http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 39
இதழ் 39 [ செப்டம்பர் 16 - அக்டோபர் 15, 2007 ] இந்த இதழில்.. In this Issue.. |
தமிழ்நாட்டிலுள்ள கட்டுமானக் கோயில்கள், அமைப்புமுறையை ஒட்டிப் பல வகையினவாக இனம் காணப்பட்டுள்ளன. ஒருதள, இருதள, முத்தள, பலதள விமானங்கள் என தளங்களின் எண்ணிக்கை கொண்டும், நாகரம், வேசரம், திராவிடம் எனச் சிகர அமைப்புக் கொண்டும் மாடக்கோயில், மாடிக்கோயில் என விமான அமைப்புக் கொண்டும் சாந்தாரம், பெருஞ்சாலை, சர்வதோபத்ரம், அங்காலயம் என விமான உறுப்புகளில் உண்டாக்கும் புத்தமைப்புகள் வழியும் இவை வகைப்படுத்தப்பட்டுள்ளன. இத்தகு வகைகளுள் காலத்தால் முற்பட்டதாக மாடக்கோயில்களைக் குறிக்கலாம். கோச்செங்கட் சோழரால் தமிழ்நாட்டுக் கோயில் கட்டடக்கலை வரலாற்றில் அறிமுகப்படுத்தப்பட்ட இம்மாடக்கோயில்கள் திருமுறை ஆசிரியர்களாலும் திருமங்கை ஆழ்வாராலும் விதந்து பேசப்பட்டுள்ளன.
சோழ மண்டலத்தில் இன்றளவும் காணப்படும் இத்தகு மாடக்கோயில்களை முழுமையான அளவில் ஆய்ந்து நுலொன்று உருவாக்கும் பணியில் தற்போது டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம் ஈடுபட்டுள்ளது. இதற்கான முதற் கட்டப் பயணம் செப்டம்பர்த் திங்கள் 8, 9ம் நாட்களில் நிகழ்ந்தது. வரலாற்றாய்வாளர்கள் திரு. பால பத்மநாபன், திரு. சு. சீதாராமன் துணையுடன் ஞாயிறன்று திருநல்லூர் மணவழகர் கோயில் ஆய்வுக்காளானது. விமானம் தாங்கும் வெற்றுத்தளமான கீழ்த்தளம் உத்தமசோழர் காலத் திருப்பணியாகும். விமானத்தின் இரண்டாம் தளச் சுவர்களை ஆராய்ந்தபோது, பல்லவர் காலச் சுவர்ப் பஞ்சரங்களை நான்கு சுவர்களிலும் காணமுடிந்தது. இவ்வழகிய பஞ்சரங்கள் தமிழ்நாட்டுக் கலை வரலாற்றில் முதன் முதலாகத் தலை காட்டும் இடமாக மாமல்லபுரத்து வலையன் குட்டை ரதங்களைச் சுட்டலாம். ஒற்றைக்கல் தளிகளில் அறிமுகப்படுத்தப்பட்ட இச்சுவர்ப் பஞ்சரங்கள் பின்னாளில் கற்றளிகளிலும் முயற்சிக்கப்பட்டன. மாமல்லபுரத்தில் உள்ள ஒலக்கணேசுவரர் விமானத்தில் இவற்றைக் காணமுடிகிறது. பல்லவர்களைத் தொடர்ந்த சோழர்கள் இப்பஞ்சரங்களைத் தொடர்ந்து கைக்கொண்ட போதும், இதன் வடிவமைப்பில் பல மாறுதல்களை உருவாக்கினர். புள்ளமங்கை ஆலந்துறையார், திருஎறும்பியூர் எறும்பீசுவரர், திருப்புறம்பியம் சிவன் கோயில் இவற்றின் விமானங்களில் இத்தகு சுவர்ப் பஞ்சரங்களைக் கண்டு களிக்கலாம். பொதுவாக இத்தகு பஞ்சரங்கள் விமானத்தின் கீழ்த்தளத்தில்தான் அமையும் என்றாலும், திருநல்லூர் விமானத்தில் இவை இரண்டாம் தளச் சுவர்களில் இடம்பெற்றிருப்பது புதிய பதிவாக அமைந்துள்ளது. காஞ்சிபுரம் கயிலாசநாதர் கோயில் விமானத் தளங்களில்கூட இவற்றைப் பார்த்த நினைவில்லை. இப்புதிய கண்டுபிடிப்பினால், பல்லவ விமானங்கள் அனைத்தையும் மீளாய்வுக்கு உட்படுத்தி, அவற்றில் எதுவேனும் இரண்டாம் தளத்தில் இத்தகு பஞ்சரங்களைக் கொண்டுள்ளதா என்று கண்டறிதல் கடமையாகியுள்ளது. this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |