http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[179 Issues]
[1771 Articles]
Home About US Temples Facebook
Issue No. 55

இதழ் 55
[ ஜனவரி 24 - ஃபிப்ரவரி 15, 2009 ]


இந்த இதழில்..
In this Issue..

வரன்முறை தேடும் வரலாற்று ஆய்வுகள்
மணியான மணி
திரும்பிப்பார்க்கிறோம் - 27
கழுகுமலை பயணக் கடிதம் - 1
கங்கையின் மறுவீட்டில் - ஒரு நாட்குறிப்பு
தனித்தமிழ்க் கலைச்சொற்கள் - 2
Silpi's Corner-07
Thirumeyyam- 2
மாறியது உள்ளம் மலர்ந்தது மன்றல்
மூலபுராணங்களில் முடியுடை மூவேந்தர்கள்
கோட்டகாரம்
இதழ் எண். 55 > கலைக்கோவன் பக்கம்
திரும்பிப்பார்க்கிறோம் - 27
இரா. கலைக்கோவன்
அன்புள்ள வாருணி, எண்பதிற்கும் எண்பத்தொன்றிற்கும் இடைப்பட்ட காலத்தில் கோயிற்கலை ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தாற் போலவே, மேடைப்பொழிவுகளிலும் கவனம் செலுத்திவந்தேன். அதனால், யார் அழைத்தாலும், அவர்கள் போக்குவரத்துச் செலவுகளுக்குரிய பொருள் தராத போதும், கூட்டங்களுக்குச் சென்றேன். இதனால் எனக்குப் பொருளாதார இழப்பு ஏற்பட்டாலும், பல ஊர்களில் மருத்துவம், இலக்கியம், வரலாறு, சமூக விழிப்புணர்வு சார்ந்து உரை நிகழ்த்தவும் ஆங்காங்கே இவற்றில் ஆர்வமுடைய பலரை அடையாளம் காணவும் முடிந்தது. அப்படி எனக்கு அறிமுகமானவர்களுள் ஒருவர் திருவையாற்றில் வழக்குரைஞராக இருந்தார். ‘அப்பர் அப்பூதியடிகள் சபை’ என்ற பெயரில் ஓர் இலக்கிய மன்றத்தை நடத்தி வந்த அவருடைய தொடர்பே திருவையாற்றுக் கோயிலைப் பலமுறை பார்க்கும் வாய்ப்பை எனக்கு ஏற்படுத்தித் தந்தது.

அவருடைய அவையில் பேசுவதற்காகவே அப்பருடைய திருமுறைகளுக்குள் சற்று ஆழ, அகலத் தேட நேர்ந்தது. அந்தத் தேடல்களில் கிடைத்த புதையல்களுடன்தான் ஐயாற்றுக் கோயிலில் என் முதல் பொழிவு நிகழ்ந்தது. அன்று வழக்குரைஞர் நடராசன்தான் வரவேற்புரை. அவர் வழக்குரைஞராக இருந்தமையால், நீதிமன்ற நடுவர் ஒருவரைத் தலைமைப் பொறுப்புக்கு எளிதாக ஏற்பாடு செய்திருந்தார். அந்த நடுவர் அதற்கு முன் என்னைப் பார்த்தறியாதவர். திரு. நடராஜன், அவருக்கு என்னைப் பற்றிக் கூறியிருக்க வேண்டும். அதிகமாகப் போனால், செய்தியிதழ்கள், வானொலி வழி என்னைப் படித்தும் கேட்டும் இருக்கலாம். கூட்டம் நிகழ்வதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்தான் வந்தார். வரவேற்புரையில் நடராஜன் என்னைப் பற்றிக் கூறியதையெல்லாம் கேட்டவர், என் பக்கம் திரும்பி, உங்களை இத்தனை நாள் சந்திக்காமல் இருந்துவிட்டேனே என்று வருந்தி அன்புடன் உரையாடினார்.

தலைமையுரை வந்தபோது, நடராஜன் தந்த தரவுகளையெல்லாம் ஒருங்கிணைத்துப் பேசியதுடன் என்னை அவருடைய நெருங்கிய நண்பரென்று கூட்டதாருக்குத் தெரிவித்தார். இவர் பெயருக்குத்தான் கண் மருத்துவர். ஆனால், எப்போதும் கோயில்களில்தான் இருப்பார். சென்ற வாரம் நடராஜன் என்னைக் கண் சோதனைக்காகச் சிராப்பள்ளி அழைத்துச் சென்றார். மருத்துவமனையில் இவர் இல்லை. கேட்டால், ‘கோயிலுக்கு ஆராய்ச்சி செய்யப் போயிருக்கிறார். நாளைக்கு வந்தால் இருப்பார்’ என்று சொல்லிவிட்டார்கள். அப்படிக் கோயில்களிலேயே வாழும் அதிசய மருத்துவர். அவருக்கு ஆய்வுதான் வாழ்க்கை என்றெல்லாம் என்னை உயர்த்திப் பேசுவதாகக் கருதிக்கொண்டு தவறான தகவல்களைத் தந்து கொண்டிருந்தார். எனக்குத் தாங்கவில்லை. அளவற்ற புகழுரையும் அவசியமற்ற பொய்யுரைகளும் எனக்குப் பிடிப்பதே இல்லை. என் முறை வருவதற்குள் அவர் விடைபெற்றுச் சென்றுவிட்டார். நான் பேச எழுந்தபோது சற்றுத் தயக்கமாக இருந்தது. அவர் உள்ளூர்க்காரர் என்பதாலும் நடுவராக இருப்பவர் என்பதாலும் உண்மையைச் சொல்வதா, வேண்டாமா என்று ஒரு சிறு தடுமாற்றம். எல்லாம் சில விநாடிகள்தான்.

‘என்னைப் பெருமைப்படுத்தும் நோக்கில் நடுவரவர்கள் சொல்லியவை அனைத்தையும் அன்புகூர்ந்து மறந்துவிடுங்கள். கோடாமை ஒருவர்க்கு அவைதான். என்றாலும், நம் நடுவர் வரலாற்றின் மீதுள்ள காதலால் சற்றுச் சமன்பாடு இழந்துவிட்டார். இந்த மேடையில்தான் நாங்கள் முதன்முதலாகச் சந்திக்கிறோம். என்றாலும், எத்தனையோ காலம் பழகியவர் போல் அவர் பேசியது வரலாற்றின் மீதுள்ள ஆர்வத்தாலும் திரு. நடராஜன் மீதுள்ள அன்பாலும்தான். கோயிலாய்வுகளில் நான் முனைந்திருப்பதால், மருத்துவமனைக்கே செல்லமாட்டேன் என்பது பொருளன்று. எனக்கு மருத்துவம்தான் சோறு போடுகிறது. வலியோடும் கவலையோடும் வருபவர்களுக்கு அதை ஆற்றித்தரும் உயர்ந்த பணியை நான் செய்துவருகிறேன். கோயிலாய்வு எவ்வளவு உயர்ந்ததோ, அவ்வளவு உயர்ந்தது மருத்துவமும். இரண்டும் என் இரண்டு கண்கள். மருத்துவத்தை ஒதுக்கிவிட்டு வரலாற்றாய்வு செய்ய எனக்குப் பொருட்செல்வமில்லை. அதுமட்டுமன்று, எனக்கு அதில் ஈடுபாடுமில்லை. மருத்துவப் பணியில் கிடைக்கும் ஊதியத்தையே குடும்பத்திற்கும் ஆய்விற்குமெனச் சரியான அளவுகளில் கணக்கிட்டு, முறையாகத் திட்டமிட்டுச் செலவழித்திருக்கிறேன். அதனால், நண்பர்களே, நடுவரின் உரையில் மயங்கி, ‘இவன் மருத்துவமனைக்குச் சென்று பயனில்லை; இருக்கமாட்டான்; கோயில்களுக்குப் போய்விடுவான்’ என்று கருதி என்னைத் தள்ளிவைத்துவிடாதீர்கள். நீங்கள் வந்தால்தான் எனக்குச் சோறு. நான் நாட்கூலி. ஒருநாள் மருத்துவமனைக்குச் செல்லாவிட்டால்கூட எனக்குத் துன்பம்தான். இருந்தாலும், திட்டமிட்டு உழைப்பதால், என்னால் இரண்டு பணிகளையும் அதிக நட்டமின்றிச் செய்யமுடிகிறது என்று தொடங்கிப் பின்னரே அப்பருக்குள் நுழைந்தேன்.

திருவையாற்று நடுவரைப் போல் என்னைப் புகழ்வதாக நினைத்துக் கொண்டும் நன்மை செய்வதாகக் கருதிக்கொண்டும் பலர் என் தொழிலுக்குப் பெருந்தீங்கு இழைத்துள்ளனர். எத்தனை மேடைகளில்தான் தன்நிலை விளக்கம் தந்து கொண்டிருக்கமுடியும்? காலப்போக்கில் இந்தப் பொய்யுரைகள் எனக்குப் பழகிவிட்டன. இந்தப் பொய்யுரைகளையும் இதன் பின்னிருந்த மனிதர்களையும் என்ன செய்தாலும் மாற்ற முடியாது என்பதை இன்று உணர்ந்துள்ளேன். ‘தலைமை வகிப்பதற்காகவே இருப்பவர்கள் இவர்கள். மேடைக்கு வரும்வரை, எதற்காக அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பதைக்கூடச் சிந்திக்க விரும்பாத இந்த அவலங்கள்தான் தலைமை தாங்கவேண்டும் என்பது விதி. இந்தக் கூட்டத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டு அமைந்த தலைவர்களையும் என் உரைகளின்போது நான் சந்தித்திருக்கிறேன். அப்படி அமைந்த தலைவர்களுள் குறிப்பிடத்தக்கவர் அறிஞர் கூ. ரா. சீனிவாசன். அவருடைய தலைமையில் நானும், என்னுடைய தலைமையில் அவரும் நான்கு முறை உரையாற்றியுள்ளோம்.

கூ. ரா. சீனிவாசன் ஒரு மேதை. என்றாலும், எளிமையின் உறைவிடம். அவருடைய தலைமையில் என் பொழிவு அமைந்தபோது, தலைமையுரையாக, ‘கலைக்கோவன் என்ன சொல்லப்போகிறார் என்பது குறித்துக் கேட்க நானும் உங்களைப் போலவே ஆர்வத்துடன் உள்ளேன். என் வயதும் பணிக்காலமும் கருதியே எனக்குத் தலைமைப் பொறுப்புத் தந்துள்ளார்கள். ஆனால், இந்தத் தலைப்பைப் பொருத்தமட்டில் நான் ஏதும் அறியேன். கலைக்கோவன் சொல்லக் கேட்போம்’ என்று மிகச் சுருங்கிய தலைமையுரை தந்து என்னைப் பேச அழைத்தவர். ஆடற்கரணங்களைப் பற்றி ஒரு மணி நேரம் உரை நிகழ்த்தினேன். உரை முடிவில் என் உழைப்பையும் கருத்துக்களையும் போற்றியவர், பின்னுரையாகவும் ஓரிரு நிமிடங்களே உரையாற்றினார். பொதுவாகக் கூ. ரா. சீனிவாசன் நெடுநேரம் பேசக்கூடியவர். செய்திகளும் அநுபவங்களும் உள்ளடங்கிய ஆற்றலாளர் என்பதால் அவருக்கு எந்தத் துறையிலும் பேச தரவுகள் இருக்கும். அத்தகு அறிவுக்கடல் என் உரையின்போது சில சொல்லித் தலைமையுரை முடித்த பாங்கு, என்றென்றும் என் நினைவில் இருக்கும்.

திரு. கூ. ரா. சீனிவாசனுக்கும் எனக்கும் இடையில் மலர்ந்த உறவு உன்னதமானது. ஒரு சச்சரவுடன் தொடங்கிய உறவு அது. ஆனால், நாள் செல்லச்செல்ல, என் உழைப்பு விளங்க விளங்க அவருடைய அன்பு வளர்ந்தது. அவருடைய நூல்களைத் தந்ததுடன், அவருடைய உழைப்பின் ஓரங்கமான ‘களஞ்சியம்’ ஒன்றையும் தந்தார். அவருடைய ஆய்வுக்காலத் தொகுப்பு அது. அதை அவரால் நிறைவுசெய்ய முடியவில்லை என்பதால் என்னிடம் தந்து அதைத் தொடரச் சொல்லியிருந்தார். அதன் வழிதான் நாங்கள் பல கலைச் சொற்களைப் புரிந்து கொள்ளமுடிந்தது.

மூன்றாம் வகைத் தலைவர்களையும் நான் சந்தித்திருக்கிறேன். இவ்வகையினர் மிகுந்த முயற்சி உடையவர்கள். பொழிவாளருக்கு என்ன தலைப்பு தரப்பட்டிருக்கிறதோ, அந்தத் தலைப்புத் தொடர்பான நூல்களைத் திரட்டிப் படித்துக்கொள்வார்கள். தலைமையுரையின்போது, ஏதோ இவர்களுக்குத்தான் அந்தத் தலைப்புத் தரப்பட்டிருப்பது போல், ‘இப்படி இப்படியெல்லாம் பொழிவாளர் பேசப் போகிறார், இந்த இந்தக் கருத்துக்களையெல்லாம் அவர் சொல்வாரென எதிர்பார்க்கிறறேன்’ என்றெல்லாம், ஏறத்தாழ இவரே சொற்பொழிவாளராகித் தலைமையுரையைக் குறைந்தது முக்கால் மணி நேரம் நிகழ்த்திப் பொழிவாளரை ‘அந்தரத்தில்’ தொங்கவிடுவதை இவர்கள் ஒரு கலையாகவே நிகழ்த்துவது வழக்கம். திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கத்தின் அமைச்சராக இருந்த திரு. சா.பெரியசாமி பொழிவாளர்களை இப்படி அயர்த்துவதில் வல்லவர். தமிழ்ச்சங்கத்தில் மருத்துவச் சொற்பொழிவுகள் அமைந்தபோது, அநேகமாக அனைத்து மருத்துவர்களின் தலைப்புகளின் கீழும் அவரே பேசிவிடுவார். இதற்காகவே பொதுமக்களுக்கான ஆங்கில மருத்துவக் களஞ்சியம் ஒன்றை அவர் பெற்று வைத்திருந்தார்.

சேலத்தில் அகரம் இலக்கியமன்றம் நிகழ்த்திய உணவு வழக்காடு மன்றம் ஒன்றில் வழக்காடப் போயிருந்தபோது இப்படி ஒரு தலைவரைச் சந்தித்தேன். அவரும் ஒரு மருத்துவராக இருந்துவிட்டதால் அவரே இருபக்கமும் வழக்காடித் தீர்ப்பும் சொல்லித் தலைமையுரையை முடித்துவிட்டார். வழக்காடு மன்றம் நிகழ்த்தப் போயிருந்த நாங்கள் இந்த மனிதரின் செயலால், அவர் பேசப் பேச எங்கள் வழக்கைப் பலவாறு திசைதிருப்பிக் கொள்ள நேர்ந்தது. ஒரு முறை தமிழ்ச்சங்கக் கூட்டத்தில் இது போல நடந்தபோது, உரையாளனாக நான் இருந்தேன். தலைவர் பேசி முடிந்ததும் என் முறை வந்தது. நான் எழுந்து, ‘நான் பேச நினைத்ததை எல்லாம் தலைவர் பேசி உங்களை மகிழ்வித்திருக்கிறார். இனி உங்கள் கண்களில் ஏதாவது கோளாறு என்றால் தலைவரிடமே நீங்கள் சென்று சரி செய்து கொள்ளலாம். என்னிடமிருந்து ஏதாவது நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால், கேள்விகளாய்க் கேளுங்கள். உங்கள் ஐயங்களைத் தீர்த்துவைக்கிறேன்’ என்று கூறிவிட்டு அமர்ந்துவிட்டேன். என் உரையை எதிர்பார்த்து வந்திருந்தவர்களும் பதிவுசெய்ய வந்திருந்த வானொலி நிலையத்தாரும் கலங்கிப் போனார்கள். தலைவர் நிலை தர்மசங்கடமானது. வந்திருந்தோரில் சிலர் என்னை உரையாற்றுமாறு வேண்டினர். சிலர் வினாக்கள் தொடுக்க முனைந்தனர். பத்துநிமிடங்கள் அவை கலகலத்திருந்தது. இறுதியில் வினாக்களுக்கு விடையிறுக்கும் நிகழ்ச்சியாக அது மாறியது. தலைவரே பல ஐயங்களைக் கேட்டார். வாய்ப்பமைந்தபோதெல்லாம் அவரது தவறான போக்கை மிக நாகரிகமாகச் சுட்டிக்காட்டி, அவரது உரையில் நிகழ்ந்த உளறல்களையெல்லாம் ஒன்று விடாமல் கூறி, இது போன்ற அரைகுறை அறிவாளர்கள் எப்படித் தாங்களும் வழிதவறி, மற்றவர்களையும் தவறான பாதையில் செலுத்துகிறார்கள் என்பதை அநுபவச் சான்றுகள் சொல்லி உரையமைத்தேன். அந்தத் தலைவர் அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு மருத்துவச் சொற்பொழிவுகள் தமிழ்ச்சங்கத்தில் தொடராத அளவிற்குச் சூழல்களை உருவாக்கினார். நாங்கள் அவரைப் பற்றிக் கவலைப்படாமல் இடத்தை மாற்றிக் கொண்டோம்.

எந்த நிழ்ச்சிக்கும் தலைவர்களே தேவையில்லை. சொற்பொழிவாளர்கள் போதும்.. பொழிவாளரை அறிமுகம் செய்ய ஒருவர், பொழிவாளர் என அமைந்தால் நிகழ்வுகள் சுருக்கமாகவும் நேரத்தோடும் அமையும். வளவளவென்று வரவேற்பு சொல்லும் ஒருவர், ‘ரப்பராய்’ இழுக்கும் தலைமையுரைகள், இவை போதாவென்று அறிமுகம் செய்யத் தனி ஆட்கள், வாழ்த்தவென்று சிலர், ‘முன்னிலை’க்காகச் சிலர் என்று தமிழ்நாட்டு மேடைகள் வருவோரின் பொறுமையைச் சோதித்து கேட்கும் ஆர்வத்தையே அழித்துவிடுகின்றன.

அன்புடன்,

இரா. கலைக்கோவன் this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.