http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 41
இதழ் 41 [ நவம்பர் 16 - டிசம்பர் 15, 2007 ] இந்த இதழில்.. In this Issue.. |
வரலாறு டாட் காம் வாசகர்களுக்கு வணக்கம். மீண்டும் ஒருமுறை என்னுடைய பயண அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
கடந்த 20-8-2007 அன்று நண்பர் பால பத்மநாபன் தொலைபேசியில் அழைத்து நாளை சில கோயில்களுக்குச் செல்லலாம் வருகிறீர்களா என்று கேட்டார். திடீர் என அழைத்ததன் பின்னணி கேட்டேன். அதற்கு, சுவாமிமலை துணை ஆணையர் திரு.லட்சுமணன் அவர்கள் நவக்கிரக தலங்களுக்கு ஒரே நாளில் சென்று வரவேண்டும் என்றும் எங்களை அவர்களுடன் வரமுடியுமா என்றும் வினவி இருக்கிறார். கரும்பு தின்னக் கூலி கிடைப்பதால் நாமும் உடனே பயணத்திற்கு ஆயத்தம் ஆனோம். 21-08-2007 அன்று காலை 6:30 மணி அளவில் நான், நண்பர் பால.பத்மநாபன் மற்றும் சுவாமிமலை துணை ஆணையர் திரு.லட்சுமணன் மூவரும் பயணத்திற்கு அவருடைய குவாலிஸ் காரில் செல்லத் தயாரானோம். நேரம் கருதி முதலில் திங்களூர் சென்றோம். பின் வரும்வழியில் திருப்பழனம் ஒரு அவசரப்பார்வை பார்த்தோன். அந்த அவசரப்பார்வை நம்முள் ஒரு நிதானப்பார்வை பார்க்கவேண்டும் என்ற எண்ணத்தை வித்திட்டது. பின்னர் அங்கிருந்து வடகுரங்காடுதுறை சென்றோம். இங்கும் ஒரு அவசரப்பார்வை அரங்கேறியது. வடகுரங்காடுதுறை முடித்தபின் கபிஸ்தலம் "நந்தினி" மெஸ்ஸில் காலை உணவை முடித்துக்கொண்டு கபிஸ்தலம் ஸ்ரீ செண்பகவல்லி சமேத கஜேந்திர வரதனை தரிசித்து அங்கிருந்து ஆலங்குடி சென்றோம். நேயர்களுக்கு நினைவிருக்கும். நண்பர் பத்மநாபன் அவர்கள் ஆனங்கூரில் நம்முடன் ஒத்துழைக்காமல் புகைப்படக் கருவியும் கையுமாக இருந்ததை. இம்முறை நாம் அதற்கு அனுமதியாமல் புகைப்படக் கருவியைப் பறித்துக் கொண்டோம். நண்பர் பத்மநாபன் எங்கு சப்தமாதர்களைக் கண்டாலும் புகைப்படங்கள் எடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஆலங்குடியில் அவ்வாறு சப்தமாதர்களைப் பார்த்ததும் பாவமாக நம்மைப் பார்த்தார். நாமும் மனம் இரங்கி நிபந்தனையுடன் புகைப்படக் கருவியைத் தற்காலிகமாக வழங்கினோம். மிகுந்த மகிழ்ச்சியுடன் படம் எடுக்கச் சென்றுவிட்டார். பின்னர் அங்கிருந்து திருநாகேஸ்வரம் சென்றோம். நண்பர் திரு.லட்சுமணன் அங்கு மதிய உணவு ஏற்பாடு செய்திருந்தார். அதனை ஒரு பிடி பிடித்துவிட்டு திருவெண்காடு நோக்கிப் பயணமானோம். நண்பர் திரு. லட்சுமணனுக்காக திருநாகேஸ்வரத்தில் அவருக்குப் பிடித்த கோணத்தில் எடுத்த படத்தை நேயர்களுக்கும் இங்கு அளித்துள்ளோம். திருவெண்காடு செல்லும் வழியில் நண்பர் பத்மநாபன் அவர்கள் நம் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் மேலப்பெரும்பள்ளம் கோயில் பற்றி விவரித்தார். மேலப்பெரும்பள்ளம் "மாலைத்தொங்கல்" சிற்பத்திற்கு மிகவும் சிறப்பான தலம் என்றும் எல்லாத் தூண்களிலும் சிற்பம் உள்ளது என்றும் கூறி நம்முடைய ஆர்வத்தை அதிகரித்தார். நம்முடைய முந்தைய அனுபவம் நம்மைச் சற்று நிதானிக்க வைத்தது. இருப்பினும் நண்பர்மேல் அபார நம்பிக்கை நமக்கு எப்பொழுதுமே உண்டு. நிச்சயமாக நம்மை ஏமாற்ற மாட்டார் என்று எண்ணிக்கொண்டு பயணத்தைத் தொடர்ந்தோம். பெரும்பள்ளம் போகும் வழியில் "பொன்செய்" பார்க்கலாம் என்று இருவரும் திரு.லட்சுமணன் அவர்களிடம் சொன்னோம். "ஆஹா பார்க்கலாமே!" என்றூ எங்கள் ஆர்வத்தை ஆமோதித்து அவரும் உற்சாகமானார். "பொன்செய்" ஒரு "சிற்ப விருந்து". கண்டபாதச் சிற்பங்களும் வேதிகைத்தொகுதிச் சிற்பங்களும் கண்களைக் கவர்ந்தன. கிடைத்த நேரத்திற்குள் பொன்செய்யை நம்முடைய புகைப்படக் கருவிக்குள் வாங்கிக்கொண்டு அங்கிருந்து கீழப்பெரும்பள்ளம் சென்றோம். பின்னர் நாம் ஆவலுடன் எதிர்பார்த்த மேலப்பெரும்பள்லம் என்ற திருவலம்புரம் நோக்கிச் சென்றோம். இவ்வாலயம் பாடல் பெற்ற சிவாலயங்களில் ஒன்று கோயிலின் முகப்பு மற்றும் நுழைந்தவுடன் பார்த்த காட்சி நமக்கு ஆனங்கூரை நினைவுபடுத்தியது. இதற்குள் மாலை மணி 5 ஆகிவிட்டது. அவசர அவசரமாக கோயிலின் கருவறைப் பகுதிக்குச் சென்றோம். உண்மையிலேயே இக்கோயில் ஒரு "மாலைத்தொங்கல்" சிறப்புத்தலம் என்பதை உணர்ந்தோம். நேரம் கருதி நம்மால் நம்முடைய வழக்கமான பாணியில் புகைப்படம் எடுக்க இயலவில்லை. பிறிதொரு சமயம் அவ்வாறு எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணி அங்கிருந்து திருவெண்காடு மற்றும் வைத்தீஸ்வரன் கோயில் என்று பயணப்பட்டு இரவு சுமார் 8 மணிக்குக் குடந்தை வந்துசேர்ந்தோம். 21-8-2007 அன்று மட்டும் சுமார் 17 திருக்கோயில்கள் சென்றோம். நண்பர் திரு.பத்மநாபனின் பரிசாகப் பெரும்பள்ளம் மாலைத்தொங்கல் சிற்பங்களையும் இதரக் கோயில்களில் எடுக்கப்பட்ட சில காட்சிகளையும் இங்கே வழங்கி இப்பொழுது விடைபெற்று மீண்டும் உங்களை அடுத்தமுறை ஸ்ரீவில்லிப்புத்தூரில் சந்திக்கிறேன். this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |