http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 39

இதழ் 39
[ செப்டம்பர் 16 - அக்டோபர் 15, 2007 ]


இந்த இதழில்..
In this Issue..

வரலாற்று முடிவுகளும் மதநம்பிக்கைகளும்
நல்லூர்ப் பஞ்சரங்கள்
திரும்பிப் பார்க்கிறோம் - 11
பிள்ளையார் வழிபாட்டின் தோற்றமும் வளர்ச்சியும்
திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை வட்டெழுத்துக் கல்வெட்டுகள்
அங்கும் இங்கும் (செப். 16 - அக். 15)
The Gajabahu Synchronism
காதலியின் கவலையும் சங்க கால வேட்டையும்
சங்ககாலத்து உணவும் உடையும் - 3
இதழ் எண். 39 > இலக்கியச் சுவை
சங்ககாலத்து உணவும் உடையும் - 3
மா.இராசமாணிக்கனார்
2. உடை

முன்னுரை

மக்கள் பண்டைக்காலத்தில் முதன்முதல் ஆடையின்றி இருந்தார்கள்; பின்பு 'காலப்போக்கில் தழைகளையும் மரப்பட்டைகளையும் உடைகளாக உடுக்கத் தொடங்கினார்கள்; விலங்குகளின் தோல்களையும் பயன்படுத்தினார்கள்; நெசவுத்தொழிலைக் கண்டறிந்த பின்பே பருத்தி ஆடைகளையும் பட்டாடைகளையும் நெய்யத் தொடங்கினார்கள். மக்களது அறிவு வளர வளர, வசதிகள் பெருகப்பெருக, அவர்களுடைய வாழ்க்கை-வீடு முதலிய பலவற்றிலும் உயர்ந்தாற்போலவே, உடை வகையிலும் உயரலாயிற்று.

நெசவுத்தொழில் நடைபெறாத இடங்களில் இன்றும் தழைகளும் மரப்பட்டைகளும் தோல்களும் ஆடைகளாகப் பயன்படுகின்றன. ஆப்பிரிக்காவில் நிலநடுக்கோட்டையடுத்த இடங்களில் ஆடவர், மரவுரியை உடுக்கின்றனர். பெண்டிர், பனை ஓலைகளாலாகிய சிறு பாவாடையை அணிகின்றனர். பாலினீசியாவில் ஆடவர், மரவுரியை உடுக்கின்றனர்; பெண்டிர், மரப்பட்டையாலாகிய பாவாடை அல்லது வகிர்ந்து பின்னிய இலையாலாகிய ஆடைகளை அணிகின்றனர். ஆஸ்திரேலியப் பழங்குடிகள் மரப்பட்டையாலாகிய ஒரு கச்சையை உடுக்கின்றார்கள். ஆப்பிரிக்காவிலுள்ள புதர் மக்கள், முக்கோண வடிவமாக ஒரு தோலை கால்களுக்கிடையில் கோத்து, இடுப்பைச் சுற்றி முடிந்துகொள்கின்றார்கள். அவர்களுடைய பெண்டிர் ஒரு கச்சையை அணிகின்றனர். வட அமெரிக்க இந்தியர் ஆட்டுத்தோல்களையும் மாட்டுத்தோல்களையும் உடுக்கின்றனர்.

முசுக்கட்டை, அத்தி, ஈரப்பலாவைப் போன்ற சில மரங்களின் உட்பட்டைகள் தண்ணீரில் ஊறவைத்து, மரச்சுத்தியால் தட்டி மிருதுவாக்கப்படும். அப்பட்டை தகடு போன்று இருக்கும். அதற்கு நிறம் கொடுக்கப்படும்; அல்லது ஓவியத்தால் அழகுபடுத்தப்படும். அது பார்வைக்கு நெய்த துணி போல இருக்கும். பாலினீசியாவில் இத்தகைய மரவுரிகள் சிறப்பிடம் பெறுகின்றன. அங்குப் பழங்குடிகள் சிறப்புச் சடங்குகளின்போது அதனை இன்றும் உடுக்கின்றார்கள். போர்னியோவில் உள்ள காயான்களும் பெல்ஜியன் காங்கோவிலுள்ள நீகிரோப் பெண்களும் வருத்தக் காலங்களில் மரவுரியை அணிகின்றார்கள். (கலைக்களஞ்சியம், தொகுதி, 1, பக், 352,353).

சிற்பச்சான்று

சங்ககாலத்தில் தழையுடை, மரவுரி, பருத்தியாலும் பட்டாலுமாகிய ஆடைகள், கச்சை என்பன வழக்கிலிருந்தன என்பது பின்வரும் பத்துப்பாட்டுச் சான்றுகளைக் கொண்டு அறியலாம். பத்துப்பாட்டின் காலம் ஏறத்தாழக் கிறிஸ்துவுக்குப் பிற்பட்ட முதல் மூன்று நூற்றாண்டுகள் என்பது முன்பே கூறப்பட்டதன்றோ? அக்காலத்தில் பொதுவாக இந்தியாவிலும் சிறப்பாகத் தக்கணத்திலும் இருந்த ஆடை வகைகளை அக்காலச் சிற்பங்களைக் கொண்டு ஓரளவு அறியலாம்.

ஆந்திர நாட்டு அமராவதியிலும் ஜக்கய்யபேட்டையிலும் கிடைத்த சிற்பங்கள் சில, அக்கால ஆடவர் தலைப்பாகை, முழங்கால் வரை தொங்கும் சுருக்கங்களுள்ள ஆடை, பூவேலை கொண்ட இடைக்கச்சை, அதிலிருந்து தொங்கும் தைத்த சிறு துண்டு ஆகியவற்றை அணிந்திருந்தனர் என்பது அச்சிற்பங்களால் தெரிகிறது. பெண்டிர் முழங்கால் வரையில் தொங்கும் புடைவைகளை உடுத்தனர்; தலைக்கு நாற்சதுரமான துணிகளால் பலவகை முடிச்சுகளைச் செய்து அணிந்து வந்தனர் என்பதை அச்சிற்பங்கள் உணர்த்துகின்றன. சிற்பங்களின் காலம் கி.மு 200 - கி.பி 100 ஆகும்.

கி.பி 100 முதல் கி.பி 400 வரையில் என்று கணிக்கப்பட்ட காலத்தைச் சேர்ந்த சிற்பங்களும் கிடைத்துள்ளன. அக்கால ஆடவர், வேட்டியும், மேலாடையும், தலைப்பாகையும் அணிந்திருந்தனர். மகளிர், அடையில் புடைவையையும் மேலே சில சமயங்களிலே சிறிய துண்டையும் அணிந்தனர்; தலையில் தலைப்பாகை போலவும் வேறு வகையிலும் துணி கட்டினர். முறுக்கிட்ட ஆடைகள் இரண்டு மூன்று வரிசைகளில் இடுப்புக்குக்கீழே வலப்பக்கமாக முடிந்து தொங்கவிடப்பட்டன. பெண் மார்பை மறைத்துள்ள முறையில் ஒரே ஒரு சிற்பமே காணப்படுகிறது. பெண்டிர் மார்பில் ஆடையற்றே இருந்தனர் என்று கருதத்தகும் முறையில் சிற்பங்கள் காண்கின்றன. தைத்த ஆடைகளும், சட்டைகளும், குல்லாய்களும் சில சமயங்களில் அணியப்பட்டு வந்தன. துறவிகள் மரப்பட்டை, புல், பழத்தோல் இவற்றைக்கொண்டு செய்யப்பட்ட உடைகளை உடுத்தார்கள்.

தென்பாண்டி நாட்டில் வாழ்ந்த நாகர், உலகப்புகழ் பெற்ற மெல்லிய ஆடைகளை நெய்து அயல்நாடுகளுக்கு அனுப்பினர். அரசர்கள் முழங்கால் வரையில் 'லங்கோடு' போன்ற உடையணிந்தனர். இது 'வட்டுடை' எனப்பட்டது. நடுத்தர வகுப்பினர் இடுப்பைச் சுற்றி ஓர் ஆடையும், தலையைச் சுற்றி மற்றொன்றும் கட்டினர். பெண்டிர், இடுப்பிலிருந்து கால் வரையில் தொங்கும்படி புடைவை உடுத்தனர். மலைநாட்டுப் பெண்டிர், இலைகளைக் கோத்த தழையுடையை உடுத்தினர். பெரும்பாலும் அக்காலப் பெண்டிர், இடுப்பிற்குமேல் எவ்வித ஆடையும் அணிந்ததாகச் சிற்பங்களைக் கொண்டு கூற இயலவில்லை (கலைக்களஞ்சியம், தொகுதி, 1, பக், 356).

சங்ககால மக்கள் என்னென்ன உடைகளை அணிந்திருந்தார்கள் என்பதைத் திட்டமாக அறிய இயலவில்லை. ஆயினும், பத்துப்பாட்டில் ஆங்காங்கு கூறப்பட்டுள்ள விவரங்களிலிருந்து அக்கால மக்கள் பயன்படுத்திய பலவகை உடைகளின் பெயர்கள் காணப்படுகின்றன. அவற்றை இங்குக் காண்போம்.

தழை உடை

குறமகள் மராமரக் கொத்துகளை நடுவே வைத்து, இலையையுடைய நறிய பூங்கொத்துகளைச் சுற்றிலும் வைத்துத் தொடுத்த பெரிய-அழகிய தழையுடையை உடுத்தினாள் (திருமுருகு, அடி. 201-203). நெய்தல் நிலமகள் தளிர்கள், தழைகள், மலர்கள் இவற்றாலாகிய தழையுடையை அணிந்திருந்தாள். காவிரிப்பூம்பட்டினத்துப் பரதவர் சேரிப்பெண்டிர் இத்தழையுடையை அணிந்திருந்தனர் (ப.பாலை, அடி.91).

துகில் - கலிங்கம்

அரசன் கஞ்சியிட்டுச் சலவை செய்யப்பட்ட துகிலை (ஆடையை) அணிந்திருந்தான் (ம.கா. அடி 721). அரசி கணவன் தன்னைப் பிரியாதிருக்கையில் பூத்தொழிலையுடைய துகிலை உடுத்தினாள்; கணவனைப் பிரிந்திருந்த காலத்தில் மாசேறிய நூலாற் செய்த கலிங்கத்தை (ஆடையை) அணிந்திருந்தாள். "பூந்துகில் மரீஇய ... அவிர் நூல் கலிங்கம்" (நெடு. 145-6) என வருதலால், துகில் என்பது ஒரு வகை ஆடை என்பதும், கலிங்கம் என்பது மற்றொரு வகை ஆடை என்பதும் தெரிகின்றன.

உயர்ந்த ஆடைகள்

1. கரிகாலன் தன்னைப் பாடி வந்த பொருநர்க்கு இழை போனவழி இது என்று காணவியலாத நுண்மையையுடைய வேலைப்பாடு நிறைந்த - பாம்பின் தோலை ஒத்த - அறுவையை (ஆடையை) நல்கினான்.

"நோக்குநுழை கல்லா நுண்மைய பூக்கனிந்(து)
அரவுரியன்ன அறுவை"

(பொரு.ஆ.படை, அடி 82-83)

நீளமாக நெய்யப்பட்டு வேண்டுமளவு அறுக்கப்பட்டது 'அறுவை' எனப்பெயர் பெற்றது.

அப்பேரரசனே முடிகளைக் கரையிலேயுடைய பட்டாடைகளையும் பொருநர்க்குத் தந்தான்.

"கொட்டைக் கரைய பட்டுடை நல்கி"

உடுக்கப்படுவது 'உடை' எனப்பெயர் பெற்றது.

(பொருநர், அடி 155)

2. ஓய்மான் நல்லியக்கோடன் பாணர்க்கு மூங்கிலின் மெல்லிய பட்டாடையை உரித்தாற்போன்ற மாசில்லாத உடையை வழங்கினான்.

"மாசில், காம்பு சொலித்தன்ன அறுவை"

(சிறுபாண், அடி. 235-236)

3. தொண்டைமான் பாணர்க்குப் பாலாவியை ஒத்த நூலாற்செய்த கலிங்கத்தை ஈந்தான்.

"ஆவியன்ன அவிர்நூற் கலிங்கம்"

(பெ.ஆ.படை, அடி.469)

4. பாசறையில் தங்கியிருந்த பாண்டியன் புண்பட்ட தன் படைவீரரை இரவிற்கானச் சென்றான். அப்பொழுது அவனது (இடத்)தோளினின்றும் அழகிய துகில் நழுவி விழுந்தது. அவன் அதனை இடப்பக்கத்தே அணைத்துக் கொண்டான்.

"புடைவீழ் அந்துகில் இடவயின் தழீஇ"

என்பது நெடுநல்வாடை. (அடி.181)

இங்குத் துகில் என்பதற்கு 'ஒலியல்' என்று நச்சினார்க்கினியர் பொருள் கூறியுள்ளார். மேலாடை என்பது இதன் பொருள் போலும்.

5. நன்னன் என்ற குறுநில மன்னன் தன்னை நாடி வந்த கூத்தர்க்கு இழை போனவிடம் அறியவியலாத நுண்ணிய நூலாற் செய்த கலிங்கத்தை உதவினான்.

"இழைமருங் கறியா நுழை நூற் கலிங்கம்"

(மலைபடு. அடி. 561)

மதுரை நகரச் செல்வர் மாலையில் வண்டியில் ஏறிப் பொழுதைக் கழிக்கச் சென்றனர். அவர்கள் செக்கர் வானத்தை ஒத்த சிவந்த கண்களை மயக்கும் பூவேலைப்பாடுடைய கலிங்கத்தை அரையிலே கட்டினர் என்பது மதுரைக்காஞ்சியில் கூறப்பட்டுள்ளது.

"வெயிற்கதிர் மழுங்கிய படர்கூர் ஞாயிற்றுச்
செக்கரன்ன சிவந்து நுணங்குருவிற்
கண்பொரு புகூஉம் ஒண்பூங் கலிங்கம்
பொன்புனை வாளொடு பொலியக் கட்டி"

(அடி. 431-434)

பேகன் காட்டு மயிலுக்குக் கலிங்கம் போர்த்தினான். (சி.ஆ.படை, அடி 85)

பட்டினத்து (மாமல்லபுரத்து)ச் செல்வ மகளிர், பனிமாசு போன்ற மிக நுண்ணிய துகிலை உடுத்திருந்தனர் (பெ.ஆ.படை, அடி 329). காவிரிப்பூம்பட்டினத்துச் செல்வமகளிர், பகற்காலத்தில் பட்டுடைகளை உடுத்தினர்; இராக்காலத்தில் மென்மையான துகிலை உடுத்தனர்.

"பட்டு நீக்கித் துகில் உடுத்தும்"

(ப.பாலை, அடி.107)

கச்சை-கச்சு



(தொடரும்)
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.