http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[177 Issues]
[1753 Articles]
Home About US Temples Facebook
Issue No. 39

இதழ் 39
[ செப்டம்பர் 16 - அக்டோபர் 15, 2007 ]


இந்த இதழில்..
In this Issue..

வரலாற்று முடிவுகளும் மதநம்பிக்கைகளும்
நல்லூர்ப் பஞ்சரங்கள்
திரும்பிப் பார்க்கிறோம் - 11
பிள்ளையார் வழிபாட்டின் தோற்றமும் வளர்ச்சியும்
திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை வட்டெழுத்துக் கல்வெட்டுகள்
அங்கும் இங்கும் (செப். 16 - அக். 15)
The Gajabahu Synchronism
காதலியின் கவலையும் சங்க கால வேட்டையும்
சங்ககாலத்து உணவும் உடையும் - 3
இதழ் எண். 39 > கலைக்கோவன் பக்கம்
திரும்பிப் பார்க்கிறோம் - 11
இரா. கலைக்கோவன்
அன்புள்ள வாருணி,

நடந்தவற்றை நினைத்துப் பார்ப்பதில் ஒரு சுகம் இருக்கிறது. நடந்தவை நல்லவையாக அமையாத போதும்கூட அவற்றைத் தாண்டி வந்து விட்டோம் என்ற நினைவும், அந்த நெருக்கடி நேரங்களில் நமக்குத் துணை நின்ற நல்ல உள்ளங்களின் அன்பும் அணைப்பும் நினைக்குந் தோறும் இன்பம் பயப்பன. என்னுடைய கோயிலாய்வு வாழ்க்கையில் என் வாழ்வரசி தொடங்கி, இன்று என் பயணங்களுக்குத் துணை நின்று, என் ஆய்வுகளுக்கெல்லாம் தம் பங்களிப்பை உளம் நிறைந்த மகிழ்வுடன் வழங்கி வரும் இனிய நண்பர்கள் சு. சீதாராமன், பால. பத்மநாபன் வரை என் வளர்ச்சிக்கு உதவியவர்கள் எண்ணிக்கை மிகப் பெரியது. செப்டம்பர் 8, 9ம் நாட்களில் செம்பனார்கோயில், தலைச்சங்காடு, ஆக்கூர், திருமீயச்சூர், பழையாறைப் பஞ்சவன் மாதேவீசுவரம், திருநல்லூர் மணவழகர் கோயில் இவற்றைப் பார்த்து ஆய்வு செய்து வந்தோம். நானும் சீதாலட்சுமி இராமசாமி கல்லூரி வரலாற்றுத்துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் கோ. வேணிதேவியும் இணைந்து உருவாக்கும் 'மலைக்க வைக்கும் மாடக்கோயில்கள்' நூலிற்கான முதற் கட்டப் பணியாக இது அமைந்தது.

பேராசிரியர் கோ. வேணிதேவி, 'கி. பி. 300க்கும் கி. பி. 600க்கும் இடைப்பட்ட காலத் தமிழ்நாட்டு வரலாறு' குறித்து ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றவர். அவர் ஆய்வுக்கு உட்பட்ட கலைப் பண்பாட்டு வரலாற்றில் மாடக்கோயில்கள் இடம்பெற்றமையின், அவற்றை ஆய்வுசெய்ய 1998-2000ல் நானும் நளினியும் அகிலாவும் அவருடன் பெரும்பாலான மாடக் கோயில்களுக்குச் சென்று வந்தோம். அப்போதே இவற்றை விரிவாக ஆராய்ந்து நூலாக்கம் செய்யவேண்டும் என்று கருதியிருந்தோம்.

நான் முதன் முதலாகத் தொடங்கிய ஆய்வு மாடக்கோயில்கள் பற்றியதுதான் என்றாலும், அப்போது கோயில் ஆய்வில் எனக்கிருந்த அனுபவக் குறைவால் என் கட்டுரைகள் கட்டடக் கலை பற்றிய தரவுகளை முழுமையாகப் பெறாமலேயே வெளியாகி இருந்தன. பேராசிரியர் வேணிதேவியுடன் பயணப்பட்ட காலங்களில்தான், எவ்வளவு சிறுபிள்ளைத்தனமான கட்டுரைகள் அவை என்பதை என்னால் உணரமுடிந்தது. அதனால், நானும் நளினியும் அகிலாவும் வேணிதேவியுடன் இணைந்து மாடக்கோயில்கள் ஆய்வில் முழுமையாக ஈடுபட்டோம்.

வேணிதேவியின் ஆய்வு மாடக்கோயில்கள் பற்றியது அன்று எனினும், வரலாற்றிலும் தமிழிலும் களஆய்வுகளிலும் அவருக்கிருந்த பேரார்வம் காரணமாக அனைத்து மாடக்கோயில் களையுமே நேரில் பார்த்து ஆய்வுசெய்ய விழைந்தார். ஆவூர், ஆறைவடதளி, நாலூர், நறையூர், ஆலம்பாக்கம், குடவாயில், பசுபதிகோயில், அம்பர், வைகல், நல்லூர் மாடக்கோயில்கள் முனைப்பான ஆய்வுக்கு ஆளாயின. இவ்வாய்வுகளின்போது பல புதிய கல்வெட்டுகளைக் கண்டறிந்து வெளிப்படுத்த முடிந்தது. அவற்றுள் குறிப்பிடத்தக்கது நல்லூர் கோயிலில் கிடைத்த கோவண நாடகக் கல்வெட்டு. இக்கண்டுபிடிப்புச் செய்தி அறிந்து மகிழ்ந்த கோயில் நிருவாகம் அக்கோயிலை முழுமையான ஆய்வுக்கு உட்படுத்தச் சொல்லி அழைத்தது. அப்போது எங்களுக்கு வாய்ப்பு அமையாமையின் அந்த அன்பழைப்பை ஏற்கக் கூடவில்லை.

வேணிதேவியுடன் இணைந்து நிகழ்த்திய மாடக்கோயில் ஆய்வுகளின்போது பல சுவையான அனுபவங்களையும் மாடக்கோயில் பற்றிய தெளிவான சிந்தனை வடிவங்களையும் பெற்றோம். 2007 செப்டம்பர் 8, 9ம் நாட்களில் நிகழ்ந்த பயணம் அந்த அனுபவங்களின் ஊடே ஓர் உல்லாச ஊர்வலம் போகத் தூண்டிவிட்டதால்தான் இவ்வளவும் எழுத நேர்ந்தது. 'அறிதோறும் அறிதோறும் அறியாமை' எனும் வள்ளுவர் வாக்கு எத்தனை உண்மையானது என்பதையும் இந்த இருநாள் பயணங்கள் நன்கு உணர்த்தின. அருள்தரு சுவாமிமலைத் திருக்கோயில் துணை ஆணையர் திரு. ச. இலட்சுமணன் எங்களுடன் இரண்டாம் நாள் பயணத்தில் இணைந்து கொண்டமை பெருமகிழ்வு அளித்ததுடன், பஞ்சவன்மாதேவி ஈசுவரத்துக்கும் பெரும் பயன் அளித்தது.
1983ல் நான் பார்த்த பஞ்சவன் மாதேவீசுவரத்தின் சூழல் இன்று பெருமளவிற்கு மாறியிருந்தது. பட்டீசுவரம் கோயிலின் செயல் அலுவலர் திரு. மாரியப்பன் வந்திருந்தார். அவர் ஆளுகையில்தான் பஞ்சவன் மாதேவீசுவரம் கோயிலும் உள்ளது. மாண்புமிகு முதல்வர் கலைஞர் சென்றமுறை ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோதுதான் இந்தக் கோயிலைக் காப்பாற்றுமாறு மன்றாடினோம். முதல்வருக்கு எழுதிய விரிவான மடலும் அறநிலையத்துறை அமைச்சரிடம் நாங்கள் நேரில் அளித்த கட்டுரைத் தகவல்களும் என்னோடு கோயிலை வந்து பார்த்து வருந்தியத் தாமும் முதல்வருக்கு அஞ்சல் எழுதி இக்கோயிலைக் காப்பாற்ற வேண்டிய பேராசிரியர் க. ப. அறவாணன் வைத்த வேண்டுகோளும் இக்கோயிலுக்கு வாழ்வளித்தன. அறநிலையத்துறை பெருந்தொகை ஒதுக்கி இக்கோயிலைத் திருப்பணி செய்துள்ளது.

உள்ளூர் மக்களுக்கு இந்தக் கோயிலின் அருமை தெரியாமையால், இதைத் தொழுவமாகவே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். வெளிக் கதவிற்குப் பூட்டில்லாக் காரணத்தால் இந்தத் துன்ப நிலை. பூட்டு இட நிருவாக அலுவலர் ஏற்பாடு செய்வதாகக் கூறியுள்ளார். விமானத்தின் தென்புறம் சுவரை ஒட்டித் தென்திசைக் கடவுளுக்கென ஒரு பிற்காலக் கட்டமைப்பு உள்ளது. முதலாம் இராஜேந்திரரின் பெருமைக்குரிய பள்ளிப்படைக் கல்வெட்டின் ஒரு பகுதி அந்தக் கட்டமைப்பில் சிக்கியுள்ளது. கட்டமைப்பை நீக்குமாறு நிருவாக அலுவலரிடம் வேண்டினோம். யாராவது கொடையாளர் அமைந்தால் நீக்கிவிடலாம் என்றார் அவர். முதலாம் இராஜேந்திரரையும் பெருமைக்குரிய சோழ மரபையும் நேசிக்கும் நல்லவர்கள் இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் இந்த வேண்டுகோளை முன்வைக்கிறேன்.

பஞ்சவன்மாதேவி முதலாம் இராஜராஜரின் தேவி; பழுவேட்டரையர் குல இளவரசி. அந்த அம்மை முதலாம் இராஜேந்திரருக்கு சிற்றன்னைதான் என்ற போதும் தாயினும் மேலாக அளவிலா அன்பைப் பொழிந்திருக்க வேண்டும். அந்த அன்பில் செழித்துக் களித்தமையால்தான் போலும், மாபெரும் வீரரான இராஜேந்திரர் தம்மை நேசித்து வளர்த்த அன்னையினும் மேலான அம்மை பஞ்சவன்மாதேவி மறைந்தபோது அவர் நினைவாக பஞ்சவன்மாதேவீசுவரம் எனும் பள்ளிப்படைக் கோயிலை எழுப்பினார். தமிழ்நாட்டளவில் தாய்க்காக ஒரு மகன் எழுப்பிய ஒரே நினைவுக் கோயில் இதுதான். இந்த வரலாற்றையும் வாழ்வையும் ஏறத்தாழத் தொள்ளாயிரம் ஆண்டுகளாக இந்த உலகிற்கு உரைத்துக் கொண்டிருக்கும் கல்வெட்டு வரிகளைக் காப்பாற்றுவது நம் கடமையல்லவா! இருபத்தைந்தாயிரம் ரூபாய் இருந்தால் அந்தக் கட்டமைப்பை முற்றிலுமாய் அகற்றிவிடலாம் என்று திரு. மாரியப்பன் தெரிவித்துள்ளார். நல்ல உள்ளம் கொண்ட பெருமக்கள் இந்தத் திருப்பணியை ஏற்கலாம். உதவ ஆர்வமுள்ளவர்கள் அருள்கூர்ந்து உடனடியாக வரலாறு டாட் காம் ஆசிரியர் குழுவைத் தொடர்பு கொள்ளுமாறு உன் வழி வேண்டிக் கொள்கிறேன்.
இனி, திரும்பிப் பார்ப்போம். சிராப்பள்ளிச் சென்னை நெடுஞ்சாலையில், சிராப்பள்ளியில் இருந்து பத்துக் கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிற்றூரே பனமங்கலம். மிக எளிய ஊரான இதன் நடுப்பகுதியில், நெடுஞ்சாலையில் செல்வார் காணுமாறு நாயக்கர் கட்டமைப்புக் கற்றளி ஒன்று மிகச் சிதைந்த நிலையில் மரங்கள் முளைத்து வழிபாடற்று இருந்தது. சமயபுரம் அருகில் இருந்த மருதூர் கோயில் ஆய்வுக்காகச் சென்றபோது இக்கற்றளியைப் பார்க்க நேர்ந்தது. உடன் ஊருக்குள் சென்று கோயிலை நெருக்கத்தில் பார்த்து ஆராய்ந்தோம். கல்வெட்டுகள் ஏதுமற்ற அக்கோயிலின் ஆரஉறுப்புகள், சிகரம், கிரீவம் எல்லாம் சிதைந்திருந்தன. கோயில் முகமண்டபக் கிழக்குச் சுவரில் ஒரு வேப்பமரமும் விமானத்தின் தென்சுவரில் ஓர் அரசமரமும் நன்கு வளர்ந்து செழித்திருந்தன. மரம் வேர்விட்ட இடங்களில் எல்லாம் கற்கள் சிதறிச் சுவர்கள் விரிசல் விட்டிருந்தன.

ஊராரிடம் கேட்டபோது, அது வாரணபுரீசுவரர் கோயில் என்றும் பல ஆண்டுகளாக வழிபாடற்றுப் போய்விட்டதாகவும் திருப்பணி செய்வார் யாருமில்லை என்றும் கூறினர். ஊர்ப் பெரியவர்களிடம் இக்கோயிலைச் சீரமைக்க உதவமுடியுமா என்று கேட்டபோது மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டனர். மருதூர்ப் பணி முடித்துத் திரும்பியதும் திரு. மஜீதுடன் பேசினேன். அவர் உடனிருப்பதாக உறுதியளித்தார். நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுடன் தாம் வந்துவிடுவதாகக் கூறிய நண்பர் இராஜேந்திரன், அது மார்ச்சுத் திங்களாக இருந்தமையால் (1985) குறைவான அளவிலேயே மாணவர்கள் கலந்தகொள்ள முடியும் என்று தெரிவித்தார். அதனால், சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி வரலாற்றுத்துறைப் பேராசிரியர் திருமதி கீதாவின் உதவியை நாடினேன். செயலூக்கமும் அன்புள்ளமும் கொண்ட திருமதி கீதா உடன் ஒப்புக் கொண்டார். ஊர்ப் பெரியவர்கள் கோயிலுக்கருகில் நீர்க்குழாய் ஒன்று வைத்துத் தருமாறும் நெடுஞ்சாலையில் இருந்து ஊருக்குள் நுழைய பெருஞ்சுற்றுச் சுற்றி வரவேண்டியிருப்பதால், நெடுஞ்சாலையிலிருந்து கோயிலுக்கு நேர்ப் பாதை ஒன்று போட்டுத் தருமாறும் கேட்டார்கள். அவர்கள் கேட்பில் நியாயம் இருப்பதை உணர்ந்தேன்.

கோயிலைச் சுற்றி வயல்வெளிகள்தான். அவை கோயில் இருந்த மேட்டுப்பகுதியை முப்புறத்தும் சூழ்ந்திருந்தன. கோயிலின் மேற்கில் ஊர் அமைந்திருந்தது. அதனால், நெடுஞ்சாலையில் இருந்து கோயிலுக்கு நேரடிச் சாலை அமைக்க வேண்டுமாயின் வயல்வெளியை அகற்றிதான் செய்ய வேண்டியிருக்கும். ஊரார் பயன்பாட்டில் இருந்த அந்நிலப்பகுதியை எப்படிக் கேட்டுப் பெறுவது என்பது எனக்குத் தெரியவில்லை. அதற்குள் கோயில் சீரமைப்பிற்கு 11. 03. 1985 என நாள் குறித்தாயிற்று.

சீரமைப்புப் பணியைத் தொடங்கிவைக்கக் காவல்துறைத் துணைத் தலைவர் திரு.வெங்கடேசனையும் அவரது துணைவியார் திருமதி இராணியையும் அழைத்திருந்தோம். காலையில் சீரமைப்புப் பணி தொடங்கியது. காவல்துறைத் துணைத் தலைவர் கோயிற் பணிக்கென வந்திருந்த மாணவர்கள், ஊர்மக்கள் இடையே சிறிது நேரம் பேசிய பின், மாணவர்களைப் பராட்டி ஊக்குவித்தார். நண்பர் மஜீது கோயில்களின் அருமை பற்றி எடுத்துரைக்கச் சீரமைப்புப் பணி தொடங்கியது. வாணி தம் அன்னையாருடன் வந்திருந்தார். பேராசிரியர் கீதாவும் இராஜேந்திரனும் தம் மாணவர்களுடன் பணியில் ஈடுபட்டனர். ஊர் இளைஞர்கள் கோயில் மீதேறி மரங்களை வெட்டி வீழ்த்தினர். ஐந்தரை மணியளவில் மாணவர்களும் ஊர் இளைஞர்களுமாய்ச் சேர்ந்து பல்லாண்டுகளாய்ப் பாழ்பட்டுப் போயிருந்த அந்தக் கோயிலுக்குப் புதிய வடிவமளித்தனர்.

ஊரார் உதவியுடன் மாணவிகளும் மாணவர்களும் கோயிலை மெழுகி, அழகழகான கோலங்கள் போட்டனர். மாலையில் வழிபாட்டைத் தொடங்கி வைக்க மாவட்ட ஆட்சித்தலைவரும் அவர் துணைவியாரும் வந்திருந்தனர். கி. ஆ. பெ. விசுவநாதம் மேனிலைப் பள்ளித் தாளாளர் திரு. கோவிந்தம்பிள்ளை, சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி முதல்வர் காமாட்சி இவர்களும் உடனிருந்தனர். சரியாக ஆறு மணிக்குக் கோயிற் பணியில் உழைத்தவர்களே கூட்டுறவாய் வயலூர் சிவாச்சாரியார் அமரர் ஜம்புகேசுவரரின் உதவியுடன் அந்தப் பரம்பொருளை முழுக்காட்டி, விளக்கேற்றி, தேவார இசை முழங்கப் பூத்தூவி வழிபாட்டைத் தொடங்கினர். அந்தக் கோயில் அன்று புதுவாழ்க்கை பெற்றது.

மாணவர்கள் தொடங்கிய வழிபாட்டைத் தொடர்ந்து நாளும் கோயிலில் பூத்தூவி விளக்கேற்றி மக்களில் ஒரு சிலரேனும் வழிபட்டபோதும், சாலை அமையாமையும் நீர்க்குழாய் இல்லாமையும் மீண்டும் அக்கோயில் பழைய நிலைக்குப் போய்விடுமோ என்ற அச்சத்தை எனக்குத் தந்தது. அதனால் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. வ. விசுவநாதனைச் சென்று பார்த்தேன். அவர் அனைத்து உதவிகளும் செய்ய முன்வந்தார். பனமங்கலத்தை உள்ளடக்கிய கோட்ட வளர்ச்சி அலுவலரைத் தொலைப்பேசியில் அழைத்து உடனே பனமங்கலம் சென்று மக்கள் தேவைகள் அறிந்து வருமாறு அறிவுறுத்தினார்.

ஊர் மக்களை அரசு அலுவலர் தொடர்பு கொண்டார். பொதுமக்கள் என்னிடம் வைத்த வேண்டுகோள்களை அவரிடமும் கூறினர். இது அரசின் பொறுப்பு என்றும், ஆனால், சாலை அமைப்பதற்கான வழியிலுள்ள நிலப்பகுதிகள் ஊர் மக்களின் சொத்தாக இருப்பதால், யாரேனும் நிலத்துண்டுகளைக் கொடையாகத் தந்தால்தான் சாலை அமைத்தல் கூடுமென்றும் அவர் தெரிவித்தார். அரசு அமைக்கும் சாலை ஊர் முழுவதற்கும் பயன்படும் என்பதறிந்த நிலையில் பெரியவர் ஒருவர் தம்முடைய நிலப்பகுதியை அரசு எடுத்துக்கொண்டு சாலை அமைக்கலாம் என அறிவித்தார். உடன் பணிகள் தொடங்கின. இரண்டே நாட்களில் கோயில் உள்ள பகுதிக்கு குழாய் இணைப்புக் கிடைத்தது. ஊர் மக்களின் கொண்டாட்டத்திற்கு அளவேயில்லை. சாலை அமைக்கும் பணியை மேற்கொண்ட வளர்ச்சி அலுவலர் அப்பணியை ஒரு வாரத்தில் முடித்துத் தந்தார்.

சாலைத் திறப்பு விழாவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு வ. விசுவநாதன், அவர் துணைவியார் திருமதி ஆதிரைச் செல்வி, காவல்துறைத் துணைத் தலைவர் திரு. வெங்கடேசன் அவர் துணைவியார் திருமதி இராணி இவர்கள் வந்திருந்தனர். கோயிலைச் சீரமைத்து வழிபாடு தொடங்கத் துணைநின்ற அனைவரும் கலந்து கொண்ட அந்நிகழ்வில் நிலமளித்த பெரியவருக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பொன்னாடை போர்த்திச் சிறப்பித்தார். அன்று கோயில் வழிபாடு மிகச் சிறப்பான நிலையில் அமைந்தது. விருந்தினர்கள் அனைவருக்கும் ஊரார் பொங்கல் வழங்கினர். 'பனமங்கலத்தில் ஒரு புதுமங்கலம்' என்னும் தலைப்பில் இக்கோயில் புதுவாழ்வு பெற்ற வரலாற்றைக் கதிர் கட்டுரையாக வெளியிட்டுச் சிறப்புச் செய்தது.

பனமங்கலம் பணியின்போது எனக்கு உறுதுணையாய் இருந்த பேராசிரியர் சீ. கீதா உழைப்பில் சளைக்காதவர். வாணியின் நெறியாளராக அறிமுகமாகி, என் பணிகளுக்குத் துணை நின்ற நாட்டு நலப்பணித் திட்ட அலுவலராய் வளர்ந்து, நாளடைவில் தம் அன்பினாலும் ஊக்கம் மிகு உழைப்பாலும் என் இனிய தங்கையாய் வரலாற்றாய்வுக் குடும்பத்தில் தம்மை இணைத்துக் கொண்ட பேராசிரியர் கீதாதான், என் வழிக் கோயிற் கட்டடக்கலையை முறையாகப் பயில முன்வந்த முதல் பேராசிரியர். இதற்குத் தூண்டலாகவும் துணையாகவும் இருந்தவர் பேராசிரியர் கோ. வேணிதேவி. சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியில் வரலாற்றில் முதுகலை பயிலும் மாணவியருக்குக் கோயிற் கட்டடக்கலையையும் கல்வெட்டியலையும் இரண்டு முதன்மைப் பாடங்களாக அறிமுகப்படுத்தி, இன்றளவும் தொடர்ந்து அவை மாணவியரைச் சென்றடையச் செய்துவரும் அப்பெருமக்கள் இருவரும் வணங்கத் தக்கவர்கள்.

கோயிற் கட்டடக்கலையைக் கற்றுக் கொள்ளப் பேராசிரியர் சீ. கீதா மேற்கொண்ட பயணங்கள் பெரும் பொருட் செலவின. வீட்டை விட்டு வெளியில் சென்று ஆய்வு செய்வதால் குடும்ப நிருவாகத்தில் ஏற்படும் சங்கடங்கள் வேறு. எனினும் சற்றேனும் தயங்காமல், ஓர் அரிய கலையைக் கற்றுக் கொள்கிறோம் என்ற உணர்வுடன் அவர் எல்லாத் துன்பங்களையும் பொறுத்துக் கொண்டு கட்டடக்கலை பயின்றார். பல்லவ மண் பலமுறை எங்களைத் தாங்கி மகிழ்ந்தது. வேணிதேவி, கீதா, நளினி, அகிலா, நான் என எங்கள் பயணங்கள் அவர் கல்விக்குத் துணை நின்றதுடன், கோயில் கட்டடக்கலையில் மேன்மேலும் தெளிவுபெற எனக்கும் நளினிக்கும் பேருதவியாயின. அத்யந்தகாமத்தின்பால் நாங்கள் ஈர்க்கப்பட்டதும் அதுபோல் அமைந்த பயணங்கள் ஒன்றின் போதுதான்.

1983-84ல் நான் மேற்கொண்ட சில கோயிலாய்வுப் பயணங்கள் மறக்கமுடியாதவை. அவற்றுள் முதன்மையானது வங்கநாட்டைச் சேர்ந்த பாலா மரபுக் கலைவடிவம் ஒன்றை மேலைக்கடம்பூர் அமிர்தகடேசுவரர் கோயிலில் கண்டமைதான். முதற் குலோத்துங்க சோழரின் கட்டுமானமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள மேலைக்கடம்பூர் கோயிலைக் 'கரக்கோயில்' என்று அப்பர் குறித்துள்ளார். சம்பந்தராலும் பாடப்பெற்றுள்ள இவ்வூரிலுள்ள கோயில் தமிழராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் பார்க்கவேண்டிய கலைக்கோயில். விமானம், தேர் வடிவில் அமைந்த இந்த அழகுக் கோயிலின் சிற்பங்களும் கட்டுமானமும் கோயிற்கலைகளில் தெளிவு பெற விழையும் ஒவ்வொருவரும் காணவேண்டிய அமைவுகளாகும்.

தனியார் பொறுப்பில் இருந்த இக்கோயிலுக்கு நாங்கள் முதன் முறையாகச் சென்றபோது கோயிலின் மரபுவழி அறங்காவலர் திரு. கோவிந்தப்பிள்ளை எங்களை அன்புடன் வரவேற்றார். கோயிலைப் பற்றி அறிந்து கொள்ளவும் விழைந்தார். அவர் இல்லத்திலேயே மதிய உணவளித்துப் போற்றினார். அவரது மகன் திரு. மாசிலாமணி அப்போது அண்ணாமலைப் பல்கலையில் படித்துக்கொண்டிருந்தார். கோயில் முழுவதும் பார்வையிட்டுக் கல்வெட்டுகளைத் தேடிப் படித்ததுடன், கட்டுமானம் பற்றித் தெரிந்தவரையில் குறிப்பெடுத்தோம். இந்தக் கோயிலின் உமையன்னைதான் என் முதல் நூலான கலை வளர்த்த திருக்கோயில்களின் அட்டையை அழகுபடுத்தியவர்.

பாதுகாப்புக் கருதி நிலவறையில் வைக்கப்பட்டிருந்த செப்புத்திருமேனிகளிலிருந்து பாலா நடராசரை வெளிக்கொணரச் செய்து என் ஆய்வுக்கு வழங்கிய திரு. கோவிந்தப்பிள்ளை, அதைப் பற்றி விரிவாக அறிந்து கொள்ளவும் விழைந்தார். ஏறத்தாழ அரைமணிநேரம் பல கோணங்களில் அந்த ஆடவல்லான் திருமேனியை நானும் என் வாழ்வரசியும் ஆராய்ந்தோம். நந்தியின் மேல் இறைவன் ஆடுமாறு அமைந்த அபூர்வமான செப்புத்திருமேனி அது. பத்துத் திருக்கரங்களுடன் அமைந்த அந்த நந்தி தாண்டவமூர்த்தியின் தளத்தில் இறைவனுடன் ஆடுமாறு போலப் பல இறை வடிவங்கள் இடம்பெற்றிருந்தன.

திரு. சி. சிவராமமூர்த்தி தம்முடைய நடராசர் பற்றிய நூலில் இந்தச் செப்புத்திருமேனியைப் பற்றி விரிவாகப் பேசியுள்ளார். ஆனால், அவர் தரவுகளில் பல பிழையாக இருந்தமையை நேரடி ஆய்வில் அறியமுடிந்தது. பத்துக் கைகள் உள்ள அந்த இறைத்திருமேனிக்குப் பதினாறு கைகள் இருப்பதாக அவர் குறிப்பிட்டிருப்பது கொண்டு நோக்குகையில், சிவராமமூர்த்தி செப்புத் திருமேனியை நேரடியாகப் பார்க்காமல் ஒளிப்படத்தை வைத்துக்கொண்டு எழுதியிருப்பாரோ என்றே நினைக்கத் தோன்றுகிறது. 'ஆடவல்லான்' எனும் நூலை எழுதியுள்ள மகாவித்துவான் திரு. தண்டபாணி தேசிகரும் இத்திருமேனியைப் பற்றித் தவறான தகவல்களே தந்துள்ளார். இத்திருமேனிக்கு எட்டுக் கைகளே இருப்பதாகக் குறித்துள்ளார் அவர்.

இந்தத் திருமேனியைப் பற்றிய என் ஆய்வுக்கட்டுரை, 'பேரறிஞரையும் மயக்கிய பாலா நடராசர்' என்ற தலைப்பில் அமுதசுரபி தீபாவளி மலரிலும், கோயிலைப் பற்றிய விரிவான கட்டுரை, 'கடம்பூர் கரக் கோயில்' என்ற தலைப்பில் 22. 10. 1983ம் நாள் தினமணி கதிரிலும் வெளியானபோது பெரும் வரவேற்பு கிடைத்தது.பாலா நடராசர் பற்றி ஆங்கிலத்தில் ஒரு கட்டுரை தருமாறு திரு. கோபாலன் வேண்ட, 'A Unique Bronze from Bengal' என்ற தலைப்பில் கட்டுரை தந்தேன். அக்கட்டுரை 10. 01. 1984ம் நாள் இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளியாகிப் பரவலான வாசர் வட்டத்தைப் பெற்றுத் தந்தது.

அக்கட்டுரை பெற்ற வரவேற்பில் 11. 2. 1984ம் நாள் இதழில், 'Vayalur Chaturan' கட்டுரையும் 2. 6. 1984ம் நாள் இதழில், 'சூடிஎந்ட் சூய்வ்ய்ச்ய்த்ய் டிக் சூய்ட்ட்ர்ச்' என்ற கட்டுரையும் 11. 8. 1984ம் இதழில், 'Rare Icons of Chandesvarar' என்ற கட்டுரையும், 1. 12. 1984ம் நாள் இதழில், 'ஆனந்தத் தாண்டவர்' என்னும் கட்டுரையும் வெளியாயின. இவற்றுக்கெல்லாம் முன்பே, 'A Rare Gangavatarana Icon' என்ற தலைப்பில் என் முதல் கட்டுரையை 17. 12. 1983ம் நாள் எக்ஸ்பிரஸில் திரு கோபாலான் வெளியிட்டிருந்தார்.

ஒரு தமிழ் நாளிதழில் வெளியாகும் கட்டுரைக்குக் கிடைக்கும் வரவேற்பிற்கும் ஓர் ஆங்கில நாளிதழில் வெளியாகும் கட்டுரைக்குக் கிடைக்கும் வரவேற்பிற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. தமிழ் நாளிதழ்களில் கட்டுரைகளைப் படிப்பவர்கள் குறைவான எண்ணிக்கையினரே. ஆனால், ஆங்கில நாளிதழ்களில் அவற்றைப் படிப்பவர் எண்ணிக்கை மிகுதி. எனக்கு வந்த மடல்களே இதற்குச் சான்றாகும். ஆனால், தினமணி கதிரில் என் கட்டுரைகள் வெளியாகத் தொடங்கிய பிறகு நான் பரவலாக அறியப்பட்டமையைக் கோயிலாய்வுகளுக்குச் சென்றபோது அறியமுடிந்தது. கதிரும் எக்ஸ்பிரஸும் என் பணிகளைத் தமிழகமெங்கும் கொண்டு சேர்த்தன. அந்த அரும்பணியைச் செய்தவர் என் அருமை நண்பர் அமரர் திரு. அ. கோபாலனே ஆவார். வரலாற்றை நேசித்த அந்த மனிதர் என் பணிகளையும் நேசித்தார். அவற்றிலிருந்த உண்மைத் தன்மையும் அறிவியல் பார்வையுமே தம்மைக் கவர்ந்ததாகப் பலமுறை கூறியுள்ளார். திரு.கோபாலன் போல் என்றென்றும் நினைவில் வாழும் இனிய நண்பர்கள் வாய்த்தமை என் பயணத்தில் நான் பெற்ற பேறுகளுள் தலையாயதாகும்.

அன்புடன்,
இரா. கலைக்கோவன்.


this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.