![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 57
![]() இதழ் 57 [ மார்ச் 24 - ஏப்ரல் 15, 2009 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
தரவுகள் பிரித்து எழுதிய கல்வெட்டுகளை வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறையாவது தஞ்சாவூர் சென்று கணினியில் பதிவு செய்ய வேண்டியிருந்தது. நான் அங்கு ஆய்வுக்குச் சென்றபோது கல்வெட்டியல் துறையில் ஒரே ஒரு கணினிதான் இருந்தது. மையத்தில் அப்போது கணினி இல்லை. அதனால், எப்படி என் பணியைச் செய்யப்போகிறேன் என்று நினைத்துக் கலங்கியபோது, பேராசிரியர் சுப்பராயலு தம் கணினியைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்தார். கணினிப் பதிவிற்காகவே பலமுறை தஞ்சாவூர் செல்லவேண்டியிருந்தது. அதனால் களப்பணிகள் தடைப்பட்டன. ஒவ்வொரு கோயிலுக்கும் நேரில் சென்று கல்வெட்டுகள் படிக்கவேண்டியிருந்ததால், காலம் அமைவது மிகவும் துன்பமாக இருந்தது. என் துன்பங்களை உணர்ந்தவர் போல் அவர், 'சிராப்பள்ளியிலேயே கணினிப் பதிவு செய்தால் வசதியாக இருக்குமா' என்று கேட்டதுடன், என் பதிலுக்குக் காத்திராமல் தம் நண்பர் ஒருவருக்குத் தொலைப்பேசி என் தேவைகளை விளக்கினார். தில்லைநகரில் இருந்த அந்த நண்பரின் அலுவலகத்திற்குச் சென்று அவரைச் சந்திக்குமாறு என்னை வழிப்படுத்தினார். அந்தச் சந்திப்பு தஞ்சாவூர்ச் செல்லும் துன்பத்தைத் தவிர்த்தது. ஒரு மாணவிதானே என்று கருதாமல் என் தேவைகளை உணர்ந்து நான் கேட்கும்வரை காத்திராமல் என் ஆய்வு செம்மைப்படவேண்டும் என்ற ஒரே நோக்கில் அவர் செய்து தந்த அந்த ஏற்பாடு எனக்குப் பெரும் பயனளித்தது. தம் மாணவர்களுக்கு இது போல் தேவை அறிந்து உதவுவதில் அவருக்கு இணையாக இன்னொருவரைக் கூறமுடியாது. பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை என் பதிவுகளைக் காட்டி, வழிகாட்டல் பெறத் தஞ்சாவூர் செல்வேன். பேராசிரியர் சுப்பராயலுவின் மனைவி மிகவும் அன்பானவர். எல்லோரிடமும் பிரியமுடன் பழகுவார். 'இவ்வளவு தூரம் பயணம் செய்து வருகிறீர்களே எதற்காகச் சாப்பாடு கொண்டு வருகிறீர்கள். இங்கேயே சாப்பிடலாம்' என்று அன்புடன் கூறுவார். மதியம் நான் சாப்பிடும் போது அவர் சமைத்தது ஏதாவது ஒன்றையாவது தந்து சாப்பிடச்சொல்வார். காலையிலும் மாலையிலும் கட்டாயம் தேநீர் கொடுப்பார். எவ்வளவு மறுத்தாலும் வற்புறுத்தித் தருவார். திருமதி சுப்பராயலுவிற்கு அவரின் பேச்சு மிகவும் பிடிக்கும். என்னிடம் பலமுறை அவருடைய பேச்சாற்றலைப் பற்றி மகிழ்ந்து கூறியிருக்கிறார். என்னுடைய ஆய்வு எல்லைக்கு உட்பட்ட பகுதியிலுள்ள கோயில்களில் இருந்து படியெடுக்கப்பட்டு, கல்வெட்டுத் தொகுதிகளில் வெளியாகியிருந்த கல்வெட்டுகளை ஆராய்ந்து தரவுகள் தொகுத்தேன். பிறகு, பாடம் பதிப்பிக்கப்படாமல் சுருக்கம் மட்டும் வெளியிடப்பட்டிருந்த கல்வெட்டுகளை அவ்வக் கோயில்களுக்குச் சென்று படிக்க ஆரம்பித்தேன். அவ்வாறு கோயில்களுக்குச் சென்ற காலங்களில், நான் தனியாகச் செல்வதினும் துணையுடன் செல்வது நல்லதென்று கருதிய அவர், அப்போது அவரிடம் முனைவர் ஆய்வு மேற்கொண்டிருந்த அர. அகிலாவை உடன் அழைத்துச் செல்லுமாறு கூறினார். 'அகிலாவிற்குக் கல்வெட்டுகளைப் படிக்கக் கற்றுக் கொடுங்கள். உங்களுக்குத் துணை கிடைத்தாற் போல் இருக்கும். அகிலாவுக்கும் இது நல்ல வாய்ப்பாக அமையும்' என்று அறிவுறுத்தினார். 'நீங்கள் எத்தனைக் கோயில்களுக்குப் போகவேண்டும் என்பதைக் குறித்துக் கொண்டு ஒவ்வொரு வாரமும் ஒரு கோயில் எனச் சென்றால்தான் அனைத்துக் கல்வெட்டுகளையும் படிக்கமுடியும்' என்று அவர் கூறியிருந்தவாறே நானும் அகிலாவும் ஓர் அட்டவணை தயாரித்தோம். அப்போதுதான் என் முன்னிருக்கும் பணியின் தன்மை புரிந்தது. முறையாகத் திட்டமிடுதல் ஓர் ஆய்வுக்கு எத்தனை இன்றியமையாதது என்பதை அந்த அட்டவணைத் தயாரிப்பிலேயே நான் புரிந்துகொண்டேன். திட்டமிடலைப் பற்றி ஒரு நாள் முழுவதும் அவர் பேசியிருந்தால்கூட இந்த அளவிற்கு எனக்குப் புரிந்திருக்காது. பல வழிகாட்டல்களைச் சொல்லாமலேயே உணரச் செய்வது அவருடைய தனிப்பாணி. இந்த அட்டவணைத் தயாரிப்பு அகிலாவிற்குப் பெரும் உற்சாகத்தைத் தந்தது. என்னைவிட இளையவர் என்றாலும் என் ஆய்விற்குத் துணை நிற்கிறோம் என்ற எண்ணமே அவருக்குப் பெரும் மகிழ்வை அளித்தது. 'நீங்கள் இருவரும் இணைந்து செய்யும் இந்தப் பணி தமிழ்நாட்டு வரலாற்றிற்குப் பல புதிய பக்கங்களை வழங்கப் போகிறது' என்று அவர் அகிலாவிடம் சொல்லியிருந்ததாக அறிந்தேன். அந்த உற்சாகச் சொற்கள் அகிலாவை முனைப்புடன் என் ஆய்விற்கு உதவவைத்தன. உண்மைகள்தான் என்றாலும், உரிய நேரத்தில் உரியவர்களிடம் உரியவற்றைச் சொல்வதிலும் உழைப்பவர் அதன் வழி நிறைந்த பலன்களைக் காணச் செய்வதிலும் அவருக்கு இணை அவர்தான். இந்த வாரம் இந்தக் கோயிலுக்குப் போகலாம் என்று அகிலாவிடம் கூறினால் போதும் திங்கள்கிழமையே போகலாம் என்பார். நான் சனிக்கிழமை வரை நேரமிருக்கிறதே என்று தள்ளிப்போடுவேன். இறுதியில் இருவருமாகச் சேர்ந்து புதன் அல்லது வியாழக்கிழமை அந்தக் கோயிலுக்குச் செல்வோம். அப்படிப் பல கோயில்களுக்கு என்னுடன் வந்து பல கல்வெட்டுகளைப் படித்தளித்தார் அகிலா. அவருடைய துணையால் இருவருமே பலனடைந்தோம். அவர் கல்வெட்டுப் படிக்கக் கற்றுக்கொண்டார். எனக்கு அறிவார்ந்த ஓர் ஆய்வாளர் உதவியாளராகக் கிடைத்தார். திருவானைக்கோயில் இறைவளாகத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டிருப்பதாக ஆண்டறிக்கையில் பார்த்தோம். அவற்றைப் படித்தாலே போதும் என்றுதான் இருவரும் நினைத்தோம். 'அகிலாவின் வீடு திருவானைக்காவில்தானே இருக்கிறது. இருவரும் சேர்ந்து அங்குள்ள அனைத்துக் கல்வெட்டுகளையும் படிக்க இது பெரிய வாய்ப்பு. அனைத்துக் கல்வெட்டுகளும் படியெடுக்கப்பட்டிருக்கும் என்று நினைத்துவிடாதீர்கள். உறுதியாக ஒன்றிரண்டாவது புதியன கிடைக்கும். அதனால், பொறுமையாக எல்லா இடங்களையும் முழுமையாகப் பாருங்கள்' என்று அவர் வழிகாட்டினார். அடுத்த வாரமே திருவானைக்காவல் பணி தொடங்கியது. அகிலா தம் வீட்டிலிருந்து எனக்கும் சேர்த்து காலை, மதிய உணவு கொண்டுவந்துவிடுவார். காலையில் 8.00 மணிக்கெல்லாம் பணி தொடங்கிவிடுவோம். அகிலாவிற்கு அந்தக் கோயிலில் பழக்கமானவர்கள் பலர் இருந்தமையால் எங்களுக்குத் தேவையான உதவிகள் கிடைத்தன. சில சமயங்களில் மடைப்பள்ளியில் இருந்து சாப்பாடுகூட கிடைத்துவிடும். இரண்டு மாதங்கள் தொடர்ந்து அந்தக் கோயிலுக்குச் சென்று இருவரும் கல்வெட்டுப் படித்ததன் பயனாய்ப் பல புதிய கல்வெட்டுளைக் கண்டறியமுடிந்தது. தொடக்கத்திலேயே எவ்வளவு தீர்க்கதரிசனமாகப் புதியன கிடைக்கும் என்று அவர் கூறினார் என்று அகிலா அடிக்கடி சொல்வார். நாங்கள் கண்டறிந்த சுந்தரபாண்டியரின் கல்வெட்டு ஒன்று நடராஜராஜீசுவரம் உடையார் கோயிலுக்குக் கொடையளிக்கப்பட்ட தகவலைத் தந்தது. இந்தக் கோயிலைக் கண்டறிய அகிலா பெருமுயற்சி எடுத்தார். பலரிடம் கேட்டும் அறியக்கூடவில்லை. திருவானைக்காவல் வெளித்திருவீதியில் ஒரு கோயில் இருப்பதைத் தம் களஆய்வுகளின் பலனாய் அகிலா கண்டறிந்தார். நானும் அகிலாவும் அக்கோயிலுக்குச் சென்றபோதுதான் அங்கும் சில கல்வெட்டுகள் இருப்பதைக் காணமுடிந்தது. அக்கல்வெட்டுகளுள் ஒன்று கோயிலின் பெயரை நடராஜராஜீசுவரம் உடையார் என்று அறிவித்தது. கோயிலின் பெயரைக் கேட்டதுமே மிகவும் ஆர்வம் கொண்ட அவர் அந்தக் கோயிலை நானும் பார்க்கவேண்டும் என்று அடுத்த நாளே எங்களுடன் வந்தார். அவருடன் அந்தக் கோயிலை ஆராய்ந்தபோதுதான் புதிய அளவுகோல் ஒன்றையும் கண்டறிய முடிந்தது. கோயிலில் முகலிங்கம் ஒன்று இருப்பதையும் அதுபோழ்து பார்த்தோம். அந்தக் கண்டுபிடிப்புகள் எனக்கும் அகிலாவிற்கும் பெருமகிழ்வு அளித்தன. எந்தக் கோயிலில் ஆய்வு செய்தாலும் நன்கு திட்டமிட்டு முழுமையுறச் செய்வது அவர் வழக்கம். அதனால்தான், அவர் மேற்கொள்ளும் எந்த ஓர் ஆய்வும் புதியன தரத் தவறுவதில்லை. தமிழ்நாட்டின் பெரும்பாலான கல்வெட்டறிஞர்கள் ஆய்வு மேற்கொண்ட சிற்றண்ணல்வாயில் குடைவரை வளாகத்தில்கூட எங்கள் அண்மை ஆய்வின்போது புதிய கல்வெட்டுகளைக் கண்டறிய முடிந்தமை இந்த ஆய்வு ஒழுங்கின் அடிப்படையில்தான். அவருடன் பழகப்பழக அவருடைய அந்தப் பார்வை, தேடல், தெளிவு இவை அனைத்தையும் மெல்ல மெல்ல நானும் அகிலாவும் பெறமுடிந்தது. தொடக்கக் காலங்களில் நாங்கள் பார்த்த இடங்களில் எங்கள் கண்டறிதல்களைவிட அவருடைய கண்டுபிடிப்புகளே அதிகமாக இருக்கும். காலப்போக்கில் அவரிடம் கற்றுக்கொண்ட ஆய்வு நுணுக்கங்களின் காரணமாக எங்கள் பார்வையில் பெரும் மாறுதல் ஏற்பட்டது. அவர் கண்டுபிடிப்பதற்கு எதையுமே விடக்கூடாது என்பது போல உழைத்துத் தேடுவோம். எங்களுடைய அந்த உழைப்பு எங்கள் ஆய்வுத் திறனை வளர்த்தது. எங்களுடைய ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்பின்போதும் எங்களை விட அவர்தான் அதிகம் மகிழ்வார். திருவானைக்காவில் அவர் கண்டறிந்த அளவுகோலைப் போல் பின்னாட்களில் முப்பதிற்கும் மேற்பட்ட பழங்கால அளவுகோல்களை நானும் அகிலாவும் கண்டறிவதற்கு அடிப்படையாக அமைந்தது அவருடைய வழிகாட்டலும் ஊக்கமொழிகளும்தான். அன்பில், கொற்றமங்கலம், காட்டூர், சங்ககேந்தி எனப் பல ஊர்களுக்குக் கல்வெட்டுகளைத் தேடி நானும் அகிலாவும் சென்றோம். காட்டூரில் முதலாம் இராஜராஜரின் கல்வெட்டு ஒன்று இருப்பதாகக் கல்வெட்டறிக்கையில் குறிப்பிருந்ததால் அந்த ஊரெல்லாம் எங்குக் கோயில் இருக்கிறது என்று தேடினோம். ஊர் மக்களிடமும் வினவினோம். இறுதிவரை அங்குக் கோயிலையோ, கல்வெட்டையோ எங்களால் கண்டறியமுடியவில்லை. இந்தச் செய்தியை அவரிடம் பகிர்ந்துகொண்டபோது, அந்தக் கல்வெட்டு 1962ல்தான் படியெடுக்கப்பட்டுள்ளது என்பதையும் குறிப்பிட்டோம். அந்தக் கோயிலைக் கண்டுபிடிப்பதற்காகவே ஒரு முறை காட்டூர் செல்லலாம் என்று அவர் அமைதிப்படுத்தினார். இலால்குடி வட்டத்தில் நாங்கள் கல்வெட்டாய்வு மேற்கொண்டிருந்த காலத்தில்தான் திருமதி மதிமலர் சுகுமார் எங்கள் ஆய்வு மையத்திற்கு வந்தார். இலால்குடி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த மதிமலர், திருமங்கலம் திருக்கோயிலை முதுநிறைஞர் பட்ட ஆய்விற்குரிய தம் தலைப்பாக எடுத்துக்கொண்டு, அதற்கு வழிகாட்டுமாறு கேட்டு, அவர் துணையை நாடினார். 'மையத்தோடு சேர்ந்து ஆய்வு செய்வதென்றால் திருமங்கலம் கோயிலில் உள்ள அனைத்துக் கல்வெட்டுகளையும் படிக்கவேண்டியிருக்கும். ஒப்பீட்டு ஆய்விற்கு அக்கோயிலைச் சுற்றியுள்ள பல ஊர்க் கோயில்களையும் நேரில் பார்க்க வேண்டியிருக்கும். இந்த இரண்டிற்கும் உழைப்பும் பொருட்செலவும் தேவை. அவை உங்களுக்கு ஒப்புதல் என்றால் நான் உதவி செய்கிறேன்' என்றார் அவர். மதிமலர், 'ஆய்வேடு சிறப்பாக அமையவேண்டும். ஏதாவது ஒன்றைக் கற்றுக் கொள்வதுதானே கல்வி. உங்கள் வழிகாட்டலில் ஆய்வு செய்யவே விரும்புகிறேன்' என்று மதிமலர் உறுதியாகக் கூறியதால், ஆய்விற்கு நெறியாளராக இருக்க அவர் ஒப்புக் கொண்டார். மதிமலரின் வருகை எனக்குப் பெரும் பயன் தந்தது. அதற்கு உரியன செய்தவரும் அவர்தான். அகிலாவிடம் கூறியது போலவே மதிமலரிடமும் அவர் சொல்லியிருக்கவேண்டும். மதிமலர் ஆய்வுக்காலம் முழுவதும் நாங்கள் இருவரும் ஒன்றாகவே களஆய்வுகளுக்குச் சென்றோம். அவருடைய கோயில் இருந்த பகுதி எனக்கும் ஆய்வுக்களமாக இருந்ததால், எங்கள் பயணங்கள் இருவருக்கும் பயனளித்தன. முதலில் திருமங்கலம் கோயிலுக்குச் சென்று கல்வெட்டுகளைப் படிக்கத் தொடங்கினோம். திருமங்கலத்தில் கல்வெட்டுப் படிப்பது மட்டும்தான் என் வேலை. எங்களுக்குத் தேவையான உணவு, தேநீர் என அனைத்துத் தேவைகளையும் மதிமலரே பார்த்துக்கொண்டார். காலை, மதிய உணவு வீட்டிலிருந்து கொண்டு வந்துவிடுவார். ஒவ்வொரு முறை கோயிலுக்குச் செல்லும்போதும் விதவிதமான உணவு வகைகளோடுதான் வருவார். ஏதாவது ஒன்று சாப்பிடுவதற்குக் கிடைத்தால் போதுமே. ஏன் இத்தனை வகைகளைக் கொண்டு வருகிறீர்கள் என்றால், 'பரவாயில்லை நீங்கள் எவ்வளவு வேலை செய்கிறீர்கள். நன்றாகச் சாப்பிட்டால்தான் தொடர்ந்து வேலை செய்யமுடியும். நன்றாகச் சாப்பிடுங்கள்' என்று ஏதாவது ஒன்றைச் சாப்பிடுவதற்குத் தந்துகொண்டேஇருப்பார். தாயினும் மேலாக என்னை அருமையாகக் கவனித்துக்கொண்ட பாசம் மிகுந்த மதிமலர், பள்ளி ஆசிரியையாக இருந்ததால் மாணவர் படை ஒன்று அவருக்கு உதவிசெய்ய எப்போதும் உடனிருந்தது. திருமங்கலத்தில் சுண்ணாம்புப் பூச்சுக்குள் ஒளிந்திருந்த பல கல்வெட்டுகளைப் படிப்பதற்கு அந்த இளஞ்செல்வங்களே வழியமைத்துத் தந்தனர். முதல் இராஜராஜர் காலக் கட்டுமானமான திருமங்கலம் கோயில் வளாகத்திலிருந்து நானும் மதிமலரும் அகிலாவும் ஐந்து புதிய கல்வெட்டுகளைக் கண்டறிந்தோம். அவை வரலாறு ஆய்விதழின் இரண்டாம் தொகுதியில் வெளியிடப்பட்டன. இறைவனின் பெயர் திருமழுவுடைய நாயனார் என்று கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டிருந்தமை எங்களுக்கு வியப்பளித்தது. தம் கையிலுள்ள கருவி ஒன்றின் பெயராலேயே இறைவன் அறியப்பட்டமை எனக்குத் தெரிந்து அதுவே முதல் முறையாக அமைந்தது. திருவிடைமருதூரிலிருந்த வணிகர் தாழைக்குடையான் ஆண்டபிள்ளை என்பவர் திருமங்கலம் கோயில் வளாகத்தில் இருந்த முருகன் கோயிலைத் திருப்பணி செய்வித்த தகவலும் கிடைத்தது. முருகப்பெருமான் இக்கல்வெட்டில் இளையபிள்ளையார் என்று குறிப்பிடப்பட்டிருந்தார். பதினெட்டாம் நூற்றாண்டுவரை திருமழுவுடைய நாயனார் என்றே கல்வெட்டுகளில் குறிக்கப்படும் இறைவன் தற்போது சாமவேதீசுவரராக அறியப்படுவதும் அதற்காகவே ஒரு கதை புனையப்பட்டிருப்பதும் வரலாறு எப்படியெல்லாம் திரிக்கப்படுகிறது என்பதற்கான சான்றுகளாகும். நாங்கள் கல்வெட்டுகளை எல்லாம் படித்து முடித்த பிறகு கட்டுமானம், சிற்பம் பற்றி விரிவான அளவில் ஆராய்வதற்காக அவர் திருமங்கலம் வந்தார். முதல் இராஜராஜர் காலக் கோயிலாக இருந்தபோதும் கண்டபாதங்களில் சிற்பத்தொடர்கள் இருப்பதைக் கண்டு வியந்த நாங்கள் அதை அவரிடம் கூறியிருந்தோம். சிற்பத்தொடர்களை அவர் எங்களுக்கு விளக்கிய போதுதான் அதில் இராமாயணத்தின் தலையாய காட்சிகள் தொடராகப் பதிவு செய்யப்பட்டிருப்பதை நாங்கள் புரிந்துகொண்டோம். புள்ளமங்கை ஆலந்துறையார் கோயிலிலும் இராமாயணத் தொடர் சிற்றுருவச் சிற்பங்களாக இருப்பதை நினைவூட்டினார். அக்கோயிலைப் பார்த்திருந்தபோதும் இந்தச் செய்தியை அவர் அங்கேயே சொல்லியிருந்தபோதும் திருமங்கலத்தில் எங்கள் ஆய்வின்போது அவற்றைக் கருதாமல் விட்டதை நினைத்து நான் வருந்தினேன். அவருடைய நினைவாற்றல் அற்புதமானது. எந்தக் கோயிலில் எத்தகு சிற்பங்கள் உள்ளன. அவை எங்கெங்கு எப்படியெல்லாம் மாறியுள்ளன. அவற்றிற்கு இடையேயான ஒத்த, மாறுபட்ட சிந்தனைகள் என எல்லாவற்றையும் சொல்லி நம்மைத் திணறச் செய்துவிடுவார். சிற்றுருவச் சிற்பங்களை எப்படி ஆராய்வது, அவற்றை எப்படி வரிசைப்படுத்துவது, அவற்றில் இருந்து வரலாற்றுத் தரவுகளைப் பெறுவது எப்படி, அந்தத் தரவுகளை உரிய வகைகளில் எல்லாம் ஒப்பீடு செய்து ஆய்வேட்டிற்குப் பயன்படுத்திக்கொள்வது எப்படி என்பன பற்றியெல்லாம் மதிமலருக்கு அன்று அவர் நிகழ்த்திய விரிவுரையை இன்றளவும் நான் நினைவில் வைத்திருக்கிறேன். எனக்கும் அகிலாவிற்கும் பல புத்தகங்களைப் படித்த அனுபவம் அன்று ஏற்பட்டது. 'எப்படிப் பேசுகிறார்! எவ்வளவு விஷயங்களை அறிந்துகொள்ள முடிகிறது. கணக்கியல் போல வரலாறும் இத்தனைத் திட்டமாக இருக்கிறதே. இவ்வளவு நாட்களாக வரலாறு என்றால் அது அரசர்களின் கதை என்று தவறாக அல்லவா நினைத்துக்கொண்டிருந்தேன். நல்லவேளை நான் டாக்டரிடம் வந்தேன். எவ்வளவு கற்றுக்கொள்ள முடிந்திருக்கிறது. சிற்பங்களிலிருந்து வரலாறு பெறமுடியும் என்பதை எவ்வளவு நன்றாக விளக்கினார்' என்று மதிமலர் என்னிடம் மகிழ்ந்து கூறியதை என்னால் மறக்கமுடியாது. அந்த நாள் எங்களுக்கும் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்திய நாள். திருமங்கலத்தைச் சுற்றியுள்ள ஊர்க் கோயில்களை ஆய்வு செய்வதற்காக இரண்டாம் முறையாக எங்களுடன் அவர் வந்தார். நான், மதிமலர், அகிலா மூவரும் ஏற்கனவே நகர், திருத்தவத்துறை, இடையாற்றுமங்கலம், ஆதிக்குடி, கானக்கிளியநல்லூர் எனப் பல ஊர்க் கோயில்களையும் ஆய்வு செய்திருந்தோம். அங்குக் கண்டறிந்த தரவுகளைச் சரிபார்க்கவும் ஒப்பீடு செய்யவும் அவர் வந்தார். அவர் வருகிறார் என்பதால் காலைச் சிற்றுண்டிக்கே ஐந்து வகையான உணவு கொண்டு வந்திருந்தார் மதிமலர். மதிமலரின் உபசரிப்பில் அவர் அதிர்ந்துபோனார். மதிய உணவிற்கு மதிமலர் தாம் பணியாற்றிய பள்ளியிலேயே ஏற்பாடு செய்திருந்தார். நாங்கள் இலையைப் பார்த்தமே பயந்துவிட்டோம். அவ்வளவு பெரிய இலை. அதில் பத்து வகையான உணவு வகைகள் இருந்தன. எங்களுடன்தானே இருந்தார், எப்படி இத்தனைச் சிறப்பாக இத்தனை உணவு வகைகளை ஏற்பாடு செய்தார் என்று நாங்கள் ஆச்சரியப்பட்டோம். என்னுடன் பணியாற்றும் நண்பர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான உணவு தயாரித்து வந்திருக்கின்றனர் என்று மதிமலர் கூறியபோது நாங்கள் பெரிதும் வியப்படைந்தோம். உடன் பணியாற்றும் ஆசிரியர்களுடன் அவருக்கிருந்த நல்லுறவு என் மனதில் ஆழமாகப் பதிந்தது. நாளைக்குப் பணிக்குச் சென்றால் நாமும் இப்படித்தான் எல்லாரிடமும் அன்புடன் இருக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டேன். 'ஆசிரிய நண்பர்கள் எனக்காக மட்டும் இதைச் செய்யவில்லை, உங்களுக்காகவும்தான் செய்திருக்கிறார்கள்' என்று அவரைப் பார்த்துக் கூறினார் மதிமலர். 'ஆசிரிய நண்பர்கள் அனைவருக்கும் அவரை நன்கு தெரியும். இலால்குடியில் நடந்த பல சொற்பொழிவுகளில் அவர் உரையை ஆசிரியர்கள் கேட்டிருக்கிறார்கள். அதனால் அனைவருக்கும் அவரிடம் நல்ல மதிப்பும் மரியாதையும் பற்றும் உண்டு. அவருக்கு ஒரு நாள் உணவு தயாரித்து வருவது எங்கள் பேறு என்று நினைத்துத்தான் ஆசிரியர்கள் இந்த ஏற்பாட்டைச் செய்திருக்கிறார்கள்' என்று மதிமலர் என்னிடமும் அகிலாவிடமும் கூறியபோது, இப்படிப்பட்ட ஓர் அரிய மனிதருடன் நாங்கள் இணைந்து பணி செய்யும் வாயப்புக் கிடைத்தமைக்காக கடவுளுக்கு நாங்கள் நன்றி பாராட்டினோம். ஆசிரியர்கள் அன்போடு அளித்த உணவை மகிழ்வோடு அருந்திய பிறகு ஏறத்தாழ ஒரு மணி நேரம் ஆசிரியர்களுடன் இலால்குடி சார்ந்த வரலாற்றுச் செய்திகளை அவர் பகிர்ந்துகொண்டபோது எவ்வளவு செய்திகளை அவர் திரட்டி வைத்திருக்கிறார் என்பது எனக்குப் புரிந்தது. அந்தக் கூட்டத்தில் இருந்த ஒவ்வொருவரும் வரலாற்றை நேசிக்கும்படி அவர் சொன்ன செய்திகள் அமைந்திருந்தன. அந்த ஒரு நாள் பயணம் ஒப்பீட்டு ஆய்வு குறித்த நெறிமுறைகளை நாங்கள் நன்குணருமாறு செய்தது. படித்தால் மட்டும் போதாது, படித்தவற்றைப் பயனுள்ள விதத்தில் சுவைபடப் பகிர்ந்துகொள்ளவும் தெரியவேண்டும் என்பது எனக்குப் புரிந்தது. பேச்சுக் கலையைப் பயிலவேண்டும் என்று பெரிதும் விரும்பினேன். ஆனால், இன்றுவரை அது எனக்கு எட்டாக் கனியாகவே இருந்துவருகிறது. என்றாலும், அண்மையில் நெய்வேலித் தமிழ்ச் சங்கச் செம்மொழிக் கருத்தரங்கத்திலும் சமயபுரம் இராமகிருஷ்ணா பொறியில் கல்லூரியின் விவேகானந்தர் பேரவையிலும் நான் ஆற்றிய உரைகளைக் கேட்ட அவர், 'நன்றாகப் பேசுகிறாய். கையில் எந்தக் குறிப்பும் இல்லாமல் தொடர் ஒழுங்காக வளமையாகப் பேசுவது அருங்கலை. நீ அதில் தேறிவருகிறாய்' என்று கூறியபோது பெரிதும் மகிழ்ந்தேன். மோதிரக்கையின் குட்டு அல்லவா! - தொடரும் this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |