http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[178 Issues]
[1762 Articles]
Home About US Temples Facebook
Issue No. 50

இதழ் 50
[ ஆகஸ்ட் 16 - செப்டம்பர் 17, 2008 ]


இந்த இதழில்..
In this Issue..

வரலாறு.காம் - நான்காண்டுகளுக்கு அப்பால்
மரண தண்டனை
சிதையும் சிங்காரக் கோயில்கள் - 4
The Five Rathas of Mamallapuram
Virtual Tour On Kundrandar Koil - 2
திரும்பிப்பார்க்கிறோம் - 22
Iravatham Mahadevan: Fifty years of Historical Research - An Exploration in Pictures
Straight from the Heart - Iravatham Mahadevan
Iravatham Mahadevan - A Profile
ஐராவதியும் ஐந்தாம் ஆண்டும்...
ஐராவதியின் வரலாறு
அவர் - நான்காம் பாகம்
சிறைப்பட்டது ஒரு சிட்டுக்குருவி
ஓ காகமே ... பாடுதே என் நெஞ்சமே
இதழ் எண். 50 > ஐராவதி சிறப்புப் பகுதி
ஐராவதியும் ஐந்தாம் ஆண்டும்...
கோகுல் சேஷாத்ரி
பிரபலக் கல்வெட்டியல் மூதறிஞர் திரு.ஐராவதம் மகாதேவன் அவர்களுக்கு ஒரு பணிப்பாராட்டு மலரைத் தயாரிப்போம்! என்று கைச்சட்டையை மடித்து விட்டுக்கொண்டு நண்பர்களுடன் களமிறங்கியபோது அதில் எப்பேர்ப்பட்டதொரு மகத்தான அனுபவம் காத்திருக்கிறது என்பதை அறியாதவனாகவே இறங்கினேன். திரு.மகாதேவன் அவர்களைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருந்தாலும் அவரது எழுத்துக்களை மேம்போக்காக மட்டுமே வாசித்திருந்தேன். ஏதோ பெரிய மேதை என்று மட்டும்தான் அப்போது எண்ணமிருந்தது.

இதழில் அறிவிப்பு வெளியிட்டு அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒன்றும் பெரிதாக நடக்கவில்லை. வாசகர்களும் நண்பர்களும்கூட "சரி, இது அவ்வளவுதான்... எண்ண வடிவில் நின்று போய்விட்ட மற்றொரு நல்முயற்சி!" என்று எண்ணியிருக்கலாம். அவ்வப்போது "இன்னாருடைய கட்டுரை வந்துள்ளது - இன்ன தலைப்பில் அவர் எழுதியிருக்கிறார்" என்று கமல் மின்னஞ்சலிடுவார். அவற்றைப் படித்து விட்டு "வாழ்க வளமுடன்!" என்று வாழ்த்தியதுடன் என் பணி எளிதாக முடிந்தது.

திடீரென்று ஒருநாள் "அநேகமாக முக்கால்வாசிக் கட்டுரைகள் வந்துவிட்டன... மற்ற கட்டுரைகள் கொடுக்காத அறிஞர்களின் வீட்டு வாசலில் உண்ணாவிரதம் இருந்தாவது கட்டுரைகள் வாங்கி விடலாமென்று நம்பிக்கை இருக்கிறது! ஆகஸ்டில் புத்தகத்தை வெளியிட்டு விடலாம்..." என்று உற்சாகமடல் கமலிடமிருந்து வரவே தலைகால் புரியவில்லை. நண்பர் கமலிடம் ஒரு பெரிய பிரச்சனை என்னவென்றால் திட்டமிடுபவற்றையெல்லாம் தானும் செயல்படுத்திவிடுவார் - மற்றவர்களையும் அதில் ஈடுபடுத்தி விடுவார்! "அட, இந்த மலர் வரவில்லையென்று இப்போது யார் வருத்தப்படுகிறார்கள்? நமது வாசகர்களே அறிவிப்பை மறந்து பலகாலமாகிறது. வெறும் வாய் வீரத்தோடு நிறுத்திக் கொள்வோமே..." என்று எத்தனையோ முறை நான் கரையாய்க் கரைத்தும் அவரது இரும்பு(!) நெஞ்சம் இளகவில்லை.

இவ்வாறாகப் புத்தகம் எங்களின் கனவு மட்டுமல்ல - நிஜமும் ஆகப்போகிறது என்றொரு சூழல் உருவானது.
ஒருவர் தேவையான நேரத்தில் வாயைத் திறத்தல் எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் தேவையில்லாத நேரத்தில் வாயை மூடிக்கொண்டிருப்பது. திடுதிப்பென்று இந்தத் தத்துவத்தை எதற்காக எடுத்து விடுகிறேனென்பதை நீங்களே ஓரிரு கணங்களில் புரிந்துகொள்வீர்கள்.

கட்டுரைகளெல்லாம் வந்து, புத்தகம் உருவாகும் சூழல் உருவானது என்று குறிப்பிட்டேனல்லவா? இந்தப் புத்தக உருவாக்க விவாதங்களின்போது தேவையே இல்லாமல் - ஒருவரும் கேட்காமல் - நானாக மெல்ல ஒரு செய்தியைச் சொன்னேன். "இந்த மாதிரிப் புத்தகங்கள் உருவாக்குவதில் எனக்குக் கொஞ்சம் - கொச்சையாகச் சொல்லவேண்டுமென்றால் தம்மாத்துண்டு - அனுபவம் இருக்கி....."

நான் வாக்கியத்தை முடிக்கக்கூட இல்லை. அதற்குள் கமல் என்னை உடும்புப் பிடியாகப் பிடித்துக்கொண்டு விட்டார். "ஆஹா ! நீங்களல்லவா உண்மையான வரலாற்று நேசர்.... நமது புத்தகத்தை DTP மக்களிடமெல்லாம் கொடுத்துத் தயாரிக்க முடியாது. அதில் பல தொழில்நுட்பப் பிரச்சனைகளெல்லாம் இருக்கின்றன - புத்தகம் நாம் நினைத்ததைப்போல் வராது. நீங்களாகச் செய்தீர்களானால் அசத்தி விடுவீர்கள்..." என்று என்னென்னவோ சொல்லிப் பரிவட்டத்துடன் பணியை என் தலையில் கட்டிவிட்டார்.

அதுவரை அசட்டையாக மேய்ந்த கட்டுரைகளை அப்போதுதான் சற்று நிதானமாகப் பார்த்தேன். பார்த்த சில மணிகளில் வயிற்றில் பெரியதொரு சங்கடம் உருவாகத் துவங்கிவிட்டது.

பிரச்சனை என்னவெனில், ஒவ்வொரு ஆய்வாளரும் ஒவ்வொரு எழுத்துருக்களைப் (Fonts) பயன்படுத்தியிருந்தனர். அதுகூட அத்தனை சிக்கலில்லை - கட்டுரையில் இடம்பெறும் தமிழ் / பிராகிருதம் / சமஸ்கிருதம் முதலான பிறமொழிச் சொற்களை ஆங்கிலத்தில் குறிப்பிடுவதற்கு Diacritical Marks என்றழைக்கப்படும் குறிப்பீட்டு முறையைச் சகட்டுமேனிக்குப் பயன்படுத்தியிருந்தனர்.

நான்கு ஐந்து கட்டுரைகளைப் படித்து முடிக்கையில் நடுக்கு ஜூரம் உருவாகி உடலைத் தூக்கித் தூக்கிப் போட ஆரம்பித்து விட்டது. என்னடா இது, முதல் கோணல் அது இது என்று என்னவோ சொல்வார்களே - பணி ஆரம்பிப்பதற்கு முன்னாலேயே இப்படிச் சோதனைக் காலம் ஆரம்பமாகி விட்டதே - ஏழரை நாட்டுச் சனி கூட முடிந்துவிட்டாகச் சொன்னார்களே -என்றெல்லாம் நினைத்துக் கொண்டேன். ஆனால் கமல் அசரவில்லை - "பயப்படாதீர்கள் ! நல்லதொரு பணி துவங்கும்போது இப்படிப்பட்ட கஷ்டங்கள் ஏற்படுவது இயற்கைதான்... மிகக் கடுமையான சிரமங்கள் ஏற்பட்டால் எடுத்த காரியம் மிகப் பிரமாதமானது!" என்று கூறிச் சமாதானப்படுத்த முயன்றார்.

ஆக, எப்படியும் பணியைத் துவங்கித்தானாக வேண்டும் - தப்பிக்க முடியாது எனும்படியாக மாட்டிக் கொண்டேன்.
கட்டுரைகள் ஒவ்வொன்றையும் ஒரே கோப்பாக உருவாக்க முயன்றோம். இங்குதான் அடுத்த பெரிய பிரச்சனை "வா, பையா வா - உனக்காகத்தான் காத்துக் கொண்டிருந்தேன்!" என்று சந்தோஷத்துடன் தலையை ஆட்டி வரவேற்றது.

ஆய்வாளர்களில் பலர் கட்டுரைகளை மென்பொருள் கோப்பாகத் (File) தராமல் பிரிண்ட் எடுத்து அந்தப் பிரதியை அப்படியே அனுப்பி விட்டிருந்தார்கள்! இப்படி வந்த கட்டுரைகளை அரங்கேற்ற வேண்டுமானால் மீண்டும் நாமே அந்தக் கட்டுரைகளைத் தட்டச்சு செய்தாக வேண்டும். "ரொம்ப நல்லதாகப் போயிற்று ! இப்படியே தட்டச்சு செய்து கொண்டு போனால் எல்லாக் கட்டுரைகளையும் முடிக்க 20 - 25 வருடங்கள் ஆகும்! அப்போது கொண்டாடிக் கொள்ளலாம்!" என்று சொல்லி விட்டேன். ஆனால் கமல் எங்கிருந்தோ ஓர் அனாமதேய OCR மென்பொருளைப் பிடித்துக்கொண்டு வந்து அத்தனை கட்டுரைகளையும் உத்தேசமாக மென்பொருளாக்கிவிட்டார். அடடா, இப்படித் தப்பிக்கக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் குறி வைத்துக் கெடுத்துக் கொண்டிருக்கிறாரே கமல் - ஜப்பானிய சாமுராய் வீரர் எவரையாவது பிடித்து அவரை நான்கு தட்டு தட்டிவைக்கச் சொல்லலாமா என்று தோன்றியது. பின் "வரலாற்றியலில் எத்தனை கடுமையான கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் வன்முறையில் மட்டும் ஒருபோதும் ஈடுபடக்கூடாது!" என்று திரு.கலைக்கோவன் செய்திருந்த எச்சரிக்கை நினைவுக்கு வரவே அந்த எண்ணம் கைவிடப்பட்டது.

அனாமதேயம் ஓரளவிற்குப் பிரதியை மென்பொருள் கோப்பாக மாற்றியதே தவிர Diacritical marks, Footnotes முதலான அலங்காரங்களை "எனக்கேனப்பா வீண் வம்பு!" என்று கழற்றி விட்டு விட்டது. அலங்காரங்கள் இன்றி நின்ற கட்டுரைகளுக்கு மீண்டும் நாங்களே ஒரிஜினல் அணிமணிகளைத் தேர்ந்தெடுத்து மீண்டும் பூட்டியாக வேண்டிய நிலை - என்ன செய்வது! பேய்க்கு வாழ்க்கைப் பட்டாயிற்று... இனி புலம்பி என்ன பயன் ?

இந்தத் திருக்கூத்தில் எத்தனையோ எச்சரிக்கையாக இருந்தும் பல ஆய்வாளர்களின் ஒரிஜினல் அலங்காரங்களை அப்படியே அணிவிக்க முடியவில்லை. ஏனெனில் கட்டுரை வெவ்வேறு விதங்களில் வெவ்வேறு எழுத்துருக்களில் எழுதப்பட்டிருந்தாலும் ஒன்றாக ஒரே புத்தகமாகப் படிக்கப்படும்போது ஒரளவிற்காவது சீராகத் தெரியவேண்டுமில்லையா? முதல் பக்கத்தில் ஓர் எழுத்துரு, மூன்றாவது பக்கத்தில் மற்றோர் எழுத்துரு என்று குழப்பியடித்தால் இத்தகைய ஆய்வுப் புத்தகங்களை மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு படிக்க நினைக்கும் மனிதர்கூடக் குய்யோ முறையோ என்று கூவிக்கொண்டு ஓடிவிடுவார்.

வரலாற்று ஆய்வாளர்களிடையே ஒரு மனப்போக்கு உண்டு. அவர்களிடம் ஐந்தோ பத்தோ கேட்டால்கூட யோசிக்காமல் தந்து விடுவார்கள் - ஆனால் அவர்களின் கட்டுரையில் ஒரு பின்குறிப்பையோ (Footnote) அலங்காரத்தையோ (Diacritical marks) விட்டுவிட்டோமானால் - அல்லது சிதைத்துவிட்டோமானால் - எல்லையில்லாத மனக்கஷ்டத்துக்கு உள்ளாகிப் புலம்பித் தள்ளி விடுவார்கள். அட, போனால் போகிறது கழுதை! என்று விட்டுவிடுங்கள் என்று சொன்னாலும் மனச்சமாதானமாக மாட்டார்கள். ஆக, அலங்காரங்கள் சொதப்பிய இடங்களிலெல்லாம் கடுமையான காழ்ப்புணர்ச்சியைச் சந்தித்தோமெனில் மிகையில்லை.

ஒரு ஆய்வர் எங்கள் திருப்பணியை "sub optimal editing" என்று வர்ணித்திருந்தார். இந்த சப் ஆப்டிமல் எடிட்டிங் என்றால் என்ன என்று தெரியாமல் கமலுக்கு மண்டை வெடித்துவிடும்போல் இருந்தது. "கிடக்கிறார், விடுங்கள் ! அது நிச்சயம் நம்மைப் பாராட்டிக் கூறப்பட்ட குறிப்பல்ல - விட்டுத்தள்ளுங்கள் !" என்று பலவழிவகைகளில் சமாதானம் செய்தும் அவருக்கு அமைதி ஏற்படவில்லை.
இவ்வாறாகப் புத்தகம் ஒருவாறு தட்டுத் தடுமாறி உருவாகிக்கொண்டிருந்த காலத்தில், இந்தப் புத்தக உருவாக்கத்தில் மெய்மறந்து ஈடுபட்டிருந்த மகாமேதை ஒருவருக்கு - அதாவது எனக்கு! - வேறொரு பிரச்சனை. "ஹ! புத்தகத்தை ஒருவழியாக முடித்துவிடலாமென்றா பார்க்கிறாய்? விட்டுவிடுவேனா என்ன?" என்று இயற்கையே எனக்கெதிராய் சதிசெய்வதாய்த்தான் எனக்குத் தோன்றியது. பிரச்சனை என்னவெனில் கணணி அதிகமாக உபயோகிக்கும் கனவான்களுக்கென்று இறைவன் தானே பார்த்துப் பார்த்து உருவாக்கிய வியாதியான Carpel Tunnel Syndrome என்னைக் கடுமையாக பாதித்தது. இதனைச் செல்லமாக CTS என்று குறிப்பிடுவார்கள். வலது கரத்திலிருந்து முழங்கைக்குச் செல்லும் முக்கிய நரம்புப் பாதை பாதிக்கப்படுமளவிற்கா வேலை செய்திருக்கிறோம்?? என்று வியப்பேற்பட்டது.

வலது கை விரல்களிலும் முழங்கையிலும் CTS கடுமையான நரம்பு வலி ஏற்படும். இந்த வியாதி வந்துவிட்டால் - என்ன வேண்டுமானாலும் சாப்பிடலாம் - என்ன வேண்டுமானாலும் செய்யலாம் - தலை கீழாகக்கூடத் தொங்கலாம் - ஆனால் கணிப்பொறி பக்கம் மட்டும் கொஞ்ச நாட்களுக்குத் தலையை வைத்துப் படுக்கக்கூடாது ! என்று கடுமையாக எச்சரித்து விட்டார்கள். எச்சரிக்கையை மீறி நடந்துகொண்டால் சர்ஜரி செய்வதைத் தவிர வேறு வழியில்லை - ஆக மிகவும் ஜாக்கிரதையாக நடந்து கொள்ளுங்கள் - என்கிற கடைசி மிரட்டலும் விடப்பட்டது.

ஐராவதிப் பணிகளோ உச்ச கதியில் நடைபெற்றுக்கொண்டிருந்தன. இந்த நிலையில் கையை உடைத்துக்கொண்டாவது புத்தகப் பணிகளை நிறைவேற்றியாக வேண்டும் என்கிற வெறி ஏற்பட்டது. பாரி முல்லைக்குத் தேர் கொடுத்ததைப் போல் நானும் ஐராவதிக்குக் கையைக் கொடுத்தேன் என்று நினைத்துக்கொள்ள வேண்டியதுதான்.

கைவலியையும் பொருட்படுத்தாது இரவில் தொடர்ந்து வேலை செய்துகொண்டிருப்பதைக் கண்ட என் மனைவி "அப்படி என்னதான் பாழாய்ப் போகிற வேலையோ?" என்று அன்புடன் வினவினார்.

"ஒரு பெரிய கல்வெட்டறிஞருக்கு வாழ்நாள் சாதனை விழா மலர் தயாரித்துக்கொண்டிருக்கிறோம் - திரு.ஐராவதம் மகாதேவன் என்று நீ கேள்விப்பட்டதில்லை?"

"ஒரு முறை வரலாறு டாட் காம் அட்டைப்படத்தில் ஒரு தாத்தாவின் படத்தைக் காண்பித்தீர்களே - அவரா ?"

"அவரேதான்"

"பார்ப்பதற்கு நல்ல மனிதராகத்தான் தெரிகிறார். மரியாதை செய்ய வேண்டியதுதான். ஆனால் உடம்பைக் கெடுத்துக்கொண்டு படுத்தீர்களானால் உங்களுக்கு உட்கார வைத்துச் செய்வதற்கு எனக்குத் தெம்பில்லை" - என்கிற பிரபலப் பொன்மொழியை உதிர்த்தார். அத்துடன் நில்லாமல் (என்ன சொன்னாலும் நான் கேட்க மாட்டேன் என்கிற காரணத்தினால்) அருகிலிருந்த கடையிலிருந்து CTS வியாதியஸ்தர்களுக்காகச் சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட கைப்பட்டை ஒன்றைக் கையோடு வாங்கிக்கொண்டு வந்து கொடுத்தார்.

மணிக்கட்டின் அசைவுகளை ஏறக்குறைய முழுமையாக ஒரு கவசம் போல் இந்தக் கைப்பட்டை காப்பாற்றியது. ஆனால் வழக்கமாக வலது கையை உபயோகிக்குமளவிற்குப் பட்டை இருந்தால் உபயோகிக்க முடியாது. இதனால் வலங்கை வேளக்காரனாக அதுவரை இருந்த நான் இடங்கைக்கு மாறினேன். அதாவது Mouse பிடிக்கும் கரத்தை வலது கரத்திலிருந்து இடது கரத்திற்கு மாற்றிக் கொண்டேன். அது அத்தனை எளிதாக முடிகிற காரியமாக இல்லை. நாம் நினைப்பது ஒன்று - தெய்வம் நினைப்பது வேறொன்று என்பார்களே... அதுபோல நான் கிளிக் செய்ய நினைத்தது ஒன்று, கை போய்ச் சேர்ந்த இடம் வேறொன்று என்று ஒரே வேடிக்கையாக இருந்தது.

மேலும் CTS வியாதி வந்தவர்கள் நல்ல பெரியதொரு மவுஸ் வாங்கிப் பயன்படுத்தினால் நல்லது என்று யாரோ கிளப்பி விடவே அந்த தண்டச் செலவையும் செய்து முடித்தேன். என்னுடைய பழைய மவுஸ் நிஜமாகவே எலி மாதிரி சிறியதாக இருக்கும். புதியதோ பெருச்சாளி சைஸில் பெரியதாக இருந்தது. இருந்தாலும் பரவாயில்லையென்று பழகிக்கொண்டேன்.

கைவலியால் நான் சீப்பட்டுக்கொண்டிருப்பதைக் கண்ட கமல் நானும் உதவி செய்கிறேன் என்று களத்தில் இறங்கினார். ஆனால் அவருடைய கணிப்பொறிக்கும் என் கணிப்பொறிக்கும் ஏனோ ஏழாம் பொருத்தமாகவே இருந்தது. அவர் செய்த பல வேலைகள் என் கணிணியில் சிதைந்து தெரிந்தன. இறுதியில் ஏதோ தட்டுத் தடுமாறி சமாளித்தோம்.
ஒருநாள் "சரி, புத்தம் எத்தனை பிரதிகள் போடலாம் ?" என்று வினவினார் கமல்.

"பத்து அல்லது பதினைந்து போடுங்கள் - வரலாற்றாய்வு நூல்களைப் படிக்கக்கூடியவர்கள் இந்த நாட்டில் அத்தனை பேர்தான் தேறுவார்கள்!" என்றேன்.

"சேச்சே - எத்தனை பெரிய கல்வெட்டறிஞர் அவர்! வெறும் பத்து பதினைந்து போட்டால் நன்றாக இருக்காதே - அச்சகத்திலும் அத்தனை குறைந்த எண்ணிக்கை நூல்களெல்லாம் அச்சிட மாட்டார்கள்!"

"அவரது பெருமையைக் குறை சொல்லவில்லை. நாட்டில் வரலாற்றாய்வு புத்தகம் படிக்கும் நண்பர்களின் எண்ணிக்கையைத்தான் சொன்னேன். சரி, உங்களின் திருப்திக்காக இருபத்தைந்து போட்டுக்கொள்ளுங்கள்!" என்றேன்.

நல்லவேளை - அது தொலைபேசி உரையாடலாக இருந்தது. இல்லையேல் அடிக்க வந்திருப்பார்.
நூல் உருவாக்கம் நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில்தான் திரு.மகாதேவன் அவர்களின் பன்முக ஆற்றலை சற்று ஆழமாகப் புரிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது. அவர் மிகப்பெரிய கல்வெட்டறிஞர் மட்டுமல்ல - மிகச்சிறந்த மனிதரும் கூட என்பதை அவரது வாழ்க்கைச் சுருக்கம் கோடியிட்டுக் காண்பித்தது.

சாதாரணமாகப் பல்கலைக் கழகங்களும் கல்லூரிகளும் உருவாக்கித்தரும் வரலாற்றாய்வுச் சூழலையும் ஏராளமான நேரத்தையும் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளத் தெரியாத பலரின் மத்தியில் வரலாற்றாய்வுக்குச் சிறிதும் சம்மந்தமில்லாத அரசாங்கப் பணியில் இருந்துகொண்டு திரு.மகாதேவன் பண்டைய தமிழகக் கல்வெட்டாய்விலும் சிந்து சமவெளி எழுத்தாய்விலும் மகத்தான சாதனை புரிந்திருப்பது மென்பொருள் துறையைச் சேர்ந்த எங்களுக்குப் பெரியதொரு வழிகாட்டியாய் தோன்றியது. "நேராக நின்று பார்த்தால் அது தடைக்கல் - அதைத் திருப்பிப் போட்டால் அதுவே படிக்கல்!" என்று எப்பொழுதோ படித்தது எத்தனை பெரிய உண்மை என்று புரிந்தது.

ஐராவதி உருவாக்கத்தில் மனத்தொய்வு ஏற்படும்போதெல்லாம் அவருடைய வாழ்க்கைச் சுருக்கத்தையோ கட்டுரையையோ எடுத்துப் படிப்பது வழக்கம் - மனச்சேர்வு சிறிது நேரத்தில் பறந்தோடிவிடும் ! இவர் உழைத்த உழைப்புக்குமுன் நம்முடையது எம்மாத்திரம்... என்னும் எண்ணம் மட்டும் மிஞ்சும்.
ஒவ்வொரு நல்ல கதைக்கும் ஒரு உச்ச கட்டக் காட்சி - அதாவது கிளைமாக்ஸ் - உண்டல்லவா ? ஐராவதி கதையிலும் அந்தக் கிளைமாக்ஸ் நெருங்கிக் கொண்டிருந்தது.

திடீரென்று ஒருநாள் என் தொலைபேசியில் கீழ்க்கண்ட பயங்கர உரையாடல்கள் துவங்கின.

"அந்தக் காலை வெட்டி விடுங்கள் !"

"இந்த இடத்தில் தலை மட்டும் தனியாகத் தொங்கிக்கொண்டிருக்கிறது பாருங்கள் - அதனைச் சேர்த்து விடுங்கள்!"

"கை மட்டும் தனியாக வேண்டாம் - எடுத்து விடலாம்!"

அது வேறொன்றுமில்லை. பிழை திருத்தும் பணியில் திரு.கலைக்கோவன் அவர்கள் தொலைபேசியில் ஒவ்வொன்றாகத் திருத்தங்களைக் கூறிக்கொண்டிருக்க நான் அந்தத் திருத்தங்களைச் செய்து கொண்டிருந்தேன்.

பிழைதிருத்தம் துவங்குவதற்குமுன் "நீங்கள் பதிப்பித்துள்ள கட்டுரைகளை ஒருமுறை படித்துப் பார்த்தீர்களா?" என்று வினவினார் அவர்.

"வரலாற்றியலில் ஈடுபடுவதே பாவம். அதிலும் வரலாற்றாய்வுக் கட்டுரைகளைப் படிப்பது என்பது கெங்கைக் கரையில் காராம் பசுவைக் கொன்ற பாவத்திற்குச் சமம் என்று திறவோர் சொல்லித் தெளிந்தனம் ஆதலின் சத்தியமாக எந்தக் கட்டுரையையும் படிக்கவில்லை!" என்றேன்.

"ஒருமுறைக்கு இருமுறை படித்துப் பாருங்கள் - பின் உங்களுக்கே பிழைகள் புரியும்!" என்றார்.

"எங்கே சார் அதற்கெல்லாம் டயம் இருக்கிறது!" என்கிற பிரபல வாசகத்தை மறுமொழியாகக் கொடுக்க நினைத்தாலும் வாயை மூடிக்கொண்டிருந்தேன். என்னைவிட ஆயிரத்தெட்டு பணிகளுக்கு நடுவில் இருப்பவர் அவர். அவருக்குக் கிடைக்கும் நேரம் எனக்குக் கிடைக்காதா என்ன?

"புத்தகம் வெளிவருமுன் நிச்சயம் படித்து விடுகிறேன்!" என்று உறுதியளித்தேன். கமலிடம் சொல்லி "இந்தப் புத்தகத்தைப் படிக்கப்போகும் நபர்கள்" பட்டியலில் என்னையும் சேர்க்கச்சொல்ல வேண்டுமென்று தோன்றியது.

திரு.கலைக்கோவன் வரிக்கு வரி - எழுத்துக்கு எழுத்து கவனமாகப் படிப்பார். கூடுமானவரையில் 100% பிழைகள் இல்லாமல் வெளிவரவேண்டுமென்று நினைப்பார். திரு.ஐராவதமும் அப்படிப்பட்டவர்தான் என்பது அவருக்குக் கீழ் தினமணியில் பணிபுரிந்த கட்டுரையாளர் எழுதிய கட்டுரையிலிருந்து புரிந்தது.

ஆக இப்படிப் பிழைபொறுக்கச் சகிக்காத பெருமக்களின் நடுவே ஐராவதியின் எண்ணற்ற பிழைகள் சிக்கிச் சீரழித்தன. அலைமாறின - திசைமாறின. கடைசியில் பொறுக்க மாட்டாமல் புத்தகத்தை விட்டே வெளியேறின. இத்தனையும் மீறிப் புத்தகத்தில் பிழைகள் தென்பட்டால் அவற்றுக்கு தீர்க்காயுசு! அவை நன்றாக இருக்கட்டும்! என்று வாழ்த்த வேண்டியதுதான்.
இத்துடன் என்னுடைய அதிகப் பிரசங்கத்தை நிறுத்திக்கொள்ளாமென்று பார்க்கிறேன். "ஐராவதியும் ஐந்தாம் ஆண்டும்" என்று எதுகை மோனையுடன் பிரமாதமாகத் தலைப்பு வைத்துவிட்டு ஐந்தாம் ஆண்டைப் பற்றி ஒரு வரிகூட எழுதவில்லையென்றால் நன்றாக இருக்காது. அதனால்...


நான்காம் ஆண்டை நல்லபடியாக உள்பூசல், கட்சிச் சண்டை, இணையச் சச்சரவு, கருத்து வேறுபாடு, ஏவல், தூண்டல், தாண்டல், பில்லி, சூனியம் முதலியன எதுவுமின்றிக் கழித்த வரலாறு டாட் காமுக்கு ஏற்பட்ட திருஷ்டிகள் இத்துடன் கழியட்டும். அடுத்த ஐந்தாம் ஆண்டையும் நன்முறையில் அது முடித்துக்கொள்ளட்டும்...


என்று வாழ்த்தும்படி வாசகர்களைக் கோரி கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

வணக்கம்.
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.