http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 48

இதழ் 48
[ ஜூன் 16 - ஜூலை 17, 2008 ]


இந்த இதழில்..
In this Issue..

வரலாறு.காம் அழைக்கிறது
எப்பாடு பட்டாகிலும்!
தண்ணியடிக்கும் கலை
திரும்பிப் பார்க்கிறோம் - 20
அவர் - இரண்டாம் பாகம்
செல்வம் தந்த மூதேவி
ஓடி விளையாடு கிளிமகளே! தமிழ் மகளே!
இதுவா? அதுவா?
இதழ் எண். 48 > தலையங்கம்
வரலாறு.காம் அழைக்கிறது
ஆசிரியர் குழு

வாசகர்களுக்கு வணக்கம்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அக்டோபர் 2006 இல் வரலாறு.காம் ஓர் அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இமயத்துக்கு மகுடம் சூட்ட விழைந்த முயற்சி இன்று முழுவடிவம் பெற்று, மகுடாபிஷேக நாளும் குறிக்கப்பட்டுவிட்டது. ஆம். வரும் ஆகஸ்ட் 16 ஆம் தேதி சென்னையில் திரு. ஐராவதம் மகாதேவன் அவர்களின் Felicitation Volume (வாழ்நாள் சாதனை மலர்) ஐ வெளியிடலாம் என்று வரலாறு.காம் முடிவெடுத்திருக்கிறது. அன்று நாங்கள் திட்டமிட்டபோது இந்தப்பணியைச் சுமார் ஆறு மாதங்களில் முடித்து, மலரை மார்ச் 2007 இல் வெளியிட்டு விடலாம் என்றுதான் எண்ணியிருந்தோம். ஆனால், எதிர்பாராதவிதமாக இது இரண்டு ஆண்டுகளை எடுத்துக்கொண்டது. ஏன் இந்தக் காலதாமதம்? எங்கள் குழு இத்தகையதொரு பெரிய பணியை முதல்முறையாக மேற்கொண்டிருப்பதும், இது எத்தனை சிக்கலானது என்பதைத் திட்டமிடும்போது கணிக்க முடியாததும்தான் காரணம். அப்படி என்ன சிக்கல் இதில்? திரு. ஐராவதம் மகாதேவன் அவர்களுடன் ஆய்வு மேற்கொண்ட அறிஞர்களிடம் ஆய்வுக் கட்டுரைகளைக் கேட்டுவாங்கி அவற்றைப் புத்தகமாகப் பதிப்பதுதானே? இதற்குப்போய் இத்தனை உயர்வு நவிற்சி எதற்காக?

கேட்பதற்கு ஒருவரி மறுமொழியாகத்தான் தோன்றுகிறது. உண்மையில் அறிவிப்பை வெளியிட்டபோது நாங்களும் அப்படித்தான் நினைத்தோம். இருந்தாலும், அது அத்தனை எளிதான ஒன்றல்ல. ஆய்வாளர்களிடம் கட்டுரைகளைக் கேட்டவுடன் அது நம் கைக்கு வந்துவிடாது. ஓர் ஆய்வாளர் முதலில் கட்டுரையைத் தரலாமா, வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டும். இதை, அவர் திரு. ஐராவதம் மகாதேவன் அவர்கள் மீது கொண்டுள்ள மதிப்பு, மலரை வெளியிடுவதில் உள்ள ஆர்வம், வெளியிடுபவர்களைப் பற்றிய பின்னணி, அவர் சார்ந்திருக்கும் நிறுவனம் அல்லது பல்கலைக்கழகம் அல்லது அமைப்பு திரு. மகாதேவன் மீதும் அவரது ஆய்வு முடிவுகளின் மீதும் கொண்டிருக்கும் கருத்து வேறுபாடுகள் மற்றும் அரசியல் நிலைப்பாடு ஆகியவைதான் தீர்மானிக்கின்றன. இதற்கே சுமார் ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை ஆகிவிடுகிறது. ஏதாவது ஒரு காரணத்தால் தரவேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டால், அது நம்மிடம் உடனே தெரிவிக்கப்படமாட்டாது. ஓர் ஆய்வாளர் கட்டுரையைத் தருவாரா, மாட்டாரா என்று தெரியாத நிலையிலேயே நாம் காத்திருக்க வேண்டியிருக்கும். ஆனால், இம்மலருக்காக நாங்கள் தொடர்பு கொண்டவர்களில் சுமார் 90% பேர் கட்டுரையை அளித்தது எங்களை உவகை கொள்ளச் செய்கிறது.

பிறகு எதைப்பற்றி எழுதலாம் என்ற சிந்தனை. ஏற்கனவே ஆய்வு செய்த பொருளைப் பற்றி எழுதலாமா அல்லது புதிதாக எதையாவது ஆராயலாமா? இரண்டாவதைத் தேர்ந்தெடுத்தால் அது எடுத்துக்கொள்ளும் காலத்தையும் கணக்கில் கொள்ளவேண்டும். ஆய்வை முடித்தபிறகு கட்டுரையாக்கம். மலர் எத்தகையதொரு வாசிப்பாளரை அடையப்போகிறது? சர்வதேச அளவிலா அல்லது தேசிய அளவிலா அல்லது மாநில அளவிலா? அதற்குத் தகுந்தவாறுதான் கட்டுரையின் தரம் அமைந்திருக்கும். அப்படிப்பட்ட தரத்துடன் அமையாத கட்டுரைகளை, வெளியிடுபவர்கள் மேம்படுத்த வேண்டியது அவசியமாகிறது. இதைத் திருத்துபவர்களுக்கும் நேரம் தேவை. புதிதாக ஒரு கட்டுரையை எழுதுவது எளிது. ஆனால் வேறொருவர் எழுதிய கட்டுரையை, அதன் மையக்கருத்து மாறாமல் அதன் தரத்தை மேம்படுத்துவது எவ்வளவு கடினம் என்று டாக்டர். இரா. கலைக்கோவன் அவர்களிடம் கேட்டால், நமக்கு நேரம் இருக்கும்வரை விளக்குவார்.

கட்டுரைகள் வந்து சேர்ந்ததும் அவற்றை அப்படியே அச்சில் ஏற்றிவிட முடியாது. எல்லாவற்றையும் தொகுத்து ஒரு கோப்பாக ஆக்கவேண்டும். சில கட்டுரைகள் ஆங்கிலத்திலும் சில தமிழிலும் இருக்கும். தமிழ்க் கட்டுரைகளுக்கு எழுத்துருச் (Font) சிக்கல் இருக்கிறது. தமிழில் உள்ள எழுத்துக்களைவிட எழுத்துருக்களின் எண்ணிக்கை அதிகம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாகச் செயல்படும். இவற்றிற்கெல்லாம் ஒரே தீர்வாக Unicode இப்போது வந்துவிட்டாலும், வலைப்பதிவாளர்கள் அளவுக்கு ஆய்வாளர்களின் மத்தியில் அது இன்னும் அத்தனை பரவலாகப் பயன்படுத்தப்படுவதில்லை. எனவே, எல்லாத் தமிழ்க் கட்டுரைகளையும் ஒரே எழுத்துருவிற்கு மாற்றுவது ஒரு பெரியவேலை. இத்தகைய எழுத்துருச் சிக்கல்கள் இல்லாத ஆங்கிலக் கட்டுரைகளையாவது அப்படியே அச்சேற்றி விடலாமா என்றால், அதுவும் முடியாது. சாதாரணக் கட்டுரைகளைப் போலல்லாமல், இலக்கியங்களிலிருந்தும் கல்வெட்டுகளிலிருந்தும் பல்வேறு தமிழ்ச் சொற்களை அப்படியே ஆங்கிலத்தில் மேற்கோள் காட்டி எழுதியிருப்பார்கள். அதற்கு Diacritical Marks என்னும் சிறப்புக் குறியீடுகளைப் பயன்படுத்தியிருப்பார்கள். இதுவும் தமிழ் எழுத்துருக்களைப் போலத்தான். ஒவ்வொரு ஆய்வாளரும் ஒவ்வொரு விதமான சிறப்புக் குறியீடுகளைத் தந்திருக்கிறார்கள். இதுவும் அதிக நேரத்தை எடுக்கும் வேலை.

இவற்றை எல்லாம் ஓர் அச்சுக்கோர்க்கும் பணியகத்தில் DTP Operator ஒருவரிடம் ஒப்படைப்பது இயலாத காரியம். பிழைத் திருத்தத்திற்கே அதிக நேரம் தேவைப்படும். இந்தச் சிறப்புக் குறியீடுகளைக் கையாள்வதில் அனுபவம் பெற்ற DTP Operator கிடைப்பது மிகவும் அரிது. எனவே, நாங்களே அவற்றைச் செய்யலாம் என்று முடிவெடுத்துச் செயல்படுத்தி வருகிறோம். இவையே சுமார் இரண்டு ஆண்டுகளை எடுத்துக்கொண்டன. இதுபோக, வெளியீட்டு விழா தொடர்பான ஏற்பாடுகள். வரலாறு.காம் குழுவினர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாட்டில் வசிப்பதால், எதிர்பார்த்த அளவு வேகமாகக் காரியங்கள் நடைபெறவில்லை. இருப்பினும், பெண்களூரில் இருக்கும் லலிதாராம், சென்னையிலிருக்கும் கிருபாசங்கர், முனைவர் மா.இரா.அரசு, திருச்சியிலிருக்கும் முனைவர் இரா.கலைக்கோவன், குடந்தையிலிருக்கும் திரு. பத்மநாபன், திரு. சீதாராமன் ஆகியோரின் உதவி மற்றும் ஒத்துழைப்பின் மூலம் தடையில்லாமல் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மேலே சொன்னவை உட்பட இவற்றில் உள்ள சிக்கல்களையெல்லாம் ஓரிரு பக்கங்களில் அடக்கி விடுவது எளிதல்ல. வெளியீட்டு விழாவில் தாங்கள் நேரில் கலந்துகொண்டால் புரிந்து கொள்ளலாம்.

இன்னும் சில வாரங்களில் அழைப்பிதழ்கள் தயாராகிவிடும். அடுத்தமாத வரலாறு.காம் இதழில் அதை வெளியிடுகிறோம். இதையே நேரில் அழைத்ததாகக் கருதி, விழாவுக்கு வருகைபுரிந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். எங்களுக்காக ஓர் இனிய சனிக்கிழமை மாலைநேரத்தைச் வீணடிக்க வேண்டுமா என்று எண்ணாமல், திரு. ஐராவதம் மகாதேவன் அவர்களுக்காக, அவர் சிந்துவெளி ஆய்வுகள் மூலமாகவும் தமிழ்-பிராமி ஆய்வுகள் மூலமாகவும் வரலாற்றுலகிற்கு அளித்துள்ள கண்டுபிடிப்புகளுக்காக, அவர் கல்வெட்டியல் மூலமாகவும் தினமணி மூலமாகவும் தமிழுக்கு ஆற்றியுள்ள தொண்டிற்காக, தன்னலம் கருதாத, சொந்த விருப்பு வெறுப்புகளைத் தன் கட்டுரைகளில் அள்ளித் தெளிக்காத ஒரு பண்பாளருக்காக அந்த மாலை நேரத்தை ஒதுக்கி, அவரைக் கௌரவிக்க வேண்டுகிறோம்.

இந்த நூல் வெளியீட்டு விழா மட்டுமல்ல, வரலாறு.காம் தனது ஐந்தாம் ஆண்டுத் துவக்கத்தையும் கொண்டாடப் போகிறது. அதன் வாசகர்களுக்கு ஒரு சிறப்புப் பரிசையும் அளிக்க முடிவு செய்திருக்கிறது. மேலதிக விவரங்கள் அடுத்த இதழில் வெளியிடப்படும். இப்போதைக்கு ஆகஸ்ட் 16ம் தேதியை எங்களுக்காக முன்பதிவு செய்து வைத்துக்கொள்ளுங்கள் என்று மட்டும் கேட்டுக்கொள்கிறோம்.

அன்புடன்
ஆசிரியர் குழு

this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.