http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 50

இதழ் 50
[ ஆகஸ்ட் 16 - செப்டம்பர் 17, 2008 ]


இந்த இதழில்..
In this Issue..

வரலாறு.காம் - நான்காண்டுகளுக்கு அப்பால்
மரண தண்டனை
சிதையும் சிங்காரக் கோயில்கள் - 4
The Five Rathas of Mamallapuram
Virtual Tour On Kundrandar Koil - 2
திரும்பிப்பார்க்கிறோம் - 22
Iravatham Mahadevan: Fifty years of Historical Research - An Exploration in Pictures
Straight from the Heart - Iravatham Mahadevan
Iravatham Mahadevan - A Profile
ஐராவதியும் ஐந்தாம் ஆண்டும்...
ஐராவதியின் வரலாறு
அவர் - நான்காம் பாகம்
சிறைப்பட்டது ஒரு சிட்டுக்குருவி
ஓ காகமே ... பாடுதே என் நெஞ்சமே
இதழ் எண். 50 > ஐராவதி சிறப்புப் பகுதி
திரும்பிப்பார்க்கிறோம் - 22
இரா. கலைக்கோவன்

அன்புள்ள வாருணி, திரு. ஐராவதம் மகாதேவனுடன் ஏற்பட்ட அறிமுகம் குறித்து எழுதியிருந்தேன். இரண்டாம் முறை தினமணி அலுவலகம் சென்றபோது என்னுடைய 'பழுவூர்ப் புதையல்கள்' நூலுடன்தான் அவரைப் பார்த்தேன். சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தாரால் வெளியிடப்பட்ட அந்த நூல் 322 பக்கங்களுடன் அமைந்தது. அந்நூலின் முதல் இயலாக, 'புதிய பார்வையில் பழுவூர் உண்மைகள்' 94 பக்கங்களில் வளர்ந்தது. 'காற்றில் கரைந்து கொண்டிருக்கும் காவியக் கோயில்கள்' என்ற தலைப்பில் பகைவிடை ஈசுவரம், அவனிகந்தர்வ ஈசுவரகிருகம், திருவாலந்துறையார் திருக்கோயில், மறவனீசுவரம் பற்றிய தரவுகள் 133 பக்கங்களில் அமைந்தன. பழுவூர்க் கோயில்களில் கிடைத்த கல்வெட்டுகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்ட வரலாறு, 'கல்வெட்டுப் பார்வையில் பழுவூர்' என்ற தலைப்பில் 48 பக்கங்களை நிறைத்தது. பழுவூர் மரபுவழி எட்டுப் பக்கங்களில் அமைய, முடிவுரை 17 பக்கங்களை உள்வாங்கியது. நீ ஏற்கனவே படித்ததுதான் என்றாலும், முடிவுரையின் இறுதிப் பத்திகளை மீண்டும் ஒரு முறை உனக்கு நினைவூட்ட விழைகிறேன்.

'இப்புதிய தகவல்களும் முழுமையான சான்றுகள் கிடைக்காத நிலையில் கருதுகோள்களாக இந்நூலில் காட்டப்பட்டிருக்கும் செய்திகளும் பின்னால் வரும் ஆய்வாளர்களுக்குப் பழுவூரை இன்னும் சில புதிய பரிமாணங்களில் பார்க்கவும் அதன் வழிப் புதிய உண்மைகள் பலவற்றை வெளிப்படுத்தவும் மீட்டுருவாக்கம் செய்யவும் வாய்ப்பளிக்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. பழுவூர் தொட்டனைத்தூறும் மணற்கேணி. ஆர்வமும் ஈடுபாடும் ஆய்வு நோக்கும் கொண்ட அறிஞர்கள் தொடும் இடமெல்லாம் நன்னீர்ப் பெருக்கம்தான். அந்தப் புதிய ஊருணிகளைப் பெறும் பேற்றைத் தமிழகத்திற்கு நிறையவே வழங்குமாறு இளம் ஆய்வாளர்களையும் அறிஞர்களையும் வேண்டி விடைபெறுகிறேன்.'

இந்த என் வேண்டல், புலவர் அரங்கசாமியின் தவப்புதல்வி அர. அகிலாவின் நெஞ்சில் ஆழப் பதிந்தது போலும். அவருடைய முனைவர் ஆய்விற்குப் பழுவூர்க் கோயில்களையே தேர்ந்தார். நளினியும் நானும் அவருக்குத் துணையிருந்தோம். நாங்கள் தேடி முடித்த கோயில்களில்தான் அவருடைய ஆய்வு தொடங்கியது. என்றாலும், தம்முடைய தளராத உழைப்பு, முயற்சி, ஆர்வம், ஈடுபாடு, தன்னம்பிக்கை இவற்றின் காரணமாகப் பழுவூர்க் கோயில்களைப் பற்றிய மீளாய்விற்கு வழிகோலியதுடன், அவ்வளாகங்களின் புதிய பரிமாணங்களையும் அவர் வெளிப்படவைத்தார். அகிலாவின் ஆய்வு பழுவூரின் இன்னொரு முகத்தைக் காட்டவிருக்கிறது என்பதை அறியாத நிலையிலேயே என்னுடைய பழுவூர்ப் புதையல்களுடன் ஐராவதம் மகாதேவனைச் சந்தித்தேன். நட்புணர்வுடன் வரவேற்றவர் நூலை மகிழ்வுடன் பெற்றுக் கொண்டார். 'நாளையும் சென்னையில் இருப்பீர்களானால், வாருங்கள், நூலைப் பற்றிய என் கருத்தைத் தெரிவிக்கிறேன்' என்று விடைதந்தார். தேர்வெழுதிய மாணவனின் நிலை எனக்கு.

மறுநாள் அவரைச் சந்தித்தபோது உளம் குளிர வாழ்த்தி, அன்றைய இளைஞர்களுக்கு இருந்த ஆய்வு வாய்ப்புகள் குறித்துப் பேசினார். பிற ஆய்வாளர்களின் பிழையான முடிவுகள் குறித்து என் நூலில் தெளிவுபடுத்தியிருந்தமையைப் பாராட்டியவர், அவ்ஆய்வாளர்களை நான் கடிந்து கொண்டிருந்த முறையிலிருந்த வேகத்தைக் குறைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார். அந்த அறிவுரையின் போது, நான் சற்று நாணப்பட்டது உண்மைதான் என்றாலும், துறை சார்ந்த அறிஞர்கள் சிறிதும் பொறுப்புணர்ச்சி இல்லாமல், களஆய்வுகளே மேற்கொள்ளாமல், இரண்டாம் நிலைச் சான்றுகளின் அடிப்படையில் நூல்களை எழுதி வெளியிடுவதை என்னால் இன்றும்கூட பொறுத்துக்கொள்ள முடிவதில்லை. ஆய்வு முடிவுகளில் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், ஒரு கட்டுமானத்தை, சிற்பத்தைப் பார்த்து எழுதும் நிலையில்கூட வேறுபாடுகள் வருவது எங்ஙனம் கூடும்? ஒரே குடைவரையை இரண்டு இடங்களில் இருப்பது போல் எழுதியவர்களும் இருக்கிறார்கள்! ஒரே ஒரு கட்டுமானத்தைப் பற்றிய நூலில்கூட கணக்கற்ற பிழைகளைச் செய்தவர்களும் இருக்கிறார்கள்!

வரலாற்றைத் தொகுக்கும் பணி எல்லோரும் நினைத்திருப்பது போல் எளிமையானது அன்று. பெரும் பொருட்செலவை ஏற்படுத்தி, உடல் உழைப்பை வாங்கி, அறிவைப் பிழியச் செய்து பதிவாகும் அந்தப் பணியை ஒரு தவமாகக் கருதிச் செய்யவேண்டும். பொய்களை ஊர்வலப்படுத்துவதும், அவரவர் இனம், மதம், குழு, மொழிச் சார்புகளுக்கேற்ப கருத்துக்களைத் தேடி முதன்மைப்படுத்துவதும் வரலாற்றுலகில் இன்றுவரை நிகழ்ந்துவரும் சாபக்கேடுகளாகும். இவற்றை எதிர்ப்பாரும் இல்லை. தவிர்ப்பாரும் இல்லை. வாழ்க தமிழ்நாடு!

பழுவூர்ப் புதையல்களின் கருத்துக் கணிப்பிற்குப் பிறகு திரு. மகாதேவனை அதே அறையில் இரண்டு முறை சந்தித்திருக்கிறேன். இரண்டு சந்திப்புகளின் போதும் அன்புடன் உரையாடினார். அவருடைய தமிழ்மணி, அறிவியல் சுடர் இரண்டு பதிப்புகளும் தமிழ்மொழி வளர்ச்சியின் மீது அவருக்கிருந்த நாட்டத்தையும் அது பற்றிய அவருடைய கனவுகளையும் வெளிப்படுத்துவனவாக அமைந்தன. 'சுடர்' முயற்சி பற்றியும் அந்த இணைப்பு அறிவியல் தமிழுக்கு ஆற்றிய அருந்தொண்டு பற்றியும் தனியொரு நூலே எழுதலாம். அறிவியல் சுடரின் பல பகுதிகளிலும் பங்கேற்றமையால் மருத்துவக் கட்டுரைகள் பல எழுதும் வாய்ப்பமைந்தது. வரலாற்றில் மூழ்கியிருந்த எனக்கு மருத்துவத் தமிழ் இளைப்பாறக் கிடைத்த குளிர்தருவானது.

தமிழில் வெளியாகியிருந்த மருத்துவ நூலொன்றைப் படித்து மதிப்புரை எழுதுமாறு கேட்டுத் திரு. மகாதேவனிடமிருந்து கடிதம் வந்தது. நூலை ஆழப் படித்து மிகுந்த கவனத்துடன் மதிப்புரை எழுதியிருந்தேன். அந்த நூலின் பெரும்பாலான கட்டுரைகளை மருத்துவர்கள் எழுதவில்லை. எழுத்தாளர் ஒருவர் மருத்துவர்களிடம் கலந்துரையாடிப் பெற்ற தரவுகளின் தொகுப்புகளாகவே அவை அமைந்திருந்தன. எழுத்தாளர் மருத்துவ அறிவு இல்லாதவர் என்பதாலும் தமிழில் அவருக்கு ஆழ்ந்த பயிற்சி இல்லை என்பதாலும் நூல் 'சிறந்த' நூலாக அமையவில்லை. நூலில் இருந்த பிழைகளையெல்லாம் சுட்டிக்காட்டி மதிப்புரை எழுதியிருந்தேன். மருத்துவ நூல்களில் கருத்துப் பிழைகள் இருக்கவே கூடாது. ஆனால், அந்நூலில் இருந்தன. இரத்த அழுத்தம் பற்றிய அடிப்படைத் தகவல்கள்கூடப் பிழையாக இருந்தன. அவற்றையெல்லாம் சுட்டி எழுதப்பட்டிருந்த என் மதிப்புரையை நூலாசிரியர் விரும்பவில்லை. 'மருத்துவ நூலை மொழித் தராசில் நிறுப்பதா?' என்று ஒரு மறுப்புரை எழுதித் தினமணிக்கு அனுப்ப, ஆசிரியரும் அதை வெளியிட்டிருந்தார்.

அந்த மறுப்புரை ஏற்கமுடியாத ஓர் உரையாக, மறுக்கப்படவேண்டிய ஓர் உரையாக அமைந்தது. அதனால், அதில் எழுதப்பட்டிருந்த தவறான பார்வைகளைச் சுட்டிக்காட்டி மதிப்புரையாளன் என்ற முறையில் ஒரு மறுமொழி அனுப்பியிருந்தேன். தினமணி அதை வெளியிடவில்லை. பிறகொரு முறை மகாதேவனைச் சந்தித்தபோது அதுபற்றிக் குறிப்பிட்டேன். 'பதிலுக்கு பதில் என்று தொடர்ந்து ஒரே பொருள் பற்றி வெளியிடும் வாய்ப்பு நாளிதழில் குறைவு' என்று குறிப்பிட்டவர், என் மறுமொழி வெளியிடப்படாமையைப் பெரிதாகக் கருதவேண்டாம் என்றும், தொடர்ந்து தினமணிக்கு எழுதுமாறும் கேட்டுக்கொண்டார். இருந்தாலும், என் மனம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. என்னைப் பொருத்தமட்டில் அது சரியான அணுகுமுறை என்று நான் கருதவில்லை. மதிப்புரை எழுதிய எனக்கு, அந்த மதிப்புரை குறித்த தவறான கருத்துக்களுக்கு மறுமொழி தரும் உரிமையும் உண்டு என்பதே என் நிலைப்பாடாக இருந்தது. இருந்தாலும், அன்புடைப் பெருந்தகையான திரு. மகாதேவனை மறுக்க மனமின்றி வந்தேன். ஆனால், அன்றோடு தினமணிக்கு மதிப்புரை எழுதும் பணியை நிறுத்திக்கொண்டேன்.

தினமணி படிப்பவர்களின் கருத்தறிந்து அதற்கேற்ப நாளிதழில் பல பயனுள்ள மாற்றங்களைச் செய்யலாம் என்ற எண்ணத்தோடு திரு.மகாதேவன் மேற்கொண்ட முயற்சிகளில் ஒன்றாக 'வாசகர் நேர்முகம்' அமைந்தது. எங்கள் ஆய்வு மையத்தில் நடைபெற்ற பட்டயக் கல்வி மாணவர்களுக்கு பிராமி கல்வெட்டுகள் பற்றி உரை நிகழ்த்த அவரை அழைத்தபோது, தினமணி படிப்பாருடன் கலந்துரையாடவும் அவர் விழைந்தார். மாலை 4. 30 - 6. 00 தினமணி பற்றிய கலந்துரையாடலும் 6. 30 - 8. 00 பிராமி உரையும் நிகழ்ந்தன. தினமணி பற்றிக் கலந்துரையாடச் சிராப்பள்ளியின் தேர்ந்த படிப்பாளிகளை அழைத்திருந்தேன். அவர்கள் திரு. மகாதேவனுடன் நிகழ்த்திய பயனுள்ள உரையாடல் அவரை மிகவும் கவர்ந்தது. தினமணியின் புதிய போக்குகளை அவை நெஞ்சாரப் பாராட்டியது. தமிழ்க் கல்வெட்டுகளைப் பற்றிய கேள்விகள் வந்தபோது, 'பிராமி பற்றி மட்டும் என்னிடம் கேளுங்கள். தமிழ்க் கல்வெட்டுகள் பற்றிப் பேச என்னினும் கலைக்கோவன் தகுதியானவர்' என்று அவர் பதிலிறுத்தபோது, நான் திகைத்துப் போனேன். எந்தக் கல்வெட்டுகள் பற்றிய எத்தகு கேள்விகளுக்கும் விரிவாகவும் தெளிவாகவும் மறுமொழி அளிக்கவல்ல அனுபவமுடைய அவர் என்னைச் சுட்டி அவ்வாறு பேசியது அவரது பெருந்தன்மையையும் இளையோரை உற்சாகப்படுத்தி உயர வைக்கும் பண்பையுமே காட்டின. இந்நிகழ்வால் அவர் மீது நான் கொண்டிருந்த மதிப்புப் பன்மடங்காக உயர்ந்தது. திறமைகளை மதிக்கத் தெரியாத ஆய்வுலகில், திறனுள்ளாரை உற்சாகப்படுத்தி வழிநடத்தும் அவருடைய போக்கு மாறுபட்டதாக மிளிர்ந்தது.

திரு.மகாதேவனுடன் எனக்கு ஏற்பட்ட நெருக்கம் மிக இயல்பானது. அந்த நெருக்கத்தால் 'வரலாறு' இதழ் பயனடைந்தது. அவருடைய தமிழ்க் கட்டுரைகள் சிலவற்றை வரலாற்றில் பதிப்பிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. 'வரலாறு' ஆய்விதழின் புரவலர்களுள் அவரும் ஒருவர். 'வரலாறு' இதழின் கட்டுரைகள் அனைத்தையும் படித்துக் கருத்துரைப்பார். பிழைகள், குறைகள் தென்பட்டால் சுட்டிக்காட்டத் தயங்கமாட்டார். இந்தியாவில் வெளிவரும் வரலாறு சார்ந்த ஆய்விதழ்களில் வரலாறு மிக உயரியது என்று போற்றுவார். வரலாறு இதழ் பொருளாதார நெருக்கடிகளில் சிக்கியிருந்த காலத்தில் இதழை நிறுத்திவிடலாமா என்றுகூட நான் பலமுறை நினைத்ததுண்டு. அப்போதெல்லாம் தங்கள் தளராப் பொருளுதவியால் அந்த ஆய்விதழின் மூச்சு நின்றுவிடாதபடி காப்பாற்றியவர்கள் பேராசிரியர்கள் கோ. வேணிதேவியும் மு. நளினியும்தான். திரு. மகாதேவன் இதழின் பொருளாதார நெருக்கடிகள் அறிந்தவர் போல் உதவ முன்வந்தார்.

இந்திய வரலாற்று ஆய்வுக்கழகம் அப்போது கேரள வரலாற்றறிஞர் திரு. எம். ஜே. எஸ். நாராயணனின் ஆளுகையில் இருந்தது. அவர் திரு. மகாதேவனின் நண்பர். வரலாறு இதழ் தொடங்கியபோதே இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்திற்கு நல்கை கேட்டு விண்ணப்பித்திருந்தோம். அது கிடைக்கமுடியாதபடி செய்யச் சிலர் ஆர்வத்துடன் முயன்று வெற்றி பெற்றனர். திரு. மு. து. சம்பத் எங்களுக்காக முயன்றும் நல்கை கிடைக்கவில்லை. தமிழ்நாடு அரசிடமும் உதவி கேட்டிருந்தோம். அரசியல் செல்வாக்கு வழி உதவி பெற விரும்பாமல் நேரிய வழிகளில் முயற்சி செய்தமையால் அரசு உதவி கிடைக்க வழியில்லாது போயிற்று. அறநிலையத்துறை அமைச்சராக இருந்த தமிழ்க்குடிமகன் எப்படியேனும் அரசின் நிதி உதவியைப் பெற்றுத் தருவதாகக் கூறியும் அது இறுதிவரை நிறைவேறவில்லை.

திரு.மகாதேவன் திரு. எம். ஜே. எஸ். நாராயணனிடம் எங்கள் ஆய்விதழ் பற்றிப் பேசினார். ஆய்விதழின் ஆய்வு நேர்மை, தரவுகளிலுள்ள உண்மைத்தன்மை இவை குறித்து விரிவாகவே பேசினார். அவருடைய இந்த அறிமுகம் எங்களுக்கு உதவியது. அவர் கேட்டுக் கொண்டவாறே நாங்கள் இந்திய வரலாற்று ஆய்வுக்கழகத்திடம் நிதியுதவி கேட்டு விண்ணப்பித்தோம். திரு. எம்..ஜே.எஸ். நாராயணன் வரலாற்றுக் கழக விழாவொன்றில் கலந்துகொள்வதற்காகச் சிராப்பள்ளி வந்திருந்தார். அப்போது அவர் தங்கியிருந்த விடுதிக்கே சென்று அவரைச் சந்தித்துக் கலந்துரையாடினோம். அவர் எங்களைப் புரிந்துகொண்டதற்கு அடையாளமாக ஒரு மாதத்தில் இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்திலிருந்து மறுமொழி வந்தது. திரு. மகாதேவனின் தொடர்ந்த முயற்சியினால் வரலாறு 11ம் தொகுதிக்கு ரூபாய் இருபதாயிரம் நிதி உதவி கிடைத்தது.

எட்டாம் தொகுதிக்குப் பிறகு பெரும் போராட்டத்திற்கு இடையில்தான் இரண்டு தொகுதிகளை ஒன்றிணைத்து வரலாறு 9-10 தொகுதியை வெளியிட்டோம். அடுத்த தொகுதியை எப்படி வெளியிடுவது என்ற சிந்தனையில் இருந்த நிலையில்தான் இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்தின் உதவி கிடைத்தது. வரலாறு பதினோராம் தொகுதியை உரிய காலத்தில் வெளியிட முடிந்தது. ஆய்வுகளுக்கே பெரும்பொருள் தேவைப்பட்டதால் என் வருமானத்தின் பெரும்பகுதி ஆய்வுகளுக்கே சென்றது. வாழ்வரசியின் ஊதியம்தான் குடும்பத்தை நடத்த உதவியது. அதற்காகவே கண் மருத்துவம் பயின்று அவரும் கண்மருத்துவரானார். சிறுசிறு காரணங்களுக்காகவெல்லாம் கணவனும் மனைவியும் பிரிந்துவிடக் காணும் இன்றைய சூழலில் என் வாழ்வரசியை நினைக்கப் பெருமையாக இருக்கிறது. ஆய்வுச் செலவுகளைக் குறைத்துக் கொள்ளுமாறு ஒருநாளும் அவர் சொன்னதில்லை. 'உங்களுக்கு மகிழ்வளிப்பதுடன் தலைமுறைகளுக்கும் பயன்தரும் செயலைச் செய்கிறீர்கள். உங்கள் உள்ளம் விழையுமாறு செய்யுங்கள்' என்று என் பின்னிருந்து ஊக்குவித்த அவருடைய புன்முறுவல் பூத்த முகம்தான் இந்தத் துறையில் என்னை இன்றளவும் இருக்கவைத்துள்ளது.

வரலாறு 12-13ம் தொகுதிகளை ஒன்றிணைத்து ஒரே தொகுதியாக வெளியிட்டோம். அதற்கும் இருபதாயிரம் ரூபாய் உதவி கிடைத்தது. 14-15ம் தொகுதிகளையும் அது போலவே இருபதாயிரம் ரூபாய் நிதி உதவியுடன் ஒருங்கிணைத்து ஒரே தொகுதியாக வெளியிட்டோம். 16ம் தொகுதிக்குப் பணம் வரவில்லை. உறுப்பினர்கள் மாற்றம், எம். ஜே. எஸ். நாராயணனின் பொறுப்பு விலகல் இவை காரணமாயின. மடல்கள் பல எழுதிய பிறகு 16ம் தொகுதிக்குப் பத்தாயிரம்தான் வந்தது. 17ம் தொகுதிக்கும் அதே நிலைதான். ஒவ்வொரு தொகுதியையும் வெளியிட எங்களுக்கு ஆகும் செலவில் அது மூன்றில் ஒரு பங்காகவே இருந்து வருகிறது. என்றாலும், திரு. மகாதேவன் முயற்சி எடுக்காமல் இருந்திருந்தால், இந்த உதவிகூட கிடைத்திருக்க வாய்ப்பில்லை.

நேர்மையான மதிப்புரைகள், வரலாறு சார்ந்த படைப்புகளில் யார் குறையாயினும் சுட்டிக் காட்டல், குழுச் சேராமை, அரசியல் சார்பின்மை இவையே எங்களுக்குப் பகையாயின. பொய்களைப் பூத்தூவி வரவேற்று மகிழும் கூட்டம் கசப்பான உண்மைகளை முன்வைக்கும் எங்களை எப்படி விரும்பும்? இவற்றையெல்லாம் தாண்டியே வரலாறு தொடர்ந்து வெளிவருகிறது. மகாதேவனின் கட்டுரைகளால் வரலாறு இதழை விரும்பாதவர்கள்கூட வேறுவழியின்றி வரலாறு இதழின் பெயரைத் துணை நூற்பட்டியல்களில் சேர்க்கும்படி ஆயிற்று. அந்த வகையிலும் திரு. மகாதேவன் வரலாறு இதழிற்கு உதவியிருக்கிறார்.

'Early Tamil Epigraphy' நூலிற்காக மகாதேவன் பணியாற்றிய காலம் பெருமைக்குரியது. அக்காலகட்டத்தில் அவர் தொடர்ந்து என்னுடன் தொடர்பிலிருந்தார். தம்முடைய பணி, பதிப்பு நோக்கு, பதிப்பு முறை இவையனைத்தும் குறித்து அடிக்கடி விவாதிப்பார். தம் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வார். பெரிய முயற்சிகளை மேற்கொள்ளும் சிறிய குழந்தையைப் போல அவர் உரைகள் உள்ளக் கிளர்ச்சியுடன் இருக்கும். அவருடைய உறுதியான உழைப்பையும் முறையான திட்டமிடலையும் நன்கறிந்திருந்த என்னால், அந்தக் குழந்தைத்தனத்தின் பின்நின்ற மகத்தான மனிதரை அடையாளம் காணமுடிந்தது.

அவருடைய 'Early Tamil Epigraphy' நூலில் வெளியிடுவதற்காக மலைக்கோட்டையின் இயற்கையான குகைத்தளம் தெரியுமாறு ஒரு படம் எடுத்தனுப்புமாறு கேட்டிருந்தார். நானும் ஆண்டார் தெரு வீடுகளை அணுகி மாடிகளை அடைந்து, எந்த மாடியிலிருந்து அந்தக் குகைத்தளம் நன்கு புலப்படுகிறது என்பதை ஆராய்ந்து பல படங்கள் எடுத்துச் சிறந்ததை அவருக்கு அனுப்பியிருந்தேன். அந்தப் படத்தை நூலில் வெளியிட்டிருக்கிறார். படத்தை எடுத்துத் தந்த என் பெயரையும் டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் பெயரையும் நூலில் இடம்பெறச் செய்திருக்கிறார். படமெடுத்து அனுப்பியபோது இப்படியெல்லாம் அவர் செய்யப்போகிறார் என்று நினைக்கவில்லை. நூல் வெளியீட்டு விழாவன்று அவர் தந்த புத்தகத்தைப் புரட்டியபோதுதான் என் பெயர் கண்டேன். கண்கள் பனித்தன. எத்தனை அன்புள்ளம் இந்த மனிதருக்கு என்று வியந்தேன். மலையளவு உதவி செய்தவர்களையே மறந்துவிடும் இன்றைய ஆய்வுலகச் சூழலில் ஒரு படம் அனுப்பியதற்காகப் பெயர் பொறித்த இந்த மனிதரை எப்படிப் பாராட்டுவது!

சிராப்பள்ளியில் வாழ்ந்து மறைந்த தொல்லியல் அறிஞர் கூ. ரா. சீனிவாசனின் பெயரில் ஓர் அறக்கட்டளை நிறுவ விழைந்த அவருடைய உள்ளம், அதை நிறைவேற்றும் பொறுப்பை எங்கள் ஆய்வு மையத்திடம் வழங்கியது. ரூபாய் பதினைந்தாயிரம் தந்து அறக்கட்டளையைத் தொடங்கினார். தொகையை வைப்பு நிதியில் முதலீடு செய்து பொலியும் வட்டி கொண்டு ஆண்டுக்கோர் அறிஞரைப் பொழிவாற்ற அழைக்குமாறு அறிவுறுத்தினார். அது போலவே செய்தோம். சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி வரலாற்றுத்துறையுடன் இணைந்து எங்கள் ஆய்வு மையம் நிகழ்த்திய முதல் நிகழ்ச்சிக்கு அவரே வந்து தலைமையேற்றார். சிற்ப மேதை வை. கணபதி பொழிவாற்றினார். 'விமானம்' என்ற தலைப்பில் விமானத்தைத் தவிர மற்றனவெல்லாம் பேசிய அவருடைய பொழிவை வரலாறு இதழில் வெளியிடக்கூடவில்லை.

இரண்டாம் நிகழ்ச்சி திரு. மஜீதின் பொழிவாக அமைந்தது. அப்போது அவர் தமிழ்நாடு தொல்லியல் துறையின் இயக்குநராக இருந்தார். அழகன்குளம் அகழாய்வை அவரே முன்னின்று நடத்தியிருந்தபோதும், மேலிடம் நூல் வெளியீட்டில் அவர் பெயரை முன்னிலைப்படுத்தவில்லை. இயக்குநராவதற்கு முன்பே நிகழ்ந்த இத்தகு நிகழ்வுகள் பற்றி என்னிடம் அவர் பகிர்ந்துகொண்டிருந்தார். அந்த நல்ல மனிதரின் உழைப்பை வெளிப்படுத்தக் கருதியே அழகன்குளம் பற்றி அவரை உரை நிகழ்த்தக் கேட்டிருந்தேன். அவருடைய அருமையான பொழிவால் சிராப்பள்ளி அறிஞர்கள் பயன்பெற்றனர்.

மூன்றாம் நிகழ்ச்சி பேரா. எ. சுப்பராயலுவின் உரையாகத் திகழ்ந்தது. வரலாற்றுலகில் அதிகம் அறியப்படாதிருக்கும் 'வீரக்கொடியார்' பற்றிப் பேசினார். அருமையான உரையாக அமைந்தது. துணைவியாரோடு வந்திருந்த அவரை வீட்டில் உணவருந்தச் செய்து பேருந்துநிலையம் அழைத்துச்சென்று வழியனுப்பி வைத்தேன். வரலாறு இதழில் வெளியான அவருடைய ஒரே கட்டுரையாக இவ்வுரை அமைந்தது.

நான்காம் நிகழ்ச்சிக்கு மகாதேவன் வந்திருந்தார். அது அவருக்கு விருதளிக்கும் விழாவாக அமைந்தது. சிராப்பள்ளி பிஷப் ஈபர் கல்லூரியின் தமிழ்த்துறையுடன் டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம் இணைந்து நிகழ்த்திய இவ்விழாவில் அவருடைய 'Early Tamil Epigraphy' நூலைப் பாராட்டி ஆய்வு மையத்தின் சார்பில் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இந்திய தொல்லியல் அளவீட்டுத்துறையின் சென்னைப் பிரிவு கண்காணிப்பாளராக இருந்த திரு. தியாக சத்தியமூர்த்தி கேரளக் கட்டடக்கலை பற்றி உரை நிகழ்த்தினார். அந்த உரை வரலாறு 16ம் இதழில் பதிவாகியுள்ளது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டபோது மேலும் பத்தாயிரம் ரூபாய் கொடையளித்துத் தாம் தந்திருந்த தொகையை 25,000 ஆக உயர்த்தினார் திரு. மகாதேவன்.

சென்னையில் நிகழ்ந்த டாக்டர் மா. இராசமாணிக்கனார் நூற்றாண்டு விழாவில் பங்கேற்றபோது அதே தொகையை 40,000 ஆக உயர்த்தித் தந்தார். வட்டிவிகிதம் குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டும் பொழிவாற்றும் அறிஞர்கள் உரிய தொகை பெறவேண்டும் என்பதை நினைந்தும் அவர் செய்த இந்த உயர்வுகள் இருபதாம் நூற்றாண்டு தமிழ்நாட்டு அறக்கட்டளை வரலாற்றின் புதிய பதிவுகள்.

தமிழ்நாட்டு வரலாற்றிற்கு மகாதேவனின் 'Early Tamil Epigraphy' ஒரு மகத்தான கொடை. அதில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களில் அறிஞர்கள் வேறுபடலாம். ஆனால், அந்த அணுகுமுறை, உழைப்பு, புலப்படுத்தியிருக்கும் பாங்கு, தொகுப்பு நேர்த்தி இவற்றை யாரும் குறைத்து மதிப்பிட்டுவிடமுடியாது. அந்த நூல் வெளியாகிய நிலையில் இலங்கைத் தமிழறிஞர் பேராசிரியர் கா.சிவத்தம்பி உட்படப் பலர் சங்க காலம் பற்றிய தங்கள் காலக் கண்ணோட்டங்களை மாற்றி அமைத்துக் கொண்ட வகைமையைக் காணமுடிந்தது. எந்தத் தமிழறிஞரும் அவருடைய காலக் கணிப்புகளைச் சரியான சான்றுகளின் அடிப்படையில் இன்றுவரை மறுக்க முன்வரவில்லை என்பதே அவருடைய உழைப்பின் திண்மையையும் அதில் படர்ந்திருக்கும் அறிவியல் அணுகுமுறையையும் உணர்த்தப் போதுமானதாகும்.

இவ்வளவு உயர்ந்த நூலை ஒரு கருவூலமாகப் படைத்துத் தந்திருக்கும் அந்த அறிஞருக்கு மதிப்புமிகு முனைவர் பட்டம் அளித்துச் சிறப்பிக்கத் தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களுக்கு மனமில்லை. தலைமை சான்ற தமிழ் அமைப்புகளோ, தொல்லியல் நிறுவனங்களோ அந்த மனிதரின் பணிகளைப் பாராட்டிச் சிறப்பு நூல் கொணரக் கருதவில்லை. அவருடைய நூல் வெளியீட்டு விழாவிலேயே இந்த வேண்டுகோளை நான் முன்வைத்தேன். 'பணிப் பாராட்டு நூல்' அவரைச் சிறப்பிக்கும் எனக் கருதியே அந்த வேண்டுகோளை வைத்தேன். யார் யாருக்கோ பணிப் பாராட்டு நூல் கொணரும் தமிழ்நாட்டு நிறுவனங்களுக்கு அந்த மனிதரின் உழைப்பும் அர்ப்பணிப்பும் விளங்கவில்லை. தமிழ்நாடு அரசுகூட அவரைச் சிறப்பிக்கக் கருதவில்லை. இந்த துன்பமான சூழலில்தான் சில நிறுவனங்களிடம் நேரிடையாகப் பேசித் தோல்வி கண்ட நிலையில் என் ஆர்வத்தை வரலாறு டாட் காம் ஆசிரியர் குழுவினர் உள்வாங்கிக் கொண்டனர்.

அந்த இளைஞர் குழுவிற்கு, 'பிராமி' தெரியாது. வரலாற்றை நேசிக்கும் அந்தக் கணினி இளைஞர்களுக்குத் தொல்லியல் புதியபாதை. திரு. மகாதேவனை அவர்களுக்கு அறிமுகப்படுத்தினேன். அவர் உழைப்பையும் மதிப்பையும் அவர்கள் விளங்கிக் கொண்டனர். இதோ, 'ஐராவதி' உருவாகி ஆகஸ்டு 16ம் நாள் வெளியிடப்படவிருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டுமன்று, உலக அளவில்கூட ஓர் அறிஞருக்கு இளைஞர்கள் கூடி இப்படியொரு மரியாதை செய்ததில்லை. அடுத்த தலைமுறையின் பாராட்டை வாழும் போதே ஏற்கும் பெருமையும் வேறு எந்த வரலாற்று அறிஞருக்கும் வாய்த்ததில்லை. முற்றிலும் துறை சாராத சிலர் சேர்ந்து இப்படி ஒரு பணிப் பாராட்டு நூல் கொணர்ந்ததாக வரலாறே இல்லை. இந்தப் பெருமைகளெல்லாம் விழா நாயகருக்கு அமையவேண்டும் என்று கருதித்தானோ என்னவோ தமிழ்நாட்டு நிறுவனங்கள் அவரைப் புறந்தள்ளி வைத்தன. பூனைகள் கண்களை மூடிக்கொண்டால் உலகம் இருண்டா போகிறது!

வாருணி, இது மகாதேவன் சிறப்பிதழ் அதனால்தான் 1988ல் இருந்து, 'அனுமார் தாவலில்' இந்தத் திரும்பிப்பார்த்தல் நிகழ்ந்துள்ளது. இதில் மகாதேவன் தொடர்புடைய நிகழ்வுகளுக்கே முதன்மை தந்து எழுதியுள்ளேன். அடுத்த முறை தொடரான பார்வை முறையாக உன்னைச் சேரும். முடிக்கும் முன், உலகத்தின் எந்த முதலமைச்சரும் செய்யாத அரும்பணியாய்த் தம் கையிருப்பிலிருந்து ஒரு கோடி ரூபாயைக் கல்வெட்டு ஆய்வு செய்யும் அறிஞர்களைச் சிறப்பிக்கும் நோக்குடன் செம்மொழி இயக்குநரிடம் வைப்பு நிதியாக வழங்கியிருக்கும் தமிழ்நாடு அரசின் மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர் பெருந்தகைக்கு ஒரு வேண்டுகோள். உங்கள் விருதைப் பெறும் முதல் கல்வெட்டறிஞராகத் திரு. மகாதேவனைக் கொள்ளுங்கள். இந்த விருதால் தமிழ்நாடு பெருமைப்படும்.

அன்புடன்,
இரா. கலைக்கோவன்
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.