http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 39

இதழ் 39
[ செப்டம்பர் 16 - அக்டோபர் 15, 2007 ]


இந்த இதழில்..
In this Issue..

வரலாற்று முடிவுகளும் மதநம்பிக்கைகளும்
நல்லூர்ப் பஞ்சரங்கள்
திரும்பிப் பார்க்கிறோம் - 11
பிள்ளையார் வழிபாட்டின் தோற்றமும் வளர்ச்சியும்
திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை வட்டெழுத்துக் கல்வெட்டுகள்
அங்கும் இங்கும் (செப். 16 - அக். 15)
The Gajabahu Synchronism
காதலியின் கவலையும் சங்க கால வேட்டையும்
சங்ககாலத்து உணவும் உடையும் - 3
இதழ் எண். 39 > கலைக்கோவன் பக்கம்
பிள்ளையார் வழிபாட்டின் தோற்றமும் வளர்ச்சியும்
இரா. கலைக்கோவன்
தமிழர் வாழும் இடமெல்லாம் இன்று தழைத்துப் பெருகியிருக்கும் பிள்ளையார் வழிபாடு, தமிழ்நாட்டில் எந்தக் காலத்தில் தோன்றியதென்பது குறித்துப் பல ஆய்வுகள் நிகழ்ந்துள்ளன. எனினும், அவற்றுள் எந்த ஆய்வும் திடமான முடிவுகளை முன்வைக்காமை பெருங்குறையே.

தமிழர் வரலாறு போதுமான சான்றுகளைக் கொண்டு தொடங்குவது சங்க காலத்திலிருந்துதான். கி.மு மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி இரண்டாம் நூற்றாண்டு வரை செழித்திருந்த இச்சங்க காலத் தமிழர் வரலாற்றைத் தெளிவுற அறிய இலக்கியங்களும் கல்வெட்டுகளும் அகழ்வாய்வுச் சான்றுகளும் நன்கு உதவுகின்றன. இக்காலகட்டத் தமிழர் சமய வரலாறு பல்துறை அறிஞர்களால் தொகுக்கப்பெற்றுள்ளது. சேயோன் (முருகன்), மாயோன் (திருமால்), வேந்தன் (இந்திரன்), வருணன்(1), பழையோள்(2) (கொற்றவை), முக்கண்ணன்(3) (சிவபெருமான்), பலராமன்(4), உமை(5) எனத் தமிழர் வழிபட்ட தெய்வங்களைச் சங்க இலக்கியங்கள் பல பாக்களால் அறிமுகப்படுத்துகின்றன. சங்க இலக்கியங்களுள் காலத்தால் பிற்பட்டனவாகக் கருதப்படும் கலித்தொகை, பரிபாடல் ஆகிய இரண்டும் இறை சார்ந்த பல தொன்மங்களை விளக்குகின்றன. சங்க காலத்திற்குச் சற்று முற்பட்டதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள தொல்காப்பியமும் தமிழர் வழிபாட்டுச் சிந்தனைகளை முன்வைக்கிறது. இவ்விலக்கியங்களுள் ஒன்றுகூட, மறைபொருளாகவேனும் பிள்ளையார் வழிபாட்டைப் பற்றி யாண்டும் குறிப்பிடாமை நினைவு கொள்ளத்தக்கது.

'நல்லவுந் தீயவும் அல்ல குவியிணர்ப் புல்லிலை எருக்கமாயினும் உடையவை கடவுள் பேணேம் என்னா' என்னும் புறநானூற்றுப் பாடலடி (106) கொண்டு, அதன் பொருளை உணர்ந்தும் உணரார் போல சிலர் சங்க காலத்தில் பிள்ளையார் வழிபாடு இருந்ததாகக் கூறுவது பிழையாகும்(6). 'நல்லதென்றும், தீயதென்றும் வகைப்படுத்த இயலாத எருக்கம்பூ தரினும் தெய்வங்கள் அவற்றை மறுப்பதில்லை' எனும் பொருளமைந்த இப்பாடல், தெய்வங்களின் சார்பற்ற தன்மையைச் சுட்டுகிறதே தவிர, பிள்ளையார் வழிபாட்டை அல்ல. எருக்கம்பூ, சிவபெருமானால் விரும்பிச் சூடிக்கொள்ளப்பட்ட பூவாக அப்பர் பெருமானால் சுட்டப்படுவது நோக்க(7), பின்னாளிலேயே இது பிள்ளையாருக்கு உகந்த பூவாக மாற்றப்பட்டமை தெளிவாகும். எவ்வித அடிப்படைச் சுட்டலும் இல்லாத இப்பாடலடி கொண்டு, பிள்ளையார் வழிபாடு சங்க காலந்தொட்டே இருந்தது எனக்கூறுவார் கூற்று எவ்விதத்தானும் உண்மையாகாமை கண்கூடு.

தமிழ்நாடு முழுவதுமாய் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகள் இக்காலகட்டச் சான்றுகளைப் பலவாய்த் தந்திருந்தாலும், பிள்ளையார் வழிபாட்டைக் குறிக்கும் எத்தகு அடையாளங்களையும் இன்றுவரை தரவில்லை. தமிழ்நாட்டின் இயற்கைக் குகைத்தளங்களில் காணப்படும் இக்காலகட்டத் தமிழிக் கல்வெட்டுகளும் இது குறித்து மௌனமாகவே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது(8).

சங்க காலத்தை அடுத்தமைந்த மூன்று நூற்றாண்டுகளில் (கி.பி 200 - கி.பி 500) தமிழ்நாடு தமிழர் கையிலிருந்து மாறிப் பல்லவர், களப்பிரர் வயமாயிற்று. இக்காலகட்ட வரலாற்றை அறிய பல்லவர்களின் பிராகிருத, வடமொழிச் செப்பேடுகளும் இலக்கியங்களும் உதவுகின்றன. பல்வேறு அறிவியல் பூர்வமான சான்றுகளின் அடிப்படையில் தமிழ்நாடு, இலங்கை, ஜப்பான் சார்ந்த அறிஞர் பெருமக்கள் சிலப்பதிகாரம், மணிமேகலை, திருக்குறள் முதலிய இலக்கியங்களை இக்காலகட்டம் சார்ந்தவை என அடையாளப்படுத்தியுள்ளனர். இவ்விலக்கியங்களுள், தமிழர் சமய வரலாறு குறித்து அரிய பல தரவுகளை உள்ளடக்கியிருக்கும் சிலப்பதிகாரம் புகாரிலும் மதுரையிலும் இருந்த இறைக் கோயில்களை வகைப்படுத்தியும் வரிசைப்படுத்தியும் காட்டுகிறது.

பிறவா யாக்கைப் பெரியோன் (சிவபெருமான்), அறுமுகச் செவ்வேள் (முருகன்), வாலியோன் (பலராமன்), நெடியோன் (திருமால்), இந்திரன், கொற்றவை, உமை, கதிரவன் எனப் பல்வேறு முதன்மைத் தெய்வங்களைச் சுட்டும் சிலப்பதிகாரம், தருக்கோட்டம், வெள்யானைக் கோட்டம், வேற்கோட்டம், வச்சிரக்கோட்டம் என இறை சார்ந்தவற்றிற்கு அமைந்த கோயில்களையும் காட்டுகிறது(9). சிறு தெய்வ வணக்கம் பற்றியும் விரித்துரைக்கும் இவ்விலக்கியத்தில் பேரூர் சார்ந்தோ சிற்றூர் சார்ந்தோ எவ்விடத்தும் பிள்ளையார் வழிபாடு பேசப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இக்காலகட்டத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் பூலாங்குறிச்சிக் கல்வெட்டு, கோயில்களைப் பற்றியும் இறைவழிபாடு பற்றியும் கூறினாலும் பிள்ளையார் பற்றிய குறிப்புகளைக் கொண்டிருக்காமை கருதத்தக்கது(10). இக்காலப் பகுதிக்கு உரியனவாக அடையாளம் காணப்பட்டிருக்கும் வட்டெழுத்துக் கல்வெட்டுகளிலும் பிள்ளையார் சுட்டல் இல்லை(11).

பிள்ளையாரை முதன்முதலாக அறிமுகப்படுத்தும் இலக்கியங்கள் அப்பர், சம்பந்தர் திருமுறைகளே. இந்த ஆறு திருமுறைகளிலும் அப்பரும் சம்பந்தரும் பிள்ளையாரைப் பற்றி மிகக் குறைவான இடங்களிலேயே குறிப்புத் தருகின்றனர். இப்பெருமக்களின் காலம் கி.பி ஏழாம் நூற்றாண்டின் தொடக்கம் என அறிஞர் கொள்வர். இக்குறிப்புகளால், பிள்ளையார் சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்டவர் என்பதையும் கயாசுரனைப் போரில் வென்றவர் என்பதையும் அறியமுடிவதுடன், அவரது தோற்றம் பற்றிய வண்ணனைகளையும் ஓரளவிற்குப் பெறமுடிகிறது.

உமை பெண் யானையின் வடிவம் கொள்ள, சிவபெருமான் ஆண் யானையின் வடிவம் கொண்டு இணைந்ததன் பயனாய்ப் பிறந்தவர் பிள்ளையார் என்பதை இரண்டு பதிகங்களால் விளக்குகிறார் சம்பந்தர். தம்மை வழிபடும் அடியவர்தம் இடர்களைத் தீர்ப்பதற்காக இறைவன் அருளிய கொடையே கணபதி என்று பிள்ளையாரின் பிறப்பிற்குக் காரணம் காட்டும் சம்பந்தர் (சம். 1: 123:5, 126:6), 'தந்த மதத்தவன் தாதை' (1:115:2), 'மறுப்புறுவன் தாதை' (1:117:8), 'கரியின் மாமுகமுடைய கணபதி தாதை' (2:232:3) என்று சிவபெருமானைச் சிறப்புச் செய்யுமாறு பிள்ளையாரின் தோற்றம் காட்டுகிறார்.

நாவுக்கரசர், சம்பந்தரின் கூற்றைக் 'கைவேழ முகத்தவனைப் படைத்தார்' (6:53:4), 'வினாயகர் தோன்றக் கண்டேன்' (6:77:8), 'ஆனைமுகற்கு அப்பன்' (6:74:7), 'கணபதி என்னும் களிறு' (4:2:5) எனும் பல்வேறு தொடர்களால் உறுதிப்படுத்துகிறார். கயாசுரனைக் கொல்லச் சிவபெருமான் பிள்ளையாரைப் பயன்படுத்திக் கொண்ட தகவலைத் தரும் நாவுக்கரசர், அதற்காகவே பிள்ளையார் பிறப்பிக்கப்பட்டார் எனக் கருதுமாறு பாடல் அமைத்துள்ளார் (6:53:4).

முருகப்பெருமானைப் பற்றி நாற்பத்தேழு இடங்களில் விதந்தோதும் இவ்விரு சமயக் குரவரும், பிள்ளையாரைப் பற்றி மிகக் குறைவான அளவிலேயே குறிப்புகள் தந்திருப்பதை நோக்க, இவர்தம் காலத்திற்குச் சற்று முன்னதாகவே பிள்ளையார் வழிபாடு தமிழ்நாட்டில் கால் கொண்டதாகக் கருதலாம்.

தமிழ்நாட்டில் இன்றைக்கும் காணப்படும் இறைக் கோயில்களுள் காலத்தால் பழமையானவை குடைவரைகளே. குன்றுகளைக் குடைந்தும், பாறைகளைச் செதுக்கியும் இத்தகு குடைவரைகள் அமைக்கப்பட்டன. வடதமிழ்நாட்டில் இத்திருப்பணியைத் தொடங்கியவர் பல்லவப் பேரரசரான முதலாம் மகேந்திரவர்மர். இவர் குடைவரைகள் எவற்றிலும் பிள்ளையார் சிற்பம் இடம்பெறவில்லை(12). திருக்கழுக்குன்றத்தில் உள்ள ஒருகல் மண்டபம் முதலாம் நரசிம்மவர்மரின் திருப்பணியாகக் கருதப்படுகிறது. இதிலும் பிள்ளையாரின் வடிவமில்லை. இராஜசிம்மரின் குடைவரைகளிலும் பிள்ளையாரின் சிற்பம் இறைவடிவமாகக் காட்டப்படவில்லை என்றாலும், மாமல்லபுரம் இராமாநுஜர் குடைவரையின் பூதவரியில் பிள்ளையார் இடம்பெற்றுள்ளார்.

இராஜசிம்மர் பணியான மாமல்லபுரம் தருமராஜர் ரதத்தின் பூதவரியிலும் பிள்ளையார் எனக் கொள்ளத்தக்க வடிவங்கள் இடம்பெற்றுள்ளன(13). இராஜசிம்மரின் கற்றளிகளில் கூடுகளிலும் கோட்டங்களிலும் பிள்ளையார் இடம்பெறத் தொடங்குகிறார். சிராப்பள்ளியிலுள்ள கீழ்க்குடைவரை(14), சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த திருப்பட்டூர்க் கைலாசநாதர் கோயில்(15), செங்கற்பட்டு மாவட்டம் வல்லத்திலுள்ள கந்தசேனரின் குடைவரை(16), ஆகியவற்றில் பிள்ளையார் கோட்டத் தெய்வமாகக்(17) காட்டப்பட்டுள்லமை குறிப்பிடத்தக்கது. இக்காலகட்டத்தைக் கி.பி எட்டாம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியாகக் கொள்ளலாம். இதனால் வடதமிழ்நாட்டு இறைக்கோயில்களில், பிள்ளையாரின் சிற்பங்கள் சம்பந்தர், அப்பர் காலத்திற்கு ஏறத்தாழ ஒரு நூற்றாண்டிற்குப் பிறகே இடம்பெறத் தொடங்கியமை தெளியப்படும்.

தென் தமிழ்நாட்டில் பாண்டியர், முத்தரையர் கைவண்ணமாகப் பிறந்த குடைவரைகள் பலவற்றில் பிள்ளையாரின் சிற்பம் காணப்படுகிறது. அவற்றுள் குறிப்பிடத்தக்கது பிள்ளையார்பட்டி(18). அங்குள்ள பிள்ளையார் இன்றைக்கு முதன்மைத் தெய்வமாக வழிபடப்பட்டாலும், உருவான காலத்தில் சிவபெருமானுக்கான குடைவரையின் முன், பக்கவாட்டில் விரியும் சுவரில் கோட்டத் தெய்வமாகச் செதுக்கப்பட்டவரே ஆவார். இக்குடைவரையில் இடம்பெற்றுள்ள வட்டெழுத்துக் கல்வெட்டு, 'எக்காட்டூருக் கோன் பெருந்தசன்' எனும் பெயரைத் தருகிறது. இக்கல்வெட்டின் எழுத்தமைதி கொண்டு இதை ஆறாம் நூற்றாண்டென்பர் அறிஞர்கள்(19).

இக்கருத்து ஏற்புடையதாயின் பிள்ளையர்பட்டிக் குடைவரையின் காலமும் ஆறாம் நூற்றாண்டாகிவிடும். எனில், தமிழ்நாட்டின் காலத்தால் முற்பட்ட பிள்ளையார் சிற்பமாகப் பிள்ளையார்பட்டிக் குடைவரைப் பிள்ளையாரையே கொள்ளவேண்டிவரும். குடைவரையின் அமைப்பு, சிற்பங்களின் செதுக்கு நேர்த்தி கொண்டு இக்குடைவரையின் காலத்தை ஏழாம் நூற்றாண்டாகக் கொள்வாரும் உண்டு. இரண்டில் எதை ஏற்பினும் இப்பிள்ளையாரே தமிழ்நாட்டின் காலத்தால் முற்பட்ட பிள்ளையார் என்பதில் ஐயமில்லை.

திருமலைப்புரம், செவல்பட்டி, தேவர்மலை, அரிட்டாபட்டி, மலையக்கோயில், திருக்கோளக்குடி, திருப்பரங்குன்றம், மலையடிப்பட்டி, குன்றக்குடி, கோகர்ணம் முதலிய பல பாண்டியர், முத்தரையர் குடைவரைகளில்(20) பிள்ளையார் சிற்பம் இடம்பெற்றுள்ளமையை நோக்க, தமிழ்நாட்டில் பிள்ளையார் வழிபாடு காலூன்றிய முதல் இடமாகப் பாண்டிய மண்ணையே கொள்ளவேண்டியுள்ளது. கி.பி ஆறு, ஏழாம் நூற்றாண்டுகளில் சிராப்பள்ளிக்குத் தெற்கே காலூன்றிப் பரவிய இப்பிள்ளையார் வழிபாடு எட்டாம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தில்தான் வடதமிழ்நாட்டிற்குள் குடிபுகுந்தது. எட்டாம் நூற்றாண்டிற்குப் பிறகும் தமிழ்நாட்டுச் சமய வரலாற்றில் முருகப்பெருமானுக்குக் கிடைத்த இடம் பிள்ளையாருக்குக் கிடைக்கவில்லை என்பதே உண்மை. பல்லவர், பாண்டியர், முத்தரையர் குடைவரைகளில் கோட்டத் தெய்வமாக இடம்பெற்ற பிள்ளையார், தொடக்கக் காலப் பல்லவக் கற்றளிகளில் ஆங்காங்கே இடம்பெற்றாலும், அபராஜிதர் காலக் கற்றளிகளில்தான் உள்மண்டபத் தென் கோட்டத் தெய்வமாக நிலைபெற்றார்(21). இந்நிலைபேறு சோழர் காலத்தில் உறுதியாக்கப்பட்டது.

சோழர் காலக் கற்றளிகளின் திருச்சுற்றில் சுற்றாலைக் கோயில்கள் உருவானபோது எண்பரிவாரத்துள் ஒன்றாகப் பிள்ளையாருக்கும் இடம் கிடைத்தது. திருச்சுற்றின் தென்மேற்கு மூலை பிள்ளையாருக்கு உகந்த இடமாக ஒதுக்கப்பட்டு அவருக்கெனத் தனித் திருமுன் அமைக்கப்பட்டது. இத்தகு பிள்ளையார் திருமுன்களைச் சோழர் கற்றளிகளிலும் பின்னால் வந்த பிற மரபுப் பேரரசுக் காலக் கற்றளிகளிலும் இன்றும் காணலாம்.

கோட்டத் தெய்வமாகவோ, சுற்றாலைத் தெய்வமாகவோ மட்டுமே அமைந்த பிள்ளையாருக்குத் தனிக்கோயில் அமைக்கும் பழக்கம் மிகப் பிற்பட்ட காலத்திலேயே ஏற்பட்டது. தமிழ்நாட்டுக் கோயில்களில் கிடைக்கும் பல்லாயிரக்கணக்கான கல்வெட்டுகளும் அதையே உறுதி செய்கின்றன.

குறிப்புகள்

1. தொல்காப்பியம், பொருளதிகாரம், இளம்பூரணம், நூற்பா எண். 5.

2. திருமுருகாற்றுப்படை, 258-259.

3. புறநானூறு, 6:18

4. கலித்தொகை, அனந்தராமையர் பதிப்பு, தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு, தஞ்சாவூர், ப.144.

5. கலித்தொகை, 38:1-5.

6. நடன காசிநாதன், தமிழகமும் கணபதி வழிபாடும், தாய் நாட்டிலும் மேலைநாடுகளிலும் தமிழியல் ஆய்வு, பக்.162-170.

7. 4:104:4; 5:95:5

8. Iravatham Mahadevan, Early Tamil Epigraphy, pp. 314-447.

9. சிலப்பதிகாரம், 5:169-173; 9:9-13

10. எ.சுப்பராயலு, எம்.அர். ராகவ வாரியர், பூலாங்குறிச்சிக் கல்வெட்டுகள், ஆவணம் 1, பக். 57-69.

11. Iravatham Mahadevan, Early Tamil Epigraphy, pp. 450-537

12. மு.நளினி, இரா.கலைக்கோவன், மகேந்திரர் குடைவரைகள் ஓர் ஒப்பாய்வு, வரலாறு 11, பக். 57-82.

13. மு.நளினி, இரா.கலைக்கோவன், அத்யந்தகாமம், பக். 11-12.

14. மு.நளினி, இரா.கலைக்கோவன், சிராப்பள்ளிக் கீழ்க்குடைவரை, வரலாறு 9,10, பக்.131-179.

15. இரா.கலைக்கோவன், கண்டறியாதன காட்டும் கைலாசநாதர், அமுதசுரபி தீபாவளி மலர் 1997, பக். 303-306.

16. இக்குடைவரை முதலாம் மகேந்திரர் காலத்தில் அவர் அடியாரான வயந்தப் பிரியரைசரின் மகன் கந்தசேனரால் குடைவிக்கப்பட்டது. குடைவரை குடையப்பட்டுள்ள பாறையின் வெளிப்புறத்தே வலப்பக்கம் கோட்டம் அகழ்ந்து பிள்ளையார் வடிவம் செதுக்கப்பட்டுள்ளது. தோற்றம், செதுக்குநேர்த்தி கொண்டு இப்பிள்ளையார் வடிவம் குடைவரைக் காலத்ததா அல்லது பிற்காலத்தில் உருவாக்கப்பட்டதா என்பதை உறுதியாகக் கூறக்கூடவில்லை. இரண்டாம் நரசிம்மரான இராஜசிம்மப் பல்லவரின் தொடக்கக் காலக் கட்டுமானப் பணிகளில்தான் பிள்ளையார் வடிவத்தைப் பூதவரிகளில் காணமுடிகிறது. அவர் காலக் கற்றளிகளில் பிள்ளையார் கோட்டத் தெய்வமாக இடமாற்றம் பெறுகிறார். பல்லவர் கைவண்ணமான சிராப்பள்ளிக் கீழ்க்குடைவரை முருகன், கொற்றவை, சூரியன், நான்முகன் ஆகிய தெய்வங்களுக்கு இணையான தெய்வமாகப் பிள்ளையாரைச் சமநிலையில் நிறுத்திப் பெருமைப்படுத்தியுள்ளது. காலநிரலான இப்பரிணாம வளர்ச்சியைக் காணும்போது, வல்லம் குடைவரைப் பிள்ளையாரைக் குடைவரைக் காலத்திற்குச் சற்றுப் பிற்பட்டவராகவே கொள்ளவேண்டியுள்ளது. வல்லத்துக் குன்றில் இலக்கசோமாசியார் மகள் எடுத்துள்ள இரண்டாம் குடைவரையின் முகப்பிற்கு முன் விரியும் பக்கச் சுவரில் ஒரு பிள்ளையார் வடிவம் செதுக்கப்பட்டுள்ளது. அதையும் கி.பி எட்டாம் நூற்றாண்டுப் படைப்பாகவே கொள்ளலாம்.

17. 'வல்லத்தில் மகேந்திரவர்மன் காலத்தியதாகக் கருதப்படும் குடைவரைக் கோயிலில், ஒரு சன்னதியின் முன்பாக உள்ள இரு தூண்களில் ஒன்றில் கணபதியின் உருவமும் மற்றொன்றில் சேட்டையின் சிற்பமும் செதுக்கப்பட்டிருக்கின்றன' எனும் நடன காசிநாதனின் கூற்று, அவர் வல்லம் குடைவரையைப் பார்க்காமலேயே கட்டுரைத்துள்ளமையைத் தெளிவுபடுத்துகிறது. தமிழகமும் கணபதி வழிபாடும், தாய்நாட்டிலும் மேலைநாடுகளிலும் தமிழியல் ஆய்வு, ப.167.

18. இரா.கலைக்கோவன், பிள்ளையார்பட்டிக் குடைவரை, அமுதசுரபி தீபாவளி மலர், 2000, பக். 82-86.

19. Iravatham Mahadevan, Early Tamil Epigraphy, pp. 475-675; பிள்ளையார்பட்டிப் பிள்ளையாரையும் இக்கல்வெட்டையும் பற்றிக் குறிப்பிடும்போது நடன காசிநாதன், 'பிள்ளையார்பட்டியில் காணப்பெறும் குடைவரைக்கோயிலில் ஒரு பழமையான கல்வெட்டும், கணபதியின் புடைப்புச் சிற்பமும் அருகருகே காணப்பெறுகின்றன' என்று தவறான தகவல் தந்துள்ளார். தமிழகமும் கணபதி வழிபாடும், தாய்நாட்டிலும் மேலைநாடுகளிலும் தமிழியல் ஆய்வு, ப.166. பிள்ளையார் சிற்பம் சிவபெருமான் குடைவரையின் வடபுறம் உள்ள பாறைச்சுவரில் ஹரிஹரர் சிற்பத்தை அடுத்துச் செதுக்கப்பட்டுள்ளது. சிவபெருமான் குடைவரைக்குத் தென்புறம் விரியும் கிழக்குச் சுவரில் உள்ள அரைத்தூணில் பெருந்தசன் கல்வெட்டுக் காணப்படுகிறது.

20. அர.அகிலா, இரா.கலைக்கோவன், திருமலைப்புரம் குடைவரை, வரலாறு 6, பக். 118-134;
சீ.கீதா, இரா.கலைக்கோவன், செவல்பட்டிக் குடைவரை, வரலாறு 4, பக்.25-38;
அர.அகிலா, தேவர்மலைக் குடைவரை, வரலாறு 3, பக். 57-66;
மு.நளினி, இரா.கலைக்கோவன், அரிட்டாபட்டிக் குடைவரை, பதிப்பிக்கப்படாத கட்டுரை;
மு.நளினி, இரா.கலைக்கோவன், மலையக்கோயில் குடைவரைகளும் கல்வெட்டுகளும், வரலாறு 11, பக். 159-174;
மு.நளினி, இரா.கலைக்கோவன், பரங்குன்றம் குடைவரை, பதிப்பிக்கப்படாத கட்டுரை;
ம.ஜான்சி, மு.நளினி, இரா.கலைக்கோவன், மலையடிப்பட்டிக் குடைவரைகளும் கல்வெட்டுகளும், வரலாறு 4, பக்.64-115;
அர.அகிலா, மு.நளினி, குன்றக்குடிக் குடைவரைகளும் கல்வெட்டுகளும், வரலாறு 2, பக். 56-106;
மு.நளினி, இரா.கலைக்கோவன், திருக்கோளக்குடிக் குடைவரையும் கற்றளிகளும், வரலாறு 6, பக். 134-168;
மு.நளினி, இரா.கலைக்கோவன், கோகர்ணம் குடைவரையும் கல்வெட்டுகளும், பதிப்பிக்கப்படாத கட்டுரை.

21. மு.நளினி, இரா.கலைக்கோவன், அபராஜிதர் காலக் கற்றளிகள், பதிப்பிக்கப்படாத கட்டுரை.
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.