http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[181 Issues]
[1796 Articles]
Home About US Temples Facebook
Issue No. 48

இதழ் 48
[ ஜூன் 16 - ஜூலை 17, 2008 ]


இந்த இதழில்..
In this Issue..

வரலாறு.காம் அழைக்கிறது
எப்பாடு பட்டாகிலும்!
தண்ணியடிக்கும் கலை
திரும்பிப் பார்க்கிறோம் - 20
அவர் - இரண்டாம் பாகம்
செல்வம் தந்த மூதேவி
ஓடி விளையாடு கிளிமகளே! தமிழ் மகளே!
இதுவா? அதுவா?
இதழ் எண். 48 > வாசகர் சிறப்புப்பகுதி
செல்வம் தந்த மூதேவி
வே. திருநங்கை
வாசகர் அறிமுகம்

மதுரையைச் சேர்ந்த செல்வி வே. திருநங்கை வரலாற்றில் முதுகலை பயின்றவர். இளங்கலை, முதுகலைத் தேர்வுகளில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திலேயே முதல் மாணவியாகத் தேறித் தங்கப் பதக்கங்கள் பெற்றவர். அதே பல்கலையில் கலைவரலாற்றுத் துறையில், 'பாண்டிய நாட்டில் சேட்டைத்தேவி வழிபாடு' எனும் தலைப்பில் முதுநிறைஞர் ஆய்வு செய்து முதல் வகுப்பில் வெற்றி பெற்றவர். தற்போது முனைவர் பட்டத்திற்காகத் 'தமிழ்நாட்டில் சேட்டைத்தேவியின் வழிபாடு' எனும் தலைப்பின் கீழ் ஆய்வு செய்து வருகிறார். தமக்கென்று தகுதி வாய்ந்த ஒரு நூலகத்தை அமைத்துக் கொண்டிருக்கும் இவருக்குக் கருத்தரங்குகளில் கட்டுரைகள் படித்த அனுபவமும் உண்டு. யாரும் நெருங்கத் தயங்கும் சேட்டைத்தேவியைத் தமக்கு நெருக்கமாக்கிக் கொண்டிருக்கும் இவ்விளம் ஆய்வாளரின் கட்டுரையை வெளியிடுவதில் வரலாறு டாட் காம் மகிழ்கிறது.




பெண்தெய்வ வழிபாடு சிந்து சமவெளி நாகரீக காலத்திலிருந்தே இருந்து வந்துள்ளது. பழங்காலத்தில் பல்வேறு பெண்தெய்வங்கள் இந்திய மக்களால் வழிபடப்பட்டு வரப்பெற்றுள்ளன. இவற்றில் முற்காலத்தில் தமிழ்நாட்டில் சிறப்பாக வழிபடப்பட்டு வந்த பெண்தெய்வங்களில் ஒன்றே மூதேவியாகும். வடஇந்தியாவில் அலெட்சுமி என்று இவளை அழைக்கின்றனர். முதன்முதலில் மூதேவி பற்றிய குறிப்பு திருக்குறளில்தான் காணப்படுகிறது(1). வடமொழியில் மூதேவியின் பெயர் ஜேஸ்டாதேவி என்பதாகும். 'ஜேஸ்டா' என்றால் 'மூத்தவள்' என்று பொருள். அந்த அடிப்படையில் மூத்ததேவி என்பது மூதேவி என்றானது. மக்கள் தங்களுடைய ஒலிக்குறிப்புக்காகப் பல்வேறு சொற்களை மாற்றி அமைத்துக் கூறுகிறார்கள். எடுத்துக்காட்டாக வெற்றிலையை வெத்திலை என்றும் மூத்தரையரை முத்தரையர் என்றும் சிரித்தான் என்பதை சிரிச்சான் என்றும் கூறுகிறார்கள். அவ்வழியில் வந்ததுதான் மூத்ததேவியாகிய மூதேவி என்ற சொல். தேவர்கள் பாற்கடலைக் கடைந்த பொழுது பல்வேறு தெய்வங்கள், மற்றும் பொருட்கள் வெளியே வந்தன. அவற்றில் முதலாவதாக மூதேவி வந்தாள். முதலில் வந்ததால் மூத்ததேவி எனப் பெயர் பெற்றாள் என்பர்(2).

மூதேவியின் உருவமைப்பு

மூதேவியின் பலவடிவச் சிற்பங்கள் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் காணப்படுகின்றன. தமிழ்நாட்டில் மட்டுமின்றித் தமிழ்நாட்டை ஒட்டிய கேரளம், ஆந்திரம், கருநாடகம் போன்ற மாநிலங்களிலும் காணப்படுகின்றன. மூதேவி சிற்பங்களில் அவளது இரண்டு கால்களும் அகலவிரித்துப் பீடத்தில் தொங்கவிட்டதுபோல் இருக்கும். இடுப்பில் இருந்து கால்வரை ஆடைக்கட்டு காணப்படும். வலக்கரம் அபய முத்திரையிலும், இடக்கரம் நீலோற்ப மலரைக் கையில் ஏந்திக் கொண்டும் இருக்கும். அவளுடைய தலையினைக் கரண்டமகுடமும் காதுகளைப் பத்ரகுண்டலம் அல்லது மகரகுண்டலமும், தோளினைக் கேயூரமும், நெற்றியினைக் கண்ணிமாலையும், கழுத்தினைப் பதக்கங்களும் அழகு செய்கின்றன. மூதேவியின் சிற்பங்கள் சிலவற்றில் வீரச்சங்கிலியும் புரிநூலும் காணப்படும். மூதேவி வீரச்சங்கிலி அணிந்து இருப்பதால் போர் வீரர்களால் வழிபடப்பட்டாள் என்று விஷ்ணு தர்மோத்தரம் கூறுகிறது(3). மூதேவியின் வலது பக்கத்தில் மாட்டுத் தலையினை உடைய ஆண் உருவம் ஒன்று காணப்படும். கோமுகன் என்றும் மாந்தன் என்றும் அவ்வுருவம் அழைக்கப்படுகின்றது. மாட்டுத்தலையினைக் கொண்ட ஆண் உருவம் மூதேவியின் மைந்தன் எனக் கூறுவர். இவன் தன்னுடைய வலது கரத்தில் தடியை ஏந்திக்கொண்டு இருப்பான். மூதேவியின் இடது பக்கத்தில் ஒரு பெண் உருவம் காணப்படுகிறது. அப்பெண் உருவம் மூதேவியின் மகள் எனக் கருதுவர். அவளை அக்னிமாதா என்றும் மாந்தி என்றும் அழைக்கின்றனர்.

செல்வம் தந்த மூதேவி

மூதேவியை வளமைக்காகவும் செல்வத்திற்காகவும் வழிபட்டமைக்குச் சிற்பச் சான்றுகளும் இலக்கியச் சான்றுகளும் உள்ளன. மூதேவியை மக்கள் செல்வத்திற்காகத்தான் வழிபட்டார்கள் என்பதற்குப் பன்னிரண்டு ஆழ்வார்களுள் ஒருவரான தொண்டரடிப்பொடியாழ்வாரின் பாடலே சான்றாகும்.

அவர் தன்னுடைய பாடலில்,

நாட்டினன் தெய்வமெங்கும்
நல்லதோ ரருள்தன் னாலே
காட்டினான் திருவரங்கம்
உய்பவர்க் குய்யும் வண்ணம்
கேட்டிரே நம்பி மீர்காள்
கெருடவா கனனும் நிற்க
சேட்டை தன் மடியகத்துச்
செல்வம் பார்த்திருக்கின்றீரே
(4)

வரங்களைத் தரக்கூடிய, அருள்தரும் கருட வாகனனான திருவரங்கப் பெருமான் இருக்க, சேட்டையாகிய மூதேவியின் மடியில் செல்வத்தைத்தேடி மக்கள் செல்கின்றார்களே என்று மனம் வெதும்பிக் கூறுகிறார். இதன்மூலம் மூதேவி செல்வத்திற்காக கி.பி. எட்டாம் நூற்றாண்டில் மக்களால் சிறப்பாக வழிபடப்பட்டு இருப்பது தெரிகிறது. இதன் காரணமாகவே திருப்பரங்குன்றத்தில் பாண்டியன் பராந்தக நெடுஞ்சடையனின் படைத்தலைவன் மனைவி நக்கன்கொற்றி மூதேவிக்கென்று குடைவரைக்கோயில் ஒன்றை எடுப்பித்துள்ளார்(5).

பணப்பெட்டியுடன் மூதேவிச் சிற்பங்கள்

தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் தென்சிறுவலூர், பெரும்பாக்கம், பேரங்கியூர், ஆ.கூடலூர் போன்ற இடங்களில் கண்டறியப்பட்ட எட்டாம் நூற்றாண்டுச் சிற்பங்களில் உள்ள மூதேவி பணப்பேழை அல்லது செல்வமுள்ள குடத்தின்மீது தன்னுடைய கைகளை வைத்துக்கொண்டு இருப்பதுபோல் காணப்படுகிறது(6). மூதேவி செல்வத்திற்காக வழிபடப்பட்டமைக்கு இத்தகைய சிற்பங்களே சான்றாகும்.

தென்சிறுவலூர் விழுப்பரம் மாவட்டத்தில் வானூர் வட்டத்தில் உள்ளது. இதில் உள்ள மூதேவி இரண்டு கால்களையும் அகலவிரித்துத் தொங்கவிட்டு அமர்ந்த நிலையில் காட்சியளிக்கிறாள். தலையினைக் கரண்டமகுடமும் தோளினைக் கேயூரமும் கழுத்தினைப் பதக்கமும் கையினை வளையலும் அணிசெய்கின்றன. இவளுடைய வலது மற்றும் இடது பக்கத்தில் மாந்தன், மாந்தி ஆகியோரது உருவங்கள் உள்ளன. மாந்தனுக்கும் மூதேவிக்கும் இடையில் திருவலகு(துடைப்பம்) உள்ளது. மூதேவியின் வலதுகை பணப்பெட்டி மீது உள்ளது. அதனைப் பெண் ஒருத்தி சுமந்து கொண்டு நிற்கிறாள்.



சேட்டை - தென்சிறுவலூர்


உளுந்தூர்ப்பேட்டை வட்டத்திலுள்ள பாண்டூரில் இரண்டு மூதேவியின் சிற்பங்கள் உள்ளன. இவற்றின் தலையினைக் கரண்டமகுடமும், தோளினைக் கேயூரமும் கையினை வளையல்களும் கழுத்தினைப் பதக்கமும் அணிசெய்கின்றன. இடுப்பிலிருந்து கால்வரை மடிப்புடன் கூடிய அழகான ஆடைக்கட்டு அலங்கரிக்கின்றது.

பாண்டூரில் உள்ள மூதேவியின் சிற்பம் ஒன்றில் மூதேவி பணம் நிறைந்த ஒரு குடத்தின் மீது தனது வலக்கரத்தினை வைத்துள்ளாள். மற்றொரு சிற்பத்தில் மூதேவியின் வலப்புறம் தலைமீது பணப்பெட்டியைச் சுமந்துகொண்டிருக்கும் பெண்ணுருவம் காணப்படுகிறது. அவளது தலைமீதுள்ள பணப்பெட்டி மீது மூதேவி தன்னுடைய வலக்கரத்தை வைத்துள்ளாள். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாக்க மூதேவியின் சிற்பத்தில் அவளது வலக்கரம் செல்வம் நிறைந்த ஒரு குடத்தின் மீது உள்ளது.



சேட்டை - பாண்டூர்


பேரங்கியூர் மூதேவியின் சிற்பத்தில் அவளது இருபக்கமும் பணப்பெட்டியைச் சுமந்து கொண்டிருக்கும் இரு பெண்ணுருவங்கள் உள்ளன. மூதேவி தன்னுடைய இருகைகளையும் இரண்டு பக்கம் உள்ள பணப்பெட்டியின் மீது வைத்துச் செல்வத்தை அள்ளித் தருபவள்போல் காட்சியளிக்கிறாள்.



சேட்டை - பேரங்கியூர்


மூதேவியின் சிற்பங்களில் காணப்படும் பெட்டி, குடம் ஆகியவற்றைப் பணப்பெட்டி, செல்வமுள்ள குடம் என்று கருத வேண்டியுள்ளது. இதனைத் தொண்டரடிப்பொடியாழ்வார் பாடலும் உறுதி செய்கிறது. செல்வத்திற்காக வளமைக்காக வழிபடப்பட்ட மூதேவி வைதீக சமயத்தின் செல்வாக்கின் காரணமாக வழிபாடற்ற அமங்கலத் தெய்வமாகக் கருதப்பட்டுக் காலப்போக்கில் புறந்தள்ளப்பட்டாள் என்று கருத வேண்டியுள்ளது.

அடிக்குறிப்புகள்

1. திருக்குறள், எண்.167, 617, 936.
2. T.A.Gopinatha Rao, Elements of Hindu Iconography, Delhi - 1985, pp.395-398.
3. மேலது, பக்.395.
4. நாலாயிர திவ்யப் பிரபந்தம், திருமாலை, பா.10.
5. மூதேவி சிற்பங்கள் தொடர்பாக தகவல் தந்துதவியவர், விழுப்புரம் திரு.சி.வீரராகவன் ஆவார்.

this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.