் அவர்கள் ஜூன் 8, 2007ல் தமிழ்மொழி மேம்பாட்டு வாரியத் தலைவருக்கு இது குறித்து வேண்டுகோள் கடிதம் எழுதியுள்ளார். பொறுத்துப் பார்க்கலாம்.

- ஆசிரியர், மக்கள் சிந்தனை




அடுத்தகட்ட நடவடிக்கைகளை நாமும் பொறுத்திருந்து பார்ப்போம். கலைச்சொற்கள் எளிய தமிழில் உருவாகி, அனைத்துத்தள மக்களும் பெருமளவில் பயன்படுத்தினால், 'மெல்லத் தமிழினிச் சாகும்' என்ற வெகுஜன எண்ணம் மாறி, 'வெல்லத் தமிழினி வெல்லும்' என்ற நேர்மறைச் சிந்தனை தோன்றித் தமிழை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் என்பதில் ஐயமில்லை.

இரண்டாவது, படியெடுக்கப்பட்ட கல்வெட்டுகளைப் பதிப்பித்தல். மைசூரிலுள்ள கல்வெட்டுப் படிகளைத் தமிழகத்திற்குக் கொணர்ந்து பதிப்பிக்கும் பணியைப் பற்றி ஏற்கனவே பல்வேறு இடங்களில் பல்வேறு குழுக்களிடம் ஆலோசித்தாகிவிட்டது. அரசுத்துறையில் உயர் பொறுப்பில் இருப்பவர்களின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதற்கான வழிமுறைகள், செயல்திட்டம் ஆகியவை குறித்து தமிழக அமைச்சர்களும் உயரதிகாரிகளும் வரலாற்றறிஞர்களான முனைவர் கா. இராஜன், முனைவர் சு. இராஜவேலு, பேராசிரியர் க. நெடுஞ்செழியன் மற்றும் முனைவர் இரா. கலைக்கோவன் ஆகியோருடன் கலந்துரையாடி, நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். தமிழ் வரலாற்றின் மீது பற்றுக்கொண்ட நிதியமைச்சர் பேராசிரியர் க. அன்பழகனும் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனருடன் இணைந்து முயற்சி எடுத்து வருகிறார். இதைத்தவிர, பல்வேறு தனியார் அமைப்புகளும் இதைப்பற்றிக் குரல் கொடுத்தாலும், என்ன காரணத்தினால் இது மேன்மேலும் தாமதப்பட்டுக்கொண்டே இருக்கிறது என்பது யாருக்கும் புரியாத புதிராகவே இருக்கிறது. மொழியா, சாதியா, இனமா என இன்னதென்றே அடையாளம் தெரியாத முகம் காட்டாத எதிரியுடன் மோதுவதைப்போல் இருக்கிறது. மாநில அளவில் தீர்க்கப்பட முடியாத இப்பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டால் நல்வழி பிறக்க வாய்ப்பிருக்கிறது. அந்தநாள் கூடிய விரைவில் வரும் என்று நம்பிக்கை கொள்வோமாக.

அன்புடன்
ஆசிரியர் குழு
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.