![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1800 Articles] |
Issue No. 41
![]() இதழ் 41 [ நவம்பர் 16 - டிசம்பர் 15, 2007 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
(ஆனந்தவிகடன் 2007 தீபாவளி மலரில் வெளியான கட்டுரை. திருத்தங்கள் ஏதுமின்றி.)
தமிழ்நாட்டில் திரும்பிய திசையெல்லாம் வானளாவும் கோபுரங்களும் விண்ணை முட்டும் விமானங்களுமாய்த் திருக்கோயில்களின் எழிலார் காட்சிகளுக்குக் குறைவேயில்லை. இந்தக் கோயில்களை வழிபாட்டிற்காகவும் வரலாற்றுக்காகவும் அன்றாடம் அணுகுபவர்களில் எத்தனை பேருக்கு இவற்றின் வாழ்க்கை வரலாறு தெரியும்? இறைவனை உள் நிறுத்தி ஒரு வழிபாட்டிடம் அமைக்கும் சிந்தனை ஏன் தோன்றியது? அந்தச் சிந்தனையில் உருவான வழிபாட்டிடம் எப்படிப் பிறந்து, எவ்வாறெல்லாம் வளர்ந்து இன்று இந்த நிலையை அடைந்துள்ளது? மூத்தோர் வழிபாடே இறை வழிபாடாக வடிவெடுத்தது என்பதற்கு உலகளாவிய சான்றுகள் கிடைத்துள்ளன. அச்சம் காரணமாகவும் அன்பு காரணமாகவும் இயற்கைக்கு மண்டியிட்ட மக்கள் சிந்தனையே, நாளடைவில் இறை வழிபாடாக மலர்ந்தது என்பாரும் உளர். இயற்கையாய் அமைந்த இடங்களில் எல்லாம் இறைவன் இருப்பதாகக் கருதி, வழிபட்ட மக்கள் நாளடைவில் அந்த இறைவனை இருத்தி வழிபட ஓர் இடம் அமைத்தனர். தமிழ்நாட்டில் அப்படி அமைந்த இடம் பொதியில் என்று அழைக்கப்பட்டது. பொதுவான இல்லம் என்ற பொருளில் அமைந்த இந்த இறையகத்தில் ஓவியமாய் எழுதப்பட்ட இறைவடிவமோ அல்லது கந்து என்ற பெயரில் அமைந்த மரத்துண்டமோ இருத்தப்பட்டு வணங்கப்பட்டது. செங்கல், மரம், சுதை இவற்றால் அமைக்கப்பட்ட இப்பொதியில்கள் பலித் தளங்களையும் மண்டபங்களையும் பெற்று வளர்ந்தன. பொதியில் என்று அழைக்கப்பட்ட காலத்திலேயே இறையகத்திற்குக் கோயில் என்ற பெயரும் வழங்கப்பட்டதைப் பட்டினப்பாலை எனும் சங்க இலக்கியம் நிறுவுகிறது. நகர், கோட்டம், நியமம், கடவுட்குலம் எனப் பல பெயர்கள் பெற்றிருந்த இறையகத்தின் வளர் நிலைகளையும் வழிபாட்டு முறைகளையும் தமிழ் இலக்கியங்கள் தெளிவுறக் கூறுகின்றன. கி. பி. ஐந்தாம் நூற்றாண்டளவில் தமிழரின் வாழ்வியலோடு ஒன்றிப் பிணைந்துவிட்ட கோயில்களின் கட்டுமான அமைப்பில் முதல் திருப்புமுனையை உருவாக்கியவர் கோச்செங்கட்சோழர். ஆறுகள் பெருகிப் பாயும் வெள்ளக் காலங்களில் நிலத்தளவாய் அமைந்த கோயில் கட்டமைப்புகள் அழிவுறுவது கண்டு வருந்திய கோச்செங்கர், அதைத் தடுப்பதற்காக பெருந் திருக்கோயில்களை உருவாக்கினார். மாடக்கோயில்கள் என்றும் அழைக்கப்படும் இந்தப் புதிய அமைப்புகள் மேடை போன்ற ஒரு வெற்றுத் தளத்தின்மீது உயர்த்திக் கட்டப்பட்ட விமானங்களைப் பெற்றன. தளம் என்பது தாங்குதளம், சுவர், கூரை எனும் மூன்று அடிப்படை உறுப்புகள் கொண்டு அமைவது. இந்த மூன்று உறுப்புகளுடன் கழுத்து (கிரீவம்), தலை (சிகரம்), குடம் (தூபி) எனும் கூடுதல் மூன்று உறுப்புகள் பெற்று ஆறங்கக் கட்டுமானமாய் எழுவது விமானம். மாடக்கோயில் அமைப்பில் மூன்று உறுப்புகளுடனான வெற்றுத் தளம் ஒன்றும் அதன் மீது ஆறு உறுப்புகளுடனான விமானம் ஒன்றும் அமையும். தமிழ்நாட்டில் இன்றைக்கு எஞ்சி இருக்கும் இத்தகு பெருந்திருக்கோயில்கள் எண்ணிக்கையில் இருபதைத் தாண்டும். ஆவூர், நல்லூர், கீவளூர், குடவாயில், பழையாறை, வலிவலம், நன்னிலம், நாங்கூர் எனப் பல ஊர்களில் இப்பெருந்திருக்கோயில்கள் இன்றும் வழிபாட்டில் உள்ளன. இவற்றுள் பல பாடல் பெற்றவை. திருக்கோயில் கட்டமைப்பில் இரண்டாவது திருப்புமுனையை உருவாக்கியவர் பல்லவப் பேரரசரான முதலாம் மகேந்திரவர்மர். செங்கல், மரம், சுதை, உலோகம் எனும் பல்வேறு ஊடகங்களில் கோயில் அமைந்த முறைகளை மாற்றிப் பாறைகளையும் குன்றுகளையும் குடைந்து கோயில் உருவாக்கும் பணியை வடதமிழ்நாட்டில் தொடங்கி வைத்தவர் இவரே. பாண்டியர் பகுதியில் பிள்ளையார்பட்டியில் பெருந்தச்சன் என்பவர் மகேந்திரருக்குச் சற்று முன்பாகவே இப்பணியைத் தொடங்கிவிட்டதாகச் சிலர் கருதினாலும், குடைவரைக் கலையில் வரலாறு காணாத சாதனைகளை நிகழ்த்தியவர் மகேந்திரரே. நான்கு தூண்களுடனான முகப்பு, செவ்வக மண்டபம், அதில் ஒரு கருவறை எனப் பிறந்த எளிமையான இறையகத்திலிருந்து, ஒன்பது கருவறைகளைப் பெற்ற மாமண்டூர் மூன்றாம் குடைவரை, தோரணவாயில் பெற்ற தளவானூர் சத்ருமல்லேசுவரம், சுவரளாவிய கங்காதரர் திருத்தோற்றம் பெற்ற சிராப்பள்ளி இலலிதாங்குரம், தமிழ்நாட்டின் முதல் தூண் சிற்பங்களைப் பெற்ற சீயமங்கலத்து அவனிபாஜனம் என அப்பெருந்தகையால் உருவாக்கப்பட்ட அழகு பொலிந்த குடைவரைகள் தமிழரின் கட்டமைப்புத் திறனுக்கும் கற்பனையாற்றலுக்கும் மிகச் சிறந்த சான்றுகளாய் அமைந்து, கோயிற் கட்டடக்கலை வரலாற்றில் நிகழ்ந்த இரண்டாம் திருப்புமுனையை வெளிச்சப்படுத்துகின்றன. மகேந்திரர் பல முயற்சிகளுக்குச் சொந்தக்காரர். தமிழ்நாட்டளவில் குடைவரைக் கலையைப் பல சோதனைகளுக்கு உட்படுத்தி உலகம் புகழும் இறையகங்களை உண்டாக்கிய முதல் மன்னர் அவர்தான். தமிழ்நாட்டின் முதல் வாயில் தோரணம், முதல் முன்றில், முதல் சுவர்ச் சிற்பம், முதல் தூண் சிற்பம், முதல் கங்காதரர், முதல் ஆடவல்லான், முதல் நந்திதேவர் என அப்பெருந்தகை உருவாக்கிய இறையக முதல்கள் பல! மத்தவிலாசப் பிரகசனம், பகவத்தஜ்ஜுகம் எனும் மிகச் சிறந்த எள்ளல் நாடகங்களை உருவாக்கியதன் மூலம் தாம் ஒரு கலை மேதை என்பதையும் சமூகப் பார்வையுடைய பகுத்தறிவாளர் என்பதையும் நிலை நிறுத்திக் கொண்டவர் மகேந்திரவர்மர். பல கருவறைகள் பெற்ற இறையகம், இறையகத்தில் திருச்சுற்று முயற்சி, ஆர அமைப்புகள் என அவர் தொடங்கி வைத்த கலை உத்திகள் கணக்கற்றவை; நிகரற்ற இசை ஞானியாய் வாழ்ந்தவர்; பலபடப் பாடியவர்; இசைக் கருவிகளை இயக்குவதில் பல புதிய பரிமாணங்களைக் கண்டவர். இந்தப் பெருவேந்தரின் மரபில் வந்த இராஜசிம்மப் பல்லவரே கோயில்களின் வரலாற்றில் மூன்றாம் திருப்புமுனைக்குக் காரணமாய் அமைந்தவர். குடைவரைகளை மட்டுமே பெற்று வந்த 'கல்' ஊடகத்தில், முதன் முறையாக விமானங்களை அமைத்த சாதனையாளர். ஒரு பாறையை அல்லது குன்றை மேலிருந்து கீழாக முழுமையும் பயன்படுத்தி ஒரு விமானமாக்கி அழகு பார்த்த அவர் கைவண்ணம் காண மாமல்லபுரம் செல்ல வேண்டும்! பஞ்சபாண்டவர் இரதங்கள் என்று பிழையாக அழைக்கப்படும் ஒரு கல் தளிகள் ஐந்துமே அவருடைய கலைப் படைப்புகள்தான். ஒவ்வொரு தளியும் ஒரு புத்தமைப்பில் இருப்பதை, மல்லைக் கடலோர அலைகளின் எழுச்சிக் கூவலே நம் செவிகளில் சொல்லாமல் சொல்லிவிடுகிறது. கொற்றவைக் கோயிலான 'திரெளபதி ரதம்' ஆறங்கம் பெறாத ஒரே தமிழ்நாட்டு விமானம். சங்க காலக் கொற்றவை வழிபாட்டின் தொடர்ச்சியையும் வளர்ச்சியையும் தமிழர்க்கு உணர்த்தப் பல்லவச் சிற்பிகள் படைத்தளித்த வரலாற்றுப் பக்கம் அது. அருகில் இருக்கும் இருதளத் திராவிடத் தளியான 'அருச்சுனர் ரதம்' முதல் தளச் சுவரில் உள்வாங்கல், வெளிநீட்டல் என அடுத்தடுத்த பத்திப்பிரிப்பும் இரண்டாம் தளத்தில் இணையர் சிற்பங்களும் பெற்றமைந்த முதல் தென்னிந்திய விமானம். அதன் முதல் தளச் சிற்ப அற்புதங்கள் தமிழர் செய்த பேற்றால் விளைந்தவை. கிழக்குப் பார்த்த தோழியும் தலைவியுமான சிற்பத் தொகுதி இந்த தேசத்தில் இதுவரை விளைந்த சிற்பத் தொகுதிகளிலேயே இணையற்ற எழில் படைத்தது. சங்க இலக்கியத் தலைவி - தோழி தொடர்புகளைப் படக்காட்சியாய்க் காட்டும் இந்தச் சிற்பம் இன்னமும் தமிழ் நாட்டுக் கலையறிஞர்களின் முறையான பார்வையைப் பெறாமலிருப்பது துன்பமானதே. 'பீமரதம்' என்றழைக்கப்படும் ஒரு தளச் சாலைத் தளி முற்றுப்பெறாத நிலையிலும் கம்பீரமாய் அமைந்த பெருந்தளியாகும். இதன் தள மேல் சுற்று, தளியின் கிரீவப் பகுதியை அங்குலம் அங்குலமாய்ப் பார்த்து இரசிக்க வழிவகுத்துள்ளது. இத்தகு கிரீவச் சுற்று அமைந்த தமிழ்நாட்டுத் தளிகள் எண்ணிக்கையில் மிகமிகக் குறைவு. 'அத்யந்தகாமம்' என்று கல்வெட்டுகளில் கொண்டாடப்படும் 'தருமராஜர் ரதம்' இராஜசிம்மர் காலக் கட்டுமானச் சிந்தனைகளின் வளமான கருவூலம். புதுமையான கபோதபந்தத் தாங்குதளம். நாற்புறமும் முகப்புகள், சிற்பங்கள் சூழ்ந்த சுவர்களைப் பெற்ற மூன்று தளங்கள், கீழிரு தளத்திற்கும் முன்றில்கள், இறையகம் பெற்ற மேல் தளத்து வாயிலுக்கோ பூதமாலைத் தோரணம் எனப் பல புதுமைகளைப் பெற்ற பெருந்தளி இது. இந்திய அளவில் 'தளிப் பரிவாரம்' என்றழைக்கப்படும் கோயில் பணியாளர்களை இறையகச் சுவரில் சிற்பங்களாய்ப் பெற்ற ஓரே திருக்கோயில் இதுதான். அடியவர்கள் சூழ்ந்த இறையகம், தமிழ்நாட்டின் பழந்தெய்வங்கள் அனைத்தும் இடம்பெற்ற ஒரே முதல் இறையகம் என இதற்கும் பல முதல் தகுதிகள் உண்டு. தமிழ்நாட்டின் தூய திராவிட விமானத்தை கிரீவ கோட்டத்தில் பெற்ற முதல் தூங்கானை மாடம்தான் நகுலசகாதேவ ரதமென அழைக்கப்படுகிறது. சிவபெருமானின் கருவியான முத்தலை ஈட்டியை உச்சியில் பெற்ற கணேச ரதம், முடியாமல் நின்றாலும் சுவர்ப் பஞ்சரங்கள் பெற்ற முதல் தளிகளான பிடாரி, வலையன்குட்டை ரதங்கள் என இவையும் சிறப்பானவையே. இந்த ஒருகல் தளிகள் தந்த துணிவும் இவற்றின் உருவாக்கத்தில் பெற்ற பயிற்சியும் தமிழ்நாட்டுக் கலையறிஞர்களை கட்டட விரிவாக்கத்திற்கு அடுத்தடுத்த சோதனைகளை நிகழ்த்த உந்தித் தள்ளின. விளைவு கற்றளிகள். கல் இருந்த இடத்தில் அதை முன்னிருந்து பின்னாகக் குடைந்து குகைக் கோயிலையும், மேலிருந்து கீழாகச் செதுக்கி ஒருகல் தளியையும் உருவாக்கிச் சலித்த பல்லவ மூளைகள் நினைத்த இடத்தில் கோயில் எடுக்க ஒரு வழி கண்டன. அந்த வழியில் விளைந்த கட்டமைப்புகளே கற்றளிகள் ஆயின. குன்றுகளையும் பாறைகளையும் உடைத்து வேண்டும் அளவிற்குத் துண்டுகளாக்கி, விரும்பும் இடத்திற்கு எடுத்துச் சென்று அந்தக் கற்களை ஒன்றன் மேல் ஒன்றாய் அடுக்கிச் சிற்பாசிரியர்கள் எழுப்பிய கோயில்களே கற்றளிகள். இக்கற்றளிகள், குடைவரைகளிலும் ஒருகல் தளிகளிலும் கட்டுமான அறிஞர்களுக்கு ஏற்பட்ட தடைகளை உடைத்தன; இறுக்கங்களைத் தளர்த்தின; புதுமை அவாவிய அவர்களின் சிந்தனை வீச்சுகளுக்குப் பேரளவில் இடம்தந்தன. அதனால், புத்தமைப்புகளாய்ப் பல விமானங்கள் இந்த மண்ணில் எழுந்தன. அவற்றுள் முதன்மையானது பனைமலையீசுவரம். இறையகத்தின் தளச்சுவரை ஒவ்வொரு பக்கத்திலும் மூன்று பத்திகளாகப் பிரிப்பது கட்டட மரபு. இம்மூன்று பகுதிகளுள் சற்றுப் பெரிய அளவில் அமைந்த நடுப்பத்திகள் சாலைப்பத்தி எனவும் ஓரப் பகுதிகள் கர்ணபத்திகள் எனவும் அழைக்கப்பெறும். சில சுவர்கள் ஐந்து பகுதி களாகப் பிரிக்கப்பட்டன. அந்நிலையில் ஓரப்பகுதிகளை அடுத்துள்ள பத்திகள் சாலைப் பத்திகள் எனவும் நடுப்பகுதி பெருஞ்சாலைப்பத்தி எனவும் அழைக்கப்பட்டன. இப்பெருஞ்சாலைப் பத்தி பெயருக்கேற்ப பேரளவுப் பிரிவாய் அமைந்தது. இராஜசிம்மர் காலத்தில் உருவான இப்பெருஞ் சாலைப் பகுதிகள் பல புதிய உருவாக்கங்களுக்கு வித்திட்டன. அவற்றுள் முதல் வித்து உருவான இடம்தான் பனைமலை. விழுப்புரம் செஞ்சி சாலையில் அனந்தபுரத்திற்கென இடப்புறம் பிரியும் சாலை பனைமலைக்கு அழைத்துச் செல்லும். பல்லவர் கால ஓவிய உமையை உள்ளடக்கியிருக்கும் இந்தப் பனைமலைக் கோயிலின் பெருஞ்சாலைப் பகுதியை இராஜசிம்மர் காலக் கட்டடக் கலை அறிஞர்கள் தனிக் கோயிலாக்கி வெற்றி கண்டனர். முதன்மை விமானமும் அதைச் சூழ அதன் நடுச்சாலைப் பத்திகளிலேயே துணை விமானங்களும் அமையப் பெற்ற முதல் தமிழ்நாட்டுக் கலைக்கோயில் பனைமலையீசுவரம்தான். முதன்மை விமானக் கருவறை இலிங்கத் திருமேனியும் சுவரில் முருகு உடனமைந்த சிவசக்தி வடிவமும் பெறத் துணை விமானங்கள் இலிங்கத் திருமேனிகள் பெற்றன. இந்தத் துணை விமானங்களுள் ஒன்றுதான் இறைவனின் ஆடலையும் இறைவியின் எழிலார்ந்து நிற்கும் தோற்றத்தையும் ஓவியமாய்ப் பெற்றுள்ளது. இராஜசிம்மர் காலக் கலை முயற்சிகளின் உச்சங்களாய் விளைந்த கட்டுமானங்களுள் கடற்கரைக் கோயில் வளாகமும் காஞ்சிபுரம் கயிலாசநாதர் கோயிலும் குறிப்பிடத்தக்கன. கடல் அலைகள் கரை தழுவும் மணலோரம், கடவுளிடமே அவர் இருப்பிடத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை ஒப்புவித்து, மணற்கற்களால் ஒரு பெரும் வளாகத்தை உருவாக்கிய பல்லவக் கைகளின் வடிப்புக் கூர்மையும் செதுக்கு நேர்த்தியும் சொல்லி மாளாது. முன்னால் இரு பெரும் மண்டபங்களும் பின்னால் மூன்று திருக்கோயில்களும் என ஒரு சுற்றில் அமைந்த இந்த வளாகத்தின் கொடித்தளமும் பலித்தளங்களும் கூடப் பேரளவின; எழில் நிறைந்தன. ஏற்கனவே பள்ளிகொண்ட பெருமாள் செதுக்கப்பட்டிருந்த பாறையை உள்ளடக்கி அதன் முன் முத்தளக் கற்றளி ஒன்றையும் பின்னால் நான்கு தளக் கற்றளி ஒன்றையும் எழுப்பி, மூன்றையும் ஒரு சுற்றுச் சுவரால் ஒரே வளாகமாக்கி, அந்த வளாகத்துள்ளும் கிழக்குக் கோயில் தனித்துவம் பெறுமாறு அதற்கென்று ஓர் உள் திருச்சுற்றை உண்டாக்கி, அந்தச் சுற்றின் சுவரையும் வரலாறு பேசும் சிற்பங்களால் வடிவமைத்த புகழ் பெற்ற கைகள் பல்லவக் கைகள். நன்கு உயர்த்தப்பட்ட நிலையில் மேலே செல்லச் செல்ல அளவாய் அழகாய்க் குறுகும் மேற்றளங்கள் கடற்கரை விமானங்களில் மட்டுமே அமைந்த தனித்துவம் எனலாம். கிழக்கிலிருந்து பார்த்தால் ஒரே விமானம் பெற்ற கோயிலாகவும் மேற்கிலிருந்து பார்த்தால் இரட்டை விமானங்களின் இருப்பிடமாகவும் தெற்கிலும் வடக்கிலும் இருந்து பார்த்தால் மட்டுமே மூன்று இறையகங்களைக் கொண்டிருக்கும் மாபெரும் வளாகமாகவும் வெளிச்சப்படும் இந்தக் கலை திகழ் கட்டுமானங் களை எத்தகு பேராற்றலும் மேதமையும் இருந்திருந்தால் உருவாக்கியிருப்பர்! தொழுது வணங்க வேண்டிய அந்தச் சிந்தனையாளர்கள் இந்தத் தமிழ் மண்ணின் தவக்கொழுந்துகள் அல்லவா! காஞ்சிபுரம் வரலாற்றுக் களமாய் விளைந்து முற்றிய தமிழ்நாட்டின் பெருமைக்குரிய ஊர்களுள் ஒன்று. இங்குதான், 'கச்சிப்பேட்டுப் பெருந்தளி' என்று பராந்தகராலும் இராஜராஜ ராலும் போற்றப்பட்ட கயிலாசநாதர் கோயில் உதயமானது. அப்பா, அம்மா, பிள்ளை எனக் குடும்பமே முன்னின்று கட்டிய கோயில் வளாகம் இது. அளவற்ற ஆசைகளை உடையவன் எனும் பொருளில் அமைந்த 'அத்யந்தகாமன்' எனும் பட்டப் பெயரைச் சூடிய இராஜசிம்மரின் அறிவாற்றலும் அவர் வழிகாட்டலில் பல்லவப் பெருந்தச்சர்கள் சிந்திய வியர்வையும் இந்தத் திருக்கோயிலுக்கு வடிவம் தந்தன. பெருஞ்சாலைப் பத்திகளை மட்டுமே துணை விமானங் களாக்கிப் பார்த்து வெற்றி கண்ட பனைமலையீசுவரம் தந்த துணிவின் உச்சமே கயிலாசநாதர் கோயில். இங்கு முதன்மை விமானத்தோடு, பெருஞ்சாலைப் பத்திகளும் விமானங்களாயின. பனைமலையில் தொடாது விடப்பட்ட ஓரப் பிரிவுகளான கர்ண பத்திகளும் இங்கு முன்னிழுக்கப்பட்டுத் துணை விமானங்களாயின. ஒரு முதன்மை விமானமும் அதைச் சூழ அதனுள் உள்ளடங்கியனவாய் ஏழு துணை விமானங்களும் பெற்ற முதல் தமிழ்நாட்டுக் கோயிலாகக் கயிலாசநாதர் உருவானது. இது புத்தமைப்பு என்பதால் சிற்பிகளும் ஓவியர்களும் தங்கள் வாழ்நாள் கட்டுமானமாய்க் கருதி உழைத்தனர். விளைவு, சுவர்களெல்லாம் சிற்பங்களாயின. சைவத்தின் அத்தனை முகங்களையும் பார்ப்பார் புரிந்துகொள்ளுமாறு இறைத் தோற்றங்களின் விளக்கக் காட்சிகள் கண்பட்ட இடமெல்லாம் கட்டுமானத்தில் இணைந்தன. துணை விமானங்களால் சூழப் பெற்ற முதன்மை விமானத்தை உள்ளடக்கிய சுற்றுச் சுவரும் முதல் முறையாகவும் கடைசி முறையாகவும் இருதள விமானங்களால் அலங்கரிக்கப்பட்டது. இந்தச் சுற்று விமானங்களும் முன்றில் பெற்று, முகப்புச் சுவரில் முத்தாய்ப்பான சிற்பங்களும் பெற்று கோயிலின் அழகைப் பன்மடங்காக்கின. கோபுர நுழைவாயிலுக்கும் முதன்மை விமானத்திற்கும் இடையில் இருதளச் சாலைத் தளியாய் மகேந்திரவர்மேசுவரத்தை இராஜசிம்மரின் மகன் மூன்றாம் மகேந்திரவர்மர் அமைக்க, கோபுர வாயிலின் இருமருங்கிலும் இறையகங்களை எழுப்பினர் இராஜசிம்மரின் மனைவியர். இராஜசிம்மரின் கயிலாசநாதர் கோயிலில் இன்னொரு புதுமையும் விளைந்தது. தமிழ் நாட்டிலேயே இங்குதான் முதன்முறையாகக் கருவறை இரண்டு சுவர்களைப் பெற்று அவற்றுக் கிடையில் திருச்சுற்று ஒன்றையும் கொண்டது. விமானத்திற்குள்ளேயே திகழும் இந்த உள்சுற்றால் கயிலாசநாதர் விமானம் சாந்தார விமானமாகியது. சிற்பம், ஓவியம், கட்டமைப்பு, புத்திணைப்பு, கல்வெட்டுகள் என அனைத்து வகைகளிலும் தமிழ்நாட்டின் முத்திரைக் கோயிலாக முகிழ்த்தது இராஜசிம்மரின் இந்தக் கயிலாசநாதர் கோயில். அதனால்தான் பல்லவ நாட்டிற்குப் பெரும் சேதத்தை உண்டாக்கிய சாளுக்கிய விக்கிரமாதித்தன் கூட அழகு கொஞ்சும் இந்தக் கட்டடக்கலைச் சாதனையைக் கண்டு வியந்து, நெகிழ்ந்து இதற்குக் கொடைகளைக் குவித்துக் குளிர்ந்து போனார். மாற்றான் தோட்டத்து மல்லிகைகளும் மணந்த காலம் அது. இராஜசிம்மரின் அடி பற்றி வந்த இரண்டு புத்தமைப்புகளுள் ஒன்றை இரண்டாம் நந்திவர்மரும் மற்றொன்றை தந்திவர்மரும் உருவாக்கினர். காஞ்சிபுரம் வைகுந்தப் பெருமாள் கோயில் தமிழ்நாட்டின் முதல் மாடிக் கோயில். மூன்று தளங்களில் பெருமாளின் நின்ற, அமர்ந்த, கிடந்த மூர்த்திகளைப் பெற்று உயரும் இவ்வகைக் கோயில்கள் பின்னாளில் பலவாய் வந்தாலும் விமானத்திற்குள்ளேயே மாடிகளுக்கு வழிபெற்று அமைந்த பெருமையை உடையது வைகுந்த விண்ணகரம்தான். இதன் திருச்சுற்று மண்டபம் சுவர் தழுவிய பல்லவ வரலாற்றுச் சிற்பங் களாலும், சிம்மம் தாங்கிய முகப்புத் தூண் வரிசையாலும் தனித்துவம் பெற்றுச் சிறந்தது. உத்திரமேரூர் சுந்தரவரதப் பெருமாள் கோயிலும் வைகுந்தர் கோயில் போல மாடிக் கோயில்தான். ஆனால், ஒரு வேறுபாடு. இந்த முத்தள விமானத்தின் மூன்று தளங்களிலுமே பெருஞ்சாலைப் பத்திகள் வெளியிழுக்கப்பட்டுத் தனி விமானங்களாய்த் தகுதி பெற்றன. இப்படித் துணை விமானங்கள் சூழ்ந்த மாடிக்கோயில் தமிழ்நாட்டிலேயே இது ஒன்றுதான் உள்ளது. இயற்கையாய் அமைந்த இடங்களில் பிறந்து, மரக் கூரை வேய்ந்த செங்கல் கட்டடமாய் வளர்ந்து மாடக்கோயில்களாய் உருமாறி, பல்லவக் கைகளில் கற்கட்டுமானங்களாய் வடிவம் பெற்றுக் குடைவரை, ஒருகல் தளி, கற்றளி எனப் பல உருவங்களில் பெருஞ்சாலை விமானம், சாந்தாரம், மாடிக் கோயில் எனப் புத்திணைப்புகள் கொண்டு உயர்ந்தோங்கிய தமிழ்நாட்டுக் கோயில் கட்டுமானக் கலை நான்காம் திருப்புமுனையைக் கண்டது முதலாம் இராஜராஜரின் ஆட்சிக் காலத்தில்தான். உலக நலத்திற்காக விளக்கேற்றிய நித்தவிநோதரான அந்த மாமனிதர் கோச்செங்கரும் மகேந்திரரும் இராஜசிம்மரும் காட்டிய பாதையில் கோயிற் கட்டடக் கலையில் மேலும் பல புதுமைகளைச் செய்தார். ஒரு தளச் சாந்தாரமாய் இராஜசிம்மர் கட்டிய கச்சிப்பேட்டுப் பெருந்தளி இராஜராஜரின் சிந்தனைக் கீற்றில் இருதளச் சாந்தாரமாய் வளர்ந்தது. நாற்புறமும் வழியமைந்த ஒரே அளவிலான இருதளங்கள் இதற்கு முன் எந்தத் தமிழ்நாட்டுத் திருக்கோயில் கருவறைக்கும் அமைந்ததில்லை எனும் பெருமையைப் பெற்ற தஞ்சாவூர் இராஜராஜீசுவரம், இருதளச் சுற்றுகளிலும் கலைப் புதையல்களாய்ப் பெற்ற ஓவியங்களையும் கரணச் சிற்பங்களையும் காலம் கைதொட்டு வணங்கிக் காத்துத் தந்திருக்கிறது. இரண்டு பெருங் கோபுரங்கள், ஐந்து வாயில்கள் பெற்ற ஈரடுக்குத் திருச்சுற்று மாளிகை, பதினைந்து தளங்களுடன் விண் தடவும் மாபெரும் விமானம் என அமைந்த இந்தத் திருக்கோயிலில் எல்லாமே பெரிதினும் பெரிதுதான். எந்தத் தாங்கலும் இன்றி, எந்தப் பூச்சும் பெறாமல், படிப்படியாய்க் குறுக்கப்பட்டு 216 அடி உயரம் தொடரும் இராஜராஜீசுவரத்தின் விமானம் தமிழரின் கட்டுமானப் பொறியில் அறிவின் உச்சம். தந்தையைத் தொடர்ந்த தனயரான முதலாம் இராஜேந்திரரின் கங்கை கொண்ட சோழபுரத்து இராஜேந்திர சோழீசுவரம் மற்றொரு கட்டட அற்புதம். சதுரமாய்த் தொடங்கி, எண்பட்டையாய் வளர்ந்து, அரைவட்டமாய் முடியும் அந்த விமானத்தின் அழகிற்கு இணையே இல்லை. இராஜேந்திரருக்குப் பிறகு கோயிற் கட்டடக்கலை பல உன்னதங்களைக் கண்ட களைப்பில் இளைப்பாறத் தொடங்கியது. இரண்டாம் பாண்டியப் பேரரசு, விஜயநகர அரசு, நாயக்க அரசு எனப் பின் வந்த மரபுகள் கோபுரங்களிலும் மண்டபங்களிலும் தத்தம் திறம் காட்டி, விரிந்து பரந்திருந்த வளாகங்களை நெருக்குதலுக்கு ஆளாக்கின. என்றாலும், அன்றிலிருந்து இன்று வரை ஒவ்வொரு கோயிலும் காலத்தின் கைகளில் எத்தனையோ துன்பங்களை எதிர்கொண்டபோதும், சூழ்ந்து வாழ்ந்த சமுதாயத்தின் அன்பணைப்பில் தப்பிப் பிழைத்து, நம் தலைமுறைக்கு வரலாறு சொல்ல வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்தக் காலப் பதிவுகளைக் காப்பாற்ற வேண்டியது நம் கடமையல்லவா! இனியேனும், எந்த ஒரு கோயில் வளாகத்தின் வாயிலைத் தொடும்போதும் ஒரு நிமிடம் நில்லுங்கள். உங்களைப் போலவே இந்தக் கோயிலுக்கும் ஒரு வரலாறு இருக்கிறது என்பதை நினையுங்கள். இதன் கட்டமைப்புக்கு நம் முன்னோர் உயிரைத் தந்து உழைத்துள்ளனர் என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள். கோயில்கள் இந்த மண்ணின் நாகரிகம், பண்பாடு இவற்றின் பதிவுகள். மனிதச் சிந்தனைகளின் வளர்ச்சியையும் பரவலையும் உட்கொண்டு வளர்ந்திருக்கும் இவை, நம்முடைய முன்னோர்கள் நமக்குத் தந்து சென்றிருக்கும் தலைப்பெழுத்துக்கள். இவற்றைப் போற்றிக் காக்காவிட்டாலும் பரவாயில்லை, இவற்றின் அழிவிற்கும் சிதைவிற்கும் எக்காரணம் கொண்டும் துணையாகாதீர்கள். கோயில்கள் வாழ்ந்தால்தான் தமிழனின் வரலாறு வாழும். this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |