http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[178 Issues]
[1762 Articles]
Home About US Temples Facebook
Issue No. 41

இதழ் 41
[ நவம்பர் 16 - டிசம்பர் 15, 2007 ]


இந்த இதழில்..
In this Issue..

களைய முடியாத குறைகளா?
கண்ணப்பர் கால் வைத்தாரா?
காலப்பதிவுகள்
திரும்பிப் பார்க்கிறோம் - 13
மேலப்பெரும்பள்ள மாலைத்தொங்கல்கள்
புள்ளி தந்த பிள்ளையார்!
Silpis Corner (Series)
Silpi's Corner-03 (Deepavali Number)
Links of the Month
அன்றும் இன்றும் என்றென்றும் திருச்சதயவிழா
தமிழர் திருமணத்தில் தாலி?
இதழ் எண். 41 > கலைக்கோவன் பக்கம்
திரும்பிப் பார்க்கிறோம் - 13
இரா. கலைக்கோவன்

அன்புள்ள வாருணி, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு அதற்கு முன் நான் சென்றதில்லை. ஆனால், அப்பல்கலையின் தமிழ்த்துறை எண்ணற்ற அறிஞர்களை உருவாக்கிய இடம் என்பதை அறிவேன். அதன் தலைவராக இருந்த பேராசிரியர் முனைவர் ஆறு. அழகப்பனின் நாட்டுப்புறவியல் தொடர்பான நூல்களை, 'இலக்கிய இளவல்' பட்டப் படிப்பிற்காகப் படித்திருக்கிறேன். காரைக்குடித் தமிழ்க் கல்லூரியில் என் உரை கேட்ட அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியர் ஒருவரே, நான் அங்கு அழைக்கப்பட்டதற்குக் காரணம் என்பதை அங்குச் சென்றபோது அறியமுடிந்தது.

சிராப்பள்ளியிலிருந்து காலை 7. 00 மணியளவில் புறப்பட்டுப் பகல் 1. 30 மணியளவில் சிதம்பரம் சென்றடையும் சோழன் விரைவு வண்டியில் பயணம் செய்தேன். நளினியின் திருஎறும்பியூர் ஆய்விற்காகக் கல்வெட்டுகளைப் படித்துக் கொண்டிருந்தேன். மெய்க்கீர்த்தியோ, உள்ளீட்டுச் சான்றுகளோ இல்லாத இராஜகேசரிக் கல்வெட்டுகள் எறும்பியூரில் சில உண்டு. அவை எந்தச் சோழ மன்னரைக் குறிக்கின்றன என்பதை அடையாளப்படுத்தினால்தான் எறும்பியூர்க் கோயில் கற்றளியான காலத்தைக் கணிக்க முடியும். திரு. என். சேதுராமனின் முற்சோழர் புத்தகம் எடுத்துச் சென்றிருந்தேன். வானவியல் குறிப்புகளின் அடிப்படையில் சோழ மன்னர்களின் ஆட்சிக்காலம் பற்றிய தம் கருத்துக்களைத் திரு. சேதுராமன் அப்புத்தகத்தில் வெளிப்படுத்தியிருந்தார். அதைப் படித்து முடிக்கச் சிதம்பரம் பயணம் எனக்குப் பெரிதும் உதவியது.

திரு. சேதுராமனின் அருளுடைச் சோழமண்டலம் ஏற்கனவே படித்திருக்கிறேன். அது ஒரு வேடிக்கையான புத்தகம். அவரைக் கங்கைகொண்ட சோழபுரத்தில் சந்தித்தபோது அப்புத்தகத்தைப் பற்றி அவர் விதந்து கூறியது கேட்டேன். அந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஒருவர் இராஜேந்திரசோழரின் மனைவியாகச் செம்பியன்மாதேவியைக் குறிப்பிட்டபோது மேடையில் அமர்ந்திருந்த சேதுராமன் தலையில் அடித்துக்கொண்டதுடன், 'தெளிவில்லாதவர்கள் எத்தனை துணிவுடன் மேடைகளில் பிதற்றுகிறார்கள்' என்றும் என்னிடம் வருந்தியது நினைவில் உள்ளது.

திரு. சேதுராமனுடன் பின்னாட்களில் நன்கு பழகியிருக்கிறேன். அவரை முன்னிலைப் படுத்தி ஆய்வுத்துறையில் வளர்த்தவர் முனைவர் இரா. நாகசாமி ஆவார். ஆனால், காலப்போக்கில் இருவருக்கும் இடையில் கருத்துவேறுபாடுகள் தோன்றி செய்தி இதழ்களிலேயே கட்டுரை மோதல் நிகழும் அளவிற்கு நிலைமை மாறியது. இரண்டு முறை திரு. சேதுராமனை எங்கள் ஆய்வு மையத்தில் உரையாற்ற அழைத்திருக்கிறேன். ஒரு முறை, 'பாசுபதச் சிந்தனைகள்' என்ற தலைப்பிலும் மற்றொரு முறை, 'பாண்டியர்கள்' என்ற தலைப்பிலும் உரையாற்றினார். எங்களிடம் பட்டயக் கல்வி பயின்ற மாணவர்களுக்காக இரண்டு பொழிவுகள் தருமாறு அழைத்து, அதற்காகவும் அவர் சிராப்பள்ளி வந்துள்ளார்.

கூட்டங்களிலும் வகுப்புகளிலும் உரையாற்றும்போது, பல கல்வெட்டுகளைக் குறிப்பிட்டு அவை எந்தத் தொகுதியில், எந்த ஆண்டில், எந்த எண்ணின் கீழ் வெளிவந்துள்ளது என்பதையும் அவர் கூறுவது வழக்கம். அவருடைய இந்த நினைவாற்றல் என்னை வியக்கவைத்துள்ளது. என்னால் எந்தக் காலத்திலும் இப்படிச் செய்ய முடிந்ததில்லை. ஒரு முறை எங்கள் மையத்தில் நடந்த கூட்டத்தில் பாசுபதம் பற்றிய கல்வெட்டுகளைப் பற்றிக் கூறும்போது, இது போல் ஆண்டறிக்கையின் காலம், எண், பக்கம் உட்படக் கூறினார். நான் அந்தக் கல்வெட்டைப் படித்ததில்லை என்பதால் உடன் குறித்துக் கொண்டேன். அன்றிரவு என்னிடம் இருந்த ஆண்டறிக்கையில் அவர் கூறிய பகுதியில் அந்தக் கல்வெட்டைத் தேடினேன். கிடைக்கவில்லை. ஒரு வேளை நாம்தான் தவறாகக் குறிப்பெடுத்துவிட்டோமோ என்று அகிலாவிடமும் நளினியிடமும் கேட்டேன். அவர்கள் பதிவும் என்னுடைய பதிவும் ஒன்றாய் இருந்தது. அவர் நினைவு தடுமாறி இருக்கலாம் என்று கருதி, வாளா இருந்துவிட்டேன்.

மாணவர்களுக்குப் பாடமெடுக்க அவர் வந்திருந்தபோது இது போல் காலம், எண், பக்கம் கூறினால் குறிப்பெடுத்துக் கொண்டு உடன் சரிபார்க்கவேண்டும் என்று தோன்றியது. அவரும் வழக்கம் போலப் பல குறிப்புகளை நினைவிலிருந்து சொன்னார். அவர் உரையாற்றிக் கொண்டிருந்தபோதே அக்குறிப்புகளைச் சரிபார்த்தோம். அவர் சொன்னவை ஒன்றுகூடப் பொருந்தி வராமை வருத்தம் தந்தது. பகல் உணவின்போது இது குறித்து அவரிடம் குறிப்பிட்டேன். 'மாற்றிச் சொல்லிவிட்டேன் போலிருக்கிறது' என்று சமாளித்தார். ஒன்று மாறலாம், கூறியது அனைத்துமா மாறும்? அவர் நினைவாற்றலின் மீதிருந்த மதிப்பும் வியப்பும் அன்றோடு பொடியாயின.

வாருணி, என்னுடைய வரலாற்றாய்வு அனுபவத்தில் நான் சந்தித்த அறிஞர்களுள் பலர் இவர் போன்றவர்களே. யார் சரிபார்க்கப் போகிறார்கள் என்ற எண்ணத்தில் எதை வேண்டுமானாலும் துணிந்து கூறுவார்கள். சரிபார்த்து யாராவது அவர்கள் பிழைகளைக் கண்டறிந்து வெளிப்படுத்தினால், ஏதாவது கூறிச் சமாளிப்பார்கள்; அல்லது வெளிப்படுத்தியவரைப் புறம் பேசி இழிவு செய்து மகிழ்வார்கள். திரு. சேதுராமன் சமாளித்ததுடன் நிறுத்திக் கொண்டதாகவே நினைக்கிறேன். அவருக்கும் எனக்கும் இடையில் எப்போதும் நல்லுறவே இருந்திருக்கிறது. 'தனக்கு எல்லாம் தெரியும்' என்ற மிகை நிலை இல்லாத ஆய்வாளர்களைப் பார்ப்பது அரிது. அதனால், தொடக்கக் காலத்தில் ஆய்வாளர்களின் இந்த நிலை எரிச்சலைத் தந்தபோதும், தொடர்ந்து பழகிய ஆய்வாளர்கள் இதற்குப் பழக்கிவிட்டனர்.

திரு. என். சேதுராமனின் கால ஆய்வுகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. அவருடைய பல முடிவுகள் பிழையாக இருப்பதைப் பின்னாட்களில் களஆய்வுகளின் வழி அறிந்திருக்கிறேன். என்றாலும், அவரது ஆர்வம் போற்றத்தக்கது. அவரால் பயன்பெற்ற பலரை நானறிவேன். கல்வெட்டு நிறுவனத்திற்கும் அவருக்கும் நெருங்கிய நட்பு இருந்தது. அந்த நட்பின் வளமை பற்றிப் பலமுறை பல நுட்பமான செய்திகளை அவர் பகிர்ந்துகொண்டதுண்டு. அவற்றை எல்லாம் நினைவுப் பதிவுகளாக வெளியிடுவதுகூடப் பெருந்தன்மையாகாது.

கோனேரிராஜபுரம் என்றழைக்கப்படும் திருநல்லூர் உமைக்கு நல்லவன் கோயிலில் காணப்படும் சிற்பத்தொகுதி ஒன்று பற்றிய திரு. சேதுராமனின் ஆய்வே என்னை முற்சோழர்கள் நூலைப் படிக்கவைத்தது. அந்தச் சிற்பத்தொகுதியில் சிவலிங்கத்தைப் பார்த்தவாறு அமர்ந்திருக்கும் முதல் உருவத்தைச் செம்பியன்மாதேவியாக அவர் அடையாளப்படுத்தி இருந்தார். அத்துடன் நில்லாது, அச்சிற்பத்தின் கூந்தலில் பூச்சரங்கள் இருப்பதாகவும் அதனால் அந்தத் தொகுதி செதுக்கப்பட்ட காலத்தில் செம்பியன்மாதேவி சுமங்கலியாகவே இருந்தார் என்றும் கூறி, அதன் வழிக் கண்டராதித்தர் ஆயுளைக் கணித்திருந்தார். அறிஞர் எஸ். ஆர். பாலசுப்பிரமணியம் உட்படப் பலரையும் மயக்கிக் குழப்பிய தொகுதி அது. அந்தத் தொகுதியை மிக விரிவாக ஆய்வு செய்து செந்தமிழ்ச் செல்வியில், 'கோனேரிராஜபுரத்துக் குழப்பங்கள்' என்ற தலைப்பில் தொடர் கட்டுரை எழுதியுள்ளேன். அந்தத் தொகுதியிலுள்ள நான்கு சிற்பங்களுமே ஆடவர்களைக் குறிப்பன. அவற்றுள் ஒன்றுகூடப் பெண்வடிவம் இல்லை. இருந்தும், திரு. சேதுராமன் இலிங்கத்திற்கு முன் உள்ள வடிவத்தைச் செம்பியன்மாதேவியாகக் கொண்டு, அவரைச் சுமங்கலியாகப் பார்த்துக் கண்டராதித்தர் காலத்தை நிர்ணயித்தது அவரது ஆய்வு முடிவுகளில் நம்பிக்கைக் குறைவை உண்டாக்கியது. முற்சோழர் வாசிப்பு அதை வளர்த்தது.

சோழன் விரைவு வண்டி சிதம்பரத்தை நெருங்குவதற்குள் எறும்பியூர் இராஜகேசரியை இன்னார் எனக் கண்டறியமுடிந்தது. சிதம்பரம் சந்திப்பிற்குப் பேராசிரியர் ஒருவர் வந்திருந்தார். அவருடன் சென்று துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் ஆறு. அழகப்பனைச் சந்தித்தேன். அன்புடன் உரையாடினார். துறையின் மன்றக் கூடத்தில் இருந்த தமிழறிஞர்களின் படங்களில் தந்தையாரின் படமும் இடம்பெற்றிருப்பதைக் காட்டினார். அந்த மன்றத்தில்தான் பிற்பகல் மூன்று மணிக்கு உரை நிகழ்ந்தது. தந்தையாரே எதிரில் இருப்பது போல் உணர்ந்து காட்சி உரை நிகழ்த்தினேன். உரைக்குப் பின் கேள்வி நேரம் அமைந்தது. தேநீருக்குப் பின் பல்கலைக்கழக விருந்தினர் விடுதியில் தங்கச் செய்தனர்.

இரவு எட்டு மணிக்குப் பேராசிரியர் முனைவர் ஆறு. அழகப்பன் வீட்டில் கலந்துரையாடல் நிகழ்வு காத்திருந்தது. அதனால் அதற்கு முன் பல்கலை நூலகம் பார்க்க விரும்பி அங்குச் சென்றேன். வரலாறு, தமிழ்ப் பகுதிகளைப் பார்வையிட்டேன். கலைப்பகுதியில் டாக்டர் பத்மா சுப்ரமணியத்தின் முனைவர் ஆய்வேடு இருக்கிறதா என்று தேடினேன். கிடைக்கவில்லை. அப்பகுதியிலிருந்த உதவியாளரிடம் கேட்டபோது நூலகரைக் கேட்குமாறு கூறினார். நூலகரிடம் விசாரித்தபோது ஆய்வேடு நூலகத்தில் இல்லை என்று மட்டும் பதிலிறுத்தார். எனக்கு வியப்பாக இருந்தது. எந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் முனைவர் ஆய்வு செய்கிறோமோ அந்தப் பல்கலையின் நூலகத்தில் அவ்வாய்வேடு உறுதியாக வைக்கப் பெறும். மிகுந்த ஆர்வத்தோடு தேடிய எனக்கு ஏமாற்றமே விளைந்தது.

இரவு எட்டு மணிக்குப் பேராசிரியர் ஆறு. அழகப்பன் இல்லத்தில் நிகழ்ந்த கலந்துரையும் முதன்மையானதே. அவர் உள்ளத்தில் கருக்கொண்டிருந்த தமிழன்னையின் கோயில் பற்றிய சிந்தனை வட்டம் அது. பலவும் விவாதித்தோம். இரவு உணவு அங்கேயே அமைந்ததாக நினைவு. காலையில் சிதம்பரம் கோயிலுக்குத் தமிழ்த்துறைப் பேராசிரியர் திரு. ஆனந்த நடராஜ தீட்சிதருடன் சென்றேன். சிதம்பரம் கோயிலுக்கு முன்பே போயிருக்கிறேன் என்றாலும், இந்த முறைதான் விரிவாகப் பார்த்தேன். தீட்சிதருடன் சென்றதால் கோயிலின் அனைத்துப் பகுதிகளையும் பார்க்கமுடிந்தது. சில முக்கியமான சிற்பங்களைப் படமெடுக்கவும் வாய்த்தது. ஏற்கனவே நான் ஆய்வு செய்திருந்த உச்சிஷ்ட கணபதி, நான்முக சண்டேசுவரர் சிற்பங்களைச் சிதம்பரத்திலும் பார்த்தேன். கரணச் சிற்பங்களைப் படமெடுத்தேன். சென்ற முறையைவிட இந்த முறை கரணச் சிற்பங்களை விரிவாக ஆராயமுடிந்தது.

சிதம்பரத்திலிருந்து திரும்பியதும் நளினியை அழைத்து இராஜகேசரி பற்றிய என் சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டேன். அதைப் பின்புலமாகக் கொண்டு ஆய்வேட்டின் முடிவுரையை உருவாக்குமாறு அறிவுறுத்தினேன். இரண்டே நாட்களில் முடிவுரை தயாரானது. ஆதித்த சோழர் உருவாக்கிய கற்றளியே அது என்பதைக் கல்வெட்டுகளின் அடிப்படையில் உறுதி செய்ததுடன், கண்டராதித்தர், சுந்தரசோழர் கல்வெட்டுகள் வழி வெளிப்பட்ட செம்பியன்வேதிவேளான் என்ற மானுட நேயரை வெளிச்சப்படுத்தினோம். பின்னாளில் இந்த அரிய மனிதரைப் பற்றி வானொலி உரை ஒன்றிலும் விரிவாகப் பேசியுள்ளேன். தமிழ்நாட்டு வரலாற்றில் செம்பியன்வேதிவேளான் ஒத்த அருளாளர்கள் பலர் உண்டு. வாழ்க்கையைப் பொருளுடையதாக்கித் தம்மைச் சூழ இருந்த சமுதாயத்திற்குத் தொண்டாற்றிய இவர்களால் வளம் பெற்ற கோயில்களும் ஊர்களும் பல.

1985ம் ஆண்டில் என்னுடைய 'Mookkicharam and its rare sculptures' (6. 4. 85), 'Dakshayani' (1. 6. 85), 'Save this Floating Temple' (6. 7. 85), 'Siva On Snake' (27. 7. 85), 'At The Lotus Feet' (23. 11. 85), 'Monument of Love' (19. 5. 85) எனும் ஆறு கட்டுரைகளை இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் வெளியிட்டிருந்தது. தினமலர் நாளிதழில் என் முதற் கட்டுரை 23. 7. 82ல் வெளியானது. தொடர்ந்து தினமலர் எங்கள் கண்டுபிடிப்புகளை உலகிற்கு எடுத்துச் சென்றது. அதில் செய்தியாளராக இருந்த திரு. கோவிந்தசாமியும் ஆசிரியர் குழுவில் இருந்த திரு. குணசேகரனும் எங்கள் ஆய்வு மையத்திடம் மாறா அன்பு கொண்டிருந்தனர். அது போலவே தினத்தந்தி நாளிதழின் செய்தி ஆசிரியர் கவிஞர் திருச்சி பாரதனும் எங்கள் பணிகளில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். புதிய கண்டுபிடிப்புகள் பற்றிய செய்திகளைப் பெரும்பாலும் நாங்கள் எழுதித்தந்தவாறே அவர்கள் பதிப்பித்து வந்தமையால் எந்தச் சிதைவும் இல்லாமல் எங்கள் கண்டுபிடிப்புகள் ஆய்வாளர்களைச் சென்றடைந்தன.

தமிழ்நாடு அரசின் செய்திப் பிரிவு வெளியிட்டு வந்து தமிழரசு இதழும் என் கட்டுரைகளை விரும்பிக் கேட்டு வெளியிட்டது. முதற் கட்டுரை, 'சம்பந்தர் போற்றிய திருத்தண்டலை' என்ற தலைப்பில் 1. 11. 82 இதழில் வெளியானது. இரண்டாம் கட்டுரை 'கீழைக்கடம்பூரில் ஒரு கலைக்கோயில்' (16. 3. 83) என்ற தலைப்பில் வெளியானது. இந்தக் கடம்பூர்க் கோயில் அழகிய சிற்பங்களையும் சோழர் காலக் கல்வெட்டுகளையும் கொண்ட திருக்கோயில். காலத்தின் கைகளிலும் மக்களின் ஆதரவற்ற போக்காலும் இது அடைந்திருக்கும் சேதம் சொல்லிமாளாது. என் ஆய்வின்போது கருவறை இலிங்கத்தையே ஒரு வீட்டில் படிக்கட்டாகக் கண்டேன்.

தமிழரசு 6. 9. 83 இதழில், 'பேரறிஞர்களையும் மயக்கிய பாலா நடராசர்' கட்டுரை வெளியானது. கரந்தைத் தமிழ்ச் சங்க வெளியீடான தமிழ்ப்பொழில் இதழிலும் என் ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெறத் தொடங்கின. முதற் கட்டுரை நன்னிலம் வட்டத்திலுள்ள திருமருகல் கோயில் பற்றியதாக அமைந்தது. 1982 செப்டம்பர் - அக்டோபர் இதழில் அக்கட்டுரை வெளியானது. 'ஆயிரத்தில் ஒருவருக்காய் அமைந்த அழகிய தான்தோன்றி மாடம்' எனும் கட்டுரை தமிழ்ப்பொழில் 1983 ஜனவரி - பிப்ருவரி இதழிலும் 'பாழடைந்து கிடக்கும் பழையாறைத் திருக்கோயில்' 1984 மார்ச்சு இதழிலும் 'சோழபுரத்துக் கோயில்கள்' 1984 ஏப்ரல் - மே இதழிலும் வெளியாயின. ஜூன் 84ல் வெளியிடப்பெற்ற தமிழ்ப்பொழில் சிறப்பு மலரில், 'திருக்கற்றளிப் பரமேசுவரர் கோயில் கல்வெட்டுகள்' எனும் கட்டுரை இடம்பெற்றது.

என் இளவல் பேராசிரியர் முனைவர் மா. ரா. அரசு, மாணவர்களுடன் இணைந்து ஓர் அரையாண்டு இதழைத் தொடங்கினார். 'இளமையின் குரல்' எனும் பெயரில் அமைந்த அவ்விதழின் முதல் வெளியீடு 1983 ஜூனில் வந்தது. 'வயலூரில் ஒரு வடிவழகன்' எனும் தலைப்பில் எழுதப்பட்ட என் கட்டுரை அதில் வெளியானது. 1984 ஜூன் 'கல்வெட்டு' இதழில் தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறைக் கருத்தரங்கில் நான் படித்த, 'கோச்செங்கணான் மாடக்கோயில்கள்' கட்டுரை வெளியானது. அக்கருத்தரங்கில் படித்தளிக்கப்பட்ட தொல்லியல் துறை சார்ந்த ஆய்வாளர்களின் கட்டுரைகள் தனித் தொகுதியாக வெளியிடப்பட்டன. என் கட்டுரை மட்டுமே அத்தொகுதியில் இடம்பெறாமல்போனது. அதற்கு யார் காரணம் என்பதைப் பின்னர் அறிந்தேன். திரு. இரா. நாகசாமி துறையின் இயக்குநராகத் தொடர்ந்திருந்தால் என் கட்டுரையும் தொகுதியில் இடம்பெற்றிருக்கலாம் என்று நினைத்ததோடு அமைதி பெற்றேன்.

ஒரு கட்டுரையைக் கருத்தரங்கில் படிப்பதோடு நம் கடமை முடிந்துவிடுகிறது. அதைத் தொகுதியில் இணைப்பதும் விடுப்பதும் அமைப்பாளர்களின் விருப்பமே. ஆனால், கட்டுரையை வானளாவப் புகழ்ந்துவிட்டு, அதைப் பதிப்பிப்பதாகவும் கூறிவிட்டுப் பின் தனிப்பட்ட காரணங்களுக்காகக் கட்டுரையைப் பதிப்பிக்காமல் விடும் போக்கு துன்பமானது. தமிழ்நாடு வரலாற்றுப் பேரவையிலும் ஒரு முறை இது போன்ற அனுபவம் ஏற்பட்டதை இங்குக் கூறாமல் இருக்கமுடியவில்லை. மாற்றுக் கருத்துக்களைத் துணிவோடு முன்வைக்கும் எவருக்கும் இந்த நிலைதான். நேர்மைத் துணிவிற்கு ஆய்வுலகத்தில் என்றுமே மதிப்பில்லை.

1985 ஏப்ரலில் வாணியின் ஆய்வேட்டை முடித்தவுடன் இலக்கிய இளவல் பட்டத்திற்கான இலக்கியம் ஆறாம் தாளை எழுதித் தேறினேன். 1986 ஏப்ரலில் எஞ்சியிருந்த இலக்கணத் தாள்கள் மூன்றையும் முடித்தேன். இலக்கணம் நான்காம் தாளை நன்கு செய்திருந்த போதும் 56 மதிப்பெண்களே கிடைத்தன. பதினெட்டுத் தாள்களையும் முடித்து முதல் வகுப்பில் தேறிய நிலையில் ஏப்ரல் 86ல் இலக்கிய இளவலானேன். தமிழில் முதுகலை பயிலும் ஆர்வம் ஏற்கனவே இருந்தது. அதனால் புலவர் சு. அரங்கசாமியின் வழிகாட்டலில் சென்னைப் பல்கலை அஞ்சல் வழிக் கல்வியில் முதுகலைத் தமிழ் எடுத்தேன். இரண்டாண்டு படிப்பு. பத்துத் தாள்கள். இந்த முறை புலவரிடம் பயிலச் செல்லாமல் நானே படித்தேன். முதுகலை என்பதால் பல நூல்களைப் படிக்கவேண்டியிருந்தது. முதலாண்டில் இக்கால, இடைக்கால இலக்கியங்கள், ஒப்பிலக்கியம், இலக்கியக் கொள்கைகள் என இலக்கியம் சார்ந்த நான்கு தாள்களும் தொல்காப்பியம் பொருளதிகாரமும் பாடங்களாக அமைந்தன.

இலக்கியக் கொள்கைகள், பொருளதிகாரம் இவை என்னை மிகவும் கவர்ந்தன. ஒப்பிலக்கியத்தை அணுகப் பேராசிரியர் முனைவர் இராம. சண்முகம் உதவியாக இருந்தார். இக்காலகட்டத்தில்தான் தமிழியற்புலப் பேராசிரியர் முனைவர் இரா. மோகனின் நட்பு கிடைத்தது. இராம. சண்முகம் மொழிநூல் கல்விக்கும் உதவினார். அவருடைய, 'காலந்தோறும் தமிழ்' மிகவும் பயன்பட்டது. பொருளதிகாரம் நான் நேசித்துப் படித்த நூல். இலக்கண நூல்களில் காரிகைக்கு அடுத்து என்னை மிகவும் ஈர்த்தது பொருளதிகாரம்தான். வாழ்க்கையின் அத்தனை பக்கங்களையும் நூற்பாக்களாக அள்ளித் தெளித்திருக்கும் அதன் ஆசிரியரும் வள்ளுவரும் நினைக்குந்தோறும் வியக்க வைப்பவர்கள். இருவருமே சமுதாயப் புலவர்கள் வரிசையில் என்றென்றும் உச்சத்தில் இருப்பவர்கள். அவர்களை விஞ்சும் அளவு வாழ்க்கையின் நுணுக்கங்களை வெளிச்சமிட்டுக் காட்டிய வேறொரு புலவர் நானறிந்த அளவில் காணேன்.

பொருளதிகாரம் பயின்றபோது சங்க இலக்கியங்களையும் அவை அடுத்த ஆண்டு பாடமாக இருந்தபோதும் உடன் பயின்றேன். தமிழர் வாழ்வியல் கோட்பாடுகள் அறிய அப்படிப்புப் பேருதவியாக இருந்தது. பாடத்திட்டத்தில் குறிக்கப்பட்டிருந்த எல்லைகளைத் தாண்டிச் சங்க இலக்கியங்களை முழுமையாகப் படித்தேன். அகநானூறும் நற்றிணையும் நெஞ்சில் நிறைந்தன. வாய்ப்பமையும்போது இந்த இரண்டையும் மீண்டும் ஒருமுறை ஆழமாகப் படிக்கவேண்டும் எனக் கருதியிருந்தேன். பத்துப்பாட்டில் ஆற்றுப்படை இலக்கியங்கள் என்னை வெகுவாகக் கவர்ந்தன. படிக்கும்போதே நிறைய குறிப்புகள் எடுத்தேன். அந்தக் குறிப்புகள் பல கருத்தரங்குகளைச் சந்திக்கும் திறமையையும் ஆற்றலையும் வளர்த்தன. 'தமிழர் ஆடற்கலை' பற்றி நெடியதோர் ஆய்வு செய்யும் ஆவலும் அச்சமயத்தில் முளைவிட்டது.

அன்புடன்,
இரா. கலைக்கோவன்.
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.